Thursday 7 September 2017

தமிழர்களுக்கு சலித்துப்போன இந்தியாவின் உறுதிமொழிகள்!

இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லை என்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது.






இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பாக இந்தியா இவ்வாறு தான் கூறிக்கொண்டிருக்கின்றது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அதிகாரத்திலிருந்த காலப் பகுதியிலிருந்தே இலங்கை மீதான இந்திய கரிசனையும் தலையீடுகளும் தொடங்கி விட்டன. அதன் பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் மாறிமாறிக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரமடைந்த 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இன்று வரையான கடந்த 34 வருட காலப் பகுதியில் இந்தியாவில் பல்வேறு ஆளும் கட்சிகளையும், பிரதமர்களையும் பார்த்தாகி விட்டது.

இலங்கையில் உள்நாட்டு இன நெருக்கடியும், போரும், தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும் 1983ற்குப் பின்னர் தீவிரமடைந்து சென்று கொண்டிருந்ததே தவிர அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகள் இன்னுமே எட்டப்படவில்லை.

மதிப்பிடமுடியாத உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் ஏற்பட்டு தமிழினம் நிர்க்கதியாகி நிற்கின்ற இன்றைய வேளையிலும் கூட இலங்கைத் தமிழர்களைக் கைவிடப் போவதில்லையென்று இந்தியா கூறிக்கொண்டே இருக்கின்றது.

இந்திரா காந்தியில் ஆரம்பமாகி கடந்த 34 வருட காலத்தில் பதவியிலிருந்த அத்தனை பிரதமர்களும் இதனையே கூறினார்கள்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பின்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களில் கூடுதல் அறுதிப் பெரும்பான்மைப் பலமுள்ள அரசாக விளங்குகின்ற இன்றைய அரசாங்கத்தின் ஆளுமை மிகுந்த பிரதமரான நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாக இவ்வாறான கருத்தையே அவ்வப்போது கூறி வருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த வேளையில், இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடப் போவதில்லையெனவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா பாடுபடுமென்றும் கூறியிருக்கின்றார்.

சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்த கூற்று அவரது தனிப்பட்ட கருத்தென்று கொள்ள முடியாது. இந்திய அரசின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்திருந்த அவர் தெரிவித்த கருத்தானது மத்திய அரசின் இன்றைய செய்தியாகும்.

அக்கூற்றை பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியாகவும் கொள்ள முடியும்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்து தொடர்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து இன்னுமே அசட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழர் அரசியலில் ஊறித் திளைத்த மூத்த அரசியல்வாதியுமான வீ. ஆனந்தசங்கரியோ ஒருவேளை நம்பிக்கையும் புளகாங்கிதமும் அடையக் கூடும்.

ஏனெனில் தமிழர்களின் அரசியலானது கடந்த சுமார் அரை நூற்றாண்டுகளாக இவ்வாறு தான் கனவுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வீணான கற்பனாவாதங்களும் போலியான நம்பிக்கைகளும் கொண்ட பாதையிலேதான் தமிழர்களின் பிரதிநிதிகள் தங்களது அரசியலை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஊடாக இந்தியா இப்போது இறுதியாக வழங்கியிருக்கும் உறுதிமொழி வார்த்தையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது பிரசாரத்துக்காக வடக்கு, கிழக்கு தமிழர் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடும்.

ஆனாலும் அரசியல்வாதிகளைப் பார்க்கிலும் தமிழ் மக்கள் இப்போதெல்லாம் மிகவும் அறிவுக்கூர்மை அடைந்திருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்குத் தமிழ் இனம் தனது ஏகோபித்த ஒற்றுமையை உலகுக்குக் காண்பிக்க வேண்டுமெனவும், அதன் வாயிலாக இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வொன்றுக்கு அடித்தளமிட முடியுமெனவுமே கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்தார்களே தவிர, இந்தியா தமக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையினால் அல்ல!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டுமென்ற தேவையெல்லாம் இந்தியாவுக்குக் கிடையாதென்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் புரிந்து கொண்டதைப் போன்று தமிழ் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்வது முதலில் அவசியம்.

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறு இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவதற்காக தமிழர் விவகாரம் இந்தியாவுக்குத் தேவையாகவுள்ளது.

இல்லையேல், தமிழக அரசியலில் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொள்ள வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உண்டு. 

ஆனால் பலமுள்ளதாக விளங்குகின்ற நரேந்திர மோடியின் அரசு தமிழகத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியத்தில் இன்றில்லை.
எனவே இலங்கைத் தமிழர் மீதான அக்கறை என்பதெல்லாம் இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களாகும்.

இவ்வாறிருக்கையில், இந்தியா இப்போதும் கூறுகின்ற உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன வார்த்தைகள்!

No comments:

Post a Comment