Saturday 17 February 2018

காவிரி பிரச்சினைக்குக் காரணம் இதுதான்..

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி என்னும் இடத்தில் தோன்றி ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக வந்து தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 765 கிலோமீட்டர் பயணிக்கிறது, காவிரி ஆறு.




ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

இரு மாநிலங்களின் பல மாவட்டங்கள் பயிர் பாசனத்துக்காக காவிரியை மட்டுமே நம்பி உள்ளன. எனவே, கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சை, நதியின் பயணத்தை போலவே பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.

1892-ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில், அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானத்துக்கு இடையே காவிரியில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து பரஸ்பரம் வாதங்களும், பிரதிவாதங்களும் எழுந்தன.

1910-ம் ஆண்டில் சென்னை மாகாணம் மற்றும் மைசூரு சமஸ்தானம் இரண்டும் தங்கள் பிரதேசத்தில் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளும் வகையில் அணைகள் கட்டி, எப்படி வடிவம் கொடுப்பது என்று திட்டமிட்டு வந்தன.



இதுகுறித்து இரு தரப்பிலும் பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டாத நிலையில் ஆங்கிலேய அரசு தலையிட்டு 1924-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும், மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மைசூரு சமஸ்தான பகுதியில் கிருஷ்ணசாகர் அணையை கட்டுவது என்றும், அதில் இருந்து இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்து கொள்வது என்றும் பங்கீடு தொடர்பான ஒரு பட்டியலும் உருவாக்கப்பட்டது.

1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் சென்னை மாகாணமும், மைசூரு சமஸ்தானமும் காவிரியின் உபரிநீரை எவ்வாறு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் வரையறுக்கப்பட்டது. அதே நேரத்தில் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டுவதற்கு சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது.

ஒப்பந்தம் கையெழுத்தானபோது சென்னை மாகாணமும் தங்களுக்கு மேட்டூரில் அணையை கட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

1924-ம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னை மாகாணம் மற்றும் புதுச்சேரிக்கு உபரிநீரில் இருந்து 75 சதவீதமும், மைசூரு சமஸ்தானத்துக்கு 23 சதவீதமும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், மீதி தண்ணீர் கேரளாவுக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இரு மாகாணங்களும் தங்கள் பகுதியில் எவ்வளவு ஏக்கர் பயிரிட்டுக் கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, 1956-ம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் மறு உருவாக்கத்துக்கு பிறகு கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் காவிரிநீர் பங்கீடு தொடர்பான சர்ச்சைகள் வலுத்தன.

சர்ச்சையை தொடர்ந்து எழுந்த போராட்டங்கள் வன்முறையிலும் முடிந்தன.

1924-ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு முடிவடைந்தது என்றும், 50 ஆண்டுகள் முடிவடைந்ததால் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்றும் கர்நாடகம் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பியது.

மேலும், காவிரி தங்கள் பிரதேசத்தில் உருவாகி பயணிப்பதால் எந்த ஒப்பந்தங்களும் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் கர்நாடகம் கூறியது.

இது தமிழ்நாட்டுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.

காவிரி நதிநீர் பாசனத்தை மட்டுமே பெருமளவில் நம்பி உள்ள தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1960-ம் ஆண்டில் இருந்து 1980-ம் ஆண்டுக்குள் கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே, ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணவதி ஆகிய அணைகளை கட்டியது.

இது கீழ்ப்படுகையில் உள்ள டெல்டா விவசாயிகளை பெருமளவில் பாதிக்கிறது என்று தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

இதன்பிறகு வழக்குகள், மேல்முறையீடு என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்புடன் பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.