Friday, 11 May 2018

திரு.யோகரத்தினம் யோகி அவர்களின் இறுதிக் குரல்!

போரின் இறுதி நாட்களில் (மே மாதம் 2009) முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.யோ.செ.யோகி அவர்கள் ஆற்றிய அவரது இறுதி உரையை எழுத்து வடிவில் தரப்பட்டுள்ளது. (மே-14 என நினைக்கிறேன், சரியாக எந்த நாளில் உரையாற்றினார் என்பதை உறுதிப்படுத்திவிட்டு பின்னர் இணைக்கப்படும்). அவரது உரையின் முழுமையான வடிவம்:





  • நீண்ட நெடிய எங்களது விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கிறோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல, இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத் தான் பார்க்கின்றோம். அந்தக் குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம்; எந்த நெருக்கடிக்குள்ளும் நாம் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.
       
  •  ஈற்றில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். போராடியிருக்கின்றோம். இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது.
  • வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்தபோதும் விடுதலைப் போராட்டம் அழிந்துவிட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். ‘ஜெயசிக்குறு’ காலத்திலும் இதே கருத்தைத் தான் முன்வைத்தார்கள்.
  • ஆனால், போராட்டம் எந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
  • இன்று உலகம் முழுவதிலும் ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பைச் செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து, பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்தத் தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு, அந்தக் கோட்பாட்டோடு – எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் – செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றன.
  • இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்துவிடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகின்றது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக்கொள்வது சிங்கள தேசம்தான்.
  • அண்மைக் காலமாக நாம் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலைத் தொடங்கிய போது கூட ஆடிப்போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்தவேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
  • இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்தபின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
  • புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக சிங்கள தேசம் தீர்வு குறித்துப் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாரும் இதைப்பற்றிப் பேச இனி மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்கவேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவவேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு நின்றால் போதும். நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க கமுடியும்.

  • எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லோரும் – ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர – எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகெங்கும் இருக்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேசவேண்டும்.
  • ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்துபோன போது, பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுதன. உலகம் முழுவதும் அழுகின்றன.
  • இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுக்கப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு, நான்கு இலட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50 இலிருந்து 60 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100 இற்கும் அதிகமான மக்கள் காயப்படும் நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.
  • கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குள்ளே 500 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயப்பட்டிருக்கின்றார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
  • இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துக்களைச் சொல்லிவைப்போம். அதன்மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.
  • ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலகநாடுகள் எல்லாமே இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடவேண்டும் என நினைக்கின்றன. குறிப்பாக, தேசியத் தலைவரை அழித்துவிட வேண்டுமென நினைக்கின்றன. அவரை அழித்துவிட்டால், இந்தப் போராட்டத்தில் தாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும், எங்களை அழித்து, எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்து, தாங்கள் விரும்பியதைச் செய்யமுடியும் என நினைக்கின்றன.
  • அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்தப் போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.
  • இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடரமுடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.
  • கிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்துவிடும், உலகத்தில் உள்ள எல்லாமே கிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்ற போதுகூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். 
  • கிட்லரினும் பார்க்க மிகக் கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை, அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழப் புதைத்து எங்கள் குரலை கேட்கச் செய்யவெண்டும்.
  • அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்தப் போராட்டம் ஒரு குறுகிய காலத்துக்குள் அழிந்துவிடும், அழிக்கப்பட்டுவிடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக்கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.
  • நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒருகாலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தை தான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை.  நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம்.
    ***
    இவ்வாறு உரையாற்றியிருந்தார். இது, முள்ளிவாய்க்காலில் இருந்து ஒலித்த அவரது இறுதிக் குரல்.
மூலப்பதிவு:- சமராய்வு இணையம்

No comments:

Post a Comment

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 52

லொறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 52) செப்படம்பர் மாதம் 23 ஆம் ...