Thursday 4 July 2019

எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்! – முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்

அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.



மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூட்டத்தின் நடுவே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தம் மிக அண்மையில் கேட்கத்தொடங்குகிறது. இராணுவம் எமக்கு அருகில் வந்துவிட்டான் என்பதை துப்பாக்கி வெடிகளின் சத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்க முடியாது என உணர்கிறேன். ஆனாலும் மக்கள் செல்லும் வீதி இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வீதிக்கும் இறங்க முடியாது தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கவும் முடியாது விரைவாக நான் முடிவெடுக்க வேண்டிய நேரம்.

இராணுவத்தால் சுடப்படும் துப்பாக்கி ரவைகள் எனது குடும்பம் மறைந்திருக்கின்ற இருசக்கர உழவு இயந்திரப்பெட்டியில் பட்டுத் துழைக்கின்றன. இனி வேறு வழியில்லை அந்த இடத்திலிருந்து வெளியேறியே தீரவேண்டும். எனது குடும்ப அங்கத்தவர்களையும் எனது பாதுகாப்பிலிருந்தவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறேன்.

அப்போது ஒரு கரும்புலி வீரன், இராணுவம் தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கும் பக்கமாக நான் இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கமாக புழுதி படிந்த சேட்டுடன் – ஒரு மெல்லிய உருவம், போராளிகள் வழமையாக நீழக்காற்சட்டைக்கு மேலாக இடுப்பில் மடித்துக்கட்டியிருக்கும் சறம், கையில் PK L.M.G., தன்னால் எவ்வளவுக்கு சுமக்க முடியுமோ அவ்வளவு LMG ரவைகளுடன் – நாங்கள் பதுங்கியிருப்பதை உணர்ந்த அந்தக் கரும்புலி வீரன் கட்டளை இடுகிறான்.

“எல்லோரும் போங்கோ!… இங்கை இருக்காதிங்கோ!… இனி ஒருவரும் இங்க இருக்க வேண்டாம். பாதை திறந்தாச்சு, எல்லோரும் போங்கோ! தயவு செய்து இருக்காதையுங்கோ….”

அந்த கரும்புலி வீரனின் கையில் இருக்கும் PK L.M.G இராணுவத்தை நோக்கி தீச்சுவாலையை ஊமிழ்கிறது. அதன் மங்கலான ஒளியில் அந்த வீரனின் முகம் என் கண்ணுக்கு புலப்படவில்லை. அவன் உருவம் மட்டுமே தெரிகிறது. மீண்டும் கரும்புலி வீரன் “எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம், நாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லோரும் போங்கோ…,” என்கிறான்.

இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு எமக்குப்படாதவாறு பாதுகாப்புக்கொடுத்து எதிரிக்குத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த கரும்புலி வீரன். எனது குடும்பமும் ஏனையவர்களும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறோம். நாங்கள் நான்கு குடும்பங்கள் தான் அந்த இடத்திலிருந்து இறுதியாக வெளியேறியிருக்க வேண்டும். அந்தப்பகுதியில் பொது மக்கள் இல்லை என்பதை ஊகித்த அந்தக் கரும்புலி வீரன் தனது கடமையை அந்த இடத்திலிருந்து முடித்துக்கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் திசை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டபடி நகர்கிறான்.

அந்த வீரனை நான் திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு நடக்கிறேன். என் கண்ணுக்கு எட்டியவரை அவனது துப்பாக்கி ஓயவில்லை.
முள்ளிவாய்க்கால் மண் வெறுமனே சோகத்தை மட்டும் சுமக்க வில்லை. உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உன்னத புருசர்களையும் எமது மக்களுக்கு அடையாளமிட்டது.

No comments:

Post a Comment