Wednesday 31 January 2018

காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?

காதல் ஒன்றும் மோசமானதல்ல. காதலர்கள் நடந்துகொள்ளும் முறையால்தான் மற்றவர்கள் காதலை மோசமானதாக கருதி எதிர்க்கிறார்கள்.


காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?
நவீன கால காதலில் வன்முறையும், சதியும் அதிகம் காணப்படுகிறது. அதனால் பிள்ளைகள் காதலித்தாலே பெற்றோர்கள் பயந்துவிடுகிறார்கள். இன்றைய காதலர்களிடம் பொதுவாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியமும், சாதுரியமும் குறைந்துவிட்டது. அதனால் அவர்கள் ‘ரோமியோ-ஜூலியட்’, ‘அம்பிகாபதி-அமராவதி’ போன்ற ஜோடிகளை நினைவில் வைத்துக்கொண்டு ஓரளவு போராடிப்பார்த்துவிட்டு உயிரைவிடவும் தயாராகிவிடுகிறார்கள்.
‘ரோமியோ – ஜூலியட்டை நினைத்துக்கொண்டிருந்தால், காதல் ஒரு வெறித்தனமாக மாறிவிடும். காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டால் ‘ஒன்றாக சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. ஒன்றாக மாண்டுவிடலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட அது வகைசெய்துவிடும். அல்லது காதலர்களில் யாராவது ஒருவர் காலைவாரிவிட்டால், அவரை பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு வந்து விடக்கூடும். இவை இரண்டும் கிட்டத்தட்ட வன்முறை கலந்த உணர்வுதான்.
காதல் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியும். ஒவ்வொரு மனிதர்களும் காதலுக்காக படைக்கப்படவில்லை. வாழ்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் காதல் வந்து போகும் அவ்வளவுதான். பார்த்தவுடன் வருவது காதல் அல்ல. அது அந்தப் பருவத்தில் வருகின்ற ஒருவித ஈர்ப்பு. அதற்காக ஏன் உயிரை விடவேண்டும்.
பொழுது போக்குக்காகவோ, பணத்திற்காகவோ உருவாகும் காதல் எவ்வளவு காலம் நீடித்தாலும் அது நிஜமான காதல் ஆகாது. இதனால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவீர்கள். அதனால் அதனை போகிறவரை போகட்டும் என்று இழுத்துக்கொண்டே செல்லாதீர்கள். திடீரென்று அது உங்களையும் சேர்த்து இழுத்துச் சென்றுவிடும்.


அதனால் அந்த காதலை துண்டித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கவேண்டியதுதான். அதுபோல் ஆழமாக காதலிக்கும் காதலன். ‘நமது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் நாம் சேர்ந்து இறந்துவிடலாம்’ என்று சொன்னால், அவர் அறிவிலி என்ற முடிவுக்கு வந்துவிடலாம். அவர் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்விக்கும் அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டுபவராக இருந்துவிடக்கூடும். அவரை நம்பி பலன்இல்லை.
பிரபலமான தொலைக்காட்சித் தொடர் இளம் நடிகை ஒருவர், உடன் நடித்துக் கொண்டிருந்த இளைஞரை காதலித்தார். ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்கும் போதும் இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு காதலித்தார்கள். அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் நடித்துக்கொண்டிருந்த தொடர் முடிவுக்கு வந்தது. நடிகை இன்னொரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதேபோன்று அந்த இளைஞரும் வேறு ஒரு தொடரில் நடிக்கச் சென்றுவிட்டார். இருவரும் சந்தித்துக் கொள்வது தடைபட்டது. பேசிக் கொள்வதும் குறைந்து போனது.
இந்த காலகட்டத்தில் இன்னொரு மாற்றம் நிகழ்ந்தது. புது தொடரில் நடித்துக்கொண்டிருந்த நடிகைக்கும், அந்த இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அதனால் பழைய காதலியோடு பேசுவது நின்று போனது. விஷயம் அறிந்த அந்த நடிகை மனமுடைந்தார். பழைய கலகலப்பு அவரிடம் இருந்து காணாமல் போனது. வீட்டிலும் சரி… ஷூட்டிங்கிலும் சரி விரக்தியாக காணப்பட்டார்.
எல்லோரிடமும் வெறுப்பை உமிழ்ந்தார். சோகம் தந்த வேதனையில் ஏதேதோ செய்யத் தொடங்கினார். உடனிருந்தவர்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நடிகையால் இயல்புக்கு திரும்பமுடியவில்லை. இந்த நிலை நீடித்தால் தொடரில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என்று தயாரிப்பாளர் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காதல் தந்த தோல்வியால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான அவர், எடுக்கக்கூடாத முடிவினை எடுத்துவிட்டார். மிக அற்புதமான வாழ்க்கையை அவர் வீணாக்கி விட்டார். இளமை, அழகு, புகழ், பணம் எதையும் அவரால் அனுபவிக்கமுடியாமல் போனது.
காதல்தான் உலகம். அதுவே மிகசிறந்தது என்ற முடிவுக்கு யாரும் வரவேண்டியதில்லை. அதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தால் பிரிவு வரும்போது மனது உடைந்துபோகும். அந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கவேண்டியதிருக்கும். இதனால் தன் குடும்பத்திற்கும், உடனிருக்கும் உறவினர் களுக்கும் மனவருத்தம் ஏற்படும். உங்கள் காதல் தோல்விக்காக குடும்பத்தினர் மனதை நோகடிப்பது சரியான செயல் இல்லை. குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய வைப்பதுதான் உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும். கவலையடையவைப்பது உங்கள் நோக்கமாக இருக்கக்கூடாது. காதல் வாழ வழிசெய்யவேண்டும். சாக வழி காட்டக்கூடாது.
காதலிக்கும்போது அறிவாளியாக இருப்பவர்கள், காதல் தோல்வி அடையும்போது ஏன் அறிவற்றவர்களாக மாறவேண்டும். மனித வாழ்க்கையில் எல்லாவற்றிலும் வெற்றி-தோல்வி உண்டு. அப்படியிருக்கும்போது காதல் மட்டும் எப்படி தோல்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதிலும் தோல்வி உண்டு. அதில் துவண்டுபோகாத அளவுக்குத்தான் மனித இயல்பு இருக்கவேண்டும்.
காதல் ஒன்றும் மோசமானதல்ல. காதலர்கள் நடந்துகொள்ளும் முறையால்தான் மற்றவர்கள் காதலை மோசமானதாக கருதி எதிர்க்கிறார்கள். காதலரில் ஒருவர் பிரியும்போது இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டால், அது காதலுக்கு களங்கம். அந்த களங்கம் பெற்றோர் மனதில் நிலைத்துவிடும்போது, தங்கள் பிள்ளைகள் காதலித்தால் எதிர்ப்பார்கள். ஏன்என்றால் அவர்களது காதல் தோற்றுவிட்டால், அவர்களும் அதுபோன்ற கொடிய முடிவை எடுத்துவிடுவார்களே என்று பயப்படுவார்கள்.
காதலர்கள் தங்கள் காதலை ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். உடல் கவர்ச்சி, ஈர்ப்பு, பணம் சார்ந்த விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, காதல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தங்கள் காதல் சுயநல மற்றதாக இருக்கிறதா? புத்திசாலித்தனமாக இருக்கிறதா? இருவரது நோக்கமும் எப்படி இருக்கிறது? அந்த காதலால் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு வருமா? என்றெல்லாம் பல வழிகளில் சிந்தித்து பார்க்கவேண்டும். எப்போது அந்த காதல், ‘தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்கும்’ என்று கருதுகிறீர்களோ அப்போதே அதை புரியவைத்து, அதில் இருந்து விலகிக்கொள்ள முன்வரவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு விலகும் பக்குவம் இல்லாதவர்கள் காதலிக்கக்கூடாது. அந்த நேரத்தை வேறு ஏதாவது நல்ல சேவைக்கு பயன்படுத்தலாம்.
முதல் காதலிலேயே வாழ்க்கை முடிந்துபோய்விடாது என்பதை காதலிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். காதலில் எந்த நேரத்திலும் இடர்வரலாம். அப்போது இருவரில் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் இருவருமே மிகக் கவனமாக இருக்கவேண்டும். காதலிக்கும்போது பழகியது, பேசியது எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவில் வரத்தான் செய்யும். மனதை வாட்டத்தான் செய்யும். உடனே அதனை மறக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் மறந்துவிட முடியும் என்பது அதைவிட பெரிய உண்மை. அந்த உண்மையை உணர பொறுமையும், நிதானமும், குடும்பத்தினரின் மீதான அக்கறையும் மிக அவசியம்.

Thursday 11 January 2018

பட்டுப் பாதையா... படையெடுக்கும் பாதையா? சீனா விரித்த வலையில் இலங்கை வீழ்ந்தது எப்படி?

ஒரே ஒரு பாதையை உருவாக்குவதன்மூலம், ஒரு தேசம் உலகின் வல்லரசு ஆகிவிட முடியுமா? ஜின்பிங் தலைமையிலான சீன அரசு அப்படித்தான் நம்புகிறது.



கூடவே அந்தப் பாதையை பாகிஸ்தான் மற்றும் இலங்கை துறைமுகங்களுடன் இணைப்பதன் மூலம் இந்தியாவின் புழக்கடைக்கே வந்து நின்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
அருணாச்சல பிரதேசம் உள்பட ஏற்கெனவே சீனாவுடன் இந்தியாவுக்கு இருந்து வரும் எல்லைத் தகராறு உள்ளிட்ட தாவாக்களின் உச்சமாக டோக்லாம் பிரச்னை, கடந்த ஆண்டு ஜூலையில் வெடித்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற அளவுக்கு நிலைமை மோசமானதையும், இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
அதே சமயம், சீனா இப்போதைக்கு அமைதியாக பின்வாங்கினாலும், டோக்லாமிலோ அல்லது அருணாச்சலப் பிரதேசத்திலோ மீண்டும் தனது அத்துமீறலைத் தொடரக்கூடும் என்றும், அது சீனாவின் குணாதிசயங்களில் ஒன்றாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
நாம் சொன்னபடியே கடந்தவாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட நிலையில், இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்புக் காரணமாக பின்வாங்கினர்.
இத்தகைய சூழலில்தான் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் விதமாக, சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ பொருளாதார வழித்தட திட்டம் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமாக இலங்கையின் அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதைவிட திட்டமிட்டு கைப்பற்றிவிட்டது சீனா என்றே சொல்லலாம்.
ஏனெனில் இந்த அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கைகளுக்குச் சென்றதன் மூலம் இந்தியக் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சீனா வசமான அம்பாந்தோட்டை துறைமுகம்
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு சீனாவிடம் பெருந்தொகையைக் கடனாக வாங்கி, கடந்த 2008-ம் ஆண்டு அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியது.
பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், எதிர்பார்த்தபடி வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடக்காததால், இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது.
துறைமுகம் அமைத்ததில் சீனாவுக்கு 800 கோடி டாலர் கடன் பாக்கி இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயகே கடந்தாண்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்காக இலங்கை அரசு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு சீனா நெருக்கடி கொடுத்தது.
இலங்கையால் இந்தக் கடனை அவ்வளவு சுலபத்தில் திருப்பித் தர முடியாது என்று நன்கு தெரிந்தேதான் இலங்கைக்கு அவ்வளவு பெரிய தொகையை இலங்கைக்கு சீனா கடனாகக் கொடுத்தது. எதிர்பார்த்தபடியே அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை விழிப்பிதுங்கியது.
இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா சென்றபோது, கடன் தொகைக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவிகித பங்குகளைத் திருப்பித் தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
இதன் மூலம், துறைமுகத்தின் உரிமை இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்திடம் இருந்தாலும், அதன் மீதான முழு கட்டுப்பாடும் சீன நிறுவனங்களிடம் வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இதனையடுத்து சீன நிறுவனத்துக்கு அளித்த 80 சதவிகித பங்குகளை 70 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டது இலங்கை அரசு. இதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த 2017 டிசம்பர் 9-ம் தேதியன்று, சீனாவின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகச் சேவை நிறுவனங்களிடம் அந்தத் துறைமுகத்தை இலங்கைத் துறைமுகப் பொறுப்புக் கழகம் முறைப்படி ஒப்படைத்தது.
இதையடுத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக மண்டலங்கள் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.
இந்த நடவடிக்கை மூலம், துறைமுகத்துக்காக வாங்கிய கடனை சீனாவுக்குத் திருப்பியளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அந்தத் துறைமுகத்தால் பொருளாதார மேம்பாடும், சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பு...
ஆனால், மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக அம்பாந்தோட்டையையொட்டியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும், வெளியேற்றப்படுபவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்றும் தகவல் வெளியானதால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர்.
இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலைக்கிடையே, இம்மாதம் 7-ம் தேதியன்று அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமர் ரணில் உரையாற்றுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புத்த பிக்குகளையும் கிராம மக்களையும் அரசு ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
போராட்டத்தின்போது, அம்பாந்தோட்டைப் பிரதேசத்தை சீனக் காலனியாக மாற்றுவதற்காக தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த மோதலுக்கு இடையே, திட்டமிட்டபடி இந்த முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிலங்கள் மட்டுமே இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படுமென்றும், இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக தென் மாகாணத்தில் 1235 ஏக்கர் நிலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் வீடுகள் மற்றும் புத்த விஹாரைகள் உடைக்கப்பட மாட்டாதென்றும் கூறினார்.
ஆனாலும் பிரதமரின் வாக்குறுதி எந்த அளவுக்கு உண்மை என்பது வரும் நாள்களில் நிலம் கையகப்படுத்தப்படும்போது தெரியவரும்.
பட்டுப் பாதையா... படையெடுக்கும் பாதையா?
அம்பாந்தோட்ட துறைமுகம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில், புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியில் சீனா தற்போது ஈடுபட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலை நோக்கியபடி அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் புதிய பட்டுப் பாதை திட்டத்துக்கு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைவிட சீனா அந்தத் துறைமுகத்தைத் தனது கடற்படைத்தளமாகப் பயன்படுத்தக்கூடும் என்று இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டபோதிலும், அப்படியெல்லாம் அமையவிட மாட்டோம் என்று இலங்கை அரசு மறுக்கிறது.
ஆனால், இந்திய எல்லைப் பகுதிகள், டோக்லாம் போன்ற பகுதிகளில் சீனா மேற்கொண்ட அத்துமீறல், திபெத், ஹாங்காங், தென்சீனக் கடல் போன்ற இடங்களில் சீனா நடந்துகொண்ட விதம் போன்றவற்றை அறிந்த யாரும், எதிர்காலத்தில் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கடற்படைத்தளத்தை அமைக்காது என உறுதியாகச் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே மோதல்போக்கு வெடித்த சூழ்நிலையில், தனது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது சீனா. இது, அப்போது இந்தியாவுக்கு சீனா விடுத்த மறைமுக மிரட்டலாகவே கருதப்பட்டது.
அதே சமயம் அந்தத் துறைமுகம் வர்த்தகப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சீனா கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஆனால், " இலங்கை அவ்வாறு அனுமதிக்க மாட்டோம் என மறுத்தாலும், சீனாவின் முதலீடும், அதன் மூலமாகக் கிடைக்கும் வளர்ச்சியும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது.
இலங்கை இனி தன்னை மட்டுமே நம்பி வளர்ச்சியை எட்டிப் பிடிக்க முடியாது. அதற்குப் பொருளாதார சீர்திருத்தமும், அந்நிய முதலீட்டைத் தாராளமாக திறந்துவிடுவதற்கான கொள்கை மாற்றமும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் இலங்கைக்குத் தேவையாக உள்ளது.
தற்போதைய சீன முதலீடு மூலம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ஷென்சென் பொருளாதார வலயத்தைப் போன்று நல்ல வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது.
ஆனால், அதற்கான விலையைக் கொடுக்கவும் அது தயாராகவே இருக்க வேண்டும். உலக வல்லரசாகப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் சீனா, அங்கு கடற்படை தளம் அமைத்தால் அதனை எதிர்த்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது.
கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்
அம்பாந்தோட்டை துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான செலவு இலங்கையைச் சேர்ந்ததுதான் என்றாலும் அத்திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் சீன நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் இத்திட்டத்தின் பெரும்பாலான தொகை சீனாவுக்கே திரும்ப வந்துவிடும். மேலும் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள சுமார் 2000 ஏக்கர் நிலமும் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை சீனா நிச்சயம் அதனை தன் ராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளும். இதன்மூலம் இலங்கையின் இறையாண்மை மிகப்பெரிய கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
அதே சமயம் சீனாவின் இந்தக் கடன் கொடுத்து கவிழ்க்கும் திட்டத்தை 'கடனில் சிக்கவைக்கும் ராஜதந்திரம்' ( Debt Trap Diplomacy ) என்றும் சர்வதேசக் கொள்கை வகுப்பாளர்கள் கூறுவார்கள் " என்கிறார் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு நிபுணரும் பேராசிரியருமான கால்லின் ஹோ.
" இதுநாள் வரை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள்தாம் பல, ஏழை எளிய நாடுகளிடம் இந்தக் கடனில் சிக்க வைக்கும் கொள்கையைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் வளங்களைச் சூறையாடி வந்தன. தற்போது சீனா அந்தப் பாதையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
இப்போது வரை இந்தியாவை தனது நட்பு நாடாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கைதான் சீனா உடனான உறவை எந்த அளவுக்கு வளர்த்துக்கொள்வது, தனது பிரதேசத்தில் அதன் இருப்பை எவ்வளவு அனுமதிப்பது என்பதை தனது நாட்டு மக்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
அதே சமயம், இலங்கையில் இனி சீனாவின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது" என்கிறார் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன்.
ஆக மொத்தத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால்பதித்ததன் மூலம் சீனா, இந்தியாவின் புழக்கடையில் வந்து குத்தவைத்து அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால், நிலப்பகுதி வழியாக இந்தியாவை இதுவரை சீண்டிக்கொண்டிருந்த சீனா, இனிமேல் கடல் மார்க்கமாகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
எனவே, சீனாவின் சீண்டல்களை ராணுவ ரீதியாகவும் ராஜ்ஜிய ரீதியாகவும் எதிர்கொள்ள இந்தியா தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதான்.
அது என்ன பட்டுப் பாதை பொருளாதார வழித்தட திட்டம்?
உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அது சீனாவில் தயாரான பொருள்களால் நிரம்பி வழியும். ஆனாலும், சீனாவுக்கு இது போதவில்லை.
சுமார் 55 பில்லியன் டாலர்கள் மதிப்பில், பாகிஸ்தானுடன் இணைந்து சீனா -பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC - China-Pakistan economic corridor) என்ற திட்டத்தை மேற்கொண்டுவருகிறது சீனா. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கியிருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ' ஒரு சூழல் - ஒரு பாதை' என்ற திட்டம். பண்டைக்காலத்தில் ・பட்டுப்பாதை・என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், புதிய பட்டுப் பாதை・(New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம்.
இது தொடர்பான மாநாட்டை, பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு மே 14, 15 தேதிகளில் சீனா நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இதுதவிர அமெரிக்கா உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை செல்வது பிரச்னைக்குரிய வழியில்! பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதை செல்கிறது.
நமக்குச் சொந்தமான ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்க, அந்த நாட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு சீனா சாலை அமைக்கிறது. இதில் எப்படி இந்தியா பங்கேற்க முடியும்?
ஆனால், எப்படியாவது இந்தியாவைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தத் திட்டத்தால் உலகளாவிய அளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால் ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதிருப்தியில் உள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பும் புறக்கணிப்பும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதை சீனா, பாகிஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலேயே வெளிப்படுத்தினர்.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின் பிங், “இது இந்த நூற்றாண்டின் முக்கியமான திட்டம். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும்’’ என்றார். ஆனால் சீனாவின் இந்தத் திட்டம் அதன் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாகவே உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.


vikatan