Sunday 25 June 2017

எமர்ஜென்சியின் 42 ஆண்டுகள்! ஜனநாயகத்தின் இருண்டகாலத்தில் நடந்தது என்ன?

1973 -ம் வருடத்தின் இறுதி மாதங்கள், பருவமழை பொய்த்து,விலைவாசி அதிகரித்து பொருளாதாரம் கற்சிலை என அசைவற்றும் உயிர்ப்பற்றும் கிடந்தது. இந்தியா தனது நிலையற்ற ஜனநாயகக் காலங்களை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.மாநிலங்கள் எங்கும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தன. அரசியலில் இருந்து விலகியிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனை மீண்டும் அரசியல் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தார், பீகாரின் மாணவர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்த 26 வயதான லாலு பிரசாத் யாதவ். பிரதமர் இந்திரா காந்தியின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக ‘முழுமைப் புரட்சி’ என்கிற கூட்டமைப்பு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் உருவானது.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

நாட்டில் உள்ள 14 லட்சம் ரயில்வே ஊழியர்களையும் ஒன்றிணைத்த தொழிற்சங்க ஊழியரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், மூன்று வாரங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார். நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே இயக்கத்தையும் அது நிலைகுலையச் செய்தது.

தலைநகர் டெல்லியிலும் காங்கிரஸுக்கு எதிராகவே அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆளுங்கட்சி எம்.பியான துல்மோகன் ராம் கையெழுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வலுவான சாட்சியங்களை முன்வைத்து போர்க்கொடி தூக்கினார்கள்.அப்போதுதான் பிரதமர் இந்திராவும் அவரது மிக நெருங்கிய நண்பரும் வழக்கறிஞரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான சித்தார்த் சங்கர் ராயும் கலந்தாலோசித்து எமர்ஜென்சி நிலையை போராட்டங்களுக்கு எதிரான தீர்வாகக் கொண்டுவந்தனர்.

12 ஜூன் 1975, இந்திராகாந்தி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கில் இந்திராவின் எம்.பி பதவி செல்லாது என அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதன்படி இந்திராவால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல்.ஜக்மோகன் லால் சின்காவின் இந்த தீர்ப்பு, சிறு குற்றத்திற்கான பெரும் தண்டனை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

மொரார்ஜி தேசாய் சுப்ரமணிய சுவாமி

அதுவரை காங்கிரஸ் வசம் இருந்த குஜராத் அரசு, தீர்ப்பு வந்த அன்று மாலை மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் வசம் சென்றது.
20 ஜூன் 1975,இந்திராவின் பதவி பரிபோகும் சூழல் உருவாக, அவரது ஆதரவாளர்கள் ’இந்திராவே இந்தியா’ என்று கோஷமிட்டபடி டெல்லி போட் கிளப்பில் ஒன்றுகூடினார்கள்.

ஆனால் பாவம், அவர்கள் ஒன்றுகூடியது பற்றிய தகவல் போட் கிளப்பைக் கடந்து கூட எட்டவில்லை. காரணம், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஐ.கே.குஜரால் அந்த நிகழ்வை ஒளிபரப்பாததுதான். அதை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக வி.சி.சுக்லாவுக்கு அந்த பதவி தரப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

அடுத்த தினமே ’இந்திராவை நீக்குங்கள்’ என்னும் இயக்கத்தை தொடங்கினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்கிடையேதான் இந்திராவின் மேல்முறையீட்டின் மீது உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இதுதான்,”இந்திரா நாடாளுமன்றத்தில்தான் செயல்பட முடியாது ஆனால் நாட்டை ஆளலாம்’ என்கிறது நீதிமன்றம். தீர்ப்பு நீதியற்றதாக இருக்கவே 25 ஜூன் 1975, எல்லோரையும் புரட்சிக்காக ஒன்றிணைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். போலீசுக்கும் ராணுவத்திற்கும் சேர்த்தே அழைப்பு விடுத்தார்.

“ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அழைப்பு ராணுவப் புரட்சியை தூண்டும். அதனால் நாம் உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்தலாம்” என இந்திரா காந்திக்கு யோசனை கூறுகிறார் சித்தார்த்த சங்கர் ராய்.

அந்த இரவு, இந்திய ஜனநாயகத்தின் மீது இருள் கவியத் தொடங்கியிருந்தது. இரவோடு இரவாக ஜனாதிபதி பக்ருதீன் அலியை சந்தித்த இந்திரா அவசர நிலையை பிரகடனப்படுத்தும் ஆணையில் கையெழுத்து பெற்றார். அதே இரவில் ’மிசா’ என்னும் சட்டத்தை செயல்படுத்தி எதிர்கட்சித் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, மொரார்ஜி தேசாய் ஆகியோரை கைது செய்தது காங்கிரஸ் அரசு. விஜயராஜே சிந்தியா, காயத்ரி தேவி உள்ளிட்ட அரச வம்சத்தவர்களும் கைது செய்யப்பட்டனர் சுப்ரமணிய சாமியும் ரயில்வே பணியாளர்களை ஒருங்கிணைத்த ஜார்ஜ் பெர்ணாண்டஸும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது.

அதே நள்ளிரவு இரண்டு மணிக்கு ’ஜே.பி கைது’ என்கிற தந்தியை யூ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. உடனடியாக டெல்லியின் அனைத்து செய்தி ஊடக அலுவலகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு நாடாளுமன்ற வளாக காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன்,”விநாச காலே விபரீத புத்தி’ என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்றார்.

ஓர் இரவில் நாடே துவம்சம் அடைந்திருக்க, மறுநாள் காலை 7 மணிக்கு அனைத்திந்திய வானொலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அறிவித்தார் இந்திரா.

இரண்டு நாட்களுக்குப் பின் சரியாக 28 ஜூன் 1975 அன்று டெல்லியின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் உயிர் பெற்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தனது முன்பக்கத்தில்,‘உண்மையின் காதல்மிக்க கணவரும், சுதந்திரத்தின் அன்புமிக்க தந்தையும்,நம்பிக்கை மற்றும் நீதியின் உயிர் தோழமையுமான ஜனநாயகம் 26 ஜூன்1975 அன்று இறந்தது” என்று கூறி தனது எதிர்ப்பு செய்தியை பதிவிட்டிருந்தது.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழோ பத்திரிகையாளர்கள் கைதைக் கண்டித்து தலையங்கப் பகுதியே இல்லாமல் செய்தித்தாளை பிரசூரித்தது.
அவசரநிலையில் நாடு ஒடுங்கிக் கிடந்த அதே சூழலில்தான் சரியாக 1 ஜூலை 1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நாட்டு வளர்ச்சிக்கான 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். வீடுகளற்ற பணியாளர்களுக்கான நிலங்கள்,விவசாய கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் மீதான மறுசீராய்வு,வருமான வரி வரையறைக்கான சம்பளம் ரூ 6000/- லிருந்து ரூ 8000/- உயர்வு உள்ளிட்டவை அதில் அடக்கம். மறுபக்கம் பதவியில் இல்லாத சஞ்சய் காந்தியும், சாதி ஒழிப்பு, கல்வி அறிவு, மரம் நடுதல், குடும்பக் கட்டுப்பாடு,வரதட்சணை ஒழிப்பு உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் ஒடுக்குமுறை ஒருபக்கம் தொடர்ந்தபடி இருந்தது.ஆனந்த் மார்க், ஆர்.எஸ்.எஸ், ஜமாத் இஸ்லாமி ஹிந்த், நக்சலைட் ஆகிய நான்கு அமைப்புகளுக்கும் அது சார்ந்து இயங்கும் 22 கட்சிகளுக்கும் அரசு தடைவிதித்தது.

இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையே செல்லாததாக்கும் விதமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 10 ஆகஸ்ட் 1975 அன்று சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் இந்திய நீதிமன்றங்களுக்கு அப்பாற்ப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.தற்போது நிலவிவரும் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்கான ஆதிப்புள்ளியும் அதன் அரசியலும் அப்போதுதான் தொடங்கியது.

கிஷோர் குமார்

4 மே 1976 அன்று மும்பையில் நடந்த காங்கிரஸ் பேரணியில் பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரைப் பாடச் சொல்லி அழைப்பு விடுத்தார் அமைச்சர் வி.சி சுக்லா. ‘உன்னுடைய 20 அம்சத் திட்டத்தைப் பற்றியெல்லாம் என்னால் பாடமுடியாது’ என்று கிஷோர் மறுக்க அன்று முதல் அவரது பாடல்கள் அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டது. கூடவே மாநிலங்களின் ஆட்சி உரிமைகளை மத்திய அரசு மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டது.அரசியலமைப்புச் சட்டத்தை நீதி அமைப்புகளின் தலையீடு இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு என்கிற திருத்தமும் கொண்டுவரப்பட்டது.

எமர்ஜென்சியின் உச்சகட்டமாக கட்டாய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் 1 செப் 1976ல் அமலுக்கு வந்தது.ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 11 மில்லியன் பேருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.அப்படி குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மறுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளை உடைய தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வங்கிகளில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய்

மார்ச் 1977ல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 21 மார்ச் 1977ல் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது. அதற்கு மறுநாள் வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சியின் பிரதிபலனாக ஒட்டுமொத்தமாகத் தோற்றது. சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி அதுவே. அடுத்த நான்கு நாட்களில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டின் ஐந்தாவது பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

’இந்திரா தான் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது தவறு என்று பின்னாளில் மிகவும் வருந்தினார்’ என்றார் அவரது காரியதரிசிகளில் ஒருவரான ஆர்.கே.தவான். உண்மையில் இந்திராவே எதிர்பார்க்காத அளவிற்கு நிலைமை கைநழுவிச் சென்றதுதான் அதற்குக் காரணம். சுதந்திர இந்தியாவில் நேரு முன்னிறுத்திய சமூக ஜனநாயகக் கட்டமைப்பை அவரது மகள் சமூகமும் இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல் பிரித்ததுதான் 42 ஆண்டுகள் கடந்தும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் நாடு ஏற்ற இறக்கம் பெற்றிருப்பதன் அடிப்படை அதிர்வலை.

No comments:

Post a Comment