Sunday 26 April 2020

பூமியை நேசித்த புலிகள்

நாம் வாழுகின்ற பூமிக்கு நம் வாழ்வில் ஒருமுறையாவது ஒரு நன்மையையாவது செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் இயற்கைக்கு எதிராக செய்த ஒவ்வொரு வினைகளுக்கும் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு பயங்கரமாகத்தான் கொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளனவா என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது. இன்றைய சூழலில் பூமியின் உயிர்கோளத்தை பாதுகாக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ்கிறோமா என சிந்திப்பது அவசியமானது.

கடந்த சில வருடங்களின் முன்னர், இலங்கையின் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே காடுகள் இயற்கையாக 100 வீதமாக காணப்படுவதாக கூறியிருந்தார். இலங்கை ஜனாதிபதி வெளிப்படையாக சொல்லாமல் விட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அதன் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலுமே காடுகள் பாதுகாக்கப்பட்டன என்பதையே சொல்லுகிறார். இலங்கை அரசில் விவசாய அமைச்சு, வனவள பாதுகாப்பு திணைக்களம் என பல நிறுவனங்கள் உள்ளபோதும் காடுகளை பாதுகாக்க முடியவில்லை என்ற ஒப்புதலே இது.தமிழீழ விடுதலைப் புலிகள், இப் பூமியின் உயிர்கோளத்தை பாதுகாக்கின்ற அமைப்பாகவே இருந்தார்கள். இலங்கை அரசின் இன அழிப்பு தாக்குதல்களிலிருந்து மனித உயிர்களை பாதுகாப்பது முதல், இப் பூமியின் உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்காக பல்வேறு கட்டமைப்புக்களை அவர்கள் உருவாக்கியிருந்தனர். தமிழீழ வனவள பாதுகாப்பு அமைப்பு, தமிழீழ வானிலை அவதானிப்பு நிலையம், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இப்படி பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, நிலத்தையும் நீரையும் காடுகளையும் உயிர்களையும் பாதுகாக்கின்ற பணிகள் நடைமுறையில் சாதிக்கப்பட்டன.

மறுபறமாக இன அழிப்பு போரின் மூலம், மனித உயிர்களை மாத்திரமின்றி, ஈழ மண்ணின் உயிர் பல்வகையை அழிக்கும் வேலைகளில் அரசு ஈடுபட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டிய மரங்களை இன்றுவரையில் இலங்கைப் படைகள் அழிக்கின்றமைதான் அவர்கள் இயற்கைக்கு செய்யுகின்ற பணி. புலிகள் இயக்கம் ஒரு மரத்தைப் போல, இம் மண்ணின் உயிரினத்தைப் போல விடுதலையையும் பூமியையும் நேசித்தார்கள் என்பதற்கு அவர்கள் இட்டுச் சென்ற பல தடயங்கள் சாட்சியமாகின்றது. புலிகளின் நிர்வாகம் பூமியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும் உலகத்தவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.நாம் வாழும் பூமியானது, அண்டத்தில் உள்ள பெரும் கோள். பேரண்டத்தின் அனைத்து கோள்களும் ரோமானிய கடவுளர்களின் பெயர்களால் அழைக்கப்பட பூமி மாத்திரமே நிலத்தின் பெயரால் அழைக்கப்படுகின்ற சிறப்பையும் கொண்டது. அதேபோல இவ் அண்டத்தில் பல கோள்கள் காணப்பட்டாலும் உயிரினங்கள் வாழுகின்ற ஒரே கோள் பூமியாகும். பூமியின் பௌதீக இயல்பினாலும், அது சூரியனை சுற்றி வருவதனாலும் உயிர்கள் நிலைபெறுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது.

இப் பூமியின் வரலாறு 4.5 பில்லியன் (450கோடி ஆண்டுகள்) வருடங்கள் எனப்படுகின்றது. அத்துடன் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிரினங்கள் தோன்றியுள்ளதாகவும் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் உயிரினங்கள் வாழுவதற்கு உகந்த இன்றைய சூழல், இன்னும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மாத்திரமே நிலவும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்ததால்தான் உலகில் உயிர்கள் தழைத்தன.

மனிதன் தான் வாழும் பூமியை பாதுகாக்கத் தவறியதன் விளைவாகவே, நில நடுக்கங்களும் சுனாமிகளும் வறட்சியும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. இப் பூமியில் காணப்படும் அனைத்து உயிரினங்களின் வாழ்வும் ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ளதுடன் ஒன்றுடன்ஒன்று தொடர்பை கொண்டுள்ளன. ஒன்று இல்லாமல் ஒன்று வாழ முடியாத இந் நிலையை மனிதன் மாற்றியமைக்கத் தொடங்கியதன் விளைவாகவே பூமி முரண்பாடான வெளிப்பாடுகளை அல்லது எதிர்வினைகளைக் காட்டி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாக கூட கொரோனாவை கருதுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இன்றைக்கு காடழிப்பு உலகில் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. வனம் வாழ்வின் அகம் என்பார்கள். மரமானது வாழ்வதற்கு நிழலை மாத்திரம் தருவதில்லை. உணவை தருகின்றது. அருந்த நீரை தருகின்றது. பூமியின் இயல்பை பேண உதவுகின்றது. மனிதர்கள் மாத்திரமின்றி பல்வேறு உயிரினங்களும் வாழ மரங்கள் உதவுகின்றன. இன்றைக்கு காடுகள் மிக வேகமாக அழிக்கப்படுகின்றது. குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் காட்டு வளம் அழிகின்றது. அத்துடன் உலகின் தட்ப வெப்ப நிலையும் மாறி வருகின்றது.மரங்கள் அழிக்கப்படுகின்ற வேகத்திற்கு புதிய மரங்கள் நாட்டப்படுவதில்லை. அத்துடன் இயற்கையான மரங்களை அழித்துவிட்ட அதற்கு ஈடாக மரங்களை மனிதனால் நாட்டவும் முடியாது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு வீத மரம் மாத்திரமே நாட்டப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. உலகில் 30வீத காடுகள்தான் இன்றுள்ளன. அத்துடன் உலகில் நிமிடம் ஒன்றுக்கு அறுபது கால் பந்து மைதான அளவுக்குரிய காடுகள் அழிக்கப்படுகின்றன.

காடழிப்பு என்பது பூமியின் வளங்களை அழிக்கின்ற செயலுக்கான அடிக்கோலாகும். இதிலிருந்தே குடிநீருக்கான தட்டுப்பாடும் வறட்சியும் ஏற்படுகின்றது. இன்றைக்கு இந்தியாவில் வரட்சியால் விவசாயம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஈழத்திலும்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய நிலை இன்றில்லை. நீர் வளமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் கலாசாரத்திற்குள் 2009இற்கு பிறகான ஈழம் வந்திருப்பதும் அதிர்ச்சியான விசயமாகும்.

பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலிய எரிபொருட்களுக்குப் பதிலாக சூரிய சக்தியையும் இயற்கை சக்தியையும் பயன்படுத்த முடியும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இதைப்போல மின்சாரத்தையும் இயற்கையாக பெற்றுக்கொள்ளுகின்ற வழிமுறைகளை நோக்கி மனிதன் நகர வேண்டும். வளி மண்டலத்திற்கு மேலே வாயு நிலையில் காணப்படும் ஓசோன் படலம், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. பூமியில் மனிதன் செய்யும் நாசகார வேலைகளால் ஓசோன் படலத்தில் மாசு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும்.

அத்துடன் வன ஜீவராசிகளை பாதுகாப்பதும் பூமியை பாதுகாக்கின்ற வழி. பறவைகள், பட்சிகள், விலங்குகள் என அனைவருக்குமான பூமியில் அனைவருக்கும் இடமளிப்பதே பூமிக்கு பாதுகாப்பானது. அவற்றை அழிப்பது என்பது மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்கும் நாசகார வேலையன்றி வேறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் நிலத்தை, மரத்தை, கடலை, நேசித்தததைப்போல அவர்கள் வழியில் நாமும் பூமியை நேசிப்போம். இயற்கைக்கு உகந்த வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, இப் பூமியை பாதுகாத்து எங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்கு வளமான பூமியாக கையளிப்பது நம் பெரும் கடனாகும்.

கவிஞர் தீபச்செல்வன்.

No comments:

Post a Comment