Sunday 19 November 2017

ரஸ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். 




அவற்றுள் வரலாற்றில் தடம் பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட 'சோசலிசப் புரட்சி' விளங்குகிறது.  ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது ரஸ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி, 'போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்டபுரட்சிதான் 'சோசலிசப் புரட்சி' என அழைக்கப் படுகிறது.

          ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். 


ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சி பற்றி ஆராய்வதே இக் கைநூலின் பிரதான நோக்கமாகும்.

            இப்புரட்சியானது ரஷ்யாவில் பொருளாதாரம், சமூகம், தொழில் முறைகள் போன்ற துறைகள் உயர்ந்தோங்குவதற்கு உறுதுணையாக அமைந்தது. அத்துடன் ஜனநாயகம், முதலாளித்துவம் போன்ற கோட்பாடுகளிற்கு எதிராக சோசலிசம், சமவுடைமைப் பொருளாதாரம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்ட புதிய சிந்தனை மரபுகள் ரஷ்யாவில் தோற்றம் பெற்று ரஷ்யா வல்லரசாக உருவெடுக்க பலமான அத்திவாரமிட்டுக் கொடுத்தது.  சோசலிசப் புரட்சிதான் என்பதை எவரும் மறுத்து விட முடியாது.  சோசலிசப் புரட்சி ரஷ்யாவில் ஏற்படுவதற்கு மூல காரணமாக விளங்கியவர் 'நவயுக ரஷ்யாவின் தந்தை' என்று சிறப்பிக்கப் படுகின்ற லெனின் என்பவராகும்.
            
           சோசலிசப் புரட்சி பற்றி நாம் ஆராய்கின்ற போது புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட விளைவுகள் போன்ற கட்டமைப்புக்களுடாக நோக்குவதனுடாக புரட்சியின் சிறப்பம்சங்களைப் பற்றி தெளிந்து கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.

சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள்.


             முதலில் ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்கள் பற்றி ஆராய்வோம். சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது ரஷ்ய மக்களிடையே காணப்பட்ட உணவுப் பற்றாக்குறை எனலாம். உணவு வாங்குவதற்காக மக்கள் ரொட்டிக்கடைகளின் முன்பாக நீண்ட வரிசையில் கால் கடுக்கக் காத்துக் கிடந்தனர். அப்படியும் பலருக்கு ரொட்டி கிடக்கவில்லை. இவ்வாறு மக்கள் வரிசையாகக் காத்துக் கிடந்தமை தொழில் நிறுத்தங்களுக்கும், குழப்பங்களுக்கும் மூலகாரணமாக அமைந்தது. இவ்வாறு சாதாரண குடிகளிடத்து மட்டுமின்றி இராணுவத்தினருக்கும் போதிய உணவோ, ஊதியமோ வழங்கப்படவில்லை. இதனால் இராணுவத்தினர் அரசின் மீது கொண்டிருந்த அபிமானம் வலுவிழந்து போயிற்று.

              1917ஆம் ஆண்டு, மார்ச் 08ஆம் திகதி சார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராகவும், தமது உணவுப் பஞ்சத்தை நீக்குமாறும் கோரிக்கைகளை விடுத்து 'பெற்ரோக்கிராட்' என்ற இடத்தில் நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார்கள். 'எங்களுக்கு உணவு கொடு' 'உழப்புக்கேற்ற ஊதியம் கொடு' என்று கோசங்களை எழுப்பிக் கொண்டு பெண்கள் ஊர்வலம் சென்றார்கள். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டார்கள். அவர்கள் 'போர் ஒழிக' 'தனியாட்சி ஒழிக' என்ற பெரும் கூக்குரல்களுடன் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள். அதனால் தொழிற்சாலைகளில் வேலை நடைபெறவில்லை. எங்கும் குழப்பம், அமைதியற்ற சூழ்நிலை என்பன ஊடுருவிக் கொண்டன. மூன்றாவது நாள் இந்தத் திடீர்க் கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி பரட்சி ஏற்படுவதற்கான அத்திவாரத்தை இட்டுக் கொடுத்தது. நசுக்கப்பட்ட ஏழை மக்கள் முன்வந்து வெளிப்படையாகத் தமது உரிமைகளை கேட்பதற்குரிய சூழ்நிலையினை இவ் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியது.
          


ஆர்ப்பாட்டக் காரர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தினரையும், காவல்துறையினரையும் ஏவிவிட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவத்தினர் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கலவரத்தை அடக்க காவல் துறையினர் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதனால் ஆவேசம் கொண்ட பொதுமக்கள் காவல் துறயினரை கற்களாலும், தடிகளாலும் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன. இவ்வாறு ரஷ்யாவில் சாதாரண தொழிலாளர்களால் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது சோசலிசப் புரட்சியாக விசுவரூபம் எடுத்தது.

             சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது பிரபுக்களினதும். மதகுருமார்களினதும் ஆடம்பர வாழ்க்கை எனலாம். ஆன்மிக நெறியினைப் பின்பற்ற வேண்டிய மதகுருமார்களும், பிரபுக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழத்தலைப்பட்டனர். 'பிறப்பு' அடிப்படையில் அவர்கள் சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து வந்தனர். இவர்களின் சுகபோக வாழ்க்கைச் செலவுகளுக்கு வரியாக விவசாயிகள் நிதி செலுத்த வேண்டியிருந்தது. காரணங்கள் எவையுமின்றி தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை வரியாகச் செலுத்துவது குறித்து விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பாரிய கருத்து முரண்பாடுகள் தோன்றின.

              தொழிலாளர்;கள் வாழ்ந்த ஓரளவு அமைதியான வாழ்க்கை கூட விவசாயிகளுக்குக் கிடக்கவில்லை. ரஷ்யாவில் காணப்பட்ட அதிகமான நிலப்பகுதிகள் திருச்சபைக்குச் சொந்தமாகக் காணப்பட்டன. அதனால் அதிருப்தியடைந்த தொழிலாழர்களும், விவசாயிகளும் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினார்கள். இச் செயற்பாடானது புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.

             நிலமானிய முறையில் சாதாரண குடியினர் அடிமைகளாக நடத்தப்பட்டமை சோசலிசப் புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் வாழ்ந்த 45 கோடி மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்த மக்களுக்கு இடம்பெயரும் உரிமை கூட இருக்கவில்லை. பிரான்சியப் புரட்சிக்கு முன்னர் எவ்வாறு அந்த நாட்டின் விவசாயிகளும், தொழிலாளர்களும் கொடிய துன்பங்களை அனுபவித்தனரோ அதனைவிட கொடுமைகளையும், துன்பங்களையும் தொழிலாழர்கள் அனுபவித்தனர். இந்தத் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு தொழிலாளர்கள் தக்கதருணம் பார்த்துக் காத்திருந்தனர். இதனால் லெனின் தலைமையில் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டமை புரட்சி ஏற்பட மூல காரணமாக அமைந்தது.
          
          சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் எனலாம். 1914 தொடக்கம் 1918 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட முதலாம் உலகமகாயுத்தத்தில் ரஷ்யா பிரதான இடத்தினை வகித்தது. இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய நாடுகளை விட ரஷ்யாவிற்கே அதிகளவிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈட்டிகளினாலும், இயந்திரத் துப்பாக்கிகளினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், காயமுற்றும் இருந்தனர். விசவாயுக்களின் பாவனையால் அதிக எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தின் போது ரஷ்யா ஆயிரக்கணக்கான உயிர்களையும், அளவிட முடியாத  சொத்துக்களையும் இழக்க நேரிட்டது.


           மேற்கத்திய நாடுகள் படை உபகரணங்களில் ரஷ்யாவிற்கு இருந்த குறைபாடுகளை சீர்படுத்த உதவிய போதிலும், பிரதான வீதிகளைப் புனரமைக்க முற்படவில்லை. இக்குறைபாட்டினால் போர்க்களத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் படைவீரர்கள், மற்றும் போர்த் தளபாடங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்லமுடியாமற் போனது. ஆள்பலத்திலும், இயற்கை வளத்திலும் ரஷ்யா எதிரி நாட்டைவிட சிறந்து விளங்கிய போதிலும் பொருளாதாரத்தில் ரஷ்யா பெற்றிருந்த பின்னடைவு காரணமாக உலகமகாயுத்தத்தில் பாரிய இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் தாழ்ந்த மட்டத்தை அடைந்தது.


         இவ்வாறு பொருளாதாரப் பின்னடைவினால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்காலத்தில் புரட்சியினை முன்னெடுத்தார்கள். காரணம் எதுவுமின்றி ரஷ்யா முதலாம் உலகமகாயுத்தத்தில் ஈடுபட்டு தோல்வியையும், அவமானத்தையும் அடையாளமாகப் பெற்றுக் கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லெனின் பாட்டாளி வர்க்கத்தினரின் துணையுடன் சார்மன்னரை வெற்றிகொண்டார்.


         இவ்வாறு முதலாம் உலகமகாயுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட  இழப்புக்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகள் சோசலிசப்புரட்சி ஏற்பட மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.

         ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது காணிப்பிரச்சனை எனலாம். கி.பி 18ஆம் நூற்றாண்டில் நிலக்கிழார்கள் தங்களுடைய படை சம்பந்தமான கடமைகளில் இருந்து விடுதலை பெற்றபோது நிலத்தை உழுது வந்த உழவர்களும் நிலவுடைமையாளர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாகக் கூறினார்கள். அதனால் நிலவுடைமையாளர்கள் விவசாயிகள் மீது வரிப்பளுவைச் சுமத்தினார்கள். இச்செயற்பாடு இவ் இரு குழுவினருக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்தது. அதனால் விவசாயிகள் நிலவுடைமையாளர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

         குடியானவர்களிடம் முன்னர் இருந்ததை விட குறைந்தளவு நிலமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமது அவல நிலைக்கு தமக்கு வழங்கப்பட்ட சிறியளவான விளைநிலங்களே காரணம் என குடியானவர்கள் கருத்து வெளியிட்டனர். சிறிய நிலங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த முறையில் பயிர்களை மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெறக் கூடிய மூலதனமும், தொழில்நுட்ப அறிவும் அக் குடியானவர்களிடம் காணப்படவில்லை.

        இவ்வாறு முழுமையாக இருந்த விளைநிலங்கள் துண்டாடப்பட்டதன் காரணத்தாலும், அனைத்துச் சொத்துக்களும் சம்பந்தப்பட்ட பிரதிநதிகளுக்கே உரிமையுடையவை எனக் கூறப்பட்டதாலும் குடியானவர்களின் தனிப்பட்ட முயற்சி கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் அவர்கள் தங்களுடைய அவல நிலைக்கு குறைந்தளவு நிலம் வழங்கப் பட்டிருந்தமையே அடிப்படைக் காரணம் என்று கருதியதுடன், அவர்கள் தங்களுக்குப் போதுமான நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் சோசலிசப்புரட்சி ஏற்படுவதற்கான காரணங்களாக அமைந்தன.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது ரஷ்யாவில் நிலவிய பொருளாதார வீழ்ச்சி எனலாம். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் விரக்தி, மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ரஷ்யாவில் சிறிதளவேனும் செல்வாக்குச் செலுத்தியிருக்கவில்லை. பின்னடைவான தொழில் முறைகளே ரஷ்யாவில் காணப்பட்டன. பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. நவீனத்துவமான முறையில் பொருளாதாரத்தை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் ரஷ்யாவில் இருக்கவில்லை. இதற்கு மாறாக ஆட்சியிலிருந்த ஜார் மன்னர்கள் வருமானம் எதுவுமின்றி செலவு செய்தனர். என்று கூறினாலும் வியப்பிற்குரியதல்ல. அவர்கள் நீண்ட யுத்தங்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தனர். வருமானத்தை ஈட்டக் கூடிய மாற்றங்கள் பற்றி சற்றேனும் ஜார் மன்னர்கள் சிந்திக்கவில்லை. இத்தகைய செயற்பாடுகளால் ரஷ்யாவில் பொருளாதாரம் சிதறடிக்கப்பட்டு கிழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி புரட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.

        ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணமாக அமைவது வரி விதிப்பு எனலாம். ரஷ்யாவில் 1861 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஊழியர்களுக்கு ஓரளவு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தது. இருந்த போதிலும் வரி விதிப்பிலிருந்து அவர்கள் விலக்கழிக்கப் பட்டிருக்கவில்லை. அதனால் விவசாயிகள் கொடிய துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. அம்மக்கள் கொடிய துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குரிய வழிவகைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் லெனின், கார்ல் மாக்கஸ் போன்றவர்களாவர். இவர்களின் கருத்துக்கள், கொள்கைகளினால் கவரப்பட்ட மக்கள் அவர்களை தலைவர்களாக ஏற்று அணி திரண்டார்கள். பழைமையான கொடிய ஆட்சியினை ஒழித்து புதிய தொழிலாளர் ஆட்சியினை உருவாக்குவதற்காக புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக அமைவது பாட்டாளி மக்களின் பிரச்சனைகள் எனலாம். 'நகரத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி மனப்பான்மை வேரூன்றுவதற்கான பிரதான காரணம் பாட்டாளி வர்க்கத்தினுடைய தோற்றமும், தொழிற்சாலைத் தொழிலமைப்பின் தன்மையுமேயாம்' என்று ஒரு ரஷ்ய எழுத்தாளன் கூறுகிறான். தொழிலாளி வகுப்பினர்கள் உழவுத் தொழிலிலிருந்து தூக்கப்பட்டு தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். ரஷ்யத் தொழிலாளர்கள் உழவுத் தொழிலிலிருந்து திடீரெனப் பிரிக்கப்பட்டமை புரட்சியில் அவர்கள் முழு வீச்சுடன் செயற்படக் காரணமாயிற்று. ரஷ்யாவில் நீண்ட காலமாக இடம் பெற்ற யுத்தத்தினால் அந்நாடு சகல ரீதியிலும் பின்னடைவைப் பெற்றிருந்தது.

       புரட்சிக்கு முன்பாக அங்கு மக்களிடையே நிலவிய கல்வி அறிவின்மை, பிற்போக்குத் தன்மை ஒழுங்கமைப்புப் பழக்கமின்மை, தொழில் பற்றிய முறைமையின்மை, கலாசார, தொழில்நுட்பக் கல்வியின்மை ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளை ஈடு செய்ய முடியாமல் போனது. இவ்வாறு நீண்ட காலப் போரினால் ரஷ்யாவின் அரசியல், பொருளாதாரம் என்பன நலிவடைந்து போயின. போரில் சலிப்புற்ற படைவீரர்கள் அடிமைத்தளையில் இருந்த பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர் குடியானவர்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியும், சார் மன்னர்கள், நிலக்கிழார்கள் ஆகியோரது ஆதிக்கம் ஒழிய வேண்டும் ஆகிய அடிப்படைக் கருவூலங்களை முன்வைத்து புரட்சியில் ஈடுபட்டார்கள்.

        ரஷ்யாவில் நிலவி வந்த சமூக ஏற்றத்தாழ்வும் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணமாகக் கொள்ளப்படுகிறது. அங்கு 'பிறப்பு' அடிப்படையில் சமூக அந்தஸ்த்து தீர்மானிக்கப் பட்டமையே சமூக ஏற்றததாழ்வுக்கு அடிப்படைக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. உயர் குடிகள் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். சாதாரண குடியினர் நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் சில அடிமைகளின் நிலைதான் மிகப் பரிதாபகரமாகக் காணப்பட்டது. இவர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் மிகவும் கீழ்த்தரமானதாக அமைந்திருந்தது. இவ்வாறு பரிதாபகரமான நிலையில் கட்டுண்டு கிடந்த ரஷ்ய மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் விழிப்படையச் செய்தன.

         ரஷ்ய மக்கள் மத்தியில் காணப்பட்ட வறுமை, இடப்பெயர்வு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கை, உழைப்பின் பெரும்பகுதியை காரணங்கள் எதுவுமின்றி வரியாகச் செலுத்தியமை, முதலாளி, தொழிலாளி என்ற பேதம் என்பன அவர்கள் புரட்சியில் ஈடுபடக் காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.
        
நீண்ட காலமாக ரஷ்யாவில் ஏற்பட்ட யுத்தங்களும்; சோசலிசப்புரட்சி ஏற்படக் காரணமானது. ஜார் மன்னர்கள் பலன்கள் எவையுமின்றி வீணாக யுத்தங்களில் ஈடுபட்டார்கள். அதனால் பெரும் செலவு ஏற்பட்டது. இவ்வாறு பொருளாதாரத்தை விணடித்தனரே தவிர வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கவில்லை. மன்னன் முதலாம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் கிராமியப் போரில் ரஷ்யா தோல்வியைத் தழுவிக் கொண்டது. இது போல 02ஆம் நிக்கலஸின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானுடன் ஏற்பட்ட போரிலும் ரஷ்யா தோல்வியடைந்தது. இவ்வாறு ஜார் மன்னர்கள் தேவையற்ற யுத்தங்களில் ஈடுபட்டு பெரும் செலவையும், அவமானத்தையும் ரஷ்யாவுக்கு ஏற்படுத்தினார்கள். தங்களின் கீழ்த்தரமான வாழ்விற்கு ஜார் மன்னர்களின் நடவடிக்கைகளே பிரதான காரணம் என்று உணர்ந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சியை தகுந்த கருவியாக்கி மாற்றத்தை ஏற்படுத்தத் துணிந்தனர்.

 சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான அடுத்த காரணத்தினை நோக்கினால் ஜார் மன்னர்களிடம் சிறந்த அரசியல் தலைமைத்துவம் காணப்படாமை எனலாம். ஜார் மன்னர்கள் மக்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தார்கள். சான்றாக 02 ஆம் நிக்கலஸ் மன்னன் தனது ஆட்சியின் போது அவனது மனைவி சொன்ன படியெல்லாம் ஆடி வந்தான். அத்துடன் ஜார் மன்னர்கள் 'புனித ரஷ்யா' வை சிருஷ்டிக்கப் போவதாகக் கூறினார்கள். அம்மன்னர்கள் சமூக பொருளாதார நலன்கள் தொடர்பில் அக்கரை காட்டவில்லை. மாறாக சமய சம்பந்தமான செயற்பாடுகளில் அதிக நாட்டம் செலுத்தினார்கள். இதனால் சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகள் தாழ்ந்த மட்டத்தினை அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜார் மன்னர்களுக்கு எதிராக ஒன்று திரண்டமை புரட்சி ஏற்பட வழியமைத்துக் கொடுத்தது.
லெனின்

           ரஷ்யாவில் சோசலிசப்புரட்சி ஏற்பட்டமைக்கான காரணங்களில் மிகவும் பிரதானமாக அமைவது 'நவயுக ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப் படுகின்ற லெனினுடைய தலைமைத்துவமும், அவரது இராஜதந்திர நடவடிக்கைகளுமாகும்' என்பது மறுத்தற்கரிது. 'நெருங்கிக் கொண்டிருந்த புயலின் அறிகுறிகள் யாவும் அடிவானத்தை இருளச் செய்தன' என்பது போல புரட்சியில் ஈடுபடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் லெனினுடைய வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

         பள்ளிகளை மேற்பார்வையிடும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனாக 1890 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதியன்று லெனின் பிறந்தார். லெனினுக்கு 16 வயதாகும் போது அவரது தந்தை இறந்து விட்டார். சட்டப் பட்டதாரியான லெனின் அரசியலில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கார்ல் மாக்ஸ் எழுதிய பொருளாதாரத் தத்துவங்கள் இவரைக் கவர்ந்தன. தொழிலாளர்களையும், குடியானவர்களையும் ஒன்றுதிரட்டி லெனின் மேற்கொண்ட சோசலிசப்புரட்சி ரஷ்யா வல்லரசாக உருவெடுப்பதற்கு மூல காரணமாக அமைந்தது.

லெனினுடைய மூத்த சகோதரனான அலெக்சாண்டர் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார். இச்செயற்பாடு லெனின் புரட்சியில்; முழு வீச்சுடன் செயற்பட அடிப்படைக் காரணமானது. சமகாலத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் ஆட்சி செலுத்தி வந்தான். ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து லெனின் சதி செய்வதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்தது. அதனால் 02 ஆம் நிக்கோலஸ், லெனினை சைபீரியாவுக்கு நாடு கடத்தினான். அங்கு லெனின் சைபீரிய நாட்டுப் பெண்ணான குரபஸ்கயா என்பவளைத் திருமணம் செய்து கொண்டான்.

           ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன விரிசலடைந்து காணப்பட்டன. இவை மட்டுமின்றி ஜார் மன்னர்கள் தொர்ச்சியான யுத்தங்களில் ஈடு பட்டார்கள். இதனால் சாதாரண குடியினரும், தொழிலாளர்களும் அரசின் மீது அதிருப்தியடைந்தார்கள். இதனால் பெற்ரோக்கிராட் நகரில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த லெனின் ஜார் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார். அதற்காக அயராது உழைத்தார். லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணங்களை அவர்களுக்கு விளக்கினார். உங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டுமெனில் புரட்சி ஒன்றுதான் காரணம் என பகிரங்கமாக அறிவித்தார். அதனால் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
    இருந்த போதிலும் முதல் ரஷ்யப் புரட்சி தோல்வியிலே முடிவடைந்தது. ஆனால் லெனின் மனம் தளரவில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப் படுத்தினார்.  ' தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே' என முழங்கினார். லெனின் ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு பேசத் தொடங்கினார். 'தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்தி விட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடைய வில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாழிகளும், பண்ணையாளர்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு தொடர்ந்து முன்னேறுங்கள். என்று அறை கூவல் விடுத்தார்.

  லெனினுடைய புரட்சிக் கருத்துக்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. அதனால் 1917 ஆம், ஆண்டு, நவம்பர் 07ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாடு                                          கூட்டப்பட்டது. அதில் னெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு மக்களது நலனுக்காகப் பாடுபட்ட லெனினுடைய தலைமைதுவம் புரட்சிக்கான மிகவும் பிரதான காரணமாக அமைந்தது. என்பதை எவரும் மறுத்து விட முடியாது. இவ்வாறு ரஷ்யாவின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட லெனின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் திகதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்தாலும் அவரின் புகழ் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
    
சோசலிசப் புரட்சியின் போக்கு

 சோசலிசப் புரட்சியின் போக்குப் பற்றி நாம் ஆராய்கின்ற போது ரஷ்யாவில் மட்டுமின்றி உலகியல் வரலாற்றிலே தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டிய பரட்சி இதுவெனலாம். அதாவது 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 07 ஆம் திகதி லெனினுடைய தலைமையில் பாட்டாளி வர்க்கத்தினரால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சிதான் உலக வரலாற்றில் 'சோசலிசப் புரட்சி' எனச் சிறப்பிக்கப்படுகிறது.

           இனிப் புரட்சியின் போக்குப் பற்றி ஆராய்வோம். ரஷ்யாவில் ஜார் மன்னன் 02 ஆம் நிக்கோலஸ் மக்களின் நலன்களைக் கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி வந்தான். அத்துடன் யுத்தத்தின் காரணமாக ரஷ்யாவில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. கொடுங்கோலாட்சி நாடெங்கும் தாண்டவமாடியது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கத்தினர் உணவு, காணி, சமாதானம் போன்றவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஒன்று திரட்டிக் கொண்டு லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு நவம்பர், 07 இல் புரட்சியினை நடத்தினார்கள்.

           நவம்பர் புரட்சிக்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கும் வகையில் முதற் கட்டமாக 1917 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் 'பெற்றோக்கிராட்' என்னுமிடத்தில் அமைந்திருந்த நெசவாலைப் பெண் தொழிலாளர்கள் 'உணவு வேண்டும்' என்னும் கோரிக்கையுடன் தொழில் நிறுத்தம் செய்ய ஆரம்பித்தனர். மறுநாள் ஏனைய தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 'போர் ஒழிக' , 'தனியாட்சி ஒழிக' என்ற கோசங்களை எழுப்பிக் கொண்டு தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டார்கள். மூன்றாவது நாள் இத் திடீர்க்கிளர்ச்சி ஒரு பொதுத் தொழில் நிறுத்தமாக மாறி புரட்சிக்கான தன்மையினை வெளிப்படுத்துவதாயிற்று.

          புரட்சிக்காரர்களை அடக்குவதற்காக அரசாங்கம் இராணுவத்தினரை ஏவி விட்டது. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த இராணுவ வீரர்கள் கிளர்ச்சிக் காரர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். கலவரத்தை அடக்க பொலிசார் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதனால் ஆவேசம் கொண்ட மக்கள் கற்களாலும், தடிகளாலும் பொலிசாரைத் திருப்பித் தாக்கினார்கள். மார்ச் 08 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் எங்கு பார்த்தாலும் கலவரங்கள் நிறைந்திருந்தன.

          உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முடியாத சூழ் நிலையில் ரஷ்யாவில் 'டூமா' பாராளுமன்றம் கூடியது. முதற் கட்டமாக ஜார் மன்னன் முடி துறக்க வேண்டும் என்றும், சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதிகளும் ஆமோதித்தனர். வேறு வழியின்றி 1917 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் திகதி ஜார் மன்னன் பதவியை விட்டு விலகினார். தனது தம்பியான மைக்கேல் என்பவனுக்கு முடி சூட்டினான். ஆனால் அவனால் ஒரு நாள் கூட பதவியில் நீடித்திருக்க முடியவில்லை. அன்றே மக்கள் அவனைத் தூக்கி எறிந்தார்கள்.

           அரசாங்க நிருவாகத்தைக் கவனிக்க தற்காலிக அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த லெனின் 1917 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ரஷ்யா திரும்பினார். அவரது நண்பனான டிரான்ஸ்கியும் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்தார். ரஷ்யாவிலுள்ள நிலைமையினை ஆராய்ந்து புரட்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் லெனினுடைய திட்டமாகும்.

          இந்த நிலையில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இணந்த கூட்டணி அரசாங்கத்திற்கு கெரன்ஸ்கி என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் லெனினுடைய போல்சுவிக் கட்சி வளர்வதை விரும்பவில்லை. அதன் விளைவாக லெனின், ஸ்டாலின், டிராட்ஸ்கி ஆகிய மூவரையும் கைது செய்யுமாறு கெரன்ஸ்கி உத்தரவிட்டார். அதனால் அவர்கள் மூவரும் தலைமறைவாயினர்.

         லெனின் தப்பிவிட்டதால் ஆத்திரமடைந்த கெரன்ஸ்கி லெனினுடைய கட்சியினை ஒடுக்குமாறு உத்தரவிட்டார். இதனால் நாட்டில் அடக்குமுறை தாண்டவமாடியது. முக்கள் தற்காலிக அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தனர். இதனால் மக்களின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என லெனின் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது. அதுதான் ரஷ்ய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக நிலைபெற்றது.
      

       1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் திகதி சோவியத் காங்கிரஸ் மாநாட்டை, பெட்ரோக்கிராட்டில் கூட்டுவதற்கு ஸ்டாலின் இரகசியமாக ஏற்பாடு செய்தார். மாநாடு கூட்டப்பட்டது. மொத்தமாக 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அதில் 390 பேர் லெனினுடைய கட்சியினைச் சேர்ந்தவர்களாகும். அது வரைத் தலைமறைவாக இருந்த லெனின் திடீரென்று மாநாட்டிற்கு வந்தார். அரசாங்க நிருவாகம் ரஷ்ய மக்களின் கைகளிற்கு வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என பகிரங்கமாக அறிவித்தார். ஏற்கனவே லெனினுடைய திட்டப்படி போல்சுவிக் வீரர்கள் தபால் நிலையங்களையும், டெலிபோன் நிலையங்களையும், அரச அலுவலகங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

         அதுவரை பிரதமராக இருந்து கொண்டு அட்டூழியங்களை நிகழ்த்திய கெரன்ஸ்கி இனி ரஷ்யாவில் இருப்பது தனக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்டு பெண் வேடத்தில் தப்பிச் சென்றார். லெனின் தலைமையில் பெற்ரோக்கிராட் நகரில் சோவியத் காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருந்த போதே இவ்வளவு நிகழ்ச்சிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்றன.
         மாநாட்டிலே '. சகல அதிகாரங்களும் மக்களுக்கே' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லெனின் தலைமையில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட்டது. 1917 இல் நவம்பர் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த லெனின் 1924 வரை சோவியத் குடியரசின் தலைவராக இருந்து சோவியத் ரஷ்யா ஒரு வல்லரசாக மாறுவதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதனால் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார். இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியின் போக்கு அமைந்திருந்தது.
      
         சோசலிசப் புரட்சியின் விளைவுகள்

       சோவியத் ரஷயாவில் புரட்சியின் பின்னரான நிலைமை பற்றி மகாகவி பாரதியார் பின்வரும் கவிதையூடாக தெளிவு படுத்தியுள்ளார்.

        'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
             மேன்மையுறக் குடிமை நீதி
        குடியொன்றில் எழுந்தது பார், குடியரசென்று
              ஊலகறியக் கூறிவிட்டார்
        அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
              அடிமையில்லை. அறிக' என்றார்

         சோசலிசப் புரட்சியினுடைய மிகவும் பிரதான அம்சமாக விளங்குவது புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளாகும். ரஷ;யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்கெதிராக இடம் பெற்ற இப்புரட்சியானது, பல ஆண்டுகளாக துன்பங்களின் பிடியில் சிக்கித் தவித்த ரஷ;யக் குடி மக்களின் அடிமைத் தளையினை நீக்கியது. இதனை விரிவாக ஆராய்வோம். லெனினுடைய தலைமையில் 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் திகதி நடைபெற்ற இப்புரட்சியின் விளைவுகள் பல கோணங்களில் அமைந்திருந்தன.

         சோசலிசப் புரட்சியின் மிகப் பிரதான விளைவுகளில் ஒன்றாக அமைவது இடைக்கால அரசை நீக்கி லெனின் தலைமையில் சோவியத் குடியரசை உருவாக்கியமை எனலாம். லெனின் தலைமையில் 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் 'கமிசார்' என்று அழக்கப்பட்டனர். லெனின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. லெனின்-- அமைச்சரவைத் தலைவர்.
2. ரிக்கால்-- உள்நாட்டு அமைச்சர்.
3. மில்யூதின்-- விவசாய அமைச்சர்.
4. ஷல்யாப் நிக்கோவ்--தொழிலாளர் அமைச்சர்.
5. மூவர் கொண்ட ஒரு குழுவிடம் இராணுவமும், கடற்படையும் ஒப்படைக்கப் பட்டடது.
6. நோகின்-- அதாழில் அமைச்சர்.
7. லூர்னார்ஸ்கி—கல்வி அமைச்சர்.
8. ஸ்தெப்பனாஸ்-- நிதி அமைச்சர்.
9. தீராஸ்கீப்-- வெளி விவகார அமைச்சர்.
10. லோமாவ்-- சட்ட அமைச்சர்.
11. தியோடாவிச்-- உணவு அமைச்சர்.
12. அவிலோல்--தொலைத் தொடர்பு அமைச்சர்.
13. ஸ்டாலின்--தேசிய இனங்களின் அமைச்சர்.

            நீண்ட காலமாக கொடுமைகளை அனுபவித்த உழவர்கள் புரட்சியின் விளைவாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். ரஷ;யாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய வளங்களாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையாளர்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டன. உழவர்களின் வறுமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. உழைப்பாளி மக்கள் அரச அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். 'சோவியத்துக்கள்' என்ற 'உழைக்கும் மக்கள் மன்றம்' அரச நிருவாகத்தை நடத்தியது. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டினார்கள். அதனை அமுல்படுத்த ஒரு நிருவாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை மட்டுமின்றி நீதி மன்றங்களாக செயற்படும் அதிகாரம் கூட தொழிலாளர்கள் கைவசமே இருந்தது. மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமுல்படுத்தி, அவர்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறையாகும். இதுதான் உண்மையான ஜனநாயகமாகும். 
    
             தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் ஆட்சி மலர்ந்தது. உலகின் முதன் முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். அந்தத் தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. ரஷ;ய தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டுமே அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. எல்லா வளங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்னும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சமூகத்தின் மத்தியில் சமத்துவம் மேலோங்கியது. இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடைபெற்றன.

               சோசலிசப் புரட்சியின் பிரதானமான விளைவுகளில் ஒன்றாக அமைவது ரஷயாவில் அதிகார வர்க்கத்தினரின் சுரண்டலுக்கு முடிவு கட்டப்பட்டது எனலாம். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றார்கள். உலகியல் வரலாற்றில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தினரின் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டமையும் இப் புரட்சியின் விளைவே. அத்துடன் ரஷ;யாவில் மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டு ஆட்சியதிகாரமானது தொழிலாளர்களின் கைகளிற்கு சென்றடைந்தது.

             ரஷ;யப்புரட்சியின் விளைவாக அரசுக்குச் சொந்தமான பல உடைமைகள் பாட்டாளி வர்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டன. சான்றாக அரச அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள். வானொலி நிலையம் முதலியவை பாட்டாளி வர்க்கத்தினரின் கைவசமாகின. அரசின் தலைநகரமான 'கிரெம்ளின்' மாளிகை இறுதியாகக் கைப்பற்றப்பட்டது. முதலாளி வர்க்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினார்கள். ரஷ;யாவில் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டு ரஷ;யா சோசலிச நாடு எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதனுடைய தலைவராக லெனின் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதனால் போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.
            
     மக்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள். தொழிற்சாலைகளின் நிருவாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. புரட்சியின் முன்னர் தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் புரட்சியின் பின்னர் மக்களுக்குத் தேவையான அளவிற்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊழியமும் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் நொடியில் மறைந்தது.


                  புரட்சியின் விளைவாக 'நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில்' என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளிள் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அறிவு மற்றும் திறமைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 


       புரட்சியின் பின்னர் உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரஷ்யா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழு விடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக நாடுகளால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளில் உள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. மாறாக லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமுல்படுத்த வேண்டும் என்னு விரும்பினார்கள். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'சோவியத் யூனியன்' என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார். புரட்சியின் விளைவாக ரஷ்யாவில் தொழிற்சாலை உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பெருகின. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது.


       மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்கினால் ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிக்கான காரணங்கள், புரட்சியினுடைய போக்கு, புரட்சியினுடைய விளைவுகள் போன்ற பிரதான விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சியானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அங்கு காலூன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது.

No comments:

Post a Comment