Friday 27 March 2020

கொரோனா அரசியல் – மிக்சர் சாப்பிடும் தமிழ் தலமைகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுகளும் சமூகங்களும் வீடுகளாக உடைந்து முடங்கியிருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் முடங்கியிருக்கும் இந்த சமயத்தில், மக்கள் சார்பான அரசும், மக்கள் சார்பான தலைவர்களும் “கை கொடுக்க” வேண்டும்.


இலங்கை அரசின் அறிவிப்புக்கள் பலவும் வெறுமனே ஊடக அறிவிப்புக்களாகவே இருக்கின்றன. கொரோனாவின் அரசியல் உள்ளூரிலிருந்து உலகுவரை தண்ணீரில் கலந்த எண்ணைபோல தெளிவாகவே புலப்படுகின்றது.
கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்றே அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரம்ப் அழைக்கின்றார்.
தன்னுடைய டுவிட்டர் பக்க பதிவுகளில் கொரோனா வைரஸ் என்று அழைக்காமல், சீன வைரஸ் என்றுதான் பதிவிடுவதை அவதானிக்க முடியும்.
சீனாவுடனான அரசியல் வெறுப்பாகவே இந்த அணுகுமுறையை கருதுகிறார்கள். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
கொரோனா வைரஸ் உலகின் பல முக்கிய வீடுகளின் கதவை தட்டி உள் நுழைந்திருக்கின்றது.
கனேடியப் பிரதமரின் மனைவிக்கு கொரோனா ஏற்பட்டிருந்த நிலையில் இப்போது, பிரித்தானிய மன்னர் வீட்டிலும் கொரோனா நுழைந்திருக்கின்றது.
வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்வதேச ரீதியாக கொரோனாவின் தாக்கம் அரசியலாக உருவெடுத்துவிட்டது.
உலகின் பல நாடுகளை கொரோனா ஆட்டம் கொள்ளச் செய்திருக்கிறது.
பலத்த உயிரிழப்புக்கள், வீடுகளுக்குள் முடங்கிய வாழ்க்கை, பொருளாதார வீழ்ச்சி என பெரும் உலக மன கசப்புக்களுக்கு கொரோனா வித்திட்டிருக்கிறது.
நம் உறவினர்களை கண்டு அஞ்சுவதைப் போல, எமது அயல் வீட்டுக்காரர்களுடன் விலகிக்கொள்வதைப் போல, நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளும் உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை தொடர்ந்து பல நிவாரணங்களை வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
வறிய குடும்பங்களுக்கு பத்தாயிரம் வழங்குதல், உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குதல், பட்டதாரிப் பயிலுனர்களுக்கு 20 ஆயிரம் வங்கியில் வைப்பில் இடப்பட்டும் என அறிவிக்கப்பட்ட எவையும் மக்களை வந்து சேரவில்லை.
விளம்பர அறிவிப்பில் காட்டப்படுகின்ற ஊக்கம் செயலில் இல்லை என்பதுதான் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவை வைத்து, இரு விதமான அரசியல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஒன்று இத்தகைய நிவாரணங்களை வழங்கி, அல்லது அவை பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டு தேர்தல் கால பிரச்சாரங்களாக மாற்றிக் கொள்ளுதல்.
மற்றையது, சர்வதேச ரீதியான நெருக்கடிகளிலிருந்து இலங்கையை விடுவிக்க கொரோனாவைப் பயன்படுத்தல்.
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு கொரோனாவை அழிப்பது பெரிய சவால் இல்லை என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட விடயத்திலிருந்து கொரோனா அரசியலும் ஆரம்பித்தது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு இராணுவத் தளபதி சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு அண்மையில் அமெரிக்கா பயணத்தடை விதித்தது. இவர்மீது சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
கொரோனாவை வெற்றி கொள்ளுகின்ற போது, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலையுடன் தொடர்புடைய சவேந்திரசில்வாவை கொரோனாவிலிருந்து உயிர்காத்த வீரனாக சித்திரிக்கப்படுவார்.
தமிழ் மக்களை கொன்றொழித்த கொரோனாக்களை, புனிதப்படுகின்ற காப்பாற்றப்படுகின்ற சூழல் உருவாகும் என்பதே இப் பத்தியாளரின் அச்சமாகும்.
இதனை பற்றிய எந்த விதமான புரிதலும் இன்றி இருக்கிறது தமிழ் அரசியல். தலையை மண்ணுக்குள் குத்தியிருக்கிறது எனலாம்.
இன்னொரு வகையில் சொன்னால், கவுண்டமணியின் நகைச்சுவையில் வருவதைப் போல தமிழ் அரசியல் மிக்சர் சாப்பிட்டபடியிருக்கிறது.
அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இடர்கால நெருக்கடிகளை தீர்க்கும் விதமாக ஒற்றுமைய தேர்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கி மக்களின் இடர்களை களைய தமிழ் தரப்புக்கள் முனைந்திருக்க வேண்டும். இத்தனை தலைவர்கள் இருந்தும் எவருடைய தலையும் இப்போது தெரியவில்லை.
ஆனால் இப்போதும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அடி மட்டத் தொண்டர்களை வைத்து மக்கள் மத்தியில் தேர்தல் அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொதிகளுடன் திரிகின்றனர்.
இன்றைக்கு சைக்கிள் சின்னத்துடன் ஒரு நிவாரண வாகனம் கிளம்பியுள்ள படத்தை முகப்புத்தகத்தில் காண முடிந்தது.
மக்கள் இடர்களின் தவிக்கின்ற இந்த நிலையிலும் உங்கள் பதவிப் போட்டிக்கான அரசியல்கள் தேவையா? பிணத்திலும் நோயிலும் சின்னங்களை பதித்து அரசியல் செய்கின்ற இந்தப் போக்கு இனத்தை நலிவாக்குமே தவிர, உயர்த்தாது?
சிறுவர்கள், முதியவர்கள் வீடுகளில் பத்திரமாக இருக்க வேண்டும் என்று நோய் தடுப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
அரசியல் தலைவர்களே நன்றாக பாதுகாப்பெடுத்து தற்காத்துக்கொள்ளுகின்றனர்.
தெற்கில் பாலித தேவப்பெரும என்ற முன்னாள் எம்.பி வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களுக்காக பெரும் கிடாரங்களில் உணவு சமைத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் அவர் சவப்பெட்டி சுமந்ததும், கிணற்றில் இறங்கி சேறு அள்ளியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால் எமது தலைவர்கள், வெள்ளம் வரும்போதே முட்டி தெரிய வேட்டி கட்டிக் கொண்டு போஸ் கொடுப்பார்கள்.
இப்போது ஒருவரையும் களத்தில் காணவில்லை. மருத்துவர்களும் தாதியர்களும் ஊடகவியலாளர்களும் காவல்துறையும் இந்த நோய் அபாயத்திலும் பணி புரிகின்றனர்.
இதற்கு மேலாய் தலைவர்களின் பங்கு இருக்க வேண்டும். கொரோனா அரசியல் சூழலில், தமிழ் அரசியலின் பலவீனங்களும் இலங்கை அரசின் நோக்கங்களும் துல்லியமாகவே தென்படுகின்றன.

No comments:

Post a Comment