Tuesday 8 May 2018

மீண்டும் சிதறும் முள்ளிவாய்க்கால்! தவிர்ப்பார்களா ஈழத்தமிழர்கள்?

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது.


ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 18, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது.
தமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் யுத்தத்தில் செலவிட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் ஓய்வுப்பெற்றுக்கொண்டனர்.
அனைத்தையும் இழந்தும் அன்று நட்டாற்றில் விடப்பட்டதுபோல ஓர் உணர்வில் அன்றைய தினம் நின்றிருந்த தமிழர்களின் மனநிலை, 9 வருடங்கள் கடந்தும் இன்றும் மாறா வடுக்களாகவே காணப்படுகின்றது.
யுத்தம் மௌனிக்கப்பட்ட அந்த துயர தின நினைவுகூறல் இன்று அரசியலோடு ஒன்றித்துபோனதாக மாறிவிட்டது.
சமகாலத்தில் அரசியல் இல்லாத துறைகளைக் காண முடியாது, கல்வித் தொட்டு சமூகத் தொண்டுவரை அரசியல் கலந்துள்ளது.
எனினும், முள்ளிவாய்க்கால் துயர தினத்தின் 9ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை யார் நடத்துவது? அதற்கு தலைமை யார்? அரசியல் தவிர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்தான் இம்முறை அனுஷ்டிக்கப்படவேண்டும் என பல குழப்பங்கள்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபைக்கும் இது தொடர்பான காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.
ஆனாலும், இவ்வருட முள்ளிவாய்க்கால் நிகழ்வினை வடமாகாண சபையினர் நடத்துவதை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை, வடமாகாணசபை நடாத்துவதானது, மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று.
மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள்தான் மே-18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று.
எனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை.
இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.
ஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், இந்நிகழ்வானது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்டி கூத்தடிக்கும் வகையில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும். வடமாகாணசபையானது இந்த அவாவை நிறைவு செய்யக்கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்.
மேலும், வடமாகாண சபையானது தேர்தல் வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார்யார் கையிலாவது போய்ச்சேரும்.
எதிர்வரும் காலத்தில் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதிபடச் சொல்லமுடியாது. இனவழிப்புக்குத் துணைபோனவர்களே கூட மாகாண சபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.
இந்நிலையில் வடமாகாண சபைதான் மே-18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக்குண்டு.
ஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை – எமதினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துருகிக் கரையும் நாளை – தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்.
எமது ஒற்றுமை முயற்சியின் பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம்,செயற்பாட்டியக்கங்களின் கோபக்குமுறுலுக்கான பதிலை அவர்களே தயார்செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவுதந்து பெரும் மக்கள் அலை திரண்டுவந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்துபோக வைத்த பெருமை வடமாகாணசபையினரையே சாரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இது தொடர்பில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், எமது இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரவலத்தின் நினைவுகூரும் நிகழ்வானதால் எம்முடன் ஒன்றுசேர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளன.
அவ்வாறான அக்கறையுடைய, கரிசனையுடைய அனைத்து அமைப்புக்கள் எமது மேற்படி குழுவுடன் 09-05-2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கைதடி முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி இவ்வாறான நிகழ்வை ஒன்றுபட்டு எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நடாத்துவது சம்பந்தமாக ஆராயப்படும்.
நாட்டமுள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அவ்வவ்வமைப்புக்களின் சார்பாக குறித்த கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இத்தால் அழைக்கப்படுகின்றார்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், ஓர் இனத்தின் சமூக கட்டமைப்பே சிதைந்துபோன ஒரு தினத்தை நான் தலைமைத்தாங்கி அனுஷ்டிப்பதா அல்லது நீங்கள் தலைமைத்தாங்கி அனுஷ்டிப்பதா என்ற போட்டி உணர்வும், நீயா, நானா என்பதும் எமது சமூகம் மேலும் பின்னோக்கி நகர்ந்துசெல்வதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.
அண்மைய மூன்று வருட காலமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டுவந்த நிலையில், இவ்வருடம் அதற்கான முட்டுக்கட்டையாக யாழ். பல்கலைக்கழகம் செயற்படுவது வருத்தத்திற்குரியது எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்கின்றனர்.
சமூகநலன் கருதிய நிகழ்வுகள் என்னும்போது, ஒருவருக்கொருவர் சரிசம விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதுடன், அதில் இருந்து தவறும் பட்சத்தில் அது கசப்புணர்வையே ஏற்படுத்தும்.
பணம், பதவி மறந்து, குல, பேதம் மறந்து அனைவரும் உள உணர்வுகளாலும் ஒன்றித்து அனுஷ்டிக்கவேண்டிய தினம்தான் இந்த நினைவேந்தல்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் இருந்து அரசியல் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை, இந்த நினைவேந்தலில் நீயா, நானா என்பதைவிட தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டிய கடமைதான் அனைவரிடத்திலும் உண்டு.
இந்த நினைவேந்தல் என்பது சாதாரண நிகழ்வு அல்ல, ஈழ மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரின் அத்தியாவசிய கடமையும், பொறுப்புணர்வும் ஆகும்.
இதில் பொறுப்புணர்வு இருக்கவேண்டுமே தவிர, போட்டியுணர்வு தவிர்க்கப்படவேண்டும், என்பதை உணர்ந்து ஒன்றித்து செயற்பட யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் சரி, வடமாகாணசபையினரும் சரி முன்னிற்க வேண்டும் என்பது அனைவரினதும் அவா.
எது எவ்வாறெனினும், அரசியல் என்பது சமூகத்தில் இருந்து தனித்து நோக்க முடியாது, அத்துடன் அரசியலின் தலையீட்டுடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படுவதென்பது நினைவேந்தல் நிகழ்வுக்கு வலுசேர்ப்பதுடன், எதிர்காலத்தில் தமிழர்களுக்கான நீதி என்ற விடயத்தில் இது பெரிதும் உதவும்.
எனவே, இந்த நிகழ்வை வடமாகாணசபையுடன் ஒன்றித்து நடத்துவது என்பதே சமகாலத்தில் நிதர்சனமானதும், நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடியதுமாகும். இதனால் மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கால் சிதறுண்டு போவதையும், தவிர்க்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment