Wednesday, 26 June 2019

கறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும்,
நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.


தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.


ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார். ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார். மாதக் கடைசி. கையில் பணமில்லை.
வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.
மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன். அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன. வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.

பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.

அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள். அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது. ஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள். நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது. அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி. தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது. இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.
லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.
பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம். இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.
தமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.
இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு என கூறப்பட்ட போதும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடாகவே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது “இனக்கலவரம்” என்ற பொய்க்குள் நடைபெற்ற “இனப்படுகொலை” நிகழ்வாகும்.

உண்மையில் இக்கோர கறுப்பு யூலை நிகழ்வுகளே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூண்டியது என்று கூறலாம்.
மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்ச்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கருப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் மக்கள் பெற்றார்கள்.

கருப்பு ஜூலையில் உச்ச வடிவம்…

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்!
ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இன்று வரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு
நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.
இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.
கருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறைப்படுகொலை, தென்னிலங்கை இனப்படுகொலை ஆகியன நிகழ்த்தப்பட்டன.
அதே நேரம் யாழில் திருநெல்வேலி படுகொலைகள் என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சிங்கள படைத்துறையால் 51 பேர் வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.
யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் பதின்மூன்று இராணுவம் கொல்லப்பட்டார்கள் என்பதை காரணம் காட்டி ஏற்கனவே சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்படுகொலையை கட்டவிழ்த்து தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்து ஸ்ரீலங்கா படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது.
திருநெல்வேலி தாக்குதல் அல்லது போ போ பிராவோ (Four Four Bravo) என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் கறுப்பு யூலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் இப்பொழுதும் கருதப்படுகின்றது.
ஆனால் கறுப்பு யூலை படுகொலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது.
இந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள்.
வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
கருப்பு ஜூலையின் நெருப்பு நினைவுகள் தொடரும்….
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது.
துறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம். கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

Tuesday, 11 June 2019

துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும்

சதி புரிந்த துட்டகாமினி என்ற இளைஞனால் வயது முதிர்வடையும் வரை காத்திருந்து வீழ்த்தப்பட்ட எல்லாள மகராஜன்.



மறைந்து போன வரலாறும் இனவாதங்களால் மாற்றியமைக்கப்பட்ட புனைகதைகளும் எல்லாளன் சாதித்தது இன்று எவளவு விடயங்களை சிங்கள சக்தி மாற்றி வருகின்றது காலப்போக்கில் ஈழக்கதைகளும் மாற்றப்படும் என்பதே உண்மையான மறைமுக பக்கம்.

தமிழ் மன்னன் எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. 

எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். மகனின் பெயர் வீதிவிடங்கன். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.

பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.

ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.

மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. 
ஆனால் தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம்  கூறினான்.  'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.

எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக வவிகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

விகாரைமகாதேவியும் எல்லாளனும் தொகு கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும் அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள். இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான்.[சான்று தேவை] பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான்.[சான்று தேவை] திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும். அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்
இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.

துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும் 



காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.

இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

“எல்லாளன் செய்யமுடியாத்தை தேசியத்தலைவர் சாதித்து காட்டியது வரலாறு”

வரலாற்றுத்தடம்
ஈழம் வாகீசன்.

Wednesday, 5 June 2019

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.


சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.
யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.
தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.
புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)
தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.
கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.
போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.
பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.
*****

ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன.
1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம்.
திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட உரும்பிராய் கிராமத்தைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் ஈழப் போராட்டத்திற்கு சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன்நகர்த்தினான். தன் சாவின் மூலம் தமிழ்ச் சமூகத்தை, குறிப்பாக அன்றைய இளந்தலைமுறையை ஒரு உலுக்கு உலுக்கினான்.
அவன் தனது மாணவப் பருவத்தில் ஒரு சமூகப் போராளியாகவே அரசியலுக்குள் நுழைந்தான்.
1960-களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், இரசியாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோஹண விஐயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை உள்ளடக்கிய காலகட்டம் அது.
இவை யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். யாழ்ப்பாணக் குடநாட்டில் எழுச்சிபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டத்தால் சிவகுமாரன் ஈர்க்கப்பட்டான். ஆர்வத்துடன் அதில் பங்கேற்றான்.
இவ்வேளையில்தான் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணி அரசமைத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன. ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்க்கும் வகையில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது. அந்த மாணவர் அமைப்பில் சிவகுமாரனும் முக்கிய பங்கெடுத்தான்.
இந்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படிதான் 1972 மே 22 ல் இலங்கைத்தீவு சிறிலங்கா பொளத்த குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.
1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.
ஆதலால் பத்திரிகைச் செய்திகளில் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.
சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான். அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான். அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான், 1972 மே மாதத்தில் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன். நான் அப்போது மே 22 ஆம் நாள் குடியரசுப் பிரகடனத்தை எதிர்த்து இடம்பெற்ற கிளர்ச்சியில் கைதானவர்களில் ஒருவனாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்தேன்.
1973 இன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான்.
மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. (மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர.;) ஆனால், எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது.
சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.
முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம்.
எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால், இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதி நாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர்.
அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்கக்கூடும். சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.
1974 யூன் 10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.
ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்து விட்டது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.
மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான். அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம்.
எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்திற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம்.
வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன.
திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது.
பொலிசார், அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோலகல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.
அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்ட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோது எங்களைப் பார்த்து அலறியபடி வீழ்ந்தார்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்புக் கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.
எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.
காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்;. சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1974-01-10 ஆம் திகதியில் இருந்து 1974-06-05 ஆம் திகதி வரையில் நான் அவனுடன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாத எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்றேன். வெடிமருந்துகள,; ஆயுதங்கள் தேடி சாதிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அவனுடன் கூடவே சென்றிருக்கிறேன். நானும் சாவகச்சேரியை சேர்ந்த ஜீவராசாவும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சயனட்டைத் தேடிப் பெற்று வந்ததும், இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் ஓரு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வு.
இனி ஒரு தடவை பொலிசின் கையில் தான் பிடிபடுவதில்லை என்பதில் சிவகுமாரன் உறுதியாகவே இருந்தான். எங்களைப் பொலிசார் பிடித்தால் எல்லாப் பொறுப்பையும் தனது தலையில் சுமத்தி விடும்படியும் கூறியிருந்தான். இந்த ஐந்து மாத காலமும் ஒரு காவியத்திற்கான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன, எல்லாவற்றையும் இப்போது கூறுவதும் தேவையற்றதாகும்.
தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிபர் சந்திரசேகராவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை. கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகராவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது. சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான். சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
1974 ஆம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய்க் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது.
இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்ககூடும். இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம். இரகசிய கடல் வழிப் பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுச் சேகரிப்பது எனது பணியாயிற்று. அப்போது புகழ்மிக்க பெண்மணி ஒருவர் ‘என்னிடம் தாலிக்கொடி மட்டும்தான் இருக்கின்றது” என்ற பொன்மொழியை உதிர்த்தார். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். இந்நிலையில்தான் பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.
1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி காலை பத்து மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கிப் பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன. கார்ச்சாரதி திறப்புடன் ஓடிவிட்டான். திறப்பில்லாமல் காரை இயங்கச் செய்ய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர்.
ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம்;. வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம். சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன. பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் அகப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து செல்வதுபோல் போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டான்.
ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி சூரியன். மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான்.
ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாய், முன்னறிவித்தவனாய், மாணவர் எழுச்சியின் குறியீடாய் மாறிப்போனான் சிவகுமாரன்.