Monday 29 July 2019

கிரேக்க வரலாற்று அனுபவம்: துண்டுபட்டதால் தோல்வியும் ஒன்றுபட்டதால் வெற்றியும்

முள்ளிவாய்க்கால் பேரழிவினதும் பெரும் துயரத்தினதும் பின்னான கடந்த 10 ஆண்டுகளாய்     தமிழ் மக்களின் விடிவுக்குப் பொருத்தமான ஒரு புதிய பாதையை,  ஒரு புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க இயலாமலும்  அதற்னா ஆளுமையையோ,  வல்லமையையோ இதுவரை நிரூபிக்கவும் முடியாதிருக்கும் மாற்று அரசியல் தலைமை பற்றிப் பேசும்   தலைவர்களும் தொடரும் தோல்விகளுக்கும் சீரழிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள்  ஆவர்.  



பண்டைய உலகில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு சிறிய காலம். ஆனால் நவீன உலகில் ,  அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு பத்தாண்டு என்பது ஒரு சிறிய காலமல்ல.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு , வீழ்ச்சியிலிருந்து   எழுச்சிக்கு, அழிவிலிருந்து ஆக்கத்திற்குப் போவதற்கான  பாதையையும் தலைமையையும் உருவாக்க மிகப் பெரும் சிந்தனை ஆற்றல் , மிகப் பெரும் ஆளுமைத்திறன், மிகப்  பெரும் ஆக்கத்திறன் , மிகப் பரந்த அரவணைக்கும் இயல்பு, சீரிய பண்பாட்டு முன்னெடுப்க்கள்  என்பனவற்றுடன் கூடிய    சமூக முன்னோடிகள் வேண்டும். இத்தகைய வல்லமை கொண்டவர்கள் ஒரு சமூகத்தில் இருந்து எழவில்லை என்றால் அந்தச் சமூகத்திடம்   அதற்கான வல்லமை பஞ்சப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

பாரசீகப் பேரரசின் மிகப் பெரும் படையெடுப்பிலிருந்தும்  மிகப் பெரும்  இராணுவத் தோல்வியிலிருந்தும் மீண்டெழுந்து ,  வெற்றி வாகை சூடி, விடுதலை அடைந்ததற்கு மிகச் சிறந்த பண்டைய வரலாற்று உதாரணம் கிரேக்கம்.   20ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரலாறு காணாத பாரிய  இனப் படுகொலைக்கும் பேரழிவுக்கும் உள்ளாகி,  அதிலிருந்து  மீண்டெழுந்து  விடுதலை பெற்றமைக்கு  சிறந்த நவீன வரலாற்று உதாரணம் யூதர்களின் இஸ்ரேலிய அரசு அமைக்கப்பட்டமை.  இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு பாரிய இன அழிப்பில் இருந்து மீண்டெழுந்து விடுதலை அடைய முடியாமல் போனதற்கு உதாரணமாக பியஃப்பிரா போராட்டம் அமைந்துள்ளது.  21 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியில் பெரும் தோல்வியிலும் பேரழிவிலுமிருந்து மீண்டெழ முடியாது தோல்வியை உறுதிப்படுத்தி , மேலும் இன அழிப்பை நோக்கிய அரசியற் பயணத்தை அரைவழிக்கு மேல்  கடந்துள்ள  போராட்டத்திற்கு உதாரணமாய் ஈழத் தமிழர் போராட்டம்  காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஈழப் போராட்டம் இறுதிக் கட்டத்தில் , அதுவும் இறுதி வாய்ப்பை மட்டும் கொண்டு காணப்படுகிறது. அதனையும் பயன்படுத்தத் தவறினால்  விடுதலை தாயின் புதைகுழியில்  இறுதிப் பிடிமண் போட்டவர்களாய்  இன்றைய தலைவர்களும் ,  இன்றைய அறிஞர்களும்,  இன்றைய  தலைமுறையினரும் ஆளாக  வேண்டிய துர்ப்பாக்கியம்   நேரும். 

வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வோம். அடிமைப்பட்ட  கிரேக்கம் எப்படித் தன்னைத் திறமையாக வடிவமைத்து  விடுதலையைச்  சாத்தியமாக்கியது என்பதைப்  பார்ப்போம்.

பாரசீகப்  பேரரசன்  ஸெர்ஸீஸ் (Xerxes)   கிமு 480 ஆம் ஆண்டு 2 லட்சம் படையினருடன் கிரேக்கம் நோக்கி மாபெரும் படையெடுப்பை  மேற்கொண்டார். அது  வரையான  உலக வரலாற்றில் இதுவே மிகப் பெரும் முதலாவது   பெரிய  படையெடுப்பாகும்.

கிமு  5 ஆம்  நூற்றாண்டில்  1000 வரையிலான சிறிய சிறிய கிரேக்க நகர அரசுகள் காணப்பட்டன.  இவற்றில் 10 வரையிலான நகர அரசுகளே மொத்தம்  6000  முதல் 7000  வரையிலான படையினருடன்  பாரசீகப் பெரும் படையை  எதிர்த்துப் போராடத்  தயாராகின.  ஏனைய அரசுகள் தங்களுக்குள் முரண்பட்டும் குழம்பியும் பின்வாங்கிக் கொண்டன.

    ""சிங்கத்தின்  மைந்தன்"" என்று அழைக்கப்பட்ட   ஸ்பார்ட்டா  மன்னன் லியோனிடாஸ்  (Leonidas)  குறி சொல்லும் பெண்ணை அணுகினான்.   அவனோ அல்லது   யாரோ ஒரு கிரேக்க மன்னன் அந்த யுத்தத்தில் கொல்லப்படுவான் என்று   அவள் ஆருடம் சொன்னாள். மிகப் பெரிய பாரசீகப் படையை எதிர்த்துப் போரிட த்  தம்பக்கம் ஒரு சிறிய படையே இருக்கின்ற போதிலும் அப்பெரும் படையை முறியடிக்க ஒரே  ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு   ஆருடத்தையும்  மீறி  அவன் போரிடத் தயாரானான்.

கிரேக்கத்திற்குள் நுழைவதற்குக்  கடக்க வேண்டிய    தேர்மோபிலி (Thermopylae) என்ற இடத்தில் அமைந்துள்ள 15 மீட்டர் அகலமான கணவாயில்  பாரசீகப் பேரரசப்  பெரும் படையை   மறித்துப் போடுவதெனத் தீர்மானித்தான்.



அந்தக் கணவாயில் பாரசீகப்  படையை திணறடித்தால் அவர்கள் அச்சம் கொண்டு பின்வாங்கிச் செல்லக் கூடும் . அல்லது  அந்த  இடத்தில் தாம் மாண்டு மடிந்தால்  ஆயிரம் நகர அரசுகடளும்   வீறுகொண்டெழுந்து  ஒன்று திரண்டு பாரசீகப் பெரும்  படைக்கு  எதிரான போரை தீரத்துடன் முன்னெடுக்கக் கூடும்   என்ற கணிப்புடன் போர்க் களம் புகுந்தான்.

பத்துக்கு    உட்பட்ட அரசுகளின் 7000 க்கு   உட்பட்ட    படையினரைப் பின்னணியாகக் கொண்டு 300 வீரர்களை தேர்ந்தெடுத்து   மேற்படி கணவாயில் வியூகம் அமைத்துப் போராட புறப்பட்டான். 

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு மன்னன் லியோனிடாசை சரணடையுமாறு பாரசீகப் பேரரசன்  ஸெர்ஸீஸ்  தூதனுப்பினான்.   "" [அவற்றை]  வந்தெடு"" --"" Molon labe"" -  Come and take [ them].  என்று லியோனி டாஸ் மிகக் காட்டமாக பதில் அனுப்பினான்.

பாரசீகர்கள் ஆயுத தொழில்நுட்பத்தில்  நன்கு  வளர்ச்சி அடைந்திருந்த காலம் அது.  தொலைவில் நின்று  யுத்தம் புரியவல்ல  அம்பு - வில்லு , ஈட்டி   என்பனவற்றை  தயாரிப்பதில் அவர்கள் பெரிதும் மேலோங்கி இருந்தனர்.   நேருக்கு நேர் முன்னால்  நின்று முகத்துக்கு முகம் போர் புரியும் ஆயுதங்களை உடைய வாள், தலைக்கவசம் , முகக் கவசம் ,மார்புக் கவசம், கேடயம்  என்பவற்றுடன் கூடிய   ஆயுத தொழில்நுட்பத்தில் கிரேக்கர்கள் சிறந்து விளங்கினர். 

கிமு 480 ஓகஸ்ட்  மாதம்   9 ஆம்  திகதி  யுத்தம் வெடித்தது.  வரலாற்றை எழுதும் அறிவியலில்தொன்மையானவரும்  முன்னோடியானவருமான  ஹெரடோட்டஸ்  (Herodotus) தனது வரலாற்று நூலில் பின்வருமாறு பதிந்துள்ளார். தொலைவில் நின்று பாரசிகர்கள் எய்த அம்புகளினாலும்   வீசிய ஈட்டிகளினாலும்   யுத்தகளத்தை நோக்கிய வானமும்   கணவாயும் இருண்டிருந்தன  என்று.  

""சிங்கத்தின் மைந்தன்"" என்று கூறப்படும் மன்னன் லியோனிடாஸின் தலைமையிலான 300 தீரம் மிகுந்த வீரர்களின்  முதல் இரு நாள்கள் களமாடல்களின் போதும் பாரசீகப் படை பெரும் சேதத்துக்கு   உள்ளாக்கித்  திணறிப் போனது.  கதிகலங்கி போய் நின்ற பேரரசன்  ஸெர்ஸீஸுக்கு   அதிர்ஷ்டம் கிடைத்தாற் போல் ஒரு  கிரேக்க காட்டிக்கொடுபாளனின்  தகவல்கள் கைகொடுத்தன. 

எபிஃயல்ரெஸ் ( Ephialtes) என்ற பெயரைக் கொண்ட  மந்தை  மேய்பரான ஒரு   கிரேக்கன் ,  மூன்றாம் நாள் பேரரசன் ஸெர்ஸீஸிடம்  மிகப் பயனுள்ள   தலையாய  இரு  தகவல்களை வழங்குகிறான்.  கணவாயை தவிர்த்து  யுத்த களத்தைப்   பின்னால்  சுற்றி வளைக்கவல்ல   வகையில் ஒரு  மாற்றுப் பாதை   இருப்பதைக் கூறினான்.  அடுத்து கிரேக்க  படையினரின் உண்மையான எண்ணிக்கையும்   அவர்களின்   நிலையெடுப்புகளையும் கூறினான். 

மூன்றாம் நாள்,   பெரும் நம்பிக்கையுடன்  செர்ஸீஸ்   பெரும் படை கொண்டு   மாற்று வழியால் பின்வளமாய் யுத்தகளத்தை சுற்றி வளைத்தான்.  அந்த வேளையில் எதிர்காலம் பற்றிய சரியான தீர்க்கதரிசனத்துடன்  7000  பேர் வரையிலான படையினரை பின்வாங்கி விலகிச் செல்லுமாறு லியோனிடாஸ் கட்டளையிட்டான்.

  கையில்   இருக்கும் படையை  முற்றிலும்  அழியவிட்டால்   ஏனைய நகர அரசுகள் எல்லாம்   அச்சமடைந்து  சரணாகதிக்கு போய்விடும் என்று எண்ணிய நிலையில், படையின் அடிப்படை   இருப்பைப்  பாதுகாத்து அவற்றை உறைமோர் போல பேணி  அவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலும் படைகளை கட்டி வளர்த்து பாரசீகர்களை தோற்கடிக்கலாம் என்று அவன் எண்ணினான்.

குறி சொல்பவள் ஆருடம் கூறியது போல  60 வயதினனான  லியோனிடாஸ் தன்னுடன்  கூடவே 299  மாவீரர்களுடன் மண்ணில் மடிந்தான்.  அவனது தலை  வெட்டப்பட்டுக் காட்சிக்கு  வைக்கப்பட்டது.

பாரசீகப் படை   தன்  முதல் வேலையாக கிரேக்கப் பெண்களை வேட்டையாடுவதிலும்  வளங்களைச்  சூறையாடுவதிலும்  ஆங்காங்கே  தீ வைப்பதிலும் ஈடுபட்டது.

லியோனிடாஸின்  மகன்  ப்ளீஸ்ரார்ஸெஸ் ( Pleistarchus ) முறைப்படி முடி தரித்தான்.  அவன் வயதால் சிறியவனாக காணப்பட்டதால்   லியோனிடான்ஸின் சகோதரர் மகன்    பொசானியஸ் (Pausanius)  இடைக்  காலத்துக்கான பரிபாலன ஆட்சியாளனாய்  நியமிக்கப்பட்டார்.  லியோனிடாஸின்  மனைவியான மகாராணி  கோற்கோ(Gorgo)  ஆட்சி கலையில் திறமை மிக்கவர்.   பொசானியஸ்   ஆற்றல்மிகு  தலைசிறந்த  தரைப்  படைத் தளபதி .

பாரசீகப் பெரும்படையை எதிர்த்து லியோனிடான்ஸ் போர் புரிந்த அந்தக் காலகட்ட சூழலில் தனது அரசுக்கு உள்ளோ,   அண்டை அரசுகளுடனோ ,  மற்றும்  கிரேக்க சூழலுக்குள்ளோ இருக்கக்  கூடிய உறவுகளையும் மற்றும் சூழல்களையும் அவர் காயப்படுத்தவுமில்லை, சேதப்படுத்தவுமில்லை,  சீரழிக்கவுமில்லை.    நல்லுறவை வளர்க்க ஏதுவான இத்தகைய ஒரு  நல்ல சூழலை அவர் தனது முதுசமாக கிரேக்கர்களுக்கு விட்டுச் சென்றார். அத்தகைய சூழலை பயன்படுத்தி அதனை   முது சொத்தாகக் கொண்டு ஒரு காத்திரமான ஐக்கியத்தை உருவாக்கவும் கூட்டுப் படையை கட்டியெழுப்பவும் முடிந்தது.

லியோனிடாஸ் எதிர்பார்த்தவாறு கிரேக்க மக்கள்   மத்தியில்  எழுச்சி ஏற்பட்டது .எப்படியோ அரும்பாடுபட்டு வெற்றிகரமாக 100 அரசுகளை ஒன்றிணைக்க முடிந்தது. இணையும் அரசுகள்  இணையட்டும்  இணைய மறக்கும்  அரசுகளைக் கைவிட்டு  இணையும் அரசுகளை கொண்ட கூட்டுப் படையைப் பலப்படுத்தி பாரசீகர்களை எதிர்கொள்வது என்று  முன்னணித் தலைவர்கள் திடசித்தம் பூண்டனர்.  

கிரேக்க  தரைப் படையின்  கூட்டுத் தலைமைத் தளபதியாக   பொசானியஸ்  நியமிக்கப்பட்டார் . கிரேக்க கூட்டு கடற்படைத் தளபதியாக  ஆற்றல் மிக்கவரான ஏதென்ஸின்  கடற்படைத்  தளபதி    தெமிஸ்ரோக்ளெஸ் (Themistocles) நியமிக்கப்பட்டார். 100 நகர அரசுகளில்  இருந்து 60 ஆயிரம் வரையிலான கடற் படையினரும் 40 ஆயிரத்துக்கு உட்பட்ட  தரைப் படையினரும் திரட்டப்பட்டனர்[ படையினரின் எண்ணிக்கைகள் பொறுத்து  மாறுபட்ட தகவல்கள் உண்டு].

நகர அரசுகள் கடல்சார்  பின்னணியைக் காணப்பட்டமையால் ஏற்கனவே கைவசமிருந்த பயிற்சி பெற்ற நகர அரசுகளின் கடற்படையினர் ஒரு மாதத்துக்குள் ஒன்று திரட்டப்பட்டு சிறப்பான முறையில் ஒரு பலம் பொருந்திய கூட்டுப் படை யாக வடிவமைக்கப்பட்டனர்.  

சலமிஸ் போரில்  ( Battle of Salamis )    பேரரசன் செர்ஸீஸ் தலைமையிலான  1,00,000  வரையிலான கடற்ப் படையினரை  எதிர்த்து   சுமாராக 60,000 கடற்படையினருடன்    தெமிஸ்ரோக்ளெஸ்   செப்டம்பர் மாதம் பெரும் போர் தொடுத்தார்.  தனது 40 கப்பல்களின் இழப்புடன்  300   முதல்  400 வரையான பாரசீக கப்பல்களை வெற்றிகரமாக மூழ்கடித்தான். தான் மடக்கிப் பிடிபடப் போகும் ஆபத்தை உணர்ந்த செர்சீஸ் உடனடியாக பின்வாங்கினான். 

80,000 - 1,00,000  வரையிலான தரை படையினரை தனது தலைமைத்  தளபதி மறடோனியஸ் (Mardonius) என்பவரிடம் ஒப்படைத்துப்  போரைத்  தொடருமாறு கூறிவிட்டு செர்ஸீஸ் தனது  எஞ்சிய  படையுடன் பாரசீகம் திரும்பினான்.

பத்து  மாதங்களின் பின்பு அதாவது அடுத்த ஆண்டு 479  ஜூலை மாதம்  மறடோனியஸின் பெரும் படைக்கும்   30,000- 40,000  வரையிலான  கிரேக்க  படையினருக்கும்  இடையே  பிலெரியா  யுத்தம் (Battle of Plataea  )  ஆரம்பமானது. பதினோரு நாட்கள் நீடித்த இந்த யுத்தத்தில் 2000 கிரேக்கப் படைகள் இழப்புக்கு 30,000   பாரசீகப் படையினர்  கொல்லப்பட்டனர்.  இந்த யுத்தத்தில் பாரசீக படைத்  தளபதி  மறடோனியஸ்  களத்தில் கொல்லப்பட்டதும்  பாரசீகப் படை  தலைமையை இழந்து  சிதறி  ஓடியது.    இப்பெரும் தோல்வியுடன் பாரசீகப் பெரும் பேரரசு உடைந்து  விழுந்தது.   அதன்பின்  இன்று வரை அதனால்  மேற்குலகை வெற்றி கொள்ள முடியாது  காணப்படுகின்றது.

கிரேக்கத்துக்கு எதிரான  படையெடுப்பை மேற்கொள்ள செர்ஸீஸ்  முற்பட்ட போது அவ்வாறு கிரேக்கத்துக்கு எதிராக படையெடுப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று அவரது சிறிய தந்தையாகிய ஆட்டபனெஸ்(Artabanus) ,  தந்தையாரின் கூடப்பிறந்த சகோதரன் ,  கூறிய போது  அந்த ஆலோசனையைசச்  செர்ஸீஸ் எள்ளி  நகையாடி புறந்தள்ளினார்.    அப்போது  சிந்து வெளியில் இருந்து    துருக்கி  வரை பரந்திருந்தது பாரசீகப் பேரரசு. அதுவே அன்றைய உலகில் காணப்பட்ட மிகப்பெரிய பேரரசு ஆகும்.  அந்தப் பரந்த பெரிய பேரரசை பாதுகாத்தாலே போதும் என்றும் , கிரேக்கத்தின் மீது படையெடுத்து பேரரசை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அவரது சிறிய தந்தையார் ஆலோசனை கூறியிருந்தார்.

யுத்தத்தில்   பெரும்  படைகளை  இழந்து  பேரிழப்புக்குள்ளாகி  இருந்த நிலையில்    தனது சிறிய தகப்பனாரின் ஆலோசனையைத்  தான் புறந்தள்ளியதை எண்ணிச் செர்ஸீஸ் பெரும் வேதனையுற்றுத்  தேம்பி அழுதான்  என்று   ஹெரடோட்டஸின்  வரலாற்றுப் பதிவு கூறுகின்றது. 

பேரரசன் ஸெர்ஸீஸ்   நலிவுற்றிருந்த  சூழலில்  அவனது   அரச  மெய்க்காவற்ப் படை   கமாண்டரினால்  அவன்கி-மு 465  ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான்.

அதேவேளை   மறுபுறமாக லியோனிடாஸும்  அவரது சக வீரர்களும் மடிந்த இடத்தில் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில்  அழியாவரம் பெற்ற பின்வரும் வாசகதின் வாயிலாக  இற்றை  வரை 2500 ஆண்டுகளாக மதிப்புடனும் மரியாதையுடனும் போற்றிப்  புகழப்பட்டவாறு  நினைவு கூரப்படுகின்றனர். 

"" இவ்வழியாற்  செல்பவர்களே!   ஸ்பாட்டா  எனும் நங்கையிடம்  சொல்லுங்கள்,  அவளது வார்த்தைக்கு பணிந்து  இங்கு நாங்கள் புரண்டு கிடக்கிறோம் ""என்று.
( Go tell to Sparta, thou that passest by,that here obedient to her  words we lie"") . 

பாரசீக -- கிரேக்க வரலாற்று அனுபவங்கள் எமக்குப் பல   அரிய படிப்பினைகளைப்  போதிக்கின்றன.   இனியாவது , இனிமேலாவது மேற்படி அனுபவங்களை   உற்று நோக்கி , நின்று நிதானித்து ,  அவற்றிலிருந்து உரிய படிப்பினைகளைப்  பெற்று  தமிழ் மக்களின் விடிவுக்கான புதிய பாதையை உருவாக்க வேண்டும் ,   புதிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் , புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும்.



""தொடர்ந்து வடக்கு நோக்கி பயணிப்பவன்  இறுதியில் தெற்கே அதுவும்  தான் தொடங்கிய இடத்தில் வந்து மிதப்பான்.""

இப்போது தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது மாற்றுத் தலைவர்களைக் கொண்ட  ஒரு பலம் பொருந்திய கூட்டு முன்னணிதான். இதனை உருவாக்கி முன்னெடுப்போரே  தலையாய வரலாற்று  நாயகர்கள் ஆவார்கள்.


  :: மு.திருநாவுக்கரசு

No comments:

Post a Comment