Saturday 30 May 2020

பசிலன் 2000

ஈழப்போரின்போது புலிகள் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யாமல், தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில் புதிய நவீன ஆயுதங்களைத் தயாரித்து வந்தார்கள்.அப்படி சொந்தமாக மார்ட்டர் பீரங்கி, ராக்கெட் லாஞ்சர், மிதிவெடி போன்ற பற்பல ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. புலிகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ராணுவம் பெரிதாக எந்த ஆயுதத்தையும் உருவாக்கவில்லை. (தெரிஞ்சா செய்ய மாட்டோமா?) அனைத்துவகை ஆயுதங்களையும் வெளிநாடுகளில் இருந்தே இலங்கை அரசு காசை கொட்டி இறக்குமதி செய்து வந்தது.

புலிகளோ புதுப்புது வகை ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கி வந்தனர். அந்த ஆயுதங்களுக்கு, மறைந்த தங்கள் போராளிகளின் பெயர்களை அவர்கள் சூட்டி வந்தனர். 

புலிகள், தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய கனரக மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000‘ என பெயர் சூட்டியிருந்தனர். லாரி போன்ற ஒரு வாகனத்தின் மீது இதை நிலைநிறுத்தி இயக்க முடியும். இடம்விட்டு இடம் எளிதாக கொண்டு செல்ல முடியும்.

மேஜர் பசிலன் (நல்லய்யா அமிர்தலிங்கம்), முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். புலிகளின் வன்னிப்பகுதி தளபதியாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் புலிகளின் தலைசிறந்த தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் ஒரு காலத்தில் போராளியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படைக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ராணுவத்தின் பல டாங்குகளைச் சிதறடித்தவர் பசிலன். 1987ஆம் ஆண்டு எறிகணை தாக்குதல் ஒன்றில் இவர் வீரமரணம் எய்தினார்.

இந்த மேஜர் பசிலனின் பெயரைத்தான் தங்களது நவீன மார்ட்டர் பீரங்கிக்குப் புலிகள் சூட்டியிருந்தனர். புலிகளின் மார்ட்டர் பீரங்கிக்கு பசிலன் என்ற பெயர் சரி. அது என்ன 2000?

2000 ஆண்டு அப்போது தொலைவில் இருந்தது. எனினும், இரண்டாயிரம் ஆண்டு வந்தாலும்கூட இதுபோன்ற ஒரு மார்ட்டர் பீரங்கியை உலகில் வேறு எந்த ஒரு விடுதலை இயக்கத்தாலும் தயாரிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட புதிய மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000’ என புலிகள் பெயர் சூட்டியிருந்தனர்.(பின்னர் பசிலன் 5000 எல்லாம் வந்தது தனிக்கதை)

பசிலன் மார்ட்டர் பீரங்கியில், ஆரம்பகாலத்தில் மார்ட்டர் குண்டுகளுக்குப் பதிலாக சோதனை அடிப்படையில் 25 முதல் 30 கிலோ எடையுள்ள மணல் பைகளை  வைத்து சுட்டு, அந்த மார்ட்டர் பீரங்கியின் சூட்டுத்திறனை புலிகள் மெருகேற்றி இருந்தனர். 


80களில் புலிகள் பாபா மார்ட்டர்கள் பீரங்கிகளைப் பயன்படுத்தி வந்தார்கள். காலத்திகேற்ப மாற்றம் தேவை என்பதால் புலிகளின் பயன்பாட்டுக்கு வந்த கனரக மார்ட்டர்தான் பசிலன் 2000.

வாகனத்தில் இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய மார்ட்டர் பீரங்கியான பசிலன் ஒற்றைக்குழாய் கொண்டது. வழக்கமாக மார்ட்டர் பீரங்கிக் குழாய்கள் சற்று செங்குத்தாக நிற்கும். ஆனால் பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கியின் குழாய் சற்றே சரிந்து நீண்டிருக்கும். காட்டுக்குள் இலைதழைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எளிதாக ஊடுருவிச் செல்ல இந்த ஏற்பாடு.

அதுபோல பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தும்போது அதன் குண்டுகள் தணல்பிழம்பை கக்காது. இதனால் தணலும், புகையும் வருவதைப்  பார்த்து பசிலன் 2000 இருக்கும் இடத்தை இருட்டில் அல்லது காட்டில் கண்டுபிடித்து யாரும் பதில் தாக்குதல் நடத்த முடியாது. (ங்கொய்யால. யார் கிட்ட?)

புலிகளின் இந்த பசிலன் மார்ட்டர் பீரங்கியால் அதிகம் அவதிப்பட்டு வந்தது யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தளம்தான். பலாலி விமானப்படை தளத்தில் முடங்கிக் கிடந்த ராணுவத்துக்கு பசிலன் பீரங்கி அவ்வப்போது சிறப்பான முறையில் விருந்து அளித்து வந்தது. 

30 கிலோ அளவுள்ள மார்ட்டர் குண்டுகள் குறிதவறாமல் பலாலி விமானப்படைத் தளத்துக்குள் அடிக்கடி வந்து விழுந்தன. விமான ஓடுபாதை கூட புலிகளின் மார்ட்டர் பீரங்கித் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

புலிகளின் பசிலன் 2000 மார்ட்டர்களின் ஆரம்பக் கட்ட தாக்குதல் தொலைவு வெறும் 200 மீட்டர்தான். போகப்போக பசிலன் 81 மி.மீ. மார்ட்டர் மார்ட்டர்களின் தாக்குதல் தொலைவு 5 ஆயிரத்து 400 மீட்டராக நீளத் தொடங்கியது.

அச்சுவேலி தெற்குப்பகுதியில் இருந்து 81 மி.மீ. பசிலன் மார்ட்டர்களால் புலிகள் தாக்குதல் நடத்தியபோதெல்லாம், குண்டுகள்  4 முதல் 5 கி.மீ. தூரம் பறந்து வந்த பலாலியில் விழுந்தன. ஒருமுறை காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பலியானார். ஒருமுறை விமானநிலைய டெர்மினல் கட்டடத்துக்கு மிக அருகில் ஒரு குண்டுவிழுந்து வெடித்தது. இன்னொருமுறை விமானப்படைக்குச் சொந்தமான சீனத்தயாரிப்பு ஒய்-8 போக்குவரத்து விமானம் மயிரிழையில் காயலான் கடைக்குப் போகாமல் தப்பியது. 

ஒருமுறை விமானதளத்தின் கண்ட்ரோல் கோபுரம் அருகே புலிகளின் மார்ட்டர் குண்டுவிழுந்து வெடித்ததில் 2 ராணுவத்தினர் பலியானார்கள். 16 பேர் வரை காயமடைந்தார்கள். ஒருமுறை மற்றொரு விமானமும் நூலிழையில் தப்பிப்பிழைத்தது.

புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசிலன் 2000 கனரக மார்ட்டர் பீரங்கி, ஒரு சிறுரக ஆர்டிலரி பீரங்கி போலவே செயல்பட்டு வந்தது. பழையகாலத்து ஒனிட்டா டி.வி.யை ‘நமது பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை’ என்று விளம்பரப்படுத்துவார்களே. அதைப்போல புலிகளின் பசிலன் 2000, பிறநாட்டு விடுதலை போராளி இயக்கங்களுக்கு பெரும் பொறாமை தருவதாக இருந்தது. 

சிங்கள ராணுவத்துக்கோ அது உச்சகட்ட எரிச்சலை அளித்து வந்தது. ஒரு கட்டத்தில் புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதுபோல சிங்கள ராணுவமும் ‘கெம்பியா’ என்ற பெயரில் ஒரு மார்ட்டர் பீரங்கியைத் தயாரித்தது. அது உண்மையில் உருவாக்கப்பட்டதா? போரில் பயன்பட்டதா? இல்லையா? என்பது புத்த பிரானுக்கே வெளிச்சம்.

புலிகளின் பசிலன் 2000 பீரங்கியை யார் மறந்தாலும் மறந்திருக்கலாம். ஆனால், பலாலி விமானப்படைத்தளம் மட்டும் மறந்திருக்கவே முடியாது. காரணம். அவ்வளவு அடி!

No comments:

Post a Comment