Saturday 13 July 2019

மதம் பிடித்த பிராந்தியங்கள்

மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.
பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், மத கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும் புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர்.


தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின்றனர். கல்வி தலையீடுகள், வேலைவாய்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும் சமய அதிகார ஆட்சி யினர் உள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் சனநாயக விழுமியங்களுக்கு முரண்பட்ட ஆட்சியாளர்கள் எவ்வாறு தமது அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதில் திட்டமிட்ட வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் தாக்கத்தினால் எவ்வாறு சமுதாய சீர்கேடுகள் உருவாகின்றது என்பதை இந்த கட்டுரைகள் ஆய்வு செய்கின்றன.
மதமும் அரசியலும்
சிறிலங்காவில் அண்மையில் இடம் பெற்று வரும் நிகழ்வுகள் மதங்களின் பெயரால் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. இதுபோல் தெற்காசியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கில் பலவருடங்களாக இடம் பெற்று வருகிறது.
மதத்தை மனிதன் உருவாக்கிய மூல நோக்கத்திலிருந்து தவறி, மனித உயிர்களை சீரழிக்கும் ஒரு காரணியாக மதத்தை மனிதன் உபயோகப்படுத்தவது மிகவும் இழிவுத்தனமானதாகும்.
மத போதனை எனும் பெயரில் வன்முறையை தூண்டும் படியான அறிவுரைகளும் அதற்கான வியாக்கியானங்களும் உருவாக்கப்பட்டு இன்னும் ஒரு மத நம்பிக்கையை சார்ந்தவர்களை நோக்கி வன்மத்துடன் திருப்பி விடப்படுகிறது.
இந்த வன்முறை தூண்டல்களின் பின்னால் அரசியல் லாபங்களே எப்பொழுதும் உள்ளன. மக்கள் மத்தியிலே நிலவும் சகிப்பு தன்மை அற்ற நிலையை தந்திரமாக உபயோகப்படுத்தும் சில அரசியலாளர்கள், சர்வதேச அளவில் பரந்து பட்டு உள்ளனர் என்பது உண்மை.
சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களுக்கு நாட்டு எல்லைகள் பிராந்திய எல்லைகள் கடந்த அமைப்புகள் உரிமை கோரி நிற்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.


தெற்காசியாவை பொறுத்தவரையில் இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்து மத ஆதிக்கமும் பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் மாலைதீவிலும் இஸ்லாமிய மத ஆதிக்கமும் சிறிலங்காவில் பௌத்த மத ஆதிக்கமும் உள்ளது. இந்த மதங்கள் அந்த நாட்டு அரசியலில் பெரும் தலையீடுகள் செய்கின்றன.
அதேவேளை, மத நம்பிக்கை மூலம் உருவாக்கிய சமூக ஊடுருவல் காரணமாக குறிப்பிட்ட சில மத பிரதானிகள் தமது அரசியல் செல்வாக்கை பிரயோகிப்பது வெளிப்படையான உண்மையாகும் . மத செல்வாக்குகள் அதிகரித்து இருக்கும் நிலையில் சர்வதேச அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தும் பொருட்டு தெற்காசிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் சர்வதேச வல்லரசுகள் தமது செயற்பாடுகளுக்கு சாதகமாக்க முனைந்துள்ளன.
மதமும் பிராந்தியமும்
இரண்டாம் உலக போரின் பின் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த இந்த நாடுகள், சமூக அரசியல் பொருளாதார நிலையில் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறுபட்டவை அல்ல.
அடிப்படையில் தமது விடுதலை சாசனத்தில் தாம் பல்லின ஆட்சி அரசாக இருக்கப் போவதாகவே சுதந்திரம் பெற்று கொண்டன. மதசார்பின்மையை கடைப்பிடிக்கப் போவதாகவே உறுதி கொண்டிருந்தன. ஆனால் காலப்போக்கில் பெரும்பான்மை இன மதங்களின் கைகளில் தெற்காசிய நாடுகளின் அரசியல் சிக்குண்டு போய் உள்ளது.
உதாரணமாக இந்து மதத்தின் கையில் இந்தியாவும் நேபாளமும், இஸ்லாமிய மத்தின் கையில் பாகிஸ்தான், வங்காளதேசம் , மாலைதீவு போன்றனவும் பௌத்தத்தின் கையில் சிறிலங்காவும் சிக்குண்டு போய் உள்ளது. இதனால் தற்போது மத அரசியலும் அதன் பின்விளைவுகளும் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.
இதனை மேலும் பற்றி எரியக்கூடிய செயற்பாடுகளாக சர்வதேச சூழலில் மதம் சார்ந்த போர் மேகம் ஒன்று மீண்டும் சூழ்ந்து வருகிறது. இந்த சர்வதேச போரிற்கான அத்திவாரங்களாகவே கொழும்பு குண்டு வெடிப்புகளும் சர்வதேச அளவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உளப்பார்வை உருவாக்கும் போக்கும் உள்ளதோ என்ற எண்ணத்தை தருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ அவர்கள் ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
அத்துடன் ஈரானிய புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தார். அது மாத்திரம் அல்லாது B52ரக போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய மத்திய கிழக்கு அரசியல் எவ்வாறு தெற்காசியாவில் தாக்கம் விளைவிக்கின்றது என்ற நிலைமையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
மத்திய கிழக்கு மதப்பிராந்தியம்
அரபு நாடுகள் தம்மிடையே கூட்டு உறவு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதில் பெரும் தோல்வி அடைந்துள்ளன. தமது பொருளாதார அரசியல் சமூக வாழ்வை சமாதானமாக உறுதி செய்து கொள்ள முடியாத நிலையை இன்று அடைந்திருக்கின்றன. ஒரு நிரந்தரமான மத்திய கிழக்கு கூட்டு ஒன்றை உருவாக்க முடியாது உள்ளன.
மத அரசியல் காரணமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையை கொண்டிருப்பது, அருகாண்மை பிராந்தியமான தெற்காசிய நாடுகளில் இன்று தாக்கங்களை விளைவிக்க ஆரம்பித்திருக்கிறது.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஆரம்பமான ஆட்சி கவிழ்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நிலைமை மேலும் சிக்கல் நிலையை அடைந்திருக்கிறது. சிரிய அரசியல் நிலவரம் சர்வதேச வல்லரசுகளை தலையீடு செய்யும் நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
அல்லது மறுவளமாக பார்த்தால், அரபு நாடுகளிடையே நிரந்தரமான உறுதியான அரசுகள் அமைவது பொருளாதார மற்றும் எரிபொருள் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடு அற்ற நிலையை கையாளும் வகையில் அரபு நாடுகளை முரண்பட்ட நிலையில் வைத்திருக்க சர்வதேச வல்லரசுகள் திடம் கொண்டுள்ளன.
அதேவேளை, மத்திய கிழக்கு அரபு நாடுகள் மத்தியில் இருக்கக்கூடிய இஸ்ரேல், தனது பாதுகாப்பை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்குவதிலும் சமூக பொருளாதரத்தில் மேம்பட்ட நிலையை அடையாத வகையில் வைத்திருப்பதன் ஊடாக, பலவீனப்படுத்துவதில் பல்வேறு பொறி முறைகளை கையாளுகிறது.
அதற்கு நல்ல உதாரணமாக சிரியாவில் இடம் பெறும் யுத்தத்தை எடுத்து கொள்ளலாம்
சிரிய பிரச்சினையில் பல்வேறு தரப்புகளுக்குமான உதவிகள் சர்வதேச அளவில் பல்வேறு வல்லரசுகளிடம் இருந்தும் பெறப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் நேரடியாக அல்லாது மறைமுகமாக முகவர்கள் ஊடாக யாரிடம் இருந்து யாருக்கு செல்கிறது என்பது வெளியே தெரியாத வகையில் முகவரிகள் தவறாது போராட்ட தரப்புகளுக்கு வந்து சேர்கிறது.
இதனாலேயே சிரிய யுத்தத்தை இது ஒரு முகவர் யுத்தம் Proxey War என்ற சொற்பதங்களுடாக மேலைத்தேய பத்திரிகைகள் அழைக்கின்றன.
சிரிய அரசுக்கு எதிராக போராடும் விடுதலைப் போராளிகளுக்கு துருக்கி ஊடாக சவுதி அரேபியா உதவுகிறது. சுண்ணத்து இஸ்லாமிய மதப்பிரிவை உள்ளடக்கிய இந்த போராளிகளுக்கு வோகாபிஸ் என்று அழைக்க கூடிய சவுதி அரேபியாவின் ஆளும் பழைமைவாத முதலாளித்துவ அரச வர்க்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன,
அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் அரச படைகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய வர்களுக்கு ஈரானும் உதவுகின்றன. சியா இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த ஈரானிய தலைமை மிகப் பெரும் தொகை ஆயுத மற்றும் உணவு உதவிகளை செய்து வருகிறது.
அதேவேளை ஈராக்கிய யுத்தத்தின் போது தமது தாயக பிராந்தியத்தை அந்த பகுதியில் தக்க வைத்து கொண்டுள்ள குர்திஷ் இன போராளிகள் சிரிய தேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமது ஒருபகுதி தாயகப் பிரதேசத்தை மீட்கும் பொருட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய உதவி கிடைக்கிறது.
2014 ஆம் ஆண்டு வரை உக்கிரமாக நடந்த போர் நடவடிக்கைகள் அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சி ஏற்புடன் அமெரிக்க செயல்பாடுகளில் தொய்வு கண்டது . இந்த நிலையில் ரஷ்ய கூட்டுடன் சிரியா அரச படைகள் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக கடுமையான தாக்கதல்களை நடத்தி திரும்பவும் தமது இழந்த பிரதேசங்களை மீட்டு எடுத்து கொண்டன.
ஐஎஸ் ஐஎஸ் உருவாக்கம்
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிரியாவுக்கு எதிராக போராட்ட குழுக்களுடன் இணைந்து போரிட்ட சுண்ணத்து இஸ்லாமிய பகுதியான அல் குவைதா அமைப்பிலிருந்த ஒரு சிலரால் இராக்கிய சிரிய இஸ்லாமிய அரசு என்ற ஐஎஸ் ஐஎஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஈராக்கிய யுத்தத்தின் போதே ஐஎஸ் ஐஎஸ் தோற்றம் பெற்று விட்டபோதிலும், தமது உக்கிரமான நடவடிக்கைகளை சிரியாவிலேயே ஆரம்பித்தனர். இந்த அமைப்பு சவுதி அரேபிய, அமெரிக்க, இஸ்ரேலிய நேரடி மற்றும் மறைமுக உந்துதல்களின் அடிப்படையிலேயே உருவாகியது.
மத்திய கிழக்கு குறித்த மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரின் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் , ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு சவுதி அரேபிய ஆட்சிப்பீடத்தில் உள்ள வொகாபிஸ் களின் உதவியிலேயே இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச ரீதியாக மிகவும் செல்வாக்கு பெற்றதாகும். அத்துடன் பல்வேறு கிளை அமைப்புகளை தனது வலைஅமைப்பினுள் கொண்டதாகவும் ஐஎஸ் ஐஎஸ் உள்ளது.
கடந்த காலங்களில் மேலைத்தேய அவுஸ்திரேலிய நாடுகளில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு உரிமை கோரியதன் மூலம், உலக மக்கள் மத்தியிலே இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்பை உருவாக்குவதே இந்த அமைப்பின் பெரும் வெற்றியாக மேலை நாடுகளில் உணர்ந்து கொள்ளப்படுகிறது.
வெறுப்புருவாக்கம்
சிரிய யுத்தத்தில் சியா இஸ்லாத்தை தழுவும் ஈரானும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவும் சவுதி அரேபியாவும் மிக கடுமையான முகவர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை , மத்திய கிழக்கு நாடுகளில் உறுதியான அரசியல் கட்டமைப்புகள் கொண்ட ஈராக்,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளை சிதைத்துவிட்ட இஸ்ரேலிய மேலைத்தேய கூட்டு சதியானது தற்போது ஈரானின் உறுதியான அரசியல் கட்டமைப்பை உடைத்து தமது பாதுகாப்பை உறுதி செய்வதில் கருத்தாக இருக்கின்றன.
ஈரான் மீது தமது தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடும் வகையில் இஸ்லாத்தின் மீது வெறுப்புருவாக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மறைமுக வொகாபிஸ் ஆட்சியாளர்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.
அதேவேளை 2011 இல் அரபு இலைதுளிர் கால போராட்டங்களால் இவர்கள் மிகதாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனலாம். சனநாயகத்தின் பெயரால் தமது ஆட்சி அதிகாரத்தை இழக்க சவுதி மன்னர் ஆட்சி என்றும் தயாராக இல்லை.
மேலும் பல அரசியல் கொலைகளில் இருந்து அரச குடும்பத்தினர் மேலைத்தேயத்தால் காப்பாற்றப் பட்டு உள்ளனர். இதனால் மேலைத்தேய இஸ்ரேலிய பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து போக வேண்டிய தேவையும் வொகாபிஸ் அட்சியாளர்களுக்கு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிக ஆரம்பத்தில் ஈராக் மீதான படை எடுப்பு நிகழ்த்தும் பொருட்டு அன்றைய அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பல்வேறு நாடுகளையும் சம்மதிக்க வைப்பதில் பெரும் பாடுபட்டார். அதிபர் சதாம் குசைனிடம் மனித இனத்தை அழித்துவிட கூடிய இராசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டது. இறுதியாக பிரான்ஸ் ரஷ்யா சீன நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே ஈராக் மீது படைஎடுப்பு நிகழ்த்தப்பட்டது.
ஈராக்கில் இன்று மேற்கத்தேய ஆதரவு அரசு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் அதன் இராணுவ, அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு வலு குறைக்கப்பட்டு உள்ளது . இருந்த போதிலும் ஈரானின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீதான ஒரு நடவடிக்கை நிகழ்த்துவது குறித்து தீவிரமான அடித்தள முயற்சிகள் தற்போழுது ஆரம்பமாகி உள்ளது. கடந்த கால குண்டு வெடிப்புகள் அனைத்தும் இதந்கு அமைவாக உருவாக்கப்படும் இஸ்லாமிய வெறுப்புருவாக்கத்தின் அடிப்படைகளே எனலாம்.

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும் மதம், அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையை பெற்று கொண்டுள்ளது. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய பொதுவான பண்புகளை முதலில் கருத்தில் கொள்வது நல்லது.
முதலாவதாக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தை தம்மகத்தே கொண்டனவாக காண்பித்து கொண்டுள்ளன. பெரும்பான்மை ஜனநாயகம் என்றதன் பெயரில், அந்நாடுகளில் சனத்தொகையில் அதிகம் கொண்ட மதம் அல்லது மொழி ஆட்சியில் அதிகாரம் செலுத்துகின்றது. மேலும் தேசியவாதம் என்பது அதிகாரம் செலுத்தும் மதமும் அது சார்ந்த மொழியையும் முதன்மைப்படுத்தவதாக உள்ளது.
இரண்டாவதாக, அவை அனைத்தும் மதத்தையே அடிப்படையாக வைத்து பெரும்பான்மை அரசியல் நடத்தி வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தள நிலையில் உள்ள மக்களை, பெரும்பான்மையாக தம்மகத்தே கொண்டுள்ளன. கல்வி அறிவு விகிதம் குறைந்த மக்கட் தொகை அதிகம் காணப்படுகிறது
மூன்றாவதாக, இந்த நாடுகள் அனைத்தும் பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் , சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் மதக்கூறுகளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது
இத்தகைய நிலைமையினால், சமூகப் பிரிவினைகளை கொண்ட நாடுகளாக இந்த நாடுகள் உள்ளன. சமூகப் பிரிவினைகள் உள்நாட்டு நிர்வாகத்தில் அரசியல் அமைதி இன்மையை உருவாக்குகின்றது அல்லது இலகுவாக சமூக சீர் கேடுகளை உருவாக்க கூடிய நிலை உள்ளது.
மோசமான, அரசியல் சமூக உறுதியற்ற தெற்காசிய நாடுகளை தமது பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்றாற்போல், வல்லரசு நாடுகள் உபயோகப்படுத்த முனைகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளை எவ்வாறு தமது முகவர் யுத்தத்துக்கு தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனவோ, அதேபோல தெற்காசிய நாடுகளையும் தமது பொருளாதார இராணுவ நலன்களுக்கு ஏற்ற வகையில் வல்லரசுகள் அவற்றின் உள்நாட்டு பிரிவினைகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.
இதனை மேலைத்தேய இராஜதந்திர நகர்வுகளில் internal mechanism என்ற கவர்ச்சி மிக்க சொற் தொடர் கொண்டு உள்ளக பொறி முறையை கையாளும் வகையை குறிப்பிடுகின்றனர். இதில் மிதமான பாதையாயின், எதிர் கட்சிகளை தூண்டி விடுதல், கடினமான பாதையாயின் மதங்களிடையே கலவரங்களை உருவாக்கும் வகையில், முகவர்கள் மூலம் குண்டு தாக்குதல்களை நடத்துதல் என அனைத்தும் அடங்கும்.
இந்த வகையில் தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமது முன்னேற்றம் என்பதன் பெயரில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வதிலும், அமெரிக்காவுடன் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் ஊடாகவும், தமது சுதந்திர அரசியலையும் இறையாண்மையையும் பறி கொடுத்தனவாக உள்ளன. இந்த வரிசையில் அடங்கக்கூடிய தெற்காசிய நாடுகளில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.
மதம்பிடித்துள்ள இந்தியா
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து இந்து அடிப்படைவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும், தேசிய தன்எழுச்சி தொண்டர்கள் அமைப்பு (Rashtriya Swamyam Sevak Sangh) தனது சித்தாந்தத்தை வெகு வேகமாக நிலைநிறுத்துவதில் கவனமாக உள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்து அடிப்படைவாதம் அரச நிர்வாகப் பிரிவுகளுக்குள் இரகசிய, அத்துமீறிய ஆக்கிரமிப்பகளை செய்து வருகிண்ற போதிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வின் வெற்றி இந்து அடிப்படைவாதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது
இது வரை காலமும் குற்றச்செயல்களாக கருதப்பட்ட இதர மதநம்பிக்கைகளை தவறாக தூற்றுதல், மதிப்பளிக்காது விடுதல் போன்ற செயற்பாடுகள், தற்போது ஏற்று கொள்ளத்தக்கதாக அல்லது அரச சேவையாளர்களால் கூட உதாசீனம் செய்யப்படுவதாக உள்ளது.
இத்தகைய இதர மதங்கள் மீதான வெறுப்பு குறிப்பாக, வட இந்திய சமூகங்களால் அதிகம் மேற்கொள்ளப்படுவதாக நியூயோக்கர் என்ற அமெரிக்க சஞ்சிகை கூறுகிறது.
இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம் சமய சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் பெரும் இடையுறுகளை விளைவிப்பதாக உள்ளது. உதாரணமாக இந்து சாதீய அமைப்பிலிருந்து தப்பும் பொருட்டு, பல இந்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், மதம் மாறும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் இந்த நிலைக்கு எதிராக பல மாநில அரசுகள் மதமாற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவிக்கிறது.
மேலும் பஜ்ஜிரங் தள் எனப்படும் இந்து அதீத வலது சாரி அமைப்பு பல மத கலவரங்களை நடத்தி வருவதாகவும் அத்துடன் பாதிரியார் ஒருவர் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒருவரை மதமாற்றம் செய்தார் என்று அவரை மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி, நகர் வலம் வந்ததாகவும் அந்த சஞ்சிகை கட்டுரை வரைந்துள்ளது.
கடந்த வருடம் மகாராஷ்டிராவில் சிறு நகரமான குர்கான் எனும் இடத்தில் இந்து தேசியவாத குழுக்கள் பொது இடங்களில் தொழுகைகள் நடத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்ற மிரட்டியதுடன் அவ்வாறு தொழுகை நடத்த முற்பட்டவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டல் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது.
இது போல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதீயர்களுக்கும் எதிராக பரவலாக கடுமையான தாக்குதல்கள், வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகள், பல மேலைத்தேய பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களில் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன.
அண்மையில் வெளிவந்த Financial Times Weekend இணைப்பு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில, மோடி அவர்களின் ஆட்சியில் இந்து தேசிய வாதம் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல் குறித்து அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு அதற்கான கற்சிற்பங்களும் தூண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிக விரைவாக பொருத்தி அடுக்கப்பட கூடிய வகையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் மூலம் அரசியல் வெற்றிக்காக மதசித்தாந்த கருத்துகளை உள்நாட்டில் உபயோகப்படுத்தும் பாஜக அரசாங்கம், வெளியுறவு கொள்கையிலும் கூட சர்வதேசத்தில் அதீத வலதுசாரி தேசியவாத அரசுகளுடனும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த நிலையை தூண்டும் அரசுகளுடனும் அதிக உறவு நிலையையும் பேணும் போக்கையும் காணக்கூடியதாக உள்ளது.
சுவர்க்கத்தில் நடந்தது
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4அம் திகதி இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதுவே முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்ற சந்தர்ப்பமாகும். முன்று நாள் பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற இருதரப்பு தலைவர்களதும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர், ”இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான திருமணம் சுவர்க்கத்தில் நடந்தது. அதனை இவ்வுலகில் நடைமுறை படுத்துகிறோம்” என்று களிப்புடன் கூறி இருந்தார்.
வலது சாரி தேசியவாதகொள்கை கொண்ட இரு தலைவர்களுக்கும் இடையில் பெருமெடுப்பிலான ஒற்றுமைகள் உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புவாத கொள்கை . பொதுவாக பயங்கரவாத எதிர்ப்பு என்ற வார்த்தையை தமது முக்கிய ஆயுதமாக கொண்டு செயற்படக் கூடிய தன்மை ஆகியன இஸ்ரேலிய இந்திய உறவை என்றும் இல்லாத வகையில் நம்பிக்கைக்குரியதாக உருவாக்கி உள்ளது.
கடந்த கால இந்திய அரசாங்கங்கள் பாலஸ்தீனத்தில் ஒரு அரசு நிறுவுவதற்கு தமது ஆதரவுகளை கொடுத்திருந்தனர். இதுகுறித்து பாராளுமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மோடி அவர்களின் 2017 இஸ்ரேலிய பயணத்தின் போது, அவர் ஜெருசலேமில் இருந்த போதிலும் ஒரு நடுவு நிலைமையை காட்டும் பொருட்டாவது, பலஸ்தீன தலைமையை சந்திக்காது திரும்பியது அவரது இஸ்ரேலிய சார்பு கொள்கையை மிகவும் தெளிவாக காட்டியது.
அதேவேளை இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாட தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்தியாவின் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் பிரதமர் மோடி அவர்களால், 4 பில்லியன் டொலர் வரையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாஅதிகமாக இறக்குமதி செய்யும் ஆயுத தளவாடங்களில், ரஷ்யாவுக்கு அடுத்தாக தற்பொழுது இஸ்ரேலிய உற்பத்திகள் ஆகும்.
சுவர்க்கத்தில் இடம் பெற்ற திருமணம் என்ற இஸ்ரேலிய பிரதமரின் வார்த்தைகளின் இந்தியாவிற்கான ஆயுத வழங்கல் உடன்படிக்கைகளின் அடிப்படையிலிருந்தே வருகிறது என்பது இப்பொழுது தெளிவாகிறது.
மசகு எண்ணையில் மதம்
இதேபோல பிரதமர் மோடி அவர்களின் சவுதி அரேபியாவுடனான உறவும் மிகவும் நெருக்கமானதாக எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளியுறவு கொள்கை ஈரானுடனான உறவை முறித்து கொள்ளுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இந்த கட்டுரை எழுதி கொண்டு இருக்கும் பொழுது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜாவீட் சரீப் அவர்கள் புது டில்லியில் பேச்சுவார்த்தைகளுக்காக வந்திருந்தார்
ஏற்கனவே இந்த கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ , ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணையை நிறுத்தி கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசகு எண்ணை இறக்குமதி நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எனப்படும் IOC தனது வருடாந்த இறக்குமதி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கமாட்டாது என அறிவித்துள்ளது.
அதேவேளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு பதிலாக இவ்வருடம் ஜூலை மாதம் முதல் ஒரு நாளுக்கு 2மில்லியன் மசகு எண்ணெயை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு IOC உடன்பட்டிருக்கிறது.
ஆக, இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக செயலாற்றவதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவின் இந்த நகர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சவுதி இளவரசர், அண்மைய இந்திய பயணத்தின் போது இந்தியாவில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கைத்தொழிலில் முதன்மை வகிக்கும் Reliance Industries எனும் நிறுவனத்துடன் இணைந்து அந்த கைதொழிலில் 25 சதவீத நிதி முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி கைத்தொழிலாக கருதப்படும் இந்தியாவில் உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரம் குறிப்பாக Reliance Industries அம்பானி சகோதர்களுக்கு சொந்தமானதாகும். பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாகிய அம்பானிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சகபாடிகள் என இந்திய பத்திரிகைகள் பல தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.
வெறும் வியாபார ஒப்பந்தங்களிலே மதம் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுமானால் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானை தமது எதிரியாக பார்க்கின்றன. இந்த இரு நாடுகளுமே தமக்கிடையிலான மத பிரிவினைகளை ஒருபுறம் வைத்து விட்டு, சியா இஸ்லாமிய ஈரானை அமெரிக்க துணை கொண்டு தாக்கி விடுவதற்கு முனைகின்றன.
இதற்கு ஏற்றவகையில் பிராந்திய நாடுகளை தமக்கு சார்பாக மாற்றும் பொருட்டு நிதி முதலீடுகள் ஆயுத விற்பனைகள் மட்டுமல்லாது மேலைத்தேயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச விதி முறைகள் என பல்வேறு காரணிகளையும் சமயோசிதமாக பயன்படுத்தி வருகின்றன.
அதேவேளை தலைமை பிராந்திய நாடுகளின் கீழ் இருக்கக் கூடிய நாடுகளில் தமக்கு சாதகமான யுத்த சூழலை உருவாக்கும் பொருட்டும் சமூக மனமாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் குண்டு வெடிப்புகள் யுத்தக் கப்பல்களின் வரவுகள் என பதற்ற சூழலை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்துகின்றன.
ஆனால் இந்த நாற்றாண்டின் ஆரம்பத்தில் ஈராக் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தன் பலனாக, மேலைத்தேயம் சந்தித்த பொருளாதார முடக்கம் அதே காலப்பகுதியில் சீனாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் இராசதந்திர நகர்வுகள் இடம் பெறுகின்றன.
இவ்வார economist சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல “சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டு மூன்று பத்தாண்டுகளின் பின் ஒற்றை மைய உலகு என்னும் நிலை இன்று முடிவு கண்டிருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் யார், “நம்பர் வண்“ என்று பெயர் எடுப்பதில் திடகாத்திரமாக பரவலான போட்டியில் உள்ளன.
வர்த்தகத்தின் மூலம் உறவு வலுப்பெறும் என்று இருந்த நிலை மாறி வர்த்தகமே போராகி விட்டது. வல்லரசுப் போட்டிகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நிலைமை நிலவுகிற போதிலும் இருதரப்பும் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடுகளிலேயே உள்ளன” என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தை முடித்திருக்கின்றது
இருந்த போதிலும் அமெரிக்கா இன்னமும் முழுமையான யுத்தம் ஒன்றிற்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு பல்வேறு உள்ளக வெளியக காரணிகள் உள்ளன. ஆனால் சந்தர்பங்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குவதும், நிகழ்வுகளுக்காக சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமே ஏகாதியத்திய சிந்தனையாளர்களின் அடிப்படை நோக்கமாகும்.

பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.
இந்த வியூகத்தை மையமாக கொண்டு இரு பிராந்தியங்களிலும் மதம் உள்நாட்டு சமூக பிரிவுகள் மத்தியில் எழுச்சி ஊட்டும் உபாயமாக ஆங்காங்கே தேசங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்தப்படுகிறது
சமூகங்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத வேறுபாடுகளை ஏகாதியத்திய சிந்தனையாளர்கள் கையாளுகின்றனர். தமது பாதுகாப்பான இருப்பை மையமாக கொண்டு, சர்வதேச வல்லரசுகள் ஏகாதியத்திய பிராந்திய கூட்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு, மத அடிப்படையிலான வேற்றுமை மற்றும் எழுச்சி ஊட்டலுக்கு துணை போகின்றன.
அதிலும் பல்வேறு படிகள் மேலாக அதீத பலன்களை அடையும் முகமாக பல தசாப்தங்களுக்கு மத வேற்றுமையை வளர்த்தலில் வியூகம் அமைத்து செயலாற்றுகின்றன.
மேலும் யுத்தநோக்கு கொண்ட நகர்வுகளை செய்வதன் ஊடாக சர்வதேச வல்லரசுகள் ஆயுத வியாபார பொருளாதாரத்தை வளம் பெற வைத்தல், எதிர் பிராந்திய கூட்டுகளை யுத்த செலவீனத்திற்குள் உள்ளாக்குவதன் மூலம் எதிர்தரப்பின் பொருளாதார வளத்தை சிதைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாம் இயற்றிய சர்வதேச சட்ட திட்டங்களையே மீறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன
இந்த வல்லரசுகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பிராந்திய வல்லரசுகள் தமது பிராந்தியத்தில் நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாது முகவர்களுடாக தமது நோக்கங்களை அடைவதில் ஆர்வமாக உள்ளன என்பது குறித்தும் கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம் .
இவ்வாரம் வெளிவந்திருக்கும் கட்டுரையில் பிராந்திய நகர்வுகள் எவ்வாறு கோட்பாடு ரீதியாக ஒருமித்த தன்மையை கொண்டிருக்கின்றன என்று பார்ப்பதன் மூலம் சர்வதேச நிகழ்வுகளாக நடக்கும் பல்வேறு விடயங்களும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்கின்றன என்பதை காண முடியும்
இந்த ஒருமித்த தன்மையை காணும் விடயத்தில் பல தனிமங்கள் ( இவை அமைப்புகளாகவோ அல்லது தேசிய இனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ இருக்கலாம் ) நேரடி முகவர்களாக தென்படாது போனாலும் அவர்கள் பல இடங்களில் சித்தாந்த முகவர்களாக செயலாற்றும் தன்மையையும் காணலாம் .
பிராந்திய கோட்பாடு
ஒரு அரசு அதிக ஆதிக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் கொண்டிருக்கும் பொழுது, சிறிய வலு குறைந்த நாடுகள் தமது இருப்பில் அதிக கவனம் செலுத்தும் மனோ நிலையை பெறுகின்றன. அந்த சிறிய நாடுகளுக்கு பாதுகாப்பு இன்மை குறித்த எண்ணக்கருத்தின் ஆரம்ப பொருளாக அதிக ஆதிக்கத்தை கொண்ட நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன.
சமச்சீரற்ற தோற்றப்பாடு குறிப்பாக மூலோபாய நிலைகளாயினும் ,இராணுவ பாதுகாப்பு வளங்களாயினும் பொருளாதார வலு எனஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்த காரணியாயினும் இந்த பாதுகாப்பு அற்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
தெற்காசிய பிராந்தியத்தின் பிரதான இந்திய நாட்டிற்கும் அதனை அயல் நாடாக கொண்ட பாகிஸ்தான், பங்களாதேசம்,சிறிலங்கா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு அசெளகரீயங்களை உள்ளூர உணர்ந்து வரும் நிலையும் அரசியல் பதட்ட நிலையும் எப்பொழுதும் இருந்து வருகிறது.
இந்த பதட்ட நிலை மறுவளமாகவும் செயற்பட வல்லது. அதாவது சிறிய நாடுகளில் ஏற்படக் கூடிய உள்ளுர் அரசியல் மாற்றங்களும் பெரிய அயல் நாடான இந்திய பாதுகாப்பு செளகரீய உணர்வுக்கு ஏற்றதல்ல.
உதாரணமாக சிறிலங்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு அதே காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய தேர்தல் களத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இஸ்லாமிய அபாயம் நெருங்கி வருவதாக பிரச்சாரம் செய்வதற்கு பெரும் வாய்ப்பளித்தது.
அதேபோல பாகிஸ்தானிய அரசியல் பொருளாதார மாற்றம் துல்லியமான வகையில் உடனடியாக இந்தியாவில் நிலவர மாற்றத்தை காட்ட வல்லது. இதற்கு நல்ல உதாரணமாக சீன -பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை ஒப்பந்தமும் அதில் இந்தியா கொண்டுள்ள ஐயப்பாடுகள் குறித்தும் எழுந்துள்ள பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
அராபிய பார்சிய இன மக்களை அதிகம் கொண்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாத்தை தனது தேசிய மதமாக கொண்டுள்ளது. 82 சத வீத சுண்ணத்து இஸ்லாமியரையும், 11.8 சதவிகிதம் சியா இஸ்லாத்தையும் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு நிகழ்ந்து வந்தது.
இரு நாடுகளும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவுபவர்களாக இருப்பதால், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அதிக உறவு கொண்டாடி வந்தனர்.
இரண்டு வரலாற்று ரீதியான நிகழ்வுகள் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக நெருக்கத்தை உருவாக்கின. முதலாவது 1979 ஆம் ஆண்டு நடை பெற்ற ஈரானிய புரட்சி. ஈரானில் சியா இஸ்லாமியர்களின் எழுச்சி சுண்ணத்து இஸ்லாமிய பாகிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வைத்தது.
இரண்டாவதாக அதே ஆண்டு இடம் பெற்ற ஆப்கனிஸ்தான் மீதான சோவியத் படைகளின் நகர்வு பாகிஸ்தானிய இஸ்லாத்தை காப்பாற்றும், பொருட்டு மதராசா பள்ளி கூடங்கள் ஊடாக சவுதி அரேபியா பொருளாதார வசதிகள் செய்து கொடுத்தது.
2015இல் யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா படை எடுத்த போது, ஈரானிய சார்பு கவுட்டி படைகளுக்கும் சவுதி அரேபிய படைகளுக்கும் இடையில் பாகிஸ்தான் நடு நிலைமை வகித்தது. ஆனால் பின்பு சவுதி அரேபியாவின் அழைப்பிற்கு ஏற்ப பாகிஸ்தானிய இராணுவத்தை நேரடி யுத்தம் அல்லாத பகுதிகளில் சவுதி அரேபிய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் வகையில் யுத்தப் பகுதிகள் அல்லாத பிரதேசங்களில் பணியாற்ற படைகளை அனுப்புவதற்கு ஒப்பு கொண்டது
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கும் வந்திருந்த சவுதி இளவரசர் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருதரப்பு இணக்க உடன் படிக்க செய்து கொண்டதிலிருந்து பாகிஸ்தானிய சவுதி உறவுகள் மேலும் வலுப்பெற்று உள்ளது.
தாக்குதலும் சவுதி இளவரசரும்
காலாகாலம் சவுதி அரேபியாவினால் வழங்கப்படும் தாராள பொருளாதார உதவிகள் சவுதி ஆளும் வர்க்க வொகாபிஸ்களுடன் இணைந்து செல்லக்கூடிய தூய இஸ்லாமியம் என்ற பெயரிலான- ஈரானியர்களுக்கு எதிரான வகையில் கட்டுக்குள் வைத்து கொள்ளக் கூடிய வகையிலான- ஒரு நிலையை சவுதி அரேபியாவினால் பாகிஸ்தானில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்திய தேர்தலுக்கு சற்று முன்பாக இடம் பெற்ற புல்வாமா தாக்குதல்களும் அதனை இந்திய- பாகிஸ்தானிய -சவுதி அரேபிய கூட்டு எவ்வாறு செயல்படுத்தியது என்பதை காணலாம் .
புல்வாமா தாக்குதலும், அதிலே இறந்த இந்திய இராணுவத்தினரும் அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் பாகிஸ்தானிய எல்லையை மீறி சென்று நடத்திய தாக்குதல்களும் இந்திய தேர்தலை மையமாக கொண்டு இடம் பெற்றவையே என்பது இங்கே வெளிச்சமாகிறது.
ஏற்கனவே திட்டமிட்டபடி சவுதி இளவரசர் இந்திய – பாகிஸ்தானிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத் திட்டத்திற்க ஏற்ப தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது மட்டுமல்லாது. இதன் பலனாக நீண்ட கள மோதல் ஒன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம் பெறாது பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
சவுதி இளவரசர் இந்திய வருகை இந்த திட்டத்தை சமநிலைபடுத்தியது. இதிலே சுவுதி அரேபியாவின் பங்களிப்பு எந்த அளவு என்பது சரியாக குறிப்பிட முடியாது போனாலும் அனைத்து நிகழ்வு களும் காலம் தவறாது இடம் பெற்றன என்பது மட்டும் உண்மை.
அத்துடன் இந்திய மக்கள் மத்தியில் மோடி அவர்கள் ஒரு பாதுகாவலன் என்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் பொருட்டு தான் இந்த தாக்குதல் இடம் பெற்றது என்பதுவும் வெளிவருகிறது.
பணமும் குற்றவாளிகளும்
900 மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றிய அண்மைய இந்திய தேர்தல் உலகிலேயே மிகவும் அதிக செலவீனம் கொண்ட தேர்தல் என புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கக் கூடிய தகவல் தொடர்பு கற்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே 60 000 கோடி இந்திய ரூபா செலவிடப் பட்டிருக்கிறது. இது சுமார் 8.7பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையானது என்பது மட்டுமல்லாது, 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தல் செலவீனங்ளிலும் பார்க்க இது இரண்டு மடங்க அதிகமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .
இப்பொழுது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மகத்தான வெற்றி இந்துத்துவா என்று ஆங்கிலத்தில் அழைக்க கூடிய இந்து அடிப்படைவாத கோட்பாட்டிற்கு புதிய ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இங்கே ஒட்டு மொத்தமாக 539 பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்ட்டனர். இவர்களில் 233 பேர் மீது கற்பழிப்பு, கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்ற சாட்டுகள் உள்ளதாக சனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது அரைவாசி பேர் குற்ற விசாரணைக்குட்பட்டவர்களாகவோ அல்லது சட்டத்தை ஏய்த்தவர்களாகவோ உள்ளனர் என்பது அந்த நிறுவனத்தின் அறிக்கையாகும். இதிலே பாஜக வை சேர்ந்தவர்கள் 116 பேர் எனவும் தெரிவு செய்யப்பட்ட 54 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து முக்கியமான துறைகளான பொருளாதாரம் வெளியுறவு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை தெரிந்து எடுக்க முடியாமல் இருவரையும் தமிழ் நாட்டிலிருந்து தெரிவு செய்திருப்பதுவும் யதார்த்தம் தான்.
இருப்பினும் தெற்காசிய பிரந்திய நாடுகள் மத்தியில் மத உணர்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் தன்மை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டிலும் மிக அதிகமாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
அடுத்த கட்டுரையில் எவ்வாறு இந்திய -இலங்கை நாடுகளுக்கு இடையிலான பௌத்த உறவு அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்தது. சிறிலங்காவின் பௌத்தம் தனது இருப்பை அந்த தீவில் உத்தரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு எந்த வகையிலும் நிறம் மாறி கொள்ளும் போக்கு கொண்டது என்பதையும் முன்பு என்றும் இல்லாதவாறு பௌத்த சிங்களம் எவ்வாறு தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

No comments:

Post a Comment