Friday 3 November 2017

புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக்கொடுத்தவர்கள் புலிகள் அழிந்ததும் மாறிவிட்டார்கள்

எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள அரசியல் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார்கள்.
வெள்ளையர்கள் செல்லும் வரையில் நல்லவர்கள் போல் நடித்து அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்தவுடன் சிங்கள மக்கட் தலைவர்கள் தமது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
சோல்பெரி பிரபு சுதந்திரம் அளித்து பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் டீ.ர்.பார்மர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு சமஷ்டி அரசையே தந்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்.
எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராவுக்குமான அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே.
உதாரணத்திற்கு வட கிழக்கில் தமிழ் மொழி காலாதி காலமாகப் பேசப்பட்டு வந்த போதும் 1956ஆம் ஆண்டில் 'தனிச் சிங்கள' சட்டமானது வடக்கையும் கிழக்கையும் மற்றைய ஏழு மாகாணங்களுடன் இணைத்து முழு நாட்டுக்கும் ஒரே மொழி என்று சட்டம் இயற்றியது.
தமிழ் மக்கட் தலைவர்கள் இதனை எதிர்க்கப் போக அவர்களுடன் உடன்பாடுகள் செய்து வட கிழக்கில் உள்ளவர்கள் பெறவேண்டிய உரித்துக்களைக் கையளிப்பதாகக் கூறிவிட்டு உடன்படிக்கைகளைச் செல்லாக் காசாக்கினர்.
இன்று இந்த நாட்டில் நிலவும் ஒரேயொரு பிரச்சனை பெரும்பான்மையினர் தாம் ஏதோ வழியில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை மற்றைய இனங்களுடன், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருவதே.
எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளின் சிங்களத் தலைவர்களும் கட்சி பேதமின்றி சிங்களப் பெரும்பான்மையினர் பெற்றுக் கொண்ட அதிகாரம் வேறெவருடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டே உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள் புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறிவிட்டார்கள்.
எனவே ராஜபக்ஸ புதிதாக எதையும் கூற வரவில்லை. பிரச்சனைகள் வரும் போது அதிகாரப் பகிர்வுகள் பற்றிப் பேசும் சிங்கள அரசியல் தலைவர்கள் பிரச்சனைகள் ஓரளவு தணிந்ததும் பழைய நிலைக்கே சென்று விடுகின்றார்கள்.
அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அதிகாரப் பகிர்வு பற்றி ராஜபக்ஸ கூறிவருகின்றார். அதாவது அவர் குறிப்பிடுவது ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வே.
கிட்டத்தட்ட 13வது திருத்தச்சட்டத்தை ஒட்டிய மீளாய்வு செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வையே அவர் எதிர்க்கின்றார். இவர்தான் போர் முடிந்ததும் 13+ என்று கூறியிருந்தார்.
இப்பொழுது அதிகாரப்பகிர்வு வேண்டாம் என்கின்றார். இந்தியாவில் சென்று இலங்கையில் பௌத்தம் முதலிடம் பெறாவிட்டால் பௌத்தம் அழிந்துவிடும் என்ற விதத்தில் பேசியுள்ளார். அவர் கூறுவது பௌத்தம் பற்றியல்ல. சிங்கள ஆதிக்கம் பற்றியே என்பதை நாம் உணர வேண்டும்.
இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிங்களவரே. ஆகவே பௌத்தத்திற்கு முதலிடம் கோருபவர்கள் சிங்களவருக்கே முதலிடம் கோருகின்றார்கள். அதாவது பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்பதே எதிர்பார்ப்பு.
இந்து, கிறிஸ்தவத் தமிழரும், முஸ்லிம்களும் எக்காலத்திலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்கக்கூடாது. ஏற்றால் நாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆகி விடுவோம். பெரும்பான்மையினர் அரசாளும் போது பெரும்பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்குப் பங்கம் வரும் என்பதற்காக அல்ல. மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.
நானும் ராஜபக்ஸ செப்புவதையே கூறுவேன். அதாவது ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று அவரோடு சேர்ந்து கூறி விட்டு அதே மூச்சில் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு அவசியம் என்பேன்.
ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க உதவாது. மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும்.
சுய கௌரவத்துடன் வாழத்துடிக்கும் எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தின் ஆதிக்கக் கெடுபிடிகளுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதி தெரிவிக்க மாட்டார்கள். ஒரே விதமான மக்கட் கூட்டங்கள் இடையேதான் ஜனநாயகம் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றது.
பல்லின, பல்மத, பன் மொழி மக்களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யாவரதும் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஊன்றியாராய்ந்து அவற்றிற்கான ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பெற்றுத்தர பெரும்பான்மையினப் பெருங்கட்சிகள் என்றென்றும் பின்னின்றே வந்துள்ளன.
ஓரளவு ஏற்புடையதான ஒரு தீர்வை சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த போது அதன் வரைவை ஐ.தே.கட்சியினர் நாடாளுமன்றத்தில் எரித்துப் போட்டனர்.
இனி அவ்வாறான ஒரு தீர்வைக் கொண்டுவரமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அப்போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து அவர்கள் அந்தத் தீர்வுத் திட்டத்தை 2000ம் ஆண்டு முன்வைத்தார்கள்.
இனி முற்றுமுழுதான சிங்கள ஆதிக்கத்தின் கீழ் ஒரு சில சலுகைகளை ஒற்றையாட்சியின் கீழ் தருவது போலத்தான் தீர்வு வரைவுகள் இருப்பன. ஆகவே தான் நான் கூறுகின்றேன் ராஜபக்ஸமார் தமது அரசியலுக்கும் இன ரீதியான சிந்தனைக்கும் ஏற்பவே இவ்வாறு கூறுகின்றார்கள்.
அடுத்த தேர்தலின் வெற்றியே அவர்களின் ஒரேயொரு குறிக்கோள். அவர் அவ்வாறு கூறுகின்றார் என்று அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் அடிபட்டுப் பேச்சுப்பட்டு இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினை நல்குவதால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.
சிங்கள அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் எம்மை விட்டு நீங்க வேண்டுமானால், எம்மிடம் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பான்மையினத் தலைவர்கள் எதை எதையோ கூறி ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட அதிகாரங்கள் மீண்டும் எம்முடன் பகிரப்பட வேண்டுமானால், அதற்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாகும்.
அவ்வாறான தீர்வு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே கிடைக்கும். ராஜபக்ஸ போன்றவர்கள் வெறும் அரசியல் வாதிகள். அவர்களுக்கு அடுத்த தேர்தலே முக்கியம். நாட்டின் ஐக்கியமும் நல்லிணக்கமும் வருங்காலச் சுபீட்சமும் ஒரு பொருட்டல்ல.
தற்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமது குற்றமுள்ள நெஞ்சை ஆசுவாசப்படுத்த தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து முன்மொழிவுகளை முன்வைக்கக் கூடும்.
அவர்கள் தருவதானது அவர்களால் தருவதாக அமையட்டும். எம்மைப் பொறுத்த வரையில் இந் நாட்டின் இனப் பிரச்சனை நிரந்தரமாகத் தீர வேண்டுமானால் 1949ம் ஆண்டிலிருந்து எமது அரசியல்த் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு ஓரளவாவது நன்மை பயப்பதாய் அமையும்.” என முதலமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment