Tuesday 2 April 2019

தமிழ் அரசியலில் நடப்பது என்ன?

ஏமாற்றாதே ஏமாறாதே... என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் என்ற சினிமாப் படத்தில் வரும் பாடல் வரிகளாகும்.
 
நம்ப நட, நம்பி நடவாதே என்ற பழமொழியைப் புதுப்பித்து கவிஞர் வாலி கொடுத்த புதுவடிவமே மேற்போந்த பாடலாகும்.
 
ஏமாற்றுதல் மிக மோசமான கொடுஞ்செயல். அதிலும் நம்ப வைத்து ஏமாற்றுதல் என்பது நம்பிக்கைத் துரோகம் என்பதன் பாற்பட்டதாகும்.
 
நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் ஏழு பிறப்புக்கும் தங்கள் பாவத்தை கழுவாய் செய்ய மாட்டார்கள் என்று சமயதத்துவங்கள் கூறிநின்றாலும் இன்னமும் நம்பவைத்து ஏமாற்றுகின்ற நாடகங்கள் மனித சமூகத்தில் நடக்கவே செய்கிறது.
 
அதிலும் ஏமாற்றுகின்ற வடிவங்கள் வேறுபட்டவையாக இருப்பதுதான் விசித்திரம். 

இப் போதெல்லாம் ஏமாற்றுகின்றவர்கள் தொலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்பாடல் முறைகளினூடு ஏமாற்றுகின்றனர்.
 
உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக ஐம்பதாயிரம் ரூபாயை எமக்கு அனுப்பி வையுங்கள் என்றவாறான ஏமாற்றுத்தனங்களுக்குக் குறைவே இல்லை.
 
என்ன செய்வது ஏமாறுபவர்கள் நம் மத்தியில் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் நம்மோடு இருக்கவே செய்வர்.
 
இது ஒரு கதை. ஒரு நாட்டு மன்னனை ஒருவன் சந்தித்தான். மன்னா நான் அயல் நாட்டில் வசிக்கும் நெசவாளி. மிகத்தரமான ஆடைகளை நெய்யும் திறன் என்னிடம் இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால், உங்களுக்கு மிகவுயர்ந்த தரத்தில் ஆடை நெய்து தருவேன் என்றான்.
 
நெசவாளியை நம்பிய மன்னன் ஆடை தயாரிப்புக்காகப்  பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்தான்.
 
சில மாதங்கள் ஆகிய பின்பு மீண்டும் அந்த நெசவாளி மன்னனிடம் வருகிறான். வரும் போது கையில் எதையோ ஏந்தி வைத்திருப்பது போன்ற பாவனையில் கையை வைத்திருந்தான்.
 
மன்னா உங்களுக்கான ஆடை தயாராகி விட்டது. இதில் நவரத்தினங்கள் பதிக்கப்பட் டுள்ளன. ஆனால் ஒரு முக்கிய விடயம் உண்டு.
 
இந்த ஆடையானது அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றான்.

நெசவாளி கூறிய அந்த விடயத்தை மன் னர் சபையில் இருந்த மந்திரி பிரதானிகளும் செவிமடுத்தனர்.
 
என் கையில் வைத்திருக்கும் இந்த மிக உயர்ந்த பெறுமதியான ஆடை எப்படியிருக்கிறது மன்னா என்று கேட்டான் நெசவாளி.
 
மன்னனுக்கு ஆடை தெரியவே இல்லை. இருந்தும் நல்லவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று ஏலவே நெசவாளி கூறியதால், ஆடை பிர மாதம் என்றான் மன்னன்.
 
மன்னனைப் போலவே அமைச்சர்களுக்கும் அந்த ஆடை கண்ணுக்குத் தெரியவில்லை யானினும் அவர்களும் மிகச் சிறந்த ஆடை எனக் கூறினர்.
 
இப்போது மன்னனுக்கு ஆடை அணிவிக் கப்படுகிறது. அந்தோ! ஆடையின்றி மன்னன் நிர்வாணமாகக் காட்சி தருகிறான்.
 
அனைவருக்கும் மன்னன் நிர்வாணமாக நிற்பது தெரிகிறது. இருந்தும் ஆடை தெரியா விட்டால், அறிவற்றவர் என்றும் நல்லவர் அல்ல என்றும் ஆகி விடும் என்பதால் எல்லோரும் ஆடை பிரமாதம் என்று கூறினர்.
 
மன்னனை வீதி உலா கொண்டு செல்கின்றனர்.  அந்த வீதியில் ஆடு மேய்த்துக் கொண்டு நின்ற சிறுவன் ஒருவன் மன்னனைப் பார்த்து விட்டு, இங்கே பாருங்கள் மன்னர் நிர்வாணமாகப் போகிறார் என்றான். 
 
அப்போதுதான் நிலைமை புரிந்தது. இதுதான் எங்கள் தமிழ் அரசியலில் இப்போது நடக்கிறது.

No comments:

Post a Comment