Saturday 30 May 2020

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)

சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

1981ம் ஆண்டு மே மாதம் 31 நள்ளிரவு முதல் யூன் மாதம் முதலாம் திகதிவரை தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.
1981ல் தீக்கிரையாக்கப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம்

1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

எரியும் நினைவுகள்.

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப் பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு.ளு நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம், மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)

மே மாதம் 31ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப் பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.

சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இக்கட்டுரைக்கு Tamil Nation, சங்கம் போன்ற இணையத் தளங்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் பெரிதும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் Sri Lanka Witness to History என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது.

இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம்

ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்த பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்துகொண்டிருந்த இப்பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தத் தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கிவந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தது.1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியை நோக்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கையினால் ஈழநாதம் நிறுவனம் பழைய முறிகண்டிப்பகுதிக்கும் பின்னர் கரிப்பட்டமுறிப்புக்கும் பின்னர் புதுக்குடியிருப்புமாக மாறி மாறி இடம்பெயர்ந்திருந்தது.

வன்னியின் நெருக்கடியான காலக்கட்டமான 1996-2002 வரைக்கும் அதாவது பிரதான கண்டிவீதி திறக்கும் வரைக்கும் வன்னிக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு மக்கள் ஊடகங்களில் ஈழநாதம் பத்திரிகையும் ஒன்றாகும்.

2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் கிளிநொச்சியில் இயங்கி வந்த இப்பத்திரிகை ஏனைய மாவட்டங்களிலும் வெளிவந்தது. அதாவது இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் வெளிவந்திருந்தது.

இவ்வாறாக 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதிப்பின்னர் வன்னிப்பகுதியில் மட்டுமே வெளிவந்திருந்த இப்பத்திரிகை தொடர்ந்து தமிழ்மக்களின் நெருக்கடி நிலை வாய்ந்த சூழல்களை தாங்கி வெளிவந்திருந்தது.

இறுதி யுத்தத்தின் கோரப்பிடியில் வன்னியில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பட்ட பின்னர் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களையும் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த நிலையில் கிளிநொச்சி நகரையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எறிகணை மற்றும் பலத்த விமானத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து ஓக்டோபர் 2008 முற்பகுதியில் தருமபுரம் பகுதிக்கு இடம்பெயந்து தற்காலிகமாக இயங்கி வந்தது.பின்னர் தருமபுரம் பகுதியில் இருந்து தை மாதம் உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் சுதந்திரபுரம் பகுதியிலும் பெப்ரவரி 10 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் இயங்கியது. தேவிபுரம் பகுதியில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஈழநாதம் பத்திரிகை வெளிவந்திருந்தது.

தேவிபுரம் பகுதியில் இருந்து அச்சுஇயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் படையினரின் பலத்த எறிகணைத்தாக்குதலில் சேதமடைந்திருந்த நிலையில் மிக்குறைந்த பணியாளர்களின் ஒத்துழைப்போடு இரணைப்பாலைப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றது. ஆனால் அங்கு பத்திரிகை அச்சிடுவதற்கான எந்தவித சாத்தியங்கள் இல்லாதஅளவுக்கு அச்சு இயந்திரங்கள் மோசமாக சேதமடைந்திருந்தது.

இந்நேரத்தில் ஈழநாதம் பத்திரிகை இயந்திரங்கள் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் இயந்திர இயக்குனர் சுகந்தன் என்பரின் முயற்சியினால் பிளேட் மேக்கர் என்ற இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அச்சுஇயந்திரங்கள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரும் பத்திரிகை நிறுவனமாக செயற்பட்டிருந்தது. இலங்கையில் முதலாவது நகரும் பத்திரிகை நிறுவனம் ஒன்று சொன்னாலே மிகையாகாது. ஏறிகணைகள் மிக அருகில் விழுகின்ற சமயம் அதனை பிறிதொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டவர்கள் தான் அன்ரனி(அன்ரனிக்குமார்), தர்சன் ஆகியோர். இவர்கள் இருவரும் வாகனத்தினை பிறிதொரு இடங்களுக்கு நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் இன்று உயிருடன் இல்லையென்பதற்காக மிகைப்படுத்தியதாக யாரும் எண்ணவேண்டாம். உண்மையில் இவர்களின் துணிச்சலான இப்பணியினை ஏனைய ஊடகவியளாலர்கள் கூட வியந்திருக்கின்றார்கள்.

பின்னர் இரணைப்பாலைப்பகுதியில் இடம்பெற்ற கிபிர் விமானத்தாக்குதலினை அடுத்து தொடர்ந்து 20 ஆம் திகதியே மீண்டும் இரணைப்பாலைக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இயங்கியது.

வாகனம் அச்சுஇயந்திரங்களை சுமந்து நகருவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது. மின்பிறப்பாக்கி தனது வேலையை சரியாகச்செய்துகொண்டிருக்கிறது.

காலை 5.30 மணி பத்திரிகைக்கான அனைத்து செய்திகளும் கணினியில் பக்கங்களாக ஆக்கப்பட்டு பிரதான கணினியினை ஒரு பணியாளர் உந்துருளியில் சுமந்து வருகிறார். இன்னொரு பணியாளர் ஏ-3 என்ற லேசர் பிரிண்டரினை சுமந்து வருகிறார். வைப்பதற்கு மேசைகள் இருக்கவில்லை. நிலத்தில் சாறம் ஒன்று விரிக்கப்படுகிறது. அதில் பிரதான கணினி பிரிண்டர் வைக்கப்பட்டு கணினிக்கும் பிரிண்டருக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வீதியின் கரையால் மக்கள் சாரை சாரையாக செல்கிறார்கள். சிலர் வியந்து பார்க்கின்றார்கள். சிலர் இவங்களுக்கு தேவை இல்லாத வேலை என்று முணுமுணுக்கிறார்கள். அச்சு வாகனத்தில் அருகில் இடம்பெயர்ந்து வசித்து வந்த குடுபத்தினர் தேநீர் கொடுக்கின்றார்கள்.

அச்சுடுவதற்கான பிரிண்ட் எடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் அச்சு பதிப்பிற்காக தயார்நிலையில் அச்சுஇயந்திரம் தயாராகின்றது. வுhகனத்தில் சுதந்தன், தர்சன் இருவரும் தங்களது வேகத்தை அதிகரிக்கின்றார்கள்.

அன்றையநாள் பத்திரிகையை தன்னால முடிந்த அளவுக்கு இயந்திரம் அடித்துக்கொண்டிருக்கின்றது.

சில மீற்றர் தூரத்தில் தீடிரென எறிகணைகள் விழுகிறது. ஆதற்கு பின்னரான சில நிமிடங்களில் வானில் ஒரு எறிகணை வெடிக்கின்றது. அதிலிருந்து சிதறிய குண்டுகள் வீழ்ந்து வெடிககிறது. கத்தல் கதறல் என ஓடுவோர், என அல்லோல கல்லோலம். பலர்; இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்கு படுத்திருந்தார்கள்.

பலரின் முதுதுப்பக்கம் முள்கரண்டியால் கிண்டிய போன்று காணப்பட்டது.

இது அன்றைய நாளில் நடந்த மிகச்சுருக்கமான காட்சியாகும்.

அடுத்த நாள் பத்திரிகை வாகனம் அதே பகுதியில் 400 மீற்றர் தாண்டி தரித்து நின்றது.

வெறும்மணல் நிலத்தில் இருந்துகொண்டே கணனிகளை இயக்கவேண்டிய நிலையிலும் இப்பத்திரிகையின் வெளிவருவதற்கு உறுதுணையாக ஜெயராசா சுசிபரன்(சுகந்தன்), நல்லையா மகேஸ்வரன், மரிஅருளப்பன் அன்ரனிகுமார்(அன்ரனி), சங்கரசிவம் சிவதர்சன்(தர்சன்), சசிமதன், மரியநாயகம் அன்ரன் பெனடிக்(அன்ரன்) உள்ளிட்ட மிகக்குறைந்தளவான பணியாளர்களின் முயற்சியில் தொடர்ந்து வெளிவந்திருந்தது.

சிறிலங்கா படையினர் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில் அதே புதுமாத்தளன் பகுதியில் சிலநாட்களும் பொக்கனைக்கும் வலைஞர்மடத்திற்கும் இடைப்பட்ட வெளிப்பிரதேசத்தில் சிலநாட்களும் இயங்கிவந்தது.

இக்காலப்பகுதியில் தான் வற்றாப்பளை முள்ளியவளையைச்சேர்ந்த சந்திரசேகரம் சசிமதன் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமைபுரிந்து வந்தவர்.

இதே காலப்பகுதியில் ஈழநாதம் கணினி பக்கவடிவமைப்பாளர் மேரி டென்சி மற்றும் அவரது கணவரும் பொக்கணைப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் . கொல்லப்பட்டனர்.

பின்னர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமைபுரிந்த மரியநாயகம் அன்ரன் பெனடிக் (அன்ரன்) என்பவர் உந்துருளியில் சென்று கொண்டிருக்கும் போது எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சுpல நாட்களில் புதுக்குடியிருப்பு ஈழநாதம் விளம்பரப்பணிமனையின் முகாமையாளர் நல்லையா மகேஸ்வரன் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பொக்கணை, வலைஞர்மடம் வெளிப்பகுதியில் வீதிக்கரையில் இருந்த மரத்தின் கீழேயே விளம்பரப்பணிமனை அமைந்திருந்தது. விளம்பரப்பணிமனை என்றால் யாரும் முன்னைய இடங்களில் இருப்பது என்று யோசிக்கதேவையில்லை. பெயர்பலகையோடு ஒரு கதிரை இருக்கும். ஆதில் நல்லையா மகேஸ்வரன் இருப்பார். அவ்விடத்திலேயே பத்திரிகைக்கான விளம்பரங்களை வழங்கமுடியும்.

அன்றைய நாள் மாலை அனைத்து விளம்பரங்களை சேகரித்து விட்டு சேகரித்த விளம்பரங்களை ஈழநாதம் அச்சுஇயந்திரம் இருக்கும் பகுதிக்கு சென்று அனைத்து விளம்பரங்களையும் ஒப்படைத்து விட்டு தனது பணியினை நிறைவு செய்து விட்ட பச்சைபுல்மோட்டையிலஉள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்தபடியால் தனது உறவினர் வீட்டிலேயே இவர் தங்குவது வழமை.

ஆவர் போய் ஒரு மணித்தியாலத்தின் பின் அவரது உறவினர் ஒருவர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தியினை தெரிவித்திருக்கின்றார். ஊடனடியாக பச்சைபுல்மோட்டைப்பகுதிக்கு சென்ற ஊடகப்பணியாளர்கள் அவரின் உடலை அடுத்த நாள் அடக்கம் செய்தார்கள்.

எந்தவித வசதிகளுமின்றி கையிருப்பில் இருக்கின்ற அச்சுப்பொருட்களை வைத்து நான்கு பக்கங்களில் நாளாந்தம் இப்பத்திரிகை வெளிவந்திருந்தது.

இடம்பெயர்வுகள், எறிகணைகள் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் என குடும்பம் குடும்பமாக இடம்பெயர்வின் சுமைகளை சுமந்த மக்களோடு ஈழநாதப்பணியாளர்கள் பலர் பணியாற்றமுடியவில்லை. இந்நேரத்தில் கணினியில் பக்கவடிவமைப்புக்களை செய்து அச்சு இயந்திரத்தில் பத்திரிகையினை அடித்து தானே அதை விற்பனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சங்கரசிவம் சிவதர்சன்(தர்சன்) என்பவர் புதுமாத்தளன் சந்தியில் படையினரின் துப்பாக்கி ரவையினால் துடைப்பகுதியில் காயமடைந்திருந்தார்.

பின்னர் இவர் குணமடைந்து ஒரு சில வாரத்தில் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டார்.

2009 ஏப்பிரல் மாதத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியில் இயங்கிய ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் தொடரும் எறிகணைத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள் போன்றவர்கள் விபரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி புதுமாத்தளன், பொக்கனை பகுதி படையினரின் தாக்குதலில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈழநாதம் ஊடகப்பணியாளர்களும் ஏனைய ஊடகங்களின் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உதவி புரிந்தும் வந்துள்ளனர்.

2009ஏப்பிரல் 25 அன்று வலைஞர்மடம் பகுதியில் செய்தி சேகரிகச்சென்ற செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு என்பவர் படுகாயமந்ததுடன் ஜெயராசா சுசிபரன் என்றழைக்கப்படும் சுகந்தன் என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வந்த ஈழநாதம் தனது செயற்பாட்டினை தளரவிடாது தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருந்தது.

மிகக்குறைந்த வளத்துடனும் குறைந்த பணியாளர்களுடனும் இயங்கிய இப்பத்திரிகை மேமாதம் 12 ஆம் திகதி வரைக்கும் தனது பணியினை செய்து கொண்டிருந்தது.

மே மாதம் 12 இரவு எறிகணைத்தாக்குதல்களில் கணினிகள் யாவும் முற்றாக சேதமடைந்ததோடு தனது பணியினை முன்னெடுக்கமுடியாதநிலையில் நிறுத்திக்கொண்டுவிட்டது.

அந்நாள் வரைக்கும் தங்களது பணியினை செய்து கொண்டிருந்த ஊடகப்பணியாளர்களான அன்ரனி, தர்சன் என்பவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி படையினரின் தாக்குதல்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இறுதி யுத்தகாலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப்பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

கிழக்கு தாயக இளைஞர்களே யுவதிகளே கட்டாயம் படியுங்கள்.

வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது.

2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டாகவும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் சில முக்கியஸ்தர்களால் தற்பொழுதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் இந்த அவதூறு பிள்ளையானின் ரீ.எம்.வீ.பி. கட்சியின் மகளீர் அணித் தலைவியினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.கருணா விவகாரத்தின் காலப்பகுதியில் கிழக்கில் செயல்பட்ட, அங்கு நடைபெற்ற பல சம்பவங்களைப் பதிவுசெய்த ஊடகவியலாளன்; என்கின்ற ரீதியில், ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆட்சியாளர்களின் தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் திரிவுபடுத்தப்படுகின்றது என்பதை உலகின் பார்வைக்கு கொண்டுவரவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.

வெருகல் நடவடிக்கையின் பங்காளியாக நாங்கள் இல்லாவிட்டாலும், சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். வெருகல் மீட்பு நடவடிக்கை முடிவுற்று மறு தினம் நாங்கள் வெருகல் பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், வேதநாயகம், சந்திரபிரகா~; போன்றவர்களுடன் நானும் சென்றிருந்தேன். நடேசன், இரா உதையக்குமர் போன்றவர்கள் தனியாக வந்திருந்தார்கள்.

வழி நெடுகிலும் இருந்த விடுதலைப் புலிகளின் காவல் அரன்கள், காடுகளுக்குள் இருந்து திடீரென்று தோன்றிய விடுதலைப் புலிகளின் அணிகள் - இவர்களின் கடுமையான விசாரணைகளைக் கடந்து வெருகல் பிரதேசத்திற்கு சென்று – சம்பவத்தை பதிவு செய்தோம்.

• வெருகல் தாக்குதலை ‘வெருகல் சம்பவம்’ என்ற பெயரில் அழைக்கும்படியும், குறிப்பிடும்படியும் தலைவர் பணித்துள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் எங்களிடம் தெரிவித்தார்.• அங்கு நாங்கள் சந்தித்த கௌசல்யன், குயிலின்பன், தளபதி ரமே~;, தளபதி பாணு போன்றவர்கள் ‘கருணா ஆடிவிட்டுச் சென்ற கோமாளிக் கூத்து’ என்றே – கருணாவின் பிரிவு விவகாரம் நடைபெற்ற அந்த 41 நாட் சம்பவத்தை குறிப்பிட்டார்கள்.

• கருணா தரப்பில் நின்ற நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

• செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் பேரூந்துகள், பிக்கப் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள்.

• இந்தச் சம்பவத்தில் 8 கருணா தரப்பு போராளிகள் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் எங்களுக்கு அறிவிக்கப்படது.

• ஆனால் உண்மையில் கருணா தரப்பில் நின்ற 33 போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்பதும், த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக வேண்டுகோள் முன்வைத்ததைத் தொடர்ந்து, இரண்டு பொறுப்பாளர்கள் போக மீதி 31 போராளிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்கள் என்பதும் பின்நாட்களில் எங்களுக்குத் தெரியவந்தது.

• கருணா தரப்பில் நின்று போராடி பின்னர் விடுதலைப் புலிகளால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல போராளிகளை நாங்கள் செவ்விகண்டிருந்தோம். தாங்கள் ‘அண்ணாக்களால்’ கண்ணியமாக நடாத்தப்பட்டாகவே அவர்கள் தெரிவித்தார்கள்.

• வெருகல், கதிரவெளி, வாகரை பிரதேசவாசிகளையும் செவ்வி கண்டிருந்தோம். யாருமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்களிடம் கூறவேயில்லை.

• வெருகல் (தாக்குதல்) சம்பவம் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜெயந்தன் படையணி போராளிகளின் உறவினர்கள், நன்பர்கள்தான் எதிரே கருணா அணியில் நின்ற போராளிகள். அப்படி இருக்க தனது உறவுகளைக் கிழக்கு மாகாணப் போராளிகளே மரியாதைக்; குறைவாக நடாத்தியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.

• விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலுமே பெண்களை மாணபங்கப்படுத்தும் காரியத்தை செய்ததே இல்லை. அவர்களது எதிரிகள் கூட இந்தக் குற்றச்சாட்டை நம்பமாட்டார்கள்.

• கருணா கூட இந்தக் குற்றச்சாட்டை அண்மையில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

• 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வீ.பி. கட்சி 2008ம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணசபையின் சகல அதிகாரங்களுடன் கொலோச்சியிருந்தது. இற்றை வரைக்கும் அலுவலகங்கள் வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வெருகலில் அப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றிருந்தால் ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை?

• ஏன் ஆதாரங்களைத் திரட்டவில்லை.

• அந்த சண்டையில் இரு தரப்புக்களிலும் கலந்துகொண்ட எத்தனையோ போராளிகள் இன்றைக்கும் வாழும் சாட்சிகளாக அந்த மண்ணிலேயே இருக்கின்றார்கள். ஏன் அவர்களிடம் ஆதாரங்களைத் தேடவில்லை?

• மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை அகற்றிய தற்போது சுவிட்சலாந்தில் வசிக்கும் அரசசார்பற்ற நிறுவண ஊழியரிடம் பேசும் போது, தொலைவில் இருந்து சுடப்பட்ட காயங்களே அனைத்து போராளிகளின் உடல்களிலும் காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

• வெருகல் சண்டையில்; பங்குபற்றிய பல விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களை பிரித்தானியாவிலும், சுவிட்சலாந்திலும், பிரான்சிலும் செவ்விகண்டிருந்தேன். அவர்களில் எவருமே அப்படியான ஒரு துர் சம்பவம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்பதும், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார்கள்.

இந்த சம்பவத்தின் போது என்னால் பதிவு செய்யப்பட்ட செவ்விகள் ஒலிப்பதிவு ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்ததும் நிச்சயம் வெளியிடுவேன்.

நன்றி .

பசிலன் 2000

ஈழப்போரின்போது புலிகள் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யாமல், தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில் புதிய நவீன ஆயுதங்களைத் தயாரித்து வந்தார்கள்.அப்படி சொந்தமாக மார்ட்டர் பீரங்கி, ராக்கெட் லாஞ்சர், மிதிவெடி போன்ற பற்பல ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. புலிகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ராணுவம் பெரிதாக எந்த ஆயுதத்தையும் உருவாக்கவில்லை. (தெரிஞ்சா செய்ய மாட்டோமா?) அனைத்துவகை ஆயுதங்களையும் வெளிநாடுகளில் இருந்தே இலங்கை அரசு காசை கொட்டி இறக்குமதி செய்து வந்தது.

புலிகளோ புதுப்புது வகை ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கி வந்தனர். அந்த ஆயுதங்களுக்கு, மறைந்த தங்கள் போராளிகளின் பெயர்களை அவர்கள் சூட்டி வந்தனர். 

புலிகள், தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய கனரக மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000‘ என பெயர் சூட்டியிருந்தனர். லாரி போன்ற ஒரு வாகனத்தின் மீது இதை நிலைநிறுத்தி இயக்க முடியும். இடம்விட்டு இடம் எளிதாக கொண்டு செல்ல முடியும்.

மேஜர் பசிலன் (நல்லய்யா அமிர்தலிங்கம்), முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். புலிகளின் வன்னிப்பகுதி தளபதியாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் புலிகளின் தலைசிறந்த தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் ஒரு காலத்தில் போராளியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படைக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ராணுவத்தின் பல டாங்குகளைச் சிதறடித்தவர் பசிலன். 1987ஆம் ஆண்டு எறிகணை தாக்குதல் ஒன்றில் இவர் வீரமரணம் எய்தினார்.

இந்த மேஜர் பசிலனின் பெயரைத்தான் தங்களது நவீன மார்ட்டர் பீரங்கிக்குப் புலிகள் சூட்டியிருந்தனர். புலிகளின் மார்ட்டர் பீரங்கிக்கு பசிலன் என்ற பெயர் சரி. அது என்ன 2000?

2000 ஆண்டு அப்போது தொலைவில் இருந்தது. எனினும், இரண்டாயிரம் ஆண்டு வந்தாலும்கூட இதுபோன்ற ஒரு மார்ட்டர் பீரங்கியை உலகில் வேறு எந்த ஒரு விடுதலை இயக்கத்தாலும் தயாரிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட புதிய மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000’ என புலிகள் பெயர் சூட்டியிருந்தனர்.(பின்னர் பசிலன் 5000 எல்லாம் வந்தது தனிக்கதை)

பசிலன் மார்ட்டர் பீரங்கியில், ஆரம்பகாலத்தில் மார்ட்டர் குண்டுகளுக்குப் பதிலாக சோதனை அடிப்படையில் 25 முதல் 30 கிலோ எடையுள்ள மணல் பைகளை  வைத்து சுட்டு, அந்த மார்ட்டர் பீரங்கியின் சூட்டுத்திறனை புலிகள் மெருகேற்றி இருந்தனர். 


80களில் புலிகள் பாபா மார்ட்டர்கள் பீரங்கிகளைப் பயன்படுத்தி வந்தார்கள். காலத்திகேற்ப மாற்றம் தேவை என்பதால் புலிகளின் பயன்பாட்டுக்கு வந்த கனரக மார்ட்டர்தான் பசிலன் 2000.

வாகனத்தில் இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய மார்ட்டர் பீரங்கியான பசிலன் ஒற்றைக்குழாய் கொண்டது. வழக்கமாக மார்ட்டர் பீரங்கிக் குழாய்கள் சற்று செங்குத்தாக நிற்கும். ஆனால் பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கியின் குழாய் சற்றே சரிந்து நீண்டிருக்கும். காட்டுக்குள் இலைதழைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எளிதாக ஊடுருவிச் செல்ல இந்த ஏற்பாடு.

அதுபோல பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தும்போது அதன் குண்டுகள் தணல்பிழம்பை கக்காது. இதனால் தணலும், புகையும் வருவதைப்  பார்த்து பசிலன் 2000 இருக்கும் இடத்தை இருட்டில் அல்லது காட்டில் கண்டுபிடித்து யாரும் பதில் தாக்குதல் நடத்த முடியாது. (ங்கொய்யால. யார் கிட்ட?)

புலிகளின் இந்த பசிலன் மார்ட்டர் பீரங்கியால் அதிகம் அவதிப்பட்டு வந்தது யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தளம்தான். பலாலி விமானப்படை தளத்தில் முடங்கிக் கிடந்த ராணுவத்துக்கு பசிலன் பீரங்கி அவ்வப்போது சிறப்பான முறையில் விருந்து அளித்து வந்தது. 

30 கிலோ அளவுள்ள மார்ட்டர் குண்டுகள் குறிதவறாமல் பலாலி விமானப்படைத் தளத்துக்குள் அடிக்கடி வந்து விழுந்தன. விமான ஓடுபாதை கூட புலிகளின் மார்ட்டர் பீரங்கித் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

புலிகளின் பசிலன் 2000 மார்ட்டர்களின் ஆரம்பக் கட்ட தாக்குதல் தொலைவு வெறும் 200 மீட்டர்தான். போகப்போக பசிலன் 81 மி.மீ. மார்ட்டர் மார்ட்டர்களின் தாக்குதல் தொலைவு 5 ஆயிரத்து 400 மீட்டராக நீளத் தொடங்கியது.

அச்சுவேலி தெற்குப்பகுதியில் இருந்து 81 மி.மீ. பசிலன் மார்ட்டர்களால் புலிகள் தாக்குதல் நடத்தியபோதெல்லாம், குண்டுகள்  4 முதல் 5 கி.மீ. தூரம் பறந்து வந்த பலாலியில் விழுந்தன. ஒருமுறை காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பலியானார். ஒருமுறை விமானநிலைய டெர்மினல் கட்டடத்துக்கு மிக அருகில் ஒரு குண்டுவிழுந்து வெடித்தது. இன்னொருமுறை விமானப்படைக்குச் சொந்தமான சீனத்தயாரிப்பு ஒய்-8 போக்குவரத்து விமானம் மயிரிழையில் காயலான் கடைக்குப் போகாமல் தப்பியது. 

ஒருமுறை விமானதளத்தின் கண்ட்ரோல் கோபுரம் அருகே புலிகளின் மார்ட்டர் குண்டுவிழுந்து வெடித்ததில் 2 ராணுவத்தினர் பலியானார்கள். 16 பேர் வரை காயமடைந்தார்கள். ஒருமுறை மற்றொரு விமானமும் நூலிழையில் தப்பிப்பிழைத்தது.

புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசிலன் 2000 கனரக மார்ட்டர் பீரங்கி, ஒரு சிறுரக ஆர்டிலரி பீரங்கி போலவே செயல்பட்டு வந்தது. பழையகாலத்து ஒனிட்டா டி.வி.யை ‘நமது பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை’ என்று விளம்பரப்படுத்துவார்களே. அதைப்போல புலிகளின் பசிலன் 2000, பிறநாட்டு விடுதலை போராளி இயக்கங்களுக்கு பெரும் பொறாமை தருவதாக இருந்தது. 

சிங்கள ராணுவத்துக்கோ அது உச்சகட்ட எரிச்சலை அளித்து வந்தது. ஒரு கட்டத்தில் புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதுபோல சிங்கள ராணுவமும் ‘கெம்பியா’ என்ற பெயரில் ஒரு மார்ட்டர் பீரங்கியைத் தயாரித்தது. அது உண்மையில் உருவாக்கப்பட்டதா? போரில் பயன்பட்டதா? இல்லையா? என்பது புத்த பிரானுக்கே வெளிச்சம்.

புலிகளின் பசிலன் 2000 பீரங்கியை யார் மறந்தாலும் மறந்திருக்கலாம். ஆனால், பலாலி விமானப்படைத்தளம் மட்டும் மறந்திருக்கவே முடியாது. காரணம். அவ்வளவு அடி!

Monday 25 May 2020

பிரபாகரனை ராஜீவ் ஏமாற்றினாரா? ராஜீவை பிரபாகரன் ஏமாற்றினாரா?

ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். 
பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி.

ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்து கொள்ளப் போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள்.

பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.

இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள்.

அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார்.

அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார்.

'ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம்.அதற்கு ராஜீவ் காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார்.

இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்சினையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும் என ராஜீவ் கூறினார்.
..
இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த இரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார்.

அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்த போது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.

1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.

2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன. 
3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.

உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்த போது, திலீபன் சாகும்வரை உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை.

இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.

சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலி செய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய இராணுவத் தளபதியின் அனுமதி பெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது.ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார்.

சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை.

17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார்.

ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார்.

இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்து வந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள இராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.
..
ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய இராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்?

இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன.

பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப் போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார்.

இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார்.

இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார்.

உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார்.

போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார்.

புலிகளுடன் போர் தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது.

ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது.

போஃபர்ஸ் பிரச்சினையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக் கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது.

துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன...

Sunday 17 May 2020

18.05.2020 நினைவேந்தல் நாள்:- “முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஒரு இன விடுதலையின் தொடக்கம்”

முள்ளிவாய்க்கால் – பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை ஈவிரக்கமின்றி சிங்கள இராணுவம் சர்வதேச வல்லரசுகளின் துணையோடு படுகொலை செய்து கொன்றழித்த, உலக வரலாற்றில் மிகப்பெரும் இனப்படுகொலையாக எழுதப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போர் நடந்து முடிந்த ஒரு இரத்தக்கறை படிந்த மனித ஆத்மாக்களின் உறைவிடம் தான் முள்ளிவாய்க்கால்.. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து 2009 வரை சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாட்களே 2009 மே 17,18,19 ஆகும்.35 ஆண்டு கால தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னிகரில்லாத் தலைவனின் வழியில் விடுதலையை நோக்கி பயணித்த எமது மக்களின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சர்வதேச வல்லரசுகள் சிங்கள இனவாத அரசோடு இணைந்து 2009 மே 18 ம் நாளன்று நடத்தி முடித்த மிகப்பெரும் இனப்படுகொலையின் நினைவு நாளான இன்று உலகம் எங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சங்களில் எமது தாயக விடுதலையின் பாதையில் பயணித்து தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், ஈவிரக்கமின்றி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எமது மக்களையும் நினைவுகூர்ந்து எமது தாயக விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தமிழர்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆம் 2008 ம் ஆண்டின் அரச பதிவேடுகளின் அடிப்படையில் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் வன்னியில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.05.2009 அன்று போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்து மக்களும் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை அரச படைகளால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அரச படைகளால் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 2 1 70 ஆயிரம் பேர் என கூறப்பட்டது.
 அப்படியானால் மீதமுள்ள 1 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் நிலை என்ன..? அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா...? எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்..? இலங்கை அரசு எதை மறைக்கிறது...? அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியே பதிவாகியிருந்தது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாக அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்ற செய்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அப்படியானால் வன்னியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ( 30%) தமிழ்மக்கள் ஒராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தமான உண்மை மட்டுமல்ல போரை நடத்தி முடித்த தமிழ் இனக்கொலையாளி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.வியட்நாமை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிப்பு செய்த பத்தாண்டு காலத்தில் 15 லட்சம் மக்கள். படுகொலை செய்யப்பட்டனர். வியட்நாம் மக்கள் தொகையில் 6% விகிதம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
வியட்னாமில் பத்தாண்டுகளில் படுகொலைசெய்யப்பட்ட மக்கள் தொகையும் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வன்னியில் வாழ்ந்த மக்கள் தொகையில் 30% வீதமான மக்கள் ஒரு ஆண்டில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரம் சர்வதேச சமூகத்துக்கு நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாகவே உள்ளது. 
தாய்க்கு முன் மகனும், தந்தைக்கு முன் மகளும் என நிர்வாணப்படுத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும், போரில் இறந்த பெண் போராளிகளின் உடைகளைக் களைந்து சிங்களத் காம வெறியர்களின் கொடூரமான இச்சைகளைப் போக்கும் செயல்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேற்றியதும், சரணடைந்த போராளிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து சர்வதேச போர் விதிமுறைகளையும் தாண்டி மிருகத்தனமாக படுகொலை செய்ததையும் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் நன்கு அறிந்திருந்தும் இலங்கை பேரினவாத அரசின் இந்த மிகப்பெரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான விசாரணைகளை சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக இன்றுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாதது உலகத் தமிழர்களிடையே மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எனக்கூறி தான் நடத்தி முடித்த இனப்படுகொலைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று கருதப்படுபவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் சர்வதேச சமூகமும் சரி, ஐக்கிய நாடுகள் சபையும் சரி முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாது மௌனம் சாதிப்பது என்பது தமிழ் மக்களிடையே பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுமட்டுமன்றி 35 ஆண்டுகால விடுதலைப் போருக்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர சர்வதேச சமூகம் தயக்கம் காட்டி வருகிறது என்பதே உலகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. இனப்படுகொலைக்கு பின்னரும் ஈழத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகம், இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்தகட்ட இன அழிப்புக்கான நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.போர் முடிவுக்கு வந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிய இன்றைய தினத்திலும் இளைஞர்கள் கடத்தப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. 2009 ம் ஆண்டுக் காலப் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் குடும்ப ஆட்சி நடத்தியவர்களே இன்றும் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்தவுடனேயே தமிழர் தாயகப் பகுதி எனக்கும் மீண்டும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிகள் எங்கும் சோதனை சாவடிகளும், ரோந்து நடவடிக்கைகளும், வாகன சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு தமிழ் மக்கள் மிகுந்த அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்றுமில்லாதவாறு சிங்களக் குடியேற்றங்களும், கைது நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படுகின்ற அரசியல் தலைவர்கள் இப்படியான சம்பவங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் இலங்கை புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். இதனால் எந்தவிதமான உண்மைச் சம்பவங்களும் ஒளிவிளக்கு கொண்டு செல்வதற்கு தயங்குகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாதவாறு ஊடகத் துறையினரும், செய்தியாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மிகவும் மதிநுட்பத்துடனும், சர்வாதிகார போக்குடனும் தனது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திவரும் ஒரு இனத்தை அழித்த குற்றவாளி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் திரை மறைவில் மீண்டும் ஒரு இன அழிப்பையே நடத்திக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினராலும், காவல்துறையினராலும் வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். தமிழர்களுடைய விடுதலைப் போரை அழித்துவிட்டோம், விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டு விட்டோம் என்று மமதை தட்டும் இலங்கையரசு புலிகளை அளித்ததாக கூறி ஆண்டுதோறும் வெற்றி விழா கொண்டாடி வருகிறது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடைய நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பதுடன் தமிழர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட தனது சர்வாதிகார போக்கை பயன்படுத்தி அடக்கி வருகிறது.புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், தாயகத்து தமிழர்களும் தொடர்ந்து போராடிய போராட்டங்களால் இறுதிக் கட்டப் போரின்போது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், சர்வதேச சட்ட விதிகளை மீறியது தொடர்பாகவும் இலங்கை அரசை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. பன்னாட்டு விசாரணைக் குழுவிடம் நீதி கோரி தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசு நிகழ்த்திய குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கையளித்தனர். 2015 ஆண்டு மார்ச் மாதம் பன்னாட்டு விசாரணைப் புலனாய்வு அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சமர்பித்திருக்க வேண்டிய நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தோற்கடிக்கப்பட்டார். புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேனா அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி செம்டம்பர் மாதம் ஐ.நா மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விசாரணை அறிக்கையை காலம் தாழ்த்தி இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் கடும் முயற்சியால் அடுத்தடுத்த வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் ஐ.நா மன்றக் கூட்டத் தொடருக்கு தள்ளிப் போடப்பட்டன.
2009 ல் நடந்த இறுதிக்கட்ட போருக்கான ராணுவ ஆலோசனைகளையும், இராணுவத் தளவாடங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கி சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி இலட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று ஒழிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய அரசு இன்று வரை சிங்கள இனவாத அரசை இனப்படுகொலை குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், பன்னாட்டு விசாரணைக் குழுவினரால் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இந்திய மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிழித்து எறித்து தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்தது இந்திய மத்திய அரசு. மாறாக தமிழகத் தலைவர்களையும், தமிழக மக்களையும் திருப்திப் படுத்தும் நோக்கோடு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் சீனாவின் தலையீடுகளை குறைக்கும்படியும், சீனாவுக்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும்படியும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து விட்டு இந்திய புலனாய்வாளர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தடைகளும் இன்றி தாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி விட்டு இலங்கைத்தீவில் இந்தியாவின் ஒரு நிலையான இருப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகள முடித்துவிட்டு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஈழத் தமிழர்களின் நிலை பற்றியும், நடந்து முடிந்த இனப்படுகொலை பற்றியும் எந்த விதமான கருத்துக்களையும் கூறாது இலங்கை அரசை திருப்திபடுத்திவிட்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.
2009 ல் நடைபெற்றது மனித நேயமற்ற மாபெரும் இனப்படுகொலை எனவும், சர்வதேச பன்னாட்டு விசாரணைக் குளுவை இலங்கையில் அனுமதிக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசுக்கு கையளிக்கப்பட்டது. வழமைபோல அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்ட இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. மாறாக இலங்கைக்கு உள்ளேயே விசாரணைக் குழுவை நியமித்து உள்நாட்டிலேயே விசாரணைகளை மேற்கொள்வதாக அறிவித்து இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சர்வதேச விசாரணைக்குழுவை தடுத்து நிறுத்திய சாதனையை தனது நூறு நாள் ஆட்சியின் சாதனையாக இலங்கை அரசு மார்தட்டி மகிழ்ந்து கொண்டது. இலங்கையில் ஏற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிமாற்றத்தை நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் குழிதோண்டிப் புதைத்த அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சர்வதேச பூகோள அரசியலுக்காக இலங்கையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக ஒரு இனம் அளிக்கப்பட்ட மிகக்கொடூரமான மானுட அழிவினை சாதாரணமாக எண்ணி 11 ஆண்டுகள் ஆகியும் ஒரு இன அழிப்புக்கான எந்தவிதமான நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறாதவாறு இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுத்து வருவதே தமிழ் மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.
2009இல் எமது இனத்தை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று 2020இல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதே தமிழ் மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எனவே தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க எமது இன விடுதலைப் போரில் மிலேச்சத்தனமாக, கொத்துக்கொத்தாக சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்டு தமிழ் மண்ணை முத்தமிட்டவர்களை எமது நெஞ்சங்களில் நினைவுகூர்ந்து எமது தாயக விடுதலையை வென்றெடுக்க சமகால அரசியல் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தை உலகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழர்களும் உணர்ந்து கொண்டு இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கான, வருங்கால சந்ததியின் நல்வாழ்வுக்கான, நமது தேசிய இனத்தின் விடுதலைக்கான புரிதலுடன் அனைவரும் கரங் கோத்துக் கொள்வோம். இன்றைய நாளில் எமது இன விடுதலைப் போரில் சிங்கள இனவாத அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும், எமது விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து. “போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் மாறாது” என்ற சிந்தனையோடு எமது இன விடுதலையை நோக்கி, அளிக்கப்பட்ட எமது இனத்தின் மீள் எழுச்சிக்காக ஒரு கரம் கோர்த்து புறப்படுவோம்.


“ முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழ் இன விடுதலையின் தொடக்கம்”


18.05.2020
எழுத்து:
வன்னியூர்: கு. வாணன்