2020 உலகத்துக்கே சாபக்கேடான ஆண்டாக மாறியுள்ள இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழினம் மட்டுமன்றி ஈழத்தில் வாழும் தமிழினமும் மிகுந்த அச்சத்திலும் வறுமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
2009 முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் மீண்டும் தமது வாழ்க்கையை கட்டியெழுப்பும் நோக்கோடும் மிகுந்த நம்பிக்கையோடும் பொருளாதாரம், கல்வி என்று ஈழத்தமிழினம் ஆகிய நாங்கள் எமது வாழ்வியலை கட்டியெழுப்பி கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கோரோனோ என்கின்ற கொடிய தொற்றுநோய் எமது இனத்தையும் விட்டுவைக்கவில்லை. எமது சொத்துக்களையும், பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பறிகொடுத்து அதன் வலியிலிருந்து இன்னும் மீளாத சூழ்நிலையில் கண்ணீரோடும் துயரோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மீண்டும் எமக்கு பேரிடி விழுந்துள்ளது. இது மட்டுமல்ல எமக்கு எதிராகவே சிங்கள இனவெறி யரசின் இனவழிப்பு க்கான அரசியல் சூழ்நிலைகள் மாற்றம் கண்டுள்ளது. ஈழத்தில் சிங்களப் பேரினவாத சக்திகளின் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரும் நோக்கோடு பதவிக்கு வந்த கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் நினைத்ததைப் போன்று காலத்தின் சூழ்நிலை மாற்றம் கண்டது.
கோரோனோ என்கின்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தக் கொடிய நோய் ஈழமண்ணில் வாழும் மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவாக நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல் கிடப்பில் போடப்பட்ட சூழ்நிலையில் சிங்கள இனவெறியரசின் ராணுவ ஆதிக்கம் அதிகரிக்கப்படடது. ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டது. இதன் விளைவாக மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி பல கோரோனோ தனிமைப்படுத்தல் முகாம்கள் இலங்கையில் அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கு பகுதிகள் எங்கும் இராணுவ பிரசன்னம் விரிவாக்கப்பட்டு தமிழர் தாயக பகுதியெங்கும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் கோரோனோ தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டு தென்னிலங்கையில் உள்ள கோரோனோ நோயாளிகளை இரவோடு இரவாக சிங்களப்படைகளின் பாதுகாப்புடன் அழைத்து வந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்ற நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தென் பகுதியிலுள்ள சீதுவல பகுதியில் கோரோனோ தொற்றுக்கு உள்ளான 71 சிங்கள அரசபடையினரை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஒரு இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையில் எந்தவிதமான கோரோனோ நோயாளிகளின் பதிவுகளும் இடம்பெறவில்லை என்பதும் இனிவரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கொரோனோ தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்ச நிலையில் உள்ளனர். தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற நவீன மருத்துவ வசதிகளைப் போன்ற எந்தவிதமான மருத்துவ வசதிகளும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்படாது இலங்கையில் உள்ள அனைத்து கொரோனோ நோயாளிகளும் வடக்கு கிழக்குக்கு அனுப்பப்பட்டு பராமரிக்கப்படுவது வட கிழக்கு தமிழ் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள் ளது. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் மக்கள் அன்றாட வாழ்க்கை கூட வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பசி, பட்டினி என்று மக்களை வாட்டி வதைக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு எந்த விதமான அத்தியாவசியப் பொருட்கள் கூட வழங்கப்படாது அனைத்து உதவிகளும் தென் பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் உறவுகளால் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு சென்றடையாதவாறு இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அவற்றையும் மீறி மக்களுக்கு பொருட்கள் வழங்குபவர்களை இலங்கை புலனாய்வாளர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் கண்காணித்து கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். சிலர் காணாமலும் ஆக்கப்படுகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரங்கள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு செய்திகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் கடுமையாக எச்சரிக்கப் படுகின்றனர். இதனால் உண்மை செய்திகளை வெளியில் கொண்டுவர முடியாது ஊடகவியலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
சாதாரண நோய்களுக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாது இராணுவ மருத்துவர்களையே நாடவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதியில் ராணுவ சோதனைச் சாவடிகளும், கைதுகளும் அதிகரித்து வருகின்ற இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி கோரோனோ என்கின்ற நோயை சாதகமாக்கி சர்வதேசத்தின் கண்களை மறைத்து தெளிவான ஒரு இனச் சுத்திகரிப்பை இலங்கை அரசு நிறைவேற்றி வருகின்றது. இப்படியான சூழ்நிலையில் வாழ்வா சாவா என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எத்தனையோ மக்கள் வசிக்காத இடங்கள் இருக்கின்ற போதும் எதற்காக மக்கள் செறிந்து வாழ்கின்ற தமிழ் பிரதேசங்களில் கோரோனோ தடுப்பு முகாம்களை இலங்கை அரசு நிறுவ வேண்டும் என்கின்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் தென்பகுதியில்1000 பாடசாலைக்கு மேல் செயலற்ற நிலையில் உள்ளது. தென் பகுதியிலுள்ள கோரோனோ நோயாளிகளை அந்த பாடசாலைகளில் தங்கவைத்து பராமரிக்கக் கூடிய சூழ்நிலைகள் இருந்தும் வடக்குக்கு அழைத்து வரப்பட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் கொரோனா தடுப்பு முகாம்களை அமைத்து ஆயுதங்களின் சத்தமின்றி அமைதியான முறையில் தொடரும் இன அழிப்புக்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கோரோனோ நோய் தொற்றுக்கு உள்ளான இராணுவத்தினரை தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கில் பணியமர்த்தி தமிழ் மக்கள் மத்தியில் நோயை பரப்பி இதன் மூலம் தமிழ் இனத்தை அழிப்பதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது, இது அப்படி இருக்க தமிழகத்திலிருந்து போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு தமிழர் தாயகப் பகுதி எங்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென் பகுதியிலுள்ள விபச்சார அழகிகள் வடக்கு கிழக்கு பகுதிக்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் சீரழிக்கின்ற வகையில் அனைத்து இடங்களிலும் விபச்சார தொழில் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கோரோனோ தொற்று அதிகமாகி கொண்டிருக்கின்ற வேளையில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பேருந்துகளை இயக்கிய காரணத்தினால் 2 நாட்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட நோயாளிகளை வடக்கு பகுதியில் இனம் காணப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் பார்க்கின்ற போது இது ஒரு இன அழிப்பின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கம் என்றே பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச சமூகம் நோய்த் தொற்றுகளால் தள்ளாடிக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் அவர்களின் கண்களை மறைத்து ஒரு இன அழிப்பை தொடங்கியுள்ளது இலங்கை அரசு. இதன் அடிப்படையில் பார்க்கும்போது திட்டமிட்ட இன அழிப்பை மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற ராஜபக்ச அரசுகள் தொடங்கி உள்ளது என்பதையே பறைசாற்றி காட்டுகிறது. 2009ல் எமது இனத்தை ஈவு இரக்கமின்றி யார் அழித்தார்களோ அதே ராஜபக்ஷேகள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறி எமது இனத்தை அளிக்க தொடங்கியுள்ளார்கள்.
இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே எமது இனத்தை இந்த திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவை தமிழ் தலைவர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உள்ளது என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது ஊரடங்கு உத்தரவும், ராணுவ பிரசன்னமும் வலுவான முறையில் நடைமுறையில் உள்ள காலப்பகுதிகளில் திட்டமிட்டு ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கைதுகள் என பல்வேறு இன சுத்திகரிப்பு வேலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் நோய் தொற்று அச்சத்தில் வாழுகின்ற மக்கள் மேலும் பல இக்கட்டான நெருக்கடிகளையும், அச்சத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.
2009 க்கு முன்னர் நடந்தவற்றைப் போன்று தமிழ் ஒட்டுக் குழுக்களும் துணை நிற்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை கவனிக்க முடிகிறது. அவர்கள் எந்தவித அச்சமுமின்றி சமூகப் பணியாளர்களை மிரட்டுவதும், தாக்குவதும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். மாறாக இலங்கை அரசின் இன அழிப்பு நாடகத்துக்கு துணை நிற்கின்றனர்.
கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் எதை நினைத்து ஆட்சி பீடம் ஏறினாரோ அதே கொள்கையில் உறுதியாக இருந்து கோரோனோ என்கின்ற நோயை சாதகமாக்கி தன்னுடைய இன அழிப்பு நாடகத்தை மிகவும் மதி நுட்பத்தோடு அரங்கேற்றி வருகிறார் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.23.04.2020 க்கு பின்னர் 26.04.2020 வரை உள்ள மூன்று நாட்களில் மட்டும் இரண்டு இளைஞர்கள் ராணுவ ஆதரவுடன் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல்” தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சிங்களப் பேரினவாத அரசு பல நெருக்கடிகளை கொடுத்து எமது இனத்தை அடியோடு அழித்து ஒழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே கோரோனோ நோயில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இன அழிப்பில் இருந்து மீழுகின்ற வகையிலும் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் உறுதியோடும், நம்பிக்கையோடும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இதுவரைகாலமும் வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அனுபவமாக கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து மீள வேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களாகிய எங்களுக்கு இருக்கின்றது.
ஆகவே இலங்கை அரசு அரங்கேற்றியிருக்கும் இன அழிப்பு நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கைதுகள் என அனைத்து நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதனையும், ஒட்டுக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு இராணுவமும் பொலிசாரும் துணை நிற்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் தமிழ் மக்களாகிய நாங்கள் இலங்கை அரசுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். இலங்கை அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது தக்க பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ்மக்கள் ஆகிய நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஆகவே இலங்கை அரசு இப்படிப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பதனை sமீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றோம்.
நாள்: 26.04 2020
எழுத்து:
வன்னி வாணன்
எழுத்து:
வன்னி வாணன்
No comments:
Post a Comment