Thursday, 21 December 2017

ஈழத் தனிநாடு தமிழரின் உரிமை!

வடக்கு - கிழக்கு இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.


ஜே.வி.பியை போன்ற நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார், இடதுசாரி கட்சி என்று காண்பிக்கும் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது.
வடக்கு - கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ராஜபக்சவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்?
எந்த உரிமையும் இன்றி, வடக்கு - கிழக்கை தெற்குடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலிந்து நிற்பது தமக்குள் அடக்கி ஒடுக்கி ஆளும் பேரினவாதப் போக்கல்லவா?
ஒரு நாட்டில் புதிய கிராமங்கள் உருவாகுவது எவ்வளவு இயல்பானதோ, அதேபோல உலகில் புதிய நாடுகள் உருவாகுவதும் இயல்பானதே. அதிலும் கலானிய ஆதிக்கத்தில் கலைக்கப்பட்ட நாடுகள் பலவும் நவீன உலகில் மீட்சி பெற்றிருக்கின்றன.
அண்மைய காலத்தில் குர்திஸ்தான், கட்டலோனியா மாகாண மக்களின் தனிநாட்டு முடிவுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றாக இணைக்கப்பட்ட நாடுகள் பெரும்பாலும் அதிகாரத்தை உரிய வகையினில் பகிராமை காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்மானத்தை எடுக்கின்றன.
பாரபட்சம், அடக்கி ஒடுக்கும் போக்கு, இன அழித்தல் செயற்பாடு போன்றவையே பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட சூழலே இலங்கையின் நிலவரமும் ஆகும்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் முன்னர் தமிழர்கள் தமக்கான தனி இராட்சியங்களைக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு தமிழர்களின் பூர்வீக தயாகம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளடக்கப்படாத சில பகுதிகளும் தமிழ் இராட்சியமாகவே இருந்துள்ளன.
புத்தளம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம்வரை விரிந்த இராட்சியமாக காணப்பட்டுள்ளது. புத்தளத்தில் இன்று அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னேஸ்வரம் என்ற சிவாலயம் தமிழர்களின் வரலாற்றுக்கு முக்கியமான சான்று. பிரித்தானியர்கள் இலங்கையில் காணப்பட்ட பல்வேறு அரசுகளை ஒன்றினைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்கினர்.
இதன்போது வடக்கு கிழக்கில் தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தங்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து சிறுபான்மை மக்களாகவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர்.
இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பிந்தைய காலத்தில் இன ஒடுக்குமுறைகளையும் இன அழிப்புச் செயல்களையும் சந்திக்க நேரிட்டது.
வடக்கு கிழக்கில் தமிம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களின் தாயகத்தை அபகரித்து வரும் நிலையிலேயே தமிழர்கள் தம்மை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. அண்மைய காலத்தில் தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் தாயக வாழ்வையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக காய்களை நகர்த்தவே வடக்கு கிழக்கில் வலிந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ போன்ற இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து நின்று தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைப் புனிதப்படுத்திய பெரும்பான்மையின மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கின்றனராம்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று அரச அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் தாயகத்திற்காக எவ்வளவு இரத்தத்தை சிந்திவிட்டனர்? இவரது கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களின் கருத்தல்ல.
எனினும் தமிழ் மக்கள் இந்து அரசை அமைக்கப் போராடவில்லை. தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்ககவுமே ஈழ மக்கள் போராடினர். இன்றும் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர் ஒருவரே முதலமைச்சராக இருக்கிறார்.
தமிழ் பேசும் மக்களிடையே விட்டுக்கொடுப்பும் பரஸ்பரமும் அவசியமானவை. இலங்கை இஸ்லாமியர்கள் தமிழ் தாய் வழி உருவான தமிழ்ச் சமூகமே. தமிழ் தேசம் என்பது அவர்களுடைய தாயகமும்தான்.
சிங்களப் பேரினவாதிகள் அனைவரையும்தான் ஒடுக்கி ஆள்கிறார்கள். இந்த சூழலில் அனைவரும் இணைந்தே அரசியல் உரிமையை வெல்ல வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் சிங்களவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்களிடம் காணப்படுகின்றதாம்.
கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த மண்ணின் பூர்வீக மக்களின் எதிர்பார்ப்பையும் அபிலாசையையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவது எந்த அவகையில் நியாயமானது?
இன்னொரு விடயம் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருக்க அஞ்சுகிறார்களாம். அப்படியெனில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக இருக்க எவ்வளவு அஞ்சவேண்டும்? மாபெரும் இனப்படுகொலைகள், இன ஒடுக்குமுறைகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு அஞ்ச வேண்டும்?
அப்படிப் பார்த்தால் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்கள் காரணமாக தமிழீழத் தனிநாடு கோரி முன்னெடுத்த போராட்டம் மிகவும் நியாயமானது என்பதை இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா?
தவிரவும் வடக்கு - கிழக்கு இணைப்பை தென்னிலங்கை சிங்கள மக்களோ, சிங்கள இனவாதிகளோ, சிங்கள இனவாத அரசோ தீர்மானிக்க முடியாது. அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் பூர்வீக மக்களால் தீர்மானிக்கப்படவேன்டும்.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் வாழ வேன்டும் என்பதற்காகவே பல்வேறு தியாகங்கள் இந்த மண்னில் நிகழ்த்தப்பட்டது. பல லட்சம் மக்கள் தமது உயிரைக் கொடுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஒரு நாட்டுக்குள் தனித் தேசமாக தமிழ் மக்கள் வாழ்வதையும் உறுதிப்படுத்துவதும் வடக்கு கிழக்கிற்குள் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுடன் வாழ்வதையும் சட்ட ஆவண ரீதியாக உறுதிப்படுத்துவதுமே இதற்கு உகந்த வழி.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மெய்யான அக்கறையின்பால் எடுக்கப்படுவதில்லை. சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அரசியல் தீர்வு காண்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றன.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது இதனாலேயே. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.
இவ்வளவு கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிய பின்னரும் இப்பிரச்சினையை தீர்க்காமல் பெரும்பான்மையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்களும், நிகழ்வுகளுமே இலங்கைத் தீவில் நடக்கின்றன.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய சிறிலங்கா பாலி மொழி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,
“தமிழ் மக்களுக்கென தனிநாடொன்று இல்லாததே சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டைக் கோரும்படியும்” கூறியுள்ளார்.
ஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக செயற்படுபவரின் மனமும் போக்கும் இப்படி உள்ளது என்றால் இலங்கையில் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது? இவர் ஒரு கல்வியாளராகவின்றி பெளத்த சிங்கள கடும்போக்குவாதியாகவே உள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.
இவர் விக்கினேஸ்வரனை கடலில் தள்ளவேண்டும் என்று கூறுகிறார். விக்கினேஸ்வரனை தென்னிலங்கையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை.
இந்த நாடு முழுவதும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று கூறவில்லை. விமல் வீரவன்ச அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்றார்.
தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும், தமிழர்கள் தமது மண்ணில் உரிமையுடன் அமைதியாக வாழவேண்டும் என்றும் கூறும் விக்கினேஸ்வரனையும் சிங்கள பாராளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்று கூறும் விமல் வீரவன்சவையும் ஒப்பிடும் ஆளும் கட்சி உறுப்பினரது கருத்து மிக மிக பொறுப்பற்ற செயலாகும்.
அண்மையில் வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிந்து குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மையின மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கும் நிகழ்வை மைத்திரிபால சிறிசேனவும் வெற்றிகரமாக முன்னெடுப்பத்துடன் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையையும் பலரது கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அந்த ஆக்கிரமிப்பை சட்டமாக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டபோதும் கூட சுயாட்சிக்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் பேரினவாதிகள் எதிர்க்கின்றனர் என்பது இலங்கையின் யதார்த்த நிலமை உணர்த்தும் செய்திகள் ஏராளம்.
அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.
இந்த நாட்டில் ஒரு பிரிவினருக்கு முழு நாடும் சிங்கள பெளத்தம் மட்டுமே என கூற உரிமை இருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை இணைக்கைக் கோரும் உரிமை இருக்கிறது.
ஒரு சாராருக்கு ஒற்றையாட்சி என்று கூற உரிமை இருந்தால், அவர்களுக்கு சமஷ்டி எனக்கூறும் உரிமை இருக்கிறது. பெளத்த மதத்துக்கு மட்டுமே பிரதம இடம் வேண்டும் என இங்கே கூறும்போது, அங்கே அவர்களுக்கு மதச்சார்பற்ற நாட்டைக் கோரும் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும் இங்கே யாரும் நாட்டைப் பிரித்து தனி ஒரு நாட்டை அமைக்கக் கோர முடியாது. அல்லது தனது அரசியல் இலக்கை அடைய ஆயுதம் தூக்க முடியாது. அத்தகைய கருத்துகளை வடக்கிலும் சரி தெற்கிலும் சரி எவரும் கூற முடியாது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.
தனிநாடு குறித்த கோரிக்கை ஏன் எழுந்தது என்றும் வடக்கு கிழக்கு மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்தும் அமைச்சர் தெற்கிற்கு எடுத்துரைப்பதும் அவசியமானது. ஒருபுறம் புதிய அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றனர்.
மறுபுறம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கும் சுயாட்சியை வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். புதிய அரசியலமைப்பில் இவை உள்ளக்கப்படவில்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் சத்தியம் செய்த பின்னரும் எதிர்க்கின்றனர்.
ஆக எதனையுமே தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கம். மைத்திரிபால சிறிசேன அரசால் கொண்டு வரப்படும் இந்த யாப்பை அவரது அணியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் சில தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளால் அவை கிழித்தெறியப்பட்டது போன்றே தற்போதைய முயற்சிகள் அமையுமா? என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது.
இதைவிட இன்னொரு சந்தேகம் உள்ளது. அதாவது தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்குமா என்பதே அது. புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றை ஆட்சியே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏக்கிய இராச்சிய என்ற பெயரில் ஒற்ற ஆட்சியை இலங்கை அரசு பலப்படுத்தப் பார்க்கின்றது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்போ போதிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்குத் தரும் என்றும் அதனையே தாம் கோருவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார்.
அரசு தம்மால் வழங்கக்கூடியதைக் கூறுவதாகவும் தாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்களுக்குரிய தீர்வைத் தரவேண்டும்.
அதற்குமேல் தரமுடியாது. இதற்கு கீழ் தரமுடியாது என்றால் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுவதையும் அப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதையும் எதிர்ப்பவர்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடிப்படையானதாகும். இதுவே தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும்.
தமிழ் மக்கள் இதுவரை சந்தித்த கசப்பான இன வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அனுபவங்களை இனியும் சந்திக்காமல் இருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த குறைந்தபட்சத் தீர்வைக்கூட இலங்கை அரசு மறுத்தால் இந்தத் தீவில் சிறுபான்மை இனமாக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை சந்திக்க முடியாத தமிழ் மக்கள் தமிழீழத் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுக்க இலங்கை அரசே நிர்ப்பந்திக்கிறது என்பதையே இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனக் கூறும்வரையில் இத்தீவில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்கள் தம்மை தாமே தமது தாயகத்தில் ஆட்சி செய்த வரலாற்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொன்ட ஈழம் முழுவதும் பல்வேறு தொல்லியல் சான்றாதாரங்களை கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோருவது ஈழ மக்களின் உரிமை மாத்திரமல்ல தவிர்க்க முடியாத வழியும் இத்தீவின் பிரச்சினைக்கும் தீர்வுமாகும்.
-தீபச்செல்வன்...

No comments:

Post a Comment