Sunday 17 May 2020

18.05.2020 நினைவேந்தல் நாள்:- “முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஒரு இன விடுதலையின் தொடக்கம்”

முள்ளிவாய்க்கால் – பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை ஈவிரக்கமின்றி சிங்கள இராணுவம் சர்வதேச வல்லரசுகளின் துணையோடு படுகொலை செய்து கொன்றழித்த, உலக வரலாற்றில் மிகப்பெரும் இனப்படுகொலையாக எழுதப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போர் நடந்து முடிந்த ஒரு இரத்தக்கறை படிந்த மனித ஆத்மாக்களின் உறைவிடம் தான் முள்ளிவாய்க்கால்.. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து 2009 வரை சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாட்களே 2009 மே 17,18,19 ஆகும்.35 ஆண்டு கால தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னிகரில்லாத் தலைவனின் வழியில் விடுதலையை நோக்கி பயணித்த எமது மக்களின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சர்வதேச வல்லரசுகள் சிங்கள இனவாத அரசோடு இணைந்து 2009 மே 18 ம் நாளன்று நடத்தி முடித்த மிகப்பெரும் இனப்படுகொலையின் நினைவு நாளான இன்று உலகம் எங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சங்களில் எமது தாயக விடுதலையின் பாதையில் பயணித்து தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், ஈவிரக்கமின்றி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எமது மக்களையும் நினைவுகூர்ந்து எமது தாயக விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தமிழர்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆம் 2008 ம் ஆண்டின் அரச பதிவேடுகளின் அடிப்படையில் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் வன்னியில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.05.2009 அன்று போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்து மக்களும் அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை அரச படைகளால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அரச படைகளால் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 2 1 70 ஆயிரம் பேர் என கூறப்பட்டது.
 அப்படியானால் மீதமுள்ள 1 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் நிலை என்ன..? அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா...? எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்..? இலங்கை அரசு எதை மறைக்கிறது...? அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியே பதிவாகியிருந்தது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாக அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்ற செய்தியை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அப்படியானால் வன்னியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ( 30%) தமிழ்மக்கள் ஒராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தமான உண்மை மட்டுமல்ல போரை நடத்தி முடித்த தமிழ் இனக்கொலையாளி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.வியட்நாமை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிப்பு செய்த பத்தாண்டு காலத்தில் 15 லட்சம் மக்கள். படுகொலை செய்யப்பட்டனர். வியட்நாம் மக்கள் தொகையில் 6% விகிதம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
வியட்னாமில் பத்தாண்டுகளில் படுகொலைசெய்யப்பட்ட மக்கள் தொகையும் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வன்னியில் வாழ்ந்த மக்கள் தொகையில் 30% வீதமான மக்கள் ஒரு ஆண்டில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரம் சர்வதேச சமூகத்துக்கு நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாகவே உள்ளது. 
தாய்க்கு முன் மகனும், தந்தைக்கு முன் மகளும் என நிர்வாணப்படுத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும், போரில் இறந்த பெண் போராளிகளின் உடைகளைக் களைந்து சிங்களத் காம வெறியர்களின் கொடூரமான இச்சைகளைப் போக்கும் செயல்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேற்றியதும், சரணடைந்த போராளிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து சர்வதேச போர் விதிமுறைகளையும் தாண்டி மிருகத்தனமாக படுகொலை செய்ததையும் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் நன்கு அறிந்திருந்தும் இலங்கை பேரினவாத அரசின் இந்த மிகப்பெரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான விசாரணைகளை சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக இன்றுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாதது உலகத் தமிழர்களிடையே மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் எனக்கூறி தான் நடத்தி முடித்த இனப்படுகொலைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று கருதப்படுபவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் சர்வதேச சமூகமும் சரி, ஐக்கிய நாடுகள் சபையும் சரி முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளாது மௌனம் சாதிப்பது என்பது தமிழ் மக்களிடையே பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுமட்டுமன்றி 35 ஆண்டுகால விடுதலைப் போருக்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர சர்வதேச சமூகம் தயக்கம் காட்டி வருகிறது என்பதே உலகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. இனப்படுகொலைக்கு பின்னரும் ஈழத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகம், இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்தகட்ட இன அழிப்புக்கான நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.போர் முடிவுக்கு வந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிய இன்றைய தினத்திலும் இளைஞர்கள் கடத்தப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. 2009 ம் ஆண்டுக் காலப் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் குடும்ப ஆட்சி நடத்தியவர்களே இன்றும் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்தவுடனேயே தமிழர் தாயகப் பகுதி எனக்கும் மீண்டும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிகள் எங்கும் சோதனை சாவடிகளும், ரோந்து நடவடிக்கைகளும், வாகன சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு தமிழ் மக்கள் மிகுந்த அச்சம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்றுமில்லாதவாறு சிங்களக் குடியேற்றங்களும், கைது நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படுகின்ற அரசியல் தலைவர்கள் இப்படியான சம்பவங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் இலங்கை புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். இதனால் எந்தவிதமான உண்மைச் சம்பவங்களும் ஒளிவிளக்கு கொண்டு செல்வதற்கு தயங்குகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாதவாறு ஊடகத் துறையினரும், செய்தியாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மிகவும் மதிநுட்பத்துடனும், சர்வாதிகார போக்குடனும் தனது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திவரும் ஒரு இனத்தை அழித்த குற்றவாளி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் திரை மறைவில் மீண்டும் ஒரு இன அழிப்பையே நடத்திக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினராலும், காவல்துறையினராலும் வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். தமிழர்களுடைய விடுதலைப் போரை அழித்துவிட்டோம், விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டு விட்டோம் என்று மமதை தட்டும் இலங்கையரசு புலிகளை அளித்ததாக கூறி ஆண்டுதோறும் வெற்றி விழா கொண்டாடி வருகிறது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடைய நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பதுடன் தமிழர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட தனது சர்வாதிகார போக்கை பயன்படுத்தி அடக்கி வருகிறது.புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், தாயகத்து தமிழர்களும் தொடர்ந்து போராடிய போராட்டங்களால் இறுதிக் கட்டப் போரின்போது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், சர்வதேச சட்ட விதிகளை மீறியது தொடர்பாகவும் இலங்கை அரசை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. பன்னாட்டு விசாரணைக் குழுவிடம் நீதி கோரி தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசு நிகழ்த்திய குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கையளித்தனர். 2015 ஆண்டு மார்ச் மாதம் பன்னாட்டு விசாரணைப் புலனாய்வு அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சமர்பித்திருக்க வேண்டிய நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தோற்கடிக்கப்பட்டார். புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேனா அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி செம்டம்பர் மாதம் ஐ.நா மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விசாரணை அறிக்கையை காலம் தாழ்த்தி இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் கடும் முயற்சியால் அடுத்தடுத்த வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் ஐ.நா மன்றக் கூட்டத் தொடருக்கு தள்ளிப் போடப்பட்டன.
2009 ல் நடந்த இறுதிக்கட்ட போருக்கான ராணுவ ஆலோசனைகளையும், இராணுவத் தளவாடங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கி சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி இலட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று ஒழிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய அரசு இன்று வரை சிங்கள இனவாத அரசை இனப்படுகொலை குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், பன்னாட்டு விசாரணைக் குழுவினரால் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இந்திய மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிழித்து எறித்து தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்தது இந்திய மத்திய அரசு. மாறாக தமிழகத் தலைவர்களையும், தமிழக மக்களையும் திருப்திப் படுத்தும் நோக்கோடு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் சீனாவின் தலையீடுகளை குறைக்கும்படியும், சீனாவுக்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும்படியும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து விட்டு இந்திய புலனாய்வாளர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தடைகளும் இன்றி தாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி விட்டு இலங்கைத்தீவில் இந்தியாவின் ஒரு நிலையான இருப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகள முடித்துவிட்டு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஈழத் தமிழர்களின் நிலை பற்றியும், நடந்து முடிந்த இனப்படுகொலை பற்றியும் எந்த விதமான கருத்துக்களையும் கூறாது இலங்கை அரசை திருப்திபடுத்திவிட்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.
2009 ல் நடைபெற்றது மனித நேயமற்ற மாபெரும் இனப்படுகொலை எனவும், சர்வதேச பன்னாட்டு விசாரணைக் குளுவை இலங்கையில் அனுமதிக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசுக்கு கையளிக்கப்பட்டது. வழமைபோல அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்ட இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. மாறாக இலங்கைக்கு உள்ளேயே விசாரணைக் குழுவை நியமித்து உள்நாட்டிலேயே விசாரணைகளை மேற்கொள்வதாக அறிவித்து இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சர்வதேச விசாரணைக்குழுவை தடுத்து நிறுத்திய சாதனையை தனது நூறு நாள் ஆட்சியின் சாதனையாக இலங்கை அரசு மார்தட்டி மகிழ்ந்து கொண்டது. இலங்கையில் ஏற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிமாற்றத்தை நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் குழிதோண்டிப் புதைத்த அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சர்வதேச பூகோள அரசியலுக்காக இலங்கையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக ஒரு இனம் அளிக்கப்பட்ட மிகக்கொடூரமான மானுட அழிவினை சாதாரணமாக எண்ணி 11 ஆண்டுகள் ஆகியும் ஒரு இன அழிப்புக்கான எந்தவிதமான நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறாதவாறு இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுத்து வருவதே தமிழ் மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.
2009இல் எமது இனத்தை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று 2020இல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதே தமிழ் மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. எனவே தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க எமது இன விடுதலைப் போரில் மிலேச்சத்தனமாக, கொத்துக்கொத்தாக சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்டு தமிழ் மண்ணை முத்தமிட்டவர்களை எமது நெஞ்சங்களில் நினைவுகூர்ந்து எமது தாயக விடுதலையை வென்றெடுக்க சமகால அரசியல் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தை உலகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழர்களும் உணர்ந்து கொண்டு இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கான, வருங்கால சந்ததியின் நல்வாழ்வுக்கான, நமது தேசிய இனத்தின் விடுதலைக்கான புரிதலுடன் அனைவரும் கரங் கோத்துக் கொள்வோம். இன்றைய நாளில் எமது இன விடுதலைப் போரில் சிங்கள இனவாத அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும், எமது விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து. “போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் மாறாது” என்ற சிந்தனையோடு எமது இன விடுதலையை நோக்கி, அளிக்கப்பட்ட எமது இனத்தின் மீள் எழுச்சிக்காக ஒரு கரம் கோர்த்து புறப்படுவோம்.


“ முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழ் இன விடுதலையின் தொடக்கம்”


18.05.2020
எழுத்து:
வன்னியூர்: கு. வாணன்

No comments:

Post a Comment