Saturday 30 May 2020

கிழக்கு தாயக இளைஞர்களே யுவதிகளே கட்டாயம் படியுங்கள்.

வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது.

2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டாகவும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் சில முக்கியஸ்தர்களால் தற்பொழுதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் இந்த அவதூறு பிள்ளையானின் ரீ.எம்.வீ.பி. கட்சியின் மகளீர் அணித் தலைவியினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



கருணா விவகாரத்தின் காலப்பகுதியில் கிழக்கில் செயல்பட்ட, அங்கு நடைபெற்ற பல சம்பவங்களைப் பதிவுசெய்த ஊடகவியலாளன்; என்கின்ற ரீதியில், ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆட்சியாளர்களின் தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் திரிவுபடுத்தப்படுகின்றது என்பதை உலகின் பார்வைக்கு கொண்டுவரவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.

வெருகல் நடவடிக்கையின் பங்காளியாக நாங்கள் இல்லாவிட்டாலும், சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். வெருகல் மீட்பு நடவடிக்கை முடிவுற்று மறு தினம் நாங்கள் வெருகல் பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், வேதநாயகம், சந்திரபிரகா~; போன்றவர்களுடன் நானும் சென்றிருந்தேன். நடேசன், இரா உதையக்குமர் போன்றவர்கள் தனியாக வந்திருந்தார்கள்.

வழி நெடுகிலும் இருந்த விடுதலைப் புலிகளின் காவல் அரன்கள், காடுகளுக்குள் இருந்து திடீரென்று தோன்றிய விடுதலைப் புலிகளின் அணிகள் - இவர்களின் கடுமையான விசாரணைகளைக் கடந்து வெருகல் பிரதேசத்திற்கு சென்று – சம்பவத்தை பதிவு செய்தோம்.

• வெருகல் தாக்குதலை ‘வெருகல் சம்பவம்’ என்ற பெயரில் அழைக்கும்படியும், குறிப்பிடும்படியும் தலைவர் பணித்துள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் எங்களிடம் தெரிவித்தார்.



• அங்கு நாங்கள் சந்தித்த கௌசல்யன், குயிலின்பன், தளபதி ரமே~;, தளபதி பாணு போன்றவர்கள் ‘கருணா ஆடிவிட்டுச் சென்ற கோமாளிக் கூத்து’ என்றே – கருணாவின் பிரிவு விவகாரம் நடைபெற்ற அந்த 41 நாட் சம்பவத்தை குறிப்பிட்டார்கள்.

• கருணா தரப்பில் நின்ற நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

• செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் பேரூந்துகள், பிக்கப் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள்.

• இந்தச் சம்பவத்தில் 8 கருணா தரப்பு போராளிகள் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் எங்களுக்கு அறிவிக்கப்படது.

• ஆனால் உண்மையில் கருணா தரப்பில் நின்ற 33 போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்பதும், த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக வேண்டுகோள் முன்வைத்ததைத் தொடர்ந்து, இரண்டு பொறுப்பாளர்கள் போக மீதி 31 போராளிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்கள் என்பதும் பின்நாட்களில் எங்களுக்குத் தெரியவந்தது.

• கருணா தரப்பில் நின்று போராடி பின்னர் விடுதலைப் புலிகளால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல போராளிகளை நாங்கள் செவ்விகண்டிருந்தோம். தாங்கள் ‘அண்ணாக்களால்’ கண்ணியமாக நடாத்தப்பட்டாகவே அவர்கள் தெரிவித்தார்கள்.

• வெருகல், கதிரவெளி, வாகரை பிரதேசவாசிகளையும் செவ்வி கண்டிருந்தோம். யாருமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்களிடம் கூறவேயில்லை.

• வெருகல் (தாக்குதல்) சம்பவம் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜெயந்தன் படையணி போராளிகளின் உறவினர்கள், நன்பர்கள்தான் எதிரே கருணா அணியில் நின்ற போராளிகள். அப்படி இருக்க தனது உறவுகளைக் கிழக்கு மாகாணப் போராளிகளே மரியாதைக்; குறைவாக நடாத்தியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.

• விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலுமே பெண்களை மாணபங்கப்படுத்தும் காரியத்தை செய்ததே இல்லை. அவர்களது எதிரிகள் கூட இந்தக் குற்றச்சாட்டை நம்பமாட்டார்கள்.

• கருணா கூட இந்தக் குற்றச்சாட்டை அண்மையில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

• 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வீ.பி. கட்சி 2008ம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணசபையின் சகல அதிகாரங்களுடன் கொலோச்சியிருந்தது. இற்றை வரைக்கும் அலுவலகங்கள் வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வெருகலில் அப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றிருந்தால் ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை?

• ஏன் ஆதாரங்களைத் திரட்டவில்லை.

• அந்த சண்டையில் இரு தரப்புக்களிலும் கலந்துகொண்ட எத்தனையோ போராளிகள் இன்றைக்கும் வாழும் சாட்சிகளாக அந்த மண்ணிலேயே இருக்கின்றார்கள். ஏன் அவர்களிடம் ஆதாரங்களைத் தேடவில்லை?

• மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை அகற்றிய தற்போது சுவிட்சலாந்தில் வசிக்கும் அரசசார்பற்ற நிறுவண ஊழியரிடம் பேசும் போது, தொலைவில் இருந்து சுடப்பட்ட காயங்களே அனைத்து போராளிகளின் உடல்களிலும் காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

• வெருகல் சண்டையில்; பங்குபற்றிய பல விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களை பிரித்தானியாவிலும், சுவிட்சலாந்திலும், பிரான்சிலும் செவ்விகண்டிருந்தேன். அவர்களில் எவருமே அப்படியான ஒரு துர் சம்பவம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்பதும், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார்கள்.

இந்த சம்பவத்தின் போது என்னால் பதிவு செய்யப்பட்ட செவ்விகள் ஒலிப்பதிவு ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்ததும் நிச்சயம் வெளியிடுவேன்.

நன்றி .

No comments:

Post a Comment