Wednesday 20 December 2017

நாடு என்பது என்ன?

நாடு அல்லது தேசம் என்பது சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டதாக (Subject) இருப்பது மட்டுமின்றி சர்வதேசச் சட்டத்தை உருவாக்கும் நபராகவும் (Creator) இருக்கின்றது. நடைமுறையில் ஒரு நாடு (Country) என்பது அதன் மக்களைக் குறிப்பதல்ல. மாறாக அம்மக்களையும் உள்ளடக்கிய நாட்டை நிர்வகிக்கும் அரசையே அது குறிக்கிறது. எனவே “state” எனும் ஆங்கிலச் சொல் அதன் நேர்ப்பொருளின் அரசைக் குறிப்பதாக இருந்தாலும், சர்வதேசச் சட்டத்தில் அந்த அரசு பிரதிநிதித்துவப் படுத்தும் நாட்டையே அது குறிக்கிறது. எனவே இங்கு "state" என்பது "நாடு" என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.




சர்வதேசச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் அதனை உருவாக்குபவராகவும் இருக்கும் நாட்டின் இலக்கணம், நவீன கால தேசிய இன அரசுகள் உருவான வரலாறு போன்றவைகளை அறிந்து கொள்வது அரசியல் பயில்வோருக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாகும். அத்துடன், நாட்டின் அங்கீகாரம் (Recognition), நாட்டின் இறங்குரிமை (Succession), நாட்டின் ஆள்நில எல்லை (Territory), நாட்டின் இறையாண்மை (Sovereignty), நாட்டின் சர்வதேசப் பொறுப்பு நிலை (Responsibility) ஆகியவை பற்றியும் அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.  (குறள்737)

என்பார் வள்ளுவர்.

மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக, அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது என பரிமேலழகர் உரை எழுதுகிறார்.
மான்டவிடோ மாநாடு, 1933 (The Monte video Convention of 1933) ஷரத்து 1-இன் படி சர்வதேசச் சட்டத்தில் நபர் என்ற முறையில் ஒரு நாடு என்பது பின்வரும் தகுதிகளைப் பெற்றதாக இருக்க வேண்டும்: அவை

நிரந்தரமான மக்கள் தொகை (A Permanent population)
வரையறுக்கப்பட்டதொரு நிலப்பகுதி (A defined Territory)
ஓர் அரசாங்கம் (A Government) மற்றும்
மற்ற நாடுகளுடன் உறவுகளில் ஈடுபடும் தகுதி (Capacity)

இவற்றில் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி என்பதால் நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. அண்டை நாட்டுடன் எல்லைத் தகராறு இருந்து இருநாட்டின் எல்லைகளும் வரையறுக்கப்படாமல் இருந்தாலும் அவ்விரு நாடுகளுமே நாட்டிற்குரிய தகுதியைப் பெற்றவையே ஆகும்.

நாடுகளின் வகைகள் (Kinds of State)

நாடுகள் அவற்றின் உள்கட்டமைப்பு அல்லது அரசமைப்பின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். மேலும் நாட்டு அரசின் தன்மைகளின் அடிப்படையிலும் அவை வகைப்படுத்தப்படலாம்.

1. இணையாட்சி நாடு (Condominium State)

ஒரு நிலப்பரப்பு அல்லது எல்லைக்குட்பட்ட பகுதியின் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கூட்டாக, சமமான ஆட்சியுரிமை கொண்டிருந்தால் அப்பகுதி இணையாட்சி நாடு எனப்படும். உதாரணமாக, நியூ ஹீப்ரைட்ஸ் (New Hebrides) நாட்டின் மீது இங்கிலாந்தும் பிரான்சும் 1914-க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் இணையான கட்டுப்பாட்டையும் உரிமையையும் செலுத்தின. அக்காலகட்ட நியூ ஹீப்ரைட்ஸ் நாடு இணையாட்சி நாடாகும். அதுபோல 1898 முதல் 1955 ஆண்டு வரையிலான காலங்களில் இங்கிலாந்தும் எகிப்தும் சூடான் மீது இணையாட்சியுரிமை கொண்டிருந்ததையும் உதாரணமாகக் கூறலாம். இன்றும் பல நாடுகள் தங்களுக்கு இடையிலான நதிகள், வளைகுடாக்கள் அல்லது விரிகுடாக்கள் மீது கொண்டிருக்கும் இணையுரிமைகளையும் இணையாட்சி உரிமைகளாகக் கூறலாம்.

2. அடிமை நாடு (Vassal State)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்டு (Under Suzerainty) இருக்கும் போது அடிமை நாடு எனப்படும். உதாரணமாக காலனி நாடுகளைக் கூறலாம். அடிமை நாட்டின் சுதந்திரம் மேலாதிக்க நாட்டிற்கு முற்றிலும் கட்டுப்பட்டதாகும். சர்வதேசச் சட்டத்தில் நாடு என்று தனித்தியங்கும் சட்டத் தகுதி அடிமை நாட்டிற்குக் கிடையாது. ஸ்டார்க், அடிமை நாடு என்பது மற்றொரு நாட்டின் அதிகாரத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டிருக்கும் நாடாகும் என்கிறார். சர்வதேசச் சட்டத்தில் அடிமை நாடு ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வெளி விவகாரங்களில் (Foreign Affairs) அடிமை நாட்டிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதன் அனைத்து வெளியுறவுக் கொள்கைகளும் அதன் மீது அதிகாரம் செலுத்தும் நாட்டினாலேயே தீர்மானிக்கப்படும்.

3. பாதுகாப்பிலிருக்கும் நாடு (Protectorate State)

ஒரு நாடு தன்னைவிட வலிமையான மற்றொரு நாட்டுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையின் மூலம் அவ்வலிமையான நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் நாடாக தன்னை ஆக்கிக் கொள்ளலாம். அவ்வாறு ஆக்கிக் கொள்ளும் நாடே பாதுகாப்பிலிருக்கும் நாடு எனப்படும். உதாரணமாக 1975 ஆம் ஆண்டு வரை சிக்கிம் இந்தியாவின் பாதுகாப்பிலிருக்கும் முழுமையாக இணைந்து இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கமாக ஆனது.

பாதுகாப்பில் இருக்கும் நாடு முழுமையான சுதந்திரம் உடைய நாடாக இல்லாவிட்டாலும் அது மற்றொரு நாட்டின் எல்லைக்குள் இறையாண்மைக்குரிய விலக்களிப்புகள் (Immunity) அனைத்தையும் பெற்றதாகவே இருக்கும் என்று Duff Development Co-Vs-Kelanthan Government (1924) A.C.729] என்ற வழக்கில் பின்லே பிரபு கூறியுள்ளார். எனவே சர்வதேசச் சட்டத்தில் ஓர் நாடு என்ற சட்டத் தகுநிலைiயைப் பெற்றதாகவே பாதுகாப்பிலிருக்கும் நாடு இருக்கும் என்கிறார் ஸ்டார்க்.

லோனியன் கப்பல் (Lonian Ship case (1855) 2 Spinks 2) – வழக்கில் 1815-ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் லோனியன் தீவுக் கூட்டம் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு இங்சிலாந்திற்குத் இரஷ்யாவுக்கும் இடையே ஜெர்மானிய யுத்தம் மூண்டது. அப்போரின் போது லோனியன் நாட்டுக் கப்பல்கள் ரஷ்யாவுடன் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த போது இங்கிலாந்து கப்பற்படையால் பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பிலிருக்கும் நாடாகிய லோனியன் நாட்டுக் கப்பல்கள் இங்கிலாந்தின் எதிரி நாடாகிய இரஷ்யாவுடன் வாணிகம் மேற்கொள்வது சட்ட விரோதம் என்றும் லோனியன் நாட்டுக் குடிமக்கள் இங்கிலாந்தின் குடிமக்களே என்பதால், இங்கிலாந்தின் எதிரி நாடு எதுவும் லோனியன் நாட்டு குடிமக்களுக்கும் எதிரி நாடே என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் இவ்வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், லோனியன் நாடு இங்கிலாந்தின் பாதுகாப்பில் இருக்கும் நாடாகவே இருந்தாலும் அது சுதந்திரமான தனி நாடாகும். எனவே, லோனியன் நாட்டுக் கப்பலை இங்கிலாந்தின் கப்பல் என்றோ, லோனியன் நாட்டுக் குடிமக்களை இங்கிலாந்தின் குடிமக்கள் என்றோ கூற முடியாது. அதனால் ரஷ்யாவுடன் வாணிகம் செய்வதற்கும் லோனியன் நாட்டுக் கப்பல்களுக்கு முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது.

4. கூட்டாட்சி நாடு

கூட்டரசு அல்லது கூட்டாட்சி நாடு என்பது, ஒரு அரசாக தனித்து இயங்கவல்ல நாடுகள் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை உறுப்பு அரசுகளாகக் கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சி அரசு ஆகும். கூட்டாட்சிக்குள் உள்ள ஒவ்வொரு அரசு ஆகும். கூட்டாட்சிக்குள் உள்ள ஒவ்வொரு அரசும் தனக்கென தனியான நாடாளுமன்றத்தையும் பிற துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கும். ஆனால் உறுப்பு அரசுகளுக்கு சர்வதேச அரங்கில் தனி நாடாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது. விதிவிலக்காக முன்னால் சோவியத் யூனியன் கூட்டாட்சி நாட்டில் மட்டும் உக்ரைன், பைலோ ரஷ்யா போன்ற அதன் உறுப்பு அரசுகள் சர்வதேச அரங்கில் தனி நாடு என்ற தகுதியுடன் தனித்து இயங்கும் சர்வதேசச் சட்டத் தகுநிலை சோவியத் யூனியனின் அரசமைப்பில் வழங்கப்பட்டிருந்தது. தற்போதிருக்கும் நாடுகளில் கூட்டாட்சி நாடுகளுக்கு உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கூறலாம்.

5. நாடுகளின் கூட்டமைப்பு (Confederation State)

நாடுகளின் கூட்டமைப்பு என்பது சுதந்திரமான தனித்தனி நாடுகள் ஒர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு உடன்படிக்கையின் மூலம் கூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆகும். அணிசேரா நாடுகள் (NAM), பிரிக்ஸ் (BRICS) நாடுகள், ஆசியன் (ASIAN) நாடுகள் போன்றவை நாடுகளின் கூட்டமைப்பிற்கு சில உதாரணங்களாகும்.

நாடுகளின் கூட்டமைப்பு என்பது கூட்டாட்சி நாடுகளில் இருந்து வேறுபட்டதாகும். கூட்டாட்சி நாடு என்பது தனித்தனி அரசுகளின் நிரந்தரமான இணைப்பாடும். நாடுகளின் கூட்டமைப்பு என்பது தற்காலகமான இணைப்பாகும். நாடுகளின் இணைந்த பின்னர் உறுப்பு நாடுகள் ஒரு நாடு எனும் சர்வதேசத் தகுநிலையை இழந்துவிடும் (விதிவிலக்கு சோவியத் யூனியன்). மாறாக நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்த பின்னரும் உறுப்பு நாடுகள் சர்வதேசத் தகுதியில் தனித்தனி நாடுகளாகவே தொடர்ந்து இருந்து வரும்.

6. நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு (Common Wealth of Nations)

இங்கிலாந்தின் காலனி நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷ் சமவுரிமைக் கூட்டமைப்பு (British Common Wealth of Nations)என்ற பெயரில் ஒரே கூட்டமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இங்கிலாந்திடம் காலனிகளாக இருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்று சுதந்திர நாடுகளாகின. ஆனால் அவற்றுடன் இங்கிலாந்து நாட்டுக்கு இருந்த வணிக பொருளாதாரத் தொடர்புகள் முற்றும் அறுபடாமல் ஒரளவிற்கு தொடர்ந்து இருந்து வந்தன. எனவே புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகளின் பொருளாதார அரசியல் நலனுக்குப் பொதுவாகவும் இங்கிலாந்தின் பொருளாதார அரசியல் நலனுக்கு குறிப்பாகவும், இங்கிலாந்தையும் உள்ளடக்கிய நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு தொடர்வது அவசியம் என்று கருதப்பட்டது. எனவே 1948 ஆம் ஆண்டில் இதன் பெயரில் இருந்த பிரிட்டிஷ் என்ற சொல் நீக்கப்பட்டது. அது நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டது. இந்தியாவும் அதன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பு என்பது உறுப்பு நாடுகளிடையே சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பரஸ்பரம் அங்கீகரித்துக் கொள்கிறது. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் சுதந்திரமான சுயேச்சையான இறையாண்மை பெற்ற நாடுகளாகும். உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் இக்கூட்டமைப்பு தலையிடாது.

நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பின் சர்வதேசச் சட்டத் தகுநிலையைப் பொறுத்த வரை, அதற்கு நாடு என்ற சர்வதேசத் தகுதி கிடையாது. தனி நபரைப் போல் உடன்படிக்கை செய்து கொள்ளும் அதிகாரமும் கிடையாது. அது இங்கிலாந்தின் முன்னாள் காலனி நாடுகளின் விருப்பத்தின் பேரில் அமைக்கப்பட்டதொரு கூட்டமைப்பு மட்டுமேயாகும். நாடுகளின் சமவுரிமைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தங்களுக்கு இடையிலான தூதரக உறவுகளை உயர் ஆணையர் (High Commissioner) மூலம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதாவது மற்ற நாடுகளின் அயல் நாட்டுத் தூதர் (Foreign Diplomat) என்ற பெயரில் நியமிக்கப்படும் தூதரக அதிகாரி இக்கூட்டமைப்பு நாடுகளில் உயர் ஆணையர் என்ற பெயரில் நியமிக்கப்படுவார்.

நடுநிலையாக்கப்பட்ட நாடுகள் (Neutralised State)

ஸ்டார்க்- இன் கருத்ததுப்படி நடுநிலையாக்கப்பட்ட நாடு என்பது, தற்காப்பிற்காக அல்லாமல் மற்றொரு நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தவோ, நடுநிலைத் தன்மையை மாற்றக் கூடிய அல்லது போரை உண்டாக்கக் கூடிய இராணுவக் கூட்டு உடன்படிக்கை எதிலும் ஈடுபடவோ மாட்டோம் என்று ஒரு நாடு ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், பெரும் வல்லரசு நாடுகள் கூட்டாக அந்நாட்டின் சுதந்திரத்தையும் அரசியல் மற்றும் ஆள்நில ஒருமைப்பாட்டையும் நிரந்தரமாகப் பாதுகாப்பதாக உறுதியளித்திருக்கும் நாடு ஆகும். நவீன உலகில் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியாவும் அவ்வாறு நடுநிலையாக்கப்பட்ட நாடுகளாக இருக்கின்றன. ஸ்விட்சர்லாந்தில் 1985 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐ.நா.சபையிலும் உறுப்பினராகச் சேரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் ஸ்விட்சர்லாந்தே உண்மையான அர்த்தத்தில் நடுநிலையாக்கப்பட்ட நாடாக இருக்கிறது.

நோக்கம் (Object)

ஒரு நாடு நடுநிலையாக்கப்படுவது பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாகும்.

1. மிகச்சிறிய, பலவீனமான நாடுகளை அதன் அருகில் இருக்கும் வலிமையான நாடுகளிடமிருந்து பாதுகாப்பதும் அதன் மூலம் நாடுகளிடையே அதிகாரச் சமநிலையை ஏற்படுத்துவதும்.

2. பெரும் வல்லரசுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் நாடுகளின் சுதந்திரதைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆகும்.

நடுநிலையாக்கப்படுதலின் தன்மைகள் (Characteristics)

a. நடுநிலையாக்கப்படுதல் என்பது ஒரு கூட்டு நடவடிக்கையாகும்.
b. நடுநிலையாக்கப்படும் நாடு அதன் நிபந்தனைகளுக்கு தனது சம்மதத்தைத் தெரிவித்திருக்க வேண்டும்.
c. ஒரு நாடு நடுநிலையாக்கப்படுதல் என்பது நிரந்தரமான தகுநிலை ஆகும்.


நடுநிலையாக்கப்படுதலும் நடுநிலையும் (Neutralization and Neutrality)

நடுநிலையாக்கப்பட்ட நாட்டையும், நடுநிலை நாட்டையும் ஒன்றாக எண்ணிக் குழப்பிக் கொள்ளக் கூடாது. நடுநிலை என்பது நாடுகளுக்கு இடையே நிலவும் பகை அல்லது போரில் தான் நடுநிலை வகிப்பதாக ஒரு நாடு தன்னிச்சையாக அறிவித்துக் கொள்வதாகும். அத்தகைய நடுநிலை தற்காலிகமான ஒன்றாகும். நடுநிலை வகிப்பதாக அறிவித்துக் கொண்ட நாடு எப்போது வேண்டுமானாலும் அதன் நடுநிலைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஏதேனுமொரு தரப்பின பக்கம் சாய்ந்து விடலாம். மாறாக நடுநிலையாக்கப்படுதல் என்பது மற்ற நாடுகள் கூட்டாகச் சேர்ந்து ஒரு நாட்டிற்கு வழங்கும் தகுநிலையாகும். அது நிரந்தரமான ஒன்றாகும்.

நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் கடமைகள் (Obligations of Neutralized State)

1. தன்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அன்றி வேறு எந்த நாட்டுடனுடம் போரில் ஈடுபடக் கூடாது.
2. நாடுகளுக்கு இடையே பகை உண்டாகும் அபாயம் இருக்கக் கூடிய உடன்படிக்கைகளின் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் சாராத பிற உன்படிக்கைகளில் ஈடுபடலாம்.
3. மற்ற நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நடுநிலைக்கான விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
4. தன்னைத் தற்காத்துக் கொள்ள தனக்கு எதிரான தாக்குதலில் தன்னிடமுள்ள முழு பலத்தையும் பயன்படுத்தலாம்.

நடுநிலையாக்குதலுக்கான உறுதியை வழங்கும் நாடுகளின் கடமைகள் (Obligations of state Guaranteeing Neutralized State)

ஒரு நாட்டை நடுநிலையாக்கி அதற்கான உறுதியை அளிக்கும் நாட்டின் கடமைகள் பின்வறுமாறு:

1. நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் மீது எவ்விதத் தாக்குதலும் தொடுக்காமல் இருப்பது.
2. நடுநிலையாக்கப்பட்ட நாட்டின் ஆள்நில எல்லை மற்றொரு நாட்டால் மீறப்படும் போது தனது இராணுவ பலத்தின் மூலம் தலையிட்டு நடுநிலையாக்கப்பட்ட நாட்டைப் பாதுகாப்பது.

திபெத் - இன் சர்வதேசத் தகுநிலை (International Status of Tibet)

திபெத் இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்ட ஒர் மலைநாடு ஆகும். 1720-ஆம் ஆண்டு வரை திபெத் சுதந்திர நாடாக இருந்தது.  அதன் பின்னர் சீனப் பேரரசின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. மஞ்சுப் பேரரசின் முடிவிற்குப் பின்னர் திபெத் மீண்டும் சுதந்திர நாடானது. 1906 ஆம் ஆண்டில் திபெத், சீனா மற்றும் பிரிட்டனின் இணைப்பாதுகாப்பிலிருக்கும் நாடாக ஆனது. அதன் பிறகு சிறிது காலத்தில் சுதந்திர நாடாக ஆனது. இருப்பினும் அதன் வெளியுறவு விவகாரங்களை சீனாவே நிர்வகித்தது. பின்னர் 1914 ல் எட்டப்பட்ட சிம்லா உடன்படிக்கையின் படி திபெத் சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டு திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் மூலம் திபெத் சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் நாடு (Protectorate state) என்ற தகுநிலையைப் பெற்றது.

திபெத்தின் சமயத் தலைவராக தலாய் லாமாவை சீனா ஏற்றுக் கொண்டது. உள்நாட்டு விவகாரங்களில் திபெத் சுதந்திரம் பெற்ற நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் வெளி விவகாரங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சோசலிச நாடாக இருந்த சீனாவிற்கு எதிராக திபெத்தில் சதி வேலைகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து திபெத்திற்கும் 1959 இல் போர் மூண்டது. சீனாவின் மக்கள் இராணுவம் திபெத்தைக் கைப்பற்றியது. அதன் மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவிற்கு தப்பினார். திபெத் சீனாவின் ஒரு பகுதியாக ஆனது. வேறொரு புத்த துறவி தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவால் அங்கீகரிக்கப்பட்டார். தப்பி வந்த பழைய தலாய்லாமாவிற்கு அரசியல் புகலிடம் அளித்த இந்தியா அவரையே திபெத்தின் தலைவராக அங்கீகரித்தது. திபெத், சீனாவின் பாதுகாப்பிலிருக்கும் நாடு என்று இந்தியா அறிவித்தது. ஆனால் சீனாவோ திபெத் சீனாவின் ஒரு பகுதி என்றது. இதுவே திபெத்தின் சர்வதேசத் தகுநிலையாக இன்றுவரை தொடர்கிறது.

நாடுகளின் உரிமைகளும் கடமைகளும் (Rights and Duties of State)

சர்வதேசச் சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாடுகளுக்கு சில அடிப்படை உரிமைகளும் கடமைகளும் உள்ளன என்பது இயற்கைச் சட்டவியலாளர்களின் வாதமாகும். ஆனால் நாடுகளுக்கு உள்ளார்ந்த அடிப்படை உரிமைகள் என்றோ கடமைகள் என்றோ எதுவும் கிடையாது. சர்வதேச வழக்காறுகள் மூலமாகவும் சர்வதேச உடன்படிக்கைகள் மூலமாக மட்டுமே நாடுகளுக்கு உரிமைகளும் கடமைகளும் வந்தடைகின்றன என்பது நிகழ்நிலைச் சட்டவியலாளர்களின் வாதமாகும்.

1947 இல் சர்வதேசச் சட்ட ஆணையம், நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனம் ஒன்றை உருவாக்கியது. இந்த வரைவுப் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அனைத்து உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கும் அனுப்பி வைத்து. இந்த வரைவுப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உரிமைகளும் கடமைகளும் பின்வருமாறு:


நாடுகளின் உரிமைகள்

1. நாடுகளின் சுதந்திரம் (Independence of states): ஒவ்வொரு நாட்டிற்கும் சுதந்திரமான நாடாக தனித்தியங்குவதற்கு உரிமை உண்டு.

2. ஆள்நில எல்லை அதிகாரவரம்பு (Territorial Jurisdiction): ஒவ்வொரு நாட்டிற்கும் அதனதன் ஆள்நில எல்லைக்குள் தனது அதிகாரவரம்பை செலுத்துவதற்கு முழு உரிமை உண்டு.

3. சமத்துவம் (Equality): ஒவ்வொரு நாடும் சர்வதேச அரங்கில் சமத்துவத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.

4. தற்பாதுகாப்பு (Self-Defense): தனித்தோ மற்ற நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்தோ தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.

நாடுகளின் கடமைகள்:

1. தலையிடாதிருத்தல் (Non-Intervention): மற்ற நாடுகளின் உள்விவாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு.

2. எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் ஆள்நில எல்லைக்குள் உள்நாட்டுப் போராட்டங்களையோ வேலை நிறுத்தங்களையோ தூண்டி விடக் கூடாது.

3. சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தன்நாட்டு எல்லைக்குள் செய்வதற்கு அனுமதிக்காமல் இருக்க வேண்டிய கடமை.

4. மற்றொரு நாட்டின் ஆள்நில எல்லை ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக எந்ததொரு நாடும் போர் தொடுத்தல் அல்லது இராணுவ பலத்தை பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் கூடாது.

5. சர்வதேசப் பிரச்சனைகளை அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டிய கடமை.

6. தனது ஆள்நில எல்லைக்குள்ளும் அதிகாரவரம்பிற்குள்ளும், இனம், பாலினம், மொழி அல்லது மத வேறுபாடு இன்றி மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் குடிமக்களுக்கு உறுதி செய்வதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு நாட்டின் கடமையாகும்.

ஐ.நா.வின் இந்த வரைவுப் பிரகடனம் உலக நாடுகளால் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனை ஏற்றுக் கொண்டு ஐ.நா.சபையின் பொதுச்சபையில் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா.பொதுச்சபைக்கு சர்வதேசச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது என்பதால் நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனம் இன்று வரை செயலுக்கு வரவில்லை. இருப்பினும் சர்வதேச வழக்காறுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகளில் நாடுகளின் இந்த உரிமைகளும் கடமைகளும் வலியுறுத்தப்பட்டே வருகின்றன.

Corfu Channel Case (1949): இவ்வழக்கில் அல்பேனியாவின் எல்லையோர நீர்நிலையாக இருக்கும் கர்ஃபூ கால்வாயில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிந்திருந்தும் அவ்வழியே வரும் மற்ற நாட்டுக் கப்பல்களுக்கு அல்பேனியா உரிய எச்சரிக்கை வழங்கவில்லை. இதன் காரணமாக அக்கால்வாயைக் கடந்து சென்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர்க் கப்பல் கண்ணி வெடியில் சிக்கி பலத்த உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் சந்தித்தது. அதற்கான இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம், தனது ஆள்நில எல்லை மற்ற நாடுகளின் உரிமைகளைப் பாதிக்கும் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை தெரிந்தே அனுமதிக்காமல் இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. இக்கடமையில் இருந்து தவறிய அல்பேனியா, இங்கிலாந்தின் போர்க்கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.














No comments:

Post a Comment