Saturday 17 November 2018

ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி

1603ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. ஒரு நிறுவனம், உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக நாட்டையே பிடித்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டியது.


ஆனால் அதற்காக ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சியில் இறுதியில் வெற்றியடைந்தாலும், பல அவமானகரமான தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.
தோல்விகளை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை நிரூபிப்பதில் வெற்றியும் கண்டது.
சிராஜ் உத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், கிழக்கு இந்தியா கம்பெனி முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எதிராக போரிட முயன்று படுதோல்வியை எதிர்கொண்டது.
பிறகு, பிரிட்டனின் தூதர்கள் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்டு, முகலாய அரசவையில் ஒளரங்கசீப் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் வர்த்தக மையங்களைத் தோற்றுவித்த கிழக்கிந்திய கம்பெனி, உலக அளவிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் பாம்பே, சூரத் நகரங்கள், கிழக்கு கடற்கரையில் சென்னை மற்றும் கல்கத்தாவில் இருந்து 20 மைல் தொலைவில், கங்கை நதியில் அமைந்துள்ள ஹூக்ளி மற்றும் காசிம் பஜார், ஆகிய வர்த்தக மையங்கள் கிழக்கத்திய கம்பெனியின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களாக விளங்கின.
இந்தியாவில் இருந்து பட்டு, வெல்லம், துணி மற்றும் கனிமத்தை பிரிட்டானியர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்தார்கள். குறிப்பாக டாக்காவின் மல்மல் ரக துணிக்கு இங்கிலாந்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
பிரிட்டானியர்களின் வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்படாமல், பொருளின் மொத்த மதிப்புக்கு மூன்றரை சதவிகித வரியை விதித்தது முகலாய பேரரசு.
மும்பை துறைமுகத்தில் வணிகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி
முகலாயர்களின் வணிகக் கொள்கை மீதான சர்ச்சை
அந்த சமயத்தில், ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, போர்த்துகீசியர்களும், டச்சு வணிகர்களும், பல தனியார் வர்த்தகர்களும் இந்த பகுதியில் தீவிரமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முகலாய அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்ட அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்த வணிக உரிமைகளை சொந்தமாக்க முயன்றனர்.
லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலகத்தின் தலைமையகத்திற்கு இந்த செய்தி கிடைத்ததும், நிறுவனத்தின் தலைவர் ஜோஜாயா சைல்டுக்கு கோபம் தலைக்கேறியது. தங்களது லாபத்தை வேறு யாரும் பங்கு போட்டுக்கொள்வதை அவர் விரும்பவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் ஜோஜாயா எடுத்த முடிவு வித்தியாசமானது மட்டுமல்ல, பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அரேபிய கடலிலும், வங்காள விரிகுடாவிலும் பயணிக்கும் முகலாயர்களின் கப்பல்களை வழிமறிக்கவும், அந்தக் கப்பல்களை கொள்ளையடிக்கவும் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இது மட்டுமல்லாமல், 1686 ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து இரண்டு படைவீரர்களின் தொகுப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவில் இருக்கும் படையின் உதவியுடன் சிட்டகாங்கை கைப்பற்றவேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
ஜங்-ஏ-சைல்ட்
அவருடைய பெயரிலேயே இந்த சண்டை ‘ஜங்-ஏ-சைல்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இதை சைல்டின் அறியாமை என்று அழைப்பதா அல்லது 308 வீரர்களின் உதவியுடன் உலகின் சக்தி வாய்ந்த, பணக்கார அரசருக்கு எதிராக போர் தொடுக்க கொண்ட வீரமாக கருதுவதா என்று தெளிவாக கூறமுடியவில்லை.
ஒளரங்கசீப் இந்தியாவில் பேரரசராக திகழ்ந்த அந்த சமயத்தில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா வழங்கியது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கா இன்று இருக்கும் வலுவான நிலையில் அன்று இந்தியா இருந்தது.
ஒளரங்கசீப்பின் ஆட்சி காலத்தில், முகலாய பேரரசு காபூலில் இருந்து டாக்கா வரையிலும், காஷ்மீர் முதல் பாண்டிச்சேரி வரை என 40 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரவியிருந்தது.
அது மட்டுமல்ல, தக்காண சுல்தான்கள், ஆப்கானியர்கள், மராட்டியர்கள் என பல்வேறு விதமான சேனைகளை எதிர்த்து போராடி வெற்றிக் கொண்ட அனுபவமிக்க முகலாய ராணுவம், உலகின் எந்த ராணுவத்தையும் எதிர்த்து போராடக்கூடிய திறனை பெற்றிருந்தது.
டெல்லியின் படைகள் ஒருபுறம் என்றால், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கானின் படைகள் மறுபுறம் இருந்தன.
முகலாய சம்ராஜ்ஜியத்தின் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதில், இந்தியர்கள், அரபியர்கள், ஆப்கானியர்கள், இரானியர்கள், ஐரோப்பியர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர்.
லண்டனில் இருந்து மொகலாயர்களுக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டதும், மும்பையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் முகலாயர்களின் சில கப்பல்களை கொள்ளையடித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகலாயர்களின் அல்பஹர் சிதீ யாகூத், சக்திவாய்ந்த கடற்படையை கொண்டு மும்பை கடற்கரையில் ஆங்கிலேயர்களை முற்றுகையிட்டார்.
மும்பையில் ஆங்கிலேயர்களின் கோட்டை, 1672ஆம் ஆண்டு ஓவியம்
அந்தச் சமயத்தில், பம்பாயில் இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற ஆங்கிலேயர், பிற்காலத்தில் எழுதிய தனது ஒரு புத்தகத்தில் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
“20 ஆயிரம் படையினருடன் அல்பஹர் சிதீ தாக்குதல் நடத்தினார். நள்ளிரவில் அவர் ஒரு பெரிய துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தபோது, ஆங்கிலேயர்கள் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தனர்.
அரைகுறை ஆடையில் இருந்த பெண்கள், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்” என்று அவர் அந்தப் போரை பதிவு செய்துள்ளார்.
“சிதீ யாகூத், கோட்டைக்கு வெளியே இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இடங்களை அபகரித்துக் கொண்டு, அங்கு முகலாயக் கொடியை பறக்கவிட்டார்.
சண்டையிட வந்த ஆங்கிலேய படைவீரர்களை, முகலாய படை வீரர்கள் வெட்டித் தள்ளினார்கள். பலரை பிடித்து சங்கிலியால் பிணைத்து மும்பையின் தெருக்களில் நடத்தி அழைத்துச் சென்றனர்” என்கிறார் அலெக்ஸாண்டர்.
அந்த காலகட்டத்தில் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் பேரரசர் போர்த்துகீசிய இளவரசியை மணந்து கொண்டபோது, மும்பை துறைமுகப் பகுதி, திருமணப் பரிசாக கொடுக்கப்பட்டது. அங்கு வலுவான கோட்டையை கட்டிய ஆங்கிலேயர்கள், தங்கள் வணிகத்தைத் தொடங்கினார்கள்.
14 மாத முற்றுகை
படிப்படியாக, இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், வீரர்கள், மத போதகர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் என கடல் கடந்து வந்தவர்களும், இந்தியாவில் இருந்தவர்களும் மும்பையில் குடியேறத் தொடங்கினார்கள். எனவே கோட்டையில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தது.
முகலாயர்களின் முற்றுகையின்போது கோட்டையில் அனைவரும் தஞ்சமடைய, அதனை முற்றுகையிட்டார் சிதீ யாகூத். கோட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விரைவிலேயே தீர்ந்து போயின.
மறுபுறமோ, நோய் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டனர். அதோடு, மும்பையின் தட்பவெட்பநிலை ஒத்துக் கொள்ளாத பிரிட்டானியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்கள் சிலர், ரகசியமாக தப்பிச் சென்று சிதீ யாகூத்தை சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஹெமில்டன் கூறுகிறார்.
முகலாய தளபதி விரும்பியிருந்தால், கோட்டை மீது தாக்குதல் நடத்தி, அதை கைப்பற்றியிருக்கலாம்.
ஆனால், ‘கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற எண்ணத்தில் அவர் முற்றுகையிட்ட பிறகும் வெகுதொலைவில் இருந்தே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதேபோன்ற சம்பவம், நாட்டின் கிழக்குப் பகுதியிலும் நடந்தது. முகலாயர்களை தாக்க திட்டமிட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா? ஹூக்ளி நகரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையை வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கான் முற்றுகையிட்டார். கோட்டையில் இருந்து செல்லும் அனைத்து வழிகளையும் அவர் மூடிவிட்டார்.
இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதால் ஹூக்ளி கோட்டையின் முற்றுகை விரைவில் முடிந்துவிட்டது,
ஆனால் பாம்பேயில் 15 மாதங்கள் வரை முற்றுகை தொடர்ந்தது. இறுதியில் வேறு வழியே இல்லை என்ற நிலையில் கிழக்கிந்திய கம்பெனி தனது தூதர்கள் இருவரை ஒளரரங்கசீப்பின் அரசவைக்கு அனுப்பியது. முற்றுகையை முடித்துக் கொள்வதற்காக ஒளரங்கசீப் விதிக்கும் நிபந்தனைகளை கேட்க அனுப்பப்பட்ட தூதுவர்கள் அவர்கள்.
ஒளரங்கசீப்பின் அரசவையில் மன்னிப்புக் கோரும் பிரிட்டன் தூதர்கள்
ஓளரங்கசீப்பின் அரசவை
ஜார்ஜ் வெல்டன் மற்றும் அப்ராம் நாவார் ஆகிய அந்த இரண்டு தூதர்களுக்கும், பல மாத முயற்சிகளுக்கு பிறகு, 1690ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவைக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
கைகளிலும் விலங்கிடப்பட்ட தூதர்கள் இருவரும் குற்றவாளிகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்டனர். தலை வணங்கி மண்டியிட்டிருந்த அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு ஒரு நாட்டின் பிரதிநிதிகளைப் போல தோன்றவில்லை, யாசகம் கேட்க வந்தவர்களைப் போல் தோன்றியது.
தூதர்கள் இருவரும் ஒளரங்கசீப்பின் முன் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் சென்றதும், தரையில் நெடுங்கிடையாக வணங்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.
தூதர்களை கடுமையாக சாடிய பேரரசர் ஒளரங்கசீப், அவர்களது விருப்பம் என்ன என்று கேட்டார்.
முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் குற்றத்தை ஒப்புக் கொண்ட தூதர்கள், அதற்காக மன்னிப்பு கோரினார்கள்.
பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வணிக உரிமம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும், பாம்பே கோட்டை முற்றுகையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் மேலிடத்தின் விருப்பங்களை எடுத்துரைத்தனர்.
இந்த போருக்காக முகலாய அரசுக்கு ஆன செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தரவேண்டும், இனிமேல் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் கோட்டையை முற்றுகையில் இருந்து விடுவிக்க பேரரசர் ஒளரங்கசீப் ஒப்புக்கொண்டார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர் ஜோஜியா சைல்ட் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் இந்தியாவிற்கும் இனி காலடி எடுத்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒளரங்கசீப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, வேறு வழி எதுவும் இல்லாத நிலையில், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், 14 மாத முற்றுகையில் இருந்து விடுதலை பெற்றது.
முற்றுகைக்கு முன்பு கோட்டையில் 700 முதல் 800 பேர்வரை இருந்ததாகவும், தொற்று நோய்க்கும், முகலாயர்களின் வாளுக்கும் இரையாகாமல் எஞ்சியிருந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாக குறைந்துவிட்டது என்று ஹாமில்டன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
கால சுழற்சியில் கிழக்கிந்திய கம்பெனி, முகலாய பேரரசர் பஹாதுர் ஷா ஜஃபரை கைது செய்தது
சரித்திர களங்கத்தை துடைத்த கிழக்கிந்திய கம்பெனி
முகலாய பேரரசால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைப் பற்றிய தகவல் பிரிட்டன் மக்களை சென்றடையக்கூடாது என்பதற்காக கிழக்கிந்தியா கம்பெனி பல்வேறு முயற்சியையும் மேற்கொண்டது.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முகலாயர்களின் போர் பற்றி ஜான் ஆவுங்கடின் என்பவர் எழுதிய போது, இதில் கிழக்கிந்திய கம்பெனியின் தோல்வியின் காரணம் முகலாயர்களின் ஏமாற்றுவேலை என்று எழுதப்பட்டது. இதற்காக அவருக்கு 25 பவுண்டு ‘பரிசுத்தொகை’ வழங்கப்பட்டது. அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது புத்தகத்தில் பிரிட்டானிய படைவீரர்களின் வீரத்தைப் பற்றிய கதைகளை பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் ஜான் ஆவுங்கடின். பத்து மடங்கு பலம் கொண்ட எதிரிகளின் ராணுவத்துடன் மோதிய ஆங்கிலேயர்கள் வீரத்தை எடுத்துக் காட்டினார்.
போரில் வென்றது பிரிட்டானியர்களே, முகலாயர்கள் அல்ல என்றும், தோற்கடிக்கப்பட்டது சிதி யாகூத் என்றும் பதிவு செய்திருக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தூதர்கள் முகலாய அரசவைக்கு சென்று மன்னிப்புக் கோரியதையும், அங்கு ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய தகவல்களையே அவர் மறைத்துவிட்டார்.
ஹேமில்டன் உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுதினார், ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் புத்தகம் வெளியானது என்பது காலத்தின் மிகப்பெரிய சோகம். வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப்படுவதும், அழுத்தப்படுவதும் திருத்தப்படுவதும்கூட சரித்திரத்தின் ஏடுகளில் பதிவாகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய தோல்வியைப் பற்றி சொல்லப்பட்ட புத்தகம் வெளிவந்தபோது, அது அதிக மிகவும் முக்கியத்துவம் பெற முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டது என்பது காலத்தின் கோலமா? திட்டமிடப்பட்ட சரித்திர மறைப்பா?
ஒளரங்கசீப் பிரிட்டனை மன்னித்து, அவர்களின் வணிக உரிமத்தை புதுப்பிக்காமல், இந்தியாவை விட்டு வெளியேற்றியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற ஆர்வமூட்டும் கேள்வி மனதில் பிரம்மாண்டமான கேள்வியாக விஸ்வரூபம் எடுக்கிறது. அப்படி நடந்திருந்தால், இந்தியா வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?

No comments:

Post a Comment