Tuesday 27 November 2018

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.




இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன், லெப்ரினன் கேணல் கில்மன் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையாரான கந்தையா வேலாயுதபிள்ளை பிரதான ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 2008 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டுவரை தமிழ் மக்கள் தமது உறவுகளான மாவீரர்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தமுடியாத இராணுவ அச்சுறுத்தல்களும் அடாவடிகளும் காணப்பட்டன.
அக்காலப் பகுதிகளிலும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி இராணுவ அச்சுறுத்தலை தாண்டி தமது உறவுகளுக்கு சுடரேற்றி உணர்வோடு நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தி வந்தனர்.
தொடர்ந்து வந்த காலங்களில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மகிந்தவின் ஆட்சி அகற்றப்பட்டு இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனையடுத்து இராணுவ அடாவடிகள் ஓரளவுக்கு ஓய்வடைந்தன .

தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியிருந்த இராணுவத்தினர் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றனர்.
ஆனாலும், இராணுவ அச்சுறுத்தல்களும் ஒட்டுக்குழுக்களின் அடாவடிகளும் அகலாது தொடர்ந்தன.
இந்நிலையில் தமது உறவுகளை அவர்களுக்குரிய வணக்க இடமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்றைய தினம் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த பற்றைக் காடுகளை அகற்றுவதற்காக சு.பசுபதிப்பிள்ளை தலைமையிலான 15 பேர் அடங்கியோர் பல அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தற்துணிவுடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

அச்செய்தி அனைவருக்கும் தெரியவர தமது உறவுகளை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் செல்லக் காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் திரண்டு வந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
இச்செய்தி பரவியதும் தாயகத்திலுள்ள பல பாகங்களிலும் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகள் இடம்பெற்று இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் மீண்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியாக மாவீரர்களுக்குச் சுடரேற்றி துயிலுமில்ல மரபுகளின்படி வணக்கம் செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வுகளிலிருந்து அழிக்க முடியாத நினைவெழுச்சி வணக்க நாளாக தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிறைந்துள்ளது.


Monday 26 November 2018

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆங்காங்கே வே.பிரபாகரனின் கருத்துக்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அத்துடன் நள்ளிரவில் மாணவர்களால் பிரபாகரனின் பாரிய உருவப்படம், வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில், அவரது வீடு இருந்த இடத்துக்கு முன்பாக உள்ள வீதியை இன்று காலை துப்புரவு செய்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை சிறிலங்கா காவல்துறையினர் பறித்துச் சென்றனர்.
அத்துடன், அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு வீதியால் சென்றவர்களும் சோதனையிடப்பட்டனர்.
இந்த நிலையில், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடத் தயாராக இருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா உள்ளிட்ட 7 பேர்  வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், வழக்குத் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.


Friday 23 November 2018

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.



ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.
மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. 

நாடாளுமன்றத்துக்குச் செல்லாமலேயே, வெட்டியாடி விடலாம் என்று போடப்பட்ட கணக்கு, பிசகிப்போனதால், இப்போது நாடாளுமன்றத்துக்குள் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையிலும், கீழிறங்க மறுத்து, பிரதமராக நீடித்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அமைச்சரவையும் எப்படியும் தமது நிலையைக் காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகங்களும், இதை முடக்கிப்போட எதிர்க்கட்சிகள் நகர்த்தும் காய்களும், இலங்கை அரசியலை உச்சக்கட்டப் பரபரப்புக்கு  உள்ளாக்கியிருக்கின்றன.
அரசமைப்பிலும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிலும் உள்ள ஓட்டைகளுக்குள்ளாலும், சந்து பொந்துகளுக்குள்ளாலும் நுழைந்து, தப்பித்துக் கொள்வதற்கு, இரண்டு தரப்பும் முண்டியடித்து முயற்சிக்கின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு, நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை, இப்போதைக்கு நிரூபிக்காமல், காலம் கடத்தவே விரும்புகிறது. இதை உணர்ந்து கொண்டே, ஐ.தே.க, எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது.

முன்னதாக, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்றே வாதிட்டு வந்தது ஐ.தே.கட்சி. அதுபோலவே, சபாநாயகரும் “மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது;  அவரது தரப்பினருக்கும் ஆளும்கட்சி ஆசனம் வழங்க முடியாது” என்றே கூறினார்.
ஆனால், நாம் விரும்பிய நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மஹிந்த தரப்புக் கூறியதால், வேறு வழியின்றிப் போராட்டத்தின் போக்கை மாற்ற வேண்டியிருந்தது.

பிரதமரைப் பதவி நீக்கியது செல்லாது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்று முரண்டு பிடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க தரப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனத்தை, ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததை ஏற்றுக்கொண்டால்தான், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரமுடியும். 

மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், நம்பிக்கையில்லாப் பிரேரணை முக்கியம். அதைக் கொண்டுவர வேண்டுமாயின்,  மஹிந்தவின் நியமனத்தை ஏற்க வேண்டும்.
இதனால் தான், வேறுவழியின்றி சபாநாயகரும், ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் ஆசனத்தை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்க இணங்கினர். அதுவே இப்போது, ஐ.தே.கவுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது..

“நாங்கள் தான் ஆளும்கட்சி” என்று கூறிக்கொண்டு, தற்போதைய நாடாளுமன்றத்தில், புதிய தெரிவுக்குழுவில் தமக்கு ஏழு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நிற்கிறது மஹிந்த தரப்பு. இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் தான், நாடாளுமன்ற அமர்வை சுமுகமாகக் கொண்டு நடத்த முடியும். ஆனால்,  ஐ.தே.கவோ இதை விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக, பிரதமராக ஏற்றுக்கொண்ட மஹிந்தவை இப்போது, ‘போலி பிரதமர்’ என்கிறது ஐ.தே.க. இந்தநிலையில், அவர்களின் தரப்புக்குத் தெரிவுக்குழுவில் ஏழு பேருக்கு இடமளித்தால், நாடாளுமன்றத்தில் தமது மேலாதிக்கம் இழக்கப்பட்டு விடும், தாம் முன்வைக்கும் பிரேரணைகள் இழுத்தடிக்கப்படவோ, முடக்கப்படவோ வாய்ப்புகள் உள்ளன என்று கருதுகிறது அந்தக் கட்சி.

இதனால் தான், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் பிரதமர், அமைச்சரவை, அவைத்தலைவர், அரசதரப்பு பிரதம கொரடா என்று யாரும் பதவியில் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்பும் ஆளும்கட்சி கிடையாது. எனவே, அவர்களுக்கு ஏழு ஆசனங்களைக் கொடுக்க முடியாது என்ற வாதத்தை ஐ.தே.க, முன்வைத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தான் உச்சஅதிகாரம் கொண்டவர். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதில் யாரும் தலையிட முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை, சபாநாயகர் அங்கிகரித்திருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், சபாநாயகரின் உத்தரவு, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஹன்சார்ட் பதிவுகள் எல்லாமே சட்டரீதியானவை என்பதால், மஹிந்த தரப்பு ஆளும்கட்சியாக அங்கிகாரம் கோர முடியாது என்ற வாதம், ஐ.தே.கவால் முன்வைக்கப்படுகிறது.

இதனால், தெரிவுக்குழு நியமனத்தில், நாடாளுமன்றத்தில் மீண்டும் குழப்பங்கள் உருவாகக் கூடிய சூழல், தோன்றி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கு, அடுத்தடுத்து ‘செக்’ வைப்பதில், ஐ.தே.க தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி, மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி வைக்கும் பிரேரணையைச் சமர்ப்பித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது ஐ.தே.க.
அந்தப் பிரேரணை, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டப்படி, அரசாங்க நிதியைக் கையாளும் பொறுப்பு, நாடாளுமன்றத்திடமே உள்ளது. அதன் அடிப்படையில் தான், இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஐ.தே.க, தமக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கவே, இந்த நிதிப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறது. நிதிப் பிரேரணை ஒன்றில் தோல்வியடைந்தால், அமைச்சரவை பதவியிழக்கும் என்பது மரபு.

ஆனால், மஹிந்த தரப்போ, “நிதிப் பிரேரணைகளை அரசாங்கத் தரப்புத் தான் முன்வைக்க முடியும். எதிர்க்கட்சியால் அவற்றை முன்வைக்க முடியாது” என்றும் கூறுகிறது. 

தினேஷ் குணவர்த்தன, ஜோண் செனிவிரத்ன உள்ளிட்டவர்கள், இந்தக் கருத்தை முன்வைத்திருப்பினும், இந்த விடயத்தில், சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட வேண்டியுள்ளது என்றும், மஹிந்த சமரசிங்க போன்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்  சிலர் கூறியுள்ளனர். ஆனாலும், இந்தப் பிரேரணை, 29ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஒழுங்குப்பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டுமோ இல்லையோ, அவரால், தொடர்ந்தும் தனது செயலகத்தை, அதிகாரபூர்வமாக நடத்திச் செல்ல முடியாது போகும். இதனால் தான், நாடாளுமன்றத்தில், இந்தப் பிரேரணை முன்வைக்கப்படும் போது, மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்தச் சூழலில், மஹிந்த தரப்பின் மீது, அடுத்த பந்தை வீசியிருக்கிறது ஐ.தே.க. இது, எல்லா அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கும் வைக்கப்பட்டிருக்கின்ற ‘செக்’. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் ஆளணியினருக்கான சம்பளம், சலுகைகள், வசதிகள் எதையும் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தப் பிரேரணை, புதன்கிழமை (21) நாடாளுமன்றச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பயணங்களுக்களுக்கும் உள்நாட்டில் ஹெலிகொப்டர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட, தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, மஹிந்த தரப்பினர்  அமைதியாக இருப்பார்கள் என்று, எதிர்பார்க்க முடியாது.

எப்படியாவது கிடைத்த அதிகாரத்தை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். அவ்வாறு அதிகாரம் கை விட்டுப் போனால், தமது திட்டம் தோல்வியில் முடிந்து விடும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

அதனால், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, இந்தப் பிரேரணைகளில் இருந்து தப்பிக்க முனைகின்ற நிலையிலேயே மஹிந்த தரப்பு இருக்கிறது. ஐ.தே.கவின் ‘மறுத்தான்’ ஆட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும் போது, மஹிந்த தரப்பு வன்முறையை ஆயுதமாகக் கையில் எடுக்கும்.

நாடாளுமன்றத்தைக் குழப்பிக் கூச்சலிட்டு, சபையை நடத்த விடாமல் தடுக்கும் அராஜகம் அரங்கேறும். இதுதான் நடந்து வருகிறது இனியும் நடக்கப் போகிறது. நாடாளுமன்றத்தை பயனுள்ள வகையில் நடத்திச் செல்லும் திட்டம் ஏதும், மைத்திரி- மஹிந்த தரப்புகளுக்கு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

மாறி மாறி, ‘மறுத்தான்’ ஆட்டங்கள் ஆடப்படும் நிலையில், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி, காலத்தை இழுத்தடிப்பது தான், அவர்களின் இப்போதைய இலக்காகத் தெரிகிறது. 

Tuesday 20 November 2018

அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்

‘அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது ஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராக நியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராக இருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள் அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால் இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம். அப்பாவின் முகம் சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால் வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய வகுப்பாசிரியர் அப்பாவின் கோரிக்கையினை நிராகரிக்க முடியாத நிலையில் உதவி மாணவத்தலைவரை பதவி நீக்கினாராம்.இந்த செய்தியை கேள்விப்பட்ட பின்னரே அப்பா பாடசாலைக்கு சென்றாராம்…..’



ஜனாதிபதி அப்பா என்ற சதுரிகா சிறிசேனா வின் நூலில் இருந்து.
சூரன் போரிலன்று வழங்கப்பட்ட தீர்ப்பு சூரனுக்கு எதிராக அமைந்துவிட்டதென்று சந்தையில் ஒரு வர்த்தகர் சொன்னார். நடந்தது சூரன் போரல்ல அது முருகனுக்கும், சூரனுக்கும் இடையிலானதல்ல. அது சூரனுக்கும் சூரனுக்கும் இடையிலானது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் டீடீஊக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டியை பார்த்தால் தெரியும். இனப்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு அவர் வழுக்கி வழுக்கி பதில் சொல்கிறார். அவரிடம் துலக்கமான, திட்டவட்டமான பதில்கள் இல்லை. பெருமளவுக்கு நழுவிச் செல்லும் சமயோசிதமான பதில்களே உண்டு. அதாவது சிங்களக் கடும்போக்குவாதிகளை எதிர்த்து கொண்டு ஒரு தீர்வை முன் வைக்கும் அரசியல் திடசித்தம் அவரிடமும் இல்லை.
யாப்பு மீறப்பட்டதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டதும் இதுதான் முதற் தடவை அல்ல. யாப்பு எப்பொழுது இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ அப்போதே அது அதன் புனிதத்தை இழந்துவிட்டது. இன ஒடுக்குமுறைதான் இலங்கை தீவின் ஜனநாயகத்தை சீரழித்தது. எனவே இன ஒடுக்கு முறைக்கு பரிகாரம் காணப்படும் போதுதான் ஜனநாயகம் செழிப்புறும், யாப்பும் மாண்புறும் அதல்லாத எல்லாச்சிறு வெற்றிகளும் மேலோட்டமானவை. தமிழ் மக்களை ஒடுக்கும் இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியை ஜனநாயக மீட்சிக்கான ஒரு புனிதப் போராக தமிழர்கள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரு பெரும் கட்சிகளும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை சூரர்கள்தான். அது சூரர்களின் நாடாளுமன்றம்தான். கடந்த வியாழனும் வெள்ளிக்கிழமையும் அதைத்தான் அவர்கள் அசிங்கமாக நிரூபித்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாகிய ஜயவர்த்தன ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை பிரயோகிக்கும் விதத்தில் யாப்பை மாற்றினார். தனக்கு கிடைத்த மிகப் பெரிய மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்தார். மக்கள் ஆட்சிக்கெதிராக ஒரு மன்னராட்சியை ஸ்தாபிக்கும் விதத்தில் யாப்பை மாற்றியமைத்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் செய்யத்தக்க அதிகாரங்கள் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு உண்டு என்று கூறினார். ஜயவர்த்தனவுக்குப் பின் வந்த அனைவரும் அந்த அதிகாரங்களைக் குறைப்பதாகக் கூறி வாக்குறுதியளித்தே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அரசனுக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்த பின் வாக்குறுதியை மறந்ததுடன் எப்படி அடுத்த தடவையும் அச்சிம்மாசனத்தில் அமர்வதென்று சிந்திக்க தொடங்கினர். பிறேமதாசவும் அப்படித்தான்;. சந்திரிக்காவும் அப்படித்தான். ஏன் மைத்திரியும் அப்படித்தான். ஆனால் மைத்திரியின் விடயத்தில் ஒரு சிறு வேறுபாடு உண்டு. ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களை இழப்பதற்கு தயாராக 19வது திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் மூலம் அவர் உள்நாட்டிலும், உலக அளவிலும் எளிமையான, சாதுவான, பேராசைகள் அதிகமற்ற ஒரு தலைவராக காட்சியளித்தார். ஆனால் அது ஒரு பொய்த்தோற்றம் என்பதையே கடந்த 26ம் திகதி அவர் நிரூபித்தார். ஆணைப் பெண்ணாக்க முடியாது என்றாலும் அதில் அமர்பவரை அதிகாரப் போதையினால் பைத்தியம் ஆக்கிவிடும் சிம்மாசனம் அது என்பதற்கு அண்மை வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.

ஜயவர்த்தனா தனது யாப்பைப் பல தடவைகள் திருத்தினார். அதனால் அந்த யாப்பைக் குறித்து விமர்சிப்பவர்கள் பின்வருமாறு கூறுவதுண்டு. அந்த யாப்பை நூலகங்களில் ஆவணப் பகுதிக்குள் தேடக் கூடாது. பருவ இதழ் பகுதிக்குள்தான் தேட வேண்டுமென்று. ஆனால் கடந்த 26ம் திகதிக்குப் பின் மைத்திரி யாப்பை ஒரு ரொய்லற் பேப்பர்- கழிப்பறைக் கடதாசி-ஆக மாற்றி விட்டார். முடிவில் நாடாளுமன்றமே ஒரு கழிப்பறை போலாகிவிட்டது.கடந்த வியாழனும் வெள்ளியும் அங்கு நடந்தவை கழிப்பறை அரசியல்தான், இப்பொழுது யாப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறிவிட்டது. மகிந்த வெற்றி பெரும் வரையிலும் மைத்திரி அளாப்பிக் கொண்டேயிருப்பாரா? வரும் 07ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த யாப்பை பரிசுத்தப்படுத்துமா? இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை ரணிலும் அவருடைய நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். 07ம் திகதி கிடைக்கப் போகும் தீர்ப்பும் அவர்கள் கொண்டாடத்தக்கதாக அமைந்ததால் யு.என்.பியின் ஆட்சி தொடரக்கூடும. நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பது ரணிலுக்கு கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அவர் வென்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை தரமுடியாது என்பதுதான். மைத்திரி ரணிலை அகற்றுவதில் குறியாயிருக்கிறார் அவரை சுமுகமாக ஆட்சி செய்ய விடமாட்டார்.
மைத்திரியோடு சேர்ந்தியங்கிய கடந்த மூன்றரை ஆண்டுகால பகுதியிலும் ரணில் விக்கிரமசிங்க துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கவில்லை. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்திற்கெதிரான நிதி குற்றச்சாட்டுக்களை துரிதமாக விசாரித்து ராஜபக்ஷக்களை ஒரு வித முற்றுகைக்குள் அல்லது தற்காப்பு நிலைக்குள் தள்ள ரணிலால் முடியவில்லை. அல்லது அவர் விரும்பவில்லை.
ஆனால் அதேசமயம் ஐ.நாவிலும் உலக அரங்கிலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து அல்லது போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் விடயங்களை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். தமிழ் மக்கள் அனைத்துலக அளவிலான போர்க்குற்ற விசாரணை ஒன்றை கேட்கிறார்கள். ஆனால் ரணிலும், மைத்திரியும் சேர்ந்து அதை உள்நாட்டு விசாரணையாக சுருக்கி விட்டார்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களில் நீதிமன்றம் யாப்பைப் பாதுகாக்குமாக இருந்தால் அது இலங்கைத்தீவின் நீதிபரிபாலன கட்டமைப்பின் அந்தஸ்தை அனைத்துலக அளவில் உயர்த்தக் கூடியது. இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி விடும்.
ஜனாதிபதி யாப்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த தரப்புக்களில் கூட்டமைப்பும் ஒன்றாகும். கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இடைக்கால தடையை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முகநூலில் கொண்டாடினார்கள். நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று யு.என்.பி, மனோகணேசன், முஸ்லீம் கட்சிகள் போன்ற தரப்புகளுடன் சேர்ந்து எவெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் இலங்கைத்தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிப்பது போல ஒரு தோற்றம் உருவாகும் பொழுது அது அனைத்துலக விசாரணைக்கான தமிழ் மக்களின் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும் என்பதை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கவனிக்கத்தவறி விட்டார்கள். இவ்வாறானதோர் பின்னணியில் வரும் 07ம் திகதி வரப்போகும் தீர்ப்பு தமிழ்த்தரப்பிற்கு எவ்வாறான புதிய வாய்ப்புக்களைத் திறக்கும்?
யு.என்.பி வென்றால் அது ஒப்பீட்டளவில் கூட்டமைப்பை விட விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் அதிகரித்த வாய்ப்புக்களை கொடுக்கும். ஏனெனில் யு.என்.பியின் வெற்றியைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் ஒரு பங்காளி. எனவே யு.என்.பியின் ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்வதில் அவர்களுக்கு வரையறைகள் இருக்கும். ஆனால் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் அதை செய்யலாம். அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். எதிக்கலாம். குறிப்பாக விக்னேஸ்வரன் ஒரு பலமான எதிரணியை கட்டியெழுப்புவாராக இருந்தால் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதன் மூலம் தனது ஆதரவு தளத்தை உறுதியாக கட்டியெழுப்பலாம்.

அதே சமயம் நீதிமன்றம் ரணிலுக்கு பாதகமான தீர்ப்பை வழங்கினால் தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கும். அது மகிந்தவுக்கே அதிகம் வாய்ப்பாக அமையும். ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் கொழும்பிலுள்ள படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ரணிலின் மீது அனுதாபம் அதிகரித்துள்ளது. ஆனால் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த குடும்பந்தான் இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக போற்றப்படுகிறார்கள். எனவே ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகள் ஏனைய சிறு கட்சிகளோடு ஒரு பலமான கூட்டை உருவாக்க வேண்டியிருக்கும்.
ஸ்திரமற்ற யு.என்.பி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை மட்டுமல்ல. உடனடிப் பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, கைதிகளின் பிரச்சினை போன்றவற்றில் கூட தீர்வுகளை காண்பது கடினம். மைத்திரியும், ரணிலும் ஒன்றாக இருந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் கொண்டுவரத் தவறிய தீர்வுகளை இனி எப்படிக் கொண்டு வருவது? எனவே யு.என்.பியோடு சேர்ந்திருப்பதனால் தீர்வையும் பெற முடியாது. அதே சமயம் இணக்க அரசியலுக்கெதிரான குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் மறு வழமாக மகிந்த ஆட்சிக்கு வந்தால் முழுப்பழியையும் இனவாதிகளின் மீது சுமத்தி விட்டு கூட்டமைப்பானது தமிழ் மக்கள் முன் வெறும் கையோடு வந்து நிற்கும். தனது அரை இணக்க அரசியலின் தோல்வி மற்றும் தான் என்றைக்குமே நடாத்தியிராத ராஜதந்திரப் போரின் தோல்வி போன்ற எல்லாவற்றுக்குமான பழியை அவர்கள் சிங்கள இனவாதிகள் மீது சுமத்துவார்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகத் தாங்களும் தலை கீழாக நின்று தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் ஆதரவு தளத்தை கூட்டமைப்பும் பங்கு போடும்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் எதிர்ப்பு அரசியல்தான் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் களங்களில் தமிழ் இனமான அலை எனப்படுவது அதிக பட்சம் எதிர்ப்பு அரசியல் தடத்திற்குரியதுதான். எனவே ஒப்பீட்டளவில் ரணில் வருவதை விடவும் மகிந்த வந்தால் கூட்டமைப்பிற்கு அனுகூலம் அதிகம். சில சமயம் மகிந்த ஓர் உறுதியான ஆட்சியை அமைப்பதன் மூலம் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைத் தர முடியும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தர முடியாது. ஏனெனில் அவர் தனது சொந்த வெற்றியின் கைதியாவார். ஆட்சிக்கவிழ்ப்பின் பின் அவர் நடத்திய கூட்டமொன்றில் பின்னணியில் காணப்படும் தேசியக்கொடியானது தமிழ் மக்களுக்குக் கூரான ஒரு செய்தியைத் தருகிறது. அக்கொடியில் சிறுபான்மை மக்களைக் குறிக்கும் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன.
எனவே மேற்கண்டவற்றை தொகுத்து பார்;த்தால் கொழும்பில் இடம்பெற்று வரும் குழுப்பங்கள் எப்படிப்பட்ட திருப்பங்களை அடைந்தாலும் அதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. யாப்பை காப்பாற்றினோம். ஜனநாயகத்தை காப்பாற்றினோம் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு ஒரு மாய உலகத்துள் உழழ்வதை விடவும் இலங்கை அரசுக்கட்டமைப்பை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தருணமாக இதைப் பயன்படுத்த வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி அப்படிப்பட்ட ஓர் அனைத்துலக அபிப்பிராயத்தை உருவாக்கலாம். இந்த யாப்புக்குள் நின்று ஒரு தீர்வைப் பெற முடியாதென்பதற்கும் சிங்கள தலைவர்களை ஏன் நம்பக் கூடாதென்பதற்கும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஒரு மூன்றாம் தரப்பின் தலையீடின்றி இலங்கை தீவில் மூன்று சமூகங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைப் பெற முடியாது என்பதற்கு நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நிலைமாறு கால நீதியை ஏன் இலங்கைத்தீவில் வெற்றிகரமாக ஸ்தாபிக்க முடியாது என்பதற்கும் நடப்பு நிலவரங்கள் சிறந்த எடுது;துக்காட்டுக்களாகும்.

இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பையும், யாப்பு பாரம்பரியத்தையும் நாடாளுமன்ற பாரம்பரியத்தையும் மிளகாய்த் தூள் ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்துவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தத்தக்க தமிழ்த் தலைவர்களே தேவை. இன ஒடுக்கு முறையிலிருந்தே இலங்கைத் தீவின் ஜனநாயகப் பரம்பரை சீரழியத் தொடங்கியது என்பதை எடுத்துக் கூறத்தக்க தமிழ் தலைவர்களே இப்பொழுது தேவை. இரண்டு சூரர்களுக்கிடையில் ஒரு சூரனை முருகனாக்கும் அல்லது மண்டேலாக்கும் அரை இணக்க அரசியலானது வெற்றி பெறப் போவதில்லை. இரண்டுமே சூரர்கள்தான் என்று உலக சமூகத்திற்கு எடுத்துக்கூறவல்ல தலைவர்களே இப்பொழுது தேவை. அப்படிப்பட்ட தலைவர்கள் அரங்கில் யார் உண்டு? அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து போன தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொன்னார். ஈழத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகிறதென்பதே அது. விக்னேஸ்வரனையும் முன்னால் வைத்துக் கொண்டே அவர் அதைச் சொன்னார். மேற் சொன்ன காரியங்களை செய்யத்தக்க அரசியல் திடசித்தமும், தீட்சண்ணியமும் தீர்க்கதரிசனமும் மிக்க ஒரு தலைவரே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

Monday 19 November 2018

“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்!

சென்னை மற்றும் கேரள வெள்ளத்துக்கு ஓடியோடி உதவிய திரைத்துறையினர், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு இன்னும் பெரிய அளவிலான உதவிகளைச் செய்ய முன்வராதது, அம்மாவட்ட மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.



15ம் தேதி இரவு கோரதாண்டவமாடிய கஜா புயலால் டெல்டா மாவட்டமே சீர்குலைந்து கிடக்கிறது. 2004 சுனாமிக்கு பிறகு, தற்போது மீண்டும் அதே போன்றதொரு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது நாகை மாவட்டம்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் நாகை மாவட்ட மக்கள். சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு கணக்கிட்டுள்ளதாக தெரிகிறது.

மக்கள் அதிருப்தி:





இந்நிலையில், சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் ஓடி ஓடி உதவிய தமிழக திரைத்துறையினர், கஜா புயல் தாக்கி ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பெரிய நிதியுதவி ஏதும் செய்யாது ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்ற அதிருப்தி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

கேரள வெள்ளம்:


வழக்கமாக சமூகத்தில் நடக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது சினிமாகாரர்களாக தான் இருக்கும். அதேபோல், நிதியுதவி அளிப்பதிலும் முன்னே வந்து நிற்பவர்களும் தமிழ் திரைத்துறையினர் தாம். உதாரணத்துக்கு அண்டை மாநிலமான கேரளா பெரு வெள்ளத்தால் சிக்கி தவித்தபோது தமிழகத்தை சேர்ந்த சினிமாகாரர்கள் ஏராளமாக நிதியுதவி செய்தனர்.

சிவக்குமார் உதவி:





ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை ஒரு சிலர் மட்டுமே தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். குறிப்பாக நடிகர் சிவக்குமாரின் குடும்பம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

விஷால் ரசிகர்கள்:


விஷால் சார்பில் அவரது மக்கள் நல இயக்கத்தினர் நேரடியாக சென்று களப்பணியாற்றியுள்ளனர். நடிகர் ஆரி தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ததுடன், விஜய், அஜித் ரசிகர்கள் உதவ வேண்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோ:


இயக்குனர் சற்குணமும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, டெல்டா மாவட்டத்தின் நிலையை எடுத்துக்கூறி இருக்கிறார். ஆனால் பெரும்பாலான சினிமாக்காரர்கள் இரக்கத்தை வார்த்தைகளோடு தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டனர்.

அமைதி:




நடிகர் சங்கமோ, இயக்குனர்கள் சங்கமோ, தயாரிப்பாளர்கள் சங்கமோ இல்லை மற்ற எந்த சங்கங்களோ இதுவரை நிதியுதவி அறிவிக்கவில்லை. இதனால், தமிழ்த்திரையுலகம் மீது அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

உதவி தேவை:


அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போலவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினரும் தாராளமாக உதவ முன்வந்தால், இந்த பாதிப்பில் இருந்து அவர்களை விரைவில் மீட்டெடுக்க முடியும். விரைந்து செய்வார்கள் என நம்புவோம்.


Sunday 18 November 2018

கஜா பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புவது எப்போது?

பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி நாகை தரங்கம்பாடியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமடைந்தன.




கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-வது நாளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தாலும், பாதிப்பு அதிகமாக இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.



தஞ்சை மாவட்டம், ஆம்பளாபட்டு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் இல்லாமல், கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர். கஜா புயலால் அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய ஊர் சீர்குலைந்துவிட்டதாக வருத்தப்பட்ட இயக்குநர் சற்குணம், இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

பெற்ற பிள்ளைகள் கூட சோறு போடாத இந்தக் காலத்தில், தங்களுக்கு மூன்று வேளை சோறு போட்ட பயிர்கள் அழிந்துவிட்டதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், தங்களது வாழ்க்கையே 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

நெடுவாசல், கொத்தமங்கலம், வடகாடு, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களையும் கஜா புயல் பதம்பார்த்துவிட்டு சென்றுள்ளது. இந்த கிராமங்களை மீட்டெடுக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என கண்ணீருடன் கூறுகின்றனர் நெடுவாசல் மக்கள்.

பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி நாகை தரங்கம்பாடியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமடைந்தன.

வேதாரண்யத்தை சுற்றியுள்ள கருப்பம்புலம், நெய் விளக்கு, பெரிய குத்தகை, வேட்டைக்காரன் இருப்பு, அண்டர்காடு உள்ளிட்ட கிராமங்களில் அதிகாரிகளும் வரவில்லை, நிவாரணங்களும் வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அங்குள்ள நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ உதவிகள் இன்றி பெரும் அச்சத்தில் உள்ளனர்.



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரமின்றி குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களே ஒன்றிணைந்து நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து ஜெனரேட்டர் மூலம், ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இதேபோல், பட்டுக்கோட்டையில் 2 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லையென கூறி, மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி தடத்தில் உள்ள விளக்குடி சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் பினாயிலை குடிப்போம் என்றும் பொதுமக்கள் எச்சரித்தனர்.

டெல்டா மாவட்டங்கள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை

Saturday 17 November 2018

அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்..

இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.


இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது.

மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்பட்டது.

ரனில் விக்ரமசிங்கவின் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை மேற்கின் பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு முழு இலங்கையயும் விலை பேசிக்கொண்டிருந்தது. அத்தியாசியப் பொருட்களின் விலை நன்கு மடங்காக நான்கே ஆண்டுகளில் அதிகரித்திருந்தது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இவற்றிற்கு எல்லாம் எதிரான மக்களின் கோபத்தைப் பயன்படுத்திகொண்ட மைத்திரிபால சிரிசேன, சட்டவிரோதமாக மகிந்தவைப் பிரதமராக்கி அழகுபார்க்க விரும்பினார். கட்சி தாவலுக்காக பில்லியன்கள் வழங்கப்பட்டும், மகித்தவால பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்ட்தேர்தலை நடத்துவதாக மைத்திரி கும்பல அறிவித்தது.

நேற்றைய தீர்ப்பின் பின்னர், மைத்திரியின் திட்டம் தோற்றுப் போக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் முப்படைகளைம் அழைத்த மைத்திரி, இராணுவ சர்வாதிகார ஆட்சி ஒன்றிற்குத் திட்டமிடுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் அழிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. மகிந்தவின் தேர்தல் தோல்விக்குப் பின்னான காலத்தில் ஊடக சுதந்திரம் குறித்த எல்லை வரை வழங்கப்பட்டிருந்தது,கைதுகள் குறைந்திருந்தான, ஒரு வகையான அமைதிச் சூழல் கனிந்திருந்தது.

தமது நாளாந்த பொருளாதார சிக்கல்களையும் மீறி இச் சுதந்திரம் அவர்களுக்க்த் தேவைப்பட்டிருந்தது. முப்பது வருட போர்ச் சூழலிலிருந்து கிடைத்த புதிய குறைந்த பட்ச ஜனநாயகம் மக்களை மீண்டும் இயல்பான வாழ்க்கையை நோக்கி அழைத்து வந்திருந்தது.

இராணுவத்தின் நேரடி ஒடுக்குமுறை இல்லாமல், பல போராட்டங்கள் நடைபெற்றன; சிங்களப் பகுதிகளின் மட்டுமன்றி தமிழ்ப் பகுதிகளிலும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். பல புதிய கட்சிகள் தோன்றின. அரசியல் விவாதங்கள், நுல் வெளியீடுகள் என்று நீண்ட காலத்தின் பின்னர் புதிய சூழலுக்குள் மக்கள் நுளைந்திருந்தனர்.

இதன் மறுபக்கத்தில், மத்திய வங்கியில் ஆரம்பித்து பிரதேச சபை வரை ஊழல் தலைவிரித்தாடியது.

புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டுவதற்கும், ஜனநாயக வழியிலான அமைப்புக்களை உருவாக்குவதற்கும் யாரும் தயாராகவில்லை.

பிற்போக்கு புலப்பெயர் ஏஜன்டுகளாகச் செயற்பட்ட விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்ற அரசியல்வாதிளின் குழுக்கள் எதிர் அரசியலை பிரதியிட்டன.

இன்று மைத்திரி – மகிந்த இணைவு தற்காலிகப் பின்னடைவு என்பது மட்டுமன்றி இலங்கையின் அரசியலமைபு அதன் பேரினவாத உள்ளடக்கத்தால் எப்போதும் கேள்விகு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.

இந்த அச்சம் எதுவுமின்றி புலம்பெயர் நாட்டு தேசிய வியாபாரிகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் நேரடியாக ரனிலை எதிர்ப்பதும், மகிந்தவை மறைமுகமாக ஆதரிப்பதும் அவர்களை நிர்வாணமாக மக்கள் முன் அம்பலப்படுத்திர்யிருக்கிறது.

மகிந்த மீட்சி பெற்றால் ஏகாதிபத்திய நாடுகளை வளைத்துப்போட்டு ஈழம் பெற்றுவிடலாம் என்ற கனவை வேறு மக்கள் மத்தியில் விதைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இவை அனைத்துக்கும் இடையில் மைத்திரி தலைமையில் அவசரகால ஆட்சி தோன்றுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி

1603ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. ஒரு நிறுவனம், உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக நாட்டையே பிடித்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டியது.


ஆனால் அதற்காக ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சியில் இறுதியில் வெற்றியடைந்தாலும், பல அவமானகரமான தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.
தோல்விகளை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை நிரூபிப்பதில் வெற்றியும் கண்டது.
சிராஜ் உத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், கிழக்கு இந்தியா கம்பெனி முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எதிராக போரிட முயன்று படுதோல்வியை எதிர்கொண்டது.
பிறகு, பிரிட்டனின் தூதர்கள் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்டு, முகலாய அரசவையில் ஒளரங்கசீப் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் வர்த்தக மையங்களைத் தோற்றுவித்த கிழக்கிந்திய கம்பெனி, உலக அளவிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் பாம்பே, சூரத் நகரங்கள், கிழக்கு கடற்கரையில் சென்னை மற்றும் கல்கத்தாவில் இருந்து 20 மைல் தொலைவில், கங்கை நதியில் அமைந்துள்ள ஹூக்ளி மற்றும் காசிம் பஜார், ஆகிய வர்த்தக மையங்கள் கிழக்கத்திய கம்பெனியின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களாக விளங்கின.
இந்தியாவில் இருந்து பட்டு, வெல்லம், துணி மற்றும் கனிமத்தை பிரிட்டானியர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்தார்கள். குறிப்பாக டாக்காவின் மல்மல் ரக துணிக்கு இங்கிலாந்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
பிரிட்டானியர்களின் வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்படாமல், பொருளின் மொத்த மதிப்புக்கு மூன்றரை சதவிகித வரியை விதித்தது முகலாய பேரரசு.
மும்பை துறைமுகத்தில் வணிகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி
முகலாயர்களின் வணிகக் கொள்கை மீதான சர்ச்சை
அந்த சமயத்தில், ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, போர்த்துகீசியர்களும், டச்சு வணிகர்களும், பல தனியார் வர்த்தகர்களும் இந்த பகுதியில் தீவிரமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முகலாய அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்ட அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்த வணிக உரிமைகளை சொந்தமாக்க முயன்றனர்.
லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலகத்தின் தலைமையகத்திற்கு இந்த செய்தி கிடைத்ததும், நிறுவனத்தின் தலைவர் ஜோஜாயா சைல்டுக்கு கோபம் தலைக்கேறியது. தங்களது லாபத்தை வேறு யாரும் பங்கு போட்டுக்கொள்வதை அவர் விரும்பவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் ஜோஜாயா எடுத்த முடிவு வித்தியாசமானது மட்டுமல்ல, பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அரேபிய கடலிலும், வங்காள விரிகுடாவிலும் பயணிக்கும் முகலாயர்களின் கப்பல்களை வழிமறிக்கவும், அந்தக் கப்பல்களை கொள்ளையடிக்கவும் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இது மட்டுமல்லாமல், 1686 ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து இரண்டு படைவீரர்களின் தொகுப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவில் இருக்கும் படையின் உதவியுடன் சிட்டகாங்கை கைப்பற்றவேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
ஜங்-ஏ-சைல்ட்
அவருடைய பெயரிலேயே இந்த சண்டை ‘ஜங்-ஏ-சைல்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இதை சைல்டின் அறியாமை என்று அழைப்பதா அல்லது 308 வீரர்களின் உதவியுடன் உலகின் சக்தி வாய்ந்த, பணக்கார அரசருக்கு எதிராக போர் தொடுக்க கொண்ட வீரமாக கருதுவதா என்று தெளிவாக கூறமுடியவில்லை.
ஒளரங்கசீப் இந்தியாவில் பேரரசராக திகழ்ந்த அந்த சமயத்தில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா வழங்கியது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கா இன்று இருக்கும் வலுவான நிலையில் அன்று இந்தியா இருந்தது.
ஒளரங்கசீப்பின் ஆட்சி காலத்தில், முகலாய பேரரசு காபூலில் இருந்து டாக்கா வரையிலும், காஷ்மீர் முதல் பாண்டிச்சேரி வரை என 40 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரவியிருந்தது.
அது மட்டுமல்ல, தக்காண சுல்தான்கள், ஆப்கானியர்கள், மராட்டியர்கள் என பல்வேறு விதமான சேனைகளை எதிர்த்து போராடி வெற்றிக் கொண்ட அனுபவமிக்க முகலாய ராணுவம், உலகின் எந்த ராணுவத்தையும் எதிர்த்து போராடக்கூடிய திறனை பெற்றிருந்தது.
டெல்லியின் படைகள் ஒருபுறம் என்றால், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கானின் படைகள் மறுபுறம் இருந்தன.
முகலாய சம்ராஜ்ஜியத்தின் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதில், இந்தியர்கள், அரபியர்கள், ஆப்கானியர்கள், இரானியர்கள், ஐரோப்பியர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர்.
லண்டனில் இருந்து மொகலாயர்களுக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டதும், மும்பையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் முகலாயர்களின் சில கப்பல்களை கொள்ளையடித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகலாயர்களின் அல்பஹர் சிதீ யாகூத், சக்திவாய்ந்த கடற்படையை கொண்டு மும்பை கடற்கரையில் ஆங்கிலேயர்களை முற்றுகையிட்டார்.
மும்பையில் ஆங்கிலேயர்களின் கோட்டை, 1672ஆம் ஆண்டு ஓவியம்
அந்தச் சமயத்தில், பம்பாயில் இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற ஆங்கிலேயர், பிற்காலத்தில் எழுதிய தனது ஒரு புத்தகத்தில் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
“20 ஆயிரம் படையினருடன் அல்பஹர் சிதீ தாக்குதல் நடத்தினார். நள்ளிரவில் அவர் ஒரு பெரிய துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தபோது, ஆங்கிலேயர்கள் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தனர்.
அரைகுறை ஆடையில் இருந்த பெண்கள், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்” என்று அவர் அந்தப் போரை பதிவு செய்துள்ளார்.
“சிதீ யாகூத், கோட்டைக்கு வெளியே இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இடங்களை அபகரித்துக் கொண்டு, அங்கு முகலாயக் கொடியை பறக்கவிட்டார்.
சண்டையிட வந்த ஆங்கிலேய படைவீரர்களை, முகலாய படை வீரர்கள் வெட்டித் தள்ளினார்கள். பலரை பிடித்து சங்கிலியால் பிணைத்து மும்பையின் தெருக்களில் நடத்தி அழைத்துச் சென்றனர்” என்கிறார் அலெக்ஸாண்டர்.
அந்த காலகட்டத்தில் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் பேரரசர் போர்த்துகீசிய இளவரசியை மணந்து கொண்டபோது, மும்பை துறைமுகப் பகுதி, திருமணப் பரிசாக கொடுக்கப்பட்டது. அங்கு வலுவான கோட்டையை கட்டிய ஆங்கிலேயர்கள், தங்கள் வணிகத்தைத் தொடங்கினார்கள்.
14 மாத முற்றுகை
படிப்படியாக, இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், வீரர்கள், மத போதகர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் என கடல் கடந்து வந்தவர்களும், இந்தியாவில் இருந்தவர்களும் மும்பையில் குடியேறத் தொடங்கினார்கள். எனவே கோட்டையில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தது.
முகலாயர்களின் முற்றுகையின்போது கோட்டையில் அனைவரும் தஞ்சமடைய, அதனை முற்றுகையிட்டார் சிதீ யாகூத். கோட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விரைவிலேயே தீர்ந்து போயின.
மறுபுறமோ, நோய் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டனர். அதோடு, மும்பையின் தட்பவெட்பநிலை ஒத்துக் கொள்ளாத பிரிட்டானியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்கள் சிலர், ரகசியமாக தப்பிச் சென்று சிதீ யாகூத்தை சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஹெமில்டன் கூறுகிறார்.
முகலாய தளபதி விரும்பியிருந்தால், கோட்டை மீது தாக்குதல் நடத்தி, அதை கைப்பற்றியிருக்கலாம்.
ஆனால், ‘கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற எண்ணத்தில் அவர் முற்றுகையிட்ட பிறகும் வெகுதொலைவில் இருந்தே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதேபோன்ற சம்பவம், நாட்டின் கிழக்குப் பகுதியிலும் நடந்தது. முகலாயர்களை தாக்க திட்டமிட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா? ஹூக்ளி நகரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையை வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கான் முற்றுகையிட்டார். கோட்டையில் இருந்து செல்லும் அனைத்து வழிகளையும் அவர் மூடிவிட்டார்.
இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதால் ஹூக்ளி கோட்டையின் முற்றுகை விரைவில் முடிந்துவிட்டது,
ஆனால் பாம்பேயில் 15 மாதங்கள் வரை முற்றுகை தொடர்ந்தது. இறுதியில் வேறு வழியே இல்லை என்ற நிலையில் கிழக்கிந்திய கம்பெனி தனது தூதர்கள் இருவரை ஒளரரங்கசீப்பின் அரசவைக்கு அனுப்பியது. முற்றுகையை முடித்துக் கொள்வதற்காக ஒளரங்கசீப் விதிக்கும் நிபந்தனைகளை கேட்க அனுப்பப்பட்ட தூதுவர்கள் அவர்கள்.
ஒளரங்கசீப்பின் அரசவையில் மன்னிப்புக் கோரும் பிரிட்டன் தூதர்கள்
ஓளரங்கசீப்பின் அரசவை
ஜார்ஜ் வெல்டன் மற்றும் அப்ராம் நாவார் ஆகிய அந்த இரண்டு தூதர்களுக்கும், பல மாத முயற்சிகளுக்கு பிறகு, 1690ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவைக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
கைகளிலும் விலங்கிடப்பட்ட தூதர்கள் இருவரும் குற்றவாளிகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்டனர். தலை வணங்கி மண்டியிட்டிருந்த அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு ஒரு நாட்டின் பிரதிநிதிகளைப் போல தோன்றவில்லை, யாசகம் கேட்க வந்தவர்களைப் போல் தோன்றியது.
தூதர்கள் இருவரும் ஒளரங்கசீப்பின் முன் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் சென்றதும், தரையில் நெடுங்கிடையாக வணங்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.
தூதர்களை கடுமையாக சாடிய பேரரசர் ஒளரங்கசீப், அவர்களது விருப்பம் என்ன என்று கேட்டார்.
முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் குற்றத்தை ஒப்புக் கொண்ட தூதர்கள், அதற்காக மன்னிப்பு கோரினார்கள்.
பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வணிக உரிமம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும், பாம்பே கோட்டை முற்றுகையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் மேலிடத்தின் விருப்பங்களை எடுத்துரைத்தனர்.
இந்த போருக்காக முகலாய அரசுக்கு ஆன செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தரவேண்டும், இனிமேல் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் கோட்டையை முற்றுகையில் இருந்து விடுவிக்க பேரரசர் ஒளரங்கசீப் ஒப்புக்கொண்டார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர் ஜோஜியா சைல்ட் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் இந்தியாவிற்கும் இனி காலடி எடுத்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒளரங்கசீப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, வேறு வழி எதுவும் இல்லாத நிலையில், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், 14 மாத முற்றுகையில் இருந்து விடுதலை பெற்றது.
முற்றுகைக்கு முன்பு கோட்டையில் 700 முதல் 800 பேர்வரை இருந்ததாகவும், தொற்று நோய்க்கும், முகலாயர்களின் வாளுக்கும் இரையாகாமல் எஞ்சியிருந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாக குறைந்துவிட்டது என்று ஹாமில்டன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
கால சுழற்சியில் கிழக்கிந்திய கம்பெனி, முகலாய பேரரசர் பஹாதுர் ஷா ஜஃபரை கைது செய்தது
சரித்திர களங்கத்தை துடைத்த கிழக்கிந்திய கம்பெனி
முகலாய பேரரசால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைப் பற்றிய தகவல் பிரிட்டன் மக்களை சென்றடையக்கூடாது என்பதற்காக கிழக்கிந்தியா கம்பெனி பல்வேறு முயற்சியையும் மேற்கொண்டது.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முகலாயர்களின் போர் பற்றி ஜான் ஆவுங்கடின் என்பவர் எழுதிய போது, இதில் கிழக்கிந்திய கம்பெனியின் தோல்வியின் காரணம் முகலாயர்களின் ஏமாற்றுவேலை என்று எழுதப்பட்டது. இதற்காக அவருக்கு 25 பவுண்டு ‘பரிசுத்தொகை’ வழங்கப்பட்டது. அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது புத்தகத்தில் பிரிட்டானிய படைவீரர்களின் வீரத்தைப் பற்றிய கதைகளை பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் ஜான் ஆவுங்கடின். பத்து மடங்கு பலம் கொண்ட எதிரிகளின் ராணுவத்துடன் மோதிய ஆங்கிலேயர்கள் வீரத்தை எடுத்துக் காட்டினார்.
போரில் வென்றது பிரிட்டானியர்களே, முகலாயர்கள் அல்ல என்றும், தோற்கடிக்கப்பட்டது சிதி யாகூத் என்றும் பதிவு செய்திருக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தூதர்கள் முகலாய அரசவைக்கு சென்று மன்னிப்புக் கோரியதையும், அங்கு ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய தகவல்களையே அவர் மறைத்துவிட்டார்.
ஹேமில்டன் உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுதினார், ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் புத்தகம் வெளியானது என்பது காலத்தின் மிகப்பெரிய சோகம். வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப்படுவதும், அழுத்தப்படுவதும் திருத்தப்படுவதும்கூட சரித்திரத்தின் ஏடுகளில் பதிவாகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய தோல்வியைப் பற்றி சொல்லப்பட்ட புத்தகம் வெளிவந்தபோது, அது அதிக மிகவும் முக்கியத்துவம் பெற முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டது என்பது காலத்தின் கோலமா? திட்டமிடப்பட்ட சரித்திர மறைப்பா?
ஒளரங்கசீப் பிரிட்டனை மன்னித்து, அவர்களின் வணிக உரிமத்தை புதுப்பிக்காமல், இந்தியாவை விட்டு வெளியேற்றியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற ஆர்வமூட்டும் கேள்வி மனதில் பிரம்மாண்டமான கேள்வியாக விஸ்வரூபம் எடுக்கிறது. அப்படி நடந்திருந்தால், இந்தியா வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?