Saturday 9 November 2019

பெர்லின் சுவர் : உடைப்பும் பின்னணியும்..

ஜெர்மனி என்ற ஒரே நாடாக இருந்ததை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்தது மட்டுமல்லாமல், தாய் ஒரு பக்கம், பெற்ற பிள்ளைகள் ஒரு பக்கம் என குடும்பத்தையே இரண்டாக பிரித்து, பெர்லின் மக்களை கதற வைத்தது பெர்லின் சுவர்.




உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை அறிந்து கொண்ட ஹிட்லர், பதுங்குக்குழியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனதாகத் தகவல். அதன் பிறகு ஒட்டு மொத்த ஜெர்மனியை இந்த நான்கு நாடுகளும் கூறுபோட்டுக் கொண்டன.


மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்கு ஜெர்மனி ரஷ்யாவுடன் இருந்தது. இது நடந்தேறியது 1949ம் ஆண்டு.


வல்லரசுகள் கைப்பற்றிய மேற்கு ஜெர்மனி பொருளா தாரத்தில் அசுர வேகத்தில் முன்னேறியது. ஆனால், கிழக்கு ஜெர்மனியோ கம்யூனிஸ ஆட்சியில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிப்பெற்றது. இதனால் கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்குப் பெர்லின் மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி மேற்கு ஜெர்மனிக்குப் படையெடுத்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே குடியேறினர். இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, "பெர்லின் சுவர்' என்றழைத்தனர்.


பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்த சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப் பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ., ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப் பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.


இதனால் ஜெர்மனியர்களின் ரத்த உறவு அந்நியர்களால் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்து அவரவர் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டுமென்றால் பாஸ்போர்ட் விசா எடுத்து விமானம் மூலம் போக வேண்டும். அது மட்டுமல்ல... உணவுப் பொருட்களும் அவ்வழியேதான் செல்ல வேண்டும்.


இந்தப் பிரிவினை 1961லிருந்து 1986ம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்நிலையில் 1987ல் அமெரிக்க அதிபர் ரீகன் சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவுடன் இந்தப் பெரிய சுவரை இடித்துவிட்டு, இரு பகுதி மக்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இக்காலக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனியில் புரட்சி ஏற்பட்டு, மக்கள் பல அவலங் களை சந்தித்தனர். நிலைமை மோசமடைந்து, 1989ம் ஆண்டு நவம்பர் 4ல் கிழக்கு ஜெர்மனி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு தரப்பு மக்களும் செக்போஸ்ட்களைத் தாண்டிச் செல்ல ஆரம் பித்தனர்.


எதிர்ப்புகள் இல்லாததனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த சுவரை இடித்தனர். 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களை பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 1999ம் ஆண்டு இரு ஜெர்மனி நாடுகளையும் பழையபடி ஒன்றாக இணைத்தனர். 


நாட்டையே கூறுபோட்ட அந்த பெர்லின் சுவரை மக்கள் இடித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில் ஜெர்மனி மக்கள் கொண்டாடினர்; இன்றும் அந்நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment