Tuesday 30 April 2019

போதிதர்மர் சீனாவுக்குப் பலமென்றால் பிரபாகரன் இலங்கைக்கு பலமல்லவா!

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகமாகப் புகழ்ந்து பேசுபவர்கள் சிங்கள மக்களும் சிங்கள அரசியல் தலைவர்களும் என்றால் அது மிகையன்று.



2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம்  திகதி வன்னிப் போர் முடிவுற்றது.
போர் முடிவுற்றதும் போர் வெற்றி விழாக் கொண்டாட்டத்தை நடத்துவதில் அன்றைய ஆட்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு, தமிழ்க் குழந்தைகளை யாருமற்ற அநாதைகளாக்கிவிட்டு, வெற்றி விழாக் கொண்டாட்டம் செய்கின்ற மனநிலை உடையவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொள்கின்றன.

தமிழ் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ் மக்களையும் தமிழ்க் குழந்தைகளையும் கொன்றொழித்த கொடூரம் சகிப்பதற்குரியதல்ல.

தவிர, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம்; விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்ற திமிர்த்தனத்துடன்  ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் நடந்து கொண் டதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இவை ஒருபுறமிருக்க, விடுதலைப்புலிகள் கொள்கையுடன் போராடியவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரியும் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வும் இப்போது கூறியுள்ளனர்.



இவ்வாறு விடுதலைப் புலிகளை தென் பகுதி ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இப்போது புகழ்ந்து பேசுவது என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே.

எதிர்காலத்தில் எதற்கும் விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டி அவர்கள் உயர்வான வர்கள், இலட்சிய வேட்கை கொண்டவர்கள் என்று இந்த நாட்டின் பெரும்பான்மையினர் அடிக்கடி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.

இங்கு நாம் கேட்பதெல்லாம், உலகம் முழுவதும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை அதன் தலைவனைப் புகழ்ந்து பேசியது.



அந்த அமைப்பின் கட்டமைப்பு, நிர்வாக ஒழுங்கு, ஒழுக்கம், உரிமை மீது கொண்ட பற்றுறுதி, புலனாய்வு நுட்பம், மிக உயர்ந்த போர்த்திறன் எனப் பல விடயங்களைச் சுட்டிக் காட்டி விடுதலைப் புலிகளை உலகநாடுகள் புகழாரம் சூட்டியபோது; இந்த நாட்டின் எதிர் காலப் பாதுகாப்புக்குரியவர்களாக விடுதலைப் புலிகளை ஆக்க வேண்டும், அவர்களுடன் சமரசம் செய்து அவர்களையும் இந்த நாட்டின் இறைமைக்கான பாதுகாவலர்களாக மாற்ற வேண்டும் என்று தென்பகுதிப் பெரும்பான்மை நினைக்கவில்லையே. இது ஏன்?

இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரைத் தங்களோடு வைத்திருக்க வேண்டும். அதுவே தங்கள் நாட்டுக்கான பலம் என்று சீனர்கள் நினைத்தார்கள்.



புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டின் ஒரு பெரும் பலம் என்று நீங்கள் நினைத் திருந்தால், இன்று இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரம் கிட்ட நெருங்கியிருக்குமா? அல்லது இலங்கையில் தாக்குதல் நடத்த வேண்டு மென்ற நினைப்புத்தான் மதத் தீவிரவாதத்துக்கு ஏற்பட்டிருக்குமா என்ன? 

அழிப்பதுதான் தீர்வு என்றால், இப்போது எழுந்துள்ள பிரச்சினை எதற்கானது என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.  

courtesy: valampurii

No comments:

Post a Comment