ஒருவேளை உங்களுக்கு இலங்கை செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று வாருங்கள். ஒரு அமைதியான மரண பயம் தொற்றிக்கொள்ளும். வங்கக்கடலிலும், நந்திகடலிலிருந்தும் வரும் ஓசையில் மரண ஓலத்தை நீங்கள் கேட்கக் கூடும். காற்றில் ரத்தவாடையை உணர்வீர்கள். தேகமெங்கும் குற்ற உணர்ச்சி உங்களை வாட்டிவதைக்கும். ஒரு இனத்தை மொத்தமாக அழித்துச் சமாதி கட்டிய வரலாற்றின் கொடூரச் செயல் அங்குதான் நிகழ்த்தப்பட்டது. பல நாடுகளின் கூட்டுச் சதியால் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒரு மாபெரும் இன அழிப்பு அங்குதான் நடத்தப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினத்தில்தான்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு செம்மறி ஆட்டுக்கூட்டம் போல அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அடுத்த நொடிகூட மரணம் நிகழும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.
ரத்தம் குடிக்கும் அசுரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டோம். இனி நம்மைக் காக்க எந்தக் கடவுளும் வரப்போவதில்லை என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். நம் குழந்தைகளின் ஒரு வேளை பசியையாவது போக்கிவிட மாட்டோமா என மரணப்பிடியில் மாட்டிக்கொண்ட அனைத்து மக்களின் எண்ணங்களும் ஒரேமாதிரியாக இருந்தது. பசியால் தமிழர்கள் அழியவேண்டும் என்று இலங்கை அரசு செய்த சதிதான் இறுதிகட்டப் போரின் போது பல குழந்தைகள் வற்றிய வயிறோடு இறந்துபோனதற்கு முக்கிய காரணம்.
ஒரு வருட காலம் மிகப்பெரிய இடம்பெயர்வில் சிக்கித் தவித்த மக்களை "முள்ளிவாய்க்கால் வாருங்கள் உங்களுக்கான அனைத்து உதவிகளும் அங்கே கிடைக்கும்" என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. உண்மையில் தமிழர்களைத் திட்டமிட்டே அங்கே அழைத்துச் சென்றனர். தோட்டாக்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு வேறு வழியில்லை. எப்படி, யூதர்களிடம் உங்களுக்கு ஒரு பாதுக்காப்பான இடத்தைத் தருகிறேன் என்று சொல்லி எந்தப் புறமும் வெளியேற முடியாதபடி அடைக்கப்பட்ட ஒரு இடத்தைக் கொடுத்து பின், அவர்களை விஷ வாயு செலுத்தி ஹிட்லர் கொன்றாரோ. அதுபோல ஒரு நாடகம்தான் இங்கேயும் நடந்தேறியது. கொல்லப்பட போகும்போது அலறல் சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்ற ஹிட்லரின் எண்ணத்தைவிட பெரிய அளவிலான கொடூரத்தை நிகழ்த்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முடிவு செய்திருந்தது.
2008 ஆம் ஆண்டு கடைசியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிளிநொச்சி, வவுனி ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வு காலத்தில் வெறும் 70 ஆயிரம் பேர் மட்டும்தான் போர்களத்துக்கு நடுவே இருக்கிறார்கள் என்று இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருந்தது. எதற்காக இலங்கை அரசு இப்படி ஒரு பொய்யைச் சொல்லவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் புலம் பெயர்ந்த மக்களுக்கு உணவுபொருட்கள் விநியோகத்தை முற்றிலுமாக தடுக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். வெறும் 70 ஆயிரம் மக்களுக்குக் கொடுக்கப்படும் உணவுப்பொருட்களானது எப்படி அனைவரின் பசியைப் போக்கும்? பசியின் காரணத்தால் அவர்களே செத்து மடிந்து போவார்கள் என்பது தான் இலங்கை அரசின் மிகப்பெரிய திட்டம். மே மாதம் தொடக்கம் முதல் நம் மக்களும், குழந்தைகளும் பசியால் இறக்கத் தொடங்கினார்கள். மே இரண்டாவது வாரத்தில் ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள் என்று யுத்தம் முடிந்த பின் தகவல்கள் வெளிவந்தன. புலிகள் மட்டும் கொல்லப்படக் கூடாது ஒட்டுமொத்த தமிழ்மக்களும் கொல்லப்பட வேண்டும் என்று இலங்கை அரசு எப்போதோ முடிவு செய்துவிட்டது. அதன் விளைவுதான், ஒரு சிறிய பகுதியில் மக்கள் அடைக்கப்பட்டதும், ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சமும்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
ஒரு புறம் வங்கக்கடல், மறுபுறம் நந்திக்கடல். இவைகளுக்கு இடையே சுமார் 5 கிலோ மீட்டர் சதுரப்பரப்பளவுக்கும் குறைவான பகுதியில் நம் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர். மே 16 ஆம் தேதி நள்ளிரவில் விடுதலைப்புலிகள் இங்குதான் மறைந்து இருக்கிறார்கள் என்று இலங்கை அரசு போர் புரிய ஆயத்தமானது. இல்லை, இன அழிப்பை நடத்த ஆயத்தமானது. இருபுறம் உள்ள கடலில் போர்க்கப்பல்களும், தரைவழியில் பீரங்கிகளும், ஆகாயத்தில் போர்விமானங்களும் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தன. மே 17 ஆம் தேதி அதிகாலைப்பொழுதில் உலக நாடுகள் இந்தியா கொடுத்த அதிபயங்கர ஆயுதங்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் நம் இனத்தை அழிக்க ஆரம்பித்தனர். மக்களின் மரண ஓலங்கள் காதைக் கிழித்தெறிந்த போதிலும் அதை இந்தியாவில் மத்தியில் அப்போழுது ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக இருவர்களும் இனைந்து தமிழர்களை கொன்றனர் . இந்தப் போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதே தினத்தில் புலிகளின் 6 படகுகளை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் புலிகளின் வசம் இருந்தக் கடைசிப் பகுதிகளும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த யுத்தத்தில், இலங்கை அரசு ஒரு இன அழிப்பை நடத்தி 2009 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது.
அன்றைய தினத்தில் ஜோர்டான் நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜபக்சே கூறியது என்ன தெரியுமா? "இறுதிப்போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, நாம் வென்றுவிட்டோம்" ஆனால் ஒரு இனப்படுகொலை செய்ததைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஐ.நா. தலையீட்டின் படி நடந்த விசாரணையில் 40,000 மக்கள்தான் இறந்தனர் என்று ஒரு பொய் கணக்கும் காட்டப்பட்டது.
இனப்படுகொலை நடந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் உலக நாடுகள் செய்த சூழ்ச்சியும் அதனால் உருவான வடுக்களும் வரலாற்றில் எத்தனை ஆண்டுகள் சென்று திரும்பி பார்த்தாலும் அதன் ரத்த வாடை காற்றில் வீசிக்கொண்டே இருக்கும்.
#கரும்புலி #தமிழினி அவர்களின் பதிவு.
மீள்பதிவேற்றம்.
No comments:
Post a Comment