33 ஆண்டு காலம்... அ.தி.மு.க-விலும், அதன் ஆட்சிகளிலும், அந்தக் கட்சியின் இரும்புப் பிம்பமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்திலும் தன்னிகரற்ற ஆதிக்கம் செலுத்தியவர் சசிகலா.
அந்த ஆதிக்கத்துக்கு ஆரம்பத்தில் பாதை போட்டுக் கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராசன். அந்தப் பாதையில் அடிபிசகாமல் பயணித்தார் சசிகலா. அதன் விளைவு, ‘சசிகலா குடும்பம்’ என்ற முத்திரையோடு, சக்தி வாய்ந்த ஒரு கூட்டம் தமிழகத்தில் உருவானது. அரசியல், அதிகாரம், தொழில்கள், வியாபாரம் என அனைத்திலும் அந்தக் குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு எனத் தனித்தனி ராஜ்ஜியங்களை உருவாக்கி ஆட்சி நடத்தினர். 33 ஆண்டு காலம் மெள்ள மெள்ள எழுப்பப்பட்ட அந்த சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும், கடந்த மூன்று மாதங்களில் மளமளவென சரிந்து விழுந்தன.
‘சின்னம்மா’ என்று அழைக்கப்பட்ட சசிகலா, சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார். “நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்... எங்கள் குடும்பத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும்” என்று சொன்ன நடராசன், மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். “டெல்லியின் சூழ்ச்சிகளை ஒரு நொடியில் தூள்தூளாக்கினோம்” எனப் பெருமை பேசிய திவாகரன் மர்ம மௌனத்தில் தவிர்க்கிறார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் நடந்த அன்று சைரன் வைத்த காரில் பறந்த மகாதேவனை, மரணம் அழைத்துக்கொண்டது. ‘இனி, கட்சியும் ஆட்சியும் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் குடும்ப உறவுகளையே ஒதுக்கிவைத்த தினகரனை, அ.தி.மு.க அமைச்சர்கள் ஒதுக்கிவிட்டனர். ஐ.டி துறை அடுத்தடுத்து நடத்திய ரெய்டுகளால் டாக்டர் வெங்கடேஷ், குளிர்க் காய்ச்சலில் உறைந்துவிட்டார். ‘‘தற்போது, அ.தி.மு.க என்ற கட்சியில் அந்தக் குடும்பத்தின் பிடி அறவே இல்லை’’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். ஆட்சி அதிகாரத்தில் அவர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. எங்கே தொடங்கியது இந்த வீழ்ச்சி?
சசிகலாவும் மோடியும்
2011-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி. அந்த நேரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சி. அரசியலைத் தாண்டி ஜெயலலிதாவும் மோடியும் அக்கறையான நண்பர்களாக இருந்தனர். அந்த வகையில், ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள குஜராத்தில் இருந்து நர்ஸ் ஒருவரை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிவைத்தார் மோடி. ஜெயலலிதாவின் டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை அந்த நர்ஸ் கவனித்துக்கொண்டார். திடீரென ஒருநாள், மோடியின் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட அந்த நர்ஸ், “என்னால் இங்கு இருக்க முடியாது. இந்த வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் என்னை மிரட்டுகிறார்கள். என் வேலையைப் பார்க்க அவர்கள் விடுவதில்லை” என்று புகார் வாசித்தார். மோடியின் கவனத்துக்கு அந்தப் புகார் போனது. உடனடியாகத் தொலைபேசியில் ஜெயலலிதாவைத் தொடர்புகொண்டார் மோடி. “நான் அனுப்பிய நர்ஸை அங்கே யாரோ இரண்டு பெண்கள் மிரட்டுகிறார்களாமே... யார் அவர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் விசாரித்தார். அந்தப் பெண்கள் சசிகலாவும் இளவரசியும்தான் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை மோடியிடம் தெரிவிக்கவில்லை. ‘‘நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று சொன்ன ஜெயலலிதா, அதன் பிறகு அந்த நர்ஸைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
பிறகு, அந்தப் பெண்களில் ஒருவர் சசிகலா என்று மோடி தெரிந்துகொண்டார். சசிகலாவைப் பற்றி அவர் மனதில் நெகட்டிவ் பிம்பமே பதிந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் மோடியின் எண்ணத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே நடந்தன. அதன் ஒட்டுமொத்த எதிர்வினையாக, சசிகலாவின் ராஜ்ஜியம் தற்போது சரிக்கப்பட்டுவிட்டது.
சசிகலாவின் அஸ்தமனம்!
2016 செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதற்கு மறுநாளே, அப்போலோ மருத்துவமனையை சசிகலாவின் குடும்ப உறவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஜெயலலிதாவால் துரத்திவிடப்பட்டவர்கள். கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பி.ஜே.பி., ஆட்சிக்கலைப்பு என்ற கோஷத்தை தமிழகத்தில் பரவவிட்டது.
பி.ஜே.பி-யின் முயற்சியை முறியடிக்க நினைத்த சசிகலாவின் கணவர் நடராசன், ராகுல் காந்தியை அழைத்துவந்து அப்போலோ மருத்துவமனை முன்னால் நின்று பேட்டி கொடுக்கவைத்தார். “இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் ஆதரவை தெரிவிக்கவே வந்தேன்” என்றார் ராகுல் காந்தி. ஜெயலலிதாவைப் பார்க்கவந்த முதல் அகில இந்தியத் தலைவர் அவர்தான்.
அந்தக் கணமே அ.தி.மு.க-வை அழித்தொழிக்கும் வேலைகளை வேகமாகத் தொடங்கினார் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா. சசிகலாவின் குடும்பத்தை அகற்றினால் மட்டுமே அ.தி.மு.க-வைத் தங்கள் இஷ்டத்துக்கு ஆடவைக்க முடியும் என்று பி.ஜே.பி முடிவு செய்தது. விறுவிறுவெனக் காய்கள் நகர்த்தப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார் என்ற தகவல் டெல்லியை எட்டியதும், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சென்னைக்கு வந்தார். அவருடைய தலைமையில், சசிகலாவுக்கு முதல் தலைவலி ஆரம்பித்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க வேண்டும்’ என்பது சசிகலாவின் எண்ணமாக இருந்தது. அதற்கு முட்டுக்கட்டை போட்டார் வெங்கைய நாயுடு. அதன் பிறகு, வேறு வழியில்லாமல் பன்னீர்செல்வத்தையே முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, சசிகலா எடுத்துவைக்க நினைத்த முதல் அடியிலேயே அவருக்கு அடி விழுந்தது.
குடும்பத்துக்குள் வெட்டுக்குத்து!
‘ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இனி சசிகலாதான் எல்லாம்’ என்று அவருடைய குடும்பத்தின் குட்டி ராஜாக்கள் நினைத்தனர். சசிகலாவோடு இருந்து கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த திவாகரன், மகாதேவன், பாஸ்கரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் என ஆளாளுக்குப் போட்டிபோட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தூது அனுப்பி, சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக முன்மொழியவைத்தார் திவாகரன். பன்னீர்செல்வமும் அப்படியே செய்தார். சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும், தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் கைகோத்துக்கொண்டனர். சசிகலாவை அவர்கள் இருவரும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். திவாகரன், பாஸ்கரன், மகாதேவன் என அனைரையும் ஒதுக்கிவைத்தனர். நடராசனால் இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு, அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியைப் பறிக்க தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவைத் தூண்டினார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சசிகலா, அவர்கள் சொன்னதை அப்படியே செய்தார். பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. பன்னீர்செல்வத்துக்கு பி.ஜே.பி கொடுத்த முதல்வர் பதவியை, தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவை வைத்துப் பறித்தனர்.
தோண்டி எடுக்கப்பட்ட வழக்குகள்!
மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசு, சசிகலா குடும்பத்தின் இந்தச் செயலால் கொதித்துப்போனது. ‘ஆபரேஷன் சசிகலா’ ஆரம்பமானது. புதிய புகார்கள், புதிய வழக்குகள், புதிய சிக்கல்கள் எதுவும் தேவைப்படவில்லை. எல்லாவற்றுக்கும் 1991 - 96 காலகட்டத்தில் சசிகலாவும், அவருடைய குடும்பமும் செய்த காரியங்களே போதுமானவையாக இருந்தன. சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. பன்னீர்செல்வம், கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினார்.
‘முதல்வராக வேண்டும்’ என்கிற சசிகலாவின் கனவை, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தகர்த்தது. ஏழு மாதங்களாக தேதி அறிவிக்காமல் ஒத்திபோடப்பட்டு இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில், மிகச் சரியாக இந்தத் தருணத்தில் தீர்ப்புத் தேதி வெளியானது. நடராசன் மீதான வெளிநாட்டுக் கார்கள் வழக்கு விசாரணை, வேகம் பிடித்தது. தினகரன், சசிகலா மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் நாற்காலியைப் பிடித்த சசிகலாவால், முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் போனது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அவர் அடைக்கப்பட்டார்.
துரத்தப்பட்ட தினகரன்!
சசிகலாவோடு அந்தக் குடும்பத்தின் சகாப்தம் முடிந்துவிடும் என்று நினைத்த மத்திய அரசுக்கு, தினகரன் தலைவலியாக மாறினார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக திடீரென ஆன அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பன்னீர் தரப்பு களத்தில் இறங்க, இரட்டை இலைச் சின்னம் பறிபோனது. ஆனால், தினகரன் அசரவில்லை. பணத்தைத் தண்ணீராக இறக்கி, வெற்றி முகம் காட்டினார். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் போனது.
இந்த நேரத்தில் தினகரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளைத் தேடித்தேடி ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள், இந்தியாவையே அதிரவைத்தன. ஆர்.கே. நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய, இது போதுமான ஆதாரமாக இருந்தது.
இதற்கிடையில், ‘இரட்டை இலைச் சின்னத்தைத் திரும்பப் பெற 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார்’ என்று சொல்லி, டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. `தினகரனோடு இருக்கும் அமைச்சர்களின் வீடுகளும் ரெய்டு பட்டியலில் இருக்கின்றன’ என்ற செய்தி கசியவிடப்பட்டது. ‘இதற்கு மேல் தினகரனைத் தாங்கிப்பிடித்தால் தங்கள் மடிக்கு ஆபத்து வந்துவிடும்’ என்பதை அ.தி.மு.க அமைச்சர்கள் உணர்ந்தனர். தினகரனின் தலையீடு இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் இனி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதே நேரத்தில், ஃபெரா வழக்கு விசாரணையும் தீவிரம் பெற்றது. அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத தினகரன் “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று கூலாகப் பேட்டி கொடுத்து சரண்டர் ஆகிவிட்டார்.
கப்சிப் ஆன டாக்டர் வெங்கடேஷ்!
இவ்வளவு சிக்கல்களில் சசிகலா குடும்பம் சிக்கிக்கொண்டதற்கும், அவர்களின் பிடி தளர்ந்ததற்கும், முக்கியக் காரணம் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன்தான். சசிகலாவை, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றத் துண்டியவர்கள் இவர்களே. சசிகலா சிறைக்குப் போனதுமே டாக்டர் வெங்கடேஷ் எங்கும் தென்படாமல் பதுங்கிக்கொண்டார். அதற்கு முக்கியக் காரணம், அடுத்தடுத்து நடந்த ரெய்டுகளால் அவர் அரண்டு போனதுதான். ஏனென்றால், டாக்டர் வெங்கடேஷ் வசம் இருக்கும் சொத்துகள் அப்படி. எதையும் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அவர் கழுத்துக்கும் கத்தியை நீட்டுவதற்குத் தயாராகவே இருக்கிறது வருமானவரித் துறை.
முறைகேடாகச் சேர்த்த சொத்துகள், அதிகாரவெறியால் அவசரகதியில் எடுத்த முடிவுகள், குடும்ப உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிவைத்த குழிகள் ஆகியவையே சசிகலாவின் ராஜ்ஜியம் சரிந்துவிழக் காரணமாக அமைந்துவிட்டன.
- ஜோ.ஸ்டாலின்
No comments:
Post a Comment