Tuesday 15 August 2017

70 ஆண்டுகளில் இந்திய சமூகம்! வளர்ந்ததும்... இழந்ததும்..!

’70 வயது சுதந்திர இந்தியாவும் அதன் சமூகமும்'...என்றவுடன் ஒரு இந்தியச் சாமானியனுக்கு எழும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? என்பதுதான். 
ஒரு பக்கம் மொபைல் போனை ஆராய்ந்து கொண்டும், அதே மொபைலில் உத்தரப்பிரதேசத்தில் இறந்த 63 குழந்தைகளுக்கு நொடிப்பொழுதில் முகநூலில் அஞ்சலி செய்துவிட்டும் கடக்கும் அவசர சமூகத்துக்கு இது போன்ற கேள்விகளும் விளக்கங்களும் உண்மையிலேயே தேவைப்படுமா?. . கார்ப்பரேட் என்னும் தனி உலகத்திற்கு இது தேவையற்ற ஒன்றுதான்.  ஆனால் 70 ஆண்டுகள் கடந்தும் முழுவதும் கட்டமைக்கப்படாத அதே சமயம் ஏதோ ஒன்றுக்காக இன்னும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கும் காஷ்மீர் முதல் கதிராமங்கலம் வரை  நாட்டில் விரவிக்கிடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் அனைத்து உயிர்களுக்கும் இது முக்கியத் தேவையாக இருக்கிறது.

சமூகம் என்னும் கட்டமைப்பு ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலினமும் ஒரு சேரக் கட்டமைக்கப்படுவது. இந்த கட்டமைப்பில் ஒன்றன் இயங்குதலும் சார்ந்திருத்தலும் மற்றொன்றை பாதிக்காத வகையில் அமையும் சுய வளர்ச்சி நிலைதான் சுதந்திரம் என்பது. ’சிஸ்டம்’ சரி இல்லை என்று ரஜினி தொடங்கி சாமானியன் வரை புலம்புவதன் அடிப்படை இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள விரிசல்தான். 

 பெண்களுக்கான பெருவெளி

“பாரத் மாதா கீ ஜே!” என மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரிக்கச் சொல்லும் நாட்டில் பெண்களுக்கு இந்த சமூகம் கடந்த காலங்களில் எப்படியாக இருந்துள்ளது?.. கல்வி, வேலைவாய்ப்பு என்று ஒருபக்கம் பெண்களின் வளர்ச்சி நிலை மெச்சப்பட்டாலும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்கொடுமை ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.  டெக்னாலஜி யுகத்திலும் 'சைபர் புல்லிங்' ரூபத்தில் வந்து சேருகிறது. அரசியலில் இருக்கும் தனிநபராக இருந்தாலும் சரி, நிறுவனப் பெரும்புள்ளியாக இருந்தாலும். 

களப்போராளியாக இருந்தாலும் ‘பெண்’ பாலியல் அடையாளமாகவே பார்க்கப்படுவதும் அதையே அவர்களது பலவீனமான பிம்பமாக்கி ஒடுக்குவதும் சாபம்தான். பெண்களைப் பொறுத்தவரை இந்த பாலியல் சார்ந்த அடையாளப்படுத்துதல்தான் விரிசலுக்கான அடிப்படைக் காரணமே. பாலியல் அடையாளம் கடந்த சுதந்திரம் நிச்சயம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அம்பேத்கர் சொன்னது போல  முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது அதன் பெண்களின் வளர்ச்சிநிலை பொருத்துதான் இருக்கிறது.    

ஆண்களின் தேவையும்...செய்ய வேண்டியதும்...

குடும்பமா...வீட்டின் தலைவர்! நிறுவனமா..அதன் தலைவர்! கட்சியா.. அந்தக் கட்சியின் தலைவர்  என சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி பெரும்பாலும் தலைமை பொறுப்புகளுக்கு ஆண்களே முன்னிறுத்தப்பட்ட சூழலில் தற்போது சமூகத்தின் விரிசல்களை ஒட்டவைப்பதன் பெரும்பங்கு அவர்களுடையதாகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு குடும்ப நண்பர் வங்கி ஊழியராக பணியாற்றிவந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் ஆனதும் மற்ற எல்லாப் பெண்களையும் போல அந்தப் பெண்ணும் வேலையை விட வேண்டிய சூழல். ஹோம் மேக்கராக வலம் வந்தவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். குழந்தைகள் வளர்ந்து சற்று பெரியபிள்ளைகளாகிவிட்ட சூழலில் தற்போது அந்தப் பெண் வேலைக்குச் செல்ல விருப்பப்படுகிறார், ஆனால் அந்த நண்பரோ, ‘மனைவியை வேலைக்கு அனுப்ப விருப்பம்தான் ஆனால் குழந்தைகளை வேறு ஒருவரிடம் விட்டு வளர்க்க வேண்டுமே அதற்கு மனது ஒப்பவில்லை’ என்கிறார். 

குடும்பத்தின் தலைவர் அங்கே நண்பர்தான் என்கிற அடிப்படையில் இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டியது அவரது கடமையாகிறது. ஒன்று தன் மனைவி வேலைக்குச் செல்கிறாரோ இல்லையோ ஆனால் சுதந்திர வெளியை உறுதி செய்வது. மற்றொன்று, பொருளாதாரம் சார்ந்து இயங்கும் இந்தியக் குடும்பக் கட்டமைப்புகளில் ஒருவருடைய வருமானம் என்பது பற்றாக்குறை வாழ்க்கை என்பதை உணர்வது.

பொதுத் துறையில் தனியாரிலும் எண்ணிக்கை அடிப்படையில் ஊழியர்களில் ஆண்களே அதிகம். வேலைவாய்ப்பு கேட்டு காத்திருப்பவர்கள் எண்ணிக்கையிலும் அதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி 2017ன் இறுதியில் மட்டும் 17.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்று இருப்பார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இவர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஆண்கள். வேலைவாய்ப்பற்ற சூழல்தான் இங்கே பெரும்பாலான குற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. இதற்கு ஒருபுறம் அதே ‘சிஸ்டம்’ காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் 1200க்கு 800க்கு மேல் மார்க் வாங்கிவிட்டாலே அந்த நபர் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதும் காரணமாகிறது. இங்கேதான் கல்விச் சுதந்திரமும் அதன் வழி தனிநபர் வேலைவாய்ப்பை உறுதி செய்வதும் அவசியமாகிறது. சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு பொருளாதாரச் சிக்கல் தீர்ந்தாலே பாதிச் சிக்கல் தீர்ந்தது என்பதே நிதர்சனம்.  


எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம்?

உத்தரப்பிரதேசத்தில் 63 குழந்தைகளின் பரிதாப இறப்புடன்தான் 70 ம் ஆண்டு சுதந்திரத்தை, சமூகச் சூழலை நாடு கடந்திருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு இங்கே அந்த நிலையில்தான் இருக்கிறது. மற்றொரு பக்கம் பாலியல் அடையாளங்கள் சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பரிதாபமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.தேசிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014ல் மட்டும் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இங்கே  6816 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உண்மையில் இந்தியாவின் எதிர்காலங்களின் கழுத்தை நெறிக்கின்றோமா நாம்?. .  பாடத்திட்ட குளறுபடிகளாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் கல்வி உரிமையும் குழந்தைகளுக்கு சரியாகச் சென்று சேர்வதில்லை. இதனால் இந்த சமூகக் கட்டமைப்பின் எதிர்கால முன்னேற்றம் என்பதும் ஒருவகையில் கேள்விக் குறியாகின்றது. கல்விச் சுதந்திரத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கான ’இரும்புச் சங்கிலி’ கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான அதே சமயம் பாதுகாப்புத் தன்மையுடைய ஒரு வளர்ப்புச் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. 

377ம் சட்டமே சுதந்திரத்தைப் பறிப்பதும்.. 

ஆண், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து விவாதிக்கும் அதே சமயம் இங்கே மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்தும் பேசவேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, இயற்கைக்கு எதிராக நிகழும்  எந்த வித உடல்சார்ந்த இணக்கமும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்று விவரிக்கிறது. அரசாங்கமே தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதுதான் சுதந்திரம் உண்மையிலேயே கிடைத்துவிட்டதா என்பதை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது.  பாலினங்களின் உரிமைகள் மற்றும் உடைமைகள் மீதான திணிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், தன்னுடைய  பாலினத்தையே தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இந்த தண்டனைச் சட்டத்தால் பாதிப்படைகிறது. 

அண்மையில் சென்னை மின்சார ரயிலில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவம். திருநங்கை கௌதமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். முதல் வகுப்பு கம்பார்ட்மென்டில் இருந்து இதைப் பார்த்த ஒரு போலீஸ்காரர், பிச்சை எடுக்கக் கூடாது என்று அவரைக் கூப்பிட்டு கண்டித்தார். அதற்கு அந்த திருநங்கை,“நாட்டுல கொலை, கொள்ளை கற்பழிப்புன்னு குத்தம் செய்யறவங்களை எல்லாம் விட்டுறுங்க. எங்க பொழப்பு இந்த பிச்சை எடுக்கறதுதான்னு எழுதி வைச்சிருக்கு. எங்கள போய் மிரட்டுறீங்க” என்று புலம்பியபடியே கண்ணீர் சிந்தினார். ரயிலில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம் என்றாலும் அவர் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு சமூகக் கட்டமைப்பும் ஒரு வகையில் காரணம்தான். அவரின் அந்த நொடி நிமிடப் பேச்சு யோசிக்கச் செய்வதாய் இருந்தது. தன் பாலின அடையாளத்தால் பாதிப்படையாமல் இந்த சமூகத்தில் ஒரு பாதுகாப்பான சூழலில் அவர்கள் வாழ்ந்து வளர்ச்சியடைய என்று உறுதியேற்கப் போகிறது இந்த நாடு? 

ஆக, இங்கே முதலில் மதிக்கப்பட வேண்டியதும் உணரப்பட வேண்டியதும் தனிமனிதச் சுதந்திரம்தான். அதன் மீதான  தடைகளைக் கடந்துதான் ஆண்- பெண் - திருநங்கைகள் உள்ளடக்கிய பாலின சமத்துவம் பேசப்பட வேண்டும். அந்த சமத்துவத்திற்கு மேலும் இடையூறாக இருக்கும்  சாதிய அடையாளங்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும். அதன் பிறகு கொண்டாடப்படும் சுதந்திர தினமே நாட்டின் முதல் சுதந்திர தினமாகவும் இருக்க முடியும்

No comments:

Post a Comment