Tuesday 28 May 2019

ரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத "சூப்பர் அரசியல்".. பின்னணியில் பலே திட்டங்கள்

இன்னும் போயஸ் தோட்டத்து வீட்டு வாசலைத் தாண்டவில்லை ரஜினிகாந்த்தின் நூதன அரசியல். வரலாறு காணாத அரசியல் இது. பட்டும் படாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.. அது ஸ்டெர்லைட் ஆக இருந்தாலும் சரி, டிமானிடைசேஷன் ஆக இருந்தாலும் சரி. ஆனால் அகில இந்திய அளவில் ரஜினி தூக்கி பிடிக்கப்படுகிறார்.. ஏன்?


பக்காவான திட்டமாக ரஜினியை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவுக்கு எப்போதுமே வெற்றி முகம்தான் தேவை. அதுவும் அப்போதைக்கு வெற்றித் தேடித் தருவதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் வாஜ்பாய் அத்வானி, பின்னர் மோடி அமித் ஷா.
அத்வானியின் முகம் மங்கியபோது தூக்கி எறியப்பட்டார். பலரும் கூட இதுபோல ஒதுக்கப்பட்டவர்கள்தான். யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்ஹா என இந்த பட்டியல் மிக நீளமானது.

சிக்கல் இல்லை


இப்போது பாஜகவுக்கு தென்னிந்தியாவில் ஒரு சக்தி வாய்ந்த முகம் தேவை. கேரளாவில் தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை. ஆந்திராவில் வலை வீசிப்
பார்த்தது கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் பெரிதாக பிரச்சினை இல்லை.
சிக்கல் தமிழகத்தில்தான். இங்குதான் ஒரே மாங்காயில் பல மாமரங்களை
வீழ்த்தும் அபாரத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

பகடைக்காய்


அதிமுகவை தற்காலிக பகடைக் காயாக பாஜக பயன்படுத்தி வந்தது.
பாஜகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ்ஸோ, ஈபிஎஸ்ஸோ முக்கியமானவர்களே
அல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி மற்றும் செல்வாக்கு இதுதான்
முக்கியமானது. அதை வைத்து மெல்லக் காய் நகர்த்திய பாஜகவின் முக்கிய டார்கெட் ரஜினிதான்.

இதுதான் திட்டம்


அதிமுகவால் தமிழகத்திற்குள்தான் ஏதாவது காரியம் ஆகும். அதை
சரியாக செய்து வரும் பாஜகவின் மெகா திட்டம்தான் ரஜினியாக
சொல்கிறார்கள். அதாவது ரஜினிக்கு தமிழகத்தில் முகம் தேடித் தருவது.
அந்த முகத்தை பிரபலமாக்குவது. அதைக் கொண்டு அகில இந்திய
அளவில் தனக்கு பயன்படுத்திக் கொள்வது. இதுதான் திட்டம் என்கிறார்கள்.

சீர்குலைவு


ரஜினிக்கு இடையூறாக இங்கு இருப்பது திராவிடம். திராவிடக் கோட்டை
தமிழ்நாடு. இதைத் தகர்ப்பது என்பது மிக மிகப் பெரிய சமாச்சாரம்.
அங்குதான் பாஜகவின் சாதுரியம் விளையாடியது. அதிமுக இன்று
சீர்குலைந்து விட்டது, நிலை குலைந்து போய் விட்டது. நாளையே 
அதிமுகவின் சிதறிப் போனவர்கள் இணைந்து கை கோர்ப்பார்கள். 
ஆனால் குடுமி மட்டும் பாஜகவிடமே இருக்கும். காரணம், 
பக்காவாக எல்லோரும் சிக்கியுள்ளனராம்.

ஸ்டாலின்


அடுத்த சிக்கல் திமுக. அதற்குள் உரிய முறையில் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருப்பதாக பேசப்படுகிறது. அதைத் தாண்டி எப்படி ஸ்டாலின்
நிலை நிறுத்தப் போகிறார் என்பது மிகுந்த சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும்.
முதல் பரீட்சையில் அவர் வெற்றிகரமாக தேறி லோக்சபா தேர்தலில்
அதகளம் செய்து விட்டார். இதை பாஜக எதிர்பார்க்கவில்லை. இந்த
நிலையில்தான் ரஜினியை மீண்டும் வெளியில் விடுகிறார்கள்.

அரசியல் மைதானம்


ரஜினியின் செல்வாக்கை முதலில் நிலை நிறுத்த வேண்டும். அதற்குத்தான்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு. அங்கு வைத்து அகில
இந்திய அளவில் ரஜினி மீது வெளிச்சம் பாய்ச்சப்படவுள்ளது. ரஜினியை
மெல்ல மெல்ல களம் இறக்கி தமிழக அளவில் அவருக்கென்று ஒரு
மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதில் விளையாட விட்டு, அதன்
பலனை கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா.. ஆம், மகாராஷ்டிரா என
மெல்ல எடுத்துச் செல்லும் திட்டம்தான் பாஜகவுடையது என்பது
அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

அரசியல்வாதி


ரஜினிக்கான அரசியல் அசைன்மென்ட் என்பது ரஜினிக்கே கூட முழுமையாக தெரியாது என்கிறார்கள். ஆனால் பாஜகவின் திட்டம் மெல்ல உருவெடுப்பதாக அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். இன்றைய ரஜினியின் பேச்சு
கூட எல்லோரையும் பகைத்துக் கொள்ளாதது போலவே இருந்ததைப் பார்த்திருக்கலாம்.. ராகுல் காந்தியைப் பாராட்டுகிறார், மோடியைப்
பாராட்டுகிறார், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைவீசியது என்கிறார்.
ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு அவர் பேச ஆரம்பித்துள்ளார்.

தலை சுத்துகிறது


ரஜினியின் முகத்தில் பாஜக முகமூடி என்பது எந்த அளவுக்கு ஒர்க் அவுட்
ஆகும். அதை திமுக உள்ளிட்ட கட்சிகள் எப்படி சமாளிக்கும். கமல்
உண்மையிலேயே இதையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்யப் போகிறாரா
 அல்லது ஒரு கட்டத்தில் ரஜினியுடன் கை கோர்ப்பாரா.. சீமானின் நாம்
தமிழர் கட்சி இந்த எதிர்ப்பு சக்திகளை எப்படி முறியடிக்கும்..
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக மக்கள் முன்பு அடுத்த சட்டசபைத்
தேர்தலில் என்னென்ன ஆப்ஷன்கள் இடம் பெறப் போகின்றன..
நினைத்தாலே தலை சுற்றிப் போகிறது போங்க.

No comments:

Post a Comment