Wednesday 20 February 2019

தெற்காசியாவின் நட்சத்திரம்

இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக  உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா  முதன்மை இடம் வகிக்கிறது.

கொந்தளிப்பு மிகுந்த  அரசியல் அலைகளை சிறிய இந்து சமுத்திர தீவான  இலங்கையிலும்  அண்மைக் காலமாக தொடர்ச்சியாக தோற்றுவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடதக்கதாகும்.
பலம் வாய்ந்த நாடுகள், இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிலங்கா போன்ற  சிறிய நாடுகள் மீது வரலாற்று தொடர்பு உரிமை கோரல்கள், தமது போட்டி  வல்லரசுகளின் நகர்வுகள் ஆகியவற்றை  காரணமாக கொண்டு  நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் நிலை எடுக்க தலைப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கொந்தளிப்பு அலைகளுக்கு மத்தியில்  உறுதியான  சமூக பொருளாதார அரசியல் விடுதலை முன்னேற்றங்களை  தேடுவதில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ் சமுதாயம் மிக கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது.

இந்த தீவிற்குள் சிறிலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பு கொள்கை திட்டமிடல்கள், முன் முயற்சிகள் உட்பட பிராந்திய அரசுகளின் மூலோபாய தேவைகள், சர்வதேசத்தின் வர்த்தக,  இராணுவ தேவைகள் ஆகிய மூன்று முக்கிய சாவால்களில்  மத்தியில் தமிழ் தேசம் சிக்குண்டு கிடக்கிறது.
தமிழ் தேசியம் தெற்காசியாவின் ஒரு முக்கியமான, பிராதானமான அலகாக இருக்கின்ற போதிலும் பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் மீதான நோக்கு அதிகமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்படாது  இருப்பதால் சர்வதேச அரசுகளின் பலம் தமிழ் தேசியத்தை ஒரு தரப்பாக பார்க்கும் தன்மை இல்லாத நிலை காணப்படுகிறது.
கடல் சார் வர்த்தக இராணுவ  நகர்வுகளை தன்னகத்தே கொண்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்  துறைமுகங்கள் முக்கிய கவனத்திற்கு வந்திருக்கின்றன.
குறிப்பாக இலங்கைத்தீவின் கொழும்பு அம்பாந்தோட்டை, திருகோணமலை துறைமுகங்கள் பொருளாதார இராணுவ பலம் பொண்ட நாடுகள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.
அம்பாந்தோட்டையும் கொழும்பும் ஏற்கனவே சீன வல்லரசின் நெருங்கிய கையாளுகைக்குள் உட்பட்டு விட்ட நிலையில் மீதமாக இருக்கும் திருகோணமலை மீதான பார்வை இன்று பல்வேறு வல்லரசு தரப்புகள் மத்தியிலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த பிராந்திய நிலை  மற்றும் சர்வதேச அரசியல் நிலையை ஆகியவற்றை மையமாக வைத்து இங்கே ஆய்வு செய்யப்படுகிறது.
பிராந்திய முக்கியத்துவம்

இந்து சமுத்திரப் பிராந்தியம் இலங்கையின் மேலே இந்தியாவையும் பாகிஸ்தான், ஈரான் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், யேமன், சோமாலியா, கென்யா , தன்சானியா,  மொசாம்பிக் , தென்ஆபிரிக்கா என ஒருபகுதியிலும் மறுபகுதியில் பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்புர் இந்தோனேசியா , அவுஸ்ரேலியா ஆகியவற்றுடன் நடுவே மாலைதீவு மொறீசியஸ், சிசெல்ஸ் என மேலும் பல சிறு தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த பிராந்தியத்தின் இன்றைய முக்கியத்துவத்தை கொண்டு நோக்குவதானால், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தால் இந்த நாடுகளில் அதிகரித்த  முதலீட்டாளர்கள் சிறு உற்பத்திகளையும் பல்தேசிய கம்பனிகள் தமது சேவைசார் தொலத் தொடர்பு நிறுவனங்களையும் தமது வியாபார தேவைகளுக்கு ஏற்ற வகையில்  செயற்படுத்தி வருகின்றனர்.
உலகின் எண்பது சதவீது எரிபொருள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாகவே பயணிக்கின்றது. இதனால் கிழக்கு  மேற்கு வல்வரசு நாடுகள் அதிகம் நாட்டம் கொண்ட பிரதேசமாக உள்ளது.
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக உள்ளதால் அதன் மேலாண்மை கொள்ள துடிக்கும்  இதர வல்லரசுகளின் தலையீடுகள் காரணமாக சிறிய நாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தப் பிராந்தியத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க விரும்பும் இந்தியா, தனது தனித்துவமான அதிக்கத்தை  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக“ கூடிய எந்த வல்வரசையும் இப்பிராந்தியத்தில் உள்ள  சிறிய நாடுகளுடன்  தொடர்பு  வைத்திருப்பதை  தனது பிராந்திய வட்டகையின் சவாலாக கருதுகிறது.
தற்போது சீன வளர்ச்சியின் காரணமாக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து இநதியா தனது பிராந்தியத்தில் செயலாற்றுகிறது.  இருந்த போதிலும் இந்திய வளர்ச்சிப் போக்கை  அடுத்த இருபது வருடங்களுக்கு பின்பு கணிப்பீடு செய்துள்ள பல்வேறு தரவுகளின் அடிப்படையில், சர்வதேச அரங்கில் அரசியல் பொருளாதார விதியை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு பொறுப்பில் இந்தியா நகர்ச்சி பெறும் பொழுது, தற்போது நேச அணியில் உள்ள நாடுகள் யாவும் ஒரே பார்வையை கொண்டிருக்கும் என்பது எதிர்பார்க்க முடியாதது ஆகும் .
அந்த காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் போட்டி நாடாக மாறும் தன்மையை எதிர்பார்க்கலாம் என்பது இந்த தகவல்களின் முடிவில் கண்ட  எடுகோள்களாகும்.
சுதந்திரமான கடற்போக்கவரத்து என்பதை சாக்காக வைத்து  இந்திய பாதுகாப்பு வட்டகைக்குள் அமைவை பெற்றிருக்கக் கூடிய சிறிய தீவுகள் வேறு பிராந்திய வல்லரசுகளுடன் குறிப்பாக சீனாவுடன் வியாபார அரச கட்டுமான அபிவிருத்தி ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இந்தியா இந்த ஒப்பந்தங்கள் குறித்து தலையீடுகள் செய்யுமாயின்  தம்மை இந்தியா எளியாரை கொடுமை செய்யும் பாணியில் வெளியுறவு கொள்கை வகுத்துள்ளதாக குற்றம் சுமத்தும்  மனோநிலையை கொண்டுள்ளன.
இருந்த போதிலும்  சிறிய நாடுகளும் தமது நியாயத்தை பேணும் வகையில் தாம்  பொருளாதார முயற்சிகள் ஆரம்பிக்கும் போது முதல் தெரிவை  இந்தியாவிடம் சமர்ப்பிக்கின்ற போதிலும் இந்தியாவின் அயல் நாடுகளின் மீதான பொருளாதார முதலீட்டு நாட்டம்  குறைவாக இருப்பதால் தான், சீனாவிடம் செல்வதாக சிறிய நாடுகள் காரணம் சொல்வது அவற்றின் பொதுவான அயலுறவுக் கொள்கையாக உள்ளது.
இதற்கு நல்ல உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமான திட்டம் ஆரம்பித்த போது இந்திய மத்திய அரசிடமே முதலில் எடுத்து சென்றதாக சிறிலங்கா அரசியல்வாதிகளும் மாலைதீவில் விமான நிலையத்துக்கும் பிரதான நகருக்கும் இடையிலான பாலம்  அமைக்கும் போது சீன நிறுவனங்களை நாடுவதற்கு  முன்பு இந்திய மத்திய அரசிடமே சென்றதாக மாலைதீவும் கூறி வருவது குறிப்பிட தக்கதாகும்.
இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு  சீனா, சிறிய தீவுகளிற்கு பொருளாதார உதவிகள் செய்வதில்  அதிக ஆர்வம் காட்டுவதுவும், திருப்பி அடைக்க முடியாத அதிக பெறுமதி மிக்க பொருளாதார கட்டமைப்பு போக்குவரத்து சக்திவள திட்டங்களை நோக்கிய முதலீடுகளில் இறங்குவதும், இதன் மூலம்  கடன் பொறிக்குள்  இந்த சிறிய நாடுகளை வீழ்த்துவதுவும்  கடன் பொறி இராஜதந்திரம் என மேலை நாடுகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வகையிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தி கொண்டது என்பதுவும் அறிந்ததே.
கொழும்பு அரசியல் தலைவர்களின் பார்வையில் சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றம் சீன முதலீடுகள் சார்ந்ததாகவே இருக்கிறது. இதன் பொருட்டு இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பற்பாதை பேணப்பட வேண்டும் என்ற விவாதத்தை முன்நிறுத்தி, சீன கடன் பளுவை ஈடு செய்தல் என்ற போர்வையில்  சீனாவிடம் அம்பாந்தோட்டை துறை முகத்தை அடுத்த 70வருடங்களுக்க ஒப்பந்த அடிப்படையில்  குத்தகைக்கு கொடுத்து விட்டது.
பிராந்தியத்தில் இலங்கை

சிறிலங்கா அரசியல்வாதிகளின் வாக்குறுதி இராஜதந்திரம்  இந்து சமுத்திர பிராந்திய அரசியலிலும் இதுவரையில் வெற்றி தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் இந்தியா நோக்கிய பார்வையில்  சிறிலங்காவின் கடற்பிராந்தியத்தின் எந்தப் பகுதியும் இந்திய பாதுகாப்புக்கு எதிரானதாக இருக்காது என்று வாக்குறுதி அளித்த அதே வேளை ,  அம்பாந்தோட்டையை எழுபது வருட குத்தகைக்கு கொடுத்த சிறிலங்கா அரசு கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடல் நோக்கி மண் இட்டு நிரப்பப்பட்டு  துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தில் 60 தொடக்கம் எழுபது சத வீத சீன துறைமுக அபிவிருத்தி நிறுவனத்தினால் கையாளப்படும் என்பது சிறிலங்கா பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் ஹனோய் நகரில் இடம் பெற்ற இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் தெரிவித்த செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் வல்வரசுகள் பலவும் காட்டும்  ஆர்வத்தை சிறிலங்கா வியாபார பாணியில் கையாள முனைகிறது.  2008 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை சுமார் 28 நாடுகளில் இருந்து 450 கடற்கலன்கள் சிறிலங்காவிற்கு வந்து சென்றுள்ளன. அதிலும் 2017 ஆம் ஆண்டு மட்டும் வாரத்திற்கு ஒரு யுத்தகப்பல் வந்து சென்றதான பதிவுகள் உள்ளன.
வல்லரசுகளின் நகர்வுகளில்  சிறிலங்கா மீது  பொருளாதார அபிவிருத்தி நோக்கத்தை நோக்கியதான பார்வையை விட கேந்திர முக்கியத்துவம் கொண்ட  இராணுவ மயமாக்கும் பார்வையையே அதிகம் கொண்டுள்ளன .
2009 ஆம் ஆண்டிருந்து சிறிலங்காவில் எந்தவித இராணுவ தாக்கதல்களும் இடம் பெறாத போதிலும் சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்தல், தேசிய நலன் என பல்வேறு விடயங்களை காரணமாக கொண்டு போர்க்கப்பல்களையும்,  விமானங்களையம் பல நாடுகள் அன்பளிப்பாக கொடுத்துள்ளன அல்லது விற்பனை செய்துள்ளன
இந்த இராணுவ உதவிகள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிறிலங்கா அரசின் இராணுவ கடற்படை விமானப்படைகளை வலுப்படுத்துவதில் வல்வரசுகள் பெரும் ஆர்வம் கொடுப்பதை காண கூடியதாக உள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் நடுப்பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதியிலிருந்து 39 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலுடன் சிறிலங்காஇராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு நல்ல உண்மையான நண்பனாக கடந்த தசாப்தங்களில் இணைந்திருந்த நன்றிக்காக  ஜூலைஇறுதியில் சீன தூதரக அதிகாரியும்   இராணுவ கேணலுமான சூ ஜியாங்வெய் அவர்கள் சிறிலங்கா கடற்படைக்கு 054ஏ ரக போர்க்கப்பல் ஒன்றை வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து அந்த படகை இயக்குவதற்கும் அதிலிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்று கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கடந்த வருட நடுப்பகுதியில் இந்தியாவும் சிறிலங்கா இராணுவத்தை நவீனமயப்படுத்தவதற்கு உதவ இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட்டிருந்தார். பிரித்தானியாவும் கூட இராணுவ  உதவிகள் வழங்கி இருந்தது.
இந்த வகையில் சிறிலங்காவை இராணுவ ரீதியான கட்டமைப்பு களை வளப்படுத்தவதில் காட்டும் நேரடி ஊக்கம் பொருளாதார முதலீடுகளில் அதிகம் பொருட்படுத்தாத நிலைஉள்ளது.
மேலும் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் இலங்கையின் தென்பகுதியில்  ஒட்டு மொத்த சமுதாயமும் ஏதோ ஒரு வகையில்  இராணுவத்துடன் தொடர்புடையனவாக உள்ளன.  யுத்த வெற்றிகளின் கொண்டாட்டங்கள் இராணுவத்தில் இருந்த இளைஞர்களை வீரர்களாக ஆக்கி உள்ளது, இதனால் இராணுவம் தனித்துவமான செல்வாக்கை பெற்றிருக்கிறது.
இராணுவ செல்வாக்கை கொண்டிருக்கம் சமூக கட்டமைப்பும் பௌத்த சிங்கள தேசியவாத சித்தாந்தத்தின் பின்புலத்துடன் சிறிலங்கா புதிய தொரு தோற்றம் பெற்றுவருவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த வகையில் சிறிலங்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு தேசமாக பரிணமித்து வரும் அதேவேளை சிறிலங்கா ஒரு வல்வரசுகளின் அரசியல் களமாகவும் விரைவில் தமது இராணுவ நகர்வுகளை  செய்யக் கூடிய ஒரு களமாகவும் ஆகிவருகிறதோ என்ற எண்ணப்பாடு உள்ளது.
இதற்குரிய வசதிகளை சிறிலங்காவில் உள்ள துறைமுகங்கள் கொண்டுள்ளன. முக்கியமாக திருகோணமலை இதில் அடுத்த கட்ட நகர்வை சிந்திக்க உள்ள துறைமுகமாக ஆய்வாளர்கள் கருத்து கொண்டுள்ளனர்.

இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். 
இயற்கையாகவே துறைமுகத்திற்கு ஏற்ற கடற் புவியியல் அமைப்பை கொண்டுள்ள இந்த துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே அமைந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் சுற்றாடல் ஆளுமைக்குள்  நிலை பெற்றுள்ளது.
திருகோணமலையின் முக்கியத்துவம்
இந்து சமுத்திரத்தின்  கிழக்கு கடற்பரப்பின் முழுப்பகுதியிலும் உள்ள கேந்திர மூலோபாயத்தை கொண்ட  அனைத்து துறைமுகங்களையும் பார்க்க கடற்கலன்களை மிகவும் இலகுவாக நகர்த்க் கூடிய  உட்கட்மைப்பை கொண்ட துறைமுகமாக இது திகழ்கிறது
இதனால் Fleet என்று கூறக்கூடிய ஒரு கடற்படை  முழுமையாக தரித்து நின்று, கொந்தளிப்பு மிக்க பருவகாற்று காலங்களில் அமைதியாக செயலாற்றுவதற்குரிய தள  வசதிகளை கொடுக்கவல்லது.
இங்கே ஒரு கடற்படை என்பது இராணுவ பேச்சுகளில்  குறைந்தது மூன்று கடற்படை கப்பல்களும் ஆகக்கூடியது நூறு வரையிலுமாகும்.
கடற்படை என்பது யுத்தக் கப்பற்பிரிவுகளில்  வழித்துணைக் கப்பல்கள்,   போர்ப்படகுகளின் கூட்டுகள் , நாசகாரிகள், விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள்,  பயணிகள் கப்பல்கள் என பல்வேறு ரகங்களும் அடங்கும்
இவை அனைத்தையும் நிர்வகிக்கத்தக்க வகையில் இவற்றிற்குப் பின்புல உதவிக்காக வழங்கல் கப்பல்கள்,  இழுவை கப்பல்கள், பழுதடைந்த அல்லது விபத்துக்குள்ளான கப்பல்களை மீள்திருத்தம் செய்யக் கூடிய வசதிகளை கொண்ட கப்பல்கள் ஆகியவற்றுடன் நீரிலிருந்து கப்பல்களை தரைக்கு ஏற்றும் வசதி வகைகள் ஆகிய அனைத்தையும் பரிபாலிப்பதே ஒரு கடற்படை என பார்க்கப்படுகிறது
இதனால் யுத்தகப்பல்கள் வெடிபெருட்கள், உணவுக்கள், எரிபொருள், உதிரிப்பாகங்கள் ஆகியன இல்லாது நீண்ட காலம் செயலாற்ற முடியாது இத்தகைய அனைத்து வசதிகளையும் கொள்ளடக்க கூடிய திறன் திருகோணமலை துறை முகத்தில் உள்ளது என்பது இங்கே முக்கியமானதாகும்.
ஒக்ரோபர் மாதத்திலிருந்து மார்ச்மாதம் வரையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பருவப்பெயர்ச்சி காற்று காரணமாக கடற்தள நிலை கொந்தளிப்பு கொண்டதாகும்.  இந்த தளம்பல் நிலையின் தாக்கத்திற்கு உள்ளாகாத வகையில் இந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள  திருகோணமலையில்  நிலையாக நின்று செயலாற்ற கூடிய  வசதி உள்ளது.
அது மாத்திரம் அல்லாது இந்த துறைமுகத்தில் நிலை எடுத்து கொண்டிருக்கக் கூடிய   கடற்படை ஒன்று  வங்காள விரிகுடாவையும் இந்து சமுத்திர கிழக்கு பிராந்தியத்தையும் கட்டுப்படுத்தும் வலிமை பெற்று விளங்கும் என்பது மூலோபாய ஆய்வாளர்களது பார்வையாகும்.
கடற்கலங்களின் பிரசன்னம்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கடற்படை  மூலோபாய கொள்கைகள் குறித்த ஆய்வுகளை Center For New American Secuity என்ற கொள்கைஆய்வு மையம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கைகளில் சர்வதேச கடலில் கடற்படை கப்பற் கலன்களின்  பிரசன்னம் குறித்த தெளிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இவ்வறிக்கையின் படி உலகெங்கும் உள்ள கடற் பகுதிகளில் அமெரிக்க கடற்கலங்கள் உலா வருவதும் தரித்து நிற்பதும்-  எதாவது ஒரு நிகழ்வு இடம் பெறும்வரை காத்து நிற்கின்றன என்ற எண்ணம் பிழையானது ஆகும்.
அதேவேளை கடற்பிரசன்னம் ஒரு செயலற்ற வெறும் மிதப்பு நடவடிக்கை அல்ல. பதிலாக கடற்கலம் கடலில் இறங்கியதுமே மிகவும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றன . கர்வதேச கடற்கரை ஓர நாடுகளில் மட்டுமல்லாது நிலப்பரப்பை தமது எல்லைகளாக கொண்ட நாடுகளிலும் கூட  உள்நாட்டில்  என்ன நடக்கிறது என்பது அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாகும்.
கப்பல்களின் நிறைவேற்றப்பட வேண்டிய பல்துறை  நடவடிக்கைகளை வரிசைப்படுத்துதல். அவை  இராணுவ முனைப்பு ஆக இருந்தாலும் இராஜதந்திர முனைப்பு ஆக இருந்தாலும் புவியியல் சார் கணக்கெடுப்புகளாக இருந்தாலும் அடுத்த நிலையை அடையும் வரை மிகவும் சுறுசுறுப்பாக கப்பல் இயங்கிய வண்ணம் இருக்கும்.
கப்பல்கள், யுத்த நாசகாரிகள், கடற்படை பிரிவுகள், கரையோர காவல் படையினர், ஆகியன கடற்கலங்களின் பிரசன்ன நடவடிக்கையில் பங்குபற்றுகின்றன.  இந்த பிரசன்ன நடவடிக்கைகளின் பிரதான காரணம் இங்கே முக்கிய மானது.
பெரும்பாலான இன்றைய கடற்கலன்கள் உலக இயல்புக்கு தகுந்த வாறு அல்லது நவீனதொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய உளவு அறிக்கைகள் சேகரிக்கும் வசதிகளை நிச்சயமாக கொண்டிருப்பதுடன்  கூட்டு நாடுகளின் ஆதரவுடன் இந்த பயிற்சிகள் இடம் பெறுவதால், சினேகபூர்வமாக பல தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
துறைமுக வருகைகள் இவற்றுள் முக்கியமானவையாகும்.  பல்வேறு நாட்டு கப்பற்கலங்களும் திருகோணமலைக்கும் கொமும்பிற்கும் அம்பாந்தோட்டைக்கும் வருகை தருகின்றன,  இதே போல பல்வேறு துறைமுகங்களுக்கும் அவை வருகை தருவதுண்டு,
இதில் துறைமுக கட்டுகளின்  உயரம், நீளம் , எவ்வளவு விரைவாக தரித்து நிறுத்தக் கூடிய தன்மை, மீள எடுத்து செலுத்திச் செல்லக் கூடிய இலகுநிலை, அந்த பிராந்தியத்தில் இருக்கக் கூடிய கடலடி மணற்திட்டுகள்,  கடலடிபாறைகள் ஆகியவற்றுடன் பல்வேறு நேர அட்டவணைகள் என அனைத்தும் பதிவிலெடுக்கப் படுகிறது.
எப்பொழுதாவது யுத்தகாலம் ஒன்று வருமாயின் அதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே பரீட்சயப்படுத்தி கொள்வதே இதன் நோக்கமாக சொல்லப்படுகிறது.
துறைமுகங்கள் பழுது பார்க்கப்படுகின்றன, திருத்தி அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பல்வேறு நாடுகளின் கடற்கலன்களும் வருகை தருகின்றன.
அதில் யுத்தகாலம் மட்டுமல்லாது இயற்கை அனர்த்தகாலங்களின் போதும் கூட அல்லது சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள், மனிதகடத்தல்,  போதை பொருள்  கடத்தல் கடற் கொள்ளையரை மடக்குதல் போன்ற பல குற்றச்செயல்களை தடுப்பதுவும் இத்தகைய துறைமுக வருகைகளுக்கு காரணமாக பல்வேறு அரசுகளின் கடற்படைகளாலும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வருகைகளின் போது சேகரிக்கப்படும் சமூகங்கள் குறித்து தரவுகள், அவர்களது உணவு வகைகள் அவர்களது கல்வி அறிவு, கடல்சார் அறிவு உள்ளுர் தலைவர்களுடன் உறவாடுதல், மருத்துவ உதவிகள் பரிசுப்பொருட்கள் வழங்குதல் என்பன மூலம் உளவியல் செல்வாக்கை பெறுவதுடன் நன்நம்பிக்கையை பெறுதல் ஆகியன முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஆர்வம்
அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் திருகோணமலை மீது தமது ஆர்வத்தை கொண்டிருப்பதில் முக்கிய மானவையாக கருதப்படுகின்றன. திருகோணமலை பிரதான எண்ணெய் எரிபொருள் கொள்கலன் வசதிகளை கொண்டிருப்பதால், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கூட்டாக வியாபார இராணுவ  தேவைகளை மையாக கொண்டு தமது ஆர்வங்களை காட்டிவருகின்றன.
அதேவேளை தென் கொரியாவும் கூட திருகோணமலைப் பிரதேசத்தை வர்த்தக வலயமாக பயன்படுத்துவதில் முக்கிய கவனம் கொண்டுள்ளது.
அண்மையில்  அமெரிக்க பாதுகாப்பு செயலகம்,பென்டகன் இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அமெரிக்க காங்கிரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த அறிக்கையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடல் சார் விஸ்தரிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக சீனாவினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள  சிறிலங்காவின் அம்பாந்தோட்டை , பாகிஸ்தானின் குவடார் துறைமுகங்கள் சேமிப்பு வழங்கல் கட்டமைப்பு போல் தெரிந்தாலும் பிற்காலத்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு பெரும் உதவியாக இருக்கக் கூடியது என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
2015 ஆம் ஆண்டு ஒடுங்கிய செங்கடல் பகுதியின் இந்து சமுத்திரப் பகுதி வாயிலில் உள்ள டிஜிபோட்டி பகுதியில் புதிய தளம் ஒன்றை சீனா அமைத்துள்ளது.
சீன அரசாங்கம் வர்த்தக நலன்களை மையமாக கொண்டே தனது விரிவாக்கத்தை செய்கிறது. விநியோகப் பாதைகளை பாதுகாத்தல் என்பதன் அடிப்படையிலேயே சாதாரணமாக விரிவாக்கம் அமைந்துள்ளது என்பது ஒருசாராரது விவாதமாக இருந்து வருகிறது.
ஏனெனில் இன்றைய சர்வதேச அரசியல்  நிலையை பொறுத்தவரையில்  சீனா கடுமையான தொனியை பிரயோகப்படுத்தி தனது இராஜதந்திர  அணுகுமுறைகளை கொண்டிருக்காது .  பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்துவதிலும் பார்க்க அதனது சக்திவள விநியோக பாதைகளை  உறுதிப்படுத்தவதிலேயே அதிகம் கவனம் கொண்டுள்ளது.
மூலோபாய பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்தம்போது  தனது பொருளாதார அபிவிருத்திக்கும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட கூடிய பலநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தன்னெழுச்சியான அதிகார தோரணைகளை அதிக இடங்களில் விட்டு கொடுத்து நடந்து கொள்கிறது.
இந்தநிலை உலகளாவிய ஆட்சி வல்லமை பெற்றதன் பின்பு நிறைய மாற்றங்களை கொண்டதாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. இதற்கு ஏற்றவகையிலேயே சீனாவின் சர்வதேச ஆட்சி நிலையை அடையும் நோக்கை கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அமெரிக்கா போன்ற நாடுகள் தமது இராஜதந்திர நகர்வுகளை இந்து சமுத்திர நாடுகளை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றன.
இருந்த போதிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதன் பிராந்திய செல்வாக்கை அதிகரிப்பதற்குரிய அதிக சந்தர்ப்பங்களை கொடுக்கிறது. உதாரணமாக சிறிலங்காவில் தனது கடந்த கால வரலாற்று பிரசன்னத்தை நிரூபிக்கும் வகையில்  சீனா வரலாற்று ஆதாரங்களை தேடி ஆய்வுகள் மேற்கொள்ள முனைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
அதேவேளை சிறிய நாடுகளும் இருதரப்பையும் சமநிலைப்படுத்தம் வகையில் தமது இராஜதந்திர நகர்வுகளை முனைப்புடன் செய்து வருகின்றன உதாரணமாக  சிறிலங்காவின் பல்வேறு பிரதான ஊடகங்களும் சீன பிரசன்னத்தை பெரிதாக அலட்டி கொள்ளாது மேற்கு நாடுகள் சீறிலங்காவில் தலையிடுவதை பெருமளவில் குறைகாணும் ஒருவகை ஒழுக்கத்தை கொண்டிருக்கின்றன.
ஆனால் மேற்கு நாடுகள்  சிறிலங்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் யுத்த குற்றச்செயல்க்ளையும் பொறுப்பு கூறல் இனங்களுக்கிடையிலான சமரசம் ஜனநாயக மாண்புகள் என்பன குறித்த விவகாரங்களை முன்னிறுத்துகின்றன . .
இந்த நிலையில் இந்து சமுத்திர கடற்பாதை மீதான ஆர்வம் ஆசிய- பசுபிக் நாடுகளுக்கு இடையிலான பரந்து விரிந்த மூலோபாய வரைபாக இந்தோ- பசுபிக் பிராந்தியமாக மாற்றம் செய்யப்பட்டு கொள்கைகள் வகுக்கப்படுகிறது.
கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களும் ஏற்கனவே சீன செல்வாக்கில் வந்து விட்ட நிலையில்  திருகோணமலை துறைமுகத்தில் இருந்து  இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் விரிவாக்கம் வியட்னாமிய கடற்கரைகள் வரையில் பரந்து விரிந்ததாக உள்ளது.
Brexit உம் திருமலையும்
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது பிரித்தானியாவில்  ஐரோப்பிய நாடுகளின் கூட்டிலிருந்து  தன்னை விடுவித்து கொள்வதா இல்லையா?  அவ்வாறு விடுவித்து கொள்வதாயின் பாரிய பொருளாதார அரசியல் தாக்கங்களை எவ்வாறு கையாளுவது போன்ற தீர்மானங்கள் நீண்ட இழுபறியில் கிடக்கிறது. ஆனால் வெளியேற்றத்தின் பின் ஆன பிரித்தானிய பாதுகாப்பு மூலோபாய சிந்தனைகள் ஏற்கனவே வெளிவர ஆரம்பித்து விட்டன.
பிரித்தானியா இரண்டாம் உலகப்போர் காலத்தின் பிற்காலப் பகுதியில் தனது சர்வதேச அரங்க செயற்பாடுகளை மிகவும் குறைத்து கொண்ட நிலையை கடைப்பிடித்தது. ஆனால்  ஐரோப்பிய வெளியேற்றத்தின் பின் காலப்பகுதியில் நாட்டின் சர்வதேச செல்வாக்கும்  அங்கீகாரமும் இனி தலை நிமிர்ந்து நிற்கும்.
சர்வதேச அளவிலான பாத்திரங்கள் பலவற்றை வகிப்பதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டதாக இருக்கும். அவற்றில் பாதுகாப்பும் மூலோபாயமும் முக்கிய இடம் வகிக்கும் என்ற பாதுகாப்பு செயலரின் கூற்றும்
தெற்காசிய நாடுகளின் மத்தியிலும் கரீபியன் தீவுகளின் மத்தியிலும் இராணுவ தளங்களை அமைத்து கொள்வதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளது என்ற வெளியுறவு பொது நலவாய செயலரின் கூற்றும்  வெளிவந்திருந்தது.
இந்த கூற்றுகளை மையமாக வைத்து ஏற்கனவே, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்திய உபகண்டத்தையும் வங்க கடற் போர்கள வட்டகையாக இருந்த கிழக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு ஏற்கனவே கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் திருகோணமலையை பிரித்தானியா தனது இராணுவ தளமாக்க முயலும் என்ற வகையிலான செய்திகளை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
திருகோணமலையில் பிரித்தானியா தனது தளத்தை அமைக்கும் திட்டம் கொண்டுள்ளதோ இல்லையோ , திருகோணமலையை சந்தைப்படுத்தும் போக்கை சிறிலங்கா மிக முக்கியமாக கொண்டுள்ளது.
அதேவேளை சர்வதேச மனிதஉரிமை சபையில் தனது நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுத் திருப்பதுவும் இங்கே கவனிக்ககூடியதாகும்
2016ஆம் ஆண்டு பிரித்தானியா அரசால் நியமிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான நிரந்தர வதிவிடம் இல்லாத பாதுகாப்பு ஆலோசகரான ஸ்ருவாட் போர்லன்ட் அவர்கள் திருகோணமலையில் உள்ள பிரித்தானியா படைகளின் போர் சமாதிகளுக்கு வருகை தந்திருந்தார்.
அந்த வருகையின் போது சிறிலங்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளும் பொறுப்புக்கூறலும் மனித உரிமை விவகாரங்களும் மிக நீண்டகால  தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா தனது வரலாற்று ஆதாரங்களை திருகோணமலையில் உறுதிப்படுத்தும் அதேவேளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை நன்கு அறிந்த நிலையை கொண்டிருக்கிறது என்பது மட்டும் உன்மையானதாகும்.
இதனால் பிரித்தானியா புலம்பெயர் தமிழ் தேசிய செயற்பாடாளர்கள் தமது அரசாங்கத்தில் அதிக செல்வாக்கை பெற்றுக் கொள்ள வேண்டிய காலமுமாகும்.

Sunday 10 February 2019

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்?

தீபெத் மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே  அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. அவருடைய முகம் நான் இறக்கும் வரை எனது இதயத்தில் நிலைத்திருக்கும். என்னுடைய அடுத்த பிறப்பிலும் நான் அவரை நினைவு கூர்வேன் 
-வணக்கத்துக்குரிய தலாய் லாமா


கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள்.
ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு அஞ்சலி செலுத்தப்பட்டமை என்பது 2009ற்குப் பின்னரான இந்திய ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அவரவர் அரசியல் சமூக நோக்கு நிலைகளிலிருந்து ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்குள்ள ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் அவரைப் புகழ்ந்து அஞ்சலித்தார்கள். அதே சமயம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சனத்தோடு அணுகும் தரப்புக்களும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸை விமர்சித்தபோதிலும் அவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து அஞ்சலித்திருந்தார்கள்.இதில் குறிப்பாக முகநூற் பரப்பில் காணப்பட்ட அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளின் தொகுப்பு வருமாறு.

புலமையாளரும் சமூக அரசியற் செயற்பாட்டாளருமாகிய பேராசிரியர் ஆ.மார்க்ஸ் பின்வருமாறு கூறியிருக்கிறார்…….“எனக்கு அவருடன் ஒரு அனுபவம் உண்டு. 90களில் நிறப்பிரிகை குழுவினராகிய நாங்கள் பல ஈழ ஆதரவு சிறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து திருச்சியில் ‘புலம் பெயர்ந்த தமிழர் மாநாட்டை’ நடத்தினோம். அதில் பங்கேற்று ஈழத் தமிழ் ஏதிலியர்களுக்கான உரிமைகளை ஆதரித்துப் பேசியவர்களில் கெய்ல் ஓம்வேத், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஆகியோரும் இருந்தனர். எந்த நிதி உதவியும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் நடத்திய அந்தப் பெரிய மாநாட்டிற்கு அவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்து வந்தோம். எல்லோருக்கும் போடப்பட்டிருந்த ஒரு எளிய ஓட்டல் அறையில் தங்க வைத்தோம். அவருக்கு பயணப்படி என ஒரு குறைந்த தொகையை கவரில் போட்டு சற்றுக் கூச்சத்துடன் நீட்டினேன். அப்போது திருச்சியில் இருந்த ராஜன் குறையும் இருந்தார். “ஓ! அதெல்லாம் வேண்டாம். எனக்கு இலவச டிக்கட் வசதியெல்லாம் உண்டு. நீங்கள்தான் தங்கும் வசதியெல்லாம் செய்து தந்துவிட்டீர்கள்ர்களே.. இட்ஸ் ஆல்ரைட்… தாங்க்யூ…” – என அவர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்து கண்களைக் கலங்க வைக்கிறது”

பி.பி.ஸி தமிழோசையில் பணிபுரிந்த ஊடகவியலாளர் எல்.ஆர்.ஜெகதீசன் ஜோர்ஜ் பெர்னான்டசை “வடநாட்டு வை.கோ” என்று அழைக்கிறார். அவருடைய விமர்சனம் கலந்த அஞ்சலிக் குறிப்பின் ஒரு பகுதி வருமாறு………“தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார வலிமையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டையும் அதன் ஏழுகோடி தமிழ்மக்களையும் உண்மையிலேயே மதித்த, உளமாற நேசித்த வட இந்திய அரசியல் ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய மிகச்சிலர் வி பி சிங், பர்னாலா மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அதில் எஞ்சியிருந்த ஒற்றை மனிதரும் இன்று மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்திதான். பெர்ணாண்டஸின் அரசியலும் நம்மூர் வைகோ அரசியலைப்போன்றது. 
உணர்ச்சிக்கொந்தளிப்பால் உருவாகி பின்னர் திசைமாறி எங்கோ போய் எதிலோ முடிந்த அரசியல் பயணம். தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வடஇந்திய ஆளுமையும் மறைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை வட இந்திய ஆளுமைகளில் அப்படியானவர்கள் யார் என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்”

ஏறக்குறைய ஜெகதீசனைப் போலவே மற்றொரு சமூகச் செயற்பாட்டாளாராகிய கறுப்பு நீலகண்டனும் ஃபெர்னாண்டசை விமர்சனத்தோடு பின்வருமாறு அஞ்சலித்திருந்தார்……“ஒரு சோனியா காந்தி விதவையானதற்காக லட்சக்கணக்கனக்கானோர் இலங்கையில் விதவையாக வேண்டுமா?” என சென்னை கடற்கரையில் நடைபெற்ற மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் அவர் கேட்ட தார்மீகமான மனிதார்த்தமான கேள்வி குஜராத் படுகொலை செய்த, முஸ்லீம்களை கேட்பாரின்றி கொலை செய்த இந்து பயங்கரவாதிகளை ஆதரித்தபோதே செத்துப்போனது…”   

மற்றொரு அரசியற் செயற்பாட்டாளராகிய ஆழி  செந்தில்நாதன்…….“ ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர். சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த இராமேஸ்வரம் கோதண்டராம கோவில் அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர்.” என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புக்களில் ஃபெர்னான்டஸை விமர்சிப்பவர்கள் கூட அவரை மதித்து அஞ்சலி செலுத்துமளவிற்கு அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது என்பதே இங்கு முக்கியமானது. அவருக்கு அஞ்சலி செலுத்திய வை.கோவும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள். அவருடைய வீடு எப்பொழுதும் அகதிகளுக்காகத் திறக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பர்மிய தீபெத்திய அகதிகள் அவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் அவருடைய வீட்டில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். தமிழகம் ஈழம் உள்ளடங்கலான பெருந்தமிழ்ப் பரப்பில் மதிப்போடு அஞ்சலிக்கப்படும் அளவிற்கு ஃபெர்னாண்டசின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
இதில் குறிப்பாக தமிழக மற்றும் ஈழச்செயற்பாட்டாளர்கள் ஃபெர்னான்டசுக்கு செலுத்திய அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றில் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் காணப்பட்டதற்காகப் போற்றப்படுவதைக் காணலாம். 1998ல் பெர்னாண்டஸ் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இடைமறிக்க வேண்டாம் என்று இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டதாகவும் இதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்று ஆயுதக்கப்பல்கள் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும்  rediff.com                  (https://www.rediff.com/news/2000/dec/07spec.htm)  இணையத்தளம் எழுதியுள்ளது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால்  ஒரு பாதுகாப்பு அமைச்சராக அவர் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு வெளியே வந்து ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்? அல்லது எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்க முடியும்? என்பதுதான்.

அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்னி மைய எழுச்சிக் காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை. வன்னியை மையமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படத் தொடங்கிய பின் அது யுத்தகளத்தில் பெரு வெற்றிகளைப் பெற்ற ஒரு காலகட்டம் இதுவாகும். இக்காலகட்டத்திலேயே அந்த இயக்கத்தின் மரபு ரீதியிலான படையணிகள் உலகத்தின் படைத்துறை வல்லுனர்களின் கவனிப்பைப் பெற்றன. அப்படையணிகளின் யுத்தகள சாதனைகள் வன்னியை ஓர் அதிகார மையமாக கட்டியெழுப்பின. அதன் விளைவே இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.

எனவே புலிகள் இயக்கத்தின் வன்னி மையக் காலகட்டத்தின் பேரெழுச்சிக் காலம் என்றழைக்கப்படும் காலமும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை என்பதனால் விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்ற வெற்றிகளோடு ஜோர்ஜ் ஃபெர்னான்டசைத் தொடர்புபடுத்தி சிலர் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக்கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் ஒரு தனி மனிதனின் நல்லிதயம் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்? ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ஃபெர்னான்டஸ் வழங்கிய ஆதரவு ஒரு தார்மீக ஆதரவா? அல்லது இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார் கொள்கைகளில் நெகிழ்வை ஏற்படுத்திய ஓர் ஆதரவா?
இக்கேள்விகளுக்கு  விடை கூறவல்ல மிகச்சிலரே இப்பொழுது இப்பூமியில் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக வழங்கற் செயற்பாட்டிற்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனைப் போன்றவர்கள் வாயைத் திறக்கும் பொழுதே இது தொடர்பான உண்மைகள் வெளிவரும். அதுவரை ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் ஈழத்தமிழர்களுக்கு என்றென்றும் தமது தார்மீக ஆதரவை வழங்கினார் என்பதே இப்போதைக்கு உண்மையானதாகும். 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி ரெட்டிவ் இணையத்தளம் இதுதொடர்பாக எழுதியுள்ளது.
1997ஆம் ஆண்டு பெர்னாண்டஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டில்லியில் ஒரு மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அதற்கு உட்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்தபடியால் பெர்னாண்டஸ் அந்த மாநாட்டை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தினார. அம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் “தமிழீழம் தொடர்பாக இந்தியப் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதும்; அப்போராட்டத்தில் அவர்களைப் பங்காளிகள் ஆக்குவதும்தான. ஏனெனில் அந்தப் போராட்டம் நீதியானது” என்று பெர்னாண்டஸ் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் ஒன்று முன்னாள் ஸ்றீலங்க ராஜதந்திரி ஆகிய கல்யானந்த கொடகேயை மேற்கோள்காட்டி இருந்தது. “ எல் .ரி.ரி.க்கும் ஃபெர்னாண்டஸிற்கும் இடையிலான சரசம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலானது” என்று கொடகே தெரிவித்திருந்தார். பாதுகாப்பு அமைச்சர் ஃபெர்னாண்டஸ் தமிழ் மக்களுக்கு கதாநாயகனாக இருக்கலாம் ஆனால் கொழும்பிற்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அவர் ஒரு வில்லனாகவே இருக்கிறார் என்று ஸ்றீலங்கா அரசாங்கம் கூறியதாகத் தோன்றுகிறது” என்று rediff இணையத்தளம் எழுதியுள்ளது.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் ஒரு தனி மனிதனாக அதுவும் வட இந்தியத் தலைவராக அவர் வழங்கிய ஆதரவை ஈழத்தமிழர்கள் எந்தளவிற்கு ஒரு கட்டமைப்பு சார் ஆதரவுத் தளமாக கட்டியெழுப்பினார்கள்?  என்பதுதான். இக்கேள்வி எம்.ஜி.ஆரின் விடயத்திலும் பொருந்தும். தனிப்பட்ட நட்பும் நேசமும் புரிந்துணர்வும் தார்மீக ஆதரவும் வேறு. அதை நிறுவனமயப்படுத்தி ஒரு கட்டமைப்பு சார் செயற்பாடாக மாற்றுவது வேறு. இந்தியாவில் ஈழத்தமிழ் லொபி எனப்படுவது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? அதில் பெற்ற அடைவுகள் எவை? விட்ட பிழைகள் எவை? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.

தமிழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்திய மாநிலத் தலைநகரங்களிலும் தமிழ் லொபி எவ்வாறு செயற்பட்டது? அது நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாடாக இருந்ததா? அல்லது பெருமளவிற்கு தனிநபர்களில் தங்கியிருந்ததா? 2009ற்கு முன் அது எப்படிச் செயற்பட்டது? 2009ற்குப் பின்னிருந்து அது எப்படிச் செயற்பட்டு வருகின்றது? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமிழகத்திற்கு வெளியே எத்தனை இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன? தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுமுள்ள எத்தனை மனித உரிமை அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு வெளியே சிவில் சமூகங்கள் செயற்பாட்டு இயக்கங்கள் என்று கருதத்தக்க அமைப்புக்கள் எத்தனை அதை ஓர் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன?

ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் மகத்தானது. அது ஓர் அரசியல் தீர்மானம். அதற்குமப்பால் அது தமிழகத்தில் ஒரு பொதுசன அபிப்பிராயமாக திரட்டப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு வெளியே ஏனைய மாநிலங்களில் அது ஒரு பொதுசன அபிப்பிராயமாக அல்லது சிவில் சமூகங்களின் அபிப்பிராயமாக அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைச் செயற்பாட்டாளரின் அபிப்பிராயமாக திரட்சியுற்றுள்ளதா? ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ், எம்.ஜி.ஆர், நெடுமாறன், வை.கோ, தொல் திருமாவளவன், சீமான் போன்ற நட்பு சக்திகளை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஏன் ஒரு கட்டமைப்பாக நிறுவனமயப்படுத்த முடியவில்லை?

இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணவல்ல தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வுப் பார்வை தேவை. ஈழ-தமிழக உறவெனப்படுவது அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. ஆனால் அது எவ்வளவிற்கு எவ்வளவு அறிவுபூர்வமானதாக மாற்றப்படுகிறதோ அவ்வளவிற்கவ்வளவு பிராந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் வெற்றிகரமாகச் சுழியோட முடியும். அதைப் போலவே புதுடில்லியும் உட்பட ஏனைய மாநிலங்களை எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பில் ஈழத் தமிழர்களிடம் ஒரு கட்டமைப்பு சார் அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம். கற்பனைகளோடும் முற்கற்பிதங்களோடும் முடிந்த முடிபுகளோடும் பிராந்திய உறவுகளை மட்டுமல்ல அனைத்துலக உறவுகளையும் அணுக முடியாது. எனவே இதுவிடயத்தில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற பொருத்தமான ஆய்வொழுக்கங்களைக் கொண்ட சிந்தனைக் குழாம்களை ஈழத்தமிழர்கள் முதலில் உருவாக்க வேண்டும். 
அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் அரசுடைய தரப்புக்களோடும், சிவில் அமைப்புக்களோடும் உலகளாவிய நிறுவனங்களோடும் இடையூடாடுவதற்குரிய பொருத்தமான சமயோசிதமான தீர்க்கதரிசனமிக்க ஒரு பொறிமுறையைக் கண்டுபிடிக்காதவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு வெளியே சிந்திப்பது என்பது முழுக்க முழுக்கக் கற்பனையே.

Saturday 2 February 2019

ஈழத்து இளம் விஞ்ஞானியின் அசரவைக்கும் கண்டுபிடிப்புக்கள் சர்வதேச கண்காட்சியில்!

தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார்.



இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச் சேர்ந்தவராவார்.

வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்று கண்டுபிடிப்புக்கள் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்ப கண்காட்சிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளன. இது இவரது இரண்டாவது பயணமாகும். கடந்த வருடமும் இவர் தாய்லாந்து சென்று பதக்கம் வென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை இரண்டாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பாங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்வர்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்பபீடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயின்று வரும் சோமசுந்தரம் வினோஜ்குமார் சென்ற வருடம் விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழினுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடாத்திய தேசியமட்ட புத்தாக்கப் போட்டியில் ஏழு தேசிய பதக்கங்களை இவர் பெற்றிருந்தார்.

அதில் வாகனங்களின் சக்கரங்கள் காற்றுப் போனதும் தற்காலிகமாக வாகனத்தை செலுத்துவதற்கான ‘TWO WHEELS HELPER ‘ எனும் கண்டுபிடிப்பும், கட்டட நிர்மான வேலைகளில் கம்பிகளை இலகுவாகவும் விரைவாகவும் இணைக்கும் WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்பும் மற்றும் பாதணிகளில் தூசுபடியாத குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட SHOES HELPER கண்டுபிடிப்பும், தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தையும் ஒவ்வொன்றும் தலா ஒரு இலட்சம் வீதம் பணப்பரிசையும் பெற்ற இம் மூன்று கண்டுபிடிப்புக்களும் நாளை இரண்டாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச அறிவியல் புலமை , கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்ப கண்காட்சிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

இவரின் TWO WHEELS HELPER எனும் கண்டுபிடிப்பு LK/P/ 19336 இலக்கத்தின் கீழும், WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்பு LK/P/20295 இலக்கத்தின் கீழும், SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்பு LK/P/20297 இலக்கத்தின் கீழும் ஆக்கவுரிமைக் காப்பீட்டுப் பத்திரத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இவருடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் மொகமட் காசிம் மொகமட் அனீஸ் என்பவரின் ‘Mechanical Tyre Helper’ எனும் கண்டுபிடிப்பும், ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புத்திக பிரசன்ன டீ சில்வா என்பவரின் Note Review App எனும் கண்டுபிடிப்பும், ருகுனு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெத் டர்சுன் சந்தமல் என்பவரின் Safety, Easy and Advanced Handle System for Two and Three Wheels எனும் கண்டுபிடிப்பும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலவசமாக தயார் செய்துள்ளது. அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரும் தாய்லாந்தின் தேசிய கண்டுபிடிப்பாளர் தினக் கொண்டாட்டங்களிகளிலும் பங்குபற்றவுள்ளமை விசேட அம்சமாகும்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் ஸ்ரீகோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் இதுவரை செய்துள்ள 86 கண்டுபிடிப்புக்களுக்கு 38 தேசிய விருதுகளையும் மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடமும், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி செல்லும் நான்கு இளம் கண்டுபிடிப்பாளர்களும் சர்வதேசவிருதுகளையும் வெற்றி பெறுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வரலாற்றைச் சிதைத்துள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும், The Morning Star நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை விட இரண்டு மடங்கு கோப்புகளை, அழித்திருப்பதாக, தகவல் சுதந்திர கோரிக்கை மூலம், The Morning Star கண்டறிந்துள்ளது.
தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக எப்படி போரிடுவது என்று சிறிலங்கா உளவுப் பிரிவு மற்றும் கொமாண்டோக்களுக்கு, பிரித்தானியாவின் MI5 மற்றும், SAS பிரிவினர் ஆலோசனை வழங்கியது தொடர்பாக, 1970களின் பிற்பகுதியில் இருந்து, பேணப்பட்டு வந்த, 195 கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாக, கடந்த ஆண்டு, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் கூறியிருந்தது.
இந்தநிலையில், The Star தற்போது வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 1980களின் தொடக்கத்தில் இருந்து, பேணப்பட்டு வந்த, மேலும் 177 கோப்புகளை இராஜதந்திரிகள் அழித்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், அழிக்கப்பட்ட மொத்த கோப்புகளின் எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது.
அழிக்கப்பட்ட கோப்புகளின் பெயர்கள் மாத்திரமே தப்பியுள்ளன. அவற்றில் பல, ஆயுத விற்பனையுடன் தொடர்புடையவையாகும்.
இதனைக் கண்டித்துள்ள, ஆயுத விற்பனைக்கு எதிராக பரப்புரை அமைப்பு சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான கோப்புகளை அழிப்பதற்கு வெளிவிவகாரப் பணியகம் அனுமதிக்க முடியாது என்று, கூறியுள்ளது.
“சிறிலங்காவில் நடந்த மோதல், பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் பிரித்தானியாவின் பங்கு, அரசாங்கத்திற்கு சங்கடமாக இருக்கலாம், ஆனால் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றால் அது முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.” என்று ஆயுத விற்பனைக்கு எதிராக பரப்புரை அமைப்பின் பேச்சாளர் அன்ட்ரூ சிமித், தெரிவித்துள்ளார்.
1980களில் சிறிலங்காவின் வலதுசாரி அதிபருக்கு பிரித்தானியா ஆயுதங்களைக் கொடுத்ததுடன், உயர்மட்டத்துக்கு ஆலோசனைகளையும் வழங்கியது.
1984இல், சிறிலங்கா படையினர் தமிழ்ப் பொதுமக்களைப் படுகொலை செய்த சில வாரங்களுக்குப் பின்னர், அந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல பெல்பாஸ்டுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதையும், The Star வெளிப்படுத்தியுள்ளது.
இதன்போது, ஜெனரல் ஆட்டிக்கல, றோயல் உல்ஸ்டர் கொன்ஸ்டபுலறி எனப்படும் வட அயர்லாந்தின் காவல்துறை தலைவருடன் உணவருந்தியதுடன், கிளர்ச்சி முறியடிப்பு உத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
“வட அயர்லாந்தின் இராணுவப் பிரச்சினை தொடர்பான சிறிலங்காவின் ஆர்வம்” என்ற தலைப்பிடப்பட்ட கோப்பு, வெளிவிவகாரப் பணியகத்தினால் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த இரகசிய உறவு தொடர்பான முழு விபரங்களும் தெரியவராது.
வரலாற்று ஆவணங்களை அனைத்து அரசு துறைகளும் பாதுகாக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஆவணக் காப்பகத்தில் பொதுமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால் இந்தக் கோப்புகள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, வெளிவிவகாரப் பணியகம் அவற்றை அழித்திருக்கிறது.
கென்யாவில் காலனித்துவத்துக்கு எதிரான Mau Mau செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவினால் துன்புறுத்தப்பட்டமை தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டமைக்காக வரலாற்றாசிரியர்களிடம் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் மன்னிப்புக் கோரிய சில வாரங்களுக்குப் பின்னர், 2014இல் சிறிலங்கா தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டதாக The Morning Star கண்டறிந்துள்ளது.
1980களின் நடுப்பகுதிக்குப் பின்னரான சிறிலங்கா தொடர்பான 40 க்கும் மேற்பட்ட கோப்புகளை அழிக்க இரகசிய திட்டங்களை இப்போது இராஜதந்திரிகள் தயாரித்துள்ளனர் என்பதை, எம்மால் வெளிப்படுத்த முடியும்.
இந்த கோப்புகள் அரசியல் புகலிட விண்ணப்பங்கள், சிறிலங்கா படையினருக்கு பிரித்தானியாவில் அளிக்கப்பட்ட பயிற்சிகள், மற்றும் ஒன்பது பகுதிகளை உள்ளடக்கிய ஆயுத விற்பனைகள் தொடர்பான விபரங்களைக் கொண்டவையாகும்.
கென்ற் பல்கலைக்கழகத்தின் சிறிலங்கா தொடர்பான நிபுணரான கலாநிதி Rachel Seoighe எஞ்சியுள்ள கோப்புகளை அரசாங்கத்திடம் இருந்து மீட்க முயற்சித்து வருகிறார்.
ஆரம்பத்தில் நினைத்ததை விட மிகப்பெரிய அளவில் கோப்புகளை அழித்தல் நடக்கிறது. அவர்கள் வரலாற்றை சிதைக்கிறார்கள் என்று கலாநிதி Rachel Seoighe எச்சரித்துள்ளார்.
எஞ்சியுள்ள கோப்புகளை வெளிப்படுத்துமாறு, தாம் விடுத்த தகவல் சுதந்திரக் கோரிக்கைகளை இராஜதந்திரிகள் நிராகரித்துள்ளனர் என்றும், இதனால் தகவல் ஆணைய கண்காணிப்பு அமைப்பிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“போரில் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பாக, குறிப்பாக சிறிலங்கா படைகளுக்கு ஆயுதமளித்தல் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது குறித்து இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதனால்தான் அந்தக் காலத்திலிருந்த கோப்புகளை அழிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. கோப்புகளை அழிப்பதற்கு அவசரப்படுவது சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது ”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆவணங்களை அழிப்பதன் மூலம் வரலாற்றை திருத்தி எழுத நாம் அனுமதிக்க முடியாது என்றும், கலாநிதி Rachel Seoighe கூறினார்.

பாரிய தவறு செய்து விட்டார் சம்பந்தன்! – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு.

நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மூலோபாயக் கற்கைகள் நிலையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்து விட்டதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தியாவுடனான அணுகுமுறையிலும் கூட சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தவறிவிட்டது. இந்த விடயத்தில் உங்கள் அவதானிப்புகள் என்ன? என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர்,“இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார். இந்தியாவிடமிருந்து அவர் தன்னை தூர விலத்தி வைத்திருந்தார். அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக உள்ளது என சர்வதேச சமூகத்திற்கு சம்பந்தன் உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கு போதிய தீர்வை அரசாங்கம் வழங்குமென அவர் நினைத்திருந்தார்.
இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியதுடன், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கான அதன் பொறுப்பு தொடர்பான, இந்தியாவின் சாத்வீக எதிர்ப்புத் தன்மை தொடர்பான இடைவெளியையும் அகலிக்கச் செய்தது. இது ஒரு மாபெரும் தவறாகும். தாங்கள் ஆளுமையுடையவர்களோ அல்லது ஆட்களோ அல்ல என்பதையும் எமது மக்களின் பிரதிநிதிகளே என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களின் அந்தஸ்து மற்றும் கடப்பாடுகளை புரிந்து கொள்ளாதவிடத்து அவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று குறிப்பிடுவது அவசியம்.அத்துடன், மத்தியில் அண்மையில் அரசியல் ரீதியாக எழுந்திருந்த தனித்துவமான சந்தர்ப்பம் ஒன்றையும் தமிழர்கள் சார்பாக செயற்படுத்துவதற்கு அவர்கள் தவறிவிட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.