Friday 30 March 2018

ஒரு பெண் போராளியின் கதை

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார்.


ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது.
இந்த யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்படும் வரை தொடர்ந்தது. இந்த யுத்தத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் காவுகொள்ளப்பட்டனர். பிரபாகரனும் அவரது போராளிகளும் சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.
பருத்தித்துறையிலுள்ள ஒரு சிறிய கரையோரக் கிராமம் ஒன்றில் பனைமரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த காயத்திரி, தலைமுடி குறுகியதாக வெட்டப்பட்டு புலிகள் அமைப்பின் சீருடை அணிந்தவாறு இருந்த தனது பழைய ஒளிப்படம் ஒன்றை தனது செல்பேசியில் காண்பித்தார்.
இன்று காயத்திரியின் தோற்றம் மிகவும் மாறிவிட்டது. அதாவது அவரது நகங்களில் பூச்சுப்பூசப்பட்டுள்ளதுடன், நீண்ட தலைமுடியும் வளர்ந்து காயத்திரி முற்றிலும் வெளித்தோற்றத்தில் மாறியிருந்தார்.
ஆனாலும் இவர் யுத்த களத்தில் போரில் ஈடுபட்ட போது முகத்தில் ஏற்பட்ட காயத்தின் வடு மட்டும் இன்னமும் ஆறாமல் உள்ளது. இது அவரது பழைய வாழ்வு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
‘புலிகள் அமைப்பிலிருந்த ஏழு ஆண்டுகால எனது வாழ்வானது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என காயத்திரி கூறினார்.
2002ல் காயத்திரி புலிகள் அமைப்பில் இணைந்த போது இவர் தமிழீழ நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தத்தில் மட்டும் பங்குகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. அத்துடன் ஆண்களுடன் சமாந்தரமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகத்தின் பாரம்பரிய நெறிமுறைகளில், பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே பிரதானமாக ஆற்றவேண்டும் என்கின்ற முறைமை காணப்பட்டது.
அத்துடன் தமிழ்ப் பெண்கள், வயதுபோனவர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் நடக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டனர்.
காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் மூலம் அவர் தனது சமூகத்தில் பெண் என்ற வகையில் செய்ய முடியாத பல செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பெண் போராளியான காயத்திரி பல பாரிய யுத்தங்களில் பங்கெடுத்தார்.
அத்துடன் சாதாரண போராளியாக இருந்த இவர் பின்னர் தன் சக ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் ஒரு போராளியாக உயர் நிலையை எட்டியிருந்தார்.
‘புலிகள் அமைப்பில் சமத்துவம் பேணப்பட்டது. அதாவது அனைத்து பெண் போராளிகளும் ஆண் போராளிகள் செய்கின்ற அதே செயற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையிருந்தது. பெண் பயிற்சியாளர்களை ஆண் போராளிகள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் ‘நீ ஒரு பெண்’ எனக் கூறி எம்மை தம்மிலிருந்து வேறுபடுத்தவில்லை’ என காயத்திரி கூறினார்.
2009ல் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், காயத்திரியின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. இவர் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் ‘புனர்வாழ்வு முகாமில்’ தனது வாழ்வைக் கழித்தார்.
2009ல், சிறிலங்கா முழுவதும் 22 புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன.  நிலையான சமாதானம், புனர்வாழ்வு, சமூக ஒத்துழைப்பு மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குதல் போன்ற நோக்கத்திற்காகவே புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தால் புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்களில் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.
புனர்வாழ்வு மையத்தில் இருந்த போது காயத்திரி தையல், கேக் ஐசிங் பயிற்சிகளைப் பெற்றிருந்த போதிலும் போருக்குப் பின்னர் தனது வாழ்வை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தக் கூடிய அளவிற்கு இவர் போதியளவு தொழிற்பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. காயத்திரி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.
இவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதற்காகச் சென்றிருந்த போதிலும், இதற்காக வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு இவரால் தனியொரு பெண்ணாக வாடகைக் குடியிருப்பில் தங்கி வாழ்வதற்கான ஏதுநிலை காணப்படவில்லை. ஏனெனில் இவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனால் இவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பருத்தித்துறையிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி விட்டார்.
தனது பெற்றோர்களிடம் காயத்திரி திரும்பி வந்த பின்னர், இவருக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யுத்த காலப்பகுதியில், தமது மகள் ஒரு போராளி என காயத்திரியின் பெற்றோர்கள் பெருமையுற்றிருந்தனர்.
ஆனால் தற்போது காயத்திரி இந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு தவறாக புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதை நினைத்து இவரது பெற்றோர்கள் அவமானமடைகின்றனர். அத்துடன் காயத்திரியின் சகோதரர்கள் காயத்திரியை கட்டுப்படுத்துகிறார்கள்.
‘நீ ஆண்களுடன் கதைக்கக்கூடாது, ஆறு மணிக்குப் பின்னர் வெளியே செல்லக் கூடாது என எனது சகோதரர்கள் கூறுகின்றனர். இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டிற்குள் வாழ்வதென்பது மிகவும் கடினமானதாகும். எனக்கேற்றவாறு அவர்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் அவர்களுக்கு ஏற்றவாறு மாறவேண்டியுள்ளேன்’ என காயத்திரி கூறினார்.
காயத்திரியின் வாழ்வானது அவரைப் போன்ற முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு எவ்வாறுள்ளது என்பதைப் பிரதிபலிக்கின்றது. யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 3000 வரையான பெண் போராளிகள் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாக 2011ல் அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிலங்கா இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு தவறிவிட்டதாக முன்னாள் போராளிகள் மற்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘முன்னாள் போராளிகள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பது தெளிவாகும். இவர்கள் இராணுவத்திடம் சரணடையும் போது அல்லது இராணுவத்தால் கைது செய்யும் போது தமது வாழ்வை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையிலிருந்தனர்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.
முன்னாள் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த 46 வயதான அன்னலக்ஸ்மி 2002ல் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார். இவரது கணவரும் போராளியாகச் செயற்பட்டதுடன் 2009ல் இராணுவத்திடம் சரணடைந்து அவர்களது தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது இறந்தார்.
போரின் பின்னர், அன்னலக்ஸ்மி கோழி வளர்ப்பிற்காக தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கடன் பெற்று தனது தொழிலை ஆரம்பித்தார். ஆனால் மிருக வளர்ப்புத் தொடர்பாக இவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனால் கோழிக்குஞ்சுகள் இறக்கத் தொடங்கின. இதனால் இவர் தனது வருவாயைப் பெற முடியவில்லை.
‘புனர்வாழ்வு முகாங்களில் வாழ்ந்த போது இவர்களது நாட்கள் வீணாடிக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடிய தொழிற்பயிற்சிகளை இவர்கள் பெற்றிருக்கவில்லை’ என அலன் கீனன் தெரிவித்தார்.
‘பொருளாதாரம் சிதைவுற்ற நிலையை இவர்கள் சந்தித்ததுடன் முன்னாள் போராளிகள் என்கின்ற பெயரால் சமூகத்தில் பல்வேறு தடைகளையும் சுமைகளையும் இவர்கள் சுமக்க வேண்டிய நிலை காணப்படுகிறது’ என அலன் கீனன் தெரிவித்தார்.
சிறிலங்காவின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணமானது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது.
தனது கிராமத்தில் வாழும் மக்கள் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும், ஏனெனில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தான் அங்கிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி தனது பெற்றோர்களின் வீட்டிற்கு வருவதாலேயே மக்கள் தன்னுடன் கதைப்பதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும் காயத்திரி கூறினார். ‘நான் தொடர்ந்தும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவு செய்யப்படுகிறேன்’ என காயத்திரி கூறினார்.
காயத்திரி மற்றும் அன்னலக்ஸ்மியின் அனுபவங்கள் சாதாரணமானவையல்ல என அலன் கீனன் தெரிவித்தார்.
‘முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் சிறிலங்கா காவற்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு முன்னாள் போராளி ஒருவரை சந்தித்தால் நானும் காவற்துறையினரால் கண்காணிக்கப்படுவேன். இது எனக்கு இடையூறையே ஏற்படுத்தும்’ என கீனன் தெரிவித்தார்.
காயத்திரி என்னுடன் கதைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். இவர் புறப்படுவதற்கு முன்னர், தனது கடந்த காலம் மற்றும் தனது முகத்திலுள்ள வடு காரணமாக, தனது பெற்றோரால் தனக்கான கணவனை தேடிக்கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.
‘ஆனால் ஒரு நாள் எனக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். நான் அவர்களுக்கு எனது முகத்திலுள்ள வடுவைப் பற்றிக் கூறுவேன். அப்போது அவர்கள் தமது தாய் ஒரு போராளி என்பதை அறிந்து கொள்வார்கள்’ என காயத்திரி தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் – Martin Bader
வழிமூலம்    – News deeply
மொழியாக்கம் – நித்தியபாரதி

Wednesday 21 March 2018

பெரிதாகும் பேஸ்புக் தகவல் திருட்டு பிரச்சனை.. யார் இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.. என்ன நடந்தது?

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.



இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருக்கிறது.

சேனல் 4 கண்டுபிடித்தது


இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் வீடியோவில் இதை ஒப்புக்கொள்வது வெளியாகி உள்ளது.

யார் இவர்கள்


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது.

பேஸ்புக்கில் என்ன செய்தார்கள்


இவர்கள் பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு பேஸ்புக் பயனாளிகளையும் மயக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை, அவர்கள் திருடிய தகவலை வைத்து உருவாக்குகிறார்கள்.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்


இதுவரை மொத்தம் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளில் விவரங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். 50 மில்லியன் மக்களின் தகவலை வைத்து அவர்களை எப்படி எல்லாம் தேர்தலில் மாற்றி ஒட்டு போடா வைக்க முடியுமோ அப்படி எல்லாம் செயல்பட வைப்பார்கள். இதற்கு உலகின் டெக் ஜாம்பவான்கள் பணியாற்றியுள்ளார்கள்.



உங்கள் ஊர்


உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள், அதுவும் உங்களுக்கு பிடித்தது போல. மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள்.

அமெரிக்க தேர்தல் முடிவு


இதன் மூலம் ஒரு தலைவர் பற்றிய உங்கள் பார்வையை மாற்றி உங்களை வேறு ஒரு நபருக்கு ஒட்டு போட வைப்பார்கள். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் இப்படித்தான் வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அதேபோல் ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியே நடந்த வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் கோல்மால் வேலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.

எப்படி


பேஸ்புக் மூலம் மக்கள் மனதை மாற்றுவதோடு, பணம் கொடுத்து அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தலில் நேரடியாக மோசடி செய்ய அதிகாரிகளுக்கு நிறைய 'கமிஷன்' கொடுத்து இருக்கிறார்கள். விலைமாதுக்களை ஏற்பாடு செய்வது, லஞ்சம் கொடுப்பது, வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது, பதவி உயர்வு கொடுப்பது என பல வேலைகளை செய்து இருக்கிறார்கள்.

தகவல் திரட்டுவது எப்படி


இவர்கள் பேஸ்புக் கணக்கில் தகவல்களை திருடுவது மிகவும் சுவாரசியமான ஒன்று. பேஸ்புக்கில் சமயங்களில் சில விளையாட்டுகள் வைரல் ஆகும். அதை கிளிக் செய்தால் நமக்கு எப்போது திருமணம் நடக்கும், நமக்கு எப்போது மரணம் வரும், முன்ஜென்மத்தில் எப்படி இருந்தோம் என்று சொல்லும். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, நம்முடைய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் எடுத்துவிடும். இப்படித்தான் உலகம் முழுக்க 50 மில்லியன் கணக்குகளை அபேஸ் செய்து இருக்கிறார்கள்.

மாட்டிக்கொண்டார்


இலங்கையில் அடுத்து நடக்கும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறி இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சேனல் 4ல் வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் எடுத்த வீடியோதான் இப்போது வெளியாகி உள்ளது. வீடியோ வெளியான ஒரு வாரத்திற்கு முன்பே இதைப்பற்றிய கட்டுரை வெளியாகிவிட்டது.

பேஸ்புக் என்ன சொல்கிறது


இதுகுறித்து பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட இருக்கிறது. ஏனென்றால் இந்த நிகழ்வு மொத்தமும் பேஸ்புக்கிற்கு தெரிந்துதான் நடந்தது என்று கூறப்படுகிறது. மார்க் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை.


Sunday 18 March 2018

மூதேவி யார்?

இது என்ன கேள்வி மூதேவி என்பது ஒரு  தீயூழ் (Bad luck  ) அல்லது ஒரு வசைச்சொல் என்பதே பலரின் கருத்தாகவிருக்கும், ஆனால் உண்மையில் மூத்த தேவியே மருவி மூதேவியாக மாறியது என்பதும் இந்த மூத்த தேவியே ஒரு காலத்தில் தமிழர்களினதும் மற்றைய பழங்குடியினரதும் முக்கிய தெய்வம் என்பதுமே உண்மை.  மனிதர்கள் ஆதிகாலத்தில் தாய்வழிச் சமுதாயமாகவிருந்தபோது பெண் தெய்வ வழிபாடே முக்கியம் பெற்றிருந்தது. அந்தவகையில் தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக கொற்றவை எனும் பெண் தெய்வம் (சான்று- தொல்காப்பியம்) வழிபடப்பட்டுவந்தது.  “ முன்னோர் வழிபாடு”  மரபிற்கமைய கொற்றவை என்பது தனி ஒரு பெண்ணைக் குறிக்காமல் ஒவ்வொரு குலம் அல்லது இனக்குழுக்களிற்கும் வெவ்வேறான பெண் மூத்தோர்களையே குறிக்கும். இந்த வகையில் உருவான ஒரு பெண் தெய்வ வழிபாடே மூத்ததேவி (தவ்வை எனவும் அழைப்பர்) வழிபாடாகும்.

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி, தவ்வை, காக்கைக் கொடியோள் , பழையோள் உட்படப்  பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.  பெண்களின் கருவளத்தை அடிப்படையாகக்கொண்டு மழை வளத்தைப் பெறுவதற்கும் இத்தெய்வத்தை பழங்குடியினர் வணங்கிவந்தனர். பின்னர் ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சமண சமயத்திலும், பிறகு சாக்தத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.


மூத்ததேவி மூதேவியான கதை:::
  இவ்வாறு முக்கியமான ஒரு தெய்வமாகவிருந்த மூத்ததேவி வழிபாடு பார்ப்பனப்படையெடுப்புடன் நிலைகுலைந்து போனது.
பார்ப்பனர்கள் தமது வைதீக (இன்றைய இந்து) மதத்தைப் பரப்பும்போது தமது அக்கினி, இந்திரன், சோமன் போன்ற வேதகால கடவுள்களைப் பரப்ப முயன்று முதலில் தோல்வியுற்ற பின்பு பழங்குடிகளின் கடவுள்களை தமதாக்கினர் (எடுத்துக்காட்டு-முருகன்,  மாயன்).    தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியாத தெய்வங்களைப் புராண மூடநம்பிக்கைக் கதைகள் மூலம் இழிவுபடுத்திக் கேவலப்படுத்தினர்.   அந்தவகையில்  “மூதேவி” ஆக்கப்பட்ட பெண்தெய்வம்தான்  மூத்ததேவி.  இவ்வாறான பார்ப்பன புரட்டுகளிற்குப் பின்னரே   தேவி   போகூழ் (Bad luck ), வசைபாடல் என்பவற்றுடன் தொடர்புபட்டுப் போனாள்.    இத்தகைய புரட்டலிற்கு வழக்கம்போல உயர்சாதியினர் (?) இலகுவாகப்  பலியானபோதும், அடிமட்ட மக்கள் தமது தவ்வையினை (மூத்ததேவி) தொடர்ந்தும்  வழிபட்டேவந்தனர்.
    பல்லவர்களின் ஆட்சிகாலமான 8ம் நூற்றாண்டிலும் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார்.  பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச்  சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக்   குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார்.  பின்னர் பிற்காலச்  சோழர் காலத்தில் (பார்ப்பனர்களிற்கான பொற்காலத்தில்) தவ்வை வழிபாடு குறித்த ஒரு சாதியினரின்  (வண்ணார்களின்)  வழிபாடாக மட்டுமே சுருக்கப்பட்டது.   பொதுவாகவே தமிழரின் மரபுகளைச் சிதைக்கவேண்டுமாயின் அவற்றை குறித்த ஒரு சாதிக்கு மட்டுமென ஒதுக்கிவிடடுப்  பின்னர் குறித்த சாதியினருடன் சேர்த்து அந்த மரபுகளையும் இழிவுபடுத்திவிடுவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை (காட்டு- தமிழரின் தலையாய இசைக்கருவியான பறை).   இவ்வாறான பின்புலத்திலேயே வண்ணார்களின் தொழிலுடன் தொடர்புடைய கழுதையானது மூத்ததேவியின் வாகனமாக்கப்பட்டது.    இந்த வகையில் தவ்வை வழிபாடு குறித்த சாதியினரிடம்  தொடர்ந்து மாடன்- மாடத்தி வழிபாடாக (சுடலை மாடன், நல்ல மாடத்தி) நிலைத்திருக்கிறது.  அதேபோன்று பிற சாதியினர் மத்தியிலிருந்த மூத்ததேவி பார்வதிதேவியாகவும், ஐயனார் வழிபாட்டுடனும் உள்வாங்கப்பட்டது.
   பிற்காலச் சோழர் காலத்தில் பார்ப்பனியச் செல்வாக்குடன் சைவம் மூத்ததேவியினை வண்ணாரிற்கு மட்டுமே ஒதுக்கிவிட, வைணவமும் தன்பங்கிற்கு மூத்ததேவியினை சிதைக்கும் வேலையினைச் செய்தது.  திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில்  மூத்ததேவி செல்வம் தருபவளாகவே வழிபடப்பட்டாள்.  சமசுகிரதத்தில்  ஜேஷ்டா தேவி எனவும் அழைக்கப்பட்டாள்.  ஜேஷ்டா தேவி என்பதற்கு முதல்தேவி என்றொரு பொருளிருக்க அது இருட்டடிப்பச்செய்யப்பட்டு மற்றொரு பொருளான சேட்டை என்பது கற்பிக்கப்பட்டது.  சேட்டை /மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும்,  லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல பக்தர்களை  நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.
    ஈழத்தினைப் பொறுத்தவரையில் இந்த மூத்ததேவி வழிபாடானது வீரபத்திரர் வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என உய்த்துணரமுடியும், ஏனெனில் வீரபத்திரர் தொடர்புடைய புராணக்கதையும் வண்ணார் சாதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.   அதாவது வீரபத்திரர் சிவனை அவமதித்த  தட்சண் எனும் அசுரனைக் கொன்ற பாவத்திற்காக வீரபத்திரர் வழித்தோன்றல்கள் சிவபக்தர்களின் வண்ணம் தோய்த்தலை (வண்ணார் தொழில்) மேற்கொள்ளப் பணிக்கப்பட்டதாகச் செல்கிறது அந்தப் புராணக்கதை.
      இவளவு புனைவுகளிற்குப் பின்னர் கூட சில இடங்களில் மூத்ததேவி வழிபாடு தொடர்ந்து நடைபெற்றுவந்தது. (காட்டு-வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது, குளித்தலை கடம்பவனநாதர் கோயில்).  இந்த நிலையில் பார்ப்பனியம் தனது இறுதி ஆயுதமான கடவுள்களை குடும்பத்திற்குள் அடைக்கும் தந்திரோபாயத்தின்படி மூதேவி சனீசுவரனின் மனைவியாக்கப்பட்டாள்.  அதேவேளையில்  முதல்தேவியின் சமசுகிரத வடிவமான ஜேஷ்டா தேவி சில இடங்களில் வருணனின் மனைவியாகவும் கருதப்படுகிறாள். இவ்வாறு ஒருவரே வெவ்வேறு கடவுள்களிற்கு மனைவியாக்கப்படுவதற்குக்  காரணமுண்டு.   சங்க காலத்தில் மழைக்காக வழிபடப்பட்ட மூத்ததேவியினை இந்துமத மழைக்கடவுளான வர்ணதேவனுடன் இணைப்பதற்கு ஒரு கதையும், பின்னர் தாமே புனைந்த தீயூழிற்கு (Bad luck) பொருத்தமாக சனீசுவரனுடன் இணைத்து மற்றொரு கதையும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
கொடும்பாவியான பாவி (மூத்ததேவி):
இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது.  இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.   பார்ப்பனப் புனைவிற்கு உட்பட்ட ஒரு மூடநம்பிக்கையாக மழை வேண்டி கொடும்பாவி எரிக்கும் வழக்கம் தோன்றியது. இன்னொரு நம்பிக்கையாக கழுதைக்கும்  கழுதைக்கும் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் காணப்படுகிறது ( இங்கு மூத்ததேவியின் வாகனமாக்கப்பட்ட கழுதையினை நினைவிற்கொள்க). மழை வேண்டி கொடும்பாவி எரிக்கப்படும்போது பாடப்படும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
“கோடை மழை பெய்யாதோ
கொடும்பாவி எரியாளோ”
என்று பாடப்படும் பாடலில் குறிப்பிடப்படும்  பெண்பாலும், அங்கு எரிக்கப்படும் கொடும்பாவி உருவமும் மூத்ததேவியே.   பார்ப்பனத்தின் கெட்டித்தனமும், தமிழரின் முட்டாள்தனமும் இங்குதான் உள்ளது. எந்த தமிழர்கள் மூத்ததேவியினை மழை வேண்டி வழிபட்டார்களோ, அதே தமிழர்களைளைக்கொண்டு  மழை வேண்டி அதே மூத்ததேவியின் உருவப்பொம்மையினை கொடும்பாவியாக எரிக்க வைத்துவிட்டார்களே !

வி.இ.குகநாதன்

Saturday 17 March 2018

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா?
ஜூனியர் விகடனின் ஆழமான கட்டுரை!



(தமிழ்நாட்டை ஆள, வெறும் சினிமா கவர்ச்சியே போதுமானது என்று கருதி பேராசை கொண்டு முதல் அமைச்சராகி அரசை நடத்தவே ஆயத்தமான ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி யுள்ளது எப்படிப்பட்ட ஒரு கானல் நீர் வேட்டை என்று மிகத் தெளிவாக, பல்வேறு தகவல்கள், மறுக்க முடியாத வாதங்களை முன் எடுத்து வைத்துள்ளார் ஜூனியர் விகடன் (14.3.2018) ஆசிரியர் திருமாவேலன் அவர்கள்.
பிற ஏட்டிலிருந்து பல சிறந்த கட்டுரைகளையும் வெளியிடும் நாம் காலத்தாற் செய்துள்ள கருத்துத் தொண்டு இக்கட்டுரை என்று கருதியதால் வெளியிடுகிறோம். படித்துப் பயன்பெறுக.
- ஆசிரியர், விடுதலை)
எந்திரன் ரஜினி இப்போது எம்.ஜி.ஆர் ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர்., பக்தியைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.
“அரசியல்ல ஜெயிக்கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லேயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணின  வாழ்க்கை, நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்" என்று 2008இல், சொன்னார் ரஜினி. இதோ இப்போது ‘அவன்’ சொல்லி விட்டான் போல!


“எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில்  ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு, எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான ஆட்சி , மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் சொன்னதன் மூலமாக...
‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று முள்ளும் மலரும் படத்தில் கையை விரித்த ரஜினி - ஒரு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்‘ என்று ராஜாதி ராஜாவில் அலட்சியம் காட்டிய ரஜினி - கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு’ என்று முத்து படத்தில் லந்து காட்டிய ரஜினி - மொத்தப் பாடல்களையும் பொய்யாக்கி ‘பொன்மனச் செம்மல்’ ஆக முயல்கிறார்.
‘எம்.ஜி.ஆர் எனக்குச் செய்த உதவிகள் என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் வெளியிட்ட நிகழ்வுகள் பலருக்கும் புதியவை. அதே எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத் தில் நடந்த சில சம்பவங்களை ரஜினி சொல்ல வில்லை. காலம் மறந்திருக்கும், நாமும் மறப்போம்‘ என்று நினைத்திருக்கலாம்.
இப்போது மாதிரி அல்ல, அப்போது ரஜினி. நிஜத்திலும் பாட்ஷா மாதிரி இருந்த காலம் அது. அவர் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மூக்குத்தி’ பத்திரிகை ஆசிரியர் ஜெயமணி ஒரு புகார் கொடுத்தார், என்னை ரஜினி மிரட்டினார்’ என்பது தான் புகார் , இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ் பெக்டர் பாஸ்டினும் இந்தப் புகாரை விசாரித்தார்கள். 1979ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப் பட்டார். ‘ஜெயமணி என்னைத் தாக்கி எழுதினார். காரில், போய்க்கொண்டு இருந்த நான், ரோட் டி ல் அ வரைப் பார்த்தேன். அதுபற்றிக் கேட்க விரும்பி காரைப் பின்பக்கமாகச்  செலுத்தினேன். அவர் செருப்பைக் கழற்றினார். நான்  அவரது சட்டை யைப் பிடித்தேன்’ என்று ரஜினி வாக்குமூலம் கொடுத்த தாக அன்றைய ‘மாலை முரசு’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்று கைது செய்யப்பட்ட, ரஜினி, உடனடியாக ஜாமீன் பெற்றார். இதேபோலத்தான் அய்தராபாத் விமான நிலையத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ரஜினி இப் போது எவ்வளவோ மாறிவிட்டார். அவரை மாற்றியது, அவர் இப்போது சொல்லி வரும் ஆன்மிகமாகவும் இருக்கலாம்!
ஆன்மிகமும் அவரிடம் பிற்காலத்தில் சேர்ந்ததுதான். ரஜினி - லதா திருமணம் திருப்பதியில் (1981 பிப்ரவரி 26) மிகமிக எளிமையாக நடந்தது. அந்த திருமணத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தான் ரஜினி அழைத் திருந்தார். திருப்பதி கிளம்பிச் செல்வதற்கு முன்னதாக நிருபர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ரஜினி. ‘நீங்கள் யாரும் வர வேண்டாம்‘ என்று  கேட்டுக் கொண்டார். அப்போது, சிறு வயது முதல் எனக்குச் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. திருமணம் என்றால் பல மணி நேரம் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை நம்பவில்லை. என்ன செய்தாலும் தாலி கட்டுவது, மாலை மாற்றுவது எல்லாம் இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். திருமணத்தில் முக்கியமான சடங்கே இதுதான். இது என் கல்யாணத்திலும் உண்டு. சிக்கனமாகக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் போதும் என்று சொன்னார். சடங்கு, சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லாத ரஜினிதான், இன்று ஆன்மிக அரசியலுக்குத் தேர் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
“ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படை யான சாதி மதச் சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன் மிக அரசியல். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன் களும் ஒன்று தான். அனைத்துமே பரமாத்மா. இறைநம் பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல் என்று ரஜினி சொல்லியிருப்பது எம்.ஜி.ஆர் சொன்ன ‘அண்ணாயிச‘த்தை விட அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது.
ரஜினி சொல்லும் உண்மை, நேர்மை, அறவழி, தூய்மை ஆகியவைதான் அரசியலுக்கே அடிப்படை யானவை . இவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் , எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் கூடுதலாக ஒரு வார்த்தையைச் சொல்கிறார்.  ரஜினி. அதாவது, ‘இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல்’ என்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஒரு நாளைக்கு ஆறு தடவை இறைவழிபாடு செய்யக் கூடியவர். சிறீவில்லி புத்தூர் ஆண்டாளின் பக்தர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பக்தி நாடு அறியும். அண்ணாவும் கருணாநிதியும் மட்டும் தான் நாத்திகர்கள். இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழுத்த ஆன்மிக வாதி. இன்னும் கட்டப்படாத கோயில் தவிர அனைத்துக்கும் சென்று வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இதில் என்ன புதிதாகச் சொல்லவருகிறார் ரஜினி?
அவர் சொல்லாமல் விட்டது, பி.ஜே.பி-யின் முதல மைச்சர் வேட்பாளர் தான்தான் என்பதை. ‘நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்‘ என்றால், யாரோடு சேர்ந்து? பி.ஜே.பி - தான் அவரது வருகைக் காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது. அந்தப் பாதையை முன்கூட்டியே அறிவிப்பது தனக்கு நல்ல தல்ல என்று ரஜினி நினைப்பது மட்டுமல்ல, ‘தனக்கும் நல்லதல்ல’ என்று பி.ஜே.பி நினைக்கிறது. க்ளை மாக்ஸ் நேரத்தில் அந்த மர்மம் வெளிப்படும். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதால், முன் கூட்டியே சொல்லப்படுவது தான் ஆன்மிக அரசியல் என்ற முழக்கம்.
பொதுவாகவே மத்திய அரசோடு நட்பில் இருப்பார் ரஜினி. அது எந்த மத்திய அரசாக இருந்தாலும், பகைத்துக் கொள்ள மாட்டார். 1986-ல் ராஜீவ் காந்தி மிகச் சிறந்த அரசியல்வாதி’ என்று பேட்டி அளித்தவர் அவர். அதன் பிறகு 1990-களில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவைச் சென்று சந்தித்தவர். பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்கள். இன்றைய பிரதமர் மோடி, அவரது வீட்டுக்கே வந்துள்ளார். சிஸ்டம் சரியில்லை’, ‘அரசியல் வெற்றிடம்‘ என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ள ரஜினி, மத்திய சிஸ்டம் பற்றி வாய் திறப்பது இல்லை. பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்க்கட்சி அந்தஸ்து வெற்றிடம் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை.
இப்போது தமிழ்நாட்டைக் குறிவைக்கும் காரணத்தை அவரே சொல்லிவிட்டார்... “ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால்தான் நான் வருகிறேன்" என்று. அதற்காகத்தான் ரஜினி, ரஜினியாக இல்லாமல் பி.ஜே.பி. ஆசைப்படி எம்.ஜி.ஆராக வருகிறார்.
இரட்டை இலையை வைத்திருந்தாலு ம் எடப்பாடியோ பன்னீரோ எம்.ஜி.ஆரின் வாக்குகளை அள்ள முடியாது என்பதை பி.ஜே.பி தலைமை உணர்ந்துள்ளது. அதனால் தான் எந்த  வேஷம் போட்டாலும் பொருந்தக் கூடிய சூப்பர் ஸ்டாரை அழைத்து வருகிறார்கள். சொந்த முகமாக இல்லாமல் இரவல் முகமாக இருப்பதுதான் இடிக்கிறது. ஏனென்றால், பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்களை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை அழைத்து வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதுசு அல்ல. அதில் நின்று நிலைத்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருமில்லை. 1984-1989 காலகட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது நடக்கிறது. 'பாக்யராஜ் என் வாரிசு' என்று எம்.ஜி.ஆர். அறிவித்ததும், தி.மு.க.வில் டி.ராஜேந்தர் சேர்ந்ததும் ஒரே ஆண்டில்தான் நடந்தது. அதே ஆண்டில்தான் தீவிரமாக அதிமுகவில் செயல்படத் தொடங்கினார் ஜெயலலிதா. “எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்ற ரசிகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்” என வெளிப்படை யாகவே சில்க் பேட்டி அளித்தார். காக்கி சட்டை பட வெற்றி விழாவை மதுரையில் நடத்த கமல் வெளியில் கிளம்பினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சிவாஜி விலகினார். தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கினார். ஜானகியும் அரசியலுக்கு வந்தார். முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவை சந்தித்து ராமராஜன், அதிமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபோலவே இப்போது நடக்கிறது... ரஜினி, கமல் என்று.
ரஜினியைச் சூழ்நிலையும் நெருக்கடியும் சேர்ந்து உள்ளே தள்ளி விடுகின்றன. நெருக்கடி என்பது ஏற் கெனவே சொன்ன  பி.ஜே.பி நெருக்கடிகள் . சூழ்நிலை என்பது கமல் உருவாக்கியது. அவர்கள் இருவரும் நண்பர் களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களைச் சமூகம் நண்பர்களாகப் பார்க்கவில்லை. இருக்க விடுவதும் இல்லை; விடப்போவதும் இல்லை. திரையில் இருந்த போட்டி இதோ அரசியலிலும். ‘ரஜினி வந்து விடுவார்’ என்பதே கமலின் அவசரத்துக்கான தூண்டுதல். ‘கமலே வந்து விட்டாரே’ என்பது தான் ரஜினியின் வேகத்துக்கான தூண்டுதல். இதற்கு மேலும் வராமல் இருந்தால், பயந்து விட்டேன் என்பார்கள் என்று சொல்கிறாராம் ரஜினி. அவரது பயத்தை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.
1986ஆம் ஆண்டு ஓர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ரஜினி. சினிமாவில் நடிப்பதை விட கண்டக்டர் வாழ்க்கைதான் தனக்கு  அதிகம் பிடித்தது என்று ரஜினி அப்போது சொன்னார். “நீங்கள் சினிமா துறையில் நீண்ட நாள் நிலைத்து நிற்க விரும்பவில்லையா? என்று கேட்டபோது, நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா? என்று கேட்டபோது ரஜினி மறுத்தார்.
“அரசியலா? அது ஒரு குப்பைமேடு. நெருப்பில் குதிப் பதற்குச் சமமானது. என்னை ஒரு அரசியல்வாதியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டு ஓர் அதிர்ச்சி தரும் வாசகத்தைச் சொன்னார் ரஜினி. அதை அவரால் மட்டும்தான் திருப்பிச் சொல்ல முடியும்!

சீன அதிபராக ஜி ஜிங்பிங் ஒருமனதாக மீண்டும் தேர்வு! ஊழல் ஒழிப்பு சூறாவளி வாங் குயிஷான் துணை அதிபர்

பீஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜிங்பிங் மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்வு நடைமுறையில் அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்.



சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஜி ஜிங்பிங் அதிபராக உள்ளார். சீனாவில் ஒரே நபர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என சட்டம் இருந்தது.
இந்த நிலையில், அதிபர் பதவி என இருக்கும் கால அளவை ரத்து செய்யும்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கோரிக்கை வைத்ததையடுத்து, கட்சியின் உயர்மட்ட குழு கூடி அதை ஏற்று கொண்டது. இததொடர்ந்து, அதிபர் பதவிக்கு காலவரையரையை ரத்து செய்யும் முடிவுக்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது

அதிபர் பதவியில் தொடருவார்

எனவே, ஜி ஜிங்பிங், 2023க்கு பின்னும் தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர முடியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று முறைப்படி மீண்டும் சீன அதிபராக ஜி ஜிங்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி தேர்ந்தெடுப்பு

தலைநகர் பீஜிங்கில் நடந்த கட்சி மாநாட்டில், இரண்டாவது முறையாக ஜி ஜிங்பிங் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 2,958 ஓட்டுகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. இந்த மாநாட்டில் துணை அதிபர் வேட்பாளராக வாங் குயிஷான் தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு மனதாக தேர்வு

இந்த நிலையில், சீன நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஜி ஜிங்பிங் அதிபராக மொத்தமுள்ள 2970 உறுப்பினர்களும் ஒருமித்து வாக்களித்தனர். எனவே ஒருமனதாக ஜி ஜிங்பிங் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் வாங் குயிஷானுக்கு எதிராக ஒரு உறுப்பினர் வாக்களித்தார், எனவே, அவருக்கு 2,969 வாக்குகள் கிடைத்தன.

ஊழல் ஒழிப்பாளர்

வாங் குயிஷான், அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு நெருக்கமானவர். 2017 வரை, சீனாவின் ஊழல் ஒழிப்பு துறையில் பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில், சுமார் 15 லட்சம் அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 100 அமைச்சர்களும் ஊழலுக்காக சிக்கி தண்டனை அனுபவித்தனர். சீனாவின் சமீபத்திய வரலாற்றில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை அதுவாகும். இந்த நிலையில்தான், லி யுவான்சாவுக்கு பதிலாக, வாங் குயிஷானை துணை அதிபராக உயர்த்தியுள்ளார் ஜி ஜிங்பிங்.

Wednesday 7 March 2018

முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல்,பேரினவாதத்தைப் பலப்படுத்தும் தமிழ் முஸ்லிம் தலைமைகள்

இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இலங்கை முழுவதும் கொதி நிலையிலிருக்கும் வன்முறையில் பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா முக்கிய பங்கு வகிக்கின்றது. வன்முறையில் மையப் புள்ளியில் பவுத்ததின் காவி உடைகள் தென்படுகின்றன.


முஸ்லீம்களின் பிறப்பு விகிதம் அதிகமாகிறது என்றும், அவர்களே இலங்கையின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் என்றும், இலங்கை இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் வன்னி இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதியில் பேரினவாதிகளால் பிரச்சாராம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எந்தவகையான ஆதாரமும் தெளிவான புள்ளிவிபரங்களுமற்ற திட்டமிட்ட இப்ப்பிரசாரம் இலங்கை முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான மனோ நிலையை ஏற்படுத்திற்று.
‘நல்லாட்சி’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பேரினவாதத்தின் மறு முகமான இன்றைய இலங்கை அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு புறத்தில் சிங்கள பவுத்தர்களையும் மறு புறத்தில் முஸ்லீம்களையும் போர் முனைக்குக் கொண்டுவந்து நிறுத்திய திட்டமிட்ட பிரச்சாரத்தின் பின்புலத்தில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும் அதன் தேவையை உணர்ந்த ஏகபோக நாடுகளும் செயற்பட்டன.
இஸ்லாமியர்களின் ஒரு சிறிய பகுதியினரை மத அடிப்படைவாதத்தை நோக்கி இழுத்துவந்த தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் ஏற்கனவே தனது வேர்களைப் பரப்பியிருந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் 2009 இற்குப் பின்னர் தம்மைப் பலப்படுத்திக்கொண்டன.
சவுதி அரேபியாவிலிருந்து லட்சங்கள் செலவில் ஈச்சை மரங்கள் தருவிக்கப்பட்டு ஏழை முஸ்லீம் குடியிருப்புகளைச் சுற்றி நட்டுவைக்கப்பட்டன. மசூதிகளில் சில இஸ்லாமிய தூய்மை வாதத்தைப் பிரச்சாரப்படுத்தின.
மத அடிப்படைவாதம் தமக்கும் தமது சமூகத்திற்கும் எதிரானது என்பதை அறியாத அப்பாவி இஸ்லாமியர்கள் மதவாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகினர்.
பவுத்த மத வெறியர்களின் தாக்குதல்கள் இஸ்லாமிய மத வெறியை மேலும் வேகத்துடன் வளர்த்தது.
கண்டியில் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் இஸ்லாமியர்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் தாக்கியழித்தனர். பல முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர். பவுத்த மதகுருக்களின் தலைமையில் சென்ற குழு ஒன்று இரண்டு மசூதிகளைத் தீமூட்டிக் கொழுத்தியது.
பவுத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவின் நெருங்கிய நண்பர் கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் சுதந்திரமாக உலா வரும் அதேவேளை வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன.
இலங்கை அரச அதிகாரவர்க்கம் சிங்கள பவுத்தத்தை அடிப்படையாக்கொண்டு கட்டமைக்கப்பட்டது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதும், இனக்குழுக்கள் மீதும் அதிகாரவர்க்கம் நடத்தும் தாக்குதலே அதன் இருப்பையும் பலத்தையும் உறுதிப்படுத்துகிறது.
இதன் மறுபக்கத்தில், தமிழ் இனவாதம், இஸ்லாமிய மதவாதம் என்பன தமக்குள் மோதிக்கொள்கின்றன.
இன்று இலங்கை அரசு பிறப்பித்திருக்கும் அவசரகால நிலைக்கான பிரகடனத்தை பலர் வரவேற்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட பவுத்த சிங்கள துறவிகளையும் குண்டபடைகளையும் இலங்கை அரசு கைது செய்திருப்பதைல் கண்டு வியந்து போகிறார்கள். ஆனால் இதுவெல்லாம் தற்காலிகமான தீர்வு என்பதை யாரும் கண்டுகொளவில்லை. இலங்கை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லீம் தமிழர்களின் தலைமைகள் தாம் எதோ சாதித்துவிட்டதாகக் கூறிக்கொள்கின்றன.
இது முழுமையக வெளித்தெரியும் உண்மையல்ல. இலங்கை அரசு பேரினவாதத்தையும், சிங்கள பவுத்த மேலாதிக்க வாதத்தையும் நிராகரிக்கிறது என்றால் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏன் நிராகரிக்கின்றது என்ற கேள்வியிலிருந்தெ இனிமேல் முஸ்லீம்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும்.
இன்றைய இலங்கை அரசு சிறுபான்மை இனங்கள் மீதான வன்முறையை நிராகரிக்கவில்லை. மாறாக இது சரியான சந்தர்ப்பம் இல்லை எனக் கருதுகிறது. இன்று நடத்தப்படும் தாக்குதல் மகிந்த அணிக்குப் பலம் சேர்த்துவிடும் என்பதால் அதன் எதிரணியிலிருக்கும் அரசு அஞ்சுகிறது. அதனால் தற்காலிகமாக வன்முறையைத் தடுக்க முற்படுகிறது. இதற்கு மேல் இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான உரிமையை உறுதிப்படுத்தத் தயாரில்லை என்பதே இங்கு காணக்கிடைக்கும் உண்மை.
இன்று  முஸ்லீம் தலைமகள் இன்னும் பேரினவாதத்தின் வால்களாகவே செயற்படுகின்றன. முஸ்லிம்களை ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான வடகிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுடன் இணைந்து அரசிற்கு எதிரான கூட்டிணைவை ஏற்பட்டுவிடாதவாறு பேரினவாதத்தைப் பாதுகாக்கின்றன.
இதன் மறுபக்கத்தில் தமிழ்த் தலைமைகள் வட கிழக்குத் தமிழர்கள் ஏனைய ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளுடன் இணைந்து போராட முடியாமல் தமது பெருமை பேசிக்கொள்கின்றன.
வடகிழக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்து முஸ்லிம் உழைக்கும் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டப்பட வேண்டும். அவர்களுக்காகவும் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே சந்தர்ப்பவாத முஸ்லிம் தமிழர்களின் தலைமை பலவீனப்படும். இதுவே பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும். இதன் தொடர்ச்சியாகப் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து தன்னாட்சிக்கான குரல் எழ வேண்டும். அவ்வாறான தன்னாட்சி மட்டுமே இலங்கைத் தீவை அழிவிலிருந்து மீட்பதற்கான பாதை.

Sunday 4 March 2018

சிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...!

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானையும், கிழக்கில் , வடக்கேதுருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம்.



சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும்சுன்னி முஸ்லிம்களாவர்,மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10%கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே, கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.

உலக போரின் தாக்கத்தால் சிரியா 1936இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. இருந்தும் 16 எப்ரல் 1946 ல் தான் முழுமையாக சுதந்திரம் பெற்றது.

1947 ‘ல் ஹிஸ்ப் அல் பாத் என்பவரால் பாத் கட்சி என்ற சோசியலிச கட்சி தொடங்க படுகிறது. பாத் என்றால் மறுமலர்ச்சி என்று பொருள். இந்த ஒற்றுமை, புரட்சி, சோசியலிசம் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. 1957’ல் நடந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது இந்த கட்சி. 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின.

1963 ‘ல் பாத் கட்சியினர் புதிய அரசை உருவாக்கினர்.



இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் 1967 ல் நடந்த யுத்தத்தில் சிரியா எகிப்துக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றியது. அதில் இஸ்ரேலின் பார்வை சிரியா மீது திரும்பி 48 மணி நேரத்தில் சிரியாவை வீழ்த்தியது இஸ்ரேல். இந்த தோல்வி அதிபர் ஜதீதுக்கும் இராணுவ தளபதி அஸ்ஸாதுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

அதன்பின் 1970ல் யாசர் அரஃபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், ஜோர்டானுக்கும் இடையே காஸா பகுதியால் ஏற்பட்ட பிரச்சனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இராணுவ தளபதியான ஹஃபீஸ் அஸ்ஸாத் படைகளை அனுப்பி இராணுவ உதவிகளையும் செய்தது ஜோர்னானின் மன்னர் ஹீசைன் தலைமையிலான படைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஹஃபீஸ் அஸ்ஸாத் பெரும் தலைவராக மாறினார் பின் தனக்கு இருந்த இராணுவ பலத்தை கொண்டு அதிபராக இருந்த ஜதீதிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் பின் நண்பரான ஜதீதையே கைது செய்து சிறையில் அடைத்தார்.

சிரியா 74 சதவீதம் சன்னி முஸ்லீம்கள் வாழும் நாடு. இந்த நாட்டில் பாத் கட்சியினரின் கொள்கை மற்றும் ஆட்சியதிகாரத்தை 1970களில் இருந்தே சிலர் எதிர்த்தே வந்துள்ளனர்.



சிரியா வரலாற்றில் அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்கள். உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, மெள்ள நரகமாக மாறி வருகிறது. பாதுகாக்க வேண்டிய அரசே பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது.அங்கே மனிதநேயம் முற்றிலும் மரணித்து போயிருக்கிறது. என்னதான் நடக்கிறது சிரியாவில்? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது? இவையெல்லாம் நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதன் வரலாற்றை அறிய வேண்டும்

மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள்.

அதில் ஒன்றுதான் இந்தச் சிரியா அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிரிவினை.சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், சிரியாவின் அரசினை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிடமுடியாது என்பதை புரிந்தகொண்டபின்னர், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்சு, துருக்கி, கத்தார் மற்றும் இன்னபிற முஜாகிதின் அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கின. அவர்களது ஆதரவுடன் செயல்படத்துவங்கிய “ஃபிரீ சிரியன் ஆர்மி” என்கிற தீவிரவாத அமைப்பு களத்தில் இறங்கியதும் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இயங்கிய அந்த அமைப்பாலும் சிரிய அரசை கவிழ்த்துவிடமுடியவில்லை. அதன்பின்னர் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற அமைப்பு சிரியாவின் உள்நாட்டுப்போரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. திடீரென இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். எங்கிருந்து வந்தனர் என்பதையெல்லாம் சர்வதேச நாடுகளோ ஊடகங்களோ எந்தக்கேள்வியும் பெரிதாக எழுப்பவில்லை. சவுதி அரேபியாவின் மரணதண்டனைக்கைதிகள் சில ஆயிரம் பேருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று சொல்லப்படுகிற வாதங்களையும், முன்வைக்கப்படுகிற ஆதாரங்களையும் புறந்தள்ளிவிடமுடியாது. அமெரிக்க ஆதரவு “ஃப்ரீ சிரியன் ஆர்மி” யிடம் வழங்கப்படும் ஆயுதங்கள் எல்லாம் இறுதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமே சென்று சேர்வதைப் பார்க்கமுடிகிறது. நேட்டோ படைகளின் ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன என்று சர்வதேச பொதுமன்னிப்பாயம் அமைப்பு அறிக்கையொன்றையே வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேலுக்கு என்ன இலாபம்?

**********

1948 முதலே தங்களது நிலத்திலிருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறார்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு மிக அருகிலேயே சிரியாவில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதான் ஆதரவளித்துவருகிறது. என்றாவது ஒரு நாள் பாலஸ்தீனம் என்கிற தேசம் உருவாகிவிடும் என்றும், தங்களது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பிச்சென்றுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டே அம்மக்கள் சிரியாவில் வாழ்ந்துவருகின்றனர். சிரியாவை இல்லாமல் செய்துவிட்டால், அங்கிருக்கும் பாலஸ்தீனர்களின் கனவையும் அழித்துவிடுவது எளிதானது என்று இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா அழிக்கப்பட்டுவிட்டால், அங்குவாழும் பாலஸ்தீன அகதிகள் துரத்தப்படுவதும் உறுதி.

சிரியாவின் இராணுவம்தான் இஸ்ரேலுக்கு அப்பகுதியில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது. அதனால், சிரியாவின் தற்போதைய அரசைக் கவிழ்த்துவிட்டாலே, இஸ்ரேல் எவ்வித அச்சமுமின்றி இருக்கலாம் என்று நினைக்கிறது

சிரியாவின் தற்போதைய அரசு தன்னாலான உதவிகளை பாலஸ்தீனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு செய்து வந்திருக்கிறது. அதனால், சிரியாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், பாலஸ்தீன போராட்ட இயக்கங்களை ஒடுக்குவதும் எளிதாகிவிடும் என்பது இஸ்ரேலின் கணக்கு

நீண்ட நாட்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்கவேண்டும் என்பது இஸ்ரேலின் இலட்சியமாக இருந்துவருகிறது. சிரியா இல்லாமல் போனால், ஹிஸ்புல்லாவை அழிப்பது இஸ்ரேலுக்கு சாத்தியமாகிவிடும்

சிரியாவைத் தகர்த்துவிட்டால், பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரும் கோரிக்கையையே மெல்லமெல்ல அழித்துவிடமுடியும் என்பதும் இஸ்ரேலின் நம்பிக்கை

இப்படியான காரணங்களுக்காக, சிரியாவை இல்லாமல் செய்துவிடுவதை இஸ்ரேல் விரும்புகிறது. இதில் சந்தேகப் பார்வையோடு பார்க்கவேண்டிய இரண்டு முக்கியமான அம்சங்களும் உண்டு.

சிரியாவின் தெற்கு கோலன் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. சிரியாவில் எண்ணிலடங்கா அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள், இதுவரை அப்பகுதிகளுக்கு ஓரடிகூட எடுத்துவைத்து முன்னேறவுமில்லை, அப்பகுதிகளை மீட்டெடுக்க இஸ்ரேலுடன் சண்டைக்கும் போகவில்லை.

அதேசமயம், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து சண்டையிடப்போவதாகவும், காஸாவை ஆக்கிரமிக்கப்போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது.

ஆக, சிரியாவில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களால் இஸ்ரேலுக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஆனால் சிரியா அழிக்கப்பட்டுவிட்டாலோ, அதனால் இஸ்ரேலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.

துருக்கிக்கு என்ன இலாபம்?

முதலாம் உலகப்போருக்கு முன்னர் மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டுவந்தது துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒட்டோமன் பேரரசுதான். மத்திய ஆசியா முதல் சிரியா, எகிப்து வரை ஒட்டுமொத்த பரபப்பளவையும் ஒட்டோமன் பேரரசின் கீழ்தான் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தோற்கடிக்கப்பட்டும் திவாலாக்கப்பட்டும் ஒட்டோமன் பேரரசின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சில அகண்டபாரதம் என்று சொல்லித்திரிவதைப்போல, துருக்கியிலும் அகண்ட துருக்கி என்று பேசித்திரிகின்றனர். மத்திய கிழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர துருக்கி எப்போதும் ஆர்வமாகவே இருந்துவருகிறது. நேட்டோவில் துருக்கி இணைந்திருப்பதால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஆயுதபலத்தில் பெரிய நாடாகவும், மத்தியகிழக்கின் அமெரிக்காவாகவும் துருக்கி கருதிக்கொள்கிறது.

சிரியா வீழ்ந்துபோவதால் துருக்கிக்கு மற்றொரு இலாபமும் இருக்கிறது. மத்தியகிழக்கிலேயே மிகப்பெரிய ஆடைத்தயாரிப்புத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் நாடு சிரியாதான். அதன்மீது துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு எப்போதும் பொறாமை இருந்துகொண்டிருக்கிறது. சிரியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப்போரில் சிரியாவின் ஆடைத்தொழிற்சாலைகளை நட்டமாக்குவதிலும் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து பிரித்து துருக்கியின் ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பதற்குமே பல இடைத்தரகர்கள் களத்தில் வேலைசெய்யத்துவங்கியிருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவிற்கு என்ன இலாபம்?

ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிவருவது சவுதி அரேபியாதான் என்பது உலகறிந்த இரகசியம். சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பூமிக்கடியே குழாய்கள் அமைத்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை எடுத்துச்சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு சிரியாதான் மிகமுக்கியமான பகுதி. சிரியாவின் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, சிரியாவை உடைத்து அதன் ஒரு பகுதியில் தனக்குச் சாதகமான ஓராட்சி அமைந்தாலோ தான் தன்னுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை சவுதிஅரேபியா நன்கு உணர்ந்திருக்கிறது.

அதுதவிர மத்தியகிழக்கின் ஒரே ரவுடியாகவும் அமெரிக்காவின் ஆத்மார்த்த அடியாளாகவும் இருப்பது யார் என்கிற போட்டியில் மற்ற எல்லோரையும்விட முன்னனியில் இருப்பதும், எப்போதும் இருக்கவிரும்புவதும் சவுதிஅரேபியாதான். ஜனநாயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லாத சவுதிஅரேபியா, அமெரிக்காவின் நட்புப்பட்டியலில் இருந்துகொண்டேயிருக்கவே விரும்புகிறது.

சிரியாவின் பிரச்சனை மட்டுமா இது?

சிரியா தகர்க்கப்பட்டால், ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. ரஷியாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்தபின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் ரஷியாவுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், ரஷியா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் ரஷியாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் ரஷியாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்சு, தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்துவரும் அர்ஜெண்டினா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் – இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம்கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்துவருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந்திருக்கிறது. நேட்டோ, ஐ.நா.சபை, இசுலாமிய பயங்கரவாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோவின் செலவுகளில் 75% த்தை அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறது. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம்.

லிபியாவை போல சிரியாவையும் எளிதில் தகர்த்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. சிரியாவில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது; இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்க முடிந்திருக்கிறது. ஆனால், சிரியாவை இன்னமும் ஏகாதிபத்திய அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கமுடியவில்லை. சிறுபான்மை அலவித்களால் ஆளப்படும் சிரியாவினை கைப்பற்றுவது அத்தனை கடினமாக இருக்காது என்றே அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது. ஆனால், சிரியாவின் உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், இராணுவ ஜெனரல்கள், இராணுவப் படையினர் என எல்லா மட்டத்திலும் பொறுப்பிலிருப்பவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், அமெரிக்கா நினைத்ததைப் போல சிரியாவில் சிறுபான்மையினத்தவரின் ஆட்சிக்கு எதிரான பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைக்கமுடியவில்லை.

சிரியாவின் இராணுவத்தை இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோகூட வெல்லமுடியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக இருந்தாலும் இன்னபிற அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும், சிரியாவின் இராணுவத்தை வீழ்த்தாமல் சிரியாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கவே முடியாது. ரஷியாவும் தன்னுடைய வாழ்வா சாவா போராட்டத்தில் சிரியாவுக்கு துணியாக போராடிக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் சிரிய இராணுவத்தோடு இணைந்திருக்கிறார்கள். போரின் உக்கிரத்தைப் பொருத்தவரையில் ஈரானும் சிரியாவுக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வின் சாட்சியங்கள்:

1. 2011 ஆம் ஆண்டில் மார்ச் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட உள்நாட்டு புரட்சியில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2,40,381 ஆகும்.

2.கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 111624 ஆகும்.

3.கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11964 ஆகும்

4.கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7719 ஆகும்.

5.போரில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை 30000 ஆகும்

6.போரில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஆகும் ‘

7.ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20000 ஆகும் .

8.போரினால் காயமுற்று நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் அதாவது 2 மில்லியன் மக்கள் ஆவர் .

9.போரினால் அருகே புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் பேர் அதாவது 7 மில்லியன் மக்கள் ஆவர்

10.அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பித்து ஓடி வந்து பிற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் பேர் அதாவது 4 மில்லியன் என்பது மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்

உணவிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகள்: 

1.அகதிகளுக்கு உணவு வழங்கும் நிலைமைகள் நாளடையில்குறைந்து வருகின்றது . நிதிப்பற்றாக்குறையின் காரணமாக உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க பணம் இல்லாமையால் முகாம்களுக்கு வெளியே உள்ள 229000 அகதிகள் உணவின்றி தவித்து வருகின்றனர் .

2.இதன் விளைவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு வேலைக்கு செல்வதும், பணங்களை வசூலிக்க வெளியே செல்வதும் அதிகரித்து வருகின்றது .

3.இதன் படி ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கூற்று படி முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 210000 ஆவர்.

4.முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆவர். இது வரை 1,772,535 சிரியா அகதிகளை துருக்கி வரவேற்று உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன .

ஸ்வீடன் செல்லும் வழியில் கற்பழிக்கப்படும் குழந்தை அகதிகள் :

1.தஞ்சம் புகுவதற்கு ஆதரவு தேடும் சிறுவர் சிறுமிகள் 92 % சதவிகிதம் பேர். அவர்கள் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஆவர் .

2.பெற்றோர்கள் இன்றி அகதிகளாக ஸ்வீடன் வரும் குழந்தைகள் வாரம் தோறும் சுமார் 700 பேர் வருகை தருகின்றனர். அகதிகளாக வரும் குழந்தைகள் கடத்தல்காரர்களால் கற்பழிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உடல் ரீதியான மற்றும் மனம் ரீதியான காயங்களுக்கு ஆளாகின்றனர்.

3.அகதிகளாக வரும் குழந்தைகள் பலரும் எலும்புகள் முறிந்த நிலையிலும் , தலையில் தாக்கப்பட்டு காயங்களுடனும் வருகின்றனர். நாடு கடத்தபப்டும் குழந்தைகள் பண்டமாற்றுவண்டிகளில் அழைத்து வரும் போது விழுவதாகவும் , குழந்தைகள் கனனத்தில் அறைந்து காத்து கேட்கும் தன்மை இழப்பதாகவும் செய்திக் குழுக்கள் தகவல் அழிப்பது வேதனையாக இருக்கின்றன .

சிரியாவில் நடக்கிற போரானது, இரண்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடயிலான போரல்ல. உலகில் தன்னுடைய அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கிற அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய நாட்டிற்கும், தேசியவாத சக்திகளுக்கும் இடையிலான போர்.

உலகை தனது காலனியாக்கத்துடிக்கும் அமெரிக்காவிற்கும், சொந்த நிலத்தை பாதுகாக்கப் போராடும் சிரியாவின் மக்களுக்கும் இடையிலான போர். 1917ஆம் ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்களின் சொத்தாக உருவாகிக்கொண்டிருந்த ரஷியாவை 1990களில் தகர்த்து, சூறையாடிய வரலாறு, மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிற ரஷியாவின் வாழ்க்கைப் போராட்டம்தான் இப்போர்.