Saturday 29 December 2018

சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

EUROPHYT அறிவித்தலின் மூலம், சிறிலங்காவில் இருந்து, கறிவேப்பிலைகளைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருந்து இத்தாலிய விமான நிலையங்களுக்கு வந்தவர்களின் பைகளில் இருந்து கறிவேப்பிலைகளை, இத்தாலிய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து வந்தனர்.
சிறிலங்கா கறிவேப்பிலைகளில் ஆபத்தான உயிரிகள் இருக்கின்ற என்ற அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அவற்றை எடுத்து வருவதற்கு, கடந்த 24ஆம் நாள்  தொடக்கம், தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Monday 24 December 2018

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி, முல்லைத்தீவு

வடக்கில் கடந்த 48 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குளங்கள் அனைத்தும் நிரம்பி வான் பாய்கின்றன. இதனால் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கா னோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.


நேற்று சனிக்கிழமை மாலை 3 மணி வரையான நிலவரப்படி வடக்கில் வெள்ள இடரால் பாதிக் கப்பட்டோரின் விவரத்தை இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேச செலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794 குடும்பங்களைச் சேர்ந்த 12651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இருபத்தைந்து இடைத்தங்கல் முகாம்களில், 1240 குடும்பங்களைச்சேர்ந்த, 3805 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 170 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 614 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 899 பேர் இடம் பெயர்ந்து 16 இடைத்தங்கல் முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 501 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் 451 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 250 பேர் இடம்பெயர்ந்து 4 தற் காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் வெள்ள இடரால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் ஒரு இடைத்தங்கல் முகா மில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செய லர் பிரிவில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 548 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 352 பேர் ஒரு இடைத்தங் கல் முகாமில் தங்கியுள்ளனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செய லர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பிரி வில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 550 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 858 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந் துள்ளனர். அவர்கள் 7 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளனர். 

பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 தற் காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர். 

மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கி யுள்ளனர்.

இரணைமடுக் குளத்துக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அத னால் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித் துள்ளதனால் 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. 

36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நேற்று 35 அடியாகக் காணப்பட்டது. இந்நிலையில் நேற் றிரவு பெய்த மழையினால் குளத் தின் நீர்மட்டம் மிக வெகுவாக அதி கரித்துள்ளது. 

இரணைமடுக் குளத்தில் உள்ள 14 வான்கதவுகளில் 11 வான்கதவு களை உடனடியாக திறந்து விட் டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது என்று பொறியியலாளர் என்.சுதாகரன் குறிப்பிட்டார். 

குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப் பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளததால் சூழ்ந்த கிராமங் களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகுகளில் மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் குமுழமுனை உள்ளிட்ட பல பகுதி களில் நேற்றிரவு கொட்டிய மழை யினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.
வன்னியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி நீர் வான்பாய்ந்து கொண்டிருப்பதால், வெள்ள நிலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

Friday 21 December 2018

அதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.!

உலக வல்லரசு பட்டியலிலும் முன்னணியில் இருகின்றது ரஷ்யா. இதன் அதிபராக இருப்பர் விளாடிமிர் புதின்.


இவர் இன்று வரை செல்போன் பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திருமண பந்த்தில் இணைய இருக்கின்றார்.

இவர் 1952ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி விளாடிமிர் புதின் பிறந்தார். ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய அரசு தலைவராக உள்ளார். 1999 டிசம்பர் 31ல் 
போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து, அதிபரானார் புதின். 
கடந்த 2000ம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார்.


2004ல் தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2008 மே7 இல் பதவி முடிந்தது. தொடர்ந்தது, புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4ல் நடந்த தேர்தலில்  2012 மே 7ல் இருந்து தலைவராக தொடர்கின்றார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் அமெரிக்காவின் கெர்மிடேஷ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மகிப் பெரிய பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என்று அமெரிக்காவின் கெர்ஜிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதின் ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என்று நம்பவுதாக அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து 2000ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்பளின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவின் அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கிறது.
மின்னனு ஊடக செய்திகளை விட, நாளிதழ் செய்திகள் மூலம், விளாடிமிர் புதின் தகவல்களை பெறுவதாகவும் கிரம்ளின் மாளிகை கூறியிருக்கிறது.
மீண்டும் தாம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் சிறப்பானதொரு தருணத்தில், திருமணம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த விளாடிமிர் புதின், சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2013ஆம் ஆண்டு, அவரை விவகாரத்து செய்தார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் மகிழ்ச்சி குஷியில் இருக்கின்றார்.


Wednesday 19 December 2018

பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி!

இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து விட்டார்.
இனி அவரது போக்கும் நோக்கும் முழுமையாக பேரினவாதமாகத்தான் இருக்கப்போகின்றது என்பது நிச்சயம் என தமிழ் பத்திரிகை ஒன்று, இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடைசியில் வழமை போல தாமும் கூட தென்னிலங்கையின் பெளத்த, சிங்கள பேரினவாதப் போக்குடைய சராசரி அரசியல்வாதி என்பதைக் காட்டிவிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தமிழர் தரப்பு - குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் - எதிர்பார்க்காத, நம்பமுடியாத ஓர் உரையை அவர் ஆற்றியிருக்கின்றார்.
2015 ஜனவரியில் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்கள்.
சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும், பெரும்பான்மையினரான சிங்களவர்களில் கணிசமான தொகையினரோடு சேர்ந்து தென்னிலங்கை ஆட்சிப்பீடத்தில் பலரும் எதிர்பாராத அதிரடி அதிகார மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர்.
பெளத்த, சிங்களப் பேரினவாதத்தின் உச்சியில் நின்ற மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப்பீடத்தை யாரும் எதிர்பார வகையில் வீழ்த்தி, இனசெளஜன்னியத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும், மொழிப் புரிந்துணர்வுக்குமான ஆட்சிப்பீடம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தினர் என்று மகிழ்ந்தனர்.
கடைசியில் தாங்கள் பிடிக்கப் போன பிள்ளையார் குரங்காய்த்தான் வந்து முடிந்திருக்கின்றது என்பதை அவர்கள் உணரும் நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
அண்மையில் கூட தமிழர்களின் தலைவரான - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட என்னை இன்று இந்தக் கதிரைக்குக் கொண்டு வந்தவர்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல், இலங்கை முழுவதிலும் இருக்கும் தமிழர்களும்தான்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்து, என்னை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்தமையை மறக்கவே மாட்டேன்'' - என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வார்த்தை தவறிவிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை பச்சை இனவாதப் போக்குடையது.
போர் வெற்றியைத் தேடித் தந்த எந்த இராணுவ வீரனையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன் என்றும் - இராணுவத்தினரைத் தண்டித்துக் கொண்டு விடுதலைப்புலிகளை (தமிழ் அரசியல் கைதிகள்) விடுவிப்பதா என்றும் - வெளிநாட்டில் இருக்கும் விடுதலைப்புலிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் ஆற்றிய உரை இந்த நாட்டில் இன அமைதியையும், சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ஒரு தலைவனுக்குரிய கருத்து நிலைப்பாட்டை பிரதிபலிப்பனவல்ல என்பது தெளிவு.
எந்த பெளத்த, சிங்கள மேலாதிக்கமும் பேரினவாதப் போக்குடைய தென்னிலங்கை ஆட்சித் தலைமையை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குத் தமிழர்களும் சேர்ந்து கொண்டு வந்தார்களோ அந்தத் தரப்போடு மைத்திரிபால சிறிசேன தானும் இப்போது சேர்ந்திருந்து கொண்டு அதே பண்பியல்பைப் பிரதிபலித்து, கொக்கரித்து நிற்கின்றார் என்பதே நிலைமை.
மஹிந்த ராஜபக்ஷ தரப்போடு சேர்ந்து அதே பாணியில் பேரினவாத மேலாதிக்கப் போக்கைப் பின்பற்றி அரசியல் செய்தால் தொடர்ந்து அதிகாரத்திலும், பதவியிலும் நீடிக்கலாம் என்ற நப்பாசை மைத்திரிபால சிறிசேனவையும் பேரினவாதக் குழிக்குள் வீழ்த்தி விட்டது போலும்.
அண்மைக்காலத்தில் இதுவரை கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றி நின்ற பேரினவாத சக்திகள், தரப்புகள் எல்லாம் இப்போது மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னால் அணிதிரளத் தொடங்கிவிட்டன என்றும் கொழும்புச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து விட்டார்.
இனி அவரது போக்கும் நோக்கும் முழுமையாக பேரினவாதமாகத்தான் இருக்கப்போகின்றது என்பது நிச்சயம்.
அந்தத் தரப்பில் ஏனையோரிலும் விட அதிகளவில் இனவாதம் கக்குவதன் மூலம் - பேரினவாத மேலாண்மைச் செருக்குடன் நடப்பதன் வாயிலாக அவர்களின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தானேதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மேலும் மேலும் இனவாதத்தை அவர் உமிழ்வார்.
அதை எதிர்கொள்வதைத் தவிர, அவரை ஆட்சிக்குத் தானும் சேர்ந்து கொண்டு வந்த தமிழருக்கு வேறு வழியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday 14 December 2018

இலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா? நீயா? போட்டியின் பின்னணி என்ன?

இலங்கை அரசியலில் திடீர் புயல் ஒன்று மையம் கொண்டது. அதன் விளைவு யாரும் எதிர்பாராத நேரத்தில் இலங்கை உளவு படைக்கும் தெரியாமல் மகிந்தவை பிரதமராக்கும் நிலை வந்தது.


இலங்கை பொலிஸார் தொட்டு உளவுத் துறையும் ரணிலின் கட்டுப்பாட்டில் இருந்தும் இந்த நகர்வை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது.
இவைகள் எல்லாவற்றையும் விட அதிபர் மைத்திரியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஒருவர் உள்ளார்.
அவர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வடக்கில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ரணிலின் அபிமான விசுவாசி. வெளிநாட்டு பயிற்சி பெற்றவர் இவர் மைத்திரியுடன் இருந்தும் இந்த நகர்வை அவரால் கண்டுப்பிடித்து ரணிலுக்கு அந்த தகவலை கொடுக்க முடியாமல் போய் விட்டது.
ரணிலை நீக்கி மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்று அதிபர் விரும்பவில்லை என்பது வேறு கதை. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இருந்து சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பலமுறை அதிபர் கோரிய போதும் யாரும் அதிபருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாகவே அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்து மகிந்தரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரு நகர்வு செய்யபட்டது. அந்த நகர்வு என்னும் மையம் கொண்ட புயல் இன்னும் இலங்கையை விட்டு நகரவில்லை.
நானா? நீயா? போட்டியின் உள்நோக்கம் என்ன என்று நாம் உற்று நோக்கினால் அது சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலாப நோக்கம் கொண்டது.
அதாவது கிழக்காசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளின் கொள்வனவு சந்தைக்கும் இடையிலான கடல்வழிப் பாதையின் முக்கிய கேந்திர தளமாக / நிலையமாக இலங்கை அமைந்துள்ளதால் இலங்கையில் நிரந்தரமாக காலூன்ற வேண்டிய தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளன.
அதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான நாடாக அல்லது நெருக்கமான அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடாக இலங்கையை இரண்டு நாடுகளும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்தப் போட்டியே இன்று இலங்கையில் நானா? நீயா? என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் நலன் என்ன? இலங்கையில் தனது பரம எதிரி சீனா ஆதிக்கம் செலுத்துவது என்பதானது அது எப்போதும் தனக்கு ஆபத்து என்பது இந்தியாவின் கணக்கு. அத்துடன் சீனா தனது ஆதிக்கத்தை நேபாளம், மியன்மார், பாகிஸ்தான் வரை தனது அகலக்காலை பதித்து விட்டது. இப்போது எஞ்சி இருப்பது இலங்கை மட்டுமே.
அதனால் அமெரிக்காவோடு இந்தியா ஒத்துப்போக வேண்டிய தேவை வந்துள்ளது. அதனால் சீனாவின் ஆதிக்கம் இல்லாமல் அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் அமைவது இந்தியாவுக்கு ஆபத்தில்லை பாதகமில்லை என்று இந்தியா ஒரு கணக்கு போட்டுள்ளது.
இலங்கையில் மிக அதிகளவு சீனா முதலீடு செய்துள்ளன. சீனாவின் யுவான் பணத்துடன் இந்தியப் பணம் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளன.
இலங்கை அரசியல் புயலில் இந்தியா நேரடியாக சிக்காமல் மிக அமைதியாக நிலைமையை மிக அவதானமாக பார்த்துக்கொண்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா நேரடியாக இலங்கையில் மூக்கை நுழைத்துள்ளதால் அமெரிக்காவின் நேச நாடுகளும் இலங்கை அரசியல் புயலை கரை கடக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அதனால், இலங்கை அரசியல் புயல் என்பது நானா? நீயா? என்ற போட்டியுடன் சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் யுவான் டாலர் போட்டியே ஒழிய இது ரணில் மைத்திரி மோதல் அல்ல. ஆனாலும், இலங்கை அரசியலை பொறுத்த மட்டில் சீனா அமெரிக்கா என்ற மோதல் என்றாலும் ஒரு பதவி ஆசை மோகம் கொண்ட போட்டி தான்.
ஆனால் இங்கு அமைதியான முறையில் சீனா தனது பணத்தைக் கொண்டு இலங்கையில் சாதிக்கும் தனது பலதில் அது நிருபிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரசிகர்களும் முக்கியமல்ல... மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வயது  69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும் இளமை குன்றாமல், கண்ணாடியை ஸ்டைலாக சுழற்றி போட்டபடி பட்டையை கிளப்புகிறார் ரஜினி.


தனது பிறந்தநாளில் வழக்கமாக அவர் சென்னையில் இருப்பதில்லை. இமயமலை வாசத்தை தேடி புறப்பட்டுவிடுவார். ஒருமாறுதலாக, இம்முறை மும்பை பறந்திருக்கிறார். ரசிகர்களை கூட சந்திக்க மறுத்து மும்பை பறந்தது ஏன்? என்கிற கேள்வி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஒளிந்திருக்கிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமால் நிறுவனத் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த்திற்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 8, 9ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமண வீட்டாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை செயலாளர் ஜான் கெர்ரியில் தொடங்கி, நமது ஊர் சல்மான், ஷாருக், அமீர் கான்கள் வரையில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் படையெடுத்தனர். இரண்டு நாட்கள் உதய்பூரையே குலுக்கிய அம்பானி குடும்ப திருமண விழா, தற்போது மும்பையை மையம் கொண்டுள்ளது. மும்பையிலுள்ள அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் தான் இஷா – ஆனந்த் ஜோடியின் திருமணம் நடைபெறுகிறது.
மும்பையின் பெடார் சாலையிலுள்ள இந்த 27 மாடி வீடு, இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக உலகின் மிக மதிப்புமிக்கதாகும். இதன் முதல் ஆறு தளங்கள் கார்கள் நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுகின்றன. ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, தோட்டம், நீச்சல் குளங்கள் என சகல வசதிகளாலும் நிரம்பிய இவ்வீட்டை பராமரிக்க 600 பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பிரம்மாண்ட வீட்டில் தான் அம்பானி குடும்ப திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் பங்கேற்க, தங்களுக்கு மிக மிக நெருக்கமான 600 பேருக்கு மட்டுமே அம்பானி குடும்பத்தார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டில் அழைப்பிதழ் பெற்ற ஒரே நபர் ரஜினி மட்டும் தான். இவ்விழாவில் பங்கேற்கத் தான், தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு மும்பை பறந்துள்ளார்.
அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவிப்பாணை வெளியிட்டு ஒருவருடம் முடியும் தருவாயிலும், இதுவரை தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவில்லை. டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் கூட சுற்றி வந்துவிட்டார். ஆனால், சென்னை நகர எல்லையை கூட ரஜினி தாண்டவில்லை. தனது மன்றத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை ரஜினி வழங்கி வந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வராதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என நடிகர் அமிதாப் பச்சனிடம் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று, வீடியோ ஒன்றை வெளியிட்ட அமிதாப், கஜா புயல் சேதங்களை பட்டியலிட்டு, சகோதரத்துவத்தை உணர்த்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமிதாப் சொல்லி லட்சம் லட்சமாக குவியப் போவதில்லை என்றாலும், தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது, அவ்விஷயம் தேசிய அளவில் கவனம் பெறும். நடிகர் கமல்ஹாசன் அதற்கான முயற்சியை தான் அமிதாப் மூலமாக செய்தார். இதே முயற்சியை ரஜினி ஏன் செய்யவில்லை? என்பது தான் கேள்வி.
“ஒரு சொட்டு வியர்வைக்கு, ஒருபவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”, என பாடி நடித்தவர், டெல்டா மாவட்டங்களில் ஒரு ரவுண்ட் அடித்திருந்தால், தேசிய அளவில் கஜாவின் பாதிப்பு வெளிச்சமாகியிருக்கும் என்பது எதார்த்தம். நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்காது. அரசியல் களத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு, என்ன? ஏது? என்று கூட எட்டிப்பார்க்காதது தான் மக்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
தற்போது, ‘2.0’ படத்திற்காக வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து, பேனர் கட்டிய தனது ரசிகர்களை தன் பிறந்தநாளன்று கூட சந்திக்காமல், அம்பானி வீட்டு விஷேசத்திற்காக ஓடியது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக கிளம்பியுள்ளது. மக்கள் அல்லல்படும் போது வந்து நிற்காதவர், போர் வரும்போது வருவேன் என்பது எதற்காக? அது ஓட்டு அரசியல் ஆகாதா? இது முறையா என்பது ரஜினிக்கே வெளிச்சம்.

Monday 3 December 2018

அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு

சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு ‘தில்’ காட்டியவர், மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் என பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே உடல் நலத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டியவராக இருக்கிறார்.

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு போய் வந்தார். அங்கிருந்து வந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். எனினும் அந்தத் தேர்தலிலேயே பிரேமலதாதான் அதிக மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றார்.
அத்தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியிருந்தாலும், விஜய்காந்த் மனம் தளரவில்லை. ஜூலை 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு, சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல்சிகிச்சைக்காக அம்மாதமே மீண்டும் சிங்கப்பூர் பறந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த பின்னர், அவர் தனது உடல்நலம் மீது மேலும் அக்கறை காட்ட வேண்டியவரானார். 2017 மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நவம்பர் இறுதியில் மீண்டும் சிங்கப்பூர் பறந்தார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது, வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார். எனினும் விஜயகாந்தின் உடல் நலம் இன்னமும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. எண்ணத்தில் உள்ளதை வார்த்தையில் வடிக்க முடியாத சிரமமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தாண்டு ஜூலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். உடல்நலன் ஓரளவு தேறி, மகன் சண்முகபாண்டியன், மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. அச்சமயத்தில் கலைஞர் மறைந்த செய்தி கேட்டு, அவர் கண் கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியதும் அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், பழைய மாதிரி அவரது பேச்சு சரியாக வருவதில்லை. விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகளிரணியை கவனித்து வந்த பிரேமலதாவிற்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மகன் விஜயபிரபாகரனும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார்.
தற்போது விஜயகாந்த் சில பரிசோதனைகளுக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் புதிய இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
அரசியல் ரீதியாக விஜய்காந்த் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அவர் எப்பேற்பட்ட மனிதர் என்பது பழகியவர்களுக்குத் தெரியும். 90-களில் சினிமாக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வீதியில் அலைந்து திரிந்தவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக அமைந்தது அவரது அலுவலகம்! அன்று எதையும் எதிர்பார்த்து அதை அவர் செய்யவில்லை.
அரசியலுக்கு வந்த பிறகும் மனதில் பட்டதை சட்டென்று பேச்சில் உடைத்தெறியும் விஜயகாந்தின் குரலை கேட்க அவரது கட்சியினர் மட்டுமல்ல, தமிழகமே காத்திருக்கிறது. மீண்டும் அனல் தெறிக்கும் சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்!

Saturday 1 December 2018

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வாழ்க்கை

போர் கதாநாயகனும், அரசியல்வாதியின் மகனுமான ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ், அரசியல் தொழில்முறை வாழ்க்கையில் உயரிய திறமை கொண்டிருந்தவர். 1960களில் பிரதிநிதிகள் அவையில் இருக்கையை வென்று தேசிய அரசியலில் முதல்முறையாக கால் பதித்தார்.



தனது அரசியல் பார்வையில் தன்னைவிட முற்போக்கு எண்ணம் கொண்டிருந்த மனைவி பார்பரா, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் பல்வேறு ராஜிய பதவிகளில் பணிபுரிந்த பின்னர், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.

1976ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜெரால்டு ஃபோர்டு இவரை மத்திய உளவுத்துறை இயக்குநராக நியமித்தார்.

1980ம் ஆண்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக முயற்சித்தபோது ரோனால்டு ரீகன், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷை தோற்கடித்தார்.

1980கள் முழுவதும் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் துணை அதிபராக பணியாற்றினார்.



1988ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியால் அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது. இறுதியில் ரீகன்தான் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷிடம் ஆட்சி அதிகாரத்தை கையளித்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவு கொள்கையில் பெற்ற வெற்றிகள் பெரிதும் குறிப்பிடப்படுபவை.

  • அமெரிக்காவுக்கு சர்வதேச நிலையை, வியட்நாம் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை மீட்டெடுத்த பெருமையை விமர்சகர்கள் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு வழங்குகின்றனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தபோது, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் சோவியத் யூனியன் மற்றும் மிகாயில் கார்பச்சேஃவோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார்.

அவருக்கு முந்தைய அமெரிக்க அதிபரான ரோனால்ட் ரீகன் ரஷ்யாவை "தீய பேரரசு" என்று கூறியிருந்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷின் வெளியுறவு கொள்கை முதலாவது வளைகுடா போரால் வரையறுக்கப்பட்ட மனஉறுதியை அதிகரித்து ஈராக் மீதான வெற்றியோடு நிறைவடைந்தது.

ஆனால், 1992ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரை, வரி விதிப்பில் மற்றம் உள்பட அவரது உள்நாட்டு கொள்கைளால் தடம்புரண்டது. இறுதியில் பில் கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் தோல்வியை தழுவினார்.

புஷ்ஷின் அரசியல் பாரம்பரியம் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் பதவியை விட்டு சென்ற பின்னரும் நீண்டகாலம் தொடர்ந்தது,

2000ம் ஆண்டு அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட அவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 பதவிக்காலம் அதிபராக பணியாற்றினார்.

அமெரிக்க பொது வாழ்வில் சிறந்த பங்களிப்பு வழங்குவதை ஜார்ஜ் புஷ் சீனியர் தொடர்து வந்தார்.

2011ம் ஆண்டு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு சுதந்திர பதக்க விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கௌரவித்தார்.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணியான பார்பரா புஷ் தனது 92வது வயதில் காலமானார்.

இந்த தம்பதியர் 70 ஆண்டுகளுக்கு மேலாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்தவர்கள்.

93 வயதான முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் டெக்ஸாஸின் ஹூஸ்டனில் தனது மனைவிக்கு இறுதி சடங்குகள் நிறைவேறிய அடுத்த நாளே சுகவீனமடைந்தார்.

அங்கு அமெரிக்காவின் முன்னாள் 3 அதிபர்கள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளோடு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தில் லௌரா புஷ், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஹிலரி கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமா ஆகியோர் உள்ளனர்.

தற்போதைய அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்பும் இதிலுள்ளார். இந்த இறுதி சடங்கில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.