Saturday 15 July 2017

தமிழீழத் தனியரசா? உழுத்துப் போன சமஸ்டியா?

2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழர்களுக்குச் சமஸ்டித் தீர்வு கிட்டிவிடும் என்று 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசி, பின்னர் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டித் தீர்வைத் தேடுவதாகக் கதையளந்து ஸ்கொட்லாந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு, இப்பொழுது சமஸ்டி என்ற பெயரைக் கொண்டிருக்காத சமஸ்டித் தீர்வு பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக தமிழர்களுக்கு கிட்டப் போகின்றது என்று புதிய புழுகு மூட்டையை சம்பந்தரின் பட்டத்து இளவரசர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவிழ்த்து விட்டுள்ளார்.

மறுபுறத்தில், பௌத்த பீடாதிபதிகளின் ஒப்புதல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட மாட்டாது என்றும், தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் வழங்கப்பட்டுள்ள மேலாதிக்க உரிமை எந்தச் சந்தர்ப்பத்திலும் மீளப்பெறப்பட மாட்டாது என்றும் மைத்திரிபால சிறீசேன சூளுரைத்துள்ளார்.

இந்த இருவரின் பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகின்றது. தன்னைத் தேர்ந்தெடுத்த சிங்கள மக்களுக்கு விசுவாசமாக மைத்திரியும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திய மக்களுக்கு இரண்டகம் விளைவிப்பவராக சுமந்திரனும் இருக்கின்றார்கள் என்பதுதான் அது.

சரி, இவையெல்லாம் எதிர்பார்த்தவை தான். யதார்த்தம் அப்படியிருக்கும் பொழுது, தமிழரின் தாகம் சமஸ்டித் தாயகம் என்ற பாணியில் எம்மவர்களில் பலர் இப்பொழுதும் உணர்ச்சிவசப்பட்டு நிற்பது வேடிக்கையானது. இவ்விடத்தில் ‘பெடரல் (சமஸ்டி), பெடரல் என்று தந்தை செல்வாவின் காலத்திலிருந்து நாங்கள் இடறல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்று 2005ஆம் ஆண்டு இலண்டன் அலெக்சாண்ட்ரா மாளிகையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உரையாற்றும் பொழுது எதுகை மோனையில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியது தான் நினைவுக்கு வருகின்றது.

கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்தீவைக் கொதிநிலையில் வைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்டி ஆட்சிமுறையை ஒரேயொரு தடவை மட்டும்தான் சிங்கள ஆட்சியாளர்களும், மேற்குலகத் இராசதந்திரிகளும் முன்வைத்திருக்கின்றார்கள். அது நடந்தது 2002ஆம் ஆண்டில். யாழ் குடாநாட்டின் தென்புலம், வன்னிப்பெருநிலம், மூதூர் கிழக்கு, வாகரை, படுவான்கரை ஆகிய மக்கள் செறிந்து வாழும் நிலப்பகுதிகளையும், காட்டுப்புறங்களை அண்டிய இதர பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்து, அங்கு நடைமுறை அரசை நிர்வகித்து வந்த பொழுதுதான் சமஸ்டி பற்றி சிங்களத் தலைவர்களும், மேற்குலக இராசதந்திரிகளும் பேசினார்கள்.

அதற்கு முதல் சமஸ்டி பற்றிச் சிங்களத் தலைவர்களும் சரி, மேற்குலக இராசதந்திரிகளும் சரி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தமிழரசுக் கட்சி என்று தமிழில் பெயர்சூட்டியவாறு, ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்ற பெயரில் இயங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் சமஸ்டிக் கட்சிதான், இலங்கையின் ஆட்சியதிகாரத்தை சிங்களவர்களிடம் ஆங்கிலேயர்கள் கையளித்த பின்னரான காலப்பகுதியில் சமஸ்டி பற்றிக் கதைத்தது. அன்றைய சிங்களத் தலைவர்களும் சரி, இலங்கையின் அரசுத் தலைவர் ஆசனத்தை அலங்கரித்த பிரித்தானிய முடியாட்சி பீடத்தின் பிரதிநிதிகளும் சரி, சமஸ்டி பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. சமஸ்டித் தீர்வுக்கான ஒப்பந்தம் என்று தமிழரசுக் கட்சியால் பரப்புரை செய்யப்பட்டு, இறுதியில் சொலமன் பண்டாரநாயக்காவால் கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம் கூட ஒரு மாவட்ட சபைக்குக் குறைவான அதிகாரங்களைக் கொண்ட கட்டமைப்பிற்கான ஒப்பந்தம்தான். அதில் சமஸ்டி என்று கூறும் அளவிற்கு அதிகாரங்கள் இருந்ததில்லை.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பொழுது கூட சமஸ்டி பற்றி அன்றைய சிங்கள அதிபர் ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனாவும் சரி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சரி மூச்சு விடவில்லை. ஏன், 1989ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட சமஸ்டி பற்றி பேசப்படவில்லை.

1992ஆம் ஆண்டின் இறுதியிலும், 1993ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்திற்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியையும், கிறிஸ்துவ ஆயர்களையும் தூது அனுப்பிய பொழுது மட்டும், ஆயுதங்களைக் கீழே போடுவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் சமஸ்டி பற்றி சிந்திக்கலாம் என்று பிரேமதாசா குசுகுசுத்தார்.

அவ்வளவுதான். ஏன் டிங்கிரி பண்டா விஜேதுங்கவின் அரசாங்கத்திற்கு ஆப்பு வைத்து விட்டு, சமாதானப் புறாவாக 1994ஆம் ஆண்டு ஆவணி மாதம் சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டில் ஏறிய சந்திரிகா அம்மையார் கூட சமஸ்டி பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அன்றைய கள யதார்த்தத்தின் அடிப்படையில், தமிழர் தேசத்தின் தன்னாட்சியுரிமையையும், வடக்குக் கிழக்கு மாநிலங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளும் தீர்வைப் பரிசீலனை செய்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறிய பொழுது கூட, சமஸ்டி பற்றிப் பார்க்கலாம், ஆனால் அதிகாரப் பரவலாக்கம் தான் சிறந்த தீர்வு என்று கூறியவர் சந்திரிகா அம்மையார்.

அதன் பிறகு சமஸ்டி பற்றி எந்தச் சந்தர்ப்பத்தில் அம்மையார் பேசியதில்லை. படைவலுச் சமநிலையின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பொழுது, சமஸ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு தரப்பினருக்கும் அன்றைய அமெரிக்கத் தூதுவர் அஸ்லி வில்ஸ் அவர்களை அறிவுரை கூறினார்.

வோசிங்டனில் இருந்து வரும் அறிவுரையே தெய்வ வாக்கு என்று அன்று பிரதம மந்திரி பதவியில் ஊசலாடிக் கொண்டிருந்த ரணிலும், சமஸ்டி முறையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு இணங்கினார். சமஸ்டிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை முடக்கி விட்டால், ஆயுதப் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை மேடையில் வைத்தே முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அன்று அமெரிக்கா நம்பியது. மறுபுறத்தில் எந்தக் காலத்திலும் சமஸ்டிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சமஸ்டியில் தான் ஆர்வமாக இருப்பது போன்று ரணில் நாடகமாடினார். எது எப்படியோ, இரண்டு தரப்பையும் எப்படியாவது சமஸ்டிக்குள் முடக்கி விட்டால், ஒரு நீண்ட, நெடிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு கண்ட பெருமை தம்மை வந்து சேரும் என்று அன்று நோர்வே ஆணித்தரமாக நம்பியது.
   
இதுவே சமஸ்டி முறைகளை ஆராய்ந்து பார்க்கும் முடிவை ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தள்ளியது. ஒஸ்லோ பேச்சுக்களின் பொழுது சமஸ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரு தரப்பும் இணங்குவதாக அறிவிக்கும் வாசகங்களைக் கொண்ட அறிக்கைக்கான வரைபே முதலில் தேசத்தின் குரல் பாலா அண்ணையிடம் நோர்வே அனுசரணையாளர்களால் கையளிக்கப்பட்டது. எனினும் அவ்வரைபை நிராகரித்த பாலா அண்ணை, சமஸ்டி முறைத் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கு மட்டும் இரு தரப்பும் இணங்குவதாக அறிவிக்கும் வாசங்களை உள்ளடக்கிய திருத்தம் செய்யப்பட்ட வரைபை நோர்வே அனுசரணையாளர்களிடம் கையளித்தார்.

அதன் பின்னர் கொழும்பில் இருந்து வெளிவரும் த சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய பாலா அண்ணை, இனப்பிரச்சினைக்கு எப்படியான சமஸ்டித் தீர்வை எவர் முன்வைத்தாலும், தமிழர்களின் தாயகம், தேசியம், பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில், மத்தியுடன் தொடர்புடைய, அதே நேரத்தில் தனித்துவமான சட்டங்களையும், நீதித்துறையையும், காவல்துறையையும், ஆட்சிக் கட்டமைப்பையும், பாதுகாப்புப் படைக் கட்டமைப்பையும் கொண்ட சமஸ்டித் தீர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என்று கூறினார்.

அப்பொழுது ரணில் எந்தப் பிரதிபலிப்புக்களையும் வெளியிடவில்லை. அஸ்லி வில்ஸ் தொடக்கம் ரிச்சார்ட் ஆமிட்ரேஜ் வரையான அமெரிக்கா இராசதந்திரிகளும் மௌனம் சம்மதம் என்ற கதையாக அமைதி காத்தார்கள். அன்று அவர்களின் குறி எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்திற்கான நிரந்தர முற்றுப்புள்ளியைப் பேச்சுவார்த்தை மேடையில் வைப்பது மட்டும்தான்.

இது பற்றி 16.03.2003 அன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு தேசத்தின் குரல் பாலா அண்ணை குறிப்பிட்டார்:

‘எந்தவொரு சமஸ்டித் தீர்வுக்கும் தொடர்ந்தேட்சியான (வடக்குக் கிழக்கு ஒன்றிணைந்த) தமிழர் தாயக நில அமைப்பு அடிப்படையானது. இதனை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால், சமஸ்டித் தீர்வு ஏற்படாது. அப்படி என்றால் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது. தமது தாயகத்தைத் தாமே ஆளும் அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்குக் கிட்ட வேண்டும், அல்லது பிரிந்து சென்று சுதந்திரத் தமிழ் அரசை அமைப்பதற்கான புறச்சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எனது அவா. எனவே இவ்விடயத்தில் தாம் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை சிங்களவர்களே தீர்மானிக்க வேண்டும். அதேநேரத்தில் நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கின்றோம் என்பதை உலகிற்குக் காண்பிப்பதற்காக அமைதிப் பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்குபற்றுவதில் உறுதியாக உள்ளோம்.’

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை தாங்கிய பாலா அண்ணையிடம் ஒரு தெளிவான புரிதல் இருந்தது. சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கு அன்றைய காலகட்டத்தில் ரணில் இணங்கியிருந்தாலும், இறுதியில் சமஸ்டித் தீர்வுக்கு மட்டுமன்றி எந்த விதமான அரசியல் தீர்வுக்கும் ரணிலும் சரி, ஏனைய சிங்களத் தலைவர்களும் சரி இணங்கப் போவதில்லை என்பதுதான் அது.

அதுவும் கூட தமிழர்களுக்கு அனுகூலமாகவே அமையும் என்பது அவரது பார்வையாக இருந்தது. ஏனென்றால், சமஸ்டித் தீர்வில் ஆர்வமாக இருப்பதாக அக்காலகட்டத்தில் நாடகமாடிக் கொண்டிருந்த ரணில் அரசாங்கத்தின் சுயரூபம் வெளிப்படும் பொழுது, சமஸ்டி என்ற மாயையில் இருந்து உலகம் வெளியில் வருவதோடு, பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என்று நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் என்பதே அவரது கணிப்பாக இருந்தது. ஆனாலும் அப்படியான சூழல் கனியும் பொழுது, அதனை சாத்தியப்படுத்துவதற்கு தமிழர் தரப்பு ஆயுத பலத்துடன் இருக்க வேண்டும் என்பதிலும் பாலா அண்ணை தெளிவாக இருந்தார். அதன் காரணமாகவே ஆயுதக் களைவு பற்றிப் பேச்சு எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவற்றை பாலா அண்ணை அடியோடு நிராகரித்தார். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அடித்துக் கூறினார்: அப்படியான நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், அவ் அரசியல் தீர்வு நிலைத்து நிற்பதற்குத் தமிழர்களுக்குத் தனியான பாதுகாப்புப் படைக் கட்டமைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.

அன்று சமஸ்டி நாடகமாடிய ரணிலின் சுயரூபம் இன்று வெளிப்பட்டு விட்டது. ரணில் மட்டுமன்றி, ரணிலுக்குப் பின்னரான எந்தச் சிங்களத் தலைவர்களும் இப்பொழுது சமஸ்டி பற்றிப் பேசுவதில்லை. இன்னொரு விதத்தில் கூறுவதானால், பிரிவினையைக் கோரும் தெரிவை மட்டுமே இப்பொழுது தமிழர்களுக்கு சிங்கள தேசம் விட்டு வைத்துள்ளது. அதாவது சமஸ்டியை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்கான புறச்சூழல் தோன்றும் என்று அன்று பாலா அண்ணை கூறியது நிதர்சனமாகி விட்டது. அதாவது சமஸ்டி பற்றி நாம் பேசிய காலம் கடந்து விட்டது. அதுவும் முள்ளிவாய்க்காவில் ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை சிங்களம் காவு கொண்ட பொழுதே சமஸ்டிக்கான சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்;’ என்று போராடிய நாம், இன்று ‘தமிழரின் தாகம் சமஸ்டித் தாயகம்’ என்று பேசுவது, மடிந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் புரியும் மிகப் பெரும் துரோகமாகும்.

இப்பொழுது இருப்பது ஒரேயொரு குறைதான். கடந்த எட்டு ஆண்டுகளாகக் கனிந்திருக்கும் பிரிவினைக்கான புறச்சூழலைப் பயன்படுத்திப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஆயுதப் பலம் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் அந்தக் குறை. அதற்காகப் பிரிவினைக்கான புறச்சூழலை உதாசீனம் செய்து விட்டு, சமஸ்டிக் கனவில் நாம் மூழ்கியிருக்க முடியாது.

பிரிந்து சென்று தனியரசு அமைப்பது ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை. அதனை மறுதலித்துக் குற்றச்செயலாக்கும் ஒரு அரசு சனநாயக அரசாகக் கருதப்பட முடியாதது. அந்த வகையில் ஆறாம் திருத்தச் சட்டம் என்ற இரும்புக் கரம் கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை மறுதலித்து, அதனைக் குற்றச்செயலாக்கும் சிங்கள அரசு, உலகின் ஏனைய சனநாயக அரசுகளுடன் சரியாசனம் அமர்வதற்குத் தகுதியற்றது.

எனவே, உழுத்துப் போன சமஸ்டியைக் கிடப்பில் போட்டு விட்டு, தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதே இன்று நாம் செய்யக்கூடிய அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான செயற்பாடாகும்.


நன்றி
ஈழமுரசு

No comments:

Post a Comment