Sunday 28 June 2020

TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா?

எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். "சகோதரப்படுகொலை" என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால் புனையப்பட்ட,சம்பவத்தின் பின்னால் உள்ள நிஜங்கலையே உங்களோடு பகிர விளைகின்றேன். "சகோதரப்படுகொலை" என்னும் சொல்லை முதல், முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி தான்.


அடுத்ததாக சுப்பிரமணியசாமி (இவர்கள் இருவரும் TELO அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள்) அடுத்ததாக இவற்றை பல கற்பனைகளுடன், உண்மைக்கு புறம்பாக பொய்களை புகுர்த்தி, எழுதி வந்தவர் EPDP இன் தினமுரசு பத்திரிக்கை ஆசிரியர் அற்புதன் (இவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்) ஆகும். இவர்களாலேயே உண்மையை, திட்டமிட்டு மறைக்க முயற்சி செய்யப்பட்டது.

இவர்களது பொய்களை இன்றும் சிலர் நம்பத்தான் செய்கிரார்கள். புலிகள் ஏன் மாற்று இயக்கங்களை தடை செய்தார்கள். இது ஒரு சிறிய கேள்வி தான். ஆனால் இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத எமது போராட்டத்திற்கு, எதிரான காரணங்கள் நிறையவே இருந்தன. அதற்கு கொஞ்சம் பின்நோக்கி சென்று பார்க்க வேண்டும்.

சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழர் கிளர்ந்தெழுந்த போது பல ஆயுதக்குழுக்கள் ஈழத்தில் தோன்றின. ஒவ்வொரு தலைவரின் கீழும் பல இளைஞர்கள் உண்மையான தேசப்பற்றில் தான் போராட புறப்பட்டனர். ஆனால் அந்த தலைவர்கள் உண்மையுடனும், விசுவாசத்துடனும் இருந்தார்களா என்பது தான் கேள்விகுறி?

இதில் 1983ம் ஆண்டு புலிகளின் கண்ணிவெடித்தாக்குதலுக்கு பின்னர் தான் இந்த அமைப்புகள் கொஞ்சம் வீரியம் பெற்றன. சில ஆயுதக்குழுக்களும் புதிதாக உருவாகி இருந்தன. இந்த ஆயுதப்போராட்டங்கள் ஆரம்பித்த 1980களில் சிங்கள அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரவேலுடன் நட்புறவை பேணியது. இது அப்போதைய இரசிய(USSR ) சார்புடைய இந்திய அரசுக்கு கோபத்தை உண்டாக்கியது.



அதனால் சிங்கள அரசை அடிபணிய வைக்க இந்திராகாந்தி எடுத்த முடிவு தான் ஈழப்போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்தமையாகும். இந்திய அரசு பயிற்சியையும், ஆயுதங்களையும் வந்து பெறுமாறு எல்லா இயக்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எல்லா இயக்கங்களும் உடனேயே போய்விட்டன.

ஆனால் தலைவர் மட்டும் இந்த திட்டத்திற்கு பின் நின்றார். ஏனெனில் அன்றே தலைவர் இந்திய அரசின் கபடத்தை புரிந்து கொண்டிருந்தார். எங்கள் மக்கள் கூறும் பழமொழி ஒன்று "நக்கினார் நாவிழந்தார்" என்பது. இந்திய அரசிடம் கடமைப்பட்டால், எல்லாவற்றுக்கும் அவர்களையே நம்பி இருக்கவேண்டி வரும் என்பதை தலைவர் திடமாக நம்பினார். அதனால் எந்த அழுத்தங்களையும் புலிகலமைப்புக்கு இந்திய அரசு போடக்கூடாது என்னும் வாக்குறுதியுடன், இறுதியாகவே இந்த பயிற்சி திட்டத்தில் புலிகள் இணைந்தனர்.

ஆனால், மற்றைய ஆயுதக்குழுக்கள் எந்த வித தூரநோக்கமோ, இந்திய அரசின் கபட எண்ணமோ தெரியாது, முதலாவதாக ஓடிச்சென்று பந்தியில் இருந்து, வாழை இலைக்கு சண்டை பிடித்துக்கொண்டிருந்தனர். அன்றே இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரிந்து விட்டது புலிகல் தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று.

அதனால் அடுத்த நிலையில் இருந்த TELO அமைப்பை தங்கள் சொல்லுக்கு கட்டுப்படும் அமைப்பாக மாற்றமுடியும் என்று கணக்கு போட்டு, அவர்களுக்கு சிறந்த பயிற்சியும், பெரும் தொகையான ஆயுதங்களையும் வழங்கப்பட்டது. இதே போல TELO சொல்லு கேட்காக விட்டாலும் என்று எண்ணி இதே போல EPRLF அமைப்பிற்கும் எல்லா சலுகைகளையும் கொடுத்தனர்.

சில மாதங்களிலேயே எல்லா விதத்திலையும் பின் தங்கி இருந்த இரு அமைப்பும் பெரும் தொகை ஆயுத கையிருப்புடன் வலம் வந்தன. அதனால் தான் புலிகளமைப்பு சொந்தமாகவே அதி நவீன ஆயுதங்களான M-203,M-16, AK 47,RPG போன்ற ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தாயகம் கொண்டு வந்தனர்.

TELO அமைப்பின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் கைது செய்யப்பட்டபின் (இவர்கள் இந்தியாவிற்கு தப்பிப்போக இருந்த இவர்களை, ஸ்ரீசபாரட்ணம் தான் காட்டிக்கொடுத்திருக்கலாம் என்று கிட்டண்ணை சந்தேகப்பட்டார். இதைஅவர் கூறும் போது கேட்டுள்ளேன்) ஸ்ரீசபாரத்தினம் அதன் தலைவராக வந்தபின், எந்தவித தனி ஆளுமையும் இல்லாது, இந்திய அரசின் சொல்படியே கேட்டு வந்தார்.

இப்படி இருக்கும் போது சிங்கள இராணுவத்திற்கு எதிராக புலிகள், தினமும் தாக்குதல்களை மேற்கொண்டபடி இருந்தனர். ஆனால் மற்றைய இயக்கங்கள் பெயருக்கு ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் உலா வந்தனர். இதில் TELO மட்டுமே ஓரிரு தாக்குதல்கள் செய்துள்ளார்கள். ஏனைய அமைப்பினர் பெயருக்கு பந்தா காட்டுவதோடு முகாமில் முடங்கி இருந்தனர்.
அத்தோடு களவு, பாலியல் வல்லுறவு, கொலைகலிலும் ஈடுபட்டனர். பல ஆயுதக்குழுக்கள் இருந்தமையால், இதை யார் செய்தார்கள் என்ற குழப்பமும் மக்களுக்கு எழுந்தது. அத்தோடு ஒவ்வொரு இயக்கத்திலும் மாறி,மாறி போராளிகளையும் கொலை செய்துகொண்டிருந்தனர். இதனால் உண்மையாகவே போராடப்புறப்பட்ட போராளிகளும் பிழையான தலைமையின் வழிகாட்டல்களால் திசை மாறிப்போயினர்.

இப்படி ஆண்டுகள் கடந்த போது இந்திய அரசிற்கு, சிங்கள அரசை பணியவைப்பதற்கு புலிகள் தடையாக இருந்தனர். அதனால் TELO மூலமாக புலிகளை பலமிழக்க செய்யும் திட்டம் ஒன்றை போடுகின்றனர். இதற்கு பின்னால் இந்திய அரசே இருந்து செயல்பட்டது. அதன் ஆரம்பமாக தீவுப்பகுதியில் வைத்தும் அராலி,வட்டுகோட்டை பகுதியிலும் சில புலி உறுப்பினர்கள் இவர்களால் கொல்லப்பட்டனர்.

சமகாலத்தில் TELO வின் செயல் பாட்டில் சந்தேகம் கொண்ட புலிகள் TELO அமைப்பில் இருந்த கோணேஸ் என்பவர் மூலமாக தகவல் சேகரித்தனர். (மேஜர்.கோணேஸ். இவர் 1991ம் ஆண்டு ஆணையிறவு முகாம் தகர்ப்பின் போது லெப்.கேணல்.சராண்ணை. மேஜர்.குகதாசண்ணை போன்றோருடன் கவசவாகனத்தில் சென்று தாக்குதல் மேற்கொண்டு வீரச்சவடைன்தவர்) இவரது அண்ணன் புலிகளமைப்பில் இருந்தவர்.

புலிகளின் உளவுத்துறைக்காக வேலை செய்து கொண்டிருந்த கோணேஸ் மூலமாக தொடர்ந்து தகவல் வந்துகொண்டிருந்தது. இது அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அப்போது இவர்கள் ரகசியமாக புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அதன் முதல் கட்டமாக புலிகளின் இரண்டு உறுப்பினர்களை கடத்தினர். இவர்களை மீட்பதற்காக, பேச்சுவார்த்தைக்கு, நிராயுதபாணியாக சென்ற புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன். லிங்கமண்ணையை அந்த இரு போராளிகளுடனும் சேர்த்து TELOஅமைப்பினர் கொலை செய்தனர்.

அதுவரை பொறுத்து போய்க்கொண்டிருந்த புலிகள், தம்மை அழிக்க ஆயத்தம் செய்கின்றார்கள் என்பதை தமது உளவாளியான மேஜர்.கோணேஸ் மூலமாக தகவலறிந்து, அவர்களுக்கு முன் புலிகள் முந்தினர். அப்போது பழைய பூங்காவில் இருந்த TELO முகாம் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் தலமைக்காரியாலயம் அப்போது கல்வியங்காட்டில் இருந்தது.

முதலாவது தாக்குதலின் பின் உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி மூலமாக TELO அமைப்பினரை சரணடையும் படி கூறப்பட்டது. பலர் நூறு பேர் சரணடைந்தனர். சிலர் புலிகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டனர். அவர்களுக்கு எதிராக புலிகளின் துப்பாக்கியும் நீண்டது. அன்று அவர்களே கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் இவர்கள் கூறியது போல ஆயிரகணக்கில் கொல்லப்படவில்லை. 90பேர் வரையே கொல்லப்பட்டிருந்தனர்.

இதை நான் நியாயப்படுத்தவில்லை. அந்த இளைஞர்கள் மேல் நான் கரிசனை கொள்கின்றேன். பிழையான தலைமையால், பிழையாக வழிநடத்தப்பட்டிருந்தார்கள். சண்டை ஆரம்பமானவுடன் லெப்.கேணல்.திலீபண்ணை தலைமையில் ஒரு அணியினரால் கல்வியங்காட்டில் வைத்து TELO அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது இவர்களிடமிருந்து தப்பும் நோக்கில் அவர் புகையிலை தோட்டமொன்றினுள் பதுங்கி இருந்தார்.

அப்போது தேடுதல் மேற்கொண்டிருந்த புலிகளின் போராளியான மேஜர்.டொச்சன் இவரை கண்டு விட்டார். அப்போது ஸ்ரீசபாரத்தினம், டொச்சண்ணையை சுட எத்தனித்த போது, டொச்சண்ணை முந்திவிட்டார். அன்று ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதும் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்திய அரசின் சொல்லைக்கேட்டு TELO ஆரம்பித்ததை புலிகள் முடித்து வைத்தனர். இது தான் அன்று நடந்த உண்மை.

அது போலவே, TELO வின் நடவடிக்கை வெற்றி அழிக்காமையால், தங்கள் அடுத்த வளர்ப்பான EPRLF அமைப்பினரை, புலிகள் மீது ஏவி விட்டனர். அதுவரை இவர்களை தடை செய்யும் முடிவை புலிகள் எடுத்திருக்கவில்லை. ஆனால் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டனர். மன்னாரில் வைத்து EPRLF உறுப்பினர்களிடமிருந்து ஒரு வரைபடத்துடன் கூடிய கடிதமொன்று கிடைத்தது. அதில் குறிப்பிட்ட நாளில் புலிகளின் முகாமை தாக்கும் படி விவரிக்கப்பட்டிருந்தது.

இதிலும் உடனே புலிகளே முந்தினர். TELO, EPRLF இரண்டு அமைப்பின் மீதான ஒப்ரேசனை கிட்டண்ணையே செய்திருந்தார். இதில் EPRLFமீது உடனேயே தாக்குதல் மேற்கொள்ளாமல், அவர்களின் முகாம்களை நோக்கி சத்தவெடி வைக்கப்பட்டது. அடுத்தநாள் எல்லோரையும் வந்து சரணடையும் படி ஒலிபெருக்கியில் அறிவித்தனர். அதன் படி எந்த உயிர் சேதமும் இல்லாது, எந்தவித எதிர்ப்பும் இல்லாது வந்து சரணடைந்தனர். இதில் இப்போதைய EPDP தலைவர் டக்ளஸ்தேவானந்தாவும், அன்று சரணடைந்த நிலையில் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவரே.

விசாரணையின் பின் எல்லோரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தான் பின்பு இந்திய இராணுவத்துடன் வந்து கொள்ளை, பாலியல் வல்லுறவுகள், கொலைகள் என பெரும் அழிவுகளை எம் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தனர்.

இதோடு EROS அமைப்பு அதன் தலைவர் பாலகுமார் அண்ணையுடன் புலிகளமைப்பில் இணைந்தனர். மற்றைய குழுக்கள் தாமாகவே நாட்டை விட்டுச்சென்றனர். அத்தோடு தமிழர் தேசமெங்கும் ஒரு அமைப்பாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருந்தனர். அதுவரை பல குழுக்களாக பிரிந்திருந்த தமிழ் இளைஞர்கள் தலைவரின் கீழ் அணிதிரண்டனர்.

இந்த சதிகளின் பின்னால் இருந்த இந்திய அரசின் சூழ்ச்சியை அன்றே புலிகள் மோப்பம் பிடித்திருந்தமையால் அன்று எமது போராட்டம் காக்கப்பட்டது. அத்தோடு மற்றைய அமைப்புகளை தடை செய்த போதும், எதிரியுடன் மோதலில் கொல்லப்பட்ட ஏனைய அமைப்பு போராளிகளையும் மாவீரர் பட்டியலில் புலிகள் இணைத்தனர். இந்த சம்பவம் ஏனையோரையும் புலிகள் மதித்து நடந்தமையை காட்டுகின்றது. இது தான் அன்று நடந்தது.
தாயகம், தமிழ்நாட்டு, புலம் பெயர்ந்து வாழும் இளையோர்களே பல உண்மைக்கு புறம்பான கதைகளை புனைந்து புலிகள் மீது பழி போடவென்றே பலர் (2009 க்கு பின்) கிழம்பி இருக்கின்றார்கள். அவர்கள் மேல் மிகவும் அவதானமாக இருக்கவும்.!

உண்மையுடன் துரோணர்.!!!
ஈழத்து துரோணர்.!!

No comments:

Post a Comment