Monday 19 November 2018

“கேரளாவுக்காக இரக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம் எங்களைக் கண்டுக்கலையே”.. டெல்டா மக்கள் வருத்தம்!

சென்னை மற்றும் கேரள வெள்ளத்துக்கு ஓடியோடி உதவிய திரைத்துறையினர், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு இன்னும் பெரிய அளவிலான உதவிகளைச் செய்ய முன்வராதது, அம்மாவட்ட மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.



15ம் தேதி இரவு கோரதாண்டவமாடிய கஜா புயலால் டெல்டா மாவட்டமே சீர்குலைந்து கிடக்கிறது. 2004 சுனாமிக்கு பிறகு, தற்போது மீண்டும் அதே போன்றதொரு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது நாகை மாவட்டம்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் நாகை மாவட்ட மக்கள். சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு கணக்கிட்டுள்ளதாக தெரிகிறது.

மக்கள் அதிருப்தி:





இந்நிலையில், சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் ஓடி ஓடி உதவிய தமிழக திரைத்துறையினர், கஜா புயல் தாக்கி ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பெரிய நிதியுதவி ஏதும் செய்யாது ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்ற அதிருப்தி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

கேரள வெள்ளம்:


வழக்கமாக சமூகத்தில் நடக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது சினிமாகாரர்களாக தான் இருக்கும். அதேபோல், நிதியுதவி அளிப்பதிலும் முன்னே வந்து நிற்பவர்களும் தமிழ் திரைத்துறையினர் தாம். உதாரணத்துக்கு அண்டை மாநிலமான கேரளா பெரு வெள்ளத்தால் சிக்கி தவித்தபோது தமிழகத்தை சேர்ந்த சினிமாகாரர்கள் ஏராளமாக நிதியுதவி செய்தனர்.

சிவக்குமார் உதவி:





ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை ஒரு சிலர் மட்டுமே தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். குறிப்பாக நடிகர் சிவக்குமாரின் குடும்பம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

விஷால் ரசிகர்கள்:


விஷால் சார்பில் அவரது மக்கள் நல இயக்கத்தினர் நேரடியாக சென்று களப்பணியாற்றியுள்ளனர். நடிகர் ஆரி தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ததுடன், விஜய், அஜித் ரசிகர்கள் உதவ வேண்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோ:


இயக்குனர் சற்குணமும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, டெல்டா மாவட்டத்தின் நிலையை எடுத்துக்கூறி இருக்கிறார். ஆனால் பெரும்பாலான சினிமாக்காரர்கள் இரக்கத்தை வார்த்தைகளோடு தெரிவித்ததுடன் நிறுத்திக்கொண்டனர்.

அமைதி:




நடிகர் சங்கமோ, இயக்குனர்கள் சங்கமோ, தயாரிப்பாளர்கள் சங்கமோ இல்லை மற்ற எந்த சங்கங்களோ இதுவரை நிதியுதவி அறிவிக்கவில்லை. இதனால், தமிழ்த்திரையுலகம் மீது அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

உதவி தேவை:


அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போலவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினரும் தாராளமாக உதவ முன்வந்தால், இந்த பாதிப்பில் இருந்து அவர்களை விரைவில் மீட்டெடுக்க முடியும். விரைந்து செய்வார்கள் என நம்புவோம்.


No comments:

Post a Comment