Thursday, 3 January 2019

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது; மீறிப் பயன்படுத்தினால் அபராதம்!

14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.  தடையை மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.



சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே  அறிவித்து இருந்தார். இதுவரை அறிவிப்பை தீவிரமாக யாரும் பின்பற்றவில்லை. பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே பயன்படுத்தியே வந்தனர். இந்த நிலையில் அரசாணையை அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதற்கான கெடு விதிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அரசாணை அமலுக்கு வந்தது.  



இந்த அரசாணையின்படி, மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகிய 14 பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டவைகளில் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களின் உறைகள் அடங்கும்.
கடைகளில் வாங்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் தரப்பட மாட்டாது என்பதால், இனி பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்

பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் அறிவிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில்  ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரம் வருமாறு:

1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், 
2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்
3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்
4. பிளாஸ்டிக் குவளைகள்
5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்
6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்
7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்
8. பிளாஸ்டிக் கொடிகள்
9. பிளாஸ்டிக் விரிப்புகள்
10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்
11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்
12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள், ஆகிய 14 பொருட்கள் தடை செய்யப்பட்ட இனங்களின் பட்டியலில் அடங்கும்.

இதற்கு மாற்றுப் பொருட்களாக எவற்றைப் பயன்படுத்தலாம் என்கிற பட்டியலையும் தருகிறோம்.

1. வாழையிலை
2. பாக்கு மர இலை
3. அலுமினியத் தாள்
4. காகிதச் சுருள்
5. தாமரை இலை
6. கண்ணாடி / உலோக குவளைகள்
7. மூங்கில் / மரப் பொருட்கள்
8. காகிதக் குழல்கள்
9. துணி / காகிதம் / சணல் பைகள்
10. காகிதம் / துணிக் கொடிகள்
11. பீங்கான் பாத்திரங்கள்
12. மண் கரண்டிகள்
13. மண் குவளைகள் 
போன்றவை குறிப்பிட வேண்டியவை ஆகும்.

No comments:

Post a Comment