Thursday 18 May 2017

கடைசி தமிழன் இருக்கும் வரை மறக்க முடியாத மே 18!

மாவீரர்கள் சூழ்ச்சியினால் வீழ்ந்து போன வலியினைப் பற்றி நிறைய கட்டுரைகளை வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். 
 
 
 
சானல் 4 ஒவ்வொரு முறை ஈழப் படுகொலைகளைப் பற்றி காணொளி வெளியிட்ட போதும் அது அமீரக நேரம் அதிகாலை மூன்றறை மணியாயிருக்கும், இரவு முழுதும் கண்விழித்து நமது பெண்களும் பிள்ளைகளும் அலறி அழும் காட்சிகளைப் பார்த்து கையாலாகாதவனாய் வான் பார்த்து அழுதிருக்கிறேன். 
 
 பதுங்கு குழிக்குள் இருந்து சிறுமியொறுத்தி அப்பா வாங்கோல் வாங்கோல் என்று அலறிக் கொண்டிருந்த போதே குண்டு விழுந்து செத்துப் போன தகப்பானாயும் நானிருந்தேன், குழிக்குள் இருந்து கதறிய பிள்ளையாயும் நானிருந்தேன், மரத்தடியில் குலுக்கோஸ் பாட்டில்களைக் கையில் பிடித்துக் கொண்டு தலைக்காயத்திலிருந்து கட்டுக்களை மீறி வழியும் இரத்தத்தை துடைத்தபடி, தங்களைச் சுற்றி மொய்க்கும் ஈக்களை விரட்டிக் கொண்டு காமிராக்களைப் பார்த்த விழிகளை எல்லாம் எப்படி மறக்க? 
 
 
சூழ்ச்சியால் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான நம் தொப்புள் கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்ட தினத்தை வலியோடு தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது இந்த அவல மே 18. 
 
 சகோதரி இசைப்பிரியா வெள்ளை வேட்டியைக் கொடி போன்ற தன் மேல் சுற்றிக் கொண்டு காயத்தோடு இருந்த புகைப்படத்தையும், பின் ஆடையின்றி வீழ்த்தப்பட்டு கிடந்த புகைப்படத்தையும், மேலே கட்டம் போட்ட ஊதா கையிலியோடு தகப்பனை தாயை வாழ்க்கையை ஈழ மண்ணுக்காக தொலைத்து விட்டு அரை டிராயரோடு அமந்திருந்த மாவீரனின் மகனை ஒரு புகைப்படத்திலும், பின் அவனே வேறொரு புகைப்படத்தில் குண்டடிபட்டு மண்ணில் வீழ்ந்து கிடந்த காட்சியையும் இந்த ஈனக் கண்களால்தான் பார்த்தேன். 
 
காலங்கள் உருண்டோடி விட்டன. இன்று வெவ்வேறு சூழல்களைத் தமிழினம் பேசி, சிரித்து நகர்வது போலத் தெரிந்தாலும் ஈழத்தில் நிகழத்தபட்ட கொடுமையை மானமுள்ள கடைசித் தமிழன் இருக்கும்வரை மறக்கமாட்டான். 
 
 பலமான கேள்வியொன்றை சர்வதேசம் நம்மிடம் கேட்டு வைத்திருக்கிறது. பதிலை உடனே கொடுக்க முடியாத காலச் சூழலில் நாமெல்லோரும் ஊமைகளாக்கபட்டு விட்டோம் என்றாலும்.... சரியான நேரத்தில் எமது பிள்ளைகளால் இந்த மே பதினெட்டில் கேட்கப்பட்ட கேள்விக்குக் சரியான பதில் உலகம் அலற கொடுக்கப்படும். 
 
அந்த பதிலே வீழ்ந்த எம் இனத்தின் மீட்சி என்று காலம் கவனமாய் குறிப்பெடுத்தும் கொள்ளும்.
 
 ஈழப் போரில் கொல்லப்பட்ட எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு வீரவணக்கங்கள்
 
. #மே 18 -தேவா சுப்பையா

No comments:

Post a Comment