Friday 14 December 2018

ரசிகர்களும் முக்கியமல்ல... மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வயது  69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும் இளமை குன்றாமல், கண்ணாடியை ஸ்டைலாக சுழற்றி போட்டபடி பட்டையை கிளப்புகிறார் ரஜினி.


தனது பிறந்தநாளில் வழக்கமாக அவர் சென்னையில் இருப்பதில்லை. இமயமலை வாசத்தை தேடி புறப்பட்டுவிடுவார். ஒருமாறுதலாக, இம்முறை மும்பை பறந்திருக்கிறார். ரசிகர்களை கூட சந்திக்க மறுத்து மும்பை பறந்தது ஏன்? என்கிற கேள்வி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஒளிந்திருக்கிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமால் நிறுவனத் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த்திற்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 8, 9ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமண வீட்டாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை செயலாளர் ஜான் கெர்ரியில் தொடங்கி, நமது ஊர் சல்மான், ஷாருக், அமீர் கான்கள் வரையில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் படையெடுத்தனர். இரண்டு நாட்கள் உதய்பூரையே குலுக்கிய அம்பானி குடும்ப திருமண விழா, தற்போது மும்பையை மையம் கொண்டுள்ளது. மும்பையிலுள்ள அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் தான் இஷா – ஆனந்த் ஜோடியின் திருமணம் நடைபெறுகிறது.
மும்பையின் பெடார் சாலையிலுள்ள இந்த 27 மாடி வீடு, இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக உலகின் மிக மதிப்புமிக்கதாகும். இதன் முதல் ஆறு தளங்கள் கார்கள் நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுகின்றன. ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, தோட்டம், நீச்சல் குளங்கள் என சகல வசதிகளாலும் நிரம்பிய இவ்வீட்டை பராமரிக்க 600 பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பிரம்மாண்ட வீட்டில் தான் அம்பானி குடும்ப திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் பங்கேற்க, தங்களுக்கு மிக மிக நெருக்கமான 600 பேருக்கு மட்டுமே அம்பானி குடும்பத்தார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டில் அழைப்பிதழ் பெற்ற ஒரே நபர் ரஜினி மட்டும் தான். இவ்விழாவில் பங்கேற்கத் தான், தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு மும்பை பறந்துள்ளார்.
அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவிப்பாணை வெளியிட்டு ஒருவருடம் முடியும் தருவாயிலும், இதுவரை தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவில்லை. டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் கூட சுற்றி வந்துவிட்டார். ஆனால், சென்னை நகர எல்லையை கூட ரஜினி தாண்டவில்லை. தனது மன்றத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை ரஜினி வழங்கி வந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வராதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என நடிகர் அமிதாப் பச்சனிடம் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று, வீடியோ ஒன்றை வெளியிட்ட அமிதாப், கஜா புயல் சேதங்களை பட்டியலிட்டு, சகோதரத்துவத்தை உணர்த்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமிதாப் சொல்லி லட்சம் லட்சமாக குவியப் போவதில்லை என்றாலும், தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது, அவ்விஷயம் தேசிய அளவில் கவனம் பெறும். நடிகர் கமல்ஹாசன் அதற்கான முயற்சியை தான் அமிதாப் மூலமாக செய்தார். இதே முயற்சியை ரஜினி ஏன் செய்யவில்லை? என்பது தான் கேள்வி.
“ஒரு சொட்டு வியர்வைக்கு, ஒருபவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”, என பாடி நடித்தவர், டெல்டா மாவட்டங்களில் ஒரு ரவுண்ட் அடித்திருந்தால், தேசிய அளவில் கஜாவின் பாதிப்பு வெளிச்சமாகியிருக்கும் என்பது எதார்த்தம். நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்காது. அரசியல் களத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு, என்ன? ஏது? என்று கூட எட்டிப்பார்க்காதது தான் மக்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
தற்போது, ‘2.0’ படத்திற்காக வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து, பேனர் கட்டிய தனது ரசிகர்களை தன் பிறந்தநாளன்று கூட சந்திக்காமல், அம்பானி வீட்டு விஷேசத்திற்காக ஓடியது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக கிளம்பியுள்ளது. மக்கள் அல்லல்படும் போது வந்து நிற்காதவர், போர் வரும்போது வருவேன் என்பது எதற்காக? அது ஓட்டு அரசியல் ஆகாதா? இது முறையா என்பது ரஜினிக்கே வெளிச்சம்.

1 comment:

  1. Making Money - Work/Tennis: The Ultimate Guide
    The way you would https://octcasino.com/ expect from betting on the wooricasinos.info tennis matches of tennis is to bet https://septcasino.com/review/merit-casino/ on the หาเงินออนไลน์ player you like most. But you also need a ventureberg.com/ different

    ReplyDelete