Sunday 25 June 2017

எமர்ஜென்சியின் 42 ஆண்டுகள்! ஜனநாயகத்தின் இருண்டகாலத்தில் நடந்தது என்ன?

1973 -ம் வருடத்தின் இறுதி மாதங்கள், பருவமழை பொய்த்து,விலைவாசி அதிகரித்து பொருளாதாரம் கற்சிலை என அசைவற்றும் உயிர்ப்பற்றும் கிடந்தது. இந்தியா தனது நிலையற்ற ஜனநாயகக் காலங்களை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.மாநிலங்கள் எங்கும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தன. அரசியலில் இருந்து விலகியிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனை மீண்டும் அரசியல் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தார், பீகாரின் மாணவர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்த 26 வயதான லாலு பிரசாத் யாதவ். பிரதமர் இந்திரா காந்தியின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக ‘முழுமைப் புரட்சி’ என்கிற கூட்டமைப்பு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் உருவானது.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

நாட்டில் உள்ள 14 லட்சம் ரயில்வே ஊழியர்களையும் ஒன்றிணைத்த தொழிற்சங்க ஊழியரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், மூன்று வாரங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார். நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே இயக்கத்தையும் அது நிலைகுலையச் செய்தது.

தலைநகர் டெல்லியிலும் காங்கிரஸுக்கு எதிராகவே அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆளுங்கட்சி எம்.பியான துல்மோகன் ராம் கையெழுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வலுவான சாட்சியங்களை முன்வைத்து போர்க்கொடி தூக்கினார்கள்.அப்போதுதான் பிரதமர் இந்திராவும் அவரது மிக நெருங்கிய நண்பரும் வழக்கறிஞரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான சித்தார்த் சங்கர் ராயும் கலந்தாலோசித்து எமர்ஜென்சி நிலையை போராட்டங்களுக்கு எதிரான தீர்வாகக் கொண்டுவந்தனர்.

12 ஜூன் 1975, இந்திராகாந்தி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கில் இந்திராவின் எம்.பி பதவி செல்லாது என அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதன்படி இந்திராவால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல்.ஜக்மோகன் லால் சின்காவின் இந்த தீர்ப்பு, சிறு குற்றத்திற்கான பெரும் தண்டனை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

மொரார்ஜி தேசாய் சுப்ரமணிய சுவாமி

அதுவரை காங்கிரஸ் வசம் இருந்த குஜராத் அரசு, தீர்ப்பு வந்த அன்று மாலை மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் வசம் சென்றது.
20 ஜூன் 1975,இந்திராவின் பதவி பரிபோகும் சூழல் உருவாக, அவரது ஆதரவாளர்கள் ’இந்திராவே இந்தியா’ என்று கோஷமிட்டபடி டெல்லி போட் கிளப்பில் ஒன்றுகூடினார்கள்.

ஆனால் பாவம், அவர்கள் ஒன்றுகூடியது பற்றிய தகவல் போட் கிளப்பைக் கடந்து கூட எட்டவில்லை. காரணம், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஐ.கே.குஜரால் அந்த நிகழ்வை ஒளிபரப்பாததுதான். அதை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக வி.சி.சுக்லாவுக்கு அந்த பதவி தரப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

அடுத்த தினமே ’இந்திராவை நீக்குங்கள்’ என்னும் இயக்கத்தை தொடங்கினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்கிடையேதான் இந்திராவின் மேல்முறையீட்டின் மீது உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இதுதான்,”இந்திரா நாடாளுமன்றத்தில்தான் செயல்பட முடியாது ஆனால் நாட்டை ஆளலாம்’ என்கிறது நீதிமன்றம். தீர்ப்பு நீதியற்றதாக இருக்கவே 25 ஜூன் 1975, எல்லோரையும் புரட்சிக்காக ஒன்றிணைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். போலீசுக்கும் ராணுவத்திற்கும் சேர்த்தே அழைப்பு விடுத்தார்.

“ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அழைப்பு ராணுவப் புரட்சியை தூண்டும். அதனால் நாம் உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்தலாம்” என இந்திரா காந்திக்கு யோசனை கூறுகிறார் சித்தார்த்த சங்கர் ராய்.

அந்த இரவு, இந்திய ஜனநாயகத்தின் மீது இருள் கவியத் தொடங்கியிருந்தது. இரவோடு இரவாக ஜனாதிபதி பக்ருதீன் அலியை சந்தித்த இந்திரா அவசர நிலையை பிரகடனப்படுத்தும் ஆணையில் கையெழுத்து பெற்றார். அதே இரவில் ’மிசா’ என்னும் சட்டத்தை செயல்படுத்தி எதிர்கட்சித் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, மொரார்ஜி தேசாய் ஆகியோரை கைது செய்தது காங்கிரஸ் அரசு. விஜயராஜே சிந்தியா, காயத்ரி தேவி உள்ளிட்ட அரச வம்சத்தவர்களும் கைது செய்யப்பட்டனர் சுப்ரமணிய சாமியும் ரயில்வே பணியாளர்களை ஒருங்கிணைத்த ஜார்ஜ் பெர்ணாண்டஸும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது.

அதே நள்ளிரவு இரண்டு மணிக்கு ’ஜே.பி கைது’ என்கிற தந்தியை யூ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. உடனடியாக டெல்லியின் அனைத்து செய்தி ஊடக அலுவலகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு நாடாளுமன்ற வளாக காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன்,”விநாச காலே விபரீத புத்தி’ என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்றார்.

ஓர் இரவில் நாடே துவம்சம் அடைந்திருக்க, மறுநாள் காலை 7 மணிக்கு அனைத்திந்திய வானொலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அறிவித்தார் இந்திரா.

இரண்டு நாட்களுக்குப் பின் சரியாக 28 ஜூன் 1975 அன்று டெல்லியின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் உயிர் பெற்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தனது முன்பக்கத்தில்,‘உண்மையின் காதல்மிக்க கணவரும், சுதந்திரத்தின் அன்புமிக்க தந்தையும்,நம்பிக்கை மற்றும் நீதியின் உயிர் தோழமையுமான ஜனநாயகம் 26 ஜூன்1975 அன்று இறந்தது” என்று கூறி தனது எதிர்ப்பு செய்தியை பதிவிட்டிருந்தது.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழோ பத்திரிகையாளர்கள் கைதைக் கண்டித்து தலையங்கப் பகுதியே இல்லாமல் செய்தித்தாளை பிரசூரித்தது.
அவசரநிலையில் நாடு ஒடுங்கிக் கிடந்த அதே சூழலில்தான் சரியாக 1 ஜூலை 1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நாட்டு வளர்ச்சிக்கான 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். வீடுகளற்ற பணியாளர்களுக்கான நிலங்கள்,விவசாய கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் மீதான மறுசீராய்வு,வருமான வரி வரையறைக்கான சம்பளம் ரூ 6000/- லிருந்து ரூ 8000/- உயர்வு உள்ளிட்டவை அதில் அடக்கம். மறுபக்கம் பதவியில் இல்லாத சஞ்சய் காந்தியும், சாதி ஒழிப்பு, கல்வி அறிவு, மரம் நடுதல், குடும்பக் கட்டுப்பாடு,வரதட்சணை ஒழிப்பு உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் ஒடுக்குமுறை ஒருபக்கம் தொடர்ந்தபடி இருந்தது.ஆனந்த் மார்க், ஆர்.எஸ்.எஸ், ஜமாத் இஸ்லாமி ஹிந்த், நக்சலைட் ஆகிய நான்கு அமைப்புகளுக்கும் அது சார்ந்து இயங்கும் 22 கட்சிகளுக்கும் அரசு தடைவிதித்தது.

இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையே செல்லாததாக்கும் விதமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 10 ஆகஸ்ட் 1975 அன்று சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் இந்திய நீதிமன்றங்களுக்கு அப்பாற்ப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.தற்போது நிலவிவரும் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்கான ஆதிப்புள்ளியும் அதன் அரசியலும் அப்போதுதான் தொடங்கியது.

கிஷோர் குமார்

4 மே 1976 அன்று மும்பையில் நடந்த காங்கிரஸ் பேரணியில் பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரைப் பாடச் சொல்லி அழைப்பு விடுத்தார் அமைச்சர் வி.சி சுக்லா. ‘உன்னுடைய 20 அம்சத் திட்டத்தைப் பற்றியெல்லாம் என்னால் பாடமுடியாது’ என்று கிஷோர் மறுக்க அன்று முதல் அவரது பாடல்கள் அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டது. கூடவே மாநிலங்களின் ஆட்சி உரிமைகளை மத்திய அரசு மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டது.அரசியலமைப்புச் சட்டத்தை நீதி அமைப்புகளின் தலையீடு இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு என்கிற திருத்தமும் கொண்டுவரப்பட்டது.

எமர்ஜென்சியின் உச்சகட்டமாக கட்டாய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் 1 செப் 1976ல் அமலுக்கு வந்தது.ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 11 மில்லியன் பேருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.அப்படி குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மறுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளை உடைய தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வங்கிகளில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய்

மார்ச் 1977ல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 21 மார்ச் 1977ல் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது. அதற்கு மறுநாள் வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சியின் பிரதிபலனாக ஒட்டுமொத்தமாகத் தோற்றது. சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி அதுவே. அடுத்த நான்கு நாட்களில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டின் ஐந்தாவது பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

’இந்திரா தான் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது தவறு என்று பின்னாளில் மிகவும் வருந்தினார்’ என்றார் அவரது காரியதரிசிகளில் ஒருவரான ஆர்.கே.தவான். உண்மையில் இந்திராவே எதிர்பார்க்காத அளவிற்கு நிலைமை கைநழுவிச் சென்றதுதான் அதற்குக் காரணம். சுதந்திர இந்தியாவில் நேரு முன்னிறுத்திய சமூக ஜனநாயகக் கட்டமைப்பை அவரது மகள் சமூகமும் இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல் பிரித்ததுதான் 42 ஆண்டுகள் கடந்தும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் நாடு ஏற்ற இறக்கம் பெற்றிருப்பதன் அடிப்படை அதிர்வலை.

Sunday 18 June 2017

வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை

தமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா? என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது.ஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறியாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன.


வெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு பொது மக்களுக்கே தவிர மோதிக் கொள்பவர்களுக்கு அல்ல.

இந்த விடயத்தில் நந்தவனத்து ஆண்டிகளாக தமிழ் அரசியல்வாதிகள் மாறிவிட்டனரா? என்ற பலத்த கேள்வி உருவாக்கப்பட்டு விட்டது.
முக்கியமான விடயம், எந்த ஒரு சமூகமும், இனமும் ஒற்றுமை என்ற கட்டமைப்பில் இருந்து பின்வாங்கும் போது அந்த சமூகமோ, இனமோ அடிபட்டுப் போகும் நிலை உருவாகிவிடும் என்பதே உண்மை.

விடுதலைப் புலிகளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள் முதல் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், கடும் போக்காளர்களுக்கும் ஓர் முக்கியத் தேவை இருந்தது.

“பிரபாகரனுக்கு பின்னர் தமக்கு எதிராக, தமது பிரதான எதிரியாக முன்னிருத்துவது யாரை?” என்பதே அது.

காரணம் அப்படி ஒருவர் இருக்கும் வரை மட்டுமே தமிழர்களின் தேவைகளை, உணர்வுகளை அடக்கியாள முடியும். எது எப்படியோ தமிழ்த் தலைமைகள் மத்தியில் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.

அதற்கு முக்கிய காரணம் உட்பூசல்கள் இருந்தாலும் கூட வெளியில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. இதனால் திணறிப்போய் இருந்த தெற்கு இனவாதிகளுக்கு கடந்த எழுக தமிழில் வடக்கு முதல்வரின் உரை தீனியாய் அமைந்து விட அவரை ஓர் இனவாதியாக சித்தரித்தனர்.

வடக்கில் இருந்து இராணுவங்களை அகற்றுதல், சிங்கள குடியேற்றங்களை கண்டித்தல் மற்றும் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதை எதிர்த்தல் போன்றன முக்கியம் என்பவற்றைக் கூறிய வடக்கு முதல்வர்.

நேற்றைய தினம் மீண்டும் ஓர் கருத்தைக் கூறியிருந்தார், அதாவது வடக்கில் அசாதாரணமான நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரையும், இராணுவத்தையும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சில கறுப்பாடுகள் பயன்படுத்திக் கொண்டால் இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் வடக்கு முதல்வர்.

இந்தக் கருத்துகளை வட முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு தரப்பினரைச் சுட்டிக்காட்டியே கூறியதாக எடுத்துக் கொண்டாலும், இராணுவ ஆட்சிக்கும், வடக்கை இராணுவத் தரப்பு கட்டுப்படுத்திக் கொள்ளவும் நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோமா? என்பதே தெளிவு.

இப்போது உள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதைய பிரச்சினைக்கு இராணுவத்தினரைக் கொண்டு வந்து சேர்ப்பது அது வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சமமானதே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.

அதேபோன்று வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தென் அரசியலைப் போன்று அவரிடமும் பேரம் பேசப்படுவதாக கூறியிருந்தார். இதே போன்றதொரு கருத்தினை குருகுலராஜாவும் முன்வைத்திருந்தார்.

ஆக இவற்றின் பின்னணியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சில சக்திகள் முனைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இதற்கான தீர்வு எட்டப்படுவது ஒற்றுமை என்ற ஒன்றின் மீது மட்டுமே தங்கியிருக்கும்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் குழப்பநிலையும், பலவீனங்களும் தோன்றிவிட்டன என்பதே உண்மை. ஆனால் இதில் தென்னிலங்கை இன்று வரை பாரிய தலையீட்டைச் செய்யவில்லை.

காரணம், வடக்கு பிளவுபட்டு மோதிக் கொள்வது என்பது அவர்களுக்கு கொண்டாட்டமே என்ற உண்மையை அறிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை தமிழ்த் தலைமைகள் செய்வது நல்லது.

குறிப்பாக இந்த பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்றன தமிழ் ஈழத்திற்காக, உரிமைக்காக போராடிய சமூகம் ஒரு மாகாண சபையினைக் கூட ஒற்றுமையாக நடத்த முடியாதா?

இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதோடு அது விமர்சனங்களாகவும் மாறிவிட்டது. அதிலும் சிங்கள தலைமைகளுக்கு இது கேலிக் கூத்தாகவும், தமிழ் மக்களுக்கு வேதனையையும் அளிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது.

இவற்றை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு சிந்தித்துப் பார்த்தால், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குழுமோதல்கள், வாள் வெட்டுக்கள், விபச்சாரங்கள், போதைப்பொருட்கள் போன்றவை மட்டுமல்லாது தற்கொலைகள் உட்பட சில்லறைத் தனமான பிரச்சினைகளையும்.,
ஒரு தரப்பினர், ஒட்டுமொத்த வட தமிழ் சமூகத்தோடு இணைத்தும், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, தனிஈழம், விடுதலைப்புலிகள், 
உரிமைப்போராட்டம் என்பதோடு இணைத்தும் வாதப்பிரதிவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதன் மூலம் தமிழ் மக்களை அடக்குவதே நோக்கம் என்பதனை வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் தனி மனித செயற்பாடுகளை உரிமைகள், இறைமைகள் சார்ந்த விடயமாக சித்தரிப்பது ஏன்? அது நியாயமான விடயமா? அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவர்கள் யார்?

இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் வடமாகாண சபையோ அல்லது கிழக்கு மாகாண சபையோ என மாகாண சபை முறையினால் தமிழர்களின் பிரச்சினைக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வுகள் கிடைக்காது.

சுமார் 70 வருடங்களாக போராடிய சமூகத்திற்கு போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருவதற்கு ஒற்றுமை மட்டுமே பிரதான காரணம். அது இல்லாவிட்டால் எப்போதோ போராட்டம் சிதைவடைந்து இருக்கும்.
70 வருடங்கள் உரிமைக்காக போராடி வருவது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.

இந்த நிலையில் சாதாரண மாகாணசபை அதாவது தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு கொடுக்க முடியாத மாகாணசபையினால் தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை பிளவுபட்டு போவது என்பது வேடிக்கையான விடயம்.

இங்கு வேடிக்கை மட்டுமல்ல 70 வருடகாலத்தில் பாதி அகிம்சை, பாதி ஆயுதரீதியில் உரிமைகோரிய ஓர் சமூகத்தினை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளே இவை எனவும் கூறமுடியும்.

இப்போது ஏற்பட்டுள்ள வடமாகாணசபையின் குழப்பங்கள் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயற்பட்டதா என்ற கேள்வியையும் கூட இன்று ஏற்படுத்தப்பட்டு விட்டது.


தமிழ் ஈழம் கேட்டுப் போராடிவர்களுக்கு ஒரு மாகாணசபையை கூட நடத்த முடியவில்லையா என்று தெற்கு கேள்வி எழுப்புகின்றது என அமைச்சர் மனோகணேசன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

அது உண்மைதான் ஆனாலும் தென்பகுதியில் ஊழல்கள் இல்லையா? உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன? எதுவுமில்லை.

காரணம் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை சீர்குலைக்கப்படுமாயின் அதன் இழப்பு அவர்களுக்கே என்பது நன்றாக கற்றறிந்து விட்ட ராஜ தந்திரிகள் அவர்கள்.

அதேபோன்று ஊழல்கள் இல்லாத இடம் இல்லை. ஊழல் ஒளிப்பு நல்லாட்சியிலும் அது தாராளமாக நடக்கின்றது. ஆனால் அது வடக்கில் நடைபெறும் போது பூதாகரமான விடயமாக மாற்றப்படுகின்றது.

இதற்காக ஊழலை வரவேற்பதோ அல்லது ஊழல் சரி என்றோ இங்கு வாதிட முன்வரவில்லை யதார்த்தம், உண்மை ஒற்றுமை மட்டும் வேண்டும் என்பதே.
வடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிப்பதோ, அதற்கு தீர்வு கண்டு அமைச்சர்களை பதவி விலக்குவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு என்பதில் எவ்வகையிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் இப்போது இந்த விடயம் வேறுவகையில் திசை திருப்பப்பட்டுவிட்டது.

ஒரு சிலரின் செயற்பாடுகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்த்திவிடும் ஓர் திரை மறைவு நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
அறவழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடிய ஓர் சமூகம் கட்டுக்கோப்புடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால் அந்த போராட்டங்களையே மலினப்படுத்தி பேசுவதற்கு இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.

இப்போதைக்கு முக்கித் தேவை தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே. ஒற்றுமை இழப்பின் ஒட்டு மொத்தமும் சிதைவடையும் அபாயம் ஏற்பட்டு விட்டது என்ற புரிதல் அவசியம்.

அதனை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் வன்மத்தையும், காழ்ப்புணர்சியையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படும் இழப்பு மட்டுமே.

இப்போதைய சூழலில் வடக்கில் ஒரு சிறு பிரச்சினை புகைவிட்டாலும் அது பூதாகரமானதாக மாறி விடும். அப்போது தெற்கு, வடக்கில் தலையிடும். அது வரையில் பொறுமையாகவே தென்னிலங்கை இருக்கும்.

அதன்பின்னர் வடக்கில் இராணுவ ஆட்சியும் கூட ஏற்படுத்தப்படும் சாத்தியக்கூறு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை தடுத்து நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று தமிழ்ச்சமூகத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தமிழ்த் தலைமைகளின் முக்கிய பொறுப்பு.
தவறு செய்பவன் தண்டிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் அடுத்தவன் தவறு செய்வது தடுக்கப்படும். அதனை ஒற்றுமையான இணைந்து செயற்படுவது நன்று.

அதனை விடுத்து அதிகாரத்திற்காகவும், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் மட்டும் எத்தனித்தால் அதில் இலாபமடையப் போவது மாற்றான், பாதிப்படையப் போவது தமிழர்களே.

கூத்தாடிகளுக்கும், குளிர்காய நினைப்பவர்களுக்கும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டார்கள் என்பதனைப் புரியவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை புரிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.Mawali Analan

பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. இது தெரியாம தான் இத்தன நாள் இருந்துருக்கோம் போங்க...! -

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம். பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.
 பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..? பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்…!