Tuesday, 31 March 2020

கொரோனா – தெளிவான விளக்கம்




முதலில் நல்ல செய்திகள் —


• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.

• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.

• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.

  •  எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.


• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.

• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.

• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).

• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.

• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.

• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.

• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப் படும்.

• பதற்றம் தேவையே இல்லை.

இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.

புரளி நம்பர் 1 – வெய்யிலில் வராது.

— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

புரளி நம்பர் 2 – மாமிசம் தின்றால் வரும்.

— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

புரளி நம்பர் 3 – நிறைய தண்ணீர் குடித்தால் வராது.

— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

புரளி நம்பர் 4 – இளவயதினருக்கு வராது.

— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

புரளி நம்பர் 5 – கிராமங்களில் வராது.

— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

புரளி நம்பர் 6 – மாற்று மருந்துகளில் குணமாகும்.

— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

புரளி நம்பர் 7 – அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.

— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

புரளி நம்பர் 8 – கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.

— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

விழிப்புணர்வுத் தகவல்கள்

• அறியாமை நம்பர் 1 – முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.

— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.

— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?

– புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.

– காற்றில் பரவும் ( இருமினாலோ, தும்மினாலோ, எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோ) வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

– பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.

– பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.

– தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.

– பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

• ஏன் இவ்வளவு பதற்றம்?

புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

• என்ன செய்ய வேண்டும்?

1. தனிப்பட்ட சுகாதாரம்.

முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.

2. கூட்டம் தவிருங்கள்.

• முக்கியமாக எதை செய்யக் கூடாது.

வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

"கருணா.!!" இந்தப் பெயரை தமிழினம் உள்ளவரை தமிழர் மறக்கப் போவதில்லை. "

கருணாவின் உளறலும்... பின்னால் உள்ள நிஜமும்..!!


"கருணா.!!" இந்தப் பெயரை தமிழினம் உள்ளவரை தமிழர் மறக்கப் போவதில்லை. "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்"  முன்பு வழங்கிய நேர்காணலைப் பார்த்த போது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகவே இருந்தது. இதில் உண்மைக்கு புறம்பான பல கதைகள் இட்டுக் கட்டி தன்னை நியாயப் படித்த முயல்கின்றார்.

அவரது நேர்காணலை பார்க்கும் போது தமிழ் மக்களாலும் கைவிடப்பட்டு, சிங்கள ஆட்சியாளராலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் போது வந்த "சுடலை ஞானம்" என்றே நான் பார்க்கின்றேன். அதன் வெளிப்பாடே தலைவரையும், மாவீரரையும் மரியாதையாகப் பேசியமை ஆகும். தலைவரைப் பற்றியும் மாவீரரைப் பற்றியும் உலக தமிழருக்குத் தெரிந்த ஒன்றைத்தான் இப்போது இவரும் கூற முற்படுகின்றார்.

தான் புலிகள் போராளிகளை கொல்லவில்லையாம்.!! லெப். கேணல் நீலன், கெளசல்யன் போன்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளம். அவைகளை மறக்க தமிழருக்கு மறதி வியாதியா? புலிகளை எதிர்த்து போராட இவர் ஆயத்தம் செய்த போதும் புலிகள் அதற்கு இடம் கொடாது அதை முறியடித்தனர் என்பதே உண்மை.

அடுத்தது கருத்து முரண்பாட்டில் பிரிந்ததாக புதுக்கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். நிதி மோசடி மட்டக்களப்பில் நடந்தது. அங்கு தலைவர் போய் பார்க்க முடியாது. இதைக்கண்டு பிடித்தவர் தமிழேந்தி அப்பா; அதன் பின்பு தான் புலனாய்வு விசாரணைகள் மூலம் பாலியல் பிரச்சனை இனம் காணப்பட்டது. அதை தலைமை அறிந்ததும் பிரதேச வாதம் முன்னிறுத்தி பிரிந்தது எல்லோருக்கும் தெரியும். பிறகேன் இந்த வீண் முயற்சி?

அடுத்ததாக தன்னை ஒரு இராணுவ மேதாவியாக் காட்ட முயல்கின்றார். புலிகளின் அரசியல், கடற்புலிகள், நிதித்துறை, புலனாய்வுத்துறை தவிர தான், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதி என்றும் இவருக்கு கீழேயே "சமர்க்கள நாயகன்" தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தளபதி கேணல் தீபன் அவர்கள் போன்றவர்கள் இருந்தது போலவும், அவர்களையும் இவரே வழிநடத்தியது போலவும் கூறுகின்றார். இதே வாயால்தான், பேச்சு வார்த்தைக்கு வெளிநாடு வந்த போது தலைவரின், தளபதிகளின் போர் நுட்பம் பற்றி சிலாகித்து கூறிய உரைகள் இன்றும் இணையத்தில் உள்ளது மறந்து விட்டாரோ தெரியவில்லை.?

அடுத்தது அவர் கூறிய முக்கிய குற்றச்சாட்டு இந்திய இராணுவம் மாணலற்றில் சுற்றி இருந்த நேரம் தளபதி பானு, தளபதி சூசை போன்ற தளபதிகள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாகவும், தான் மட்டுமே தேசியத் தலைவர் அவர்களை மீட்டு உயிரை காப்பாற்றியதாகவும் கூறுகின்றார். இது முழுப்பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது. அவர்கள் இருவரும் இந்திய இராணுவத்துடன் சண்டையின் போது காயமடைந்ததனால், மருத்துவத்திற்காக தமிழ்நாட்டிற்கு சென்று மருத்துவம் பெற்றதும் மீண்டும் ஊர் திரும்பி மீண்டும் சண்டை இட்ட வரலாறு உலகறியும்.

அந்த நேரத்தில் நாங்களும் மணலாற்றில் தான் இருந்தோம். என்னைப் போல இன்றும் பலர் உயிருடன் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஆரம்பத்தில் தலைவருக்கு பாதுகாப்பாக மணலாறு, முல்லை மாவட்ட தளபதிகளான மேஜர் தங்கேஸ் அண்ணா, பசிலன் அண்ணா, டடி/நவம் அண்ணா போன்றவர்கள் இருந்து வீரச்சாவடைந்த பின்னும், பொட்டு அம்மான், சொர்ணம் அண்ணா, கடாபி அண்ணா, பால்ராஜ் அண்ணா, சங்கர் அண்ணா, அன்பு அண்ணா, ரொபட்/வெள்ளை அண்ணா, தீபன் அண்ணா, சுபன் அண்ணா , கிறேசி அண்ணா என.... அவரை சுற்றி நின்று பாதுகாத்த வீரத் தளபதிகளின் பட்டியல் மிக நீளமே.

அதில் கருணாவும் ஒரு அணில். இவ்வளவு பெரிய புளுகு எதற்கு? இவர்கள் தான் இந்திய அரசின் "செக்மேட்" இராணுவ நடவடிக்கைகளை முறியடித்த கதாநாயகர்கள். இன்று தான் செய்தது போல தம்பட்டம் அடித்து மக்களை திசை திருப்பப் பாக்கின்றார். அடுத்தது மிக முக்கியமானது தனது தாக்குதல் உத்தி என்று ஒன்றை கூறினார்.

இராணுவம் முன்னேறும் போது பின் பக்கத்தால் இறங்கித் தாக்குவது. பாவம் கருணா 1994இல் இராணுவத்தின் முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையை தலைவரின் நெறிப்படுத்தலில் பொட்டு அம்மானின் வழி நடத்தலில் புலிகள் முன்னாள் விட்டு பின்னால் இறங்கி அடித்து சிங்களவனை ஓட ஓட விரட்டியது தெரியாது போல இருக்கு. அன்று தான் புது உத்தி ஒன்றை புலிகள் கையாண்டு பெரும் வெற்றியை பெற்றிருந்தனர்.

இந்த உத்தியை "சூரியக்கதிர்" இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும், பின்பு வந்த பல இராணுவ முன்னேற்றங்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்பட்டது. அதை தான் தன்னுடைய உத்தி என்று கருணா இப்போது புலம்பி உள்ளார். கருணா மட்டக்களப்பில் இருக்கும் போது, கருணாவால் மேற்கொள்ள பட்ட முதல் முகாம் தகர்ப்பு முயற்சி "வவுணதீவ" முகாம் ஆகும்.

இந்த தாக்குதல் எமக்கு படு தோல்வியில் முடிந்தது 120க்கு மேட்பட்ட போராளிகளை பறிகொடுத்து 50 இற்கு மேட்பட்ட இராணுவத்தினர் மட்டுமே கொல்லபட்டு இருந்தனர். எமது பக்கத்தில் மிகப்பெரிய இழப்புகளுடன் பின்வாங்கப்பட்டது . இதற்கு முக்கிய காரணம், கருணாவிற்கு பதுங்கித் தாக்குதலில் இருந்த அனுபவம், மரபு ரீதியான தாக்குதலுக்கு இல்லாமல் போனமையே.!

அதன் பின் தலைவர் தனித்த முகாம் தாக்குதலை கருணாவிடம் கொடுத்தது கிடையாது. அப்போது நீங்கள் கேக்கலாம் அப்போ எப்படி கருணாவிற்கு இவளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று??

அதற்கு நாங்கள் சிறிது பின்னோக்கி போக வேண்டும்.! இந்திய இராணுவத்துடன் கடைசிவரை போராடியது, மற்றும் சண்டை முடிந்த பின் 1990இன் பின் மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கில் புதிதாக போராளிகள் இணைந்தார்கள். அவர்களை இணைத்து போராளியாக்கி தலைவருக்கு விசுவாசமாக வளத்திருந்தார். இதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. கருணாவை நல்ல ஒருங்கிணைப்பாளர் என்றே கூறலாம். இதனால் தலைவர், கருணாவிடம் இயல்பான மதிப்பு வைத்திருந்தார். அதனால் மாவட்ட ரீதியான பொறுப்பின் ஊடாக எல்லோருக்கும் "கேணல்" தரம் வழங்கும் போது அவருக்கும் வழங்கப்பட்டது.

ஆனால் போரியலைப் பொருத்தவரை அங்கு தளபதிகளாய் இருந்த லெப். கேணல் ரீகன் அண்ணா ,ஜோய் போன்றவர்களின் தொடர் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் இவர் மீது பெரும் மாய விம்பத்தை உருவாக்கியது. இப்படியே காலம் உருண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளில் வன்னியில் நிலை கொண்டிருந்த புலிகளின் விசேட படையணிகள் பெரும் சிதைவு, மற்றும் ஆளணி பற்றாக் குறையை சந்திக்கும் என்பதை உணர்ந்த தலைவர், மறிப்பு சண்டைக்கு போராளிகள் தேவை நிமித்தம் முதல் கட்டமாக ஜெயந்தன் படையணி வன்னிக்கு நகர்த்தப்பட்டது.

அதன் தளபதியாக கருணாவையும் அழைத்து அவரிடமே அவர்களையும் வழிநடத்தும் பொறுப்பும் தலைவரால் வழங்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அந்தப் போராளிகள் பற்றி அவருக்கே முழுவதும் தெரிந்திருந்தது. அவர்களுக்கும் கருணாவை விட்டால் வேறு தளபதிகளை அந்த நேரத்தில் தெரியாது. அவர்களைப் பழக்கி, அறிந்து, அணி மாற்றுவதற்கு நேரமும் இல்லை. அதனால் கருணாவிடமே விடப்பட்டது.

ஜெயசிக்குறு சண்டையில் அணி மாற்றீட்டுக்காகவே கருணா கொண்டு வரபட்டார். இதன் பின்பு தான் கருணாவும் முதல் தடவையாக மரபுவழி யுத்தத்தில் பங்கு பற்றினார். ஆனால், அதற்கு முன் மரபு ரீதியான சண்டைகளில் "பழம் தின்று கொட்டை போட்ட" தளபதிகளான பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, பானு அண்ணா, ராஜுஅண்ணா மற்றும் சொர்ணம் அண்ணா போன்றவர்களுக்கு மத்தியில் மரபுவழி சண்டைக்கு வந்த பாலகன் தான் கருணா.

இன்று ஜெயசிக்கிறு சண்டையை தான்தான் முறியடித்ததாகவும், தலைவருக்கே போர் நுட்பங்களை சொல்லி கொடுத்தது போலவும் தம்பட்டம் அடித்து வருகிறார். உண்மையில் அந்தச் சண்டையில் ஒவ்வொரு பகுதியை ஒவ்வொரு தளபதிகள் வழி நடத்தினார்கள். ஜெயசிகுறு சமர் அனைத்துத் தளபதிகளாலும், போராளிகளாலும் ஈட்டப்பட்ட பெரும் வெற்றி. இதில் ஆட்லறி, மோட்டார் படையணிகள் முக்கிய பங்காற்றி இருந்தது.

இது புலிகள் அமைப்பில் இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் தெரியும். அந்த நேரத்தில் பெட்டி அடித்து இருத்தல் சண்டை (box சண்டை என்பார்கள்) தான் பிரபலம். அதை அறிமுகப்படுத்தியது தீபன் அண்ணாதான். அவரால்தான் இராணுவம் வெற்றிகரமாக தடுக்கபட்டது. இராணுவத்தை அடித்து கலைத்த சண்டையை சொர்ணம் அண்ணா ஒட்டுசுட்டானில் ஆரம்பித்து வைக்க, எல்லா கட்டளைத் தளபதிகளாலும் ஒவ்வொரு பகுதியாக தலைவரின் வழிநடத்தலில், தளபதிகளால் வழிநடத்தப்பட்டு கூட்டு முயற்சியில் வெற்றி கொள்ளப்பட்டது.

அடுத்தது ஆனையிறவு வெற்றியும் தன்னால்தான் வந்ததாக கூறுகின்றார். அந்தச் சண்டை பற்றி தமிழ் தெரிந்த சிறு குழந்தைக்கும் தெரியும் பால்ராஜ் அண்ணாவின் இத்தாவில் தரை இறக்கமும், ஏனைய தளபதிகளின் ஒவ்வொரு பகுதிக்கான வழிநடத்தலுமே. இதில் கருணாவும் ஒரு படையணியை வழி நடத்தினார் என்பதே உண்மை.

எந்தக் காலத்திலும் அந்த நேரத்தில் "கேணல்" தரத்தில் இருந்த முக்கிய தளபதிகள் கருணாவிற்கு கீழ் சண்டை செய்யவில்லை. அப்படி மிகப் பெரிய இராணுவ மேதை என்றால் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளுடன் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடன் இருந்த போதும், ஆயிரம் போராளிகள் தாக்கிய போது ஏன் அவர்களை முறியடித்து வெற்றி கொள்ளவில்லை??

ஏனெனில் புலிகளமைப்பு என்னும் குளத்தில் இருந்து வெளியேறிய (கரை) முதலைக்கு தரையில் பலமில்லை அது தண்ணீரில் இருக்கும் போது தான் அதற்கு பலம். இப்படிபட்ட கருணாதான் தன்னை இராணுவ மேதையாகக் காட்ட முற்படுகின்றார்.

கருணா பிரிந்து சென்ற பின் சண்டைகளில் எமக்கு பின்னடைவு வந்தது உண்மைதான். அதற்கு காரணம் எமது பலவீனம் அவருக்கு தெரிந்திருந்தது. அனால், கருணாவும் ஸ்ரீலங்கா ராணுவமும் போரிட்டிருந்தால் தமிழர் சேனை நிச்சயம் அதை முறியடித்திருக்கும். நாம் மோதியது வல்லரசுகளுடன். எமது தோல்விக்கு முக்கிய காரணம். எமது அயுத வளங்கள் தடைப்பட்டமையும், அது எதிரிக்கு தடையில்லாமல் கிடைத்தமையும்.

இதை நான் எதோ கருணா மீது காழ்ப்புணர்ச்சியில் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இதுதான் உண்மை. இது எமது போராளிகளுக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை மற்றைய தளபதிகளுடன் ஒப்பிடும் போது கருணாவால் அவர்களுக்கு அருகில் கூட நிற்க முடியாது இது எமது போராளிகளுக்கும் நன்கு தெரியும்..!!

Friday, 27 March 2020

கொரோனா அரசியல் – மிக்சர் சாப்பிடும் தமிழ் தலமைகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுகளும் சமூகங்களும் வீடுகளாக உடைந்து முடங்கியிருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் முடங்கியிருக்கும் இந்த சமயத்தில், மக்கள் சார்பான அரசும், மக்கள் சார்பான தலைவர்களும் “கை கொடுக்க” வேண்டும்.


இலங்கை அரசின் அறிவிப்புக்கள் பலவும் வெறுமனே ஊடக அறிவிப்புக்களாகவே இருக்கின்றன. கொரோனாவின் அரசியல் உள்ளூரிலிருந்து உலகுவரை தண்ணீரில் கலந்த எண்ணைபோல தெளிவாகவே புலப்படுகின்றது.
கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்றே அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரம்ப் அழைக்கின்றார்.
தன்னுடைய டுவிட்டர் பக்க பதிவுகளில் கொரோனா வைரஸ் என்று அழைக்காமல், சீன வைரஸ் என்றுதான் பதிவிடுவதை அவதானிக்க முடியும்.
சீனாவுடனான அரசியல் வெறுப்பாகவே இந்த அணுகுமுறையை கருதுகிறார்கள். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
கொரோனா வைரஸ் உலகின் பல முக்கிய வீடுகளின் கதவை தட்டி உள் நுழைந்திருக்கின்றது.
கனேடியப் பிரதமரின் மனைவிக்கு கொரோனா ஏற்பட்டிருந்த நிலையில் இப்போது, பிரித்தானிய மன்னர் வீட்டிலும் கொரோனா நுழைந்திருக்கின்றது.
வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்வதேச ரீதியாக கொரோனாவின் தாக்கம் அரசியலாக உருவெடுத்துவிட்டது.
உலகின் பல நாடுகளை கொரோனா ஆட்டம் கொள்ளச் செய்திருக்கிறது.
பலத்த உயிரிழப்புக்கள், வீடுகளுக்குள் முடங்கிய வாழ்க்கை, பொருளாதார வீழ்ச்சி என பெரும் உலக மன கசப்புக்களுக்கு கொரோனா வித்திட்டிருக்கிறது.
நம் உறவினர்களை கண்டு அஞ்சுவதைப் போல, எமது அயல் வீட்டுக்காரர்களுடன் விலகிக்கொள்வதைப் போல, நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளும் உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை தொடர்ந்து பல நிவாரணங்களை வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
வறிய குடும்பங்களுக்கு பத்தாயிரம் வழங்குதல், உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குதல், பட்டதாரிப் பயிலுனர்களுக்கு 20 ஆயிரம் வங்கியில் வைப்பில் இடப்பட்டும் என அறிவிக்கப்பட்ட எவையும் மக்களை வந்து சேரவில்லை.
விளம்பர அறிவிப்பில் காட்டப்படுகின்ற ஊக்கம் செயலில் இல்லை என்பதுதான் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவை வைத்து, இரு விதமான அரசியல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஒன்று இத்தகைய நிவாரணங்களை வழங்கி, அல்லது அவை பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டு தேர்தல் கால பிரச்சாரங்களாக மாற்றிக் கொள்ளுதல்.
மற்றையது, சர்வதேச ரீதியான நெருக்கடிகளிலிருந்து இலங்கையை விடுவிக்க கொரோனாவைப் பயன்படுத்தல்.
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது பெரிய சவால் இல்லை என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட விடயத்திலிருந்து கொரோனா அரசியலும் ஆரம்பித்தது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு இராணுவத் தளபதி சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு அண்மையில் அமெரிக்கா பயணத்தடை விதித்தது. இவர்மீது சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
கொரோனாவை வெற்றி கொள்ளுகின்ற போது, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலையுடன் தொடர்புடைய சவேந்திரசில்வாவை கொரோனாவிலிருந்து உயிர்காத்த வீரனாக சித்திரிக்கப்படுவார்.
தமிழ் மக்களை கொன்றொழித்த கொரோனாக்களை, புனிதப்படுகின்ற காப்பாற்றப்படுகின்ற சூழல் உருவாகும் என்பதே இப் பத்தியாளரின் அச்சமாகும்.
இதனை பற்றிய எந்த விதமான புரிதலும் இன்றி இருக்கிறது தமிழ் அரசியல். தலையை மண்ணுக்குள் குத்தியிருக்கிறது எனலாம்.
இன்னொரு வகையில் சொன்னால், கவுண்டமணியின் நகைச்சுவையில் வருவதைப் போல தமிழ் அரசியல் மிக்சர் சாப்பிட்டபடியிருக்கிறது.
அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இடர்கால நெருக்கடிகளை தீர்க்கும் விதமாக ஒற்றுமைய தேர்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கி மக்களின் இடர்களை களைய தமிழ் தரப்புக்கள் முனைந்திருக்க வேண்டும். இத்தனை தலைவர்கள் இருந்தும் எவருடைய தலையும் இப்போது தெரியவில்லை.
ஆனால் இப்போதும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அடி மட்டத் தொண்டர்களை வைத்து மக்கள் மத்தியில் தேர்தல் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொதிகளுடன் திரிகின்றனர்.
இன்றைக்கு சைக்கிள் சின்னத்துடன் ஒரு நிவாரண வாகனம் கிளம்பியுள்ள படத்தை முகப்புத்தகத்தில் காண முடிந்தது.
மக்கள் இடர்களின் தவிக்கின்ற இந்த நிலையிலும் உங்கள் பதவிப் போட்டிக்கான அரசியல்கள் தேவையா? பிணத்திலும் நோயிலும் சின்னங்களை பதித்து அரசியல் செய்கின்ற இந்தப் போக்கு இனத்தை நலிவாக்குமே தவிர, உயர்த்தாது?
சிறுவர்கள், முதியவர்கள் வீடுகளில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று நோய் தடுப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
அரசியல் தலைவர்களே நன்றாக பாதுகாப்பெடுத்து தற்காத்துக்கொள்ளுகின்றனர்.
தெற்கில் பாலித தேவப்பெரும என்ற முன்னாள் எம்.பி வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களுக்காக பெரும் கிடாரங்களில் உணவு சமைத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் அவர் சவப்பெட்டி சுமந்ததும், கிணற்றில் இறங்கி சேறு அள்ளியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால் எமது தலைவர்கள், வெள்ளம் வரும்போதே முட்டி தெரிய வேட்டி கட்டிக் கொண்டு போஸ் கொடுப்பார்கள்.
இப்போது ஒருவரையும் களத்தில் காணவில்லை. மருத்துவர்களும் தாதியர்களும் ஊடகவியலாளர்களும் காவல்துறையும் இந்த நோய் அபாயத்திலும் பணி புரிகின்றனர்.
இதற்கு மேலாய் தலைவர்களின் பங்கு இருக்க வேண்டும். கொரோனா அரசியல் சூழலில், தமிழ் அரசியலின் பலவீனங்களும் இலங்கை அரசின் நோக்கங்களும் துல்லியமாகவே தென்படுகின்றன.