Friday 25 January 2019

பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?

கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் பல்வேறு தரப்பினர் உள்ள நிலையில், சீனா அதுகுறித்து கவலைப்படுவதை போன்று தெரியவில்லை.





சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு உள்நாட்டு காரணமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்ஸிட் உடன்படிக்கை நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட சர்வதேச காரணங்களும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 21ஆம் தேதி தனது பொருளாதார மந்தநிலை குறித்த தரவுகளை வெளியிட்ட சீனா, அவை தான் எதிர்பார்த்திருந்த அளவுக்குள்தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள ஊடகங்கள் இந்த பொருளாதார முடிவுகளிலுள்ள சாதகமான விடயங்களை மட்டும் பெரிதுபடுத்தி காண்பித்து வருகின்றன.


 
2009ஆம் ஆண்டு உலகளவில் நிலவிய பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, முதல் முறையாக 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக குறைந்ததற்கு சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரே காரணமென்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
எண்ணிக்கையை விட தரமே முக்கியம்
 
தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சர்வதேச ஊடகங்கள் எப்படி காட்சிப்படுத்தும் என்று நன்கு அறிந்திருக்கும் சீன ஊடகங்கள், தங்களது நாடு எண்ணிக்கை அடிப்படையிலான வளர்ச்சியை விடுத்து தரத்தை நோக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுவருவதாக கூறுவதுடன் அதை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
 
சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தளவு வளர்ச்சி வீதத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை கேலிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் சீன ஊடகங்கள், தங்களது நாட்டின் 6.6 சதவீத பொருளாதார வளர்ச்சி உலக அரங்கில் சீனாவின் தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது.
 
"கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த உள்நாட்டு உற்பத்தி என்பதை மையாக கொண்டு சீனாவின் பொருளாதார மந்தநிலை பற்றிய செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து, ஆய்வு மேற்கொள்வது சரியானதாக இருந்தாலும், வெறும் வளர்ச்சியை மட்டும் மையாக கொள்ளும் அணுகுமுறை தவறானது" என்று சீனாவின் தேசிய ஆங்கில பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குதல், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றை சீன அரசாங்கம் மேற்கொள்வதன் காரணமாகவே இந்த பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"இதற்கு முன்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனா பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ஏற்கனவே அதிக விலையை கொடுத்ததுடன், அதன் மூலம் கிடைத்த வளர்ச்சி மக்களுக்கு நல்ல, தரம் வாய்ந்த வாழ்க்கையை அளிப்பதற்கு தவறிவிட்டது" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"பொருளாதார மந்தநிலையின் காரணமாக நாடு நெருக்கடி நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால், முக்கியமான பிரச்சனைகளை தீர்க்கவும், அபாயங்களை தவிர்க்கவும், சீரான போக்கையும் நோக்கி செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அர்த்தம் கொள்ள வேண்டும்."
 
சீன அரசு எதிர்பார்த்ததே
 
சீனாவின் பொருளாதார மந்தநிலை குறித்து பல்வேறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், கடைசி காலாண்டின் வளர்ச்சி இதுபோன்ற அளவில்தான் இருக்குமென்று சீன அரசின் மதிப்பீடுகள் ஏற்கனவே கணித்திருந்தன.
 
"2018ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 6.5 சதவீத வளர்ச்சிக்கு அதிகமான அளவையே நாடு எட்டியுள்ளது. கடந்தாண்டு இருந்த பல்வேறு தடைகளையும் மீறி 6.6 சதவீத வளர்ச்சியை அடைந்தது நல்ல அறிகுறியே" என்று அந்நாட்டின் தேசிய புள்ளியில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு என்ன சொல்கிறது?
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'பீபிள்ஸ் டெய்லி' பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளின் மற்றொரு பகுதியை தலைப்பு செய்தியாக்கின. அதாவது, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக 90 ட்ரில்லியன் யுவான்கள் என்ற அளவை கடந்துள்ளதாக செய்தி வெளியிட்டன.
 
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்திருந்தாலும், உலக பொருளாதாரத்திற்கு 30 சதவீத பங்களிப்பை அளித்து உலக அரங்கில் முன்னணி நாடாக தொடர்ந்து வருவதாகவும் அந்நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சீனாவின் பொருளாதாரம் "உலக எதிர்பார்ப்புக்கு உரியதாகும்" என்பதை இந்த பொருளாதார முடிவுகள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி முகமையான சின்குவா தெரிவித்துள்ளது.
 
"சர்வதேச அளவில் உயர்ந்து வரும் பாதுகாப்புவாதத்தின் கடினமான சூழ்நிலைகளிலும், சீனா எதிர்கொண்டு வரும் புதுவகையான சவால்களையும் மீறி இந்த அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சீன பொருளாதாரத்தின் செறிவு, முக்கியத்துவம் மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday 23 January 2019

சுபாஸ் சந்திரபோஸின் இரகசிய காதல்!

சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று.

தீவிரமான விடுதலைப் போராட்ட வீரராக அறியப்பட்ட சுபாஷ் சந்திரபோஸின் இரகசிய காதல் பற்றி பலரும் அறிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதைப்பற்றிய சில தகவல்கள் இவை.
காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது.
எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.
வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.
அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் “இந்தியாவின் துயரம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.
போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.
எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.
1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.
சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், ‘அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் – சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்’ என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸ் பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது  என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்
“தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்” என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, “என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.”
“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்” என்று சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மாவின் அன்பு
அந்த கடிதத்தின் கடைசியில், “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்து கொண்டார்.
எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், “சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது.” போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.
திருமணம் நடந்ததா?
அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஒஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை இரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.
இந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது.
1937 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், “இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை” குறிப்பிட்டுள்ளார்.
“நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்.”
1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.
அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.
ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.
இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 19 January 2019

இந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்



இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் ஆவார். சந்திர குப்தருக்கு மட்டுமின்றி சாணக்கியரின் அறிவுரைகள் அனைத்து மக்களுக்கும் உபயோகமானதும், பொதுவானதுமாகும்.

வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார். ஒருவர் வாழக்கையில் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாணக்கியர், என்ன செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அதன்படி உங்கள் வாழ்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் என்னென்னெ செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிதி பிரச்சினைகள்

பணம் எப்பொழுதும் கட்டுப்பாட்டின் அடையாளமாகும். எனவே உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளை தேவையில்லாத சூழ்நிலைகளில் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பணப்பிரச்சினைகளை அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.

குரு மந்திரங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

உங்களது குரு உங்களுக்கு கூறிய அறிவுரையையோ அல்லது மந்திரத்தையோ ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புனித தன்மை வாய்ந்த இந்த மந்திரங்கள் பகிரப்படும் போது அதன் புனித தன்மையை இழப்பதோடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்கள் குடும்ப சண்டைகளை வெளியே சொல்லாதீர்கள்

அனைத்து குடும்பத்திலுமே உயர்ந்த குணங்கள், சில மோசமான குணங்கள், மோதல்கள் என அனைத்தும் இருக்கும். ஆனால் அவற்றை பொதுவெளியில் வெளியிடுவது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுறத்துவதோடு உங்களை கேலிக்கும் உள்ளாக்கும்.

தெரியாமல் தானம் செய்வது

ஞானமுள்ள மனிதன் எப்பொழுதும் தான் செய்த தானத்தையோ, நன்கொடையை பற்றியோ வெளியே கூறமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளால் மதிக்கப்படுவார்கள். ஆனால் தற்பெருமைக்காக இதனை வெளியே சொல்வதோ அல்லது பிறர் அறியும்படி செய்வதோ உங்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது.

உங்கள் வயதை வெளிப்படுத்தாதீர்கள்

வயதிற்கும் உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே யாரும் கேட்காத வரை உங்கள் வயதை வெளிப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனமான இளமை உணர்வை உணரும் வாய்ப்பின் மீது, உங்கள் மனம் அதிசயங்களை உண்டாக்கி அற்புத பலன்களை அளிக்கும்.

உங்கள் பாலியல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருங்கள்

உங்களின் பாலியல் வாழ்க்கை என்பது உங்களின் தனிப்பட்ட விஷயமாகும், அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள எந்த அவசியமும், உரிமையும் இல்லை. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூறும்போது மற்றவர்கள் உங்களை பற்றி எளிதில் எடை போட்டுவிடுவார்கள்.

அதிகார துஸ்பிரயோகம்

ஒருவேளை நீங்கள் அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ பெரிய பொறுப்பிலே இருந்தால் அந்த அதிகார போதை உங்கள் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் நிலை கண்டு பொறாமை கொள்ளலாம், அதேபோல நீங்களும் உங்களின் தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகளை அதிகாரத்தின் மூலம் பணியில் திணிக்கக்கூடாது.

உங்கள் சொந்த அவமானங்களைப் பற்றி கேலி செய்யாதீர்கள்

உங்களின் முட்டாள்த்தனத்தை எண்ணி எப்போதாவது நீங்களே சிரித்திருப்பீர்கள். அதனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதை வெளிய சொன்னால் மற்றவர்கள் இதனை பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்த நேரிடலாம். சிலசமயம் உங்களின் வருங்காலம் கூட இதனால் பாதிக்கப்படலாம்.

Friday 11 January 2019

கருணா ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!

கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம்.


அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அநுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கருணா கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக்கிடமிருக்கவில்லை. சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு இருந்தார். அம்முகாமில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு இருந்தார். அந்த 75 பேரிலும் 50 பது பேர் வரையானவர்கள் 12 வயதிற்கும் குறைவானவர்கள்.
அதன்பின்னர் நாங்கள்தான் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து பாதுகாப்பும் கொடுத்து வைத்திருந்தோம். புதுக்குடியிருப்புப் பக்கமாகிலும் சரி அல்லது, கிழக்கு மாகாணத்திலாவது சரி குறைந்த பட்சம் பிரபாகரன் இருந்த இடம் குறித்து கூட சரியானபடி எமக்கு தகவல் தரவில்லை.
யுத்தம் முடிந்த நாளிலிருந்து கொழும்பிலுள்ள இரவு களியாட்ட விடுதிகளில் வெவ்வேறு இனப் பெண்கள், சில அரசியல்வாதிகளின் செயலாளர்கள் போன்றவர்களுடன் ;தான் கருணாவின் வாழ்க்கை கழிந்தது. இங்கிலாந்தில் இருந்த மனைவி பிள்ளைகளைக் கூட கைவிட்டிருந்தார்.
கொழும்பிலிருந்து சல்லாப வாழ்க்கைதான் நடத்திக்கொண்டிருந்தார். இப்படி இருந்தவர்  இப்ப அரசியல் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
2004ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கருணா குறித்தும் கருணா தற்போது தானே ஞாபகப்படுத்துகின்றார். ஆனால் கருணா கிழக்கிலிருந்து பாய்ந்து வந்தபின் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணாபோல ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.
கருணாவிற்;கு இருந்த ஒரே தொடர்பு பிள்ளையான் மட்டுமே. இப்பொழுது கருணாவும் பிள்ளையானும் வெவ்வேறு அணிகளின் எதிரிகள். கருணா என்கின்ற மனிதர் சொல்லக் கூடியளவிற்கு பெரிய ஆளாக இப்போதில்லை. அவர் சல்லாபத்தில் திளைத்த ஒரு நபர் மட்டுமே.
தற்போது இவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர். மேல் இருந்து கீழே வந்த ஏனைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இவரும் ஏற்பட்டுள்ளது.  இவர் தற்போது தன்னுடைய பிம்பத்தை பெருக்குவதற்காகத்தான் பொட்டம்மான் உயிரோடு நோர்வேயில் இருக்கின்றார் போன்ற கருத்துக்களை கூறிவருகின்றார். இதைத் தவிர கருணாவுக்கு வேறு திறமையோ அல்லது ஏதாவது சிறியளவிலான ஓர் இயக்கத்தை உருவாக்கி நடத்துவதற்கான ஆற்றலோ ஏதுமில்லையெனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Wednesday 9 January 2019

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன? அதிமுக/பிஜேபியின் சாதிபங்கீடு முறையை கண்டு ஏன் இவ்வளவு பயம்?



கடந்த நான்கைந்து நாட்களிலே திருமா, வைகோ, ரஞ்சித், வன்னியரசு இவர்களின் பேச்சையும் அதிலே புகைவதையும் பார்த்தால் ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது அதை வெளியிலே சொல்லாமல் சண்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தோன்றும்.

அது என்ன என்பது பேட்டி எடுத்த ஆட்களுக்கும் தெரிந்திருக்கிறது ஆனாலும் அதை மெல்லவும் விழுங்கவும் முடியாமல் ஏன் எப்படி என சும்மா போட்டு வாங்க மட்டுமே முயற்சி செய்தார்கள் என்பது அதை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கலாம்.

தமிழகத்திலே திராவிட கொள்கை என்பது பார்ப்பான் தான் சாதிக்கு காரணம் எனவே பார்ப்பானை ஒழிக்கனும் ஆனால் சாதி அடிமைகள் மற்ற சாதிகளுக்கு தேவைப்படும் எனவே இருக்கனும் என்பது தான். நண்பர் நியாண்டர் செல்வன் ஒரு முறை சொன்னது போல ஜமீந்தாரும் அவரின் வீட்டிலே இருக்கும் பண்ணை அடிமையும் சேர்ந்து பார்ப்பானை ஒழித்து சமத்துவம் கொண்டு வரும் விளையாட்டு தான் திராவிட கொள்கை என்பதே.

முழு திராவிட கொள்கை பரப்பும் பொஸ்தவங்களும் இன்னபிறவும் இதைச்சுற்றியே இருப்பதை பார்க்கலாம். பார்ப்பானை மணியாட்ட உடாத புடுங்க என கூவும் கொள்ளை குன்றுகள் ச்சீ கொள்கை குன்றுகள் என்றைக்கும் பரம்பரை மணீயம் பற்றியோ நில உரிமை, வேலைவாய்ப்பு இன்னபிற பற்றியோ பேசவே மாட்டார்கள். கார்ப்பரேட் எதிர்ப்பு என்பதே எங்கேயும் எப்போதும் ஒரு தலித் தானாகவே நிறுவனங்களை நிறுவி முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவே. இங்கே தலித் என சொன்னாலும் அது எல்ல பிற்படுத்தப்பட்ட அல்லது வசதியில்லாத சாதிகளை மட்டுமல்ல குடும்பங்களையும் குறிக்கும்.

வேலையில்லாதவன் வேலையில்லாமலே ஏழையாகவே இருக்கவேண்டும். பெரும்பாலானா மக்கள் ஏழையாகவே இருக்கவேண்டும் அப்போது தான் இந்த ஆட்கள் புரட்சி செய்து ஏழைகளை காப்பாற்றிக்கொண்டே இருக்கமுடியும் என்பது தான். சமீபத்திலே கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊர்கள் இன்னமும் ஏழ்மையாகவே இருக்கிறது என நண்பர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 1990கள் வாக்கிலே தான் நான் முதன் முதலாக கடலூர் உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு போனேன். கொங்கிலே நல்ல வீடுகளையே பார்த்து பழகியிருந்த எனக்கு அங்கே குடிசைவீடுகள் மட்டுமே இருந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. இன்றைக்கு வரைக்கும் நிலை அப்படியே தான் இருக்கிறது.

1980களிலே இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டிலே இருந்து ஒரு விடிவுகாலம் தமிழக மக்களுக்கு எம்ஜியாரின் வழியிலே கிடைத்தது. காமராஜர் உள்ளிட்டோர் அதை முன்பே செய்ய முயன்றிருந்தாலும் எம்ஜியார் அதை ஒரு இயக்கமாகவே செய்ய ஆரம்பித்தார். காமராஜருக்கு இல்லாத வசதியான தனிக்கட்சி என்பதும் எம்ஜியாருக்கு இருந்தது. அதனால் அவரால் நினைத்ததை செய்ய முடிந்தது.


கட்சியிலே எல்லா சாதியினருக்கும் இடபங்கீடு கொடுத்தார். பரம்பரை மணியத்தை ஒழித்தார். அதுவரையிலே ஆண்டான் அடிமைகளாக இருந்த மக்களை எல்லோரும் சமம் என செயல்படுத்தியே காட்டினார். அடுத்து வந்த ஜெவும் அதை தொடர்ந்தார். இருவரின் பல செயல்கள் மீதும் அதிருப்தி இருந்தாலும் அடிப்படையிலே நல்லது செய்யவேண்டும், அதிகாரத்தை பங்கிட்டுகொள்ளவேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள்.


ஜெ என்ன ஊழல் செய்தாலும் பெரிய பரப்புரைகள் ஏதும் செய்யவில்லை என்றாலும் திரும்ப திரும்ப வெற்றீ பெறக்காரணமே எல்லோருக்குமே அங்கே இடமுண்டு. அது மட்டுமல்ல அங்கே சாதியை சொல்லி எல்லாம் திட்டிவிட்டு கட்சியிலோ ஆட்சியிலோ இருந்துவிட முடியாது. பொதுத்தொகுதியிலே தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் அளவுக்கு தைரியமும் திறனும் ஜெவுக்கு இருந்தது.


திமுகவிலோ பலமுறை சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களிலே வெற்றி பெற்ற ஆட்களை கூட பொதுமேடையிலே சாதி சொல்லி திட்டி அசிங்கப்படுத்துவது சர்வ சாதாரணம். சாதியிலே கண்ணாலம் கட்டியிருக்கிறேன் என கிண்டல் அடித்து சுகம் காண்பது சட்டசபையிலே நடக்கும்போது மற்ற இடங்களிலே எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


எனவே இந்த வழக்கமான திராவிட கொள்கைகளால் அதிருப்தி அடைந்த கட்சிகள் சோ கால்டு சாதிகட்சிகள் மற்றும் புரட்சி பேசும் தலித் இயக்கங்கள் இதை பேசாமல் சட்டமன்றத்திலே இடம் இத்யாதி என பேசி சமாளிக்க முய்ன்றன. கட்சி ஆரம்பித்ததிலே இருந்து இதுவரை தனித்து நிற்க திறனற்ற கையாலாகாத கட்சியான திமுகவோ இவர்களை வளர்த்து விட்டது.


ஜெவோ அவர்களின் கோரிக்கை நியாயமானதே என நினைத்து இடம் கொடுத்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முயன்றார். இன்றைக்கும் ஜெயலலிதா அம்மா அவர்கள் என பம்முவது இதனால் தான். உப்பிட்ட கையை கொஞ்சமே நினைத்து பார்க்கும் நன்றி இருப்பது இப்போதைய சூழ்நிலையிலே பாராட்டப்படவேண்டிய விஷயமே.


ஆனால் தமிழ்நாட்டிலே அதிமுக போல இந்திய அளவிலே பாஜக போல எல்லா சாதியினரையும் பிரிவினரையும் ஒருங்கிணைத்து செல்வதை எதிர்த்து பேசமுடியாத சூழ்நிலை. அப்படி மற்ற கட்சிகளும் கம்மினிஸ்டுகள் உட்பட இருக்கவேண்டுமே வெளீப்படையாக கேட்கமுடியாத சூழ்நிலை. மோடி அரசின் சுய தொழில் முன்னெடுப்பு திட்டங்கள் பெரும் பலன் அளிப்பதை கண்டு பலரும் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதை எதிர்க்கவே முடியாத சூழ்நிலை


விளைவு இப்படி மென்று விழுங்கி திராவிட ஆட்சியிலே தலித்துகளுக்கு முன்னேற்றம் இல்லை என பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை வைக்கவேண்டிய சூழ்நிலை. என்ன அப்படி முன்னேற்றம் இல்லை என கேள்விகள் கேட்டாலும் அதற்கு வெளிப்படையாக பதில் சொல்லாமல் எம்பவர்மெண்ட் எம்பவர்மெண்ட் என மழுப்பும் சூழ்நிலை


பாஜக இந்திய அளவிலே இப்படி எல்லா சாதிகளையும் ஒருங்கிணைத்து செல்வது பற்றீ முன்னமே பலமுறை எழுதியிருந்தேன். பாஜகவின் தேர்தல் வெற்றி என்பது என்னாமோ மோடி பேசுறார் அவரை பார்த்து வாக்களித்து விடுகிறார்கள் என்பது அல்ல. எல்லா சாதியினருக்கும் சரியான அளவிலான அதிகார பங்கீடும் எல்லா சாதியினரும் முன்னேறும் வகையிலே பொருளாதார திட்டங்களும் என்பது தான் பிஜேபியின் வெற்றிக்கு காரணம். நாளை வரும் தேர்தல் முடிவுகளும் இதை காட்டும்.


ஆதாரம் என்ன என கேட்டால், ஜாட் பிரச்சினை, குஜ்ஜார் பிரச்சினை, படேல் பிரச்சினை, மராத்தா பிரச்சினை, ராஜ்புத் பிரச்சினை என பல சாதிகளை கான்கிரஸ் கிளப்பி விட்டதே இப்போது என்னாயிற்று? ஏன் எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்? ஏன் திரும்பவும் அதை தூண்ட முடியாமல் விவசாய பிரச்சினை என ஒரு ஆயிரம் ஐநூறூ பேரை வைத்துக்கொண்டு காபரே டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறதுகள்?


அடிமட்டத்திலே இருந்து கஷ்டப்பட்டு மேலேறி வந்த அதிமுகவின் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களுக்கும் சரி, பாஜகவின் எல்லா மட்ட தலைவர்களுக்கும் இது தெரிந்து இருக்கிறது. அதற்கு ஏற்றால் போல் நிலைமையை சரி செய்ய வேலை செய்கிறார்கள். திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துகிறார்கள். மக்களிடம் எடுத்து செல்கிறார்கள்.


விளைவு இந்த ஊழல்வாதிகளின் சமூகவிரோதிகளின் தேசவிரோதிகளின் திட்டங்கள் ஏதும் செயல்படுவதில்லை.


அந்த ஊழல்வாதிகளிடையே தஞ்சமடைந்து திரிபவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை எதிர்க்கவும் முடியவில்லை.


மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறை இந்த அடிப்படையிலேதான் பார்க்கவேண்டும்.


சினிமா எடுத்தால் புரட்சி வெடித்துவிடும் மக்கள் பொங்கி எழுவார்கள் என நம்பி படம் எடுத்து மிகவும் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் ஏன் தலித்துகளுக்கு படிப்பு, வேலை, முன்னேற்றம் என பேசவில்லை? ஏன் தலித்துகள் தலித்துகளுக்கே ஓட்டுப்போடவேண்டும் எனும் சாதி வெறி விஷத்தை கக்குகிறது? வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை எனும் கோஷம் சாதிவெறீ , தலித் ஓட்டு தலித்துகளுக்கே எனும் கோஷம் முற்போக்கு புரட்சியா?


மக்கள் வறுமையிலே துன்படுப்படுகிறர்கள், இளைஞர்களுக்கு வேலை இல்லை, வியாபாரம் நடக்கவில்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கிய விசிக ஏன் இப்போது சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு என ஒரு இல்லாத விஷயத்தை மக்களுக்கு புரியாத விஷயத்தை எடுத்துக்கொண்டு கோமாளியாய் திரிகிறது?

ஏன்? போராட வேறு விஷயங்களே இல்லையா? அல்லது நாட்டிலே பாலாறும் தேனாறூம் ஓடுகிறதா?

கார்ப்பரேட் எதிர்ப்பு, அந்நிய நிறுவனங்கள் எதிர்ப்பு என்பதெல்லாம் என்ன ஆனது? சரக்கு விற்கவில்லையா?

தமிழ் உணர்வு, தமிழர் மானம், தமிழர் இனம் சரக்கும் என்ன ஆனது? கொள்வாரில்லையா?

தமிழனுக்கு சாதி இல்லை என்றால் எங்கே தலித்து வந்தது?

தமிழ்தேசியவாதிகளூக்கும் திராவிட கொள்ளை குன்றுகளுக்கும் இருக்கும் பிரச்சினை இது தான்.

திராவிடம் சாதியாக மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது. தமிழ்தேக்சாயிசம் மாநிலரீதியாக இனரீதியாக மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது.

இரண்டு ராப்பிச்சைகளுக்கு இடையே இருக்கும் வீடு பங்கீடு தகாராறு தான் இப்போது நடப்பது.

இதிலே காசு புழங்கும் கட்சிகளுக்கும் காசை தேத்த முடிந்த ஆட்களுக்கும் பிரச்சினை இல்லை. காசு தேத்த முடியாத கோஷ்டிகள்?

தமிழ்நாட்டிலே பிஜேபி வடக்கே செய்த ஒருங்கிணைப்பை செய்கிறது. அதையும் எதிர்க்கமுடியவில்லை. அதிமுகவையே எதிர்க்கமுடியவில்லை எனும் போது ஜெவிடமே பருப்பு வேகவில்லை எனும்போது பிஜேபியிடம் மோடியிடம் மோதினால் சுக்குநூறாகிவிடுவோம் என தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.


கிருஷ்ணசாமியின் தேவேந்திரகுலவேளாளர்களை பிஜேபி தலைவர் அமீத்ஷா சந்தித்தது பற்றி நேரடியாக பேசாமல் அந்த சோபியா பொண்ணை தூண்டி விட்டு பிரச்சினை செய்ய வைத்து அது வெற்றிபெறவில்லை என்றவுடன் கைகழுவிவிட்டார்கள். பாவம் அந்த பெண் இவர்களின் சூழ்ச்சிக்கு சிக்கி படிப்பை இழந்து நிற்கிறது.


நேரிடையாகவும் மோதமுடியவில்லை மறைமுக முயற்சிகளும் வெற்றி பெறவில்லை என்றவுடன் சந்தி சிரிக்கிறது. அவ்வளவு தான் விஷயம்.

இதிலே கேட்கலாம் உண்மையிலே ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாக இருந்தால் மோடியின் போய் சேரவேண்டாம் குறைந்த பட்சம் அந்த விஷயங்களை எதிர்க்காமல் ஆவது இருக்கலாமே என.


அவர்கள் உண்மையிலே ஒடுக்கப்பட்டவர்களுக்கு உழைப்பவர்கள் இல்லை என்பது தான் சோகமாக வருத்தந்தரும் உண்மை.


முழுவதும் கொஞ்ச காலத்திலே அவர்களுக்கு பங்கீட்டு சண்டையிட்டுக்கொள்வதன் மூலம் வெளியேவரும்.

Tuesday 8 January 2019

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில் எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது.


அரசுகளே முதன்மையானவை என்ற நியதியை கொண்ட அனைத்துலக அரசியலில் செயல் வல்லமை என்பது அந்த அரசுகளின் பரப்பளவு, அதன் சனத்தொகை , பொருளாதாரம் ஆகியவற்றுடன் இராணுவம், மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியன தெளிவாக காணக்கூடிய முக்கிய தனிச்சிறப்பு பண்புகளாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை அந்த அரசுகளினது அனைத்துலக ஆளுமை, அவை தமது அனைத்துலக கட்டமைப்பை உருவாக்க கொண்டுள்ள குறிக்கோள் , அதை நோக்கியதான கடின உழைப்பு , உள்நாட்டிலே தேசிய நீட்டத்திலான விருப்பு ஆகியன அந்த அரசுகளின் கண்ணுக்குப் புலப்படாத தனிச்சிறப்பு பண்புகளாக பார்க்கப்படுகிறது
சீனா ஒரு பொருளாதார வல்வரசாக தன்னை உயர்த்தி கொள்வதற்கு மேற்கூறிய பொது பண்புகள் அனைத்தும் ஒருமித்து காணப்பட்டதன் பலனாலேயே இன்று ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக செல்வாக்கிற்கு சவால் விடும் ஒரு பெரிய நாடாக பார்க்கப்படுகிறது.
‘சுதந்திரமான- திறந்த ஆசிய பசுபிக்’ என்ற பதத்தை வலியுறுத்தும் அமெரிக்கா இந்த கொள்கை மீதான உறுதி முன்பு என்றும் இல்லாத அளவு வலிமையானதாகி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார அரசியல் பாதுகாப்பு பாத்திரம், இந்தோ பசுபிக்கரை நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. இதனாலேயே அமெரிக்கா இந்த நாடுகளில் பல ட்ரில்லியன் டொலர் நிதி முதலீடு செய்துள்ளது என்று வலியுறுத்துகிறது.
மேற்கு பசுபிக்கரை நாடான பப்புவா நியுகினியாவில் இம் மாதம் நடுப்பகுதியில் ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் வருடாந்த கூட்டம் இடம் பெற்றது.
இந்த கூட்டதொடரிலே உரையாற்றிய, அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள், அபிவிருத்திக்காக கடன் பளுவை உயர்த்துவதையோ அல்லது கடன்பெறுவதன் மூலம் இறையாண்மையை விட்டு கொடுப்பதையோ அமெரிக்கா என்றும் ஏற்று கொண்டதில்லை என்று குறிப்பிட்டார்.
அனைத்துலக நாடுகளின் கூட்டத் தொடர்கள் இடம்பெறும் பொழுது, அதன் முடிவில் அனைத்து நாடுகளின் ஒப்புதல்களின் அடிப்படையில் ஒரு இறுதி அறிக்கை தயாரிக்கப்படுவது பொதுவான இராஜதந்திர பண்பாடாக கொண்ட நிலையில், பப்புவா நியுகினியா மகாநாட்டில் இறுதி உடன் பாடு எட்டப்படாமலே கூட்டத்தொடர் முடிவடைந்தது.
அமெரிக்க – சீன அதிகாரிகள் மத்தியிலும் அறிக்கை தயாரிப்பதில் இழுபறி நிலை தோன்றி இருந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் ஆசிய பசுபிக்கரை நாட்டு தலைவர்களே பொதுவாக பங்குபற்றவது வழக்கம். ஆனால் இவ்வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சார்பாக , துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள் பங்கு பற்றியதுடன் சீனா மீது அதிக குற்றசாட்டுகளை வைப்பதன் மூலம் திடமான அமெரிக்க வெளியுறவு கொள்கை நகர்வுகளின் வெளிப்பாட்டை அதிகம் காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, பப்புவா நியுகினியா தீவுகளில் ஒன்றான மனுஸ் தீவகற்பத்தில் லொம்றம் என்ற சிறு கடற்கரை பகுதியில் அவுஸ்திரேலிய அமெரிக்க கடற்படை தளம் ஒன்று அமைக்கப்படும் எனவும் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்திருந்தார். இது குறித்து விரிவான ஆய்வை இன்னுமொரு கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தெற்கு ,தென் கிழக்கு ஆசியாவிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயரும் மக்கள் கூட்டம் மனுஸ் தீவில் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதில் பலர் ஈழத்தமிழர்களாகவும் இருந்திருக்கிறாகள்.
இந்த கூட்டத்தொடரின், பின்பு அமெரிக்க, சீனா – இரு வல்லரசுகளின் தலைவர்களும் அடுத்து நவம்பர் 30 இல் ஆர்ஜெரீனாவில் இடம்பெற இருக்கும் உலகின் இருபது பெரிய நாடுகளின் மாநாட்டில் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் உலக நாடுகள் மத்தியிலான செல்வாக்கு யார் பக்கம் என்பது குறித்து சீன அமெரிக்க கொந்தளிப்பு நிலையையையும் அதிகம் காண கூடியதாக இருக்கும் என்பது பலரதும் பார்வையாக உள்ளது.
ஆக, சீன – அமெரிக்க செல்வாக்கு போட்டி மிக விரைவில் புதிய இரு பெரும் கூட்டுகளை உருவாக்கக் கூடிய தன்மையை நோக்கி செல்வது தவிர்க்க முடியாத நிலையை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மாலைதீவிலும் சிறிலங்காவிலும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் இந்த சீன -அமெரிக்க போட்டியை நன்கு விம்பப்படுத்துவதாக பல்வேறு ஆய்வாளர்களும் எழுதி வருகின்றனர்.
மாலைதீவு அரசியல் மாற்றங்களின் பின்பு மேலைத்தேய அல்லது வட அத்திலாந்திக்கரை தாராள ஜனநாயகத்தினதும் அதன் துணை நின்று கூட்டு அனைத்துலக அரசியல் நிகழ்த்தும் இந்தியாவினதும் சார்பு அரசாங்கமாக புதிய மாலைதீவு அரசாங்க நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மாலைதீவின் உள்நாட்டு அரசியல் மற்றம் சமூதாய பொறிமுறைகளுக்கு ஏற்ப அந்த நாட்டின் அரச கட்டமைப்பு பல்வேறு கொந்தளிப்புகளுக்கு பின்பு, மீண்டு நிறுவப்பட்ட நிலையையும் அதன் தற்போதைய அரசியல் உறுதித்தன்மையையும் பார்க்கும் இடத்து சிறிலங்காவின் எதிர்காலத்தை அதன் அரசியல் சமூக பொறிமுறைகளுக்கு ஏற்ற ஒரளவுக்கேனும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மிகவும் நுணுக்கமான ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்துலக அரசியல் தலையீட்டின் மத்தியில், மாலைதீவு இன்று தனது நிலையை அடைந்திருக்கிறது. இந்திய இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள். ஐரோப்பிய கூட்டு நாடுகளின் பொருளாதார தடை எச்சரிக்கைகளுடன் அமெரிக்காவின், மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற முன் எச்சரிக்கையும் மாலைதீவை மீண்டும் மேற்கு நாடுகள் நோக்கிய அனைத்துலக அரங்கில் நிலை எடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சீன செல்வாக்கிற்கு ஆதாரமாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத போக்குடைய அப்துல்லா யமீன் அவர்களை பதவியிலிருந்து இறக்கி, புதிய தலைவர் இப்ராகிம் சொலீ அவர்கள் பதவியில் ஏற்றப்பட்டிருக்கிறார். இவரை பதவி அமர்த்தலில் பின்புல இந்திய அரசியல் பொறியியல் நகர்வுகள் யாவும் இரகசியமாகவே உள்ளன.
சீனா அனைத்துலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது இல்லை என்ற போக்கை வெளியுறவுக் கொள்கையாக கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் அதேவேளை, எந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் ஜனநாயக முறைமை குறித்தோ அல்லது எதாச்சாதிகார முறைமை குறித்தோ கவலைப்படாது தனது பொருளாதார நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது.
சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை வழங்கி உள்ளது. மாலைதீவின் 80 சதவீத கடன் தொகை சீனாவுடையதே என்பது அனைத்துலக நாணய நிதிய புள்ளி விபர தகவல் ஆகும்.
சீன அரச வெளியீடான குளோபல் ரைம்ஸ் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாலைதீவின் புதிய அதிபர் சொலீ அவர்கள் என்ன தான் இந்திய சார்பு போக்காளர் என்று இந்திய மற்றும் மேலைத்தேய ஊடக அறிக்கைகள் கருத்து வெளியிட்டு கொண்டிருந்தாலும். பெரிய அளவிலான மாற்றங்களை இந்திய தரப்பு எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளது.
பதவி ஏற்பு வைபவம் முடிந்து அடுத்த நாள் சீன அதிபர் சீ ஜின் பிங் அவர்களுடைய விசேட தாதுவராக மாலை தீவு சென்றிருந்த சீன கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லோ சங்ஆங் அவர்களுடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் அதிபர் சொலீ அவர்கள் சீனாவுடன் தமது உறவை வளர்த்து கொள்வதில் திடமாக இருப்பதாக கூறி உள்ளார் என்று குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலைத்தேய ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் மாலைதீவு சீன கடன் பளுவிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கடினம் என்ற கூறி உள்ளனர். முறிந்திருந்த உறவை புதுப்பித்து கொள்வதற்கு தனக்கு ஒரு மீள் சந்தர்ப்பம் கிடைத்தமை இட்டு மட்டும் இந்தியா நின்மதி அடையலாம் என்று கூறி உள்ளனர்.
ஆக மாலைதீவு இந்திய சார்பானது போல காணப்பட்டாலும் முற்று முழுதான இந்திய ஆதரவு நாடாக என்றும் இருந்து விடப்போவது இல்லை. திரும்பவும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது செல்வாக்கை இந்த சிறு தீவில் நிலைநாட்டுவதற்கு எப்பொழுதும் முயற்சித்த வண்ணமே இருப்பர்.
மேலும் மாலைதீவில் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றிடமே ஆட்சி கையளிக்கப்பட்டுள்ளது. இப்ராகிம் சொலீ அவர்கள் அந்த கூட்டணியின் சார்பில் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டணியில் இருப்பவர்கள் எவர் எந்த பக்கம் சாய்வார்கள் என்பது இன்னும் ஒரு கேள்வியாகும்
மாலைதீவில் இடம் பெறும் இந்த அரசியல் நகர்வுகளின் வினைப்பயனே சிறிலங்காவிலும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
சிறிலங்காவில் அதிகாரத்திற்காக போராடும் மகிந்த ராஜபக்ச தரப்பும் ரணில் விக்கிரமசிங்க தரப்பும் எந்த வகையிலும் தமது சீன ஆதரவு போக்கையோ இந்திய நேசப்பார்வை போக்கையோ மாற்றி கொள்ள முடியாது.
சீனாவும் இந்தியாவும் தமது செல்வாக்கை நிலை நிறத்தி கொள்வதில் முக்கிய கவனம் செலுத்திய வண்ணமே இருப்பர். இந்த நிலையில் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தின் பாதுகாப்பு முக்கிய இடம் வகிக்க இருக்கும் அதேவேளை, இந்திய மற்றம் மேலைத்தேய உள்நாட்டு பொறிமுறைத் தலையீடுகளுக்கு பெரும் தேவை ஒன்று இருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ் கட்சிகளை சேர்ந்தவர்கள் தம்மை எந்த வல்லரசுகளின் தூதரகங்களும் தொடர்பு கொள்ளவில்லை என்று ஊடக பேட்டிகளிளில் குறிப்பிடுவதை காணக்கூடியதாக உள்ளது. சாதாரண உரையாடல்களிலும் உங்களுக்கு (தமிழர்களுக்கு ) எது நலன் பயப்பதாக படுகிறதோ அதனையே தெரிவு செய்யுங்கள் என தமக்கு மேலைத்தேய தாதரக அதிகாரிகள் குறிப்பிடுவதாக கூறினர். இது தமிழர்களின் தேவை அவர்களின் நலன்கள் குறித்து அவர்கள் நன்கு அறிவர் என்பதையே காட்டுகிறது.
மிதவாத தலைமையை எதற்கும் சமாதான காரணம் கூறுதல், உறுதியான நிலைப்பாடற்ற நடுவு நிலை, இரு பகுதியிலும் அதிக நன்மை பெறக்கூடிய நிலை ஆகியவற்றின் பெயரால் கூட்டு நலனில் இருந்து வேறுபட்டு நிற்றல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாதரகங்கள் தீர்மானிக்கிண்றன.
இந்த நிலையில் சிறிலங்காவின் சனநாயகத்தையும் அதன் அரசியல் யாப்புகளையும் பாதுகாக்கும் காவலர்களாக தம்மை தற்போதைய தமிழர் தலைமைத்துவம் காட்டிகொள்வது சரியானதா என்ற கேள்வி உள்ளது.
மிதவாத தலைமை தமது போக்கிலிருந்து விடுபட்டு தமது தேவைகளையும் அவற்றின் கேள்வியையும் புதிய பரிமாணத்தில் பார்க்க வேண்டிய காலம் இதுவாகவே படுகிறது.
இந்தியாவிடமே இந்திய- சிறிலங்கா ஒப்பந்த்தின் பேரால் நுள்ளிக் கொடுக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்திலிருந்து பின் நோக்கி திம்பு பேச்சு வார்த்தை காலத்திற்கு செல்ல கோரிக்கை விடவேண்டும்.
இன்றைய காலம் தமிழர் தரப்பு முக்கிய அரசியல் பலம் பெறக்கூடிய காலம் என்பதை தமிழர் தரப்பு மறந்து விடலாகாது. அதனை நகர்த்தும் விடயத்திலேயே அதன் கனதி தங்கி உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் சிறிலங்காவின் அரசியல் பெரும் அதிகார மையமாக ஆக்கப்பட்டுள்ளது
இந்திய -அமெரிக்க கூட்டு ஆதரவான ஒரு ஆட்சி சிறிலங்காவில் அமைய வேண்டுமாயின், தமிழர் தரப்பினர் பங்களிப்பு தேவை என்பதை நிறுவுவதன் மூலமே அரசியல் தலைவர்கள் தம்மை முதன்மைப்படுத்தி கொள்ளமுடியும். தாம் சார்ந்த மக்களின் சார்பாக தம்மை முதன்மைப் படுத்தி கொள்ளும் தலைவர்களே நகர்வுகளை உருவாக்க முடியும்
இந்த வகையில் இந்திய -அமெரிக்க கூட்டும் இந்தியாவின் தென் பிராந்திய நகர்வுகளின் கண்காணிப்பு தளமுமான சிறிலங்காவில், தமிழர் தரப்பினர் ஒருமித்த செயற்பாடு தவிர்க்க முடியாததாகிறது.
தலைவர்கள் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து விட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க வெளியே அதிகம் கட்சிகள் உள்ளன.
மேலும் சிலர் சிறிலங்கா மைய அரசியல் சூறாவளியில் சிக்குண்டு, வடக்கு வேறு கிழக்கு வேறு, என்று தனிப்பட்ட குரோதங்களை முன் நிறுத்தி மக்கள் மனங்களை திசைமாற்றுவது தமிழ் பேசும் மக்களது அரசியல் ஆராக்கியத்திற்கு எதிரானதாகும் .
தமிழ் மக்கள் தமது அரசியல் பொறிமுறையை தமது பலம் அறிந்து நகர்த்த வேண்டிய காலம் இது என்பது நிச்சயம் சரியானதாகும். ஏனெனில் ஏற்கனவே அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அவர்கள் குறிப்பிட்டது போல, தமது கடன் பளுவிற்கு தமது இறையாண்மையை மாலைதீவும் சிறிலங்காவும் ஏற்கனவே விற்றுவிட்டாயிற்று.
சீனா தனது பொருளார செல்வாக்கு பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. அமெரிக்க வல்லரசுடனான உறவு மேலும் மேலும் கொந்தளிப்பை நோக்கியே செல்லவும் உள்ளது என்பது மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரதும் பார்வையாகும்.
ஆக மேலும் மேலும் உப பிராந்தியங்களில் குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அதிக செல்வாக்கை பெறும் போட்டிகள் அதிகரிக்க உள்ளன என்பது தெளிவு.
-லண்டனில் இருந்து ‘லோகன் பரமசாமி’

Thursday 3 January 2019

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது; மீறிப் பயன்படுத்தினால் அபராதம்!

14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.  தடையை மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.



சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே  அறிவித்து இருந்தார். இதுவரை அறிவிப்பை தீவிரமாக யாரும் பின்பற்றவில்லை. பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே பயன்படுத்தியே வந்தனர். இந்த நிலையில் அரசாணையை அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதற்கான கெடு விதிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அரசாணை அமலுக்கு வந்தது.  



இந்த அரசாணையின்படி, மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகிய 14 பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டவைகளில் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களின் உறைகள் அடங்கும்.
கடைகளில் வாங்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் தரப்பட மாட்டாது என்பதால், இனி பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்

பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் அறிவிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில்  ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரம் வருமாறு:

1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், 
2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்
3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்
4. பிளாஸ்டிக் குவளைகள்
5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்
6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்
7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்
8. பிளாஸ்டிக் கொடிகள்
9. பிளாஸ்டிக் விரிப்புகள்
10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்
11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்
12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள், ஆகிய 14 பொருட்கள் தடை செய்யப்பட்ட இனங்களின் பட்டியலில் அடங்கும்.

இதற்கு மாற்றுப் பொருட்களாக எவற்றைப் பயன்படுத்தலாம் என்கிற பட்டியலையும் தருகிறோம்.

1. வாழையிலை
2. பாக்கு மர இலை
3. அலுமினியத் தாள்
4. காகிதச் சுருள்
5. தாமரை இலை
6. கண்ணாடி / உலோக குவளைகள்
7. மூங்கில் / மரப் பொருட்கள்
8. காகிதக் குழல்கள்
9. துணி / காகிதம் / சணல் பைகள்
10. காகிதம் / துணிக் கொடிகள்
11. பீங்கான் பாத்திரங்கள்
12. மண் கரண்டிகள்
13. மண் குவளைகள் 
போன்றவை குறிப்பிட வேண்டியவை ஆகும்.