Wednesday 22 January 2020

ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

உள்நாட்டு விவகரங்களில் ஏனையவர் தலையிட கூடாது என்று சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தரும் சீன, ரசிய உயர்மட்ட அரசியல்வாதிகள் வாய்மொழிந் தருளியுள்ளார்கள். இவர்களின் பொன்மொழிகளின் பின்னணியை சிறிது ஆராய்வோம்.

 இராணுவ ஹெலிகொப்டர்களும் போர்விமானங்களும் ஈழத்தமிழர் மேல் குண்டுமழை பொழிந்து மக்களை அழித்தொழித்தது ஈழத்தமிழரின் ஆழ்மனதில் என்றும் அழியாமல் பதிந்துவிட்ட கொடூரம்.2001ம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தின் ஜெயசிக்குறு போர் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் செக்மேற் நிலைக்கு கொண்டுவந்ததாலேயே போர்நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது. உடைக்கமுடியாதது என்று ஐ-அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் விபரித்த சிறிலங்கா இராணுவத்தின் ஆனையிறவு தளத்தை விடுதலைப்புலிகள் அப்போது உடைத்தார்கள்.

இஸ்ரேயிலினதும் ரசியாவினதும் கிபிர்,மிக் விமானங்கள் புறப்படும் தளங்களை கொண்டுள்ள கட்டுநாயகா விமானதளத்தின் மீது அன்றைய விடுதலைப்புலிகளின் தாக்குதல் அவர்களின் இராணுவ வல்லமையை உலகுக்கு அறிவுறுத்தியது.

ஜெயசிக்குறு தோல்வியால் ஆத்திரமடைந்த இனவழிப்பு சிந்தனையில் ஊறிய சிறிலங்கா அரசு, தமிழீழ நடைமுறை அரசை அழிப்பதற்காக கொடூரமான ஆயுதங்களையும் தமிழருக்கு எதிராக கையாளும் திட்டங்களை தீட்டியது. டிசம்பர் 2000ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்கா ஆட்சி thermobaric ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முடிவு செய்தது.

ராஜபக்சா ஆட்சிக்கு முன்னரே, டிசம்பர் 2000ம் ஆண்டு,  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 10,000 Thermobaric Flamethrowers வாங்குவதற்கு முடிவு எடுத்ததை உறுதிப்படுத்தும் ஆவணம்.

சிறிலங்கா அரசின் தாக்குதல்களை எதிர்க்கும் விடுதலைப்புலிகளின் வல்லமையை அழித்த 2009 நடவடிக்கைகளை முக்கியமாக மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து ஒருங்கமைத்தது கொடுத்தது. அதே நேரம் தமிழீழத்தின் அழிவுகளை சீனாவும் ரசியாவும் பாகிஸ்தானும் கொடுத்த அழிவாயுதங்கள் நடத்தி முடித்தன.

இவற்றைவிட கொடுமையாக 2009இல் தமிழீழ தனியரசை சிதைத்த குண்டுகளாக இருந்தவை, ஐ-அமெரிக்காவும் இந்தியாவும் கொடுத்த மூலோபாய புலனாய்வுகள், வழிநடத்தல்கள், ஆகாய மற்றும் கடல் கண்காணிப்புகள் தான். அத்துடன் அவர்கள் கொடுத்த இராணுவ ரீதியான கிளர்ச்சி எதிர்ப்பு ஆலோசனைகளும் இருந்தன. அதே சக்திகள்தான் ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் மேல் ஒரு அரசியல் போரையும் அவிழ்த்துவிட்டு இருந்தன.

இதன் நோக்கம் தமிழர் போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்த புலம்பெயர் சமூகத்தின் ஆதரவை அழிப்பதே.

ஐ-அமெரிக்க கிளர்ச்சி-எதிர்ப்பானது ஆயுதங்கள் வழங்குவதாக கூறி, விடுதலைப்புலிகளின் இராணுவப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்திலிருந்த சில ஏமாளிகளை, கைது செய்து  அவர்களின் சொத்துக்களையும் முடக்கியது.

அதே நேரம், ஐ-அமெரிக்க இராணுவத்தின் புலனாய்வுடனும் ஆலோசனைகளுடனும் 30 மாதங்களாக இரகசியமாக தொடர்ந்த நடவடிக்கையில், விடுதலைப்புலிகளின் கப்பல்கள் சர்வதேச கடலில் தேடி அழிக்கப்பட்டன.

இதுவரை அறியப்பட்டவற்றில், நேரடியாக கொலைசெய்யாத ஆனாலும் மிகவும் தீர்க்கமான ஆயுதமாக அமைந்தது ஒன்றும் உண்டு. அதுதான் மே 2009 இல் ஐ-அமெரிக்க ஆலோசகரான Burns Strider அன்று ஐ-அமெரிக்க செயலாளராக இருந்து ஹிலரி கிளின்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்.

Strider ஹிலரியின் குரு. அவர் ஹிலரிக்கு அனுப்பிய மிக்கஞ்சலில் இவ்வாறு சொன்னார், ”விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக சிறிலங்கா அரசால் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறே களத்தில் நிற்கும் உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் பிரதிநிதிகள் கருதுகிறார்கள்”

2009இல் தமிழீழ நடைமுறையரசு அழிக்கபபட்டதற்கு கோத்தபாயாவின் திறமை காரணமல்ல. அவருடைய இனவழிப்பு சிந்தனையும் உலக சக்திகள் கொடுத்த மூலோபாய உதவிகளுமே காரணம்.

போரின் உச்சக் காலகட்டத்தில் “இந்திய மூவரும்“ “ரோக்கியோ இணைத்தலைமைகளும்“ ஆற்றிய பங்கைப்பற்றி அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறிலங்கா பாராளுமன்னத்தில் ஆற்றிய உரையில் பதியப்பட்டிருக்கிறது. இந்திய மூவரில் இருவரான அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M.K நாராயணன் மற்றும் அன்றைய  வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் இருவரையும் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிடாத மூன்றாமவர் விஜய் சிங் அன்றைய பாதுகாப்பு செயலாளர்.

சிறிலங்காவுக்கு வருகை தரும் ரசியாவின் வெளிவிவகார அமைச்சர், லவ்ரோவ், சிறிலங்கா பத்திரிகைக்கு கொடுத்த மின்னஞ்சல் நேர்காணலில் ஐ-அமெரிக்கா முன்வைக்கும் “சுதந்திர திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம்” என்பது ஒரு ஒருங்கிணைக்கும் கோட்பாடு அல்ல என்றார். ”அதன் உண்மையதன நோக்கம் இப்பிராந்தியத்திலுள்ள அரசுகளுக்கிடையே அண்மையில் உருவாகியுள்ள உறவுகளை உடைத்து அவைகளை சிறு பிரிவுகளாக பிரித்து தனது மேலாதிக்கத்தை நிறுத்துவதே“ என்றார்.

அதிகார சக்திகள், ரசியா உட்பட,  கொண்டுவரும் அழிவுகளைப்பற்றி தமிழருக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் ரசியா வெளிவிவகார அமைச்சரின் கதையாடல் தீவிரவாத சிங்கள பௌத்த பிக்குகளின் கவனத்தை ஈர்க்கும். இனவழிப்பின் “புனித தலமான” இத்தீவில்  ஐ-அமெரிக்க பிரஜையான கோத்தபாயாவின் வருங்கால பங்கு எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு.

ரசியாவின் கொடூரமான ஆயுதங்கள் பற்றிய கவலை இப்போது தமிழருக்கு இல்லையெனினும், நேரடியாக கொலை செய்யாத ஆயுதங்களாக உள்ள கொழும்பு-மைய நோக்கிற்கு வலுவூட்டும் தற்போதைய உலக சக்திகளின் செயற்பாடுகள், தமிழர்கள் இத்தீவில் ஒரு தேசமான உள்ளதை எதிர்க்கிறது என்பது பற்றிய கவலை தமிழர்களுக்கு உண்டு.

இந்த இனவழிப்பு தீவின் “பிரிக்கமுடியாத பாதுகாப்பிற்காகவும்” சர்வதேச நீதியை வலுவிழக்கச் செய்யவும் ரசியா என்ன செய்யப்போகிறது என்பதை தமிழர் கவனமாக அவானிக்க வேண்டும்.

நன்றி தமிழ்நெற்

Tuesday 7 January 2020

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது.  அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது  சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.

2. அப்படியானால் காட்டுத்தீ அவுஸ்திரேலியாவுக்குப் புதிதில்லையா? காலம் காலமாக இருப்பதா? 

காட்டுத்தீ காலம் காலமாக இங்கு இருப்பதுதான்.  காட்டுத்தீ இங்குள்ள உயிரினச் சுழற்சியின் ஒரு அம்சம். வெப்பநிலை அதிகரித்து மரங்கள் வெடிப்பதன்மூலம் மரங்களின் வித்துகள் பரம்பலடைகின்றன. சூழலைப்பயன்படுத்தி பிழைக்கும் கூர்ப்பின் யுக்தி இது.. யூகலிப்டஸ் மரங்கள் எரிந்தபின்னரும் அவற்றின் கருகிய கிளைகளுக்குள்ளாலிருந்து புதிதாக முளைவிட வல்லவை. தவிர காட்டுத்தீ புதிய ஒரு தாவர சுழற்சிக்கும் சிறிய செடிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணை செய்யும். காட்டுத்தீயை உள்வாங்கிய கூர்ப்பு இது.
 

3. காட்டுத் தீ காலங்காலமாக எரியும் ஒன்றென்றால் ஏன் இம்முறை மாத்திரம் இத்தனை பரபரப்பு?காட்டுத்தீயின் அளவு இம்முறை அதிகமாயிருக்கிறது. பொதுவாக டிசெம்பர் இறுதியில் ஆரம்பிக்கும் காட்டுத்தீயின் பருவம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில்தான் உச்சம் பெறுவதுண்டு. இம்முறை முதலாவது காட்டுத்தீ வசந்த காலத்தின் முதல்மாதமான செப்டம்பரிலேயே ஆரம்பித்துவிட்டது. பின்னர் நவம்பரில் தீவிரமடைந்தது. கோடைக்காலம் ஆரம்பித்தபின்னர் ஒரே சமயத்தில் பல இடங்களில் நெருப்புகள் எரிய ஆரம்பித்துவிட்டன. இது இந்த நாட்டுக்குப் புதிது. பொதுவாக ஒரே சமயத்தில் ஐந்தாறு இடங்களில்தான் பெரிதாக எரியும். இம்முறை அது நூற்றுக்கணக்காக மாறிவிட்டதால்தான் சமாளிப்பது கடினமாகிவிட்டது. தவிர காலங்காலமாக காட்டுத்தீ பரவும் இடங்களில் மாத்திரம் என்றில்லாமல் ஏனைய எதிர்பாராத இடங்களிலும் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதுவும் புதிது.


4. அவுஸ்திரேலிய வரலாற்றிலேயே இதுதான் மிகக்கொடூரமான காட்டுத்தீயா?

எது கொடூரம் என்ற வரைவிலக்கணக்கத்தில் அது தங்கியிருக்கிறது. தீ எரிந்த பரப்பளவைப்பொறுத்தவரையில் இம்முறை அதிகமான இடங்கள் எரிந்திருப்பதாகவே தோன்றுகிறது. அத்தோடு இப்போதுதான் சீக்கிரமாக ஜனவரியிலேயே இத்தகை அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் உயிரிழப்புகள், உடைமைச்சேதம் என்றளவில் இதைவிட மோசமான காட்டுத்தீ எல்லாம் பரவியிருக்கிறது. எனக்குத்தெரிந்தே 2009ல் நானிருக்கும் விக்டோரியா மாநிலத்தில் குடியிருப்புப்பகுதிகளை அண்டிய காடுகளில் தீ எரிந்து 175 பேர் இறந்துபோனார்கள். ஆனால் இம்முறையைவிட குறைந்த அளவு காடே அப்போது எரிந்தது. 

அப்போதைய உயிர்ச்சேதங்களுக்குக் காரணம், 

a. அப்போது தீ குடியிருப்புகளை அண்டியதாக அமைந்தது. 
b. பத்துவருடங்களுக்கு முன்னரான தீ பற்றிய விழிப்புணர்வும் தயார்படுத்தல்களும் இப்போதுபோல இருக்கவில்லை. எச்சரிக்கைகளை சரியான சமயத்தில் எல்லோருக்கும் கொண்டுபோய்ச்சேர்க்கும் வல்லமையும் அப்போதிருக்கவில்லை.  
c. இப்போது அந்த மோசமான அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டார்கள். இப்போது மக்களிடம் செய்தி பல வழிகளில் கடத்தப்படுகிறது. இயலாக்கட்டத்தில் வீடு வீடாக பொலிசார் சென்று மக்களை எச்சரிப்பதும் உண்டு.

குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய இன்னொரு விடயம், 2009 தீ ஏற்பட்ட காலம் பெப்ரவரி மாதம்.

5. அவுஸ்திரேலிய  ஆதிக்குடிகள் காட்டுத்தீயை தற்போதுள்ள முறைமைகளைவிட சிறப்பாக கையாண்டார்கள் என்று சில தகவல்கள் சொல்கின்றனவே?Back Burning என்று அதனைச் சொல்வார்கள். ஆதிக்குடிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திட்டமிட்டு தீயை வளர்த்து காட்டுத்தீயின் திசையையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவார்கள். காட்டை வலயம் வலயமாக வகுத்து பிராணிகளையும் தம் கூட்டத்தையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றி இடம்பெயரச்செய்வார்கள். இந்த முறையை தற்போதும் தீயணைப்புப்படை தேவையான அளவுக்குக் கையாளுகிறது.  ஆனால் ஆதிக்குடிகள் காட்டுத்தீயை தற்போதைய முறையைவிடச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினார்களா என்கின்ற வாதம் தேவையற்றது. அக்காலத்தில் சனத்தொகையும் குறைவு. கட்டமைப்புகளும் குறைவு. வாழ்வுமுறையும் வேறு. இருவேறு யுகங்களை ஒப்பிடுதல் என்பது அபத்தம்.

6. இப்போது மாத்திரம் ஏன் காடு முன்னதிலும் மூர்க்கமாக பல இடங்களில் எரிகிறது?

முக்கிய காரணம் புவி வெப்பமாதல்தான். ஒவ்வொரு வருடமும் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் புவி வெப்பமாதலும் காலநிலை மாற்றமும் விரைவுபடுத்தப்படுகிறது. இதனை ஆய்வுகள் மூலம் திரும்பத்திரும்ப விஞ்ஞானரீதியாக நிரூபித்தாயிற்று. விஞ்ஞானிகளும் படித்துப் படித்துச் சொல்லிவிட்டார்கள். பூமியில் மனிதச்செயற்பாடு காரணமாக வளியின் கார்பனீர் ஒக்சைட் அளவு அதிகப்படுத்தப்படுகிறது. கார்பனுக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் உண்டு. அதனால் சூரிய வெப்பத்தை அது உறிஞ்சி பூமியின் நில, நீர் மண்டலங்களுக்கு அது கடத்துகிறது. இதனால் பூமி முன்னிலும் அதிகமாக வெப்பமாகிறது. பூமிக்கும் புதைந்துகிடக்கும் கார்பனை (Coal, Oil) அகழ்ந்து எரித்து வளிமண்டலத்துக்குப் பரப்பும் மனிதச்செயற்பாடுகள்தாம் பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம். இன்னொன்று காபனீர் ஒக்சைட்டை உள்வாங்கும் காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவது. 

7. அவுஸ்திரேலியா அரசாங்கம் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?

ஒரு காலத்தில் எடுத்தார்கள். கார்பன் வெளியேற்றத்தின் அளவுக்கு வரிகூட விதித்தார்கள். ஆனால் இங்கே நிலக்கரி வியாபாரிகளின் செல்வாக்கு மிக அதிகம். அவர்கள் ஆட்சியையும் மக்கள் சிந்தனையையும் ஊடகங்களையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை படைத்தவர்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது திடீரென அந்த அரசு காணாமற்போய்விடும். அதனால் இப்போதைய அரசாங்கம் பூமி வெப்பமாதலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் புதிதாக முன்னெடுப்பதில்லை. தவிர புதிய நிலக்கரி அகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கியபடியிருக்கிறது. தற்போதைய பிரதமர் ஒரு நிலக்கரிக் கல்லை பாராளுமன்றத்துக்கே கொண்டுவந்து காட்டிப் பெருமிதமடைந்தவர்.

8. சரி புவி வெப்பமடைதலுக்காக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவாவது முன்நடவடிக்கை எடுத்திருக்கலாமல்லவா?

சென்ற மார்ச் மாதமே தீயணைப்புப் படையினரும் விஞ்ஞானிகளும் இதுபற்றி அரசாங்கத்தை எச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் கூடி திட்டமிடலாம் என்று திரும்பத்திரும்ப அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினார்கள். விஞ்ஞானிகள் இம்முறை காட்டுத்தீ முன்னெப்போதுமில்லாதவாறு மோசமாக இருக்குமென தெளிவாக அரசாங்கத்துக்குக் எதிர்வு கூறியிருந்தார்கள். அரசாங்கம் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தவிர நடவடிக்கை எடுத்தால் பின்னர் புவி வெப்பமடைதலையும் விஞ்ஞானிகளின் கூற்றையும் அரசாங்கமே ஒப்புக்கொண்டதாகிவிடும் என்று அது அமைதியாக இருந்துவிட்டது. செப்டம்பரில் தீ எரிய ஆரம்பித்தபின்னரும்கூட அரசாங்கம் அமைதியாக இருந்தது. டிசெம்பரில் பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரியும்போது நாட்டின் பிரதமர் ஹவாய் தீவில் குடும்பத்தோடு விடுமுறையில் இருந்தார். இதுதான் நிலைமை.

9. தீ கொழுந்துவிட்டு மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களுக்கான பிரச்சனைகளைப்பார்க்காமல் அரசாங்கத்தைக் குற்றச்சாட்டுவது சரியா?

மக்களுக்கான உடனடித்தீர்வுகளை மாநில, மத்திய அரசாங்கங்கள் செய்கின்றன. மக்களும் அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு நன்றாக செய்கிறார்கள். அது வேறு. ஆனால் அதற்காக பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும்போது பிரச்சனையின் மூலத்தைப்பற்றிப் பேசாமல் பின்னர் எப்போது பேசுவதாம்? இப்படித்தான் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இடம்பெறும்போதெல்லாம் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யும்போது ஆயுதக்கட்டுப்பாட்டுச் சட்டம் பற்றிப் பேசவேண்டாம் என்று லொபியிஸ்டுகள் சொல்லுவதுண்டு. ஆனால் பிரச்சனை ஆறியபிறகு எல்லோரும் தத்தமது சோலியைப் பார்க்கப்போயிடுவார்கள். இப்போது பேசவேண்டாம் என்பவர்கள் எவரும் எப்போதுமே இப்பிரச்சனையைப் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.

10. இது இயற்கை அனர்த்தம். ஆகவே மழை வேண்டிப் பிரார்த்தித்தால் கடவுள் மழையைக் கொடுப்பார் அல்லவா?

மயிரைத்தான் கொடுப்பார். ஒவ்வொரு தடவையும் ஒரு அனர்த்தம் நிகழும்போது உடனே பிரார்த்திக்கிறீர்கள். ஆனால் உங்கள் அதே கடவுள்தானே தீயையும் மோசமாக எரியப்பண்ணி இத்தனை சேதத்தைக் கொண்டுவருவது. இது கிட்டத்தட்ட கத்தியால வயித்தில செருகினவனிட்டயே போய் கட்டுப்போட்டுவிடு என்று கெஞ்சுவதுபோல. இல்லை நாப்பதினாயிரம் சனத்தைக் கொண்டவனிட்டபோய் ‘எங்களுக்கு நீயே ஒரு தீர்வு தா’ என்று கேட்பதுபோல. கடவுள் இல்லை. எங்களுக்கு மேலே ஒரு சக்தி இருந்து தொலைத்தாலும் அதைப் பிரார்த்தித்து ஒரு கொட்டையும் வரப்போறதில்லை என்று பல தடவை சொல்லியாயிற்று. வேற என்னத்தைச் சொல்ல. ப்ரே போர் ஒஸ்ரேலியா. 

11. இப்ப காட்டுத்தீ அடங்குமா? நிலைமை கட்டுக்குள்ள வருமா?

தொடர்ச்சியான விமர்சனங்கள். கேள்விகள். அழிவுகள். இப்போது அரசாங்கம் கொஞ்சம் சுதாரித்திருக்கிறது. தவிர கொஞ்சம் வானிலையும் குளிர்ந்து சில இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகள் பல உதவிக்கு வந்திருக்கின்றன. ஆகவே இப்போதைக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றே நினைக்கிறேன். ஆனால் பெப்ரவரி முடிவடையும்வரை அபாயம் எப்போதும் உண்டு. அதைவிட அழிவடைந்த இடங்களை மீளக்கட்டியமைப்பது என்பது மிகப்பெரும் செயல். மில்லியன் கணக்கில் காட்டு, கால்நடை மிருகங்கள் அழிந்துபோய்விட்டன. அவற்றின் உடல்கள் அழுகமுதல் அவற்றை எரித்தோ புதைத்தோ அகற்றவேண்டும். புனருத்தானம் செய்யவேண்டும். இவற்றிலிருந்து மீண்டுவர ஆண்டுக்கணக்கு ஆகும். 

12. இனியாவது புவி வெப்பமடைதலுக்கு எதிராக அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகள் நடவடிக்கை எடுக்குமா?

எடுக்கவேண்டும். “How many deaths will it take till he knows, that too many people have died?” என்று பொப் டிலான் எழுதியதுபோல, இன்னும் எத்தனை அனர்த்தங்கள் வந்தபிறகுதான் இவர்கள் முழித்துக்கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் தாமதிக்க புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துதல் என்பது மேலும் மேலும் கடினமான ஒன்றாகவே மாறப்போகிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்தி, லொபியிஸ்டுகளின் வாயை மூடி, அரசாங்கம் பல முன்முயற்சிகளைச் செய்யலாம். நியூசிலாந்து அண்மைய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைப் பயன்படுத்தி ஓட்டொமெடிக் ஆயுதங்களைத் தடைசெய்ததுபோல. ஆனால் வழமைபோல இரண்டுமாதம் சமாளித்தால் கோடை கடந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணவே சாத்தியங்கள் உண்டு. அல்லது இன்னொரு பெரிய பிரச்சனை இதனை மூடி மறைத்துவிடும். 

13. அப்படியானால் அவுஸ்திரேலியா அவ்வளவுதானா? உலகின் மோசமான நாடுகளில் அதுவும் ஒன்றாகிவிடுமா?

இங்குள்ள பிரச்சனையை உரத்துப்பேசி தீர்வுக்காக முயலுவதால் இதுபற்றி உலகம் முழுதும் பேசப்படுகிறது. அதனால் அப்படியொரு தோற்றப்பாடு வருகிறது. ஆனால் இப்பெரு அனர்த்தம் நிகழ்ந்தபோதும் ஐந்து மாதங்களில் முப்பதுக்கும் குறைவான மக்களே இறந்திருக்கிறார்கள் என்பது இங்குள்ள அனர்த்த முகாமைத்துவத்தின் வினைத்திறனையே காட்டுகிறது. வன்முறை அச்சமேதுமின்றி ஒரு நாட்டின் பிரதமரை முகத்துக்கு நேரேயே ‘You are an idiot’ என்று சொல்வதும் அதற்குப் பிரதமர் தலை குனிந்தபடி செல்வதும், பிரதமரை ஒரு தீயணைப்பு அதிகாரி நேரடியாகவே குற்றம் சாட்டுவதும், அரசு மானியத்தில் இயங்கும் ஊடகத்தில் அரசாங்கம் கழுவி ஊற்றப்படுவதும் இங்கு சர்வசாதாரணமாக நிகழுகின்ற விடயங்கள். இது முயற்சி செய்தால் தடுக்கக்கூடிய ஒரு இயற்கை அனர்த்தம். அதற்காத்தான்  இந்தக் கூச்சல்கள். மற்றபடி  அவுஸ்திரேலியா இப்போதும் வசிப்பதற்கும் வந்து பார்ப்பதற்கும் ஒப்பீட்டளவில் ஒரு நல்ல நாடுதான். ஆனால் இப்படியே நிலைமை போகுமானால் அது ஒரு மோசமான நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.