Tuesday 10 September 2019

திலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்

திலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.
 காந்தி சொன்னார் எனது வாழ்க்கையே எனது செய்தி என்று. திலீபனைப் பொறுத்தவரை அவனுடைய மரணமே அவனது செய்தி எனலாம்.
அதற்காக அவனுடைய வாழ்க்கை ஒரு செய்தி இல்லை என்று அர்த்தமாகாது. அதுவும் செய்திதான். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் புவிசார் அரசியல் உறவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவனுடைய மரணமே அதிகம் செய்திகளைக் கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் ஆயுதப் போராளி. அகிம்சைப் போராளி அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு பொறிக்குள் சிக்கிய பொழுது அந்தப் பொறியை விட்டு வெளியே வர அவன் அகிம்சையைக் கையிலெடுத்தான். அகிம்சையை உலகத்திற்கு போதித்த ஒரு நாட்டிற்று எதிராக அதிர்ச்சியூட்டும் விதத்தில் அகிம்சையை அவன் பிரயோகித்தான். திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு…..

1.பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4.வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்
 இக்கோரிக்கைகள் யாவும் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு உட்பட்டவை. இந்திய இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோரியே திலீபன் உண்ணாவிரதமிருந்தான். பசியினாலும், தாகத்தினாலும் அவனது உயிரும், உடலும் மெலிந்து கொண்டு போன ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துச் சென்றன. ஓர் அகிம்சைப் போராட்டத்தை இந்தியா பொருட்படுத்தவில்லை என்ற கொதிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதன் உச்சக்கட்டமாக திலீபன் உயிர்நீத்த பொழுது அது இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தியது.


இந்திய நடுவன் அரசுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான பகையை கொதிநிலைக்கு தள்ளிய சம்பவங்கள் இரண்டு. முதலாவது திலீபனின் உண்ணாவிரதம். இரண்டாவது குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்தியது. இதில் குமுரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்திய சம்பவமே இந்தியாவிற்கும், புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகளை ஆயுத மோதல்களாக மாற்றியது.ரஜீவ விஜேசிங்க வர்ணித்தது போல மத்தியஸ்தரை விளையாட்டு வீரர் ஆக்கி மோதலில் ஈடுபடவைத்தது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த விரக்தி, கோபம், நிராசை போன்ற உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் அது. அந்த உச்சக்கட்டத்தை நோக்கி ஈழத்தமிழ் உணர்வுகளை நொதிக்கச் செய்தது திலீபனின் உண்ணாவிரதமே.
இந்திய அமைதி காக்கும் படைகள் வந்திறங்கியபொழுது நிறைகுடம் வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்குள் அதே அமைதிப்படைக்கு எதிராக ஒரு போர் வெடித்தது. இதற்கு வேண்டிய உளவியல் தயாரிப்பை அதிகபட்சம் திலீபனே செய்தான். இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான பந்தம் எனப்படுவது பல நூற்றாண்டுகளுக்குரியது. அது ஒரு வேர்நிலை உறவு. ஈழத்தமழர்களின் பண்பாடு எனப்படுவது இந்திய உபகண்டப் பண்பாட்டின் ஒரு பகுதிதான். இறை நம்பிக்கை, சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு, உடை, சினிமா  போன்ற பல அம்சங்களிலும் ஈழத்தமிழர்கள் தென்னிந்தியப் பண்பாட்டை பகிரும் ஒரு மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறார்கள். இந்த உறவைக் கையாண்டுதான் இந்திய நடுவண் அரசு தமிழ் இயக்கங்களுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்திக்கொடுத்தது. தமிழகத்தை தாய்த் தமிழகம் என்று அழைக்கும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் உண்டு. இந்திராகாந்தியை ஈழத்தாய் என்று வர்ணிக்கும் எழுத்தாளர்கள் இப்பொழுதும் உண்டு. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான மோதலுக்குப் பின்னரும் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரும் இறுதிக்கட்டப் போரின் போது இந்தியாவை நோக்கி எதிர்பார்ப்போடு பார்த்த ஈழத்தமிழர்களும் உண்டு.
இவ்வாறாக பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஓர் உறவின் பின்னணிக்குள்தான் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கப்பட்டது. அவன் பசியாலும், தாகத்தாலும் படிப்படியாக இறந்து கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழ் பொது உளவியலானது இந்திய நடுவண் அரசுக்கு எதிராக நொதிக்கத் தொடங்கியது. இவ்வாறு குறுகிய காலத்துள் செங்குத்தாக எதிர் நிலைக்குத் திரும்பிய ஒரு பொது உளவியலின் பின்னணியில் தான் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான போர் வெடித்தது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொரு இழப்பும் ஒவ்வொரு காயமும் இந்திய ஈழத்தமிழ் உறவில் விரிசல்களை அதிகப்படுத்தின.

இந்திய அமைதிப்படையின் வருகைக்கு முன் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து தமிழர்களின் வீட்டுச் சுவர்களில் இந்தியத் தலைவர்களின் படங்களை அநேகமாகக் காண முடியும். காந்தி நேரு, நேதாஜி போன்றோரின் படங்களையும், ஆன்மீகவாதிகளான ராமகிருஷ;ணர், விவேகானந்தர், சாரதாதேவி, ரமணர் போன்றோரின் படங்களையும் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து வீடுகளில் அதிகமாகக் காண முடியும். அது மட்டுமல்ல கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கப்பட்ட சனசமூகநிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற சிவில் அமைப்புக்களுக்கு காந்தியின் பெயரோ அல்லது நேதாஜியின் பெயரோ சூட்டப்பட்டன. ஆனால் இந்திய அமைதிப்படையின் அத்தியாயம் முடிவடைந்த பின் அந்தப் படங்கள் யாவும் ஈழத்தமிழ் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டன. இப்பொழுது இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. இந்த வீடுகளில் ஒன்றில் கூட இந்தியத் தலைவர்களின் படங்கள் கிடையாது.
தம்மை இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு பொது உளவியலை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த ஒரு பிராந்திய உறவை பன்னிரண்டு நாட்களுக்குள் திலீபன் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.
இந்த அடிப்படையில்தான் அவனது மரணம் ஒரு செய்தியாகிறது. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எனப்படுவது பிராந்திய அரசியலின் நேரடி விளைவுதான். சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்களை அவர்களுக்கு தமிழகத்தோடு உள்ள தொப்புள்கொடி உறவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை அடைய முற்பட்டது. இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலம் அது தனது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டதும் ஈழத்தமிழர்களை கைவிட முற்பட்டது.


தமிழகத்திற்கும், ஈழத்தமிழர்களுக்குமிடையிலான தொப்புள்கொடி உறவே ஈழத்தமிழர்களின் பிராந்தியப் பலமாகக் காணப்படுகிறது. தமிழகத்தை பின்தளமாகக் கொண்டே ஈழப் போராட்டம் பெருவளர்ச்சி கண்டது. மேற்கத்தேய அறிஞராகிய ஹாவார்ட் றிக்கிங்ஸ் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்த ஒரு கருத்தை இங்கு மேற்கோள் காட்டலாம். ‘இலங்கைத் தீவில் பெரும்பான்மையினர் சிறுபான்மைத் தாழ்வுச்சிக்கலோடும் சிறுபான்மையினர் பெரும்பான்மைத் தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுகிறார்கள்’. இங்கு பெரும்பான்மையினரின் தாழ்வுச்சிக்கல் எனப்படுவது பெரிய தமிழகத்தோடு சிறிய ஈழத்தமிழர்களை சேர்த்துப் பார்ப்பதால் வருவது.; இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் ஜயவர்த்தனா இப்பலத்தை சிதைக்க முற்பட்டார். அதில் அவர் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ரஜீவ் காந்தி; கொல்லப்பட்டார்.அது ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டைப் போட்டது.
இது நடந்து ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது அதே நாடகம் வேறொரு மேடையில் புதிய நடிகர்களால் அரங்கேற்றப்படுகிறது. 2009 ற்குப் பின் ஜெனீவாவில் திறக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய மேடையில் மறுபடியும் ஈழத்தமிழர்கள் கருவிகளாகக் கையாளப்படுகிறார்கள். ராஜபக்ஷ சகோதரர்களை கவிழ்ப்பதற்காக ஈழத்தமிழர்களை மேற்கு நாடுகள் கருவிகளாகக் கையாண்டன. தமிழ் டயஸ்பொறாவை மேற்கு நாடுகள் அதற்காக உருவேற்றின. முடிவில் மகிந்த கவிழ்க்கப்பட்டார். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஒரு புதிய வலுச்சமநிலை இலங்கைத் தீவில் உருவாக்கப்பட்டது.ஆனால், இவ்வலுச்சமநிலையை உருவாக்க வாக்களித்த தமிழ் மக்களின் நிலை எவ்வாறுள்ளது?
இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின் கைவிடப்பட்டது போலவே ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தாங்கள் கைவிடப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள். மகிந்தவிற்கு எதிராக மேற்கு நாடுகளால் கருவிகளாக கையாளப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் தமது பிராந்திய மற்றும் பூகோள நலன்களை ஒப்பீட்டளவில் பாதுகாத்துக் கொண்ட பின் மேற்கு நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியிருப்பது நிலைமாறுகால நீதி எனப்படும் ஒரு கவர்ச்சியான பொய்யைத்தான். அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய பயன்படுத்தப்பட்டபின் தூக்கி எறியப்படும் ஆணுறைகளாகவே காணப்படுகிறார்கள்.
இப்பொழுது புலிகள் இயக்கம் அரங்கில் இல்லை. ஆனால் சீனப்பேரரசு ஏற்கெனவே இலங்கைத் தீவினுள் நுழைந்து விட்டது. அம்பாந்தோட்டையிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் அது வலுவாக தனது கால்களை ஊன்றிக்கொண்டு விட்டது. மேற்கின் விசுவாசியாக இருந்தாலும் கூட ரணில் விக்கிரமசிங்க இப் புதிய யதார்த்தத்தை மீறிச் செயற்பட முடியாதவராகக் காணப்படுகிறார். அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். அதே சமயம் பலாலி விமான நிலையத்தையும், புத்தள விமான நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதங்களில் ஒரு பகுதி ஏற்கெனவே இந்தியாவிற்கு வழங்கப்பட்டு விட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத்தீவானது ; பேரரசுகளிற்கு தனது கவர்ச்சிகளைக் காட்டி மயக்கும் ஒர் ஆபாசப் பட நாயகியின் நிலைக்கு வந்து விட்டது. ஒரே சமயத்தில் அக்கவர்ச்சி நாயகி எல்லாப் பேரரசுகளையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறாள்.
1980களில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்று வந்த காலகட்டத்தில் ஒரு விவாதம் தொடர்ச்சியாக நடந்தது. இலங்கையைப் பிரிப்பதற்கு இந்தியாவும் விரும்பாது. அமெரிக்காவும் விரும்பாது என்பதே அது. ஏனெனில் அப்படிப் பங்களாதேஷ; பாணியில் தீவு பிரிக்கப்பட்டால் தமிழ்ப்பகுதிகளில் இந்தியா நிலைகொண்டிருக்கும். அதே சமயம் சிங்களப் பகுதிகளில் அமெரிக்கா நிலை கொண்டு விடும் என்று ஒரு விளக்கம் அப்பொழுது கூறப்பட்டது. தூரத்தில் இருக்கும் அமெரிக்காவை தன்னிடமிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கொண்டு வந்து நிறுத்த இந்தியா விரும்பாது என்றும் எனவே அது பிரிவினையை ஆதரிக்காது என்றும் விளக்கம் கூறப்பட்டது. அது கெடுபிடிப் போர்க்காலம். அப்பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் எதிரிகள். ஆனால் இப்பொழுது பலதுருவ பல்லரங்க உலக ஒழுங்கு நிலவுகிறது – (multiplex world order). இப்பொழுது சீனப் பேரரசிற்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் பூகோளப் பங்காளிகளாகி விட்டன. கால் நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்கா வந்து விடும் என்பதற்காக நாட்டைப் பிரிக்க இந்தியா விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது சீனா ஏற்கெனவே நுழைந்து விட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் அதை எப்படி தூரத் தள்ளலாம் என்று சிந்திக்கின்றன. அப்படிச் சிந்தித்தால் அவர்கள் தமிழர்களையே தேடி வருவார்கள். தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டே அதைச் செய்யப் பார்ப்பார்கள்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியப் பேரரசு தமிழர்களைக் கருவியாகக் கையாண்டது. இப்பொழுது அமெரிக்கப் பேரரசு தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு வருகிறது. காலத்திற்குக் காலம் பேரரசுகளின் கருவிகளாகக் கையாளப்படும் ஒரு மக்கள் கூட்டமா ஈழத்தமிழர்கள்;? பேரரசுகளோடு பேரம் பேசும்  ஒரு வளர்ச்சியை அவர்கள் எப்பொழுது அடையப் போகிறார்கள்?
சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.அது ஒரு  பெரும் பான்மை. அதன் தலைவர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் பொறுத்த நேரத்தில் அடியொட்ட வளைந்து கொடுப்பார்கள். ஜெயவர்த்தன அதைத்தான் செய்தார். பிரேமதாச அதைத்தான் செய்தார். மகிந்தவும் அதைத்தான் செய்தார். தன்னை நோக்கி இந்தியா வாளை  வீசிய போது, ஜே.ஆர். சற்றே குனிந்து அந்த வாளை தமிழர்கள் மீது பாயச்செய்தார்.அது தான் இந்திய- இலங்கை உடன்படிக்கை. இந்தியாவுக்கு எதிராக ஒரு போரைப் பிரகடனம் செய்யப் போகிறார் என்பதுபோல தோற்றம் காட்டிய பிரேமதாச கடைசி நேரத்தில் வளைந்து கொடுத்தார். ஒரு ராணுவ சதிப்புரட்சி மூலம் தன்னைத் தக்கவைக்கப் போகிறார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட மகிந்த முடிவில் அடியொட்ட வளைந்து  ஆட்சியைக் கையளித்தார். அவர்கள் வளைய மாட்டோம் முறிவோம் என்று வீரம் காட்டினாலும் இறுதியிலும்  இறுதியாக வளைந்து கொடுத்து தமது அரசைப் பாதுகாக்கிறார்கள். .தமிழ் மக்கள் ஓர் அரசற்ற தரப்பு.ஒரு  சிறும்பான்மை. முறிவோமே தவிர வளைய மாட்டோம் என்று கூறி முறிக்கப்படுவது வீரமா?அல்லது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பது வீரமா?
ஒரு பிராந்திய வியூகத்தின் முதற்பலி   திலீபன். அவனை நினைவு கூரும் இந்நாட்களில்  ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை. ஏனெனில் திலீபனை நினைவு கூர்வது என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.
நிலாந்தன்