Saturday 6 June 2020

அநீதிகளை தட்டிக்கேட்ட தமிழர்களின் முதல் குரல் -தியாகி பொன்.சிவகுமாரன்-

ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமைக்காய் பலர் குரல் கொடுக்க முனைந்த போதும் சிங்கள ஆட்சியாளர்களால் அவர்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தால் ஒதுங்கிய காலம்.



தமிழர்கள் தரப்படுத்தல் முதல் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்பட்டு தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜையாக இனவாதிகளால் நடத்தப்பட்ட முறைகண்டு கொதித்தெழுந்தவர்களில் முதன்மையானவன் பொன்.சிவகுமாரன். இதனால் தான் இன்றும் சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடியாக தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கின்றான். தமிழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக தமிழ் இளைஞர்களை தமது உரிமை மீது பற்றுறுதி கொள்ள வைத்த பெருமைக்குரியவன்.

1958 இல் ஓகஸ்ட் 26 ஆம் திகதி அவதரித்த பொன். சிவகுhமரன் யாழ். இந்துக்கல்லூரி மாணவன. பள்ளியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் தான் தமிழ் மாணவர்களின் சந்தர்ப்பங்களை தட்டிப்பறிக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்ச்சி அரங்கேறியது.

அதாவது கல்வி தரப்படுத்தல் திட்டம் கல்விக்குள் திணிக்கப்பட்டது. இது சிவகுhமரனின் சிந்தனைகளை சமூகம் நோக்கித் திருப்பியது.

ஒரு மாணவனாய் இருந்து கொண்டு தமிழ் மாணவர் சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டமை கண்டு வெகுண்டெழுந்தான். அக்காலப்பகுதியில் கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் தன்னையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராடி பல தடவைகள் சிறைசென்று மீண்டான்.

தமிழர்களின் வரலாற்றில் அரசுக்கு எதிரான முதல் தாக்குதலை மேற்கொண்டவனும் பொன். சிவகுமாரனே. கல்வித் தரப்படுத்தலை எதிர்த்து சிறீமா ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைச்சரவையில் இருந்த யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் குண்டு பொருத்திய நிலையில் அதிர்ஸ்ட வசமாக துரையாப்பா தப்பித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரனின் உரிமைத் தாகத்தை தமிழ் இனத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டும் என்ற வீரத்தை மனத்தில் விதைத்தது யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்.

படுகொலைகளை நடத்தியவர்களை பழிவாங்குவேன் என பொது வெளியில் பகிரங்கமாக பேசியதால் சிவகுமாரன் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தத்தொடங்கினார்.
கோப்பாய் பகுதியில் பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு திட்ட மிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டான்.

பொலிஸாரின் கைகளில் சிக்கி தமது திட்டங்களை வெளிப்படுத்தி விடக்கூhது, தன்னுடன் இணைந்தவர்களை பாதுகாப்பதே தனக்குப் பின் தனது கொள்கைகளை கொண்டு நகர்த்த முடியும் என்ற எண்ணத்தில் சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். தமிழர்களின் வரலாற்றில் இனத்துக்காக சயனைட் அருந்திய தற்கொடையாளராக சிவகுமாரன் பதிந்துபோனான்.

ஜூன் 05, 1974 இல் தன்னுடைய 24 ஆவது வயதில் தன் இனத்துக்காக தன்னை ஆகுதியாக்கிய சிவகுமாரன் மறைந்து 46 வருடங்கள் கடந்தோடிவிட்டன. சிவகுமாரனின் சிந்தனைகள் அவனின் மறைவுக்குப் பின்னர் எழுச்சியுற்று நான்கு தசாப்தங்களின் பின்னர் மௌனித்து நிற்கின்றன.

ஆனாலும் காலம் காலமாக ஆட்சிப் பீடமேறிய அரசுகள் தாம் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தவறியே வருகின்றன. அன்று சிவகுமாரன் எந்த இலட்சியத்துக்காக தன்னை மாய்த்தானோ அவை இன்றும் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு மீது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இன்றும் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள் ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டுவரும் அடிப்படை உரிமை முதல் அரசியல் உரிமை வரை மீட்டெடுப்பதற்கான திறவுகோளாக, வித்ததாக ஒவ்வொரு தமிழர்களின் மனங்களிலும் தனது சிந்தனையை விதைத்து துயில் கொள்கிறான் சிவகுமாரன்........

No comments:

Post a Comment