Sunday 10 May 2020

அன்னையர் தினமும் இன அழிப்பும்.....!

இன்று எமைப் பெற்றெடுத்த  அன்னைத் தெய்வங்களின் தினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இன்றைய நாள் ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற ஒரு இன அழிப்பின் பதினோராவது ஆண்டை நினைவு கூறுகின்ற ஒரு எழுச்சியின் பாதையைக் காட்டி நிற்கின்ற புனித நாள். 

 

இந்த நாளில் 2009 ம் ஆண்டு இனவெறி பிடித்த சிங்கள வெறியர்களால் எமது  அன்னையர்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாளாகவே ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் வாழுகின்ற  தமிழர்கள் ஆகிய நாம் நினைவு கூறுவது என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஈழதேச அன்னையர்கள் எமது இன விடுதலைப் போரில் செய்த அர்ப்பணிப்புகளும், தியாகங்களும் என்றுமே மறக்கமுடியாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 



எமது கலை பண்பாடு மற்றும் பாரம்பரிய மருத்துவ விழுமியங்களை எம் கைகளில் தந்து எமது இன விடுதலைப் போரின்போது சிங்கள ஏகாதிபத்தியத்தின் பொருளாதார தடைகளையும் தாண்டி ஒரு இனத்தின் மருத்துவ சிற்பிகளாக வாழ்ந்த எமது அன்னையர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளில் அன்னையர் தினத்தை எம்மை ஈன்ற அன்னையர்களின் நினைவு நாளாகவும், அன்னையர்களை இழந்து தவிக்கும் எமது உறவுகளின் வடுக்களை சுமந்த நாளாகவும் நினைவு கூறுவது என்பது சாலப் பொருத்தமானதாக இருக்கும் என்பதே யதார்த்தமான உண்மை.



உலக வல்லாதிக்க அரசுகளின் திட்டமிடல்களில், இந்திய மேலாதிக்கத்தின் வழிநடத்தலில், சிங்கள இனவெறி பிடித்த இனவாத அரசு நடத்தி முடித்த இனப்படுகொலைகளும் இந்த நாளில்தான் நடந்து கொண்டிருந்தது. சொந்த இடங்களை விட்டு தங்கள் உயிர்களை பிடித்தவாறு ஓடி ஓடி ஒதுங்கிய முள்ளிவாய்க்காலில் நச்சுக் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் பீரங்கிகள், அதிநவீன விமான குண்டுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் என அனைத்து போர் ஆயுத வளங்களையும் எமது மக்கள் மீது வீசி மிகப்பெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்த இலங்கை அரசு இன்றைய தினத்திலும் எமது இனத்தை அழிக்கும் ஒரு அரசியல் நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. 



 சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை பயன்படுத்தி அதை சாதகமாக்கிக் கொண்டு மீதமிருக்கும் எமது தமிழினத்தை அளித்து ஒரு இனச் சுத்திகரிப்பை செய்வதற்கான பல திட்டமிடல்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. எமைப் பெற்ற அன்னையர்களை எம் கண்முன்னே சிங்கள காடையர்களின் இனவெறி  பிடித்த தாக்குதலில் பறி கொடுத்த நாம் அன்னையர் தினத்தை கொண்டாடுவதை விட எமை விட்டுப் பிரிந்த அன்னையர்களை எமது உள்ளங்களில் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்துவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.        

2009 ம் ஆண்டு இதேநாளில் எமது அன்னை தெய்வங்களை கொன்றழித்த ஆட்சியின் அதிகார கொலைவெறி நாயகர்கள் இன்றைய அன்னையர் தின நாளிலும் ஆட்சியில் அமர்ந்திருப்பது என்பது அடுத்தகட்ட இன அழிப்பின் தொடக்கம் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.  கோரோனோ என்கின்ற கொடிய கிருமியின் தாக்கத்தால் உலகம் முழுவதும் மனித இனம் கொத்துக கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கை அரசு தேர்தலுக்கான தனது பணிகளை தீவிரமாகச் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தனது குடும்ப ஆட்சியை தக்கவைத்து மீண்டும் ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கையை கச்சிதமாக நடத்தி முடிக்க மிகவும் நுட்பமான முறையில் திட்டங்களை வகுத்து வருகிறார். 



ஈழத்தமிழராகிய நாங்கள் எமது ஈழ விடுதலைப்போரில் பல வடுக்களை சுமந்து எமது தாயக விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளை மாவீரர்களாக அர்ப்பணித்த எமது அன்னையர்களை இந்த நாளில் நினைவுகூறுவதுடன்,  இன்னாளில் எமை விட்டுப் பிரிந்த எமது அன்னை தெய்வங்களுக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்ற இந்தவேளையில் சிங்கள இனவெறி பிடித்த அரசுகளின் இனச் சுத்திகரிப்பில் இருந்து எமது தாய்த் தெய்வங்களை பாதுகாக்க வேண்டிய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.  எனவே இன்றைய நாளில் எமை விட்டுப் பிரிந்த எமது அன்னை தெய்வங்களின் ஆத்மாவின் ஆசிர்வாதத்துடனும்,   முள்ளிவாய்க்காலில் எம்மை விட்டுப் பிரிந்த அனைத்து மக்களின் ஆத்மாவின்  ஆசீர்வாதத்துடனும்,   மாவீரர்களின்  ஆசீர்வாதத்துடனும் எமது நெஞ்சங்களில் உறுதியேற்று  எமது இனவிடுதலையின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு தயாராக வேண்டும் என்பதை இந்நாளில் எமது நெஞ்சங்களில நிறுத்தி எமது தாயக விடுதலையை நோக்கி பயணிக்க  நாம் அனைவரும் உறுதி ஏற்போம். 



மேலும் மேலும் காலம் தாழ்த்துவோமாக இருந்தால் இலங்கையின் பூர்வகுடிகளான தமிழினம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டு ஒரு சுத்திகரிக்கப்பட்ட  சிங்கள தேசமாக எமது தமிழர் தாயகம் மாற்றம் பெறும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.  ஆகவே சிங்கள ஏகாதிபத்தியத்தின் இன அடுப்பிலிருந்து எம்மையும், எமது தாயக மண்ணையும் பாதுகாத்து எமது இன விடுதலையை வென்றெடுக்க அனைவரும் உறுயெடுத்துக் கொள்வோம். 


10.05.2020
எழுத்து: 
 வன்னியூர் வாணன்

No comments:

Post a Comment