Saturday 30 March 2019

திராவிட கலாச்சாரம் விடை பெறுகிறதா? பிரசாரத்தில் ‘மிஸ்’ ஆன நட்சத்திரங்கள்

தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் சினிமா நட்சத்திரங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் திராவிடக் கலாச்சாரம் விடை பெறுகிறதா? என்கிற கேள்வி எழுகிறது.


சினிமாவை வைத்து அரசியல் பயணம் நடத்துவது, வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிகம்தான்! திராவிட மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்ப சினிமாவை பயன்படுத்திய திராவிடம், அப்படியே அந்தப் பணியை அரசியலுக்கும் எடுத்துச் சென்றது. இதன் விளைவாக திரையுலக தொடர்புடையவர்களே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
முதல் முறையாக அதிமுக.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என சினிமா தொடர்பு இல்லாதவர்களின் தலைமை வந்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், டெலிவிஷன் தொடரில் நடித்தவர் என்றாலும், சினிமா அவரது அடையாளம் அல்ல. ஆனால் அடுத்த வாரிசாக வரும் உதயநிதி, சினிமா மூலமாகவே அறிமுகமாகி அரசியலுக்குள் வருகிறார்.
முக்கியமான இந்த இரு கட்சிகளுமே இந்த முறை இதுவரை தேர்தல் பிரசாரங்களில் நடிகர், நடிகைகளை ஈடுபடுத்துவது குறித்து திட்டமிடவில்லை. மறைந்த ஜெயலலிதா தனது பிரசாரத்திற்கு முன்பாக சினிமா நட்சத்திரங்களை ஊர் ஊராக பிரசாரத்திற்கு அனுப்பி விடுவார்.
கடந்த தேர்தலில்கூட அதிமுக நட்சத்திரப் பேச்சாளராக நடிகை விந்தியா வலம் வந்தார். நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், தியாகு, செந்தில், குண்டு கல்யாணம், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டவர்கள் அதிமுக.வுக்கு பிரசாரம் செய்தனர்.
அதேபோல திமுக.வுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்திருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி திமுக.வின் பிரசார பேச்சாளராக வலம் வந்தார். திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் இருந்த நடிகர் நெப்போலியன், இப்போது அரசியல் பக்கமே இல்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூவும் இந்த அணிக்கு பிரசாரம் செய்வார்.
ஆனால் இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி மட்டுமே மாநிலம் தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். திமுக சார்பில் திரை பிரபலங்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களும் பிரசாரம் செல்லவில்லை.
அதிமுக தரப்பிலும் இபிஎஸ், ஓபிஎஸ் பிரசார ரவுண்ட் வர ஆரம்பித்துவிட்ட நிலையில், நடிகர்- நடிகைகள் யாரும் இல்லை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆளுமைக்காக சினிமா நட்சத்திரங்கள் படையெடுத்து வந்ததுபோல இப்போது புதிய நட்சத்திரங்கள் வரத் தயாராக இல்லை என்பதும் இந்த நட்சத்திரப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்!
முக்கிய கட்சியின் நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ‘நட்சத்திரங்கள் யாரும் இலவசமாக பிரசாரம் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை அல்லது கூட்டத்திற்கு இவ்வளவு தொகை என கொடுத்தாக வேண்டும். இன்று களத்திலேயே தேர்தல் செலவு அதிகமாகிவிட்ட நிலையில் சினிமா நட்சத்திரங்களுக்கு செலவு செய்கிற நிலையில் வேட்பாளர்கள் இல்லை. இதுவும் சினிமா நட்சத்திரங்களை அழைக்காததற்கு காரணம்’ என்றார்.
திராவிட அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமான சினிமா நட்சத்திர பிரசாரம், விடை பெறும் தருணமாக தோன்றுகிறது.

No comments:

Post a Comment