Wednesday 20 February 2019

தெற்காசியாவின் நட்சத்திரம்

இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக  உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா  முதன்மை இடம் வகிக்கிறது.

கொந்தளிப்பு மிகுந்த  அரசியல் அலைகளை சிறிய இந்து சமுத்திர தீவான  இலங்கையிலும்  அண்மைக் காலமாக தொடர்ச்சியாக தோற்றுவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடதக்கதாகும்.
பலம் வாய்ந்த நாடுகள், இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிலங்கா போன்ற  சிறிய நாடுகள் மீது வரலாற்று தொடர்பு உரிமை கோரல்கள், தமது போட்டி  வல்லரசுகளின் நகர்வுகள் ஆகியவற்றை  காரணமாக கொண்டு  நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் நிலை எடுக்க தலைப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கொந்தளிப்பு அலைகளுக்கு மத்தியில்  உறுதியான  சமூக பொருளாதார அரசியல் விடுதலை முன்னேற்றங்களை  தேடுவதில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ் சமுதாயம் மிக கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது.

இந்த தீவிற்குள் சிறிலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பு கொள்கை திட்டமிடல்கள், முன் முயற்சிகள் உட்பட பிராந்திய அரசுகளின் மூலோபாய தேவைகள், சர்வதேசத்தின் வர்த்தக,  இராணுவ தேவைகள் ஆகிய மூன்று முக்கிய சாவால்களில்  மத்தியில் தமிழ் தேசம் சிக்குண்டு கிடக்கிறது.
தமிழ் தேசியம் தெற்காசியாவின் ஒரு முக்கியமான, பிராதானமான அலகாக இருக்கின்ற போதிலும் பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் மீதான நோக்கு அதிகமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்படாது  இருப்பதால் சர்வதேச அரசுகளின் பலம் தமிழ் தேசியத்தை ஒரு தரப்பாக பார்க்கும் தன்மை இல்லாத நிலை காணப்படுகிறது.
கடல் சார் வர்த்தக இராணுவ  நகர்வுகளை தன்னகத்தே கொண்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்  துறைமுகங்கள் முக்கிய கவனத்திற்கு வந்திருக்கின்றன.
குறிப்பாக இலங்கைத்தீவின் கொழும்பு அம்பாந்தோட்டை, திருகோணமலை துறைமுகங்கள் பொருளாதார இராணுவ பலம் பொண்ட நாடுகள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.
அம்பாந்தோட்டையும் கொழும்பும் ஏற்கனவே சீன வல்லரசின் நெருங்கிய கையாளுகைக்குள் உட்பட்டு விட்ட நிலையில் மீதமாக இருக்கும் திருகோணமலை மீதான பார்வை இன்று பல்வேறு வல்லரசு தரப்புகள் மத்தியிலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த பிராந்திய நிலை  மற்றும் சர்வதேச அரசியல் நிலையை ஆகியவற்றை மையமாக வைத்து இங்கே ஆய்வு செய்யப்படுகிறது.
பிராந்திய முக்கியத்துவம்

இந்து சமுத்திரப் பிராந்தியம் இலங்கையின் மேலே இந்தியாவையும் பாகிஸ்தான், ஈரான் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், யேமன், சோமாலியா, கென்யா , தன்சானியா,  மொசாம்பிக் , தென்ஆபிரிக்கா என ஒருபகுதியிலும் மறுபகுதியில் பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்புர் இந்தோனேசியா , அவுஸ்ரேலியா ஆகியவற்றுடன் நடுவே மாலைதீவு மொறீசியஸ், சிசெல்ஸ் என மேலும் பல சிறு தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த பிராந்தியத்தின் இன்றைய முக்கியத்துவத்தை கொண்டு நோக்குவதானால், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தால் இந்த நாடுகளில் அதிகரித்த  முதலீட்டாளர்கள் சிறு உற்பத்திகளையும் பல்தேசிய கம்பனிகள் தமது சேவைசார் தொலத் தொடர்பு நிறுவனங்களையும் தமது வியாபார தேவைகளுக்கு ஏற்ற வகையில்  செயற்படுத்தி வருகின்றனர்.
உலகின் எண்பது சதவீது எரிபொருள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாகவே பயணிக்கின்றது. இதனால் கிழக்கு  மேற்கு வல்வரசு நாடுகள் அதிகம் நாட்டம் கொண்ட பிரதேசமாக உள்ளது.
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக உள்ளதால் அதன் மேலாண்மை கொள்ள துடிக்கும்  இதர வல்லரசுகளின் தலையீடுகள் காரணமாக சிறிய நாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தப் பிராந்தியத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க விரும்பும் இந்தியா, தனது தனித்துவமான அதிக்கத்தை  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக“ கூடிய எந்த வல்வரசையும் இப்பிராந்தியத்தில் உள்ள  சிறிய நாடுகளுடன்  தொடர்பு  வைத்திருப்பதை  தனது பிராந்திய வட்டகையின் சவாலாக கருதுகிறது.
தற்போது சீன வளர்ச்சியின் காரணமாக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து இநதியா தனது பிராந்தியத்தில் செயலாற்றுகிறது.  இருந்த போதிலும் இந்திய வளர்ச்சிப் போக்கை  அடுத்த இருபது வருடங்களுக்கு பின்பு கணிப்பீடு செய்துள்ள பல்வேறு தரவுகளின் அடிப்படையில், சர்வதேச அரங்கில் அரசியல் பொருளாதார விதியை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு பொறுப்பில் இந்தியா நகர்ச்சி பெறும் பொழுது, தற்போது நேச அணியில் உள்ள நாடுகள் யாவும் ஒரே பார்வையை கொண்டிருக்கும் என்பது எதிர்பார்க்க முடியாதது ஆகும் .
அந்த காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் போட்டி நாடாக மாறும் தன்மையை எதிர்பார்க்கலாம் என்பது இந்த தகவல்களின் முடிவில் கண்ட  எடுகோள்களாகும்.
சுதந்திரமான கடற்போக்கவரத்து என்பதை சாக்காக வைத்து  இந்திய பாதுகாப்பு வட்டகைக்குள் அமைவை பெற்றிருக்கக் கூடிய சிறிய தீவுகள் வேறு பிராந்திய வல்லரசுகளுடன் குறிப்பாக சீனாவுடன் வியாபார அரச கட்டுமான அபிவிருத்தி ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இந்தியா இந்த ஒப்பந்தங்கள் குறித்து தலையீடுகள் செய்யுமாயின்  தம்மை இந்தியா எளியாரை கொடுமை செய்யும் பாணியில் வெளியுறவு கொள்கை வகுத்துள்ளதாக குற்றம் சுமத்தும்  மனோநிலையை கொண்டுள்ளன.
இருந்த போதிலும்  சிறிய நாடுகளும் தமது நியாயத்தை பேணும் வகையில் தாம்  பொருளாதார முயற்சிகள் ஆரம்பிக்கும் போது முதல் தெரிவை  இந்தியாவிடம் சமர்ப்பிக்கின்ற போதிலும் இந்தியாவின் அயல் நாடுகளின் மீதான பொருளாதார முதலீட்டு நாட்டம்  குறைவாக இருப்பதால் தான், சீனாவிடம் செல்வதாக சிறிய நாடுகள் காரணம் சொல்வது அவற்றின் பொதுவான அயலுறவுக் கொள்கையாக உள்ளது.
இதற்கு நல்ல உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமான திட்டம் ஆரம்பித்த போது இந்திய மத்திய அரசிடமே முதலில் எடுத்து சென்றதாக சிறிலங்கா அரசியல்வாதிகளும் மாலைதீவில் விமான நிலையத்துக்கும் பிரதான நகருக்கும் இடையிலான பாலம்  அமைக்கும் போது சீன நிறுவனங்களை நாடுவதற்கு  முன்பு இந்திய மத்திய அரசிடமே சென்றதாக மாலைதீவும் கூறி வருவது குறிப்பிட தக்கதாகும்.
இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு  சீனா, சிறிய தீவுகளிற்கு பொருளாதார உதவிகள் செய்வதில்  அதிக ஆர்வம் காட்டுவதுவும், திருப்பி அடைக்க முடியாத அதிக பெறுமதி மிக்க பொருளாதார கட்டமைப்பு போக்குவரத்து சக்திவள திட்டங்களை நோக்கிய முதலீடுகளில் இறங்குவதும், இதன் மூலம்  கடன் பொறிக்குள்  இந்த சிறிய நாடுகளை வீழ்த்துவதுவும்  கடன் பொறி இராஜதந்திரம் என மேலை நாடுகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வகையிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தி கொண்டது என்பதுவும் அறிந்ததே.
கொழும்பு அரசியல் தலைவர்களின் பார்வையில் சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றம் சீன முதலீடுகள் சார்ந்ததாகவே இருக்கிறது. இதன் பொருட்டு இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பற்பாதை பேணப்பட வேண்டும் என்ற விவாதத்தை முன்நிறுத்தி, சீன கடன் பளுவை ஈடு செய்தல் என்ற போர்வையில்  சீனாவிடம் அம்பாந்தோட்டை துறை முகத்தை அடுத்த 70வருடங்களுக்க ஒப்பந்த அடிப்படையில்  குத்தகைக்கு கொடுத்து விட்டது.
பிராந்தியத்தில் இலங்கை

சிறிலங்கா அரசியல்வாதிகளின் வாக்குறுதி இராஜதந்திரம்  இந்து சமுத்திர பிராந்திய அரசியலிலும் இதுவரையில் வெற்றி தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் இந்தியா நோக்கிய பார்வையில்  சிறிலங்காவின் கடற்பிராந்தியத்தின் எந்தப் பகுதியும் இந்திய பாதுகாப்புக்கு எதிரானதாக இருக்காது என்று வாக்குறுதி அளித்த அதே வேளை ,  அம்பாந்தோட்டையை எழுபது வருட குத்தகைக்கு கொடுத்த சிறிலங்கா அரசு கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடல் நோக்கி மண் இட்டு நிரப்பப்பட்டு  துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தில் 60 தொடக்கம் எழுபது சத வீத சீன துறைமுக அபிவிருத்தி நிறுவனத்தினால் கையாளப்படும் என்பது சிறிலங்கா பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் ஹனோய் நகரில் இடம் பெற்ற இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் தெரிவித்த செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் வல்வரசுகள் பலவும் காட்டும்  ஆர்வத்தை சிறிலங்கா வியாபார பாணியில் கையாள முனைகிறது.  2008 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை சுமார் 28 நாடுகளில் இருந்து 450 கடற்கலன்கள் சிறிலங்காவிற்கு வந்து சென்றுள்ளன. அதிலும் 2017 ஆம் ஆண்டு மட்டும் வாரத்திற்கு ஒரு யுத்தகப்பல் வந்து சென்றதான பதிவுகள் உள்ளன.
வல்லரசுகளின் நகர்வுகளில்  சிறிலங்கா மீது  பொருளாதார அபிவிருத்தி நோக்கத்தை நோக்கியதான பார்வையை விட கேந்திர முக்கியத்துவம் கொண்ட  இராணுவ மயமாக்கும் பார்வையையே அதிகம் கொண்டுள்ளன .
2009 ஆம் ஆண்டிருந்து சிறிலங்காவில் எந்தவித இராணுவ தாக்கதல்களும் இடம் பெறாத போதிலும் சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்தல், தேசிய நலன் என பல்வேறு விடயங்களை காரணமாக கொண்டு போர்க்கப்பல்களையும்,  விமானங்களையம் பல நாடுகள் அன்பளிப்பாக கொடுத்துள்ளன அல்லது விற்பனை செய்துள்ளன
இந்த இராணுவ உதவிகள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிறிலங்கா அரசின் இராணுவ கடற்படை விமானப்படைகளை வலுப்படுத்துவதில் வல்வரசுகள் பெரும் ஆர்வம் கொடுப்பதை காண கூடியதாக உள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் நடுப்பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதியிலிருந்து 39 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலுடன் சிறிலங்காஇராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு நல்ல உண்மையான நண்பனாக கடந்த தசாப்தங்களில் இணைந்திருந்த நன்றிக்காக  ஜூலைஇறுதியில் சீன தூதரக அதிகாரியும்   இராணுவ கேணலுமான சூ ஜியாங்வெய் அவர்கள் சிறிலங்கா கடற்படைக்கு 054ஏ ரக போர்க்கப்பல் ஒன்றை வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து அந்த படகை இயக்குவதற்கும் அதிலிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்று கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கடந்த வருட நடுப்பகுதியில் இந்தியாவும் சிறிலங்கா இராணுவத்தை நவீனமயப்படுத்தவதற்கு உதவ இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட்டிருந்தார். பிரித்தானியாவும் கூட இராணுவ  உதவிகள் வழங்கி இருந்தது.
இந்த வகையில் சிறிலங்காவை இராணுவ ரீதியான கட்டமைப்பு களை வளப்படுத்தவதில் காட்டும் நேரடி ஊக்கம் பொருளாதார முதலீடுகளில் அதிகம் பொருட்படுத்தாத நிலைஉள்ளது.
மேலும் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் இலங்கையின் தென்பகுதியில்  ஒட்டு மொத்த சமுதாயமும் ஏதோ ஒரு வகையில்  இராணுவத்துடன் தொடர்புடையனவாக உள்ளன.  யுத்த வெற்றிகளின் கொண்டாட்டங்கள் இராணுவத்தில் இருந்த இளைஞர்களை வீரர்களாக ஆக்கி உள்ளது, இதனால் இராணுவம் தனித்துவமான செல்வாக்கை பெற்றிருக்கிறது.
இராணுவ செல்வாக்கை கொண்டிருக்கம் சமூக கட்டமைப்பும் பௌத்த சிங்கள தேசியவாத சித்தாந்தத்தின் பின்புலத்துடன் சிறிலங்கா புதிய தொரு தோற்றம் பெற்றுவருவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த வகையில் சிறிலங்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு தேசமாக பரிணமித்து வரும் அதேவேளை சிறிலங்கா ஒரு வல்வரசுகளின் அரசியல் களமாகவும் விரைவில் தமது இராணுவ நகர்வுகளை  செய்யக் கூடிய ஒரு களமாகவும் ஆகிவருகிறதோ என்ற எண்ணப்பாடு உள்ளது.
இதற்குரிய வசதிகளை சிறிலங்காவில் உள்ள துறைமுகங்கள் கொண்டுள்ளன. முக்கியமாக திருகோணமலை இதில் அடுத்த கட்ட நகர்வை சிந்திக்க உள்ள துறைமுகமாக ஆய்வாளர்கள் கருத்து கொண்டுள்ளனர்.

இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். 
இயற்கையாகவே துறைமுகத்திற்கு ஏற்ற கடற் புவியியல் அமைப்பை கொண்டுள்ள இந்த துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே அமைந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் சுற்றாடல் ஆளுமைக்குள்  நிலை பெற்றுள்ளது.
திருகோணமலையின் முக்கியத்துவம்
இந்து சமுத்திரத்தின்  கிழக்கு கடற்பரப்பின் முழுப்பகுதியிலும் உள்ள கேந்திர மூலோபாயத்தை கொண்ட  அனைத்து துறைமுகங்களையும் பார்க்க கடற்கலன்களை மிகவும் இலகுவாக நகர்த்க் கூடிய  உட்கட்மைப்பை கொண்ட துறைமுகமாக இது திகழ்கிறது
இதனால் Fleet என்று கூறக்கூடிய ஒரு கடற்படை  முழுமையாக தரித்து நின்று, கொந்தளிப்பு மிக்க பருவகாற்று காலங்களில் அமைதியாக செயலாற்றுவதற்குரிய தள  வசதிகளை கொடுக்கவல்லது.
இங்கே ஒரு கடற்படை என்பது இராணுவ பேச்சுகளில்  குறைந்தது மூன்று கடற்படை கப்பல்களும் ஆகக்கூடியது நூறு வரையிலுமாகும்.
கடற்படை என்பது யுத்தக் கப்பற்பிரிவுகளில்  வழித்துணைக் கப்பல்கள்,   போர்ப்படகுகளின் கூட்டுகள் , நாசகாரிகள், விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள்,  பயணிகள் கப்பல்கள் என பல்வேறு ரகங்களும் அடங்கும்
இவை அனைத்தையும் நிர்வகிக்கத்தக்க வகையில் இவற்றிற்குப் பின்புல உதவிக்காக வழங்கல் கப்பல்கள்,  இழுவை கப்பல்கள், பழுதடைந்த அல்லது விபத்துக்குள்ளான கப்பல்களை மீள்திருத்தம் செய்யக் கூடிய வசதிகளை கொண்ட கப்பல்கள் ஆகியவற்றுடன் நீரிலிருந்து கப்பல்களை தரைக்கு ஏற்றும் வசதி வகைகள் ஆகிய அனைத்தையும் பரிபாலிப்பதே ஒரு கடற்படை என பார்க்கப்படுகிறது
இதனால் யுத்தகப்பல்கள் வெடிபெருட்கள், உணவுக்கள், எரிபொருள், உதிரிப்பாகங்கள் ஆகியன இல்லாது நீண்ட காலம் செயலாற்ற முடியாது இத்தகைய அனைத்து வசதிகளையும் கொள்ளடக்க கூடிய திறன் திருகோணமலை துறை முகத்தில் உள்ளது என்பது இங்கே முக்கியமானதாகும்.
ஒக்ரோபர் மாதத்திலிருந்து மார்ச்மாதம் வரையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பருவப்பெயர்ச்சி காற்று காரணமாக கடற்தள நிலை கொந்தளிப்பு கொண்டதாகும்.  இந்த தளம்பல் நிலையின் தாக்கத்திற்கு உள்ளாகாத வகையில் இந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள  திருகோணமலையில்  நிலையாக நின்று செயலாற்ற கூடிய  வசதி உள்ளது.
அது மாத்திரம் அல்லாது இந்த துறைமுகத்தில் நிலை எடுத்து கொண்டிருக்கக் கூடிய   கடற்படை ஒன்று  வங்காள விரிகுடாவையும் இந்து சமுத்திர கிழக்கு பிராந்தியத்தையும் கட்டுப்படுத்தும் வலிமை பெற்று விளங்கும் என்பது மூலோபாய ஆய்வாளர்களது பார்வையாகும்.
கடற்கலங்களின் பிரசன்னம்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கடற்படை  மூலோபாய கொள்கைகள் குறித்த ஆய்வுகளை Center For New American Secuity என்ற கொள்கைஆய்வு மையம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கைகளில் சர்வதேச கடலில் கடற்படை கப்பற் கலன்களின்  பிரசன்னம் குறித்த தெளிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இவ்வறிக்கையின் படி உலகெங்கும் உள்ள கடற் பகுதிகளில் அமெரிக்க கடற்கலங்கள் உலா வருவதும் தரித்து நிற்பதும்-  எதாவது ஒரு நிகழ்வு இடம் பெறும்வரை காத்து நிற்கின்றன என்ற எண்ணம் பிழையானது ஆகும்.
அதேவேளை கடற்பிரசன்னம் ஒரு செயலற்ற வெறும் மிதப்பு நடவடிக்கை அல்ல. பதிலாக கடற்கலம் கடலில் இறங்கியதுமே மிகவும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றன . கர்வதேச கடற்கரை ஓர நாடுகளில் மட்டுமல்லாது நிலப்பரப்பை தமது எல்லைகளாக கொண்ட நாடுகளிலும் கூட  உள்நாட்டில்  என்ன நடக்கிறது என்பது அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாகும்.
கப்பல்களின் நிறைவேற்றப்பட வேண்டிய பல்துறை  நடவடிக்கைகளை வரிசைப்படுத்துதல். அவை  இராணுவ முனைப்பு ஆக இருந்தாலும் இராஜதந்திர முனைப்பு ஆக இருந்தாலும் புவியியல் சார் கணக்கெடுப்புகளாக இருந்தாலும் அடுத்த நிலையை அடையும் வரை மிகவும் சுறுசுறுப்பாக கப்பல் இயங்கிய வண்ணம் இருக்கும்.
கப்பல்கள், யுத்த நாசகாரிகள், கடற்படை பிரிவுகள், கரையோர காவல் படையினர், ஆகியன கடற்கலங்களின் பிரசன்ன நடவடிக்கையில் பங்குபற்றுகின்றன.  இந்த பிரசன்ன நடவடிக்கைகளின் பிரதான காரணம் இங்கே முக்கிய மானது.
பெரும்பாலான இன்றைய கடற்கலன்கள் உலக இயல்புக்கு தகுந்த வாறு அல்லது நவீனதொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய உளவு அறிக்கைகள் சேகரிக்கும் வசதிகளை நிச்சயமாக கொண்டிருப்பதுடன்  கூட்டு நாடுகளின் ஆதரவுடன் இந்த பயிற்சிகள் இடம் பெறுவதால், சினேகபூர்வமாக பல தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
துறைமுக வருகைகள் இவற்றுள் முக்கியமானவையாகும்.  பல்வேறு நாட்டு கப்பற்கலங்களும் திருகோணமலைக்கும் கொமும்பிற்கும் அம்பாந்தோட்டைக்கும் வருகை தருகின்றன,  இதே போல பல்வேறு துறைமுகங்களுக்கும் அவை வருகை தருவதுண்டு,
இதில் துறைமுக கட்டுகளின்  உயரம், நீளம் , எவ்வளவு விரைவாக தரித்து நிறுத்தக் கூடிய தன்மை, மீள எடுத்து செலுத்திச் செல்லக் கூடிய இலகுநிலை, அந்த பிராந்தியத்தில் இருக்கக் கூடிய கடலடி மணற்திட்டுகள்,  கடலடிபாறைகள் ஆகியவற்றுடன் பல்வேறு நேர அட்டவணைகள் என அனைத்தும் பதிவிலெடுக்கப் படுகிறது.
எப்பொழுதாவது யுத்தகாலம் ஒன்று வருமாயின் அதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே பரீட்சயப்படுத்தி கொள்வதே இதன் நோக்கமாக சொல்லப்படுகிறது.
துறைமுகங்கள் பழுது பார்க்கப்படுகின்றன, திருத்தி அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பல்வேறு நாடுகளின் கடற்கலன்களும் வருகை தருகின்றன.
அதில் யுத்தகாலம் மட்டுமல்லாது இயற்கை அனர்த்தகாலங்களின் போதும் கூட அல்லது சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள், மனிதகடத்தல்,  போதை பொருள்  கடத்தல் கடற் கொள்ளையரை மடக்குதல் போன்ற பல குற்றச்செயல்களை தடுப்பதுவும் இத்தகைய துறைமுக வருகைகளுக்கு காரணமாக பல்வேறு அரசுகளின் கடற்படைகளாலும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வருகைகளின் போது சேகரிக்கப்படும் சமூகங்கள் குறித்து தரவுகள், அவர்களது உணவு வகைகள் அவர்களது கல்வி அறிவு, கடல்சார் அறிவு உள்ளுர் தலைவர்களுடன் உறவாடுதல், மருத்துவ உதவிகள் பரிசுப்பொருட்கள் வழங்குதல் என்பன மூலம் உளவியல் செல்வாக்கை பெறுவதுடன் நன்நம்பிக்கையை பெறுதல் ஆகியன முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஆர்வம்
அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் திருகோணமலை மீது தமது ஆர்வத்தை கொண்டிருப்பதில் முக்கிய மானவையாக கருதப்படுகின்றன. திருகோணமலை பிரதான எண்ணெய் எரிபொருள் கொள்கலன் வசதிகளை கொண்டிருப்பதால், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கூட்டாக வியாபார இராணுவ  தேவைகளை மையாக கொண்டு தமது ஆர்வங்களை காட்டிவருகின்றன.
அதேவேளை தென் கொரியாவும் கூட திருகோணமலைப் பிரதேசத்தை வர்த்தக வலயமாக பயன்படுத்துவதில் முக்கிய கவனம் கொண்டுள்ளது.
அண்மையில்  அமெரிக்க பாதுகாப்பு செயலகம்,பென்டகன் இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அமெரிக்க காங்கிரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த அறிக்கையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடல் சார் விஸ்தரிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக சீனாவினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள  சிறிலங்காவின் அம்பாந்தோட்டை , பாகிஸ்தானின் குவடார் துறைமுகங்கள் சேமிப்பு வழங்கல் கட்டமைப்பு போல் தெரிந்தாலும் பிற்காலத்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு பெரும் உதவியாக இருக்கக் கூடியது என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
2015 ஆம் ஆண்டு ஒடுங்கிய செங்கடல் பகுதியின் இந்து சமுத்திரப் பகுதி வாயிலில் உள்ள டிஜிபோட்டி பகுதியில் புதிய தளம் ஒன்றை சீனா அமைத்துள்ளது.
சீன அரசாங்கம் வர்த்தக நலன்களை மையமாக கொண்டே தனது விரிவாக்கத்தை செய்கிறது. விநியோகப் பாதைகளை பாதுகாத்தல் என்பதன் அடிப்படையிலேயே சாதாரணமாக விரிவாக்கம் அமைந்துள்ளது என்பது ஒருசாராரது விவாதமாக இருந்து வருகிறது.
ஏனெனில் இன்றைய சர்வதேச அரசியல்  நிலையை பொறுத்தவரையில்  சீனா கடுமையான தொனியை பிரயோகப்படுத்தி தனது இராஜதந்திர  அணுகுமுறைகளை கொண்டிருக்காது .  பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்துவதிலும் பார்க்க அதனது சக்திவள விநியோக பாதைகளை  உறுதிப்படுத்தவதிலேயே அதிகம் கவனம் கொண்டுள்ளது.
மூலோபாய பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்தம்போது  தனது பொருளாதார அபிவிருத்திக்கும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட கூடிய பலநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தன்னெழுச்சியான அதிகார தோரணைகளை அதிக இடங்களில் விட்டு கொடுத்து நடந்து கொள்கிறது.
இந்தநிலை உலகளாவிய ஆட்சி வல்லமை பெற்றதன் பின்பு நிறைய மாற்றங்களை கொண்டதாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. இதற்கு ஏற்றவகையிலேயே சீனாவின் சர்வதேச ஆட்சி நிலையை அடையும் நோக்கை கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அமெரிக்கா போன்ற நாடுகள் தமது இராஜதந்திர நகர்வுகளை இந்து சமுத்திர நாடுகளை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றன.
இருந்த போதிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதன் பிராந்திய செல்வாக்கை அதிகரிப்பதற்குரிய அதிக சந்தர்ப்பங்களை கொடுக்கிறது. உதாரணமாக சிறிலங்காவில் தனது கடந்த கால வரலாற்று பிரசன்னத்தை நிரூபிக்கும் வகையில்  சீனா வரலாற்று ஆதாரங்களை தேடி ஆய்வுகள் மேற்கொள்ள முனைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
அதேவேளை சிறிய நாடுகளும் இருதரப்பையும் சமநிலைப்படுத்தம் வகையில் தமது இராஜதந்திர நகர்வுகளை முனைப்புடன் செய்து வருகின்றன உதாரணமாக  சிறிலங்காவின் பல்வேறு பிரதான ஊடகங்களும் சீன பிரசன்னத்தை பெரிதாக அலட்டி கொள்ளாது மேற்கு நாடுகள் சீறிலங்காவில் தலையிடுவதை பெருமளவில் குறைகாணும் ஒருவகை ஒழுக்கத்தை கொண்டிருக்கின்றன.
ஆனால் மேற்கு நாடுகள்  சிறிலங்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் யுத்த குற்றச்செயல்க்ளையும் பொறுப்பு கூறல் இனங்களுக்கிடையிலான சமரசம் ஜனநாயக மாண்புகள் என்பன குறித்த விவகாரங்களை முன்னிறுத்துகின்றன . .
இந்த நிலையில் இந்து சமுத்திர கடற்பாதை மீதான ஆர்வம் ஆசிய- பசுபிக் நாடுகளுக்கு இடையிலான பரந்து விரிந்த மூலோபாய வரைபாக இந்தோ- பசுபிக் பிராந்தியமாக மாற்றம் செய்யப்பட்டு கொள்கைகள் வகுக்கப்படுகிறது.
கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களும் ஏற்கனவே சீன செல்வாக்கில் வந்து விட்ட நிலையில்  திருகோணமலை துறைமுகத்தில் இருந்து  இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் விரிவாக்கம் வியட்னாமிய கடற்கரைகள் வரையில் பரந்து விரிந்ததாக உள்ளது.
Brexit உம் திருமலையும்
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது பிரித்தானியாவில்  ஐரோப்பிய நாடுகளின் கூட்டிலிருந்து  தன்னை விடுவித்து கொள்வதா இல்லையா?  அவ்வாறு விடுவித்து கொள்வதாயின் பாரிய பொருளாதார அரசியல் தாக்கங்களை எவ்வாறு கையாளுவது போன்ற தீர்மானங்கள் நீண்ட இழுபறியில் கிடக்கிறது. ஆனால் வெளியேற்றத்தின் பின் ஆன பிரித்தானிய பாதுகாப்பு மூலோபாய சிந்தனைகள் ஏற்கனவே வெளிவர ஆரம்பித்து விட்டன.
பிரித்தானியா இரண்டாம் உலகப்போர் காலத்தின் பிற்காலப் பகுதியில் தனது சர்வதேச அரங்க செயற்பாடுகளை மிகவும் குறைத்து கொண்ட நிலையை கடைப்பிடித்தது. ஆனால்  ஐரோப்பிய வெளியேற்றத்தின் பின் காலப்பகுதியில் நாட்டின் சர்வதேச செல்வாக்கும்  அங்கீகாரமும் இனி தலை நிமிர்ந்து நிற்கும்.
சர்வதேச அளவிலான பாத்திரங்கள் பலவற்றை வகிப்பதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டதாக இருக்கும். அவற்றில் பாதுகாப்பும் மூலோபாயமும் முக்கிய இடம் வகிக்கும் என்ற பாதுகாப்பு செயலரின் கூற்றும்
தெற்காசிய நாடுகளின் மத்தியிலும் கரீபியன் தீவுகளின் மத்தியிலும் இராணுவ தளங்களை அமைத்து கொள்வதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளது என்ற வெளியுறவு பொது நலவாய செயலரின் கூற்றும்  வெளிவந்திருந்தது.
இந்த கூற்றுகளை மையமாக வைத்து ஏற்கனவே, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்திய உபகண்டத்தையும் வங்க கடற் போர்கள வட்டகையாக இருந்த கிழக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு ஏற்கனவே கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் திருகோணமலையை பிரித்தானியா தனது இராணுவ தளமாக்க முயலும் என்ற வகையிலான செய்திகளை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
திருகோணமலையில் பிரித்தானியா தனது தளத்தை அமைக்கும் திட்டம் கொண்டுள்ளதோ இல்லையோ , திருகோணமலையை சந்தைப்படுத்தும் போக்கை சிறிலங்கா மிக முக்கியமாக கொண்டுள்ளது.
அதேவேளை சர்வதேச மனிதஉரிமை சபையில் தனது நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுத் திருப்பதுவும் இங்கே கவனிக்ககூடியதாகும்
2016ஆம் ஆண்டு பிரித்தானியா அரசால் நியமிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான நிரந்தர வதிவிடம் இல்லாத பாதுகாப்பு ஆலோசகரான ஸ்ருவாட் போர்லன்ட் அவர்கள் திருகோணமலையில் உள்ள பிரித்தானியா படைகளின் போர் சமாதிகளுக்கு வருகை தந்திருந்தார்.
அந்த வருகையின் போது சிறிலங்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளும் பொறுப்புக்கூறலும் மனித உரிமை விவகாரங்களும் மிக நீண்டகால  தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா தனது வரலாற்று ஆதாரங்களை திருகோணமலையில் உறுதிப்படுத்தும் அதேவேளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை நன்கு அறிந்த நிலையை கொண்டிருக்கிறது என்பது மட்டும் உன்மையானதாகும்.
இதனால் பிரித்தானியா புலம்பெயர் தமிழ் தேசிய செயற்பாடாளர்கள் தமது அரசாங்கத்தில் அதிக செல்வாக்கை பெற்றுக் கொள்ள வேண்டிய காலமுமாகும்.

No comments:

Post a Comment