Wednesday 23 May 2018

தமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்!

சென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.அஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள்? அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது?

எந்தச் சென்னையின் தினம்?


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடுகிறோம். சென்னைக்கு இப்போது வயது 375 என்று நம்புகிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்த வரலாறு?  “1639-ல் சந்திரகிரி, வந்தவாசி ஆகிய பகுதிகளை ஆண்ட தாமர்லா சென்னப்ப நாயகடு என்ற மன்னரிடமிருந்து கடற்கரையோர நிலத்தை கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே வாங்கினார். சென்னை என்ற வார்த்தை அந்த விற்பனைக் கிரயப்பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதுள்ளதால் அங்கிருந்து இந்த வரலாற்றைத் தொடங்குகிறார்கள். அதற்கு முன் இங்கே கடல் இல்லையா, கடற்கரை இல்லையா, ஊர் இல்லையா, மக்கள் இல்லையா? எல்லாம் இருந்தது, இருந்தார்கள். பிரான்ஸிஸ் டே இடம் வாங்கிய பகுதியே ஒரு கடலோடிகள் குப்பம்தான். அந்த வரலாறு இன்றைக்கு இருட்டு சூழ்ந்த வரலாறு” என்கிறார் கடலோடியும் ஆய்வளருமான தாமஸ்.

இன்றைக்குக் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - 12-ம் நூற்றாண்டின் - ‘கலிங்கத்துப் பரணி’யிலேயே மயிலையைக் குறிப்பிடும்போது, ‘பண்டை மயிலை’ என்று குறிப்பிடப்படுவதாகச் சொல்கிறார் கடலோடியும் ஆய்வாளருமான நரசய்யா. இதை உறுதிப்படுத்துகிறார் ஆய்வாளரான முத்தையா. “இதுவரை கிடைத்திருக்கும் தரவுகளின்படி இன்றைய சென்னையின் பழமையான கடற்கரையூர் என்று மயிலாப்பூரையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் முத்தையா. அத்தனை தொன்மையானது மயிலை எனும் மயிலாப்பூர்.

கபாலியும் கபாலீஸ்வரரும்


இன்றைய சென்னையின் தொன்மையான அடையாளங்களில் ஒன்று கபாலீஸ்வரர் திருக்கோயில். முன்பு கடலோரத்தில் கபாலிகர்களால் கட்டப்பட்டு, இயற்கைத் தாக்குதலிலோ, அந்நியர் தாக்குதலிலோ இடிக்கப்பட்ட கோயில் பின்னர், இப்போதுள்ள இடத்தில் எழுப்பட்டதாக நம்பப்படுகிறது. கடலோரத்தில் எழுப்பப்பட்ட காலத்திலிருந்தே கபாலீஸ்வரரைத் தங்கள் குலதெய்வமாகக் கும்பிட்டவர்கள் கடலோடிகள். சென்னைக்கு இன்றைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்படுகிறார்; கபாலிகள் வேண்டாதவர்கள் ஆகிவிட்டார்கள். 


“கபாலீஸ்வரர்னா கடவுள். ஆனா, கபாலின்னா திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன். ஒரு காலகட்டம் வரைக்கும் எல்லாப் பத்திரிகைகள்லேயும் தமாசுன்னு வந்தா குத்தவாளிக்குப் பேர் கபாலின்னுதான் இருக்கும். கடலோடிகளோட கடவுள் கபாலீஸ்வரர். அதனாலதான் அப்போ குப்பத்துல பத்து பேருக்காவது, கபாலிங்கிற பேர் இருக்கும். சென்னைக்குக் கபாலீஸ்வரர் தேவைப்பட்டார். கபாலிங்க தேவையில்லாதவங்களா ஆயிட்டாங்க.


நமக்கு நல்லாத் தெரிஞ்ச நவீன சென்னையோட வரலாற்று லேந்தே எடுத்துக்குவோம். போர்ச்சுகீசியர் காலத்துல கடலோடிங்க தொரத்தப்பட்டாங்க. பிரிட்டிஷ்காரங்க காலத்துல தொரத்தப்பட்டாங்க. சுதந்திர இந்தியாவுலேயும் தொரத்தப்பட்டாங்க, தொரத்தப்படறாங்க. எம்ஜிஆர் ஆட்சியில மெரினாவை அழகாக்குறோம்னு சொல்லி துப்பாக்கிச் சூடே நடந்துச்சு. உயிர்கள் போச்சு. ஒரு சமூகம் வளரும்போது எப்படித் தன்னோட பூர்வகுடிகளை ஒடுக்கி, மிதிச்சு, ஒதுக்கும்கிறதுக்கு உதாரணம் கபாலி” என்கிறார் கடலோடியும் எழுத்தாளருமான ஜோ டி குரூஸ்.

அடிமை வியாபாரம்


ஒருகாலத்தில், அடிமை வியாபாரச் சந்தையில் சென்னைக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது. “பூம்புகார் காலியான பிற்பாடு பொயப்பு தேடி வந்தவங்களுக்கு எடம் கொடுத்த ஊரு இதுன்னு சொல்லுவாங்க. வெளியாள் ஆதிக்கத்துக்கு அப்புறம் பஞ்ச காலத்துல அடிமைங்க யாவாரம் இங்கே டாப்புல இருந்திருக்கு. 1646-ல ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சாம். சோறு இல்லாம சாவுறதைவிட, அடிமையா போயி பொயச்சுக்கலாம்னு எத்தினியோ பேரு போயிக்கிறாங்க. அப்போலாம் எவ்ளோ பேருக்கு ஒத்தாசை பண்ணிக்கிறாங்க இங்கக்குற கடக்கர ஜனங்கோ” என்கிறார் பெரியவர் வீரமுத்து. தன்னுடைய ‘மதராசபட்டினம்’ நூலில் ஓர் இடத்தில் இதுகுறித்துப் பதிவுசெய்திருக்கிறார் நரசய்யா. சென்னை அடிமைகளின் சந்தையாக இருந்ததுடன், கொஞ்சம் பிற்காலத்தில், இங்கிருந்து வெளியே கொண்டுசெல்ல வசதியான இடமாகவும் இருந்திருக்கிறது. 


அடிமைகளுக்கான சுங்க வரி ஏனைய துறைமுகங்களைவிட இங்கு குறைவான தாக இருந்திருக்கிறது. 1711-ல் ஒரு அடிமையைப் பதிவதற்கு 6 ஷில்லிங், 9 பென்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது.  இப்படி அடிமையாக வந்தவர்களுக்கெல்லாம் உதவியவர்கள் இன்றைக்கு நகரின் விளிம்பில் தொங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

புறக்கணிப்பின் அரசியல்


ஒரு சமூகம் புறக்கணிக்கப்படும்போது, அதன் சகல கட்டுமானங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. “மீனுங்க பெருக்கத்துக்கு அலையாத்திக் காடு, நல்ல ஆத்து தண்ணீலாம் அவசியம். காட்ட அயிச்சாச்சு. கயிவெ வேற கடல்ல கொண்டாந்து வுட்டா இன்னாவும்? போதாத்துக்கு வர்சையா ஆலைங்க, அன மின் நிலையம், அணு மின் நிலையம்... கடலையே உறிஞ்சிக்குறா மாரி தண்ணீயை எடுக்குறதுல சின்ன மீனுங்க, மீனு முட்டைங்க எல்லாம் பூட்து. பதிலுக்குக் கொதிக்க கொதிக்க தண்ணிய வெளியே வுட்றாங்க. வெளியேருக்குற மீனுங்களும் செத்து ஒழியுது. கரக்கடலுல தொயிலே கெடயாது. பூட்ச்சு. எல்லாம் பூட்ச்சு. ஆனா, நம்ம கொரலு எடுபடல.”

சென்னையின் இரு துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் துறைமுகம் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தின் உருவாக்கத்தில், கடலோடிகள் சமூகத்தின் வாழிடங்களின் பாதுகாப்புக்குக் கவனம் அளிக்கப்படவில்லை. கடலில் ஓரிடத்தில் வண்டி வண்டியாய்க் கற்களையும் மண்ணையும் கொட்டி நீரோட்டத்தின் மீது கை வைத்ததன் விளைவு, வேறோர் இடத்தில் கடல் அரிப்பு பூர்வக்குடிகளைத் துரத்தி அடிக்கிறது. தமிழகத்தின் மாபெரும் சந்தையான சென்னையின் மக்கள் திரளுக்குக் கடல் உணவு தேவைப்படுகிறது. ஆனால், கடலோடிகளுக்கான தொழில் மையமோ திண்டாடுகிறது. சென்னையின் மற்றொரு துறைமுகமான காசிமேடு துறைமுகம் இட நெருக்கடியால் திணறுகிறது. “சென்னையில அங்கியும் இங்கியும் நூறுக்கும் மேல மீனு விக்கிற எடம் வந்துட்சு. ஆனா, காசிமேடு மட்டும் அப்டியேதாங்கீது. ஐந்நூறு படகு நிறுத்துற எட்துல ஆயிரத்து நாநூறு நிக்கிது. இன்னா செய்ய?”

நெரிசல் மிக்க ஜன சந்தடியில் உடன் பேசிக்கொண்டே வருகிறார்கள். சென்னையின் கதை சென்னையின் கதையாக மட்டும் இல்லை. வளர்ச்சியின் பெயரால் நகரமாக உருப்பெறும் ஒவ்வொரு கடற்கரையூரின் தொடர்கதையுமாக நீள்கிறது!

நஞ்சூர் ஆகும் கடலூர்!


கடலூர். இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்!

ஒரு ஓடாவியின் கனவு


பரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி... பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது. அனுபவத்துக்குத்தான் வயது; உடலுக்கு இல்லை என்கிறது அவருடைய வேலை. “ஒரு தோணி கட்டுறதுங்குறது வூடு கட்டுற மாரிதான். என்னா, வூடு கட்டயில நீங்க தப்பு எதனா செஞ்சா, பின்னால ஒரு நா காட்டிக்கொடுக்கும். தோணி கட்டயில தப்பு எதனா செஞ்சா தண்ணீல எறங்குன அன்னிக்கே காட்டிக்கொடுத்துரும். தண்ணீல போவயில எப்படி ஒரு தோணி போவும், காத்தை எப்படி வரிச்சுக்கும், புயலுக்கும் அலைக்கும் எப்படித் தாங்கும்... இப்படியெல்லாம் நெனப்புலேயே ஓட்டிப் பாத்து, ஓட்டிப் பாத்து தோணியக் கட்டணும். அதாம் ஒரு ஓடாவிக்குச் சவாலு” என்கிறார்.

கப்பல் செல்ல முடியாத அளவுக்கு ஆழம் குறைந்த தீவுகளில் சகலப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் தோணியை ஐயாதுரை கட்டிக்கொண்டிருக்கிறார். “மொத்தம் நூத்தியிருவதடி நீளம், இருவத்திநாலரையடி அகலம், பதினேழரையடி அடி ஒயரத் தோணி இது. நடுமரம் ஏறா மட்டும் கருமருது. மிச்சமெல்லாம் இலுப்பையும் மலேசிய வேங்கையும். ரெண்டு வருஷமா வேல நடக்குது. இன்னும் ஒரு மாசத்துல எறங்கிடும். ரெண்டரை கோடி ரூவா ஆகியிருக்கு.” ஒரு கனவைப் பார்ப்பதுபோல, பூரிப்போடு பார்க்கும் ஐயாதுரை 17.5 அடி உயரத் தோணியின் உச்சிக்கு, ஏணியில் ஒரு நிமிடத்தில் அநாயாசமாக ஏறி இறங்குகிறார். ஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு? எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க...” - கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.

போர்களைவிடவும் கொடியவை


தொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் பார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க. எங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது? பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்துச்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.

தமிழகத்தின் நச்சு மையம்


“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.

ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும்


ஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா?

கொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங்கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.
ரசாயனக் கடல்


கடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது. 

கடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.

தலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒரு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது? தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. எங்க கஸ்டம் மட்டும் இல்லப்பா இது. எல்லாரு கஸ்டமும்தான். அன்னிக்குப் பத்து ரூவாக்கி ஒரு குடும்பம் மீனு துன்னலாம். இன்னிக்கு நூறு ரூவாக்கி வாங்கி ஒருத்தம் முய்சா மீனு துன்ன முடியாது. திடீர்னு ஒரு நா மீனுங்க கூட்டம் கூட்டமா கடலுல செத்து மொதக்கும். திடீர்னு ஒரு நா சீக்குபுடிச்சி வாய்க்குள்ள கட்டியோட, வவுறு தொங்கிப்போயி வலையில கெடக்கும். கடலால மீனுக்கு மட்டும்தான் பாதிப்பா? மன்சனுக்கு இல்லீயா? யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா? உங்கக்கிட்ட வராதா? யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”

புகழேந்தியின் கேள்விகள் துரத்துகின்றன.


உப்பிட்டவர்களை எள்ளளவேனும் நினைக்கிறோமா?


தூத்துக்குடியில் கேட்ட முதல் குரலே அசரடித்தது. “என்னது... ஒண்ணுக்கிருக்க அஞ்சு ரூவாயா?”


இடம்: தூத்துக்குடி பழைய பஸ் நிலையக் கட்டணக் கழிப்பறை. காசு வாங்கிக்கொண்டிருந்தவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மேஜையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ‘டொக்’ ‘டொக்’என்று தட்டினார். பின், தலையை நிமிர்த்தி, கேள்வி கேட்ட இளைஞருக்குப் பின் நின்றுகொண்டிருந்த என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘இஷ்டம்னா இரு; இல்லாட்டி போய்க்கிட்டே இரு’ என்பது போல இருந்தது அந்தச் சைகை. இளைஞர் காசைக் கொடுக்க, அடுத்து நான், பின்னால் வந்த பெரியவர் என மூவரும் காசு கொடுத்து உள்ளே நுழைகிறோம்.
“தம்பி, ஊருக்குப் புதுசோ... இங்கெ இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லாட்டி எங்கெங்கேயோ தொரத்தி அடிவாங்கினவம்லாம் இங்கெ வந்து ஆலை வெச்சு ஊர நாசமாக்க முடியுமா? காசுதாம்பி பேசுது...”
பெரியவர் முனகிக்கொண்டே கடக்கிறார்.

நகர் இங்கே... முத்து எங்கே?


தூத்துக்குடிக்கும் முத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், குறைந்தது 1,500 வருஷங்கள் பின்னோக்கிப் போகலாம். பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக் காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள்... எல்லாக் காலங்களிலும் தூத்துக்குடியின் அடையாளம் முத்துக் குளித்தலும் கடல் வாணிபமும். இன்றைக்குக் கடல் வாணிபம் நடக்கிறது. முத்துக் குளிக்கும் தொழில்?

“அது செத்துப் பல காலம் ஆகுதுங்க. பத்துப் பன்னெண்டு வயசுல கால்ல பத்து கிலோ குளிகல்லைக் கட்டிவிட்டு, கடல்ல தள்ளிப் பழக்குவாங்க. கடலுக்குள்ள எறங்குன வேகத்துல குளிகல்லைக் கழட்டி வுடணும். அதாம் மொதப் பயிற்சி. பொறவு சுத்தி கடலுக்குள்ள சுறா, திருக்கை, பாம்புக திரியுதான்னு கவனிக்கணும். பொறவு முடிஞ்ச மட்டும் மூச்சடக்கிப் பழகணும். பொறவு தரயில துழாவி, கவனமா அரிக்கணும். பொறவு மூச்சு தட்டுற நேரத்துக்கு முன்னால, தண்ணிக்கு மேல வரணும். மூச்சுத் தட்டுற நேரத்துல வைடூரியமே கிட்ட கெடந்தாலும், யோசிக்காம ஏறிரணும். இப்படியெல்லாம் தயாரானாதான் குளியனாவலாம்.

ஒருத்தம் குளியனாயி கொட்டான் (சேகரிக்கும் பெட்டி) கட்டிட்டாம்னா, வேற தொழில்ல நாட்டம் போவாது பாத்துக் கிடுங்க. எங்க ஐயா காலத்துலேயே தூத்துக்குடில முத்துக் குளிக்கிற தொழில் செத்துப்போச்சு. பொறவு சங்கு குளிக்க ஆரமிச்சோம். எழுத்தாணிச் சங்கு, ராவணன் விழிச்சங்கு, ஐவரளிச் சங்கு, குதிரைமுள்ளிச் சங்கு, யானைமுள்ளிச் சங்கு, வலம்புரிச் சங்குனு விதவிதமா உயிர்ச் சங்கு கெடைச்சுது ஒரு காலம். இப்பம் அதுக்கு வழி இல்ல. செத்த சங்க அரிச்சுப் பொழைக்கிறோம். இதும் எத்தன காலமினு மேல இருக்கவனுக்குதான் தெரியும். கட அத்து, தொழில் செத்து கெடக்கம்.”

தலைமுறை தலைமுறையாகக் குளியல் தொழிலில் இருக்கும் சுப்பிரமணியன் தன் காலத்தோடு இந்தத் தொழில் முடிந்துவிடும் என்று அஞ்சுகிறார். தூத்துக்குடியின் அடையாளம் என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அந்த முத்துக்கும் குளியர்களுக்கும் இன்றைக்கு இதுதான் நிலை.

கடல் வாணிபம் செழித்தது எதனால்?


தமிழகத்தின் கடல் பகுதியை மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. பழவேற்காட்டிலிருந்து வேதாரண்யம் வரை - சோழமண்டலக் கடற்கரை. 2. வேதாரண்யத் திலிருந்து தனுஷ்கோடி வரை - பாக் நீரிணைப் பகுதி. 3. தனுஷ்கோடியிலிருந்து நீரோடி வரை - மன்னார் வளைகுடா பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் கடல் சூழலியலும் நிலவியலும் வெவ்வேறானவை என்கிறார்கள்.

பொதுவாகவே, இந்தப் பகுதிகள் மூன்றும் பல்லுயிர்ச் செழிப்பு மிக்கவை என்றாலும், ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள பகுதி அபரிமிதமானது. ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான 21 தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் ‘இந்தியக் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி' என்று சொல்கிறது அரசு. ‘மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா' என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதி, உலக அளவில் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்று.

சுரபுன்னைக் காடுகள், காயல்கள், கடல்கோரைப் படுகைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றின் உறைவிட மாக இருந்ததாலேயே எங்குமில்லாக் கடல் தாவரங்களும் உயிரினங்களும் இங்கே பல்கிப் பெருகின. முத்துச் சிப்பிகளும் பவளப்பாறையில் வளரும் மீன்களும் கடல் வெள்ளரிகளும் சங்குப்பூக்களும் சூழ்ந்து வளர்ந்தன. தூத்துக்குடி கடல் வாணிபத்தின் ஆதாரச் சுருதியாக இருந்தது கடலின் உயிரோட்டமான சூழல். பின்னாளில், கடல் சூழலைப் பின்னுக்குத் தள்ளின வாணிப நோக்கங்கள். விளைவு, தூத்துக்குடி இன்று சிதைந்துகொண்டிருக்கும் நகரம்.

விரட்டும் ஆலைகள்


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மனிதவள ஆற்றல் வளர்ச்சி அட்டவணையில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனம். பாரம்பரியத் தொழில்களான மீன்பிடி, விவசாயம், பிற்கால அடை யாளமான உப்பளத் தொழில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மின்சார உற்பத்தி, ரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் முன்வரிசையில் நிற்கின்றன.

“ஒருகாலத்துல முத்து அடையாளமா இருந்த ஊருக்கு பின்னாடி உப்பு அடையாளமா மாறுச்சு. இன்னைக்கும் தமிழ்நாட்டோட பெரும் பகுதி உப்பு இங்கேயிருந்துதான் உற்பத்தியாவுது. தமிழ்நாட்டோட மொத்த உப்பு உற்பத்தி 30 லட்சம் டன். இதுல தூத்துக்குடியோட பங்கு மட்டும் 25 லட்சம் டன். கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் இத நம்பிப் பொழைச்சிக்கிட்டிருக்கு. தவிர, தமிழ்நாடு, கேரளத்தோட தொண்ணூறு சதவீத உப்புத் தேவை, கர்நாடகத்தோட அம்பது சதவீத உப்புத் தேவை, ஆந்திரத்தோட இருபத்தியஞ்சி சதவீத உப்புத் தேவையைத் தூத்துக்குடிதான் நெரப்புது. இந்த உப்பைப் பாருங்க. என்ன நெறத்துல இருக்குன்னுட்டு. எல்லாம் காத்து நச்சுப் பொகையாயி, நச்சுப் பொகையில மெதக்குற சாம்ப படியுறதால நடக்குற அழிவு. தூத்துக்குடி உப்பைத்தான் தமிழ்நாடு முழுக்கத் திங்குது. ஆனா, தூத்துக்குடிக்கு ஒண்ணுன்னா அது தூத்துக்குடிக்காரனுக்கு மட்டும்தான்னு நெனைக்கிது. தொழில் நசிஞ்சுக்கிட்டிருக்கு. 50 வருசமா இந்தத் தொழில்ல உக்கார்ந்திருக்கவங்களையெல்லாம் அஞ்சே வருசத்துல விரட்டுது ஆலைங்க” என்கிறார் தனபாலன். தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர்.

வளர்ச்சியின் குறியீடு


“ஏற்கெனவே ஏகப்பட்ட ஆலைங்க இங்க இருக்கு. அபாயகரமான சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆலைங்க மட்டும் 14 இருக்கு. தவிர, அனல் மின்நிலையங்கள் வேற. இப்பம் மேல மேல புதுப்புது ஆலைங்களுக்கும் அனல் மின்நிலையங்களுக்கும் வரிசையா அனுமதி கொடுக்குறாங்க. அனல் மின்நிலையங்களுக்குத் தண்ணீ தடங்க இல்லாமக் கெடைக்குமின்னு கடக்கரை ஓரமா அனுமதி கொடுத்திர்றாங்க. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீ எடுத்து வுட்டா என்னாவும்? கடல் இருக்கு. தொழில் முன்ன மாரி இல்ல. சுத்துவட்டாரத்துல நெலத்தடி நீர்மட்டம் சுத்தமா வுழுந்து 600 அடிக்குக் கீழ போச்சு.

இது ஒரு பக்கமின்னா, ஆலைங்க வெளியேத்துற நச்சுப்பொகை ஒருபக்கம். மகாராஷ்டிரத்துல வேணாமின்னு தொரத்திவிட்ட ஆலை ஸ்டெர்லைட். இங்கே கொண் டாந்து வைக்க விட்டாங்க. அது வெளியேத்துன கந்தக வாயுவோட கொடுமை தாங்கல. ஒருகட்டத்துல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துன ஆய்வுலேயே நாட்டுலேயே மாசு கலக்குறதுல நாலாவது எடம் இங்கெ இருக்குன்னு சொல்லிக் கண்டுபிடிச்சாங்க. நீதிமன்றம் ஆலை இயங்கத் தடை விதிச்சுச்சு. இப்போம் திரும்பி அனுமதிச்சுட்டாங்க. கந்தகம் கலந்த காத்தைச் சுவாசிச்சா நுரையீரலும் இருதயமும் போய்ச் சேர்ந்துடும்னுகூடவா தெரியாம இருக்கு? ஸ்டெர்லைட்டு மட்டும் இல்ல; நச்சுப் பொகைய வெளியே வுடுற ஏராளமான ஆலைங்க இங்கெ இருக்கு. திடீர்னு ஒரு நா பயங்கரப் பொகையா இருக்கும், கடுமையா நெடி ஏறும். மொதல்ல, சின்ன விபத்தும்பாங்க. மறுநா விசாரிச்சா நச்சு வாயு வெளியேறிடுச்சு, கந்தக அமிலக் குழாய் வெடிச்சுருச்சு, உலை தெறிச்சுருச்சுன்னு எதாவது வெவரம் வரும். ஆலைக்குள்ளேயே எத்தன உசுரு போயிருக்கு? அவங்களப் பொறுத்தவரைக்கும் விபத்து. அவ்ளோதான். போபால் மாரி ஒண்ணு நடந்தா, தூத்துக்குடி என்னாவும்? நெனைக்கவே சகிக்க முடியாதத, நாலு பேருக்குப் பொழப்பு ஓடுதுன்னு பார்த்து ஒடுங்கிக்கிட்டிருக்கம்…”

துக்கம் கவியப் பேசுகிறார்கள் கடலோடிகள். கடல் அலையில் ததும்பிக்கொண்டிருக்கின்றன தோணிகள்.

வண்டி தூத்துக்குடியிலிருந்து புறப்படுகிறது. வழி நெடுக உப்பளங்கள். ஆங்காங்கே உப்பளங்களுக்கு மிக நெருக்கமாக ஆலைகள். நம் காலத்து வளர்ச்சியின் குறியீடாக, ஒரு சின்னமாக மனதில் அவை நிலை பெறுகின்றன. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம்? பணம் வரும் என்றால், வீட்டின் சமையலறையில்கூட ஒரு ஆலையை அனுமதிப்போமோ?

இந்த அழிவு ஒரு ஊருக்கு மட்டுமானதா?


பொதுவாக, இயற்கைச் சூழலைச் சீரழிப்பதில் தொழில் துறையினரின் அநீதியான செயல்பாடுகளைப் பேச ஆரம்பித்தாலே, 'வளர்ச்சிக்கு எதிரான முத்திரை'யைக் குத்திவிடுவது இந்திய இயல்பு. வளர்ச்சியே காலத்தை முன்னகர்த்துகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பதற்கான வரையறை எது; அதில் தொழில் துறையினருக்கான எல்லை எது? இந்தப் பயணம் எனக்கு இந்த எல்லையைக் கறாராக வரையறுத்துக் காட்டியது. அவலமான மொழியில், கொடூரமான தோற்றத்தில், உக்கிரமாகக் காட்டியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆலையும் அழிவும்


தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலைகள் இருக்கின்றன. சூழலை நாசப்படுத்துவதோடு, கணத்தில் உயிர்களைக் காவு வாங்கிவிடக் கூடிய பெரும் அபாயம் மிக்க ஆலைகளின் எண்ணிக்கையே நூறைத் தாண்டும். அதிகபட்சமாக, பயணங்களின்போது நம் மூக்கில் விருட்டெனப் புகும் நெடி, ஆலையின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரும்புகை, எங்கோ கசிந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைகளைத் தாண்டி, இந்த ஆலைகள் சூழல் சார்ந்து பொதுத்தளத்தில் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஒரு ஆலையால் சூழலை எவ்வளவு நாசப்படுத்த முடியும் என்பதை சாஹுபுரம் பயணம் எனக்கு உணர்த்தியது.

சாஹுபுரத்தின் வாசல்


சாஹுபுரத்தின் முன்வாசலுக்குச் செல்வது எளிதான பயணம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே சுமார் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். சாஹுபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், டி.சி.டபிள்யூ. (தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்) ஆலையின் சாதுவான முகப்பு உங்களை வரவேற்கும். அங்கே நீங்கள், சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் என்கிற மனிதர், எப்படி இந்த நாட்டின் முதல் சோடா ஆஷ் ஆலையை குஜராத்தின் தாரங்கதாராவில் நிறுவினார் என்பதில் தொடங்கி, அந்த ஆலை எப்படியெல்லாம் விரிவாக்கப்பட்டு, இன்று பல நூறு கோடிகளைக் குவிக்கும் வெற்றிகரமான நிறுவனம் ஆனது என்கிற சாதனைச் சரித்திரம் வரை உங்களுக்குக் கிடைக்கும்.

சாஹுபுரத்தின் கொல்லைப்புறம்


சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்துக்குச் செல்லும் பயணம் கொஞ்சம் சிரமமானது. காயல்பட்டினம் கடற்கரையோரமாக நடந்து சென்று, கொம்புத்துறைப் பகுதியை அடைந்த பின் வரும் புதர்ப் பகுதியில் உள்ளே நுழைந்து சில கி.மீ. தூரத்தை முட்கள் சூழ்ந்த மணல் பாதையில் கடந்து சென்றால், சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்தை அடையலாம். இப்படிச் செல்லும்போது மக்களிடம் பேசினால், டிசிடபிள்யு ஆலை எப்படியெல்லாம் வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி அரசிடமிருந்து சலுகை விலையில் வாங்கிய நிலத்தை ஒரு ஊராக்கி, ஆலை நிறுவனர் சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் பெயரால், அதற்கு சாஹுபுரம் என்று பெயரிட்டுக்கொண்ட கதையில் தொடங்கி, கடலையே தன் ஆலையின் கழிவுத் தொட்டியாக்கிக்கொண்ட கதை வரை உங்களுக்குக் கிடைக்கும்.

நீராதாரக் கொலை


சாஹுபுரம் டி.சி.டபிள்யூ. ஆலையின் பின்புறத்தைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். “எங்க ஊரோட ஒரு பகுதி தம்பி இது. ஏதோ ஒரு ஆலை வரும், மக்களுக்கு வேலைவாய்ப்பு கெடைக்கும், வளர்ச்சி வரும்முன்டு சந்தோஷமா வரவேத்தோம். இன்னைக்கு, தொட்டா பஸ்பமாக்கிடக்கூடிய பலவித ரசாயனங்களையும் இங்கெ  கொண்டாந்துட்டாங்க. இப்பம் பாருங்க, ஆலையை ஒட்டி இருக்குற ஒரு நீரோடையையே எப்படிக் கொன்னுட்டாங்கன்டு. வெறும் கழிவுநீரு இல்ல தம்பி இது, ரசாயனக் கழிவு. இது கடல்ல கலந்து கடல் எப்பிடி செவப்பா இருக்கு பாருங்க. கடலோட நெறமே மாறுதுன்டா எத்தன லட்சம் லிட்டர் இப்பிடிக் கடல்ல கலந்துருக்கும்? அது பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி?” என்கிறார் உடன் வந்த பெரியவர் சேக்கணா.

அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். என் கண்கள் அப்படியே அந்த நீரோடையில் குத்தி நிற்கின்றன. இப்படி ஓடையிலிருந்து வெளியேறும் நீர், தடையில்லாமல் கடலுக்குச் செல்ல ஏதுவாகக் கடலை நோக்கி வடிகால் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

காயல்பட்டினம் மக்கள், தங்கள் ஊர்க்காரர்கள் புற்றுநோயால் மாண்டுபோக முக்கியமான காரணம் இந்தச் சூழல் சீர்கேடுதான் என்று வலுவாக நம்புகிறார்கள். “இந்தப் படங்களையெல்லாம் பாருங்க” என்று காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கே. சாலிஹ் காட்டும் படங்கள், ஆலை உருவாக்கும் அவலச் சூழலுக்கு வலுவான ஆதாரங்கள்.

“யாரும் வர முடியாத எடம் இது. ஆள் அரவம் கிடையாது. ஆனா, ஆலைக்காரங்க ஆளுங்க இங்கே கூடாரம் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. நடுராத்திரில கால்வாயை வெட்டிக் கடல்ல கலக்க விடுற வேலை நடக்கும். நாங்க வர ஆரம்பிச்சதும் வேட்டை நாய்ங்களை வெச்சுத் துரத்த விரடறது, கையில அரிவா, கத்தி வெச்சிகிட்டு மெரட்டுறதுன்டுனு நிறையப் பண்ணிப் பார்த்தாங்க. நாங்க தனியாளா இருந்தா வேலைக்காவாதுன்டு ஊருல ஒரு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பைத் தொடங்குனோம். இங்கே தினம் வர்றது, போட்டோ எடுக்குறது, அரசாங்கத்துக்கு ஆதாரபூர்வமா புகார் அனுப்புறதுன்டுனு களத்துல எறங்குனோம். ஆஷீஷ் குமார் ஆட்சியரா இருந்தப்போ, இங்கே எங்க புகாரைக் கேட்டு நேர்ல வந்தார். எவ்வளவு பெரிய கொடுமை இதுன்னு கொந்தளிச்சுட்டார். நடவடிக்க எடுக்குறதுக்குள்ள அவரு வேற எடம் போய்ட்டார். இப்பம் உள்ள ஆட்சியருகிட்ட மறுபடியும் பூரா சரித்திரத்தையும் கொடுத்து, நம்பிக்கையோட காத்திருக்கம்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆலையிலிருந்து புகை வெளியேறுகிறது. நெடி காற்றை நிறைக்கிறது. “ஆரம்பமாயிட்டு… கடவுளே” என்று சொல்லியவாறே தலையில் அடித்துக்கொள்கிறார்.


கடலோரம் கால் பதித்த கரும்பிசாசு தொழில்


கன்னியாகுமரி மாவட்டம். மணவாளக்குறிச்சி. உயரமான சுற்றுச்சுவர்களால் வளைக்கப்பட்டிருக்கும் அந்த வளாகத்தில், ‘இந்திய அரிய மணல் ஆலை' எனும் பெயர் பலகையைத் தாண்டி, உள்ளே ஒரு ஆலை இயங்குவதற்கான எந்த அடையாளமும் வெளியே இல்லை. உள்ளே மலை மாதிரி குவிக்கப்பட்டிருக்கும் மணலைப் பார்க்கும் வெளியூர்க்காரர்கள் எவருக்கும் அவர்களுடைய சிறு பிராயத்து மணல் ஆட்டம் ஞாபகத்துக்கு வரும். கடற்கரை யோர மக்களோ அதைக் கரும் பிசாசு என்கிறார்கள்.

கனிம மணல் என்றால் என்ன?


தமிழகத்தின் தென்பகுதி கடற்கரையின் மணலைக் கருமணல் என்று சொல்கிறார்கள். ஏராளமான கனிமங்களை உள்ளடக்கிய இந்த மணலிலிருந்து இலுமனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட், சிலிமினேட், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்தெடுக்கப்படு கின்றன. சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது. இந்தக் கருமணல் இயல்பிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டது. அதைத் தோண்டிக் கையாளும்போது, அதிலுள்ள கதிரியக்கம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். புற்றுநோய்க்கான முக்கியமான காரணிகளில் கதிரியக்கமும் ஒன்று என்பதுதான் கருமணலைக் கரும் பிசாசு என்று கடற்கரை மக்கள் அழைக்கக் காரணம்.

தமிழகக் கடற்கரைக்கு வந்த முதல் அபாயம்


தமிழகக் கடற்கரையில் இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா நவீனத் தொழிலகக் கட்டமைப்புகளுக்கும் தொடக்கப் புள்ளி மணவாளக்குறிச்சி ஆலை. “1908-ல் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்த ஹெர்ஸ் ஸ்கோன்பெர்க் என்பவர்தான் தமிழகக் கடற்கரைக்கு இந்த ஆலை வந்த கதையின் சூத்திரதாரி. வெகு விரைவில், ஆங்கிலேய அரசு இதைப் பெரிய அளவில் விஸ்தரித்தது. சுதந்திரத்துக்குப் பின், 1963-ல் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இந்திய அணுசக்தித் துறை கொண்டுவந்தது” என்று ஆலையின் வரலாற்றைச் சொல்கிறார் ஆய்வாளரும் ‘தாது மணல் கொள்ளை' நூலாசிரியருமான முகிலன். இன்றைக்குத் தென்தமிழகக் கடற்கரையைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கனிம மணல் கொள்ளையர்களெல்லாம் இந்த ஆலையைப் பார்த்துதான் தொழில் கற்றிருக்கின்றனர். ஆண்டுக்கு 90,000 ஆயிரம் டன் இலுமனைட், 10,000 டன் சிர்கான், 10,000 டன் கார்னெட், 3,500 டன் ரூட்டைல், 3,000 டன் மோனசைட்டைக் கருமணலிலிருந்து பிரித்து இந்த ஆலை உற்பத்தி செய்கிறது. கோடிகளில் புரளும் இந்நிறுவனம், தொழிலை மேலும் விஸ்தரிக்க சுற்றுப்புறக் கிராமங்களைத் தேடுகிறது.

முதல் கள பலி


ஒரு நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். எந்த ஒரு நவீனக் கட்டமைப்பும் இயற்கையின் சூழல் கட்டமைப்பில் சில சேதங்களை உருவாக்கவே செய்யும். ஆனால், அந்தக் கட்டமைப்புகள் முற்றிலுமாக இயற்கையைச் சிதைக்கும் அளவுக்கு மோசமானவையாக மாறி விடக் கூடாது. மக்களின் வாழ்வைச் சீரழிப்பதாக மாறிவிடக் கூடாது. ஒரு வரையறைக்குள் செயல்படுத்தப்படுவது அவசியம். இந்தியாவின் சாபக்கேடு என்னவென்றால், வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பலவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் முதல் களபலி கேட்பதும் வரையறைக்கு அப்பாற்பட்டு சூறையாடுவதாக மாறுவதும். இந்திய அரிய மணல் ஆலை, தனக்காகத் தம் ஊரையும் நிலத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்களுக்குச் செய்தது என்ன? ஆலையையொட்டி உள்ள சின்னவிளை கிராமம் உதாரணம்.

சுரண்டல் கதைகள்


அடிப்படையில் கடலோடிகளின் கிராமமான சின்னவிளையில் ஆகப் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மக்கள். விரல் விட்டு எண்ணிவிடும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள் ஊரில் வசிக்கின்றன. ஊர் மக்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். என்றாலும், நல்லது கெட்டது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஊரின் மதகுரு அருட்தந்தை பெஞ்சமினை நோக்கி விரலைக் காட்டுகிறார்கள். “இந்த ஆலை இயங்குறதுக்கான இடம் கொடுத்ததுல ஆரம்பிச்சு, இங்கே கூலி வேலைக்குப் போய் இந்த ஆலை இயங்குறதுக்கான எல்லா அடித்தளமும் நம்ம ஊர் மக்கள்தான். ஆனா, பதிலுக்கு ஆலை என்ன பண்ணுச்சுன்னு மட்டும் நான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார் பெஞ்சமின்.


“ஆலை தொடங்குனப்போ ஊரோட எல்லா இடத்தையும் ஆலை எடுத்துக்கிட்டு, மக்களுக்கு குடும்பத்துக்கு ரெண்டரை சென்ட் மட்டும் கொடுத்துச்சு. இன்னைக்குத் தலைமுறை ஓடிப்போச்சு. அன்னைக்கு இப்படி ரெண்டரை சென்ட் எடத்துல வாழ ஆரம்பிச்சவங்களுக்கு இன்னைக்குப் பேரப்பிள்ளை ஆகிப்போச்சு. இன்னும் அந்த எடத்தைத்தான் உடைச்சி உடைச்சி வாழ்ந்துகிட்டிருக்காங்க. ஊருல வேற எடம் இல்லை. வயசுப் பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு எப்படி இத்தனை சின்ன எடத்துல வாழ முடியும். ஒரு ரெண்டு ஏக்கர் நெலத்தை மக்களுக்குக் கொடுங்க; நாங்க பகிர்ந்துக்குறோம்னு ஆண்டுக் கணக்கா கேட்குறோம். ஆலை என்ன செய்யுது தெரியுமா? பதிலுக்கு எங்ககிட்ட இருக்குற கொஞ்ச நஞ்ச எடத்தையும் கேட்குது.மழை கொட்டுற நாள்லகூட இங்கே நெலத்துல கால் சுடும். அவ்வளவு கதிரியக்கம். இதோ, இப்பகூட செல்சியானு ஒரு குழந்தை புற்றுநோயால பாதிக்கப்பட்டிருக்கு. ஏழாவது படிச்சுக்கிட்டுருந்தது. நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளை. ரத்தப் புற்றுநோய்னு தாய் - தகப்பன் தூக்கிக்கிட்டு சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் மாத்திமாத்தி அலையுறாங்க. 


அன்னாடம் நூறு இருநூறுக்குப் பிழைக்குற மக்கள், தொழிலை விட்டுட்டு ஊர் விட்டு ஊர் போய் அறை எடுத்துத் தங்கி, பல்லாயிரக் கணக்குல மருத்துவச் செலவு பாக்குறதுன்னா சாமானியமா? இந்த ஊர் மக்கள் எவ்வளவோ இழந்திருக்காங்க இந்த ஆலைக்காக. ஆனா, இப்பவும் இந்த ஆலைக்கு எதிரா நானோ, ஊரோ பேசலை. ஆலை வேணாமின்னு சொல்லலை. காரணம், இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலானவங்க அங்கதான் கூலி வேலைக்குப் போறாங்க. பிழைப்புக்கு அதைத்தான் நம்பியிருக்காங்க. அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, குறைஞ்சபட்ச நியாயமின்னு ஒண்ணு இருக்கணுமா வேணாமா? 

ஊர்லேர்ந்து கூலி வேலைக்குப் போறவங்க, சொற்பத் தொகைக்கு ஒப்பந்தக் கூலியாத்தான் போறாங்க. உள்ள நிரந்தரமா வெச்சிருக்குற தன்னோட அதிகாரிங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு மொறை கதிரியக்கப் பாதிப்புப் பரிசோதனை நடத்துது ஆலை. அவங்களுக்குக் கதிரியக்கப் பாதிப்பு அதிகமானா, தேவையான சிகிச்சைகளைத் தருது. புற்றுநோய் பாதிப்பு வந்தாக்கூடப் பணிப் பாதுகாப்பு அவங்களுக்கு உண்டு. கூலித் தொழிலுக்குப் போற எங்க ஊர் மக்கள்ல இப்படி ஒருத்தர் பாதிக்கப்பட்டா, அத்தோட அவர் கதை முடிஞ்சுது. வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஊர் வளர்ச்சி நிதின்னு சொல்லி பேர் பண்ணுறதோட ஆலையோட கடமை முடிஞ்சுது. வெளிய பாருங்க. இந்தச் சாலையைத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் மொறை பயன்படுத்துது ஆலை. என்ன லட்சணத்துல கெடக்குது பாருங்க” என்று சாலையைக் காட்டும் பெஞ்சமின் சொல்கிறார். “வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிற மக்களோட கதியே இப்படின்னா, எதிர்க்குற மக்களோட நெலைமை நம்ம நாட்டுல எப்படி இருக்குனு யோசிச்சுப்பாருங்க!”

சின்னவிளையிலிருந்து கடியப்பட்டினம் போனபோது கதிரியக்கத்தின் தாண்டவம் கலங்க வைத்தது.

வரவேற்கிறது சாவு


கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது’  சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது’ பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே ‘அது’ வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது. தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது’ கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள்  ‘அது’ கொன்றுபோடுகிறது.

கேட்க முடியாத கதறல்கள்


“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு. ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”


- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.


ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.


யாருக்கும் தெரியவில்லை!


கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார். “ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.

கடற்கரை முழுவதும் பாதிப்பு


இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.

ஒரு உயிர் ஒரு உலகம்


காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. 


பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.

புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்


இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள். “ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.  ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். 


புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்டமைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.

ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.

தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்றுதான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?கடலில் ஓர் அபாய வளையம்


தமிழகக் கடற்கரை எவ்வளவு அபாயகரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர / உணர்த்த ஒரு சின்ன முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். தமிழகக் கடற்கரையின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு புள்ளிவைக்கும் முயற்சி. தமிழகக் கடல் எல்லை தொடங்கும் திருவள்ளூர் மாவட்டம் முதல் முடியும் குமரி மாவட்டம் வரை. கடலோடிகளும் வாசகர்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்ட தொழிலகங்களின் பட்டியல் வரிசையாக நீள்கிறது. சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும், மாசை உருவாக்கும், அபாயகரமான பின்விளைவுகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் வாய்ப்புள்ள அணு மின்உலைகள், கனிம மணல் ஆலைகள், அனல் மின்நிலையங்கள், பெரிய அளவிலான ரசாயன ஆலைகள். எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ / செயல்படவிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒரு புள்ளி. வேலை முடிந்தபோது பெரும் அதிர்ச்சி. தமிழகக் கடற்கரையைச் சுற்றிலும் புள்ளிகள்.

கதிர்வீச்சர்கள்


இந்தப் பக்கம் கல்பாக்கம். அந்தப் பக்கம் கூடங்குளம். தமிழகத்தில் இந்த இரு இடங்கள்தான் அணுசக்தி மையங்கள் என்றாலும், வீரியத்தில் தேசிய அளவில் முக்கியமானவை இவை இரண்டும். கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் முதல் 1,000 மெகா வாட் அணு உலை என்பதைத் தவிர தொழில்நுட்பரீதியாக முதல் பிடபிள்யூஆர் அணு உலை, வி412 அணு உலை. மேலும், 5 அணு உலைகள் கூடங்குளத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், இரு அணு உலைகள், அணுக்கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை ஏற்கெனவே செயல்படுகின்றன. தவிர, மூன்று ஈனுலைகள், அணுக் கழிவு மேலாண்மை மையம், அணுக் கழிவு மறுசுழற்சி ஆலைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணுசக்தி மையங்களைத் தவிர, குமரி, நெல்லை, தூத்துக்குடி மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் கனிம மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் குட்டி கதிரியக்க வெளியீட்டு ஆலைகள்.

அனல்கக்கர்கள்


இந்தப் பக்கம் எண்ணூர். அந்தப் பக்கம் தூத்துக்குடி. வரிசை யாக அமைந்திருக்கும் அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் கட்டுமானத்தில் இருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றைக் காட்டிலும் அதிகம் திட்டமிடப்பட்டிருக்கும் அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கை. செய்யூர், பரங்கிப் பேட்டை, பெரியபட்டு, புதுப்பட்டினம், திருக்குவளை, கீழப்பெரும் பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம், தலைச்சங்காடு, ஒக்கூர், வெங்கிடங்கால், வேலங்குடி, பெரிய கண்ணமங்கலம், மாணிக்கப் பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி, உப்பூர், வேம்பார், உடன்குடி... நீண்டுகொண்டே போகிறது பட்டியல்.

நச்சுப்புகையர்கள்


அனல் மின்நிலையக் கட்டுமானங்கள் எங்கெல்லாம் விடுபட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இடைவெளியை அடைக்கின்றன ரசாயன ஆலைகள். கடலூர், தூத்துக்குடி ரசாயன ஆலைகளுக்கெல்லாம் சவால் விடக்கூடும், எதிர்காலத்தில் சீர்காழியையொட்டி 256 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருக்கும் பெட்ரோலிய மண்டலத்தில் அமையவுள்ள பெட்ரோலிய, ரசாயன ஆலைகள்.

பாதிப்புகள் - எச்சரிக்கைகள்


“தொழில் வளர்ச்சியை நாங்க எதிர்க்கலை. ஆனா, எந்தத் தொழிலும், ஆலையும் அறத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குணுமா, இல்லையா? அதைத்தான் கேக்குறோம். கல்பாக்கத்துக்கு நான் வந்து 24 வருஷம் ஆகுது. இந்த 24 வருஷங்கள்ல இந்தப் பக்கக் கடலோரக் கிராமங்களோட சிதைவை என் கண் முன்னே அணுஅணுவா பார்த்துக்கிட்டிருக்கேன். முதல்ல மீன் வளம் கொறைஞ்சுச்சு. தொழிலைவிட்டு, வேலை தேடி வெளியே போக வேண்டிய நெலைமை கடலோடிகளுக்கு ஏற்பட்டுச்சு. அடுத்து, புற்றுநோய்ல ஆரம்பிச்சு பிறவிக்குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு வரைக்கும் எப்படி வாழ்க்கையைச் சீரழிக்குதுன்னு ஒரு மருத்துவனா என்கிட்ட வர்ற மக்களைப் பார்த்துத் துடிச்சுக்கிட்டிருக்கேன். அணு சக்தித் துறை சார்புல நியமிக்கப்பட்ட மஞ்சுளா தத்தாவோட ஆய்வறிக்கையே கல்பாக்கம் அணு உலை பக்கத்துல இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களுக்குப் புற்றுநோய் வாய்ப்பு 700% அதிகம்னு சொல்லுது. ஆனா, அந்த மக்களோட பாதுகாப்புக்கு நாம செஞ்சிருக்கிறது என்ன? அமெரிக்கா, ஜப்பான் மாதிரி நாடுகள்ல, இப்படிப் பாதிக்கப்படுற மக்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீடாவது கிடைக்கும். சட்டம் இருக்கு. இங்கே அதுக்கும் வழி இல்ல.

அணு உலை கதிரியக்கத்தால ஏற்படுற பாதிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி ஒரு ஆலையைச் சுத்தி இருக்குறவங்களுக்கு அபாய காலத்துலேர்ந்து எப்படிச் செயல்படணும்கிற முன்னேற்பாடு கள், எச்சரிக்கை நடவடிக்கைகளெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படணும் இல்லையா? நம்ம ஊர்ல அதெல்லாம் எந்த அளவுல இருக்கு? மனசாட்சி உள்ள ஒரு மனுஷன், இதோட முழு அபாயங்கள் அத்தனையையும் புரிஞ்ச மருத்துவன் எப்படிங்க வாய் மூடிப் பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?” என்று கேட்கும் மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இந்தப் பகுதி கடலோர மக்கள் மத்தியில் எளிமையான மருத்துவ சேவைக்கான நன்மதிப்பைப் பெற்றவர்.

“தமிழகக் கடற்கரையோரத்துல, கடல்ல நதிகள் கலக்குற இடங்களுக்குப் பக்கத்துலன்னு வரிசையா நாம ஆலைகளை நிறுவிக்கிட்டுருக்கோம். தமிழகக் கடற்கரை ஒரு அபாய வளைவு மாதிரி ஆயிக்கிட்டுருக்கு. நம்மளோட கடல் சூழலை மட்டும் இல்லை; நிலத்தடி நீர்மட்டத்தை, விவசாயத்தை, நம்மளோட உடல் நலம்னு எல்லாத்தையும் பாதிக்கக் கூடியது இந்த அபாய விளைவு. இன்னைக்குப் பாதிக்கப்படுற மக்கள் எழுப்புற குரல் நாளைக்கு நமக்கான எச்சரிக்கைக் குரல்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். தமிழகக் கடலோரப் பகுதிகள் நெடுக ஆய்வுகள் நடத்தி, தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பேசிவரும் செயல்பாட்டாளர்.

“கூடிப் பேசும்போது எல்லாரும் சமம்; நம்ம எல்லாரோடய வளர்ச்சிக்காகவும்தான் இதெல்லாம் நடக்குதுன்னு கேக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, இதோட ஆதாயம் காஷ்மீர் வரைக்கும் போவும். பாதிப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும்தானே? பெரிய அளவுல யோசிச்சா இப்பிடி. சின்ன அளவுல யோசிங்க. லாபம் யாருக்கோ, நஷ்டம் கடக்கரை மக்களுக்கு. சுனாமி வந்தப்போ யாரு உசுரு மொதல்ல போச்சு? நாளைக்கு நீங்க கொண்டார்ற எந்தத் திட்டத்தால எந்தத் தீங்குன்னாலும் மொத பறிபோகுற உசுரு, எங்க உசுரு, எங்க புள்ளைங்க உசுருதானய்யா? அப்போம் எங்க கொரலுக்கு என்ன மதிப்பு கொடுக்குதீங்க?” என்கிறார் பரமசிவம். கடலோடி.

அபலைகளின் குரல் கேட்கிறதா?


காயல்பட்டினம் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.


“இது எங்க ஊர் பிரச்சினை மட்டும் இல்ல சார்.  இப்பிடி ரசாயனக் கழிவு பட்ட, இங்கெ வெளையுற நெல்லை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? வளர்ச்சி வளர்ச்சினு வாய் கிழியப் பேசுறாங்களே... அதை அனுபவிக்கிறது யாரு? அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு? இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக்கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையையெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக்கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா?”

காலில் மோதும் அலைகளின் சிவப்பு நிறம் துடிக்கும் கடலின் ரத்தமாகச் சூழ்கிறது.

No comments:

Post a Comment