Tuesday 25 April 2017

சசிகலா ராஜ்ஜியம் சரிந்த கதை!


33 ஆண்டு காலம்... அ.தி.மு.க-விலும், அதன் ஆட்சிகளிலும், அந்தக் கட்சியின் இரும்புப் பிம்பமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்திலும் தன்னிகரற்ற ஆதிக்கம் செலுத்தியவர் சசிகலா.




அந்த ஆதிக்கத்துக்கு ஆரம்பத்தில் பாதை போட்டுக் கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராசன். அந்தப் பாதையில் அடிபிசகாமல் பயணித்தார் சசிகலா. அதன் விளைவு, ‘சசிகலா குடும்பம்’ என்ற முத்திரையோடு, சக்தி வாய்ந்த ஒரு கூட்டம் தமிழகத்தில் உருவானது. அரசியல், அதிகாரம், தொழில்கள், வியாபாரம் என அனைத்திலும் அந்தக் குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு எனத் தனித்தனி ராஜ்ஜியங்களை உருவாக்கி ஆட்சி நடத்தினர். 33 ஆண்டு காலம் மெள்ள மெள்ள எழுப்பப்பட்ட அந்த சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும், கடந்த மூன்று மாதங்களில் மளமளவென சரிந்து விழுந்தன.


‘சின்னம்மா’ என்று அழைக்கப்பட்ட சசிகலா, சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார். “நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்... எங்கள் குடும்பத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும்” என்று சொன்ன நடராசன், மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். “டெல்லியின் சூழ்ச்சிகளை ஒரு நொடியில் தூள்தூளாக்கினோம்” எனப் பெருமை பேசிய திவாகரன் மர்ம மௌனத்தில் தவிர்க்கிறார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் நடந்த அன்று சைரன் வைத்த காரில் பறந்த மகாதேவனை, மரணம் அழைத்துக்கொண்டது. ‘இனி, கட்சியும் ஆட்சியும் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் குடும்ப உறவுகளையே ஒதுக்கிவைத்த தினகரனை, அ.தி.மு.க அமைச்சர்கள் ஒதுக்கிவிட்டனர். ஐ.டி துறை அடுத்தடுத்து நடத்திய ரெய்டுகளால் டாக்டர் வெங்கடேஷ், குளிர்க் காய்ச்சலில் உறைந்துவிட்டார். ‘‘தற்போது, அ.தி.மு.க என்ற கட்சியில் அந்தக் குடும்பத்தின் பிடி அறவே இல்லை’’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். ஆட்சி அதிகாரத்தில் அவர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. எங்கே தொடங்கியது இந்த வீழ்ச்சி?

சசிகலாவும் மோடியும்

2011-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி. அந்த நேரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சி. அரசியலைத் தாண்டி ஜெயலலிதாவும் மோடியும் அக்கறையான நண்பர்களாக இருந்தனர். அந்த வகையில், ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள குஜராத்தில் இருந்து நர்ஸ் ஒருவரை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிவைத்தார் மோடி. ஜெயலலிதாவின் டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை அந்த நர்ஸ் கவனித்துக்கொண்டார். திடீரென ஒருநாள், மோடியின் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட அந்த நர்ஸ், “என்னால் இங்கு இருக்க முடியாது. இந்த வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் என்னை மிரட்டுகிறார்கள். என் வேலையைப் பார்க்க அவர்கள் விடுவதில்லை” என்று புகார் வாசித்தார். மோடியின் கவனத்துக்கு அந்தப் புகார் போனது. உடனடியாகத் தொலைபேசியில் ஜெயலலிதாவைத் தொடர்புகொண்டார் மோடி. “நான் அனுப்பிய நர்ஸை அங்கே யாரோ இரண்டு பெண்கள் மிரட்டுகிறார்களாமே... யார் அவர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் விசாரித்தார். அந்தப் பெண்கள் சசிகலாவும் இளவரசியும்தான் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை மோடியிடம் தெரிவிக்கவில்லை. ‘‘நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று சொன்ன ஜெயலலிதா, அதன் பிறகு அந்த நர்ஸைத் திருப்பி அனுப்பிவிட்டார்.


பிறகு, அந்தப் பெண்களில் ஒருவர் சசிகலா என்று மோடி தெரிந்துகொண்டார். சசிகலாவைப் பற்றி அவர் மனதில் நெகட்டிவ் பிம்பமே பதிந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் மோடியின் எண்ணத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே நடந்தன. அதன் ஒட்டுமொத்த எதிர்வினையாக, சசிகலாவின் ராஜ்ஜியம் தற்போது சரிக்கப்பட்டுவிட்டது.

சசிகலாவின் அஸ்தமனம்!

2016 செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதற்கு மறுநாளே, அப்போலோ மருத்துவமனையை சசிகலாவின் குடும்ப உறவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஜெயலலிதாவால் துரத்திவிடப்பட்டவர்கள். கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பி.ஜே.பி., ஆட்சிக்கலைப்பு என்ற கோஷத்தை தமிழகத்தில் பரவவிட்டது.

பி.ஜே.பி-யின் முயற்சியை முறியடிக்க நினைத்த சசிகலாவின் கணவர் நடராசன், ராகுல் காந்தியை அழைத்துவந்து அப்போலோ மருத்துவமனை முன்னால் நின்று பேட்டி கொடுக்கவைத்தார். “இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் ஆதரவை தெரிவிக்கவே வந்தேன்” என்றார் ராகுல் காந்தி. ஜெயலலிதாவைப் பார்க்கவந்த முதல் அகில இந்தியத் தலைவர் அவர்தான்.

அந்தக் கணமே அ.தி.மு.க-வை அழித்தொழிக்கும் வேலைகளை வேகமாகத் தொடங்கினார் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா. சசிகலாவின் குடும்பத்தை அகற்றினால் மட்டுமே அ.தி.மு.க-வைத் தங்கள் இஷ்டத்துக்கு ஆடவைக்க முடியும் என்று பி.ஜே.பி முடிவு செய்தது. விறுவிறுவெனக் காய்கள் நகர்த்தப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார் என்ற தகவல் டெல்லியை எட்டியதும், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சென்னைக்கு வந்தார். அவருடைய தலைமையில், சசிகலாவுக்கு முதல் தலைவலி ஆரம்பித்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க வேண்டும்’ என்பது சசிகலாவின் எண்ணமாக இருந்தது. அதற்கு முட்டுக்கட்டை போட்டார் வெங்கைய நாயுடு. அதன் பிறகு, வேறு வழியில்லாமல் பன்னீர்செல்வத்தையே முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, சசிகலா எடுத்துவைக்க நினைத்த முதல் அடியிலேயே அவருக்கு அடி விழுந்தது.


குடும்பத்துக்குள் வெட்டுக்குத்து!

‘ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இனி சசிகலாதான் எல்லாம்’ என்று அவருடைய குடும்பத்தின் குட்டி ராஜாக்கள் நினைத்தனர். சசிகலாவோடு இருந்து கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த திவாகரன், மகாதேவன், பாஸ்கரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் என ஆளாளுக்குப் போட்டிபோட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தூது அனுப்பி, சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக முன்மொழியவைத்தார் திவாகரன். பன்னீர்செல்வமும் அப்படியே செய்தார். சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும், தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் கைகோத்துக்கொண்டனர். சசிகலாவை அவர்கள் இருவரும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். திவாகரன், பாஸ்கரன், மகாதேவன் என அனைரையும் ஒதுக்கிவைத்தனர். நடராசனால் இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு, அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியைப் பறிக்க தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவைத் தூண்டினார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சசிகலா, அவர்கள் சொன்னதை அப்படியே செய்தார். பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. பன்னீர்செல்வத்துக்கு பி.ஜே.பி கொடுத்த முதல்வர் பதவியை, தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவை வைத்துப் பறித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட வழக்குகள்!

மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசு, சசிகலா குடும்பத்தின் இந்தச் செயலால் கொதித்துப்போனது. ‘ஆபரேஷன் சசிகலா’ ஆரம்பமானது. புதிய புகார்கள், புதிய வழக்குகள், புதிய சிக்கல்கள் எதுவும் தேவைப்படவில்லை. எல்லாவற்றுக்கும் 1991 - 96 காலகட்டத்தில் சசிகலாவும், அவருடைய குடும்பமும் செய்த காரியங்களே போதுமானவையாக இருந்தன. சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. பன்னீர்செல்வம், கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினார்.

‘முதல்வராக வேண்டும்’ என்கிற சசிகலாவின் கனவை, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தகர்த்தது. ஏழு மாதங்களாக தேதி அறிவிக்காமல் ஒத்திபோடப்பட்டு இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில், மிகச் சரியாக இந்தத் தருணத்தில் தீர்ப்புத் தேதி வெளியானது. நடராசன் மீதான வெளிநாட்டுக் கார்கள் வழக்கு விசாரணை, வேகம் பிடித்தது. தினகரன், சசிகலா மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் நாற்காலியைப் பிடித்த சசிகலாவால், முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் போனது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அவர் அடைக்கப்பட்டார்.


துரத்தப்பட்ட தினகரன்!

சசிகலாவோடு அந்தக் குடும்பத்தின் சகாப்தம் முடிந்துவிடும் என்று நினைத்த மத்திய அரசுக்கு, தினகரன் தலைவலியாக மாறினார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக திடீரென ஆன அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பன்னீர் தரப்பு களத்தில் இறங்க, இரட்டை இலைச் சின்னம் பறிபோனது. ஆனால், தினகரன் அசரவில்லை. பணத்தைத் தண்ணீராக இறக்கி, வெற்றி முகம் காட்டினார். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் போனது.

இந்த நேரத்தில் தினகரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளைத் தேடித்தேடி ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள், இந்தியாவையே அதிரவைத்தன. ஆர்.கே. நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய, இது போதுமான ஆதாரமாக இருந்தது.

இதற்கிடையில், ‘இரட்டை இலைச் சின்னத்தைத் திரும்பப் பெற 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார்’ என்று சொல்லி, டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. `தினகரனோடு இருக்கும் அமைச்சர்களின் வீடுகளும் ரெய்டு பட்டியலில் இருக்கின்றன’ என்ற செய்தி கசியவிடப்பட்டது. ‘இதற்கு மேல் தினகரனைத் தாங்கிப்பிடித்தால் தங்கள் மடிக்கு ஆபத்து வந்துவிடும்’ என்பதை அ.தி.மு.க அமைச்சர்கள் உணர்ந்தனர். தினகரனின் தலையீடு இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் இனி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதே நேரத்தில், ஃபெரா வழக்கு விசாரணையும் தீவிரம் பெற்றது. அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத தினகரன் “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று கூலாகப் பேட்டி கொடுத்து சரண்டர் ஆகிவிட்டார்.

கப்சிப் ஆன டாக்டர் வெங்கடேஷ்!

இவ்வளவு சிக்கல்களில் சசிகலா குடும்பம் சிக்கிக்கொண்டதற்கும், அவர்களின் பிடி தளர்ந்ததற்கும், முக்கியக் காரணம் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன்தான். சசிகலாவை, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றத் துண்டியவர்கள் இவர்களே. சசிகலா சிறைக்குப் போனதுமே டாக்டர் வெங்கடேஷ் எங்கும் தென்படாமல் பதுங்கிக்கொண்டார். அதற்கு முக்கியக் காரணம், அடுத்தடுத்து நடந்த ரெய்டுகளால் அவர் அரண்டு போனதுதான். ஏனென்றால், டாக்டர் வெங்கடேஷ் வசம் இருக்கும் சொத்துகள் அப்படி. எதையும் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அவர் கழுத்துக்கும் கத்தியை நீட்டுவதற்குத் தயாராகவே இருக்கிறது வருமானவரித் துறை.

முறைகேடாகச் சேர்த்த சொத்துகள், அதிகாரவெறியால் அவசரகதியில் எடுத்த முடிவுகள், குடும்ப உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிவைத்த குழிகள் ஆகியவையே சசிகலாவின் ராஜ்ஜியம் சரிந்துவிழக் காரணமாக அமைந்துவிட்டன.

- ஜோ.ஸ்டாலின்

Monday 24 April 2017

தமிழர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை த.ம.பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை

தமிழர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் தமிழர்கள் அடிபணியப் போவதில்லை. போராடத்தான் முனைவார்கள் எனத் தெரிவித்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்களின் பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம்மக்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்றுக் காலை 10 மணிக்கு திருகோணமலை நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றிருந்தது.
இதில் பங்கேற்று உரையாற்றும் போதே  வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கில் சந்தித்தாலும் கிழக்கின் அதிகாரபீடம் அமைந்திருக்கும் திருமலையில் சந்திக்கவில்லையே என்ற குறையை தற்போது நிவர்த்தி செய்துள்ளோம். வடகிழக்கு மாகாணமெங்கிலும் இருந்து வந்திருக்கின்ற எமது பிரதிநிதிகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறி தலைத் தெரிவிக்கின்றோம்.

எமது இயக்கம் ஒருமக்கள் இயக்கம். மக்கள் மனமறிந்த இயக்கம். மயக்கம் எதுவுமின்றி மக்களுக்கு வேண்டியதை வெளிப்படையாக பேசிவருகின்ற ஒரு இயக்கம். எம்முள் பல மதத்தலைவர்கள் உள்ளார்கள், பல தொழில்களைப் புரிபவர்களின் பிரதிநிதிகள் உள்ளார்கள். பல கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளாக உள்ளார்கள். 

இவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்தும் கொழும்பில் இருந்தும் நாட்டின் ஏனைய இடங்களில் இருந்தும் வந்து சேர்ந்துள்ளார்கள்.தமிழ் மக்களின் இன்றைய நிலை அறிந்து அவர்களின் விமோசனத்திற்கு எதைச் செய்யலாம் என்று ஆராய்ந்தறிய இன்று நாமெல்லாம் கூடியுள்ளோம்.
இதுவரை காலமும் எமது சொற்ப கால வாழ்க்கையில் பலதைச் சாதித்துவிட்டோம் என்ற திருப்தி எமக்குண்டு.

முதலில் காலக்கெடு வைத்து அவசர அவசரமாக அரசியல் தீர்வொன்றுக்கான அடித் தளத்தினை மக்கள் கலந்துரையாடல் மூலமாக ஆக்கி அம்பலப்படுத்தினோம். அரசாங்கத்திடமும் ஆராயுமாறு கையளித்தோம். பின்னர் யாழ் மண்ணில் எதிர்பார்ப்பு எதிர்வு கூறும் விதத்தில் மக்கள் பேரணியை எழுக தமிழ் என்ற நாமத்தில் எழுச்சிமிக்க கூட்டமொன்றை நடத்தினோம்.

அதே போல் மட்டக்களப்பு மண்ணிலும் மக்களை ஒன்றிணைத்து மதிப்பான எழுக தமிழ் பேரணி ஒன்றை நடத்தினோம். இவற்றை பலரும் பல விதமாக சித்திரித்திருந்தாலும் அவற்றின் பயன் ஆக்கபூர்வமாக அமைந்திருந்துள்ளது என்பதில் எமக்கு மனமகிழ்ச்சியே. எமது தமிழ் மக்கட் சகோதரர்களும், சிங்கள சகோதரர்களும் வெளிநாட்டு உறவினர்களும் அந்நாடுகளின் அரசாங்கப் பிரதி நிதிகளும் ஏன் இந்த எழுக தமிழ் என்று மூக்கின் மேல் கைவைக்குமளவிற்கு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தன. எமது உறுப்பினர்கள், பிரதிநிதிகள், மதத்தலைவர்களின் அயராத உழைப்பே அந்த வெற்றியை ஈட்டித்தந்தது என்று கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன்.

தற்போதும் எமது குழுக்கள் பல மக்கள் மத்தியில் விழிப்பை உண்டாக்கி பொருளா தாரம், கலை, கலாசாரம் போன்ற விடயங்கள் பற்றி அலசி ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தான் நாம் எல்லோரும் தங்குமிடம் ஒன்றில் கூடியுள்ளோம். அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன, எப்படி, எவ்வாறு அதனைச் செய்யவேண்டும் யாவரை நாம் சிந்திக்க வைக்கவேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடைகாணவே இங்கு கூடியுள்ளோம்.

இதுவரையான எமது பயணங்களை பட்டியல் இட்டால் - நாம் கட்சி கடந்து, தேர்தல் தேர்வு கடந்து, மாகாண வரையறைகளைக் கடந்து மக்களை எம்பால் ஈர்த்துள்ளோம் என்பது புலனாகின்றது. இவற்றிற்கு எமது புலம் கடந்த மக்களும் கடினமாக உழைத்துள்ளார்கள் என்பதும் எமது பலமே.
அடுத்தது என்ன செய்யவேண்டும் என இங்கு பலரும் பல கருத்துக்களை கூற உள்ளார்கள். அவற்றை இன்று நாம் கலந்தாலோசிப்போம். எமது நடவடிக்கைகள் எவ்வாறான மேலார்ந்த கரிசனைகளை கவனத்தில் எடுத்து நெறி முறைப்படுத்த வேண்டும் என்பது  சம்பந்தமாக எனது கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்க விரும்புகின்றேன். 

அதாவது எமது நடவடிக்கைகள் மூவின மக்கட் கூட்டங்களை நோக்கியதாக அமைய வேண்டும். ஒன்று எம்மக்கள். மற்றையது சிங்கள மக்கள். மூன்றாவது சர்வதேச மக்கள். இவர்கள் மூவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். 
இதுவரை காலமும் நாம் எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ளோம். 

ஆனால் எம்முடன் இந்த நாட்டில் வாழப் போகும் சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை. இன்று தெற்கில் எமது நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்கு கொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமான இன ரீதியான முறுகல்கள் எமது பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது என்ற ஒரு காரணம் அவர்களுக்கு கவலை அளிக்கின்றது. உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு கொள்ளாது என்ற அவர்களின் ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அந்த மக்கட் சக்தியுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாய தேவைகளை எடுத்துரைக்க வேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது என்பது எனது கருத்து. சில காலத்திற்கு முன்னர் அன்பர் குசால் பெரேராவுடன் சேர்ந்து நாம் நடத்திய பத்திரிகைப் பேட்டி நன்மை தருவதாக அமைந்திருந்தது.

அவ்வாறான கூட்டங்கள் இனிமேலும் நடைபெறவேண்டும். தமிழ் மக்கள் பேரவை தம்முடன் ஒத்துழைக்கக்கூடிய தென் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் கூடி எமது கருத்துக்களை சிங்கள மக்கள் முன் வைக்கவேண்டும். ஆனால் மக்கள் எமது கருத்துக்களை அறிய ஆர்வமாக இருந்தாலும் கூட சிங்கள ஊடக உரித்தாளர்களை அல்லது ஆசிரியர்களை கொண்ட ஆங்கில நாளேடுகள் கூட எமது கருத்துக்களை சிங்கள மக்களிடம் சென்றடைய விடமாட்டார்கள் போலத் தெரிகின்றது.

அண்மையில் இலங்கைத் தமிழர் பற்றி அவர்தம் சரித்திரம் பற்றி இழிவாகப் பேசிய ஒரு சிங்கள அன்பருக்கு பதில் கடிதம் ஊடகத்தின் ஊடாக அனுப்பியிருந்தேன். அதனைப் பிரசுரிக்க ஆசிரியர் அனுமதியளிக்கவில்லை என அறிகின்றேன். உண்மைகள் வெளிவராதிருக்க இவர்கள் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களை அண்டி அவர்களின் பிரச்சினைகளை அறியும் அதே நேரம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் அதே நேரம் சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தல்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தல் எமக்கு அவசியமாகியுள்ளது.

முன்னர் கட்சிகள் சார்ந்த சில ஒத்துழைப்புக்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது கட்சிபேதம் இன்றி சிங்கள மக்கள் யாவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய நாம் வழிவகுக்க வேண்டும்.
ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஜனநாயக முறையில் எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூண்டுள்ளோம். ஜனநாயகம் மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் மனமாற்றத்திற்கு ஆளானால் தான் இங்குள்ள எமது மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படலாம். இது ஜனநாயகத்தின் அவசியப்பாடு.

இங்கு நாங்கள் எமது சிந்தனைகளின் போக்கைச் சிறிது அறிந்து வைத்திருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் பண்டமாற்று அடிப்படையிலேயே தமது உரிமைகளைப் பெற்றெடுத்து வருகின்றார்கள். இன்று நாம் உங்களுக்கு இந்த உதவியை அளித்தால் இவ்விவற்றை நீங்கள் எமக்கு தருவீர்களா? என்று கேட்டுப் பெற்று வருகின்றார்கள்.

ஆனால் எமது பாரம்பரிய ஆணவமும் மிடுக்கும் அவ்வாறான பண்டமாற்றத்தை வரவேற்பதில்லை. நாம் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் இன்னொருவருடன் பண்ட மாற்றத்தில் ஈடுபட எமக்குத் தேவை இல்லை எமது உரித்துக்கள் தரப்பட வேண்டியவை. ஆகவே நீங்கள் தந்தே ஆகவேண்டும். என்ற கருத்திலேயே நாம் இதுவரை காலமும் பயணித்து வந்துள்ளோம். இதில் பிழை இல்லை. 

ஆனால் உண்மை நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வீராப்பு பேசும் நாங்கள் வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றோம். இங்கு எமக்குப் பக்கபலம் இல்லை. அங்கு பணபலம் இருக்கின்றது. ஆனால் இங்கு பக்குவமாக பேசக்கூடிய பாங்கு எமக்கு இல்லா திருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகளுக்கு நான் எதிரானவனல்ல. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் உரிய பயன்பாட்டை எமக்கு நல்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். எதற்கும் சிங்கள மக்களுடன்  எமக்கு ஒரு கருத்துப் பரிமாற்ற யன்னல் அமைக்கப்பட்டால் அது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

அடுத்தது வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எமது உறவைப் பலப்படுத்த வேண்டும்.
என்னை காணவரும் வெளிநாட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டே வருகின்றார்கள். அவர்களின் கேள்விகள் அதனைப் பிரதிபலிக்கின்றன. இன்று உத்தியோகபூர்வ ரீதியாக நான் மட்டுமே அவர்களின் எண்ணப்பாடுகளை மாற்ற எத்தனித்து வருகின்றேன். உங்களில் பலர் வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன்  உறவுகள் வைத்து அவற்றினூடாக அவர்களின் எண்ணங்களை மாற்ற எத்தனித்திருக்கக் கூடும்.

எது எவ்வாறிருப்பினும் நாங்கள் எங்கள் கொள்கைகளை, கேள்விகளுக்கான பதில்களை  அரசாங்கம் உரைக்கும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை உடனுக்குடன் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கு அறிவிக்க முன்வர வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை வெறுமனே உணர்ச்சிபூர்வமான தீவிரபோக்குடைய ஒரு அரசியல் அலகல்ல. எதனையும் ஆறஅமர சிந்தித்து பதிலளிக்கக்கூடிய ஒரு பேரவையே என்று அவர்கள் அடையாளம் காணும் வகையில் எமது நடவடிக்கைகள் சிறக்கவேண்டும்.

அண்மையில் துருக்கி உயர்ஸ்தானிகர் ஒரு சுமுகமான தீர்வு வருவதற்கு நான் இடைஞ்சலாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார். ஏன் சமஷ்டியை முன்னிலைப்படுத்துகின்றீர்கள் என்று கேட்டார். ஏன் வட க்கு கிழக்கை இணைக்கக் கேட்கின்றீர்கள் என்று கேட்டார். சமஷ்டி செக்கோஸ்லாவாக்கியா, யுகோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளில் பிரிவினைக்கு இடங்கொடுத்துள்ளது என்றார். பிரிவினை வேண்டுமா என்பது இருதரப்பு மக்களும் ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்திலேயே அமைந்துள்ளது என்று கூறி க்யூபெக் கனடாவிலிருந்து பிரிய முன்வரவில்லை. ஸ்கொட்லாண்ட் பிரித்தானியாவில் இருந்து பிரிய முன்வரவில்லை என்று எடுத்துக் காட்டினேன். பழகும் விதத்தில்தான் இவை அமைந்துள்ளன என்றேன். 

எம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம் மக்கள் விரும்பமாட்டார்கள் என்றேன். 
அத்துடன் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏன் எமக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்பது பற்றியும் எடுத்துக் கூறினேன். வடக்கு கிழக்கு இணைப்பை அவசியப்படுத்த இன்று வரை நடந்திருக்கும் சிங்கள உள்ளீடல்களையும் குடியேற்றங்களையும் காரணங்காட்டினேன். 

அவர் எமது கருத்துக்களை மங்கள சமரவீர அவர்களிடம் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கின்றேன். எனவேதான் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் அறிவை வளர்க்கும் அதே நேரம் சிங்கள மக்களிடையேயும் பன்னாட்டு பிரதிநிதிகள் இடையேயும் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகின்றேன். உங்கள் யாவரதும் கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளோம் என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.    

Sunday 16 April 2017

அழிக்கப்பட்டனர் 1 இலட்சம் மக்கள்! அனைத்தும் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டதா?

உலகம் கடந்து வந்த பாதையில் பல்வேறு இன அழிப்புகள் அரங்கேற்றப்பட்டு கொண்டு வந்தன. அவற்றின் நோக்கம் அதிகார வெறி மட்டுமே.



ஆனால் இன அழிப்புகளுக்கு தீர்வுகளும் தீர்ப்புகளும் கிடைத்ததா என்றால் அது சிந்திக்கப்பட வேண்டிய விடயம். காலப்போக்கில் மேல் வடுக்கள் போல, குற்றங்களும் மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு போகும்.

இலங்கை உள்நாட்டுப் போர், போர்க் குற்றங்களும் கூட இதற்குள் அடக்கி விடக் கூடிய ஒன்று என்ற வகையிலும் நோக்க முடியும்.

ஜ. நா பிரதிநிதிகள் கூட “ஏனைய யுத்தங்களை வேடிக்கைப் பார்த்தது போல இலங்கை யுத்தமும் வேடிக்கை பார்க்கப்பட்டது” என எல்லாம் முடிந்த பின்னர் தெரிவித்திருந்தனர்.

இது இன்று நேற்று நடை பெறும் ஒன்றா? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால் ஓர் மறைக்கப்பட்ட இன அழிப்பு தெரியும். இது நடைபெற்றது தென் ஆபிரிக்காவின் ஒரு பகுதியில்.

ஹேரேரோ இன அழிப்பு என்பது வரலாற்றில் மறைக்கப்பட்ட ஓர் கறுப்புப் பக்கம். தென் ஆபிரிக்காவில் நபிபீயா நாட்டில் வாழ்ந்து வந்தனர் ஹேரேரோ எனப்படும் ஓர் சமூத்தினர்.

இவர்களின் வாழ்ந்த பகுதியின் சிறப்புத் தன்மை விஷேட உலோகங்களும், வைரங்களும் வெகுவாக கிடைக்கும் ஓர் பகுதியே அந்தப் பிரதேசம்.

அந்த சிறப்பை அறிந்தனர் ஜெர்மனியர்கள். அத்தோடு அதனை அபகரிக்கவும் நினைத்தனர். அதற்காக 1880களில் ஆக்கிரமிப்பு படலத்தை மேற்கொண்டனர்.

ஆனாலும் ஹேரேரோ மக்கள் அத்தனை கோழைகள் அல்ல எதிர்த்தனர். ஜெர்மனியப் படைகள் தோல்வியைச் சந்தித்தன.

அதன் பின்னர் மீண்டும் 10000 வீரர்களை லொதர் வோன் ட்ரோதா எனும் படைத்தளபதியுடன் அனுப்பி வைத்தது ஜெர்மன்.

போர் மூலம் அவர்களை அழிக்க முடியாது என்பதனை தெளிவாக அறிந்து கொண்ட ஜெர்மன் படைகள், ஹேரேரோ மக்களின் வாழ்வாதார அடிப்படையில் கை வைத்தது.

ஹேரேரோ மக்கள் வாழ்ந்த பகுதிக்கு நீர் வளம் கிடைப்பது மூன்று பகுதிகளில், அடுத்த பகுதி பாலைவனம் இதனை அறிந்த ஜெர்மன் படைகள் நீரில் விஷத்தை கலந்தன.

பாதிக்கப்பட்ட ஹேரேரோ மக்கள் பாலைவனத்தை தாண்டிச் சென்று நீரைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் பாலைவனத்தை நோக்கி செல்பவர்கள் சுடப்பட்டார்கள்.

இப்படியான இன அழிப்பு படலத்தில் குறுகிய காலப்பகுதியில் சுமார் 85000 மக்கள் வாழ்ந்த பகுதி 10000 வரையிலும் குறைந்து போக மீதமான ஹேரேரோ மக்கள் ஜெர்மன் படையினரால் அடிமைகளாக மாற்றப்பட்டனர்.
இப்படியாக திட்டமிட்டு சுமார் 1 இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர் இது வரலாறு மறைத்த இன அழிப்புகளில் ஒன்று.

இந்த இனஅழிப்பு கொலைகள் தொடர்பில் எந்த விதமான சர்வதேச விசாரணைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அப்படியே மறைக்கப்பட்டு மறந்து போனது உலகம்.

இப்படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? அதிகாரங்கள் கைவசம் இருக்கும் போது எத்தகைய குற்றங்களும் மறைத்து விட முடியும் என்பதா?
இந்த நிலை இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. முடிந்துபோன இலங்கை யுத்தமாக இருக்கட்டும், இப்போது தொடர்ந்து கொண்டு இருக்கும் சிரியா யுத்தமாக இருக்கட்டும் அனைத்தும் வேடிக்கை பார்க்கப்படுகின்றது.

இவற்றில் சர்வதேச தலையீடுகள் என்பனவும் குறைவு காரணம் அதிகாரம். அப்படி என்றால் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச விசாரணை அமைப்புகள் போன்றன யாருக்காக செயற்படுகின்றன?

அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி என்ற வகையில் அவை செயற்பட்டு கொண்டு வருகின்றது. என்றால் ஒட்டு மொத்த உலக மக்களும் ஏமாற்றப்படுகின்றார்களா?

Thursday 6 April 2017

வடகொரியா: ஒரு கொலையின் கதை

கதைகள் பலவிதம். 

சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், 


கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது.   
 
சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன.   
 

அது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. இதனால் கதைகளால் கட்டமைக்கப்பட்ட செய்திகள் மக்களிடையே ஊடுருவுவது அதிகம். இவ்வழியில் குறிப்பாக பொய்ச் செய்திகளைக் கதைகளின் ஊடாகக் கட்டமைப்பதன் மூலம், அவை உண்மை போலச் சொல்லப்படுவதோடு, அக்கதையில் உள்ளார்ந்து இருக்கின்ற உணர்வுநிலையைத் தட்டியெழுப்பும் பண்பு, அக்கதையை உண்மையென இலகுவில் பொதுப்புத்தி மனநிலையில் விதைக்கிறது.   
 
சிலவாரங்களுக்கு முன், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரர் கிம் ஜொங் நம், வடகொரிய உளவாளிகளால் மலேசியாவில் கொலைசெய்யப்பட்டார் என்ற கதை மேற்கத்தைய ஊடகங்களால் எமக்குச் சொல்லப்பட்டது.   

அக்கதை இன்றுவரை உண்மையென நம்பப்படுவதோடு, வடகொரியா பற்றிக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பம், அக்கதை உண்மையாகத்தான் இருக்கும் என்ற பொதுப்புத்தி மனநிலையை உருவாக்குவதன் ஊடு, அச்செய்தியை மெய்யாக்கியது.   
 
இந்நிலையில், இரண்டு கதைகள் தொடர்பில் சில தகவல்களைச் சொல்வது தகும். முதலாவது வடகொரியா பற்றிக் கட்டியெழுப்பப்பட்டுள்ள கதைகள்; அது பற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பம் பற்றிய ஒரு மீள்பார்வை.  
 இரண்டாவது, கடந்த சில வாரங்களாக கிம் ஜொங் நம்மின் மரணம் தொடர்பில் சொல்லப்படுகின்ற கதையின் தகவல்களைச் சரிபார்க்கும் சில வினாக்கள்.   
 
1965 ஆம் ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் செய்த சேகுவேரா, “புரட்சிகர கியூபா, முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டிய ஒரு நாடாகும்;அதோேபால், மக்கள் மையப்படுத்தப்பட்ட கொள்கைகளின் வழி, மக்கள் நல அரசாக வடகொரியா திகழ்கிறது” எனத் தனது அனுபங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.   
 
இன்று வடகொரியா பற்றி எழுப்பப்பட்டுள்ள பிம்பம் என்ன? உலகின் மிகவும் மோசமான சர்வாதிகார நாடு; மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகிறார்கள்; அணுஆயுதம் மூலம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இவை காலம்காலமாய் விதைத்து அறுவடை செய்யப்பட்ட கதைகளாகும்.   
 
இப்பின்னணியில் வடகொரியாவை மீண்டும் உலகின் கவனம் பெறவைத்த, அண்மையில் நடந்த கொலையின் கதையை நோக்குதல் வேண்டும்.
வடகொரிய உளவாளிகளால் தடைசெய்யப்பட்ட ‘VX’ எனப்படும் இரசாயன ஆயுதத்தினால் கிம் ஜொங் நம் கொல்லப்பட்டதாகச் சொல்கிற மேற்குலக ஊடகங்கள், 1993 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரசாயன ஆயுதப்பாவனைத் தடுப்பு உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை என்பதைச் சொல்லவில்லை.  
 
இக்கொலையை விசாரணை செய்யும் மலேசியப் பொலிஸார், இக்கொலையில் வடகொரியா தொடர்புபட்டுள்ளது என்று இன்றுவரை சொல்லவில்லை.

வடகொரியா, கிம் ஜொங் நம் மாரடைப்பால் இறந்ததாகவும் அவர் நீண்டகாலமான இதயப்பிரச்சினைகளைக் கொண்டிருந்ததாகவும் சொல்லியது. அவரது உடல் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றியல் பரிசோதனையின் முடிவில், மலேசிய அதிகாரிகள் அவர் மாரடைப்பால் இறந்தார் என அறிவித்தனர்.

பின்னர் முதலாவது உடற்கூற்றியல் பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்படவில்லை எனச் சொல்லி, இரண்டாவது முறை பரிசோதனை மேற்கொண்டு, மரணத்தில் ‘VX’ தொடர்புபட்டிருப்பதாக அறிவித்தனர்.   
கிம் ஜொங் நம், மரணமடைந்த மறுநாள், தென்கொரிய அரசுதான் முதன் முதலில், இது வடகொரியாவினால் திட்டமிடப்பட்ட சதி என்றும் இதில் ‘VX’ என்கிற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.  
 மலேசிய அதிகாரிகள் உடற்கூற்றியல் பரிசோதனைகளின் விளைவாக ‘VX’ யின் பயன்பாட்டை அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன், தென்கொரியாவுக்கு இது தெரிந்தது எவ்வாறு? இதனுடன் தொடர்புடைய இரண்டு பெண்களும் இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னான குறித்த காலப்பகுதியில் பலதடவைகள் தென்கொரியாவுக்கு பயணம் செய்தது எதற்காக?

இக்கொலையுடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகத்தின் பெயரில் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வடகொரியர் நிரபராதி என விடுவிக்கப்பட்டது எதைக் குறிக்கிறது.  

மலேசிய விமான நிலையத்தில் கிம் ஜொங் நம் மீது ‘VX’ இரசாயனப் பதார்த்தத்தை இரண்டு பெண்கள் தடவி, கிம் ஜொங் நம்மைக் கொலை செய்தார்கள் என்பதே இப்போது சொல்லப்படும் கதை.   
 
அதைத் தடவிய பெண்கள் கையில் கையுறை அணிந்திருக்கவில்லை. சொல்லப்படும் கதையின் படி, அவர்கள் ‘VX’ யைத் தங்கள் கைகளில் தடவிய பின்னர், கிம் ஜொங் நம்மின் மீது தடவிய பின்னர், தங்கள் கைகளைக் கழுவியுள்ளார்கள் என்றவாறு உள்ளது.  
 
 அவ்வாறெல்லால் இவ்வளவு வலுவுள்ள ஓர் இரசாயனத்தைப் பயன்படுத்தியவர்கள் நிச்சயம் சுகவீனமுற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஏதும் நிகழவில்லை. மாறாக இவ் இராசயனப் பொருள் சூழலில் உள்ள ஏனையோரையும் நிச்சயம் பாதிக்க வல்லது.   

இது விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் நிச்சயம் சனநெரிசல் மிக்க விமான நிலையத்தில் ஏனையோரும் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால், அவ்வாறெதுவும் நிகழவில்லை. சொல்லப்படுகின்ற கதையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் தெளிவாகியுள்ளது.  
 

வடகொரியா மீதான மேற்குலக விசமத்தனத்தை புரிந்து கொள்ள வரலாறு உதவும். கொரியாவின் வரலாறு கொரியக் குடாநாட்டின் கட்டுப்பாட்டுக்கான கேந்திர முக்கியத்துவத்துடனும் பசுபிக் பிராந்தியத்தின் மீதான ஆதிக்கத்துக்கான போட்டியுடனும் பின்ணிப் பிணைந்துள்ளது.  
 
வடமேற்கே சீனாவையும் வடகிழக்கே ரஷ்யாவையும் எல்லைகளாகக் கொண்ட கொரியாவின் கிழக்குப் பகுதி, ஜப்பானிடமிருந்து கொரிய ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரை கொரியாவாகவிருந்த நாடு, பின்னர் வடக்குத் தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.   

1910 ஆம் ஆண்டு ஜப்பான், கொரியா மீது படையெடுத்து, ஜப்பானின் கொலனியாகக் கொரியாவை வைத்திருந்தது. 35 ஆண்டுகளுக்கு ஜப்பான் முதலாளிகளுக்கு மிகுந்த இலாபம் தரும் ஒரு கொலனியாக, கொரியா விளங்கியது.   
 
கொரிய ஆண்கள் அடிமைகளாகவும் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் ஜப்பானுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள். ஜப்பானால் தனியாகக் கொரியாவைச் சூறையாடவியலாது.

எனவே, ஜப்பான் கொரியாவின் சொத்துடைய நிலவுடைமையாளர்கள், தொழிற்சாலை முதலாளிகளைத் துணைக்கழைத்துக் கொண்டது.   
இவர்கள்தான், பின்னர் தங்கள் ஆதரவை ஜப்பானுக்கு மறுத்து, அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாக்கி, பின்னர் உருவான தென்கொரிய அரசின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.   
 
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க, ஜப்பான் நேரடிப் போருக்கான உடனடிக் காரணியாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தின் மீதான ஜப்பானின் தாக்குதல் இருந்தபோதும், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான போர் தவிர்க்கவியலாதது என்ற நிலையை பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்கான போட்டி ஏற்கெனவே உருவாக்கியிருந்தது.  

 பிலிப்பைன்ஸ், குவாம், ஹவாய், சமோவா ஆகிய நாடுகளில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்கா, தனது பொருட்களை எதுவித கட்டுப்பாடின்றி சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திறந்த பாதையொன்றை வேண்டி நின்றது.  

அதற்கு வாய்ப்பான நாடாக கொரிய இருந்த, அதேவேளை வினைதிறன் மிக்க கடினமான வேலையாற்றும் மக்களாகிய கொரியர்களை பயனுள்ள மனிதவலுவாக அமெரிக்க அடையாளம் கண்டிருந்தது.   
 
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜப்பானின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அதன் கொலனிகளில் தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியது. 
 1943 இல் அமெரிக்கா தனது பக்கத்தில் போரிட்ட நேசநாடுகளின் கூட்டணியில் உள்ள பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிடம் கூட்டாகக் கொரியாவை கட்டுப்படுத்துவதற்கான வரைபொன்றை சமர்ப்பித்தது. ஆனால், பிரித்தானியாவும் பிரான்ஸும் இதை விரும்பவில்லை.   
 
அதேவேளை, ஜப்பானைத் தோற்கடிப்பது இலகுவானதல்ல என அவர்கள் அறிந்திருந்தார்கள். பிராந்திய ஆதிக்கத்துக்காகவும் பரிசோதனைக்காகவும் அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டை ஏவும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.   
 
ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் பங்கெடுத்த சோவியத் படைகள் கொரியாவிலிருந்து, ஜப்பானியப் படைகளை வெளியேற்றத் தொடங்கியபோது, அச்சமடைந்த அமெரிக்க, தனது படைகளை கொரியாவில் இறக்கி, 38 ஆவது அட்சரக் கோட்டால் கொரிய இரண்டாகப் பிரிவுண்டது.   
 
இது கொரிய மக்களின் விருப்புடன் செய்யப்பட்டதல்ல; மாறாக கொரியாவின் மீதான அமெரிக்காவின் ஆவல் இதைச் சாத்தியமாக்கியது. வடக்கு கொரியா, சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் தெற்குக் கொரியா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுப் பகுதியுமானது.   
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, 1950 இல் தொடங்கி 1953 வரை நீடித்த கொரிய யுத்தம், இரண்டரை மில்லியன் கொரியர்களைக் காவுகொண்டது.

கொரிய யுத்தத்தின் பின்னரான பத்து ஆண்டுகளில் வடகொரியப் பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 25 சதவீதம் என்றளவில் வளர்ந்தது. 1965 முதல் 1978 வரையான காலப்பகுதியில் வளர்ச்சி வீதம் ஆண்டொன்றுக்கு 14 சதவீதமாகவிருந்தது.   
 
இதே காலப்பகுதியில், அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட தென்கொரியாவின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருந்தது. 1980 ஆம் ஆண்டளவில் வடகொரியாவின் தலைநகரான ‘பியென்யாங்’ ஆசியாவின் மிகவும் சிறந்த வினைத்திறனுள்ள நகராக அறியப்பட்டது.   
 
1960 களில் சோவியத் யூனியன், சீனா முகாம்களுக்கிடையிலான தத்துவார்த்த முரண்பாடு சோசலிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் நாடுகள் இவ்விரண்டில் ஏதாவதொரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது.  
 
சோவியத் முகாமின் தத்துவார்த்த முரண்களை இனங்கண்ட வடகொரியா, இம்முரண்பாட்டில் தன்னைச் சீனாவின் பக்கம் நிறுத்திக் கொண்டது.   
இதனால் கோபமடைந்த சோவியத் யூனியன், வடகொரியாவுடனான வர்த்தக உறவுகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியது. இருந்தபோதும், தென்கொரியாவுடன் ஒப்பிடும் போது, ஒரு சமூகநல அரசாக வடகொரியா தனது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் முன்னின்றது.   
 
1989 இல் சோவியத் யூனியனின் முடிவு, அமெரிக்கா மைய ஒரு மைய உலகின் தோற்றம் என்பன வடகொரியாவுக்கு வாய்ப்பாக அமையவில்லை. தனது வலுத் தேவைகளுக்கான அணுமின் உலைகளை நிறுவ முயன்ற வடகொரியா, தண்டிக்கப்பட்டது.   
 
இதைத் தொடர்ந்து வடகொரியாவைத் தாக்கியழிக்கப்போவதாகத் தொடர்ச்சியாக அமெரிக்கா மிரட்டியது. இதற்குப் பதிலடியாக வடகொரிய அணுஆயுதப் பரிசோதனையொன்றைச் செய்தது.   

அமெரிக்க மிரட்டலை அலட்சியப்படுத்தி, வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுதப் பரிசோதனையை ஐ.நா பாதுகாப்புச் சபை கண்டித்தும் வட கொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.   
 
வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. இன்னொரு பரிசோதனையை நடத்துகிற நோக்கம் இல்லை எனவும் அமெரிக்காவின் ஆயுத மிரட்டல் வலுப்படும் பட்சத்தில், பரிசோதனைகளைத் தொடருகின்ற உரிமையையும் வலியுறுத்தியது. பொருளாதாரத் தடைகள் வடகொரியாவை மோசமாகப் பாதித்துள்ளன. இவ்விடத்தில் சில விடயங்களை நினைவுறுத்தல் தகும்.   
 
உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான்.

அது மட்டுமன்றி, அணு உலைகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கம் கொண்ட உலோகங்கள் கொண்ட ஏவுகணைகளை ஈராக்கில் பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். 
 
 அதன் விளைவாகப் பத்தாயிரக் கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான குழந்தைகள் புற்றுநோய் உட்படக் கடும் உபாதைக்குட்பட்டுள்ளார்கள்.   
 
கெடுபிடிக் காலத்தில் அணு ஆயுதக் குறைப்புப் பற்றிய உடன்படிக்கைகள் ஏற்பட்ட போதும், பழைய ஆயுதங்களின் இடத்தில் புதிய, பாரிய ஆயுதங்கள் வந்தனவே ஒழிய, அணு ஆயுத வலிமை குறைக்கப்படவில்லை.   
 
சோவியத் யூனியன் உடைந்த பின்பும் அமெரிக்கா தனது அணு ஆயுத வல்லமையை மேலும் அதிகப்படுத்தி வந்துள்ளது ஏன்? அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவா? 

நிச்சயமாக இல்லை. உலக நாடுகள் மீது போர் மிரட்டல் தொடுத்து, தான் எண்ணியதைச் சாதிக்கிற போக்கைக் கொண்ட அமெரிக்கா, பெரும் தொகையான ஆயுதங்களை வைத்திருப்பது பிற நாடுகளை மிரட்ட மட்டுமே. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கரமான இஸ் ரேலிடம் அணு ஆயுதங்கள் நிறைய இருப்பதும் அதற்காகவே.   
 
தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளை அமெரிக்கா தொடர்ந்து கவிழ்த்து வந்துள்ளது. அது இராணுவச்சதி, கொலை, நாடுகடத்தல், இராணுவத் தலையீடு, மனிதாபிமானத் தலையீடு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனப் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது.  
 
ஆனால், இன்றுவரை வடகொரியாவின் மீது ஒரு போரைத் தொடுப்பதற்கான துணிவு அமெரிக்காவுக்கு இல்லை. அதன் அர்த்தம் அமெரிக்காவின் விருப்பில்லை என்பதல்ல; வடகொரியாவிடம் உள்ள அணுஆயுதங்கள் இன்றுவரை அமெரிக்காவின் நேரடியான தலையீட்டிலிருந்து கொரியாவை தற்காத்து வந்துள்ளன. 
 
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், சகோதரர் கிம் ஜொங் நம்மின் மரணம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என கொரியாவை நீண்டகாலமாக அவதானிக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   
 
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்துக்கும் வடகொரிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வொஷிங்டனில் ஏற்பாடாகியிருந்த நிலையில், இச்சந்திப்பு நீண்டகாலமாகத் தொடரும் அமெரிக்க, வடகொரிய முரண்பாட்டைத் தணிக்கும் ஒன்றாகவிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.   
 
இந்நிலையில் இம்மரணத்துக்கான பழியை வடகொரியாவின் மீது போடுவதன் மூலம் இச்சந்திப்பைத் தடுக்கும் முயற்சியாக இதை ஒரு சாரார் நோக்குகிறார்கள். இதற்காகத்தான், கிம் ஜொங் நம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைப்பவர் என்ற பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது.   
 
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடனான சந்திப்புக்கான வாய்ப்புகள் உள்ள காலப்பகுதியில் இவ்வாறான கொலை, சந்திப்பை இயலாததாக்கும் என நன்கறிந்த வடகொரியா இவ்வாறானதொரு கொலையைச் செய்யுமா?  
அவ்வாறு கொலை செய்ய முடிவு செய்தாலும், அரசியலிருந்து ஒதுங்கியுள்ள சகோதரரை தடைசெய்யப்பட்ட இரசாயனப் பொருளைப் பயன்படுத்தி கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்குள்ளாகும் ஓர் இடத்தில் அதுவும், வடகொரியாவுக்கு மிகவும் நட்பான நாடொன்றில் இக்கொலையை அரங்கேற்றியிருக்குமா?  

அவ்வாறு கொலை செய்ய வேண்டுமாயின் கிம் ஜொங் நம் அடிக்கடி தங்குகிற மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வடகொரியத் தூதரக விடுதியில் அதை இலகுவில் செய்திருக்க முடியும்.   

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தெரியாத, அறிவற்ற பைத்தியக்காரன் என்ற பிம்பம் உருவாக்கப்பட்ட பின்னணியில், வடகொரியா பற்றிய இவ்வாறான பொய்யான கதைகள் கட்டமைக்கப்பட்டு உலாவருகின்றன.   
 
அதை நாமும் நம்புகிறோம் அல்லது நம்ப வைக்கப்படுகிறோம். இது கொலையின் கதையா அல்லது கதையின் கொலையா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

எர்­டோ­கானின் எழுச்சி ஒரு சுல்­தானின் உரு­வாக்கம்

முற்று முழு­­தான  அதி­கா­ரத்தைக் கொண்ட ஆட்­சி­யா­ள­ராக துருக்­கியில் எர்­டோ­கானின் எழுச்சி ஜன­நா­யக நாடுகள் இன்று எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டிக்கு  செம்­மை­யான  ஒரு உதா­ரணம்

 
 
துருக்­கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் தனது அர­சி­ய­ல­மைப்புத் திருத்த திட்­டங்­க­ளுக்கு வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி றிசேப் தஜீப் எர்­டோனால் இய­லு­மாக இருந்­ததால் நாட்டின் அர­சியல் ஒழுங்கு முறை கடு­மை­யான மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகும். 

எர்­டோ­கானின் தலை­மை­யி­லான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் (ஏ.கே.கட்சி என்று சுருக்­க­மாக அழைக்­கப்­ப­டு­கி­றது) ஆதிக்­கத்தில் உள்ள துருக்­கிய பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்புத் திருத்­த ­யோ­ச­னை­க­ளுக்கு ஏற்­க­னவே அங்­கீ­கா­ரத்தை அளித்­து­விட்­டது. இந்த யோச­னைகள் பாரா­ளு­மன்ற ஆட்­சி­மு­றையை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறை­யாக மாற்­று­வ­தற்­கான நோக்கம் கொண்­டவை. 

ஜனா­தி­பதி எர்­டோ­கானே அர­சாங்­கத்­தி­னதும் அர­சி­னதும் ஆளும் கட்­சி­யி­னதும் தலை­வ­ராக இருப்பார். பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் இன்றி அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­க­ளையும் சிரேஷ்ட அதி­கா­ரி­க­ளையும் நிய­மனம் செய்­வ­தற்­கான அதி­கா­ரங்­களை அவர் கொண்­டி­ருப்பார். தற்­போது கோட்­பாட்­ட­ளவில் மிகவும் கூடுதல் சக்­தி­வாய்ந்த அர­சாங்கப் பத­வி­யாக இருக்கும் பிர­தமர் பதவி ஒழிக்­கப்­படும். நாட்டின் அதி­யுயர் நீதி­மன்­றத்­துக்கு அரை­வா­சிக்கும் அதி­க­மான நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்கும் பாரா­ளு­மன்­றத்தை (தேசிய சட்­ட­சபை என்று அழைக்­கப்­ப­டு­கி­றது) கலைப்­ப­தற்கும் அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­டனம் செய்­வ­தற்­கு­மான அதி­கா­ரங்கள் அவ­ருக்கு இருக்கும்.
அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தங்கள் எர்­டோ­கா­னுக்கு இரு 5 வருட பதவிக் காலங்­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமையும். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பிறகு இந்த மாற்­றங்கள் நடை­மு­றைக்கு வரு­கின்ற பட்­சத்தில் அவர் துருக்­கியை 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். சுல்தான் இராச்­சி­யத்தின் கீழ் துருக்கி இருந்த கால­கட்­டத்­துக்குப் பிறகு கமால் அட்­ட­டுர்க்கைத் தவிர (முத­லா­வது உலக மகா­யுத்த கால­கட்­டத்தில் இரா­ணுவ ஜென­ர­லாக இருந்து பின்னர் துருக்­கிய குடி­ய­ரசை ஸ்தாபித்து முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக 1923 முதல் 1938 ஆம் ஆண்டு வரை பதவி வகித்­தவர்) அந்த நாட்டில் வேறு எந்த தலை­வரும் அனுப­வித்­தி­ராத பெரு­ம­ளவு அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக எர்­டோகன் விளங்­குவார். 

அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்தல் 

முதலில் பத­விக்கு வந்து பிறகு மக்­களின் ஆத­ர­வுடன் முற்று முழு­தாக அதி­கா­ரத்தைக் கொண்ட ஆட்­சி­யா­ள­ராக எர்­டோ­கானின் எழுச்சி 21 ஆம் நூற்­றாண்டில் தேர்தல் ஜன­நா­ய­கங்கள் எதிர்நோக்­கு­கின்ற நெருக்­க­டிக்­கான ஒரு பாடநூல் உதா­ர­ண­மாக விளங்­கு­கி­றது. 

வர­லாற்று ரீதி­யாக இரா­ணு­வத்­தி­னதும் பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் ஆதிக்­கத்தின் கீழ் இருந்த துருக்­கியின் கொந்­த­ளிப்­பான அர­சி­யலில் எர்­டோ­கானின் ஏ.கே.கட்சி ஒப்­பீட்­ட­ளவில் புதி­ய­தொரு தோற்­றப்­பா­டாகும். தாராள பொரு­ளா­தார நோக்­கு­டைய ஒரு பழ­மை­வாத அர­சியல் சக்­தி­யாக தன்னைக் காட்­டிக்­கொள்­கின்ற இக்­கட்சி நாட்­டுக்கு உறு­திப்­பாட்­டையும் அபி­வி­ருத்­தி­யையும் கொண்­டு­வ­ரு­வ­தாக ஆட்­சி­ய­தி­கார வர்க்­கத்தின் மீது பெரு­ம­ளவில் வெறுப்­ப­டைய ஆரம்­பித்­தி­ருக்கும் மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தது. ஏ.கே. கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு வரு­டத்­துக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிகப் பெரும்­பான்மை பலத்­துடன் அதி­கா­ரத்­துக்கு வந்­தது. சட்­ட­ரீ­தி­யாக இருந்த தடை­யொன்றை வெற்­றி­கொண்ட பிறகு 2003 ஆம் ஆண்டில் எர்­டோகான் பிர­த­ம­ராக வந்தார். அதற்குப் பிறகு துருக்கி மீதான தனது அதி­காரப்பிடி தளர்­வ­தற்கு அவர் இடம் கொடுக்­க­வில்லை. 

எர்­டோகான் அடிப்­ப­டையில் ஒரு இஸ்­லா­மி­ய­வாதி. துருக்­கியின் இஸ்­லா­மிய கடந்த காலத்தை அடிக்­கடி பெரு­மை­யுடன் நினைவு மீட்­டு­கின்ற அவர் அந்த நாட்டின் நவீன மத­சார்­பற்ற விழு­மி­யங்­களை வெறுப்­ப­வ­ராக இருக்­கிறார். தொடக்­கத்தில் அவர் துருக்­கியின் பொரு­ளா­தார வளர்ச்­சியைத் துரி­தப்­ப­டுத்­திய திறந்த சந்தை சீர்­தி­ருத்­தங்­களில் கவ­னத்தைச் செலுத்­தினார். அதே சந்தைப் பொரு­ளா­தாரச் சீர்­தி­ருத்­தங்கள் புதிய மத்­திய தர வர்க்­க­மொன்­றையும் உரு­வாக்­கின. 

அந்த வர்க்கம் நகர்­ப்பு­றங்­களில் ஏ.கே.கட்­சியின் விசு­வா­ச­மான ஆத­ரவுச் சக்­தி­யாக மாறி­யது. இக் கட்சி அதன் இஸ்­லா­மிய பேச்­சுக்­க­ளினால் கிரா­மப்­புற மக்­க­ளு­டனும் நெருக்­க­மான உறவை வளர்த்துக் கொண்­டது. இரா­ணு­வத்­தாலும் அர­சியல் உயர்­வர்க்­கத்­தவராலும் வலி­யு­றுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட மத­ சார்­பற்ற வாதத்தைக் கொண்ட ஒரு நாட்டில் ஏ.கே. கட்­சியின் நிலைப்­பா­டுகள் ஆட்­சி­ய­தி­கார வர்க்­கத்­துடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யது. துருக்­கிய மத­சார்­பற்ற வாதத்தின் காவ­லர்கள் என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய பழைய கமால் கால ஒழுங்கு முறைக்கும் ஏ.கே.கட்­சியின் நல இஸ்­லா­மிய வாதத்­துக்கும் இடை­யி­லான பதற்றம் எர்­டோ­கானின் ஆட்­சிக்­கா­லத்தில் எப்­போதும் காணப்­ப­டு­கி­றது. ஆனால் பெரும்­பா­லான சர்­வா­தி­கா­ரி­களைப் போலன்றி அவர் ஒழுங்­கு­மு­றையை உட­ன­டி­யாக தீவிர மாற்­றங்­க­ளுக்­குள்­ளாக்கும் நட­வ­டிக்­கையில் இறங்­க­வில்லை. பதி­லாக பெரும்­பாலும் அவர் தனது அர­சி­ய­ல­மைப்பு வரை­ய­றை­க­ளுக்­குள்­ளேயே செயற்­பட்டார். அந்த வரை­ய­றை­களை விஸ்­த­ரிக்க அடிக்­கடி அவர் முயற்­சி­களை மேற்­கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

துருக்­கிய அர­சியல் சமு­தா­யத்தை மாற்­றி­ய­மைக்கும் தனது மூல­முதல் இலக்கை அவர் கைவி­ட­வில்லை. ஆனால் படிப்­ப­டி­யான தலை­யீ­டு­களின் ஊடாக அர­சியல் கருத்­தா­டல்­களின் மீது அடிக்­கடி செல்­வாக்குச் செலுத்­திய வண்ணம் பொறு­மை­யுடன் காத்­தி­ருக்க தயா­ரா­யி­ருந்தார். அடுத்­த­டுத்து வந்த தேர்தல் வெற்­றிகள் துருக்கி அர­சி­யலில் ஏ.கே.கட்­சியின் நிலையை வலுப்­ப­டுத்­தின. தன்னை விமர்­சிப்­ப­வர்­களை இரா­ணு­வத்­திற்குள் இருந்து களை­யெ­டுப்­ப­தற்கு அந்த வலு­வான நிலை வசதி செய்­து­கொ­டுத்­தது. பாரா­ளு­மன்­றத்தில் ஏ.கே. கட்­சியின் உறுப்­பி­ன­ராக மூன்று பத­விக்­கா­லங்­களை நிறைவு செய்த நிலையில் எர்­டோகான் 2014 ஆம் ஆண்டில் தன்னைத் தானே ஜனா­தி­ப­தி­யாக்கிக் கொண்டார். 

(ஏ.கே. கட்­சியைச் சேர்ந்த உறுப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்று பதவிக் காலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே அங்கம் வகிக்க முடி­யு­மென்று கட்­டுப்­பாட்டை நீண்­ட­கா­ல­மா­கவே அவர் நியா­யப்­ப­டுத்தி வந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது) இப்­போது அவர் தன்னை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு முன்­னெ­டுத்­தி­ருக்கும் முயற்­சிகள் இறுதிக் கட்­டத்தில் பிர­வே­சித்­தி­ருக்­கி­றது. 

மறைந்து போகும் மித­வாதம் 

பத­வியில் இருந்த ஆரம்ப வரு­டங்­க­ளுக்குப் பிறகு மித­வாதி என்ற அவரின் முக­மூடி அகன்று போனது. 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தக் கிளர்ச்­சி­க­ளுக்குப் பிறகு முஸ்லிம் சகோ­த­ரத்­துவப் பாணி­யி­லான இஸ்­லா­மிய வாதத்தை எர்­டோகான் வெளிப்­ப­டை­யா­கவே ஆத­ரிக்கத் தொடங்­கினார். மேற்­கா­சி­யாவில் புதி­ய­தொரு இஸ்­லா­மிய ஒழுங்கு முறை­யாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம் விரி­வ­டையும் என்று எர்­டோ­கானும் பல சகோ­த­ரத்­துவ சிந்­த­னை­வா­தி­களும் எதிர்­பார்த்­தார்கள். அந்த இயக்­கத்­துடன் துருக்­கியை அணி­சேர்த்துக் கொள்­வ­தற்­காக தனது வெளி­யு­றவுக் கொள்­கை­யிலும் அவர் மாற்றம் செய்தார். ஆனால் அவர்கள் எதிர்­பார்த்­த­து­போன்று புதிய இஸ்­லா­மிய ஒழுங்­கு­முறை ஒரு­போதும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உள்­நாட்டில் எர்­டோ­கானின் நிர்­வாகம் பெரு­ம­ள­வுக்கு அடக்குமுறைத் தன்மை கொண்­ட­தாக மாறி­யது. கூடுதல் அதி­கா­ரங்­களைத் தன்­வ­சப்­ப­டுத்­து­வதில் அவ­ருக்­கி­ருந்த பெரு­வி­ருப்பம் இர­க­சி­ய­மா­ன­தாக இருக்­க­வில்லை. 

புதி­ய­தொரு துருக்­கியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தங்­க­ளது திட்­டங்­க­ளுக்கு பெரிய தடை­யாக நடை­முறைச் சட்­டங்கள் இருப்­பதை தெரிந்து கொண்ட எர்­டோ­கானும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைப்­பது குறித்த விவா­தத்தை 2011 ஆம் ஆண்டில் ஆரம்­பித்­தார்கள். ஆனால் துருக்­கியின் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ராக முழு அள­வி­லான போரைத் தொடுப்­ப­தற்கு கார­ண­மொன்று அவ­ருக்குத் தேவைப்­பட்­டது. 2016 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சி அந்தக் கார­ணத்தை அவ­ருக்கு கொடுத்­து­த­வி­யது. 

சந்­தர்ப்­பத்தை இறுகப் பிடித்துக் கொண்ட எர்­டோகான் "எனக்கு எதி­ராக அவர்கள்" என்ற பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து துருக்­கியின் அண்­மைய வர­லாறு கண்­டி­ராத களை­யெ­டுப்பை கட்­ட­விழ்த்து விட்டார். பாது­காப்பு அதி­கா­ரிகள், நீதி­ப­திகள் உட்­பட ஒரு இலட்­சத்து முப்­பது ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான அர­சாங்க அதி­கா­ரிகள் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்­சியில் பங்­கேற்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள். இடை­நி­றுத்­தப்­பட்­டார்கள். அல்­லது பதவி நீக்­கப்­பட்­டார்கள். பெரும்­பா­லான ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்தின் நேரடி அல்­லது மறை­முக கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டன. நூற்­றுக்கும் அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இராணுவம் நிலை குலைந்து போனது. எதிரணி சின்னாபின்னமானது. இத்தகையதொரு பின்புலத்திலேயே இம் மாதம் சர்வஜன வாக்கெடுப்பில் துருக்கிப் பிரஜைகள் வாக்களிக்கப் போகிறார்கள். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவருவற்கான எர்டோகானின் திட்டங்கள் 'சிம்மாசனம் இல்லாத சுல்தான் இராச்சியம்' ஒன்றுக்கான சாதனமாகப் போகிறது என்று தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவரான டெவ்லெற் பாஹ் செலி ஒரு தடவை எச்சரிக்கை செய்திருந்தார். அதே சுல்தான் இராச்சியத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை இப்போது அதே பாஹ் செலி கூட ஆதரிக்கின்றார் என்பதுதான் இங்கு விசித்திரம். 

இந்த ‘சுல்தான் இராச்சியம்’ துருக்கியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கப் போவது மாத்திரமல்ல. ஒரு அரசியல் ஒழுங்கு முறையை அதற்குள் இருந்து கொண்டே எவ்வாறு கவிழ்ப்பது என்ற உதாரணத்தை உலகின் வேறு பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கின்ற (மற்றவர்களின் கருத்துகளை மதிக்காத) தேசியவாத இயக்கங்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் போகின்றது.  

ஸ்ரான்லி ஜொனி